பூவிதழ் – 7

images - 2020-10-05T190108.893-87039f24

அத்தியாயம் – 7

ஒருபக்கம் அவளுக்கு தெரியாமல் ஏற்பாடுகள் நடந்தவண்ணம் இருந்தது. இந்த உண்மையை அறியாத தேன்மொழி கொஞ்சம் கொஞ்சமாக சீட்டுப்போட்டு வைத்திருந்த பணத்தை அன்றுதான் கையில் வாங்கினாள்.

கிட்டத்தட்ட ஐந்துலட்சம் பணத்தைக் கையில் வாங்கியவுடன், அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் அவர்களின் வீட்டிற்கு சென்றாள்.

அவளைப் பார்த்ததும் இரத்தினவேலுவின் மனைவி சுதா, “தேனு வா! உன்னைப்  பார்த்து எம்பூட்டு நாளாச்சு. அப்புறம் வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று அக்கறையுடன் விசாரித்தபடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“ம்ஹும் எல்லோருமே நல்லா இருக்காங்க அக்கா” என்றவள் தண்ணீரை  வாங்கி பருகியதும், “அண்ணா வீட்டில் இல்லையா?” என்றாள்.

“அவரு இதோ பக்கத்தில் தான் போயிருக்காரு!” என்று சொன்னவர் உடனே  கணவனுக்கு அழைத்து, விவரம் கூறிவிட்டு போனை வைத்ததும், “இன்னும் கொஞ்ச நேரத்தில் வரேன்னு சொன்னாரு” என்று புன்னகைத்தார்.

இரத்தினவேலு  ஊருக்குள் இருக்கும் நபர்களுக்கு ரொக்கமாக பணத்தை  வட்டிக்கு கொடுப்பவர். திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் படுத்த தாமரையை காப்பாற்ற, அடமானம் வைத்து பணம் வாங்கியிருந்தாள்.

வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்துதான் தன்னைக் காப்பாற்றி இருக்கிறாள் என்றாலும், அவருக்கு அந்த வீட்டை இழக்க மனமில்லை. அதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே கொஞ்சம் கசப்பு இருந்தது நிஜம்தான்.

யாரும் ஜாமீன் போடாத காரணத்தால், தங்களின் வீட்டுப் பத்திரத்தை கொடுத்ததை சொல்லாமல்,  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில்  வட்டி மட்டும் கொஞ்சம் கொடுத்திருக்க, அசல் அப்படியே இருந்தது.

இப்படி அவள் பல்வேறு சிந்தனையில் அமர்ந்திருக்க, வீட்டின் வாசலில் புல்லட் வந்து நிற்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, “வாம்மா தேனு” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தார் இரத்தினவேலு.

ஆறடியளவு உயரம் என்றாலும், வெள்ளை வேட்டி சட்டையில் பார்ப்பதற்கு நடிகர் பார்த்திபன் போல இருப்பவரைப் பார்த்தவுடன் டக்கென்று எழுந்து நிற்க, “அட மரியாதை மனசில் இருந்தால் போதும், நீ முதலில் உட்காரும்மா” என்றார் கணீர் குரலில்.

அதற்குள் கணவனின் சத்தம்கேட்டு சுதா கையில் காபியுடன் வர, “அப்புறம் என்னம்மா வீட்டில் விஷேசம் என்று கேள்விப்பட்டேன். உனக்கு பணம் தேவை என்றாலும் கேளு என்னால் முடிந்தளவு ஹெல்ப் பண்றேன்” என்று சொன்னவரை குழப்பத்துடன் ஏறிட்டாள்.

அவரின் முகம்  மலர்ந்திருக்க கண்டு, ‘இவராக ஏதோ புரிஞ்சிட்டு பேசறாரு’ என்று நினைத்தவள், “எங்க வீட்டில் விசேஷம் எல்லாம் எதுவும் இல்லண்ணா. அம்மாவுக்கு முடியாமல் இருந்தபோது பத்திரத்தைக் கொடுத்து பணம் வாங்கியிருந்தேன் இல்ல. அதோட கணக்கை கொஞ்சம் பாருங்க அண்ணா” என்றாள் சிரித்தபடியே.

