பூவிதழ் – 6

d55c5788e05b04f89d4e13e73a7a6ee3-40a4f40f

அத்தியாயம் – 6

அவள் திகைப்பில் சிலையாகி நின்றிருந்தது சில நொடிகள் மட்டுமே! அவனிடம் உண்மையைச் சொல்லாதே என்று கண்டித்தபிறகும் உண்மையை உளறிய இந்துமதியை முறைத்த தேன்மொழி, “உன்னிடம் எவ்வளவு தூரம் சொன்னேன். நான் அடித்த விஷயத்தை சொல்லாதேன்னு!” என்றவள் அடிக்க கையோங்க, கலைச்செல்வன் அவளின் இடதுகரத்தை விட்டு வலதுகரத்தைப் பிடித்து தடுத்தான்.

“அக்கா ஏதோ நினைவில் தெரியாமல்” என்றவளிடம், “நீ கிளம்பு” என்று கலைச்செல்வன் மிரட்ட, அவள் சத்தமின்றி அங்கிருந்து நகர்ந்தாள்.

அதே நேரத்தில் அவன் கைக்குள் சிறைபட்டு இருந்த கரம் வலிக்க, “முதலில் கையை விடுங்க” தேன்மொழி கோபத்துடன் கூற, அவன் பிடிவாதமாகக் கையைவிடாமல் பிடித்திருக்க, அவளுக்குச் சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.

அவனிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், “எந்தநேரமும் பொண்ணுங்க பின்னாடியே சுத்துறீயே உனக்கெல்லாம் வெட்கமாக இல்ல. இந்த கையால் எத்தனை பொண்ணுங்களைத் தொட்டாயோ நினைக்கவே அருவருப்பாக இருக்கு” என்றாள் எரிச்சலோடு.

தன்னைப் பற்றிய தவறான விதை அவளின் மனதில் விழுந்து இருப்பதை உணராமல், “ஏய் நான் குணம் சரியில்லாதவன் தான்டி ஒத்துக்கிறேன். ஆனா உன்னிடம் என்னைக்காவது தவறாக நடக்க முயற்சி பண்ணிருக்கேனா?” விழிகள் இரண்டும் கனல்போல் சிவக்க கேட்டான்.

சட்டென்று அவனை விழிகளை நேருக்கு நேராக சந்தித்தவள், “ஓ! நீ இவ்வளவு நல்லவன்னு எனக்கு தெரியாமல் போயிடுச்சே! ஒவ்வொரு முறையும் நீயாக வந்து அடி வாங்குவதற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றாள் ஏளனமாக உதட்டை வளைத்தபடி.

அவன் புரியவில்லை என்பதுபோல பார்க்க, “அன்னைக்கு கோவிலுக்கு சாமி கும்பிட வந்த என் ஜடையை பிடித்து இழுத்தது உன் தப்பு. அதே மாதிரி இன்னைக்கு என்னோட கையைப்பிடித்து இழுத்து கன்னம் பழுக்க வாங்கிட்ட. இந்த இரண்டு இடத்திலுமே நான் எந்தவிதமான தவறும் செய்யல” என்று அவள் தன்னிலை விளக்கம் கொடுக்க, அவளைப் போலவே கன்னம் பழுக்க இரண்டு கொடுக்கலாமா என்று நினைக்கும் அளவுக்கு அவனுக்கு கோபம் வந்தது.

அவளின் கையை இறுக்கிப்பிடித்த கலைச்செல்வன், “என்னைக் கைநீட்டி அடித்தும் இல்லாமல், இந்தளவுக்கு பேசும் உன்னை இங்கேயே இப்பவே என்ன வேண்டுமானாலும் என்னால் செய்ய முடியும்” என்று அவன் இடைவெளிவிட, அவளின் பார்வை கூர்மை பெற்றது.

அவனது வார்த்தைகளில் இருந்தே அவன் எதையும் செய்வான் என்று உணர்ந்தபோதும், நெஞ்சில் துளியும் பயமின்றி, “பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அது உயிரை எடுத்திடும். அதுப்போல தான் நீயும்னு எனக்கு நல்லாவே தெரியாது. அதுக்காக பயப்படும் ரகம் நானில்லை” என்றாள்.

