பூவிதழ் – 2

84a73a8366eb222b53a405e2509d933a-204d5f36

அத்தியாயம் – 2

அவன் சுதாரித்து விழியைத் திறந்தபோது, அவள் அங்கிருந்து சென்று இருந்தாள். அத்தனை பக்தர்கள் நடுவே, தன்னை அடித்துவிட்டு சென்றவள் யாரென்று புரியாமல் திகைத்து நின்றிருந்தான் கலைச்செல்வன்.

சிறிதுநேரத்தில் மற்ற ஐவரும் அங்கே வந்துவிட, “என்னன்னா திடீரென்று காணாமல் போயிட்ட. உன்னைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும்னு ஆகிடுச்சு. சரி வாங்க வீட்டுக்கு போலாம்” என்று தமிழரசன் அவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு நடந்தான்.

அவன் கண்ணில் மண்ணைத் தூவிட்டு கோவிலுக்குள் நுழைந்தவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஒரு ஆண்மகனை கைநீட்டி அடிப்பதால் எத்தகைய பிரச்சனைகள்  வரும் என்று தினம் தினம் மற்றவர்கள் சொல்லி கேட்டு இருந்ததால் உண்டான படபடப்பு சற்றும் அடங்க மறுத்தது.

அவளின் பின்னோடு வந்து நின்ற இந்துமதி, “அக்கா அந்த அண்ணனை சும்மா பளார்ன்னு விட்ட பாரு சூப்பர் அக்கா. அரசர் காலத்தில் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பவர்களுக்கு தண்டனை அதிகம் தருவாங்களாம். இப்போவெல்லாம் கோழையான பெண்களைப் பார்த்து ரொம்ப சலிச்சுப்போச்சு. உனக்கு நிகர் நீ மட்டும்தான்” என்று சொல்லி அவளது கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட தேன்மொழி, “ஏய் நான் அடித்ததை நீ பார்த்தியா?” என்று வேகமாக கேட்க,

“அட ஆறடி மனுஷனை அப்படியா பொறி கலங்க நிற்க வைத்த காட்சியை பார்க்க, எனக்கு ரெண்டு கண்ணு பத்தலன்னு சொல்லிட்டு இருக்கேன்” என்றவளின் பேச்சில் இருந்தே, அந்த விஷயம் வீட்டுக்கு சென்றுவிடும் என்பது உறுதியானது.

இன்றைய பிரச்சனைக்கு தானே பிள்ளையார் சுழி போட்டதை நினைத்து கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், ‘தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன? நம்ம வீட்டில் பிரச்சனைக்கா பஞ்சம், ஒன்னு போனால் இன்னொன்னு வந்துட்டு தான் இருக்கும்’ என்று மனதைத் தேற்றிக்கொண்டு, சின்னவளின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள்.

“ஏய் கோவிலில் பார்த்த விஷயத்தை வீட்டில் போட்டு கொடுத்தே மகளே, உன் லவ் மேட்டரை உங்க அம்மாகிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை” என்று அவள் போட்ட அதட்டலில் சர்வமும் நடுங்க, விழிகளில் பயத்துடன் அவளை நோக்கினாள் இந்துமதி.

அவளுக்கும் இதைவிட்டால் வேறு வழி இல்லை என்பதால், “நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று உதடுகள் தந்தியடிக்க கூறினாள். அதன்பிறகு இருவரும் கோவிலில் சாமியை கும்பிட்டுவிட்டு வீடு நோக்கி சென்றனர். தன்னுடன் வந்த இந்துவை அவளின் வீட்டில் விட்டுவிட்டு, தன் இல்லம் நோக்கி நடந்தாள்.

அவளின் வரவை எதிர்பார்த்தபடி வீட்டின் வாசலில் நின்றிருந்த கோமதியின் தேன்மொழியைப் பார்வையால் அளந்தது. பாலில் சந்தானம் குலைத்த பொன்னிறம் கொண்ட பெண்ணின் உயரமோ ஐந்தரையடி.

