பூவுக்குள் பூகம்பம் 5

பூவுக்குள் பூகம்பம் – 5

“சிபி… நீ ஒரு முறை இந்த போட்டோஸ்லாம் பாத்து ஒப்பீனியன் சொன்னா நல்லாருக்கும்பா” என்று அவனது திருமணத்திற்கு வேண்டி வந்திருந்த பெண்களின் படங்களை வைத்துக்கொண்டு கேட்ட மாலினியிடம்,

“அதுக்குள்ள என்ன அவசரம்மா… மெதுவா பாக்கலாம்” என்று சில மாதங்களாகவே நழுவிக்கொண்டிருந்தவன் தனது எண்ணத்தில் உள்ளதை செயலாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருந்தான்.

பிஜி படிப்போடு, மீத நேரத்தில் பணியென்று சென்றாலும் கடந்த ஒரு வருடத்தில் இரண்டுமுறை தனது தேடலை தனிப்பட்ட முறையில் துவங்கியிருந்தான்.

தானாக கண்டுபிடித்துக் கொண்டுவந்து பெற்றோர் முன் நிறுத்தினாலும் என்ன நடக்கும் என்பதை சிறுவன் விசயத்தில் அறிந்துகொண்டிருந்தவனாயிற்றே.

அதனால் துணிந்து செயல்படத் துவங்கியிருந்தான்.

ஆரம்பமோ முடிவோ எதுவென்று தெரியாமல் குழப்பமிருந்தாலும் தனது எண்ணம் நிச்சயம் நிறைவுறும் எனும் நம்பிக்கையோடு இருந்தான் சிபி.

பிறந்த குழந்தையாகப் பார்த்தவள் இன்று குமரியாக எங்கு எப்படி இருப்பாள் என்று யூகங்களுக்கு அப்பாற்பட்ட அவனது தேவதையைப் பற்றிய எண்ணம் முன்பைக்காட்டிலும் வலுப்பெற்றிருந்தது.

தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது பல்லவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தபோது உண்டான நிகழ்வுகள் மனக்கண்ணில் தோன்றியது.

அன்று அத்திபூத்தாற்போல பெற்றோரைத் தேடி வந்திருந்தான்.

மகனிடம் எந்த விளக்கமும் பெற்றோர்கள் சிறுவன் வந்து சில மாதங்கள் வரை கேட்கவே இல்லை.  சிபி தனது செயலுக்கான காரணத்தை அதுவரை தன்னிடம் கேட்காமலிருக்கும் பெற்றோரை நினைத்து ஆச்சர்யமாக உணர்ந்தான்.

அன்று வேலைபளு இல்லாத நிலையில் விரைவில் வீட்டிற்கு வந்தவன் தனது எண்ணத்தைப் பெற்றோரிடம் கேட்டுவிட்டான்.

“உனக்கு பல்லவனுக்கு உதவி செய்யணும்னு தோணுனதால கூட்டிட்டு வந்திருக்க.  அதுக்கு நிச்சயமா எதாவது சரியான காரணம் இருக்குனு புரிஞ்சது.” என்றுரைத்த தந்தையிடம்,

“இந்தப் பையன் யாரு என்னானு எதுவுமே தெரியாம எப்டிப்பா நான் கூட்டிட்டு வந்தேங்கற ஒரே காரணத்துக்காக ஏத்துக்க முன்வந்தீங்க” என்று ஆச்சர்யம் நிறைந்த குரலில் வினவிய மகனுக்கு, 

“அந்தப் பையங்கிட்ட கேட்டோம் சிபி.  அவனைப் பற்றி சில விசயங்கள் சொன்னான்.  அதோட அப்படியே விட்டாலும் பின்னாடி பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்குன்னு ஸ்டேசன்ல கம்ப்ளைண்ட் பண்ணிட்டு, புராப்பரா பல்லவனை அடாப்ட் பண்றதுக்கான புரசீஜர்ஸ் எல்லாம் முடிச்சிட்டேன்” என்று கூறினார் அவனது தந்தை.

தந்தையின் செயலை அறிந்ததும் அவரின் அருகே சென்று அணைத்துக்கொண்டான் சிபி.

“சாரிப்பா… நான் ஏதோ அவசரத்துல இதையெல்லாம் யோசிக்காம இருந்துட்டேன்” என்று வருந்த, பெற்றோர் இருவரும் மகனை சமாதானம் செய்தனர்.

தாயும் தன்னைப் புரிந்துகொண்டு தனது செயலுக்கான விவாதங்களிலெல்லாம் ஈடுபடாமல் பெருந்தன்மையோடு நடந்துகொண்டவர்களிடம் அப்போதுதான் தனது முடிவையும் அதற்கான காரணத்தையும் சிபி விளக்கினான்.