அவளால் எத்தனைநாள் தூக்கம் இழந்திருப்பேன் என்றும், ஒவ்வொரு முறையும் அவள் அடித்த நினைவு வரும்போது, அவன் துடித்த துடிப்பும் ஞாபகம் வந்தது.

“உன்னால் நான் அனுபவித்த வலியை உனக்கு திரும்பக் கொடுக்கும் வரை என்னால் நிம்மதியாக தூங்க முடியாதுடி. அதுக்கெல்லாம் சேர்த்து வைத்து உன்னை என்ன செய்யறேன்னு பாரு!” என்றவன் கூற, உன் மிரட்டலுக்கு நான் பயப்படுவேனா என்பதுபோல நின்றிருந்தாள் தேன்மொழி.

அந்த திமிர் பார்வை அவன் கோபத்திற்கு தூபம் போட, “என்னைப் பார்த்து அருவருப்புப்படும் உன்னையே கல்யாணம் பண்ணி, காலம் முழுக்க எனக்கு சலாம் போட வைக்கிறேனா இல்லையான்னு பாருடி” என்று அவன் சவால்விட, ஏதோ காமெடி கேட்டவள் போல பக்கென்று சிரித்தாள்.

கலைச்செல்வன் கொலைவெறியுடன் அவளை நோக்கிட, “நீ என்னை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க டார்ச்சர் பண்ண போறீயா? இதைக் கேட்கும்போதே செமக் காமெடியாக இருக்கு” என்று ஏளனப்பார்வையுடன் கூறியவள், மருந்துக்கும் அவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

“ஏய்” என்றவன் அதட்டிட, சட்டென்று கையைத் தட்டிவிட்டு அவனை ஏறிட்டாள். நடுத்தெருவில் நிற்கிறோமே என்ற ஒரே காரணத்திற்காக அவன் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“உன்னால முடிஞ்சதை பாரு! மத்த பொண்ணுங்க மாதிரி காதல் என்றவுடன் மயங்கி, உன் ஆசைக்கு இரையாகும் ரகம் நான் கிடையாது. சோ என்னோடு மோதினால் சேதாரம் உனக்குத்தான்! ஞாபகம் வச்சுக்கோ!” அவன் முகத்திற்கு நேராக சொடக்குப்போட்டு சொல்லிவிட்டு, தன் திசையை நோக்கி நடந்தாள்.

“ம்ஹும் பார்க்கிறேன்டி என் சண்டிராணி! உன்னைத் தோற்கடிக்காமல் விட மாட்டேன்” என்று அவன் கத்தி சொல்ல, “உன்னால முடிஞ்சதைப் பாருன்னு தான் நானும் சொல்றேன்” என்றாள் நக்கல் சிரிப்புடன்.

அவள் அங்கிருந்து சென்றபிறகும் அவன் கோபத்துடன் அங்கேயே நின்றிருந்தான். இத்தனை நாளாக பாவம் குடும்பத்திற்காக கஷ்டப்படும் பெண்ணாக இருக்கிறாளே, இவளுக்கு நல்ல வழி காட்டு கடவுளே என்று மனதார வேண்டியவன், இன்று அவள் வாழ்க்கையை நாசம் செய்ய முடிவெடுத்தான்.

அவளை பூவைப்போல கசக்கி எரிந்திட, அவனுக்கு நிமிடம் போதும். ஆனால் பூவைக்கூட கசக்கி நுகர்வது அவனுக்குப் பிடிக்காது. மலர்கள் அதுவாக மணம் வீசி மனதினை ஈர்க்க வேண்டும். அப்படிபட்ட பூவினை தீண்டுவது பாவமில்லை என்று நினைப்பவன். ஆனால் தேன்மொழியிடம் கொஞ்சம் விட்டுப்பிடிக்க வேண்டும் என்று முடிவிற்கு வந்தான்.

அவனிடம் சண்டைப் போட்டு ராமாத்தாள் வீட்டிற்கு சென்று கட்டியப் பூவைக் கொடுத்துவிட்டு, வீடு திரும்பும் வழியில் மாவை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்தாள். தங்கைகள் இருவரும் படிக்க அமர்ந்திருக்க கண்டு, தாயிடம் மாவைக் கொடுத்துவிட்டு துவையல் அரைக்கும் வேலையில் ஈடுபாட்டாள்.