வில்லென்று வளைந்த புருவமும், மை தீட்டிய விழிகள் மற்றவர்களை மயக்கம் கொள்ள வைக்க, மூக்குத்தி ஒளி வீசியது. நேரான நாசியும், சிவந்த இதழ்.

வெள்ளை நிற பாவாடை ரவிக்கைக்கு எதிராக பச்சை நிற தாவணி அணிந்திருந்தாள். அவளின் இடையைத் தழுவிய கூந்தலுக்கு மொட்டாக இருந்த மல்லிகையை பிறைபோல சூடி இருந்தாள்.

சிற்பி செதுக்கிய சிற்பம் உயிர்ப்பெற்று தெருவில் நடந்து வருவது போன்ற பிரம்மை மனதில் தோன்றி மறைய,  “தேனு ஒரு நிமிஷம் நில்லுடி” என்று சொன்னபடி கேட்டின் கதவைத் திறந்துகொண்டு வந்தார்.  

“இந்த அக்கா காரணம் இல்லாமல் நம்மகூட பேசாதே! என்ன விஷயமாக இருக்கும்” என்றவள் தீவிரமான சிந்தனையில் இறங்க, அவள் நினைத்தது சரி என்பதுபோல அவரின் பேச்சு இருந்தது.

“நீ கோவிலில் வைத்து ஏதோ ஆம்பளயை கைநீட்டி அடிச்சிட்டேன்னு நம்ம லதாக்கா மகள் செண்பகம் சொன்னாலே அது உண்மையா?” என்று வாசலில் நிற்க வைத்து விசாரித்தாள்.

அவள் கோவிலில் காட்டிய கைவரிசையைப் பற்றிய விஷயம் மின்னல்  வேகத்தில் வீடு வந்ததை நினைத்து எரிச்சலோடு, “ஆமாக்கா! இப்போ  அதனால் என்ன ஆகிடுச்சு” என்றாள் வெகுசாதாரணமாக கேட்டாள்.

“என்னடி இவ்வளவு சாதாரணமாக கேட்குற? ஒரு ஆண்மகனை கைநீட்டி அடிப்பதால் எத்தனை பிரச்சனை வரும்னு உனக்கு நான் சொல்லித்தான் தெரியணுமா?” என்றவர் அவளுக்கு அட்வைஸ் செய்ய தொடங்கும்போதே, அவரை கையமர்த்தி தடுத்தாள்.

கோமதி அவளைக் கேள்வியாக நோக்கிட, “அப்போ நேற்று நைட் அண்ணன் போதையில் இருக்கிற தைரியத்தில் அடி வெளுத்து எடுத்தீங்களே! அப்போவெல்லாம் ஒரு ஆண்மகனை கை நீட்டி அடிப்பது தவறுன்னு தெரியலையா?” என்று வெடுக்கென்று கேட்டுவிட, பெரியவளுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

கொஞ்ச நேரத்தில் தன்னை சமாளித்துக்கொண்டு, “ஏய் அவரு என்னோட புருஷன். அதுமட்டும் இல்லாமல் வயசுக்கு வரபோற பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தண்ணி அடிச்சிட்டு வந்தால் அடிக்காமல் என்ன செய்ய சொல்ற?” என்று கோபத்துடன் அவளிடம் சண்டைக்கு போனார்.

அவர் தரப்பு நியாயம் சரியாக இருக்க, “அதே மாதிரிதான்! கோவிலில் நடந்து போகும்போது ஜடையைப் பிடித்து இழுத்தான். நான் இந்துன்னு நினைத்து பளார்ன்னு ஒன்னு கொடுத்தேன். அடிச்ச பிறகுதான் யாரை அடிச்சி இருக்கோம்னு நிமிர்ந்தே பார்த்தேன்” என்றவள் சரளமாகக் கூற, அதை உன்னிப்பாக கேட்டபடி அங்கே வந்தாள் மலர்விழி.

“என்னது அடிச்சியா?” என்று அதிர்ந்தவள், “அம்மா அக்கா கோவிலில் யாரோ ஒரு அண்ணனை அடிச்சிட்டு வந்திருக்கிற?” என்று வாசலில் நின்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் ஓட, அந்த குரல்கேட்டு திடுக்கிட்டாள் தேன்மொழி.