“நீங்க அடிக்கடி சொல்லுவீங்களேப்பா…” என்று துவங்கியவன் குழந்தை பருவத்தில் வழிகாட்டியாக இருக்கும் பெற்றோர்கள் பால்ய பருவம் எய்திய பிள்ளைகளின் மீது தங்களின் ஆசைகள் மற்றும் கருத்துகளை திணித்து அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளவேண்டிய பக்குவத்தையும், முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய பொறுப்பையும் பறித்துவிட்டால் அவர்களின் ஆளுமை மற்றும் ஆக்கத்திறன் பாதிக்கப்படும் என்று அடிக்கடி தன்னிடம் சொன்னதை நினைவு கூர்ந்தவன்,

“இப்படி ஒரு பேரண்ட் கிடைக்க நிச்சயமா நாங்க குடுத்து வச்சிருக்கோம்” என்று தனது மனதிற்குள் தோன்றியதை சிபி அவர்களோடு பகிர்ந்துகொண்டிருந்தான்.

பார்க்கும் எத்தனையோ நபர்களை இதுபோல அழைத்து வந்து உதவி செய்திட துணியாதவன் பல்லவனை மட்டும் அழைத்து வந்ததற்கான காரணம், அந்த பிஞ்சுக் குழந்தைக்கு நேரிட்ட அதே நிலை பல்லவனுக்கு வந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கைதான்.

அனைவரிடம் சென்று குறைகள் களைய தன்னால் முடியாது என்றாலும் தான் நேரில் கண்டு உறுதிசெய்துகொண்ட ஒருவனை அப்படியே விட்டுச்செல்ல மனம் வரவில்லை சிபிக்கு.

ஒரு மருத்துவனாக உயிரின் மதிப்பை உணர்ந்திருந்தவன் இன்னொரு உயிரை சமூகக் காரணிகளின் காரணங்கள் கொன்றுவிடக்கூடாதே என்று முந்திக்கொண்டிருந்தான்.

சிபிக்கு உடன்பிறந்த மகேந்திரனைப்போலவே பல்லவனும் மற்றொரு தம்பியாக மாறிப் போயிருந்தான்.

வீட்டைச் சுற்றியுள்ளவர்களுக்குத்தான் அதில் உறுத்தல். “அந்தப் பையன் உண்மையிலேயே நல்லவந்தானா… என்ன சாதியோ… எப்படிப் பொறந்தானோ… வேற யாரும் இப்படி நடிக்கச் சொல்லி ஏமாத்த அனுப்பி விட்ருப்பாங்களோ…” இதுபோன்ற பேச்சுகள் தொடர்ந்தது.

அதனைக் கண்டுகொள்ளாமல் அவரவர் பணியில் கவனம் செலுத்தினர் சிபியின் குடும்பத்தினர்.  சிறுவன் பல்லவனை அத்தனை எளிதில் அருகே உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள முன்வராததால் அவனது பள்ளி நேரம்போக மற்ற நேரங்களில் ஞானத்தோடு செலவிட்டான்.

இருவரும் வளர்த்த பாசப் பயிரில் அந்த வீடே போலியாக மிரண்டது.

அனைத்தையும் யோசனையில் ஓடவிட்டவனுக்கு, பல்லவன் விசயத்தில ஓக்கே சொல்லிட்டாங்கனு கல்யாண விசயத்துல ஏழரையக் கூட்ற மாதிரி எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது என்பதில் தெளிவோடு நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும் எனும் தீர்மானத்தில் இருந்தான் சிபி.

***

மகளைப் பற்றிய செய்தியறிந்து வீட்டிற்கு விரைந்த மதி உடனே கணவருக்கு அழைத்து விசயத்தைக் கூற,

செழியனோ, “கஸ்டமர் நிக்கிறாரு.  அப்புறம் பேசுறேன்” வைத்துவிட்டார்.

ஒரு மணி நேரத்தில் மனைவி மதிக்கு அழைத்தவர், “என்ன வந்திருச்சா?” என்று மகளைப் பற்றிக் கேட்டதோடு,

“உன்னோட போன்ல இருக்கற அவங்க இன்சார்ஜ் மேடம் நம்பரை எனக்கு மெசேஜ் போட்டுவிடு.  நான் பேசறேன்” என்றார்.

ப்பிட்டிஏ(PTA) மீட்டிங் சென்றபோது சௌமியின் பொறுப்பாசிரியரைச் சந்தித்து வந்திருந்தார் செழியன்.  அப்போது அவளின் கற்கும் நிலை பற்றிக் கேட்டறிந்ததோடு, அவரின் தொடர்பு எண்ணையும் வாங்கி வந்திருந்தார்.

புதிய அலைபேசி வாங்கியதும், பழையதை மனைவியிடம் கொடுத்ததால் அந்த எண் மதியின் அலைபேசியில் இருந்தது.

மனைவி அனுப்பிய எண்ணிலிருந்து பொறுப்பாசிரியருக்கு அழைத்து அன்றைய மகளின் வருகை நிலவரம் பற்றிய விவரம் பற்றிக் கேட்டறிந்து கொண்டார். 