“ம்ஹும் புகுந்த வீட்டுக்குப் போகும் முன்னமே பிறந்த வீட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கும் உன்னை மாதிரி ஒரு பெண் கிடைக்க அவன் எல்லாம்  தவம் பண்ணிருக்கணும்” என்றபடி கணக்கு நோட்டை எடுத்து பார்வையிட தொடங்கிட, தேன்மொழிக்கு குழப்பமாக இருந்தது.

அவரின் பேச்சு முன்னுக்கும், பின்னுக்கும் முரணாக இருக்க, “மொத்தம் வட்டியும், முதலும் சேர்த்து 1, 60, 000 ரூபாய் ஆகுதும்மா” என்றார்.

ஏற்கனவே கணக்குப்போட்டு தனியாக வைத்திருந்த இரண்டு லட்சத்தில் அவர் சொன்ன பணத்தை எண்ணிக் கொடுத்து பத்திரத்தை கையில் வாங்கியவள், “அண்ணா நான்  கையெழுத்துப் போட்டு தந்த ஸ்டாம்ப் பேப்பரை கொடுங்க” என்று கேட்டாள்.

“உன்னை ஏமாற்றி இன்னைக்கு நான் நல்லா வாழலாம். ஆனால் அது ரொம்பநாள் நிலைக்காது அதுவும் பத்திரத்திற்குள் இருக்கு பாரும்மா!” என்று புன்னகையுடன் விளக்கம் தந்தார்.

அவர் சொன்னதுபோலவே அந்த பேப்பரும் இருப்பதை கண்டு, “தேங்க்ஸ் அண்ணா” என்று  சொல்லிவிட்டு கிளம்பியவளிடம்,

“தேன்மொழி கல்யாணத்திற்கு அண்ணனுக்கு பத்திரிகை வரணும்” என்று சொல்ல அவளும் சரியென்று தலையசைத்து, அந்த தம்பதிகளிடம் விடைபெற்றாள். இரத்தினவேலு வீட்டிலிருந்து வெளியே வந்த தேன்மொழிக்கு குழப்பங்கள் அதிகரித்தது.

தனக்கு கல்யாணம் என்று சொன்னதைக் கேட்டு, ‘இந்த அண்ணா எதுக்கு தேவையில்லாமல் திருமணத்தைப் பற்றி பேசினாரு! அம்மா வரன் பார்த்தாலும் என்னிடம் சொல்லாமல் முடிவெடுக்க மாட்டாங்களே’ என்ற யோசனையுடன் தங்கைகள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று இரண்டு பேருக்கும் கடைசி ஆண்டிற்கானப் பணத்தை முழுவதுமாகக் கட்டிவிட்டு வெளியே வந்தாள்.

ஒருபக்கம் பசி வயிற்றைக் கிள்ளிட, “முதலில் போய் சாப்பிடலாம்” என்ற எண்ணத்துடன் பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குச் சென்றாள்.

அங்கே காலியாக இருந்த டேபிளில் சென்று ஜன்னலோரமாய் அமர்ந்தவள், “ஒரு தக்காளி சாப்பாடு மட்டும்” என்று பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள்.

அந்த கடையின் வாசலில் ஒரு பைக் வந்து நிற்க, அதில் இருந்து கம்பீரமாக இறங்கியவனின் மீது அவளின் பார்வை படிந்தது. ப்ளூ கலர் ஜீன்ஸ், லைட் ரெட் கலரில் சர்ட் போட்டு இருந்தான். அவன் உடலமைப்பிற்கு கட்சிதமாக பொருந்தி இருந்தவன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஆளை அடையாளம் காண முடியவில்லை.

அவள் புருவங்கள் சிந்தனையில் சுருங்கிட, தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை கலட்டியபடி கடைக்குள் நுழைந்தான். யாரோ என்ற எண்ணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், அது கலைச்செல்வன் என்று அறிந்ததும், “இவன் என்ன டிப்டாப்பாக ட்ரஸ் பண்ணிட்டு  எங்கே போயிட்டு வருகிறான்” என்ற சிந்தனையில் இறங்கினாள்.