தன் எதிரே நின்றிருந்த கோமதியை கோபத்துடன் முறைத்தவள், “நீங்க வந்த வேலை நல்லபடியாக முடிந்தது இல்ல. முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க” என்று கத்திவிட்டு, தங்கையின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்தாள்.

“தேனு என்னடி இது புதுபழக்கம். யாரிடம் இதை கத்துகிட்ட.  ஒரு வயசு பெண்ணை கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வான்னு அனுப்பிவிட்டால், நீ யாரையோ அடிச்சிட்டு வந்திருக்கிற. உனக்கு பிறகு கல்யாண வயதில்  வீட்டில் ரெண்டு பொண்ணுங்க இருக்கிறாங்க என்ற நினைப்பு இருக்கா உனக்கு” என்று எண்ணெயில் இட்ட கடுகுபோல பொரிந்து தள்ளினார் செந்தாமரை.

தாயிடம் வழக்கம்போலவே வசவை வாங்கியபடி தன் அறைக்கு சென்றவள், “இன்னைக்கு தான் எங்கம்மாவிடம் திட்டு வாங்காமல் இருந்தேன்னு சந்தோசமாக இருந்தேன். அதில் ஒரு லோடு மண்ணு அள்ளி கொட்டிட்டியே டிராக்டர்காரா! நீ இன்னொரு முறை என்முன்னாடி வா, அப்படியே என்  ஸ்கூட்டியை விட்டு ஏத்தப்போறேன் பாரு” என்று வாயில் வந்ததை சொல்லி திட்ட தொடங்கினாள்.

அவள் முணுமுணுப்பின் சத்தம் அதிகரிக்க, “அம்மா அக்கா உன்னைத் திட்டுட்டு இருக்கிற பாரு” என்று தாயிடம் மாட்டிவிட்டாள் மான்விழி.

அவளது விளையாட்டுத்தனம் தெரியாமல், “ஆமா நல்லது சொன்னால் காதில் வாங்குவாளா? ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல. வீட்டுக்கு முத்தவள் என்ற பெயரில் குடும்பச்சுமையைத் தூக்கி சுமக்கிறாளே என்று செல்லம் கொடுத்த என்னை அடிக்க ஆளில்லை” என்று அதுக்கும் வசவுபாட தொடங்கிவிட, அதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டாள் தேன்மொழி.

தமக்கை திட்டு வாங்குவதை ரசித்த சிறுசுகள் இரண்டும்,  “அம்மா இந்த போடு போடுறாங்க. ஆனால் நீ அசராமல் திட்டு வாங்கற” என்று அவர்கள் நக்கலாக சிரிக்க, அவர்களுடன் இணைந்து நகைத்தாள் தேன்மொழி.  

“அம்மாவை எதிர்த்து பேசிட்டால் எல்லாம் சரியாகிடும் என்ற நினைப்பா? அப்புறம் அதுக்கும் சேர்த்து அவங்க இன்னைக்கு முழுக்க கிளாஸ் எடுப்பாங்க. அதைக் கேட்க எனக்கு பொறுமை பத்தாது சாமி!” என்று தங்கைகளை கையெடுத்து கும்பிட்டுவிட்டு பின்வாசலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளின் பார்வை அந்த வீட்டை வலம் வந்தது. இரண்டு படுக்கையறை, ஒரு ஹால் மற்றும் சமையலறை என்று கட்சிதமாக வடிவமைக்கப்பட்ட அந்த வீடுதான் அவளின் உலகம். கணவனை இழந்தபிறகு மூன்று பெண் குழந்தைகளையும் எந்தவிதமான குறையும் இன்றி வளர்த்தார் செந்தாமரை.

மூத்தவள் தேன்மொழி வயது 23. அவள் படிப்பை முடித்துவிட்டு, தீப்பெட்டி தொழிற்சாலைக்கு அக்கௌன்ட் பார்க்கும் வேலைக்குச் செல்கிறாள். மலர்விழி, மான்விழி இருவரும் இரட்டையர். இப்போது கல்லூரி பயின்று வருகின்றனர்.

எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக யோசித்தாலும், இலகுவாக அதைக் கடந்து வரும் வித்தையை வாழ்க்கை அவளுக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. அவளுக்கு இருக்கும் ஒரே லட்சியம். அவள் திருமணமாகி அடுத்த வீட்டிற்கு செல்வதற்குள் அந்த வீட்டினை மீட்டு தாயின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பது தான்.

அன்றிரவும் பசங்களோடு சேர்ந்து தேர்கடைகளை சுற்றிவிட்டு, அங்கே இருந்த ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். பசங்க ஐவரும் சேர்ந்து சரக்கு அடிக்கலாம் என்று சொல்ல, “அண்ணா நான் வீட்டுக்குப் போறேன்” என்றான் தமிழரசன்.

“டேய்! இப்போவே வீட்டுக்குப்போய் என்ன செய்ய போறே?” என்றான் கவியரசு.

“எனக்கு தூக்கம் வருது” என்று அவன் சொல்ல, “நாங்களும் இதை அடிச்சிட்டு போய் படுக்கத்தான் போறோம்” என்றான் இமையன்.

அவனை முறைத்துவிட்டு அமைதியாக இருந்தான் தமிழரசன். மற்ற ஐந்து பேரும் பாயை விரித்து சரக்கடிக்க தேவையான அனைத்தையும் எடுத்து வைக்க, கையில் பாட்டலோடு வந்தான் கலைச்செல்வன்.

அவனிடமிருந்து சரக்கு பாட்டலை வாங்கிய சிவநேசன் எல்லோருக்கும் ஊத்திய கையோடு, “தமிழ் இந்தா நீயும் குடி” என்றவன் டம்மளாரை அவன் முன்பு நீட்டியதைக் கண்டு, கலைச்செல்வன் இதயம் பதறியது.

அடுத்த நிமிடமே மற்ற எதைப்பற்றியும் யோசிக்காமல் அதை தட்டிவிட்டு, “ஏய் சின்ன பையனுக்கு ஊத்திக்கொடுத்து கெடுக்க பார்க்கிற, இன்னொரு முறை இப்படி செஞ்சே மகனே கொன்றுவேன்” என்று எச்சரித்தவன் தமிழின் பக்கம் திரும்பினான்.

“இவனுங்க இப்படி செய்வானுங்க என்று உனக்கு தெரியும் இல்ல. முதலில் நீ வீட்டுக்கு கிளம்பு. ஆத்தா உன்னைக் காணலன்னு தேடிட்டு இருக்கும்” என்று அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு, அவர்களின் அருகே அமர்ந்தான். அவர்கள் ஐந்து பேரும் போதை தலைக்கு ஏறும் அளவிற்கு குடித்தனர்.

“நீ எதுக்காக என்னை இப்போ திட்டுன?” என்று அவன் போதையில் கேட்டான்.

“ம்ஹும் நீ செய்த வேலைக்கு கொல்லும் அளவுக்கு வெறி வருது. நம்மதான் கெட்டு குட்டிச்சுவராக போறோம்னா, ஒழுக்கமாக இருக்கும் அவனையும் எதுக்காக கெடுக்க பார்க்கிற?” என்று எரிந்து விழுந்தான்.

“இதில் என்னடா இருக்கு” என்று கவியரசு சாதாரணமாக கேட்க, “ம்ஹும் குரங்கு தான் கெட்டதும் இல்லாமல் வனத்தையும் சேர்த்து கெடுத்தாதாம். அந்த மாதிரிதான் இருக்கு நீங்க செய்யும் செயலும்” என்றான் கோபத்துடன்.

கலைச்செல்வன் ஆயிரம் தவறு செய்தாலும், அவனை நம்பி அனுப்பும் பசங்களுக்கு கெட்ட பழக்கத்தைக் கற்றுத் தருவது கிடையாது. அதை செய்யும்படி தூண்டுபவர்களையும் மிரட்டி வைப்பான்.