பிறகு, “பிராஜெக்ட்டுக்கு வெளியூருக்கு போகணும்னு சொல்லுதே மேடம்.  கண்டிப்பா வெளிய போயித்தான் பண்ணணுமா?” என்பது போன்ற அவரது சந்தேகங்களைக் கேட்க, அவரும் செழியனுக்கு வேண்டிய விசயங்களை நிதானமாக கூறி புரிய வைத்தார்.

மொத்தத்தில் சௌமி தன்னை ஏமாற்றத் துவங்கிய விசயம் அவரின் பேச்சின் வழியே தெளிவாக, செழியனால் அதனைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

இதற்கிடையில் வீட்டிற்குள் நுழைந்து வழமைபோல நடப்பதாகப் பாவனை செய்து கொண்டிருந்த மகளையே ஆராய்ச்சிக் கண்ணோடு மதி பார்த்திருக்க, அதனை அறியாத சௌமி அன்று இருவருக்கிடையே நடந்து பிணக்கினைப் பற்றி சிந்தித்த வண்ணமிருந்தாள்.

இதற்கிடையே தாய் அவ்வப்போது வந்து தன் அறையில் நோட்டமிட்டுச் செல்வதைக் கவனிக்க மறந்து போயிருந்தாள் சௌமி.

அதற்குள் அவள் இன்று கல்லூரிக்குச் செல்லாத செய்தி மட்டும் ஊர்ஜிதமாகியிருக்க, கேட்டால் மகள் தோழிகளோடு வெளியே சென்ற செய்தியைக் கூறுவாள் என எதிர்பார்த்து செழியன் கேட்க, உண்மைநிலை தெரியாதவள் பொய்யை உரைத்து அடி வாங்கிக் கிடந்தாள்.

“உண்மைய மறைக்காமச் சொல்லு” செழியன்.

அமைதியாக பயப் பார்வை பார்த்தவளை நோக்கி வந்த மதி, “உன்னை அப்பவே நம்ப வேணாம்னு தலையால அடிச்சிக்கிட்டேன்.  யாரு கேட்டா…!

தூக்கித் தலையில வச்சிக்கிட்டு ஆடுன ஆட்டத்துக்கு எங்க போயி என்ன பண்ணிட்டு வந்திருக்க…!” கணவனது செயலால் மகள் இந்நிலைக்கு வந்துவிட்டாள் எனும் ஆற்றாமையோடு பேசியவாறு சௌமியின் அருகே வந்தவர்,

“வாயில என்ன வச்சிருக்க?  கேக்குறாருல்ல… வாயத் திறந்து சொல்லு.  இன்னைக்கு காலேஜ் போகலை!  பகல் முழுக்க அப்ப எங்க போயிருந்த? யாரெல்லாம் உங்கூட வந்தது?”

நெஞ்செல்லாம் படபடவென அடிக்க, “காலேஜ் விசயமாத்தான் போனேன்பா” என மீண்டும் அதே பொய்யை சற்று மாற்றிக் கூறியதுதான் தாமதம்.

ஒரு கையால் சௌமியைத் தூக்கி நிறுத்தி, மறு கன்னத்தில் ஓங்கி இன்னொரு அறை விட்டிருந்தார் செழியன்.

“முனியய்யா கோயிலுக்கு கிடாவுக்கு பதிலா உன்னைப் பொலி போட்ருவேன் பாத்துக்க… என்னைப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது?” கோபத்தால் மிளகாய் பழமாக சிவந்திருந்த கண்ணால் மிரட்ட, அரண்டு போயிருந்தாள் சௌமி.

அவளால் இலகுவாக யோசிக்க முடியவில்லை.  எதற்கும் தயாராக இல்லாத மனநிலையில் சட்டென அடுத்தடுத்த அடிகள் அவளை நிலைகுலையச் செய்திருந்தது.

தொடர்ச்சியாக கன்னங்களில் அறைந்த அறையில் முகம் சட்டென வீங்கியிருந்தது சௌமிக்கு. முதன் முறையாக தந்தையிடமிருந்து இத்தனை பெரிய அடிகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

“இன்னைக்கு நீ காலேஜூக்கு போகலைன்னு உங்க ஸ்டாஃப் இன்சார்ஜ்ஜே எங்கிட்டச் சொல்லிட்டாங்க.  அவங்களும் யாரையும் எங்கயும் போகச் சொல்லலைங்கறதையும், காலேஜ்ல இருந்து யாரையும் எங்கயும் அனுப்பலைங்கறதையும் கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துதான் கேக்கறேன். 

இனியாவது உண்மையைச் சொல்லுவியா?” விசயத்தைக் கூறி உக்கிரமாகக் கேட்டவரிடம், அவர்களின் காதலைச் சொல்லவும் பயந்து வந்தது சௌமிக்கு. 

அதற்குள் கையிலிருந்து அவளின் அலைபேசியை ஆராய்ந்தார் செழியன்.

