பூவிதழ் – 3

DtioEbSUwAAkchh-56002ae1

அத்தியாயம் – 3

வானம் பொன்னிறமாக மாறிப்போக, வெள்ளிரத மேகங்கள் உலாவிய காலை நேரத்தில் கதிரவனிடம் பணியை ஒப்படைத்தது சந்திரன். இருள் சூழ்ந்த வானில் வெளிச்சம் வருவதைக் கண்ட பறவையினம் இரைதேடி பறந்து சென்றது. இரவு வேளையில் பனியில் குளித்த மலரினம் கதிரவனின் ஒளிபட்டு மின்னியது.

அன்றும் வழக்கம்போல சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு, தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள் தேன்மொழி. மலர்விழி மற்றும் மான்விழி இருவரும் கல்லூரி செல்ல தயாராகி கொண்டிருக்க, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார் செந்தாமரை.

“அம்மா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்த மகளின் கையில் காபி டம்ளாரை கொடுத்தார் தாமரை.

“தேங்க்ஸ் அம்மா” என்றவளின் பார்வை சமையலறையை வளம் வர, “அம்மா பிஸ்கட் இருக்கா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தார். அவர் சாதம் வைக்க அரிசி எடுக்கும்போது, அது காலியாகி இருப்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தாள்.

அடுத்தடுத்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவர் சமைப்பதைக் கவனித்தவள் காபி டம்ளாரை கழுவிய கையோடு, “அம்மா தங்கச்சிங்க ரெடியாகிட்டாங்களான்னு பாருங்க. நான் பஸ் ஸ்டாப் கொண்டுபோய் விட்டுட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவளின் அறையை நோக்கி சென்றாள்.

அடுத்த கால் மணி நேரத்தில் சிவப்பு நிற சுடிதாரில் தயாராகி வெளியே வந்தவள், “மலர், மானு” என்று குரல் கொடுத்தபடி ஸ்கூட்டி சாவியைக் கையில் எடுத்தாள்.

“தேனு நீ சாப்பிடாமல் எங்கே கிளம்பற?” என்ற தாமரையின் குரல் கேட்க,

“தங்கச்சிகளை இறக்கிவிட்டு வந்து சாப்பிடுறேன். நான் ஆபீஸ் போக இன்னும் நேரம் இருக்கு” என்று சொல்லும்போது மற்ற இரு பெண்களும் வாசலுக்கு வந்தனர்.

“நம்ம வீட்டு கஷ்டம் தெரிந்து படிங்க. நாளைக்கு நம்மள யாரும் வந்து காப்பாத்த மாட்டாங்க. உங்களோட படிப்புதான் கடைசிவரை கூட இருக்கும். அப்புறம் காலேஜ் பொண்ணுங்க என்ற பேரில் சைட் அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும்னு யாருக்கும் தெரியாது. என்ன நான் சொல்றது புரியுது இல்ல” பொறுப்புள்ள தமக்கையாய் மாறி தங்கைகளுக்கு அட்வைஸ் செய்தாள்.

“அக்கா நீ சொல்றது ரொம்ப ஈஸி. ஆனால் அதை கடைபிடிப்பது ரொம்ப கஷ்டம்” என்றாள் மானு குறும்புடன் கண்சிமிட்டி.

அவளின் காதைப் பிடித்து திருகி, “மருந்து கூட கசப்பாகத்தான் இருக்கும். அதுக்கு பயந்து மாத்திரை எடுக்காமல் இருந்தால் நோய் நம்மள கொன்னுடும். இந்த வயதில் எல்லாம் சகஜம்னு சொல்ல மாட்டேன். நம்ம சரியாக இருந்தால் எல்லாமே சரியா இருக்கும்” என்று சொல்ல சின்னவளோ வலிதாங்க முடியாமல் துடித்தாள்.

“அக்கா காதைவிடு வலிக்குது” என்று அவள் கத்திட, “இனி இடையே ஏதாவது பேசுவே” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள்.

அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய மானுவும், மலரும் பின்னோடு அமர, “அம்மா போயிட்டு வரோம்” என்று குரல்கொடுத்துவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

தங்கைகளை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு நிமிரும்போது தான் மலரின் முகம் சோர்ந்து இருப்பதை கவனித்தவள், “என்ன விஷயம்! இப்போ எதுக்காக இவ்வளவு அமைதியாக இருக்கிற?” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.

“அக்கா பீஸ் கட்ட பணம் இன்னும் தரவே இல்ல” அவள் தயக்கத்துடன் தொடங்கிட, பெரியவளின் முகத்தில் சிந்தனை படர்ந்தது.  அவர்களின் படிப்பு பாதியில் தடை வரக்கூடாது என்ற காரணத்திற்காகவே, அவள் வேலைக்கு செல்ல தொடங்கினாள்.

ஆரம்பத்தில் தங்கைகளிடம் பணம் கொடுத்து அனுப்பியவள், இப்போது நேரடியாக காலேஜில் கட்டிவிடும் பழக்கத்தை உருவாக்கியிருந்தாள். தங்கைகள் மீது நம்பிக்கை இருந்தாலும், பீஸ் பெயரைச்சொல்லி அந்த பணத்தை வாங்க வாய்ப்பு இருக்கிறது.

அதனால், “நான் ஆபீசில் கட்டிவிடுகிறேன். நீ முதலில் காலேஜ் போகும் வழியைப் பாரு” என்று சொல்லிவிட்டு, சந்தை பக்கம் வண்டியைத் திருப்பினாள்.

அவள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிவிட்டு திரும்பும்போது, “என்ன அக்கா இன்னைக்கு நீங்க மட்டும் வந்து இருக்கீங்க. உங்களோட இன்னொரு வாலு வருமே காணலே” என்ற குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.  

தமிழரசன் தான் புன்னகையுடன் நின்றிருக்க கண்டு, “என்னடா காலையில் மார்கெட் பக்கம் வந்திருக்கிற? இன்னைக்கு இங்கே தான் வேலையா?” என்றாள் சந்தேகமாக.

“ஆமாக்கா இயற்கை உரத்திற்கு இங்கே  அழுகிப்போன காய்களை பயன்படுத்தறாங்க. அதை அள்ளிட்டுப் போக வந்தோம்” என்றவன் கைகாட்டிய திசையில் இரண்டு நபர்கள் அதை எடுத்து டிராக்டரில் போட்டு கொண்டிருந்தனர்.

அதை கவனித்த தேன்மொழி, “இது எல்லாம் கூட வாங்க ஆள் இருக்கா?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

அதைக்கேட்டு கொஞ்சம் சத்தமாக சிரித்துவிட்ட தமிழோ, “அக்கா நல்ல காய்களை மக்களுக்கு தரணும் என்று நினைக்கும் விவசாயிகள் இன்னும் இந்த நாட்டில் தான் இருக்காங்க. இது மட்டும் இல்லாமல் மாட்டு தொழுவத்தில் சாணம் எல்லாம் மண்ணோடு கலந்து உரமாக மாறும். அதையும் எடுத்துட்டு போய் தேவைப்படும் விவசாயிகளுக்கு கொடுப்போம்” என்று விளக்கம் கொடுத்தான்.

“இதில் உங்களுக்கு என்ன இலாபம்?” என்றவள் புரியாமல் கேட்க,

“ம்ஹும் இதை கொண்டு போய் கொடுத்தால் அதை மார்கெட் ஆளுங்க வாங்கிக்குவாங்க. எங்களுக்கு லோடுக்கு இவ்வளவுன்னு பணம் தருவாங்க” என்றான்.

அவள் என்னதான் தமிழோடு பேசினாலும் வாங்க வேண்டிய அனைத்து காய்கறிகளையும் வாங்கிகொண்டு, “சரிடா நான் கிளம்பறேன். இனிமேல் போய்தான் ஆபீஸ் கிளம்பணும்” என்றவள் அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பினாள்.