‘அவன் எங்கே போனால் உனக்கென்ன? நீ எதுக்காக அவனைப் பற்றி யோசிக்கிற?’ என்று மனம் அவளை அதட்டியத்தில் தன்னிலைக்கு மீண்டாள்.

திடீரென்று யாரோ தன் எதிரே அமரும் ஆராவாரம்கேட்டு நிமிர்ந்து பார்க்க, “இப்போ பார்க்க எப்படி இருக்கேன். கொஞ்ச நேரத்தில் நீயே ஏமாந்துட்ட இல்ல” என்று குறும்புடன் கண்சிமிட்டிச் சிரிக்க, அவளுக்கு அப்படியே பத்திக்கொண்டு வந்தது.

அவள் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்க, “அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும். எனக்கு இன்னும் கொஞ்சநாளில் கல்யாணம். அதுதான் பத்திரிகை ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்தேன்” அவள் கேட்காமல் விவரங்களைக் கூறினான்.

அவன் பேசுவதைக் காதில் வாங்காமல் தேன்மொழி கற்சிலைபோல அமர்ந்திருக்க, “என்னங்க மேடம் நீங்க சைலண்டாக இருக்கீங்க?” அவன் வேண்டுமென்றே அவளை வம்பிற்கு இழுத்தான்.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை?” என்று அவள் காட்டமாக கேட்க, “பொண்ணு யாருன்னு கேளு” என்றான் புன்முறுவலோடு.

அவனை முறைத்துவிட்டு அவள் ஏதோ சொல்ல வாய்திறக்கும் போது பேரர் வந்து உணவை வைத்துவிட்டு செல்ல, ‘ச்சே! இவனை இப்போ இங்கே யாரு கூப்பிட்டா? இப்பவெல்லாம் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறாயே கடவுளே!’ என்ற நினைவுடன் அமைதியாக சாப்பிட தொடங்கினாள்.

அவன் ஒரு ஜூஸை வரவழைத்து அவளை ரசித்தபடியே குடித்தவன், “முதல் பத்திரிகை சாமிக்கும், இரண்டாவது பத்திரிகை பொண்ணு வீட்டுக்கும் கொடுக்கணும்னு பாட்டி சொன்னாங்க. ஆனால் எனக்கென்னவோ இதுக்கெல்லாம் காரணமான உனக்குத்தான் முதலில் கொடுக்கணும்னு தோணுது” என்றபடி ஒரு கவரில் இருந்து பத்திரிகை ஒன்றை எடுத்தான்.

அவள் முடிந்தவரை பொறுமையை இழுத்துப்பிடித்து, “உங்க கல்யாணத்திற்கு நான் கண்டிப்பாக வரமாட்டேன்  மிஸ்டர். கலைச்செல்வன். அதனால் தேவையில்லாமல் ஒரு பத்திரிக்கையை வீணாக்காதீங்க” என்று அழுத்தத்துடன் சொல்லிவிட்டு கை கழுவ எழுந்து சென்றாள்.

தேன்மொழியின் பேச்சினில் இருந்த அழுத்தம் அவன் உதடுகளில் புன்னகையை வரவழைக்க, அவள் தன்னுடைய ஹேண்ட்பேக் மற்றும் ஸ்கூட்டியின் சாவியை எடுத்துகொண்டு கிளம்பும் முன்பு, “நீ வரல என்பதற்காக கல்யாணம் ஒன்னும் நிற்க போவதில்லை. அதனால் சும்மா பிகு பண்ணாமல் பத்திரிக்கையைப் பாரு” என அதட்டியபடி அவளை இழுத்து அருகே அமர வைத்தான்.

அவன் திடீரென்று இழுத்ததில், “ஏய் என்ன பண்ற?” என்று அவள் எரிந்து விழுந்தாள்.

“பத்திரிகை கொடுக்கும்போதே நீ வாங்கியிருந்தால் நான் ஏன் கையைப்பிடித்து இழுக்க போறேன்” என்றான் அவன் சிரித்தபடி.