அன்று காலையிலிருந்து ப்ருத்வியோடு குறுஞ்செய்தி வழியே பேசியது அனைத்தும் அழிக்கப்படாமல் அப்படியே இருந்தது செழியனது பார்வைக்கு வந்திருந்தது.

தனியே சென்று அனைத்தையும் வாசித்தவருக்கு நெஞ்செல்லாம் புண்ணாக வலித்தது.

‘அவ சொல்லச் சொல்லக் கேக்காம பச்சைப்புள்ளைனு நம்பி அது கேட்டதெல்லாம் பண்ணதுக்கு எம்முகத்துல கரிய பூசிட்டு வந்திருக்கு!

அவ சரியாத்தான் கணிச்சு சொல்லியிருக்கா…! மடத்தனமா நம்பிக்கிட்டுருந்த நாந்தான் முட்டாள்!’ தனக்குத்தானே நொந்தபடி அமர்ந்திருந்தவர், அதை அப்படியே மனைவியிடம் காட்ட வசுமதி கொதித்து போனார்.

சௌமியின் அறைக்குள் அவள் அழுது கரைந்தபடி இருக்க, உள்ளே சென்ற மதி அவளின் முதுகில் தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தார். 

அவரின் கையில் வேதனை உண்டாகவே, “உன்னைத் தொட்டாலே பாவம்டீ.  என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க…!” என்று கேட்டபடியே,

“வாயைத் திறந்து ஒழுங்காச் சொல்லு.  அந்தப் பையன் யாரு?  அவனோட உனக்கு எவ்ளோ நாளா பழக்கம்?” சௌமியின் வாயில் நாலு அடி போட, அழுகையோடு வலி தாளாமல் ப்ருத்வியைப் பற்றிப் பேசத் துவங்கினாள் சௌமி.

“ஏண்டி! பிறந்தப்பவே உனக்குத்தான் தீர்த்தாவப் பேசி வச்சிருக்கோமே.  அவங்களுக்கு இப்ப உங்கப்பா என்ன பதிலைச் சொல்லுவாருன்னு ஒரு நிமிசம் யோசிச்சுப் பாத்தியா?” தாய் தன்னிடம் கேட்பதைக் கண்டு அழுதாளே அன்றி பதில் பேசவேயில்லை சௌமி.

உண்ணவில்லை.  உறங்கவில்லை.  இரவு முழுவதும் இறந்த வீடுபோல ஆளுக்கொரு மூலையில் அழுது கரைந்து விடிந்தது.

சௌமிக்கு முந்தைய தின கடலாட்டம், நீண்ட நேரம் ஈர ஆடையோடு இருந்தது, அதன்பின் வீட்டினரின் அடி, உதை என உடம்பு கொதித்தது. மதிக்கு விசயம் புரிந்தாலும் மகளின் செயலால் விளைந்த கோபத்தில்,

“இருக்கறதுக்கு சாகட்டும்.  இருந்து இன்னும் நம்ம பேரைக் கெடுக்கறதுக்கு, செத்தா… தூக்கிப் போட்டுட்டு… போயிச் சேந்திருச்சுனு ரெண்டு மாசம் அழுது தவிச்சு அப்புறம் மறந்துருவோம்” தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் மதி.

அத்தனை வருத்தம், வெறுப்பு மகளின் செயலால் அவருக்குள் உண்டாகியிருந்தது. மகள் ஏமாற்றியது தெரிய வந்த வேதனையில் அவ்வாறெல்லாம் பேச வந்தது மதிக்கு.

தனக்கு சின்ன நோவு என்றாலும் பதறி பரிதவிக்கும் பெற்றோர் இருவரும் இன்று தான் காய்ச்சலோடு போராடுவதைக் கவனிக்காமல் இருப்பதை உணரும் திராணிகூட சௌமிக்கு இல்லை.

அழுதழுது காய்ச்சலின் தீவிரத்தால் படுத்த நிலையிலேயே மயங்கியிருந்தாள் சௌமி.

நீண்ட நேரம் கவனிக்காமல் இருந்த மதி, மகளின் விசும்பல் ஒலி இல்லாமல் போனதை உணர்ந்து சௌமியின் அறையை எட்டிப் பார்க்க, அங்கு அவள் கண்ட காட்சியில் பெற்ற மனது பதறிப்போனது.

பேச்சு மூச்சற்றுக்கு கிடந்தவளை அசைத்துப் பார்த்துக் கணவனிருந்த திசையை நோக்கிக் கத்தினார் வசுமதி.

“என்னங்க… இப்டிப் பண்ணிட்டுப் போயிட்டாளே…! என்ன ஆச்சு எம்புள்ளைக்கு… நேத்து வரை நல்லாயிருந்தவ இன்னைக்கு இப்படி கிடக்காளே!” என்று கதற, ஓடி வந்த செழியன் மகளின் நிலை பார்த்து தூக்கிக்கொண்டு உடனே மருத்துவனைக்கு விரைந்தனர்.