அவளின் கைகள் தானாக வேலையைச் செய்ய மனமோ, ‘இவனோட வாழ்க்கையில் தேவையில்லாமல் நுழைகிறோமோ? நம்ம எதர்ச்சியாக அடித்து என்று சொன்னாலும், அதை அவன் ஏத்துக்கப் போவதில்லை. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி ஆகிடுச்சே! இனி வரும் பிரச்சனைகளை சமாளித்துதானே ஆகணும்’ என்று நினைத்தாள்.

அவள் வெகுநேரம் சிந்தனையில் இருப்பதைக் கவனித்த தாமரை, “என்னம்மா விஷயம்! ஏதாவது பிரச்சனையா?” என்று மகளிடம் பரிவுடன் விசாரிக்க, அவரின் குரல்கேட்டு வெடுக்கென்று நிமிர்ந்தாள்.

“அது எல்லாம் ஒண்ணுமில்ல அம்மா” என்று சமாளித்துவிட்டு அடுப்படியை விட்டு வெளியேறிட, ‘இந்த பொண்ணு ஒன்னும் இல்லாத விஷயத்தையா இப்படி யோசிக்குது’ என்ற எண்ணத்துடன் வேலையைத் தொடர்ந்தார்.

அன்றே அவரிடம் நடந்ததை சொல்லி இருந்தால், ஒருவேளை இனி வரப்போகும் பிரச்சனைகளை தடுத்திருக்கலாம். ஆனால் நாம் நினைப்பது அனைத்தும் அப்படியே நடந்துவிட்டால் தெய்வம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடுவோமே!

தேன்மொழி சிந்தனையுடன் பின்வாசலில் இருக்கும் கிணற்றின் அருகே சென்றவள், நீரில் தன் முகம் பார்த்தாள். அதே நேரத்தில் வானில் பயணித்த பூரண பௌர்ணமியின் பிம்பம் நீரில் தெளிவாக விழுந்திருந்தது. ஏனோ வானில் சுதந்திரமாக இருக்கும் நிலவை கிணற்றின் நீர் பிடித்து வைத்திருப்பது போன்றொரு பிரம்மை உருவானது அவளின் மனதில்!

‘நம் சிந்தனைகளுக்கு முழு சுதந்திரம் உண்டு அந்த நிலவைப் போலவே! ஆனால் நாம்தான் சில குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் சிந்தித்து தேவையில்லாமல் பிரச்சனை என்ற வலைக்குள் சிக்குகிறோம்’ என்று உணர்ந்தவுடன் அவனைப் பற்றிய சிந்தனையை ஓரம் காட்டினாள்.

அதற்குள் மரத்தில் இருந்து விழுந்த இலையொன்று நீரில் சலனத்தை ஏற்படுத்த, நிலவின் பிம்பம் தெளிவின்றி தெரிந்தது. அதைப் பார்த்து தனக்குள் சிரித்தபடி தேன்மொழி நின்றிருக்க, “அக்கா அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க” என்று மலர்விழியின் குரல்கேட்டு வீட்டிற்குள் சென்றாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாக கழிந்தது. கலைச்செல்வன் இயல்பாக வலம் வருவதைக் கண்டு, “மனுஷனுக்கு பூச்சாண்டி காட்டுவது தான் இவனுங்களுக்கு வேலையே” அவனின் விஷயத்தை அப்படியே விட்டுவிட்டாள்.

அன்று காலை அவள் வேலைக்கு செல்லும் வழியில், கலைச்செல்வன் வண்டியை நிறுத்தி இறங்கினான். அவனோடு வந்த தமிழரசன் மற்றும் கவியரசு இருவரும் இறங்கி வேலையைத் தொடங்கினர். அப்போது அவர்களைக் கடந்து சென்ற பெண்களின் பார்வை கலைச்செல்வன் மீது படிந்தது.

அவன் அதைக் கவனிக்காமல் நின்றிருக்க, “ஏய் அங்கே என்னடி பார்க்கிறீங்க?” என்ற கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.