அவனின் கையில் இருந்த பத்திரிக்கையைப் பிடிங்கிகொண்டு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த தேன்மொழி, ‘இவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு காலம் முழுக்க கஷ்டப்பட போகின்ற அந்த பாவப்பட்ட பெண்ணை காப்பாற்று கடவுளே’ என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த பத்திரிக்கையை எடுத்து பிரித்தாள்.

மணமக்கள் இடத்தில் கலைச்செல்வன் – தேன்மொழி என்ற பெயரைப் பார்த்தும் அதிர்ந்தவள், “இது என்ன என் பெயரை பிரிண்ட் பண்ணிருக்கிற?” என்றவளின் குரல் அதிர்ச்சியுடன் ஒலித்தது.

அவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை படித்தவனோ, “என்னடி நான் விட்டது சவால் மறந்து போயிடுச்சா? உன்னைக் காலம் முழுக்க எனக்கு சாலம் போட வைக்கிறேன்னு சொன்னேனே.. அதோட ஆரம்பம் தான் இந்த திருமணம்” என்றான் கர்வமாக.

அவன் கண்ணில் இருந்த ஏதோவொன்று நெஞ்சுக்குள் திக்கென்ற உணர்வை பரவச் செய்திட, “ஏய் நீ சும்மாதே சொல்ற? எங்கம்மா எனக்கு தெரியாமல் கல்யாண ஏற்பாடு செய்ய மாட்டாங்க. அதுவும் உன்னை மாதிரி ஒரு பொறுக்கிக்கு திருமணம் பண்ணி தர மாட்டாங்க” என்றாள் மெல்லிய தடுமாற்றத்துடன்.

அந்த தடுமாற்றம் எதனால் என்பதை அவள் மனம் மட்டுமே அறியும். இன்னும் பிரச்சனையின் வீரியம் அவளுக்கு புரியவில்லை என்ற உண்மையை அவளின் பேச்சில் இருந்து அறிந்தவன், “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்னு சொல்வாங்க. உங்கம்மா என்ன ஜுஜுபி. பாட்டி கல்யாணம் பண்ணிக்கோ என்று நச்சரிச்சிட்டே இருந்தது” என இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நானும் நல்லா உட்கார்ந்து யோசித்ததில் பாட்டி விரும்பிபடி கல்யாணமும் நடக்கணும், நான் விட்ட சவாலில் ஜெய்க்கனும். அதுதான் பக்கவாக பிளான் போட்டு காயை இதுவரை நகர்த்தி இருக்கேன். எப்படி ஐயாவோட திறமை” என்றான் இருக்கையில் சாய்ந்தபடி.

காலையில் பத்திரம் வாங்க சென்ற இடத்தில் இரத்தினவேலுவின் பேசியது உண்மைதான் என்று புரிந்ததும், ‘அம்மா என்னிடம் சொல்லாமல் எப்படி முடிவெடுத்தாங்க. இப்போ யார் சொல்றது உண்மைன்னு சத்தியமாக புரியலையே’ என்ற யோசனையுடன் தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டாள்.

“தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது…

தேனீயில் ஒன்று இங்கு போராடுது…

அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்…

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்..” என்று செல்போன் அடிக்கும் சத்தம்கேட்டு, உடனே போனை எடுத்தான் கலைச்செல்வன்.

“அத்தை சொல்லுங்க! உங்க மகளிடம் தான் பேசிட்டு இருக்கேன். நான் பத்திரிகை காட்டியதும் மேடத்திற்கு இன்ப அதிர்ச்சியில் பேச்சே வரல. இன்னும் குழப்பத்துடன் தான் இருக்கிறா” அவன் சரளமாக பேச, அவளுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.

மறுபக்கம் அவர் என்ன சொன்னாரோ, “இந்தா உங்கம்மா பேசணும்னு சொல்றாங்க” என்று அவளிடம் போனை நீட்டினான்.

அவனை முறைத்தபடி வெடுக்கென்று போனைப் பறித்தவள், “ஹலோ அம்மா சொல்லுங்க” என்றாள்.