விடியலில் அவசரச் சிகிச்சைக்கு அங்குள்ள மருத்துவரை அணுக சௌமியின் காயங்களோடு கூடிய நிலையைக் கண்டு, “இது போலீஸ் கேஸ் மாதிரி இருக்கே…” என்றிழுக்க, கையிலிருந்த பணத்தை அவரிடம் திணித்து, விசயத்தை பெரிதாக்கிவிடாமல் கேட்டுக்கொண்டு அங்கேயே சிகிச்சைக்குச் சேர்ந்திருந்தனர்.

இரண்டு நாள்கள் அதே நிலையில் இருந்தாள் சௌமி.  அதன்பின் அவள் விழித்தபோது அருகே அவளின் அம்மாச்சி, தாத்தா, பெற்றோர் என இருக்க, தனது நிலை புரிய நேரமெடுத்தது சௌமிக்கு.

புரிந்தாலும், மற்றவர்களின் ஒதுக்கம் அவளை மேலும் வருத்தியது.

இடையில் தோழிகள் வந்து கேட்டதற்கு, “அவளுக்கு உடம்புக்கு முடியாம இருக்கா.  சரியானதும் வருவா” என்று அனுப்பியிருந்தார் மதி.  சௌமியை சந்திக்க அனுமதிக்கவில்லை.  அந்தச் செயலை மற்றவர்களுக்குள் விசயம் ஏதோ பெரிது என உணரச் செய்திருந்தது.

தோழிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடி அவர்களாகவே பேசி முணுமுணுத்தனர்.  எல்லாம் யூகமாகவே இருந்ததே அன்றி எந்த விசயமும் அவர்களுக்குத் தெளிவாகவில்லை.  அந்தளவிற்கு வெளியில் விசயத்தை விடாமல் அமைதி காத்தனர் சௌமியின் வீட்டார்.

வீட்டிற்கு அழைத்து வந்தது முதல், அவளின் தாய் வழிப் பாட்டி பிரபாவதிதான் அருகிலிருந்து சௌமியை கவனித்துக் கொண்டார். சௌமியிடம் அவ்வப்போது பேசி தகவலைச் சேகரித்த வண்ணமிருந்தார்.

சேர்ந்த தகவல்களைக் கொண்டு விசயம் முழுவதும் ஓரளவிற்கு குடும்பத்தாரால் அறிந்துகொள்ளப்பட்டது.

தேன்மொழி அதே ஊரில் இருந்தபோதும், விசயம் வெளியில் தெரியாத வண்ணம் நடந்து கொண்டிருந்தனர்.

தீர்த்தபதியை உடனே வரச்சொல்லி அவனுக்குத் திருமணம் செய்துவைக்க செழியனுக்கு மனமில்லை. மறைத்து தன் தமக்கையின் மகனுக்கு ஒரு மாமான் நிலையில் தான் செய்யக்கூடிய விசயம் இதுவல்லவே.

ஆகையால் தீர்மானித்துவிட்டார். சௌமியை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்துவிடுவது என்று.

பெயிண்ட் டீலர்ஸ் சிலர் இதற்குமுன் அவரோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள எண்ணிப் பேச்சைத் துவங்கியபோது, ‘படிப்பு முடிஞ்சதும் பாப்போம்’ எனக் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.

வசுமதியிடம் இதைப்பற்றி எதுவும் பேசி முடிவுக்கு வர எண்ணாமல் தானாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார் செழியன்.

திண்டுக்கல்லில் தன்னைப்போலவே பெயிண்ட் தொழில் செய்பவரின் மகனுக்கு பேசும் முடிவுக்கு வந்தவர் அவரை அழைத்துப் பேசினார்.

“ரொம்ப சந்தோசம்.  நீங்க சும்மா ஒரு பேச்சுக்கு அப்டிச் சொல்லி சமாளிக்கறீங்கன்னு நினைச்சேன்.  ஆனா… உண்மையிலேயே எங்களை நினைவுல வச்சுப் பேசினதுல ரொம்பச் சந்தோசம்.  சீக்கிரமா ஒரு நல்ல நாளு பாத்துச் சொல்லுங்க.  குடும்பத்தோட வந்து பொண்ணைப் பாக்க வரோம்” என்றிட,

அதன்பிறகு வந்தே மனைவியிடம் அதுபற்றிக் கலந்து கொண்டார் செழியன்.

வசுமதி மறுக்க முனைந்திட, அது வாக்குவாதமாக தொடருவதை உணர்ந்தார்.  அதை விரும்பாத மதி அமைதியாகிவிட்டார்.

அடுத்து வந்த வார விடுமுறை நாளில் இராமேஸ்வரத்திற்கு சௌமியை பெண் பார்க்க வருகை தருவதாக பேசி முடிவெடுக்கப்பட்டது.

***

சௌமிக்கு எதையும் கிரகிக்கும் ஆற்றல் இல்லாதததுபோல தோன்றியது.  அத்தனையும் கனவுபோல இருந்தது. 