காலைநேரம் என்பதால் அந்த தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் பெண்களுடன் அவளும் இருப்பதைக் கண்டு, ‘இவ எதுக்காக இப்படி சொல்றா?’ என்ற யோசனையுடன் அவளின் மீது பார்வையைப் படரவிட்டான்.

நேராக வகிடேடுத்து பின்னப்பட்ட கூந்தல் இடையைத் தழுவ, அழகான இளம்பச்சை நிறக் காட்டன் சுடிதாரில் தேவதையாய் மிளிர்ந்தவளைப் பார்த்து இமைக்க மறந்தான்.

அதே சமயத்தில் அவனைக் கடந்து சென்ற பெண்களில் ஒருத்தி மட்டும், “ஒரு டிராக்டர் ஓட்டும் ஆணுக்கு இவ்வளவு அழகா? ஆண்கள் இயல்பாகவே அழகுதான். ஆனால் இவன் மத்தவங்களைவிட ரொம்ப அழகாக இருக்கான். எந்த மகராசிக்கு கொடுத்து வைச்சிருக்கோ” என்றாள் பெருமூச்சுடன்.

அதைக்கேட்டு அவன் உதடுகளில் புன்முறுவல் பூக்க, “அழகு ரொம்ப ஆபத்துடி. நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” சிரித்தபடியே எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் தேன்மொழி.

அவளின் குரல் காதில் விழுக, “இவளை ஏதாவது செய்யணுமே!” என்று நினைத்தவன், ஒரு முடிவிற்கு வந்தான். அதை அவன் செயல்படுத்திட அன்று மதியமே அதை செயல்படுத்த அவனுக்கு வாய்ப்பு அமைந்தது.

தேன்மொழி எப்போதுமே தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பாள். ஆனால் அன்று ஏனோ அவளுக்கு வேலையே  ஓடவில்லை. ஒருப்பக்கம் தலைவலி மண்டையைப் பிளக்க, இதற்குமேல் வேலை செய்தாலும், அது தவறாகிப் போகும் என்ற முடிவுடன் வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

அவள் அலுவலகம் விட்டு வெளியே வந்தவுடன், “ஒரு டீ குடித்தால் தான் தலைவலி கொஞ்சம் மட்டுப்படும்” என்று நினைத்தபடி பார்வையை சுழலவிட்டாள். அவளின் நேரமோ என்னவோ அன்று எதிரே இருந்த டீக்கடை மூடப்பட்டு இருந்தது.

அவளின் ஸ்கூட்டி வேறு ரிப்பேர் ஆன காரணத்தால், “எல்லாம் ஒன்றாய் சேர்ந்து உயிரை வாங்குது” என்று புலம்பியபடி நடக்க, ஒரு வண்டியில் டீ வைத்து ஒருவர் விற்றுக்கொண்டு இருப்பதைக் கவனித்தாள்.

உடனே அங்கே சென்ற தேன்மொழி, “அண்ணா ஒரு டீ” என்று சொல்ல, பேப்பர் கப்பில் டீயை கொடுத்தார். அதை வாங்கிப் பருகியபடி அவள் நிமிர, கலைச்செல்வன் அங்கே வந்தான்.

அவனைப் பார்த்தவுடன் அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிட, அவரிடம் ஒரு டீயை வாங்கிப் பருகியவன், “என்ன மேடம் என்னைப் பார்க்கும் பெண்களுக்கு எச்சரிக்கை எல்லாம் விடுறீங்க. அவங்க என்னை வளைத்துவிடுவாங்க என்று பயமா? அதுதான் அவங்களைப் பார்க்க விடாமல் செய்ய இப்படி எல்லாம் தவறாக சொல்றீயா?” என்று அவளை வேண்டுமென்றே சீண்டினான்.

அவள் அவனை முறைக்க, “மாமன் அழகாய் இருக்கேனா?” அவன் கண்சிமிட்டலோடு கேட்டான்.

அவனின் கேள்வியில் குடித்துக் கொண்டிருந்த டீ புரையேறிட, “என்னது நீ அழகா இருக்கிறாயா? உன்னை மத்தவங்க கைக்குள் போடுவதை தடுக்க நான் வதந்தியைக் கிளப்புறேனா? இது நல்ல கதையாக இருக்கே” என்றாள் இளக்காரமாக!