அதற்குள், “அக்கா என் கேள்விக்கு பதில் சொல்லாமல் போறீங்களே இது நியாயமா?” என்றவன் கேட்க, சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஓஹோ நீ இந்துமதியை கேட்டே இல்ல. அவ வீட்டில் இருப்பாடா. நான் எங்கே வந்தாலும் என்னோடு கிளம்பிடுவாள். ஆனால் இன்னைக்கு எனக்கு கொஞ்சம் வேலை  அதிகம். அதுதான் சொல்லாமல் கிளம்பி வந்துட்டேன்” என்றவுடன் அவன் சரியென்று தலையசைத்தான்.

அங்கிருந்து கிளம்பியவள் மல்லிகை கடைக்கு சென்று வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு, “அண்ணா அரிசியை வீட்டில் போட்டுடுங்க” என்று சொல்ல, அவரும் சரியென்று தலையசைத்தார்.

தன்னுடைய கைகடிகாரத்தில் மணியைப் பார்த்தவள், “இதை கொண்டுபோய் வீட்டில் கொடுத்துட்டு வேலைக்கு கிளம்ப சரியாக இருக்கும்” என்று நினைத்து வண்டியை எடுத்தாள். அதே நேரத்தில் பக்கத்தில் இடிக்கப்பட்ட கட்டிடகத்தின் மண்ணை அள்ள வந்திருந்தனர் கலைசெல்வனும், சிவநேசனும்!

டிராக்டரை எடுத்து செல்வதற்கு எதுவாக வண்டியைத் திருப்பி நிறுத்துவிட்டு இறங்கியவன், “டேய் சீக்கிரம் வேலையை முடி. நான் போய் ஒரு தம் அடிச்சிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு தெருமுனையில் இருக்கும் பெட்டிக்கடை நோக்கி நடந்தான் கலைச்செல்வன்.

அந்த கடையில் சிகரெட் வாங்கி பத்த வைத்துவிட்டு, அவன் திரும்ப பெரிய திருஷ்டி பூசணிக்காயை ரோட்டில் போட்டு உடைத்து சென்றார் ஒரு நபர்.

அதைக் கவனித்த கலைச்செல்வன் மனதில் அவள் தன்னை அடித்த காட்சி தோன்றி மறைய, “ஒரே ஒரு அடிதான் அடிச்சாள். ஆனால் இந்த  மனசு தினமும் அதை நினைவுபடுத்தியே நம்மள கொல்லுது” என்று நினைத்துக்கொண்டே நடுரோட்டில் நின்றிருந்தான்.

அந்த வழியாக வந்த தேன்மொழி விடாமல் ஹாரன் அடிக்க, அது அவன் காதில் விழவில்லை போலும். அவன் அசையாமல் மரம் மாதிரி நின்றிருக்க, அவன் பக்கத்தில் சென்று சடர்ன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள்.

டிராக்டர் ஓட்டுவதற்கு ஏற்றார்களோ கைலியும், கட்டம் போட்ட கருப்புநிற சட்டையும் அணிந்து இருந்தவனை நொடியில் அடையாளம் கொண்டு கொண்டாள்.

அதில் கொஞ்சம் அதிர்ந்து இரண்டடி பின்னே நகர்ந்தவன், “ஏய் இது என்ன மேம்பாலம்னு நினைச்சியா? கொஞ்ச நேரத்தில் என் வாழ்க்கையை குழிதோண்டி புதச்சிருப்பே” என்று கோபத்துடன் நிமிர்ந்தவன் அவளின் விழிகளை நோக்கினான்.

ஸ்கூட்டியில் தேவதை போல நின்றிருந்தவளின் விழிகளை நோக்கினான். பெண்களின் கண்களில் ஒருவிதமான போதை குடிகொண்டு இருக்கும். ஆனால் அவள் விழிகளோ கனலை சுமந்திருக்க கண்டு வாயடைத்து அவன் நின்றிருக்க, “ஏய் அறிவில்ல! அப்படியே விட்டு ஏத்தி இருந்தால் என்ன ஆகிருப்பே?” என்று அவனிடம் எகிறினாள் தேன்மொழி.

அவள் குரலில் தன்னிலைக்கு மீண்டவன், “ம்ஹும் நேரா பரலோகம் தான் போயிருப்பேன். ஏண்டி கையில் ஸ்கூட்டி இருந்தால் தெருவில் போற வரவங்க மேலே எல்லாம் விடுவியா?” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.