காயங்கள் ஓரளவிற்கு சரியாகியிருக்க, பிரபாவதியின் தனி கவனிப்பால் சற்று தேறியிருந்தாள் சௌமி.

மதி மகளின் முகம் பார்ப்பதுகூட இல்லை.

முதலில் நான்கு நாள்கள் சௌமியின் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல்போகவே, தனியாக இராமேஸ்வரம் வந்து அங்கிருந்த நண்பனின் உதவியால் சௌமியின் வீட்டு நிலவரத்தை மேம்போக்காக அறிந்து கொண்டிருந்தான் ப்ருத்வி.

அன்று நடந்த செயலின் வீரியத்தால் தன்னை ஒதுக்குகிறாளோ என்றுதான் அவசரப்பட்டு நண்பர்களின் உதவியை முதலில் நாடியிருந்தான்.

அதில் சௌமிக்கு உடல்நலக் குறைபாடு என்பது தெரிய வந்திருந்தது.  ஆனால், அது கடலில் குளித்ததால் வந்த பிணக்கு என்று அவனாகவே எண்ணிக் கொண்டிருந்தான் ப்ருத்வி.

அவர்களின் விசயம் வீட்டினருக்குத் தெரிய வந்தது அன்றி அருகே யாருக்குமே தெரியாததால், அவனுக்கும் தெரிய வராமலிருந்தது.

கல்லூரிக்கு வந்து செல்லும் தோழிகளிடம் சென்று விசாரிக்கவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது.  அதனால் அமைதி காத்தான்.

அவளின் உடல்நிலையில் முன்னேற்றம் வந்த பிறகும் அவள் கல்லூரிக்குச் செல்வதில்லை என்பது தெரியவர, சுதாரித்தவன் தந்தையிடம் விசயம் பகிர்ந்தான் ப்ருத்வி.

முதலில் மறுத்த ப்ருத்வியின் தந்தை கேசவன், தனது ஒற்றை மகனின் பிடிவாதத்தை உணர்ந்து அவனது தாய்மாமா மற்றும் இன்னும் நெருங்கிய உறவுகளை அழைத்துக் கொண்டு இராமேஸ்வரம் வந்து பெண் கேட்க ஒத்துக் கொண்டார்.

சௌமி வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தாள். முழுநேர கண்காணிப்பு பலமானது. நடமாடும் கேமிராவாக அவளின் அம்மாச்சி பிரபாவதியும், தாத்தா கதிரவனும் செயல்பட்டனர்.

***

அடுத்தநாள் இராமேஸ்வரத்திலுள்ள அவர்களின் வீட்டிற்கு திருமணத்திற்குப் பேச தந்தையோடு சில முக்கிய உறவினர்களையும் அழைத்துக்கொண்டு சௌமியின் வீட்டிற்கு வந்திருந்தார் ப்ருத்வியின் தந்தை கேசவன்.

வந்தவர்களை வாயிலோடு நிராகரிக்காமல் வரவேற்றார்கள்.  கதிரவனைப் பார்த்து இணக்கமாக அவனது தந்தை சிரிக்க முனைய, கதிரவன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

ஒரு திருமணம் என்றால் இனம், கிளை அவர்களில் அதிகம் பார்க்கப்படக் கூடிய விசயம்.

ப்ருத்வியின் தந்தை வேறு இனம்.  அவனது தாய் அவர்களின் இனமானாலும் வேறு கிளையில் பிறந்தவர்.

குடும்பத்தைப் பற்றிய அறிமுகம் முதலில் நடந்தது. இது வழமையானது.  அதனால் அதனை முதலில் செய்தனர்.

“உங்க மக வழி பேத்தியை எம்பையன் ப்ருத்விக்கு பேசி வைக்கலாம்னு… வந்திருக்கோம்” ப்ருத்வியின் தந்தை முதலில் பேச… எந்த ரியாக்சனும் இல்லாமல் பார்த்திருந்தார் கதிரவன்.

செழியன் கடையிலிருந்தார். அவருக்கு இவர்கள் வந்த விசயத்தை அழைத்துக் கூறியிருந்தார் கதிரவன்.  அவர் வரும்வரை அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரபாவதி மற்றும் மதி வந்தவர்களுக்கு வேண்டியதை மட்டும் கவனித்தார்கள்.

“நேத்துதான் விசயம் சொன்னான்.  ரெண்டு பேரும் ஆசைப்பட்டாங்கன்னு.  இன்னும் ஆறு மாசம் புள்ளைக்குப் படிப்பிருக்குன்னு சொன்னான். 

இப்பவே பேசி வச்சிட்டா, படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வச்சிக்கலாம்” ப்ருத்வியின் சார்பில் அவர்கள் அழைத்து வந்திருந்த நபர் பேச,

“பையன் வரலையா?” கதிரவன் கேட்டார்.

“பெரியவங்க மட்டும் வந்து பேசி வச்சிட்டுப் போனா… பூ வைக்கும்போது வரட்டும்னு சொல்லிட்டேன்.” ப்ருத்வியின் தந்தை.