அவன் பேச்சில் இருந்த நியாயம் புரிய, “சரி இனிமேல் அவனைக் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டோம்” என்றவர் ஐவரும் அவரவர் வீடுகளுக்கு கிளம்பிச் சென்ற பிறகு, தனித்துவிடபட்ட கலைச்செல்வனின் மனம் அவளைச்சுற்றி மட்டுமே வட்டமிட்டது. ஏனோ அவள் கையில் வாங்கிய அடி கண்முன்னே வந்து சென்றது.

தன் முகத்தை  அவன் கண்ணாடியில் பார்க்க, அவள் அறைந்த இடது கன்னம் சிவந்து விரல்தடம் பதிந்திருக்க, “பெண்களோட கை பூ மாதிரி இருக்கும்னு சொல்வாங்க. இவ கைமட்டும் ஆண்டவன் இரும்பில் செஞ்சிருப்பான் போல.  ஒரே அடியில் என்னையே கதிகலங்க வைத்தவளை ஏதாவது செய்யணும்” அடிபட்ட புலிபோல உறுமினான்.

‘அதுக்கு முன்னாடி அவளை நீ கண்டுபிடிக்கணுமே’ என்று அவன் மனசாட்சி எள்ளி நகையாடிட, “ஏய் அவமேலே இருக்கும் கோபத்தை உன்னிடம் காட்டிட போறேன். மகனே ஓடிப்போயிரு” அவன் எச்சரிக்கை விடுக்க, மனசாட்சி மயமாக மறைந்தது.

ஆனால் ஒரு பெண்ணின் கையால் வாங்கிய அடி அவனின் நிம்மதியைக் குலைக்க, சட்டென்று எழுந்து தன் அறைக்கு சென்றான். அங்கிருந்த விஸ்கியை எடுத்து கடகடவென்று குடித்தவன், அங்கிருந்த ரேடியோவைப் போட்டுவிட்டு படுக்கையில் விழுந்தான்.

இத்தனை நாட்களாக படுத்ததும் தன்னை மறந்து உறங்குபவன் தூக்கம் இன்று வெகுதூரம் நின்று அவனுக்கு ஆட்டம் காட்டிட, பாடலின் வரிகள் அவனது கவனத்தை ஈர்த்தது.

இருப்போமா வெளிப்படையாய்.. ஆ.. சிரிப்போமா மலர் குடையாய்..

சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே..

பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே..

ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்..   

பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்

இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லையே” என்ற வரிகள் அவன் உதடுகளில் புன்னகை அரும்ப செய்தது.

தன் வாழ்க்கைக்குள் நுழைந்த அந்த பெண்ணின் முகவரி என்னவென்று தெரியாமல், தன்னால் நிம்மதியாக உறங்க முடியாது என்ற முடிவிற்கு வந்தான். கோவில் திருவிழாவில் அடித்த பெண்ணை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கும் அதே நேரத்தில், அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தது அவன் மனம்.

இத்தனை ஆண்டுகளில் அவனை யாரும் கைநீட்டி அடித்தது இல்லை. அவன் பிறந்ததும் தாயை இழந்ததால், அம்மாவின் கண்டிப்பு எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரியாது. ஒரே மகன் என்பதால் முடிந்தவரை பாசமாக வளர்த்த தந்தையையும் பதினைந்து வயதில் பறிகொடுத்துவிட்டு தனிமரமாக நின்றான்.

அந்த ஊரில் பூ விற்கும் பாட்டிதான் அவனை பாதுக்காத்தார். அவர் சொல்லும் விஷயங்களை அவன் அதிகமாக கருத்தில் கொள்வதில்லை என்ற காரணத்தால் இளமை என்ற பருவத்தில் அவனை வழிநடத்த ஆள் இல்லாமல் போனது.

நானே ராஜா, நானே மந்திரி என்று இருப்பவன் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தடுமாறிப் போனான். அவனுக்கு அது சொந்த ஊர் கிடையாது. இரண்டு ஜே.சி.பி. நான்கு டிரெக்டர்கள் வைத்துக்கொண்டு, அதற்குள் நாளுப்பேரை வேலைக்கு சேர்த்து முதலாளியாக வலம் இருக்கிறான்.

காலம் யார்பக்கம் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.