அதைகேட்டு இதழ்கடையோரம் புன்னகை பூக்க, “ம்ஹும் கையில் சிகரெட்டை வச்சுகிட்டு பகல்கனவு கண்டபடி நிற்கும் எல்லோரின் மேலும் வண்டியை இலவசமாக விட்டு ஏத்தலாம்னு அரசாங்கம் புதுசட்டம் கொண்டு வந்திருக்கே அது உனக்கு தெரியாதா?” என்று அவன் முகத்திற்கு நேராக கை நீட்டி பேசினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு பக்கென்று சிரித்தவன், “அடிக்கழுதை! உனக்கு இவ்வளவு கொழுப்பா? ஏண்டி எந்த நேரமும் ஆம்பள மாதிரி திரியிறியே உங்க வீட்டில் உன்னை கண்டிக்கவே மாட்டாங்களா?” என்றான் கோபமாக.

“நான் எங்க வீட்டுக்காக உழைக்கிறேன். அதனால் என்னை கண்டிக்கும் வேலை எல்லாம் அவங்களுக்கு இல்ல. ஹாரன் சவுண்டுகூட காதில் விழுகாத அளவுக்கு அப்படி என்ன சிந்தனை?” என்றவள் குறும்புடன் விசாரிக்க, மீண்டும் அவன் மனம் நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தது.

ஒரு பெண்ணின் கையால் வாங்கிய அடியை நினைத்து அவன் கன்னத்தை தடவிட, ‘இன்னும் சாருன்னு யாருன்னு தெரியல. அதுதான் இவ்வளவு சாதாரணமா பேசிட்டு இருக்காரு’ என்று அவள் நினைக்க, ‘அந்த உண்மைத் தெரிந்தால் என்ன நடக்கும் தெரியும் இல்ல’ என்றது அவளின் மனம்.

 ‘நீதான் எனக்கு முதல் எதிரியே!’ என்று அவள் மனசாட்சியை வாணலி இல்லாமல் வறுத்தெடுக்க,  “அது எதுக்கு உனக்கு?” என்றான் எரிச்சலோடு.

நேற்று நடந்த சம்பவத்தை அவன் இன்னும் மறக்கவில்லை என்பதை புரிந்துகொண்டு, “நீ எப்படியோ போனால் எனக்கென்ன? இன்னொரு முறை  நடுரோட்டில் நின்னு கனவு கண்டுட்டு இருந்தே. இந்த மாதிரி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி விவாதம் பண்ணிட்டு இருக்க மாட்டேன் ஞாபகம் வச்சுக்கோ” என்ற எச்சரிக்கையுடன் அங்கிருந்து கிளம்பு நினைத்தாள்.

அவள் பேச்சு அவன் கோபத்திற்கு தூபம் போட, “அதையேத்தான் நானும் சொல்றேன். இன்னொரு முறை இப்படி வண்டியைக் கொண்டு வந்து ஏத்துன மகளே உசுரோட வீடு போக மாட்டே சொல்லிட்டேன்” என்று ஆள்காட்டி விரலை அவள் முகத்திற்கு நேராக நீட்டி எச்சரித்தான்.

“சரிதான் போவியா? நான் எங்க அம்மா செந்தாமரைக்கே பயப்பட மாட்டேன். இவன் மிரட்டலுக்கு பயப்படனுமாம். முதலில் நான் சொன்னதை மனசில் வைத்து நடக்கப்பழகு. வளந்த ஆளுங்களுக்கே அறிவு இருக்காதுன்னு சொல்றது உண்மைதான் போல…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

அவள் சென்ற திக்கை நோக்கியபடி நின்ற கலைச்செல்வன் மனமோ, ‘நானும் எத்தனையோ ரகமான பெண்களை சந்தித்து இருக்கேன். இவளை மாதிரி  ஒருத்தியைப் பார்த்ததே இல்ல. எந்த நேரமும் பயமின்றி நடமாடும் அவளைக் காணும்போது ஏனோ மகாகவி பாரதியாரின் மறுபிம்பம் மாதிரியே தெரியுது’ என்று நினைத்தான்.