“தப்பா நினைச்சுக்காதீங்க.  வேற கிளையில சம்பந்தம் பண்ற வழக்கம் எங்க பக்கம் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?” சௌமியின் தாத்தா கதிரவன் கேட்டதும்,

“இப்ப யாரு அதையெல்லாம் பாத்திட்டுருக்கா.  நாமளா பேசி முடிவு பண்ற கல்யாணத்துல… எல்லாம் பாத்து செய்யலாம்.  ஆனா அதுக ஆசைப்பட்டிருச்சுகள்ல…! அதுக்கு மேல சாதகம் பாக்கறதோ, வேற வழக்கத்தை ஃபாலோ பண்றதோ சரி வராதே” கேசவன்.

“அதுக்காக வரமுறையில்லாத இடத்தில போயி கை நனைக்க முடியுமா? சொல்லுங்க…” கதிரவன் அழிச்சாட்டியமாக பதில் பேசினார்.

“நல்லது கெட்டது எல்லாத்துலயும் ஒன்னாத்தான் நிக்கிறோம்.  இந்த மாதிரி கல்யாணம்னு வரும்போது மட்டும் ஏன் ஒதுக்க நினைக்கறீங்க?” குற்றப் பத்திரிக்கை அவர்கள் புறம் வாசிக்க,

“புள்ளைகளுக்கு வெளுத்ததெல்லாம் பாலுன்னு தெரியுமா? இல்லை கள்ளுன்னு தெரியுமா? நாமதான் தெரியாத புள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி சரி பண்ணணும். 

அதைவிட்டுட்டு, அதுக சொல்லுதுகன்னு எடுத்தோம்… கவிழ்த்தோம்னு எப்படி முடிவெடுக்க முடியும்?” என ப்ருத்வியின் தந்தையைப் பார்த்துப் பேசிட, அவரால் அதற்குமேல் சமாளிக்க முடியவில்லை.

செழியன் வந்ததும் கதிரவன் அவரிடம் விசயத்தைக் கூற, அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டவர் தனது மாமனாரைப்போல கிளையைச் சொல்லி, “தப்பா நினைக்காதீங்க.  நம்ம ஆளுகளைப் பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்ல. 

கிளைய மாத்தி இன்னைக்குப் பொண்ணைக் குடுத்துட்டா, நாளப்பின்ன நல்லது கெட்டதுல கை நனைக்கவே மத்த சம்பந்த ஆளுங்க யோசிப்பாங்க… யாரை விட்டுட்டு, யாரைச் சேத்துக்கறது.  அது ஒத்து வருமா…?

வருத்தம்தான்!  ஆனா இப்ப எங்களுக்கு வேற வழியில்லை” என்று நேக்காகப் பேசி சமாளித்து வந்தவர்களை அனுப்பி வைத்திருந்தார் செழியன்.

வந்தவர்கள் செழியனை எந்த அளவிற்குப் பேசி கரைக்க எண்ணினாலும் பிடி கொடுக்காமல் நழுவி, தனது எண்ணத்தை நிலைநாட்டியிருந்தார்.

சௌமியாலும் ப்ருத்வியாலும் அவர்களின் காதலைக் கரை சேர்க்கும் வழி தெரியாமல் சோகத்தில் புதைந்தனர்.

சௌமிக்கே தற்போதுதான் இதில் மறைந்திருந்த விசயம் புலப்பட, தனது பார்வை தவறாகி போனதை எண்ணி அழுது களைத்தாள்.

இறுதியாக அடுத்த வாரத்தில் தாங்கள் பேசி முடிவு செய்யவிருக்கும் திண்டுக்கல் வரன் விசயத்தை முன்கூட்டியே பேசி முடிவு செய்துவிட்டதாக அவர்களிடம் பொய்யை மெய்யாகக் கூறி விடை தந்திருந்தார் செழியன்.

“நீங்க வருமுன்ன வேற ஒரு இடத்தில பேசி முடிவு செய்திட்டோம்.  அதனால, அவங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தணும்.” செழியன் பவ்வியமாகக் கூற, 

“நீங்க வேற இடம் பாத்து முடிங்க.  பொண்ணுக்கா உங்க இனத்துல பஞ்சம்?” கதிரவன் நைச்சியமாக பேசி, அவர்களின் அடுத்த கட்டப் பேச்சினைத் துண்டித்து அத்தோடு அனுப்பியிருந்தார்.

அவர்கள் சென்றபின் சௌமி கெஞ்சிப் பார்த்தாள்.  கதறிப் பார்த்தாள்.  அவளின் கதறலுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

***

விளையாட்டிற்குக்கூட தங்களின் பிரிவைப் பற்றிப் பேச விரும்பாத ப்ருத்வி, பெண் கேட்டு சௌமி வீட்டிற்குச் சென்று வந்தவர்களின் பேச்சைக் கேட்டு மனம் உடைந்து போனான்.

மறுநாளே தனியாக செழியனை நேரில் சந்தித்தான்.