“பின்ன அதுதானே உண்மை” என்றவன் கூற, அவள் பார்வை அவனை அளவிட்டது.

ப்ளூ கலர் லுங்கி, கருப்பு நிற பனியன், தோளில் ஒரு சிவப்புநிற துண்டு கட்டிக்கொண்டு  இருந்தான் கலைச்செல்வன். அந்த தோற்றத்தில் கூட அவன் கம்பீரம் சற்றும் குறையவில்லை என்பதை அவளும் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால், “அழுக்கு லுங்கி, கிழிந்த பனியன், சம்மந்தமே இல்லாமல் தோளில்  ஒரு துண்டு. இப்படி இருக்கும் உன்னைப் பார்த்து அழகன் என்று சொன்னாலே அவளுக்கு நிஜத்திலேயே கண்ணில் கோளாறுன்னு தான் நினைக்கிறேன். உன்னை எல்லாம் நான் ஏறெடுத்தும் பார்ப்பேன்னு கனவிலும் நினைக்காதே” என்று சொல்லிவிட்டு டீக்கு காசைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அதே சமயத்தில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை ஒரு ஜோடி கண்கள் நோக்கியதை அவன் மட்டும் கவனித்தான். தான் எந்த கோல் போட்டாலும் அதை  சிக்ஸராக மாற்றும் அவளுக்கு பின்னிய வலையில், முதல் காயை சரியாக அடித்தான்.

அவளின் பேச்சில் கோபம் தலைகேறிய போதும், ‘மனமே பொறு!’ என்று சொல்லி மனதிற்கு கடிவாளமிட்டான்.

அவளது வார்த்தைகள் அவனைக் காயப்படுத்திட, ‘உன்னோட திமிரு எதுவரை என்று நானும் பார்க்கிறேன்’ என்று மனதிற்குள் நினைத்தபடி அங்கிருந்து சென்றான். அவன் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல, அவனை எதிர்பார்த்து காத்திருந்தார் ராமாத்தாள்.

மதியம் தேன்மொழியுடன் கலைச்செல்வனை பார்த்ததில் இருந்து அவரின் மனம் நிலையின்றி தவித்தது. என்றும் இல்லாத திருநாளாக வீடு வரை வந்த பாட்டியைப் பார்த்து அவன் புருவங்கள் சிந்தனையுடன் சுருங்கியது.

“என்ன பாட்டி பூஜை நாளும் அதுவுமாக கடைத் திறக்காமல் இங்கே வந்திருக்கீங்க என்ன விஷயம்?” என்று விசாரித்தபடி வீட்டின் கதவைத் திறந்தான்.

அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்த பெரியவள், “அதை நான் கேட்கணும். ஆமா நீ எதுக்காக தேனுகூட பேசிட்டு இருந்தே!” அவர் அதட்டல் போட, அதுதான் சமயமென்று விஷயத்தை கொஞ்சம்  கதையாகத் திரித்துக் கூறினான்.

“எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருந்தது பாட்டி. அதை அவளிடம் இன்னைக்கு சொன்னேன். அவ வீட்டு ஆளுங்க அதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டு போயிட்டாள்” என அப்படியே மாற்றிக் கூறினான்.

அவன் சொன்னதை நம்பாமல் பார்த்த பாட்டியிடம், “நீதானே எனக்கு பிடிச்ச பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொன்னே! எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவங்க வீட்டில் பேசிட்டு சொல்லுங்க” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு, வீட்டின் முற்றத்திற்கு சென்றான்.

“டேய் அவளைக் கல்யாணம் செய்து வைத்தால் நல்லா பார்த்துப்பாயா?” என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதிலைக் கேட்டு திகைத்து நின்றார் ராமாத்தாள்.

அடுத்ததாக இந்த விஷயத்தைப் பற்றி தாமரையிடம் கூற, அவர் அரை மனதாய் சம்மதித்தார். அந்த உண்மையை அறிந்த கலைச்செல்வன் அவரை நேரில் சந்தித்துப் பேசியபிறகு, அவர்களின் திருமணத்திற்கு சம்மதித்தார். இவன் காய் நகர்த்திய விஷயம் அறியாமல் இயல்பாக வேலைக்கு சென்று வந்தாள் தேன்மொழி.