அதற்குள், “அண்ணா வேலை முடிச்சுது வா கிளம்பலாம்” என்று சிவநேசன் குரல்கேட்க, “இதோ வாரேன்டா” என்று சிகரெட்டை காலில் போட்டு மிதித்துவிட்டு, அங்கிருந்து சென்றான்.

வீட்டின் முன்பு ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம்கேட்டு வாசலுக்கு வந்த செந்தாமரை, “இன்னைக்கு சீக்கிரம் ஆபீஸ் போகணும்னு சொல்லிட்டு இருந்தே” என்று சொல்லியபடி வாசலுக்கு வந்தார்.

அங்கே ஒரு கையில் காய்கறிகளும், மற்றொரு கையில் வீட்டுக்குத் தேவையான மல்லிகை ஜாமான்களையும் தூக்கியபடி வந்தவளிடம்  இருந்து ஒன்றை வாங்கிக்கொண்டு, “இது எல்லாம் பொழுதோடு வந்து வாங்கிட்டு வந்திருக்கலாம் இல்ல” என்றார் பரிவுடன்.

“ஆமா ஏற்கனவே ஒரு மாதம் வாங்கி போடும் பொருட்களை சிக்கனமாக வைத்து இரண்டு மாதம் பயன்படுத்துறீங்க. இன்னைக்கு காலையில பார்க்கிறேன்  அரிசிகூட வீட்டில் இல்ல. நீங்க சொல்லித்தான் தெரியணும் என்ற அவசியம் இல்லம்மா” என்றவள் கடிந்துகொண்டு பொருட்களை உள்ளே எடுத்து வைத்தாள்.

இந்த சிறு வயதிலேயே அவளுக்கு இருக்கும் அறிவு கூர்மையைக் கண்டு மனம் நெகிழ்ந்த செந்தாமரை, “நீ முதலில் போய் கைகால் கழுவிட்டு வா. நான் சாப்பாடு போடுறேன்” என்று சொல்லி சமையலறைக்கு விரைந்தார்.

அதே சமயம் தாயின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வை படித்துவிட்ட தேன்மொழி இதழ்களில் புன்னகை அரும்பியது. சின்ன தேவைதான் அதை அவர்கள் வாய்விட்டு சொல்லாமல் நிறைவேற்றும் போதும், பெற்றவர்களின் முகத்தில் தோன்றும் நிம்மதி மனதிற்கு அமைதியைத் தரும்.

அந்த சந்தோசத்தை உணர்ந்த பெண்ணவள் முகம் அலம்பிவிட்டு வந்து சாப்பிட அமர, “உனக்கு பிடித்த கத்திரிக்காய் போட்டு சாம்பாரும், பீட்ரூட் பொரியலும் வைத்தேன். மதியம் சாப்பிட தயிரும் சேர்த்து வைத்திருக்கிறேன் மறக்காமல் சாப்பிடு” என்று சொல்லிவிட்டு மகளுக்கு பரிமாறினார்.

“சரிம்மா” என்றவள் சாப்பிட்டு கை கழுவிட்டு எழுந்துகொள்ள, “ஒரு நிமிஷம் நில்லு” என்று சொல்லி மல்லிகை பூச்சரத்தை சூட்டினர். அவள் ஹேண்ட் பேக்கை எடுத்துகொண்டு வேலைக்கு செல்ல வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் செந்தாமரை.

இந்த காலத்தில் குடும்ப சுமையைத் தூக்கி சுமக்க ஆண்பிள்ளைகளே முன்வராத போது ஒற்றைப் பெண்ணாக சம்பாரித்து, வீட்டு தேவையானவற்றை வாங்கிப் போட்டு, தங்கச்சிகளின் படிப்புக்கு பீஸ் கட்டும் அவளின் கஷ்டம் அறிந்து கண்கள் கலங்கியது.

‘இங்கே அனுபவிக்கும் கஷ்டத்திற்கு அடுத்த வீட்டிலாவது நல்லா இருக்கணும் கடவுளே’ என்று மனதார வேண்டிக் கொண்டார்.