“தம்பி சொல்வது உண்மைதான் தேனு. நம்ம ராமாத்தாள் பாட்டி வந்து கேட்டாங்க. என்னால் மறுப்பு சொல்ல முடியல. அப்புறம் அந்த பையனைப்பற்றி ஊருக்குள் விசாரிச்சேன். ரொம்ப நல்லபையன்னு தான் சொன்னாங்க. உனக்கும் எந்தவிதமான தொல்லையும் இல்ல” என்றார் இயல்பாக.

கலைச்செல்வன் வெற்றி பார்வை பார்க்க, ‘புருஷன் என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொல்லையைத் தலையில் கட்டி விடுறீங்க என்று உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்’ அவள் மனதிற்குள் நினைக்க,

“தம்பியே உன்னிடம் திருமண விஷயத்தை சொல்லணும்னு ஆசைப்பட்டுச்சு. அதுதான் நாங்க யாருமே எதுவும் சொல்லல” என்று அவர் நயமாகக் கூறி அவரின் கோபத்தை குறைக்க முயன்றாள்.

அவள் எதுவும் பேசாமல் மெளனமாக இருக்க, “சரிம்மா நான் போனை வைக்கிறேன். சீக்கிரம் வீடு வந்து சேரு” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அவளை எந்தபக்கமும் நகரவிடாமல் லாக் செய்த சந்தோஷத்தில், “உன் நிலையை நினைத்தால் ரொம்ப பாவமாக இருக்கு. ம்ஹும் சீக்கிரம் உன் மனதை தயார் படுத்தி வை. எத்தனையோ பெண்களைத் தொட்டவன், உன்னை மட்டும் விடுவேனா என்ன?” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு சத்தமாக சிரித்தான்.

அவன் சொன்னதைக்கேட்டு அவளின் உலகமே காலடியில் நழுவியது போல உணர்ந்தாள். அவள் திருமணம் வேண்டாமென்று மறுத்துவிட வெகுநேரமாகாது. ஆனால் இவன் என்ன சொல்லி வீட்டினரை சம்மதிக்க வைத்தான் என்று புரியாமல் தலையே வெடித்துவிடும்போல இருந்தது.

‘யுத்தகளத்தில் எதிரியுடன் நேருக்கு நேராக மோதுபவன் எந்த நேரத்தில் எப்படி செயல்படலாம் என்று நொடியில் கணித்துவிடலாம். ஆனால் தன்னோடு இருந்துகொண்டே தனக்கு குழி வெட்டும் நபர்களின் சுயரூபம் அவர்கள் வெளிபடுத்தாமல் உணர முடியாதே’ என்று மனம் நினைக்க, அவள் நெருப்பின் மீது நிற்பதுபோல தோன்றியது.

“ஓகே பேபி! இங்கேயே வெகுநேரம் உட்கார்ந்து கனவு காணாமல் வீடு போய் சேரும் வழியைப் பாரு. இன்னும் எண்ணி பதினைந்து நாளில் நீ என் மனைவியாக இருப்பாய்” என்று கெத்தாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றபிறகு ஹோட்டலைவிட்டு வெளியே வந்த தேன்மொழி, அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையுடன் வீட்டிற்கு சென்றாள்.

செந்தாமரையிடம் திருமணம் வேண்டாம் என்று மறுத்தவுடன், “இங்கே பாரு தேனு. நீ மட்டும் எனக்கு மகள் இல்ல. உனக்குப் பிறகு இரண்டு பொண்ணுங்க தலையெடுத்து நிற்குறாங்க. அவங்க வாழ்க்கையையும் நான் பார்க்கணும்” என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இந்த காலத்தில் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை உடைப்பது அவர்களின் குடும்ப சூழல்தான். அதுக்கு தேன்மொழி மட்டும் விதிவிலக்கு இல்லையே!

நாட்கள் ரெக்கைகட்டி பறக்க, பதினைந்தாம் நாள் ஊரின் முன்னிலையில் அம்மனின் தெய்வ சந்நிதானத்தில் தேன்மொழியின் கழுத்தில் மூன்று முடிச்சுபோட்டு தன்னவளாக ஏற்றுக் கொண்டான்.

இனி வரும் நாட்கள் எப்படி செல்லும் என்று கணிக்க முடியாமல் கற்சிலைபோல நின்றிருந்தாள்.