“சார்… எனக்கு ஒரு பத்து நிமிசம் பேச வாய்ப்புக் குடுங்க.” என வங்கிப் பணியாளர் போலத் துவங்கியவன்,

வாடிக்கையாளர்கள் எங்ஙனம் பெருக்குவது, வாடிக்கையாளர்களைக் கொண்டு வங்கிக்கு அதிக வருமானம் எங்ஙனம் ஈட்டுவது போன்ற விசயங்களில் கைதேர்ந்திருந்தவன் தனது நைச்சியப் பேச்சால் செழியனை தனக்கு வேண்டிய நேரத்தை ஒதுக்கச் செய்திருந்தான் ப்ருத்வி.

நேரத்தை ஒதுக்கிய பின்புதான் வந்தவன் யாரென்பது செழியனுக்கு விளங்கியது.  ஆனால் அவனைத் தடுக்கவில்லை. 

அவன் பேசிய விசயங்களை உள்வாங்கிக் கொண்டவர், “குடுக்கணும்னு முடிவு பண்ணியிருந்தா, விசயம் தெரிஞ்சவுடனே யாராவது தெரிஞ்ச ஆளுங்களை வச்சி, நாங்களே உங்ககிட்ட வந்து பேசியிருப்போம் தம்பி. 

வேணானு முடிவு பண்ணதாலதான வேற இடத்தில பேசி முடிச்சிட்டோம்” வளவளவெனப் பேசாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் ரீதியில் ப்ருத்வியிடம் பேசி அவனை அனுப்பியிருந்தார் செழியன்.

தொழில் செய்கிறவன் வருகின்ற கஸ்டமரிடந்தான் தணிந்து பேசுவான்.  மற்றவர்களிடம் அவ்வாறு நடந்தால் தொழிலை எங்ஙனம் விஸ்தீகரிப்பது?

முக்கியமாக அவர்களுக்கு இணையான அந்தஸ்தில் ப்ருத்வியின் குடும்பம் இல்லை என்பது மட்டுமே அங்கு கருதுகோளாகக் கொள்ளப்பட்டது. கதிரவன் அதைத்தான் தனது மருமகனுக்கு படித்துப் படித்துப் போதித்திருந்தார்.

“வெங்கம் பயலுக மாப்பிள்ளை அவனுக… இந்தப் பய தலையெடுத்துத்தான் காசு பணம்னு வாழுறானுங்க.  நாம நாலு தலைமுறை காசு பணத்தைப் பாத்தவங்க.  அவங்களுக்கு நம்மோட சம்பந்தம் வச்சிக்கிறது பெருமை.  ஆனா நமக்கு…” மருமகனுக்கு ஸ்க்ரூ குடுத்து மடை மாற்றியிருந்தார்.

செழியனுக்குமே தான் ஏற்கனவே திண்டுக்கல் டீலரிடம் பேசிவிட்டதால், மாமனார் கூறியதும் அதை சாக்காக வைத்து சரியென ஒப்புக்கொண்டிருந்தார்.

உள்ளங்களை, உணர்வுகளை அங்கு யோசிக்கவில்லை. சிலரின் எண்ணம் முழுவதிலும் பொருளாதாரம் சார்ந்த முடிவுகளே பிரதானமாக இருக்கும்.

அதேபோன்று இருந்த கதிரவனின் வழிகாட்டுதலில் மகளின் மனவோட்டத்தை கணிக்கத் தவறியிருந்தார் செழியன்.

வந்தவர்களிடம் அந்தஸ்தை காரணம் காட்டி ஒதுக்க முயலாமல், இனம், கிளை என்று பேசி தங்களது பிடித்தமின்மையை நேரடியாகக் கூறாமல் அனுப்பியிருந்தனர்.

தொழில் என்று வரும்போது, “உன்னோட சமமாக அந்தஸ்துல இருக்கற ஆளுகளை மட்டும் வச்சித்தான் நீ தொழில் நடத்துறியா… இல்லல்ல…

அப்ப இதுல மட்டும் அந்தஸ்து அது இதுன்னு என்னய்யா பேச்சு…” என அங்கு பேசுவதோடு பார்ப்பவர்களிடமெல்லாம் இதனைப் பேசி, வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி தனது தொழிலை நடத்த விடாமல் சோதனைக்கு ஆட்படுத்தி விடுவார்கள் என்பது செழியனுக்கும் தெரிந்தே இருந்தது.

அதனால் அதனைப்பற்றி மூச்சு விடாமல், அவர்களின் சமூகத்தில் உள்ள விசயங்களை மட்டுமே பேசி சமாளித்து அனுப்பி வைத்திருந்தார்.

கருத்தொருமித்த காதலில் பெரியோர்களின் வாழையடி வாழையாய் ஆகர்சிக்கும் சில கருத்துக் கணிப்புகளால் களங்கமடைந்து நிற்கும் ப்ருத்வி, கவி சௌமியாவின் காதல் கைகூடுமா?

***