பூவுக்குள் பூகம்பம் 7

பூவுக்குள் பூகம்பம் – 7

 

சௌமிக்கு ப்ருத்வி எடுத்த முயற்சிகள் தெரிய வரவில்லை. ப்ருத்விக்கோ, ‘ஏன் எங்கூட பேசவே முயற்சி செய்யலை கவி. 

எத்தனை தூரம் அவளை நான் லவ் பண்ணேன்னு அவளுக்குத் தெரியலையா?  ஒரே ஒரு தடவை எங்கூட பேசினா… எப்டியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திருவேனே…  

இதுவரை எங்கூட பழகினது எல்லாம் நடிப்பா… அவ வேணானு ஸ்டபனா நின்னா… அவளை மீறி யாரால அவங்க வீட்டுல என்ன செய்துர முடியும்?

ஏன் அவ என்னை நம்பலை? டைம்பாஸ் பண்ணிட்டுப் போக நினைச்சுத்தான் இத்தனை நாளா எங்கூட பழகினாளா?’ இப்படி நீண்டிருந்தது.

சௌமிக்கு இதுவரை காவலாக கதிரவனும், பிரபாவதியும் இருந்ததுபோக, அவளின் விசயம் கேள்விப்பட்டது முதல் அவ்வப்போது தேன்மொழியும் வந்து காவல் காப்பது சௌமிக்கு வேதனை தந்தது.

முழுநேர கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்த சௌமிக்கு மூச்சு முட்டியது. அவள் கழிவறையைப் பயன்படுத்தும்போதுகூட அதனைத் தாழிட விடாமல் கொடுமை செய்தனர்.

அவளின் நிலை புரியாத ப்ருத்விக்கு, அவளைத் தவறாக எண்ணுமளவிற்கு சூழல் அவளை வஞ்சித்திருந்தது.

இதை எதையும் காணாமல்… கேட்காமல்… உணர முடியாத நிலையில் இருந்தவள் இன்னும் ப்ருத்வியை, ‘தன்னை கட்டாயம் இந்த இக்கட்டிலிருந்து மீட்பான்’ என மலைபோல நம்பிக் கொண்டிருந்தாள்.

***

பூ வைக்கும் விழாவிற்கு கனி வந்திருக்கவில்லை.  அதற்கு அவளின் மாமியார் மற்றும் மாமனார் மட்டுமே வருகை தந்திருந்தனர்.

கனிக்கு கைக்குழந்தை இருப்பதால் குழந்தையை அலைக்கழிக்க வேண்டாமென முடிவு செய்து, பெரியவர்கள் மட்டும் கிளம்பி வந்திருந்தனர்.

வந்ததும் தம்பியிடம், “நீ பத்திரிக்கை குடுக்க அங்க வரும்போது உம்மகளையும், பேரனையும் கையோட கூட்டிக்கிட்டு வந்திரு.  நாங்க எல்லாம் நிச்சயத்துக்கு வந்துறோம்” என்று பேசிக்கொண்டிருந்தார் வானதி.

செழியனும் அதனை ஆமோதித்தபடி வந்தவர்களை வரவேற்பதில் கவனமாக இருந்தார்.

நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே பூ வைக்கும் விழாவில் பங்குபெற்றாலும் மஹால் பிடித்து விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தார் செழியன்.

நாத்தனார் முறைப்பெண்… கவி சௌமியாவிற்கு தலையில் முறைக்கு முதலில் பூ வைத்து அவ்விழாவினைத் துவங்க, அடுத்தடுத்து நாத்தனார் முறை மற்றும் தீர்க்க சுமங்கலியாக நீண்ட நாள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெண்கள் ஒவ்வொருவருவராக வந்து பூ வைத்துச் சென்றனர்.

அதன்பின் திருமண ஒப்பந்த ஓலையை தயார் செய்து சபையில் வந்திருந்தவர்களுக்கு வாசித்துக் காட்டி திருமணத் தேதியை உறுதி செய்தனர். 

ஆளுக்கொரு ஒப்பந்த நகலை மணமக்களின் பெற்றோரிடம் பொதுவில் விழாவிற்கு வருகை புரிந்தோர் ஒப்படைத்தனர்.

இரு வீட்டுத் தரப்பினரும் அதனை முறையாகப் பெற்றுக் கொண்டதும், மணமக்கள் மோதிரங்களை ஒருவர் மற்றவருக்கு அணிவித்தனர்.

கோலாகலமாக கொண்டாடப்பட்ட அந்த விழாவின் சிறப்பை மண்டபத்திலிருந்து, பாம்பன் பாலம் துவங்கி இராமேஸ்வரம் வரை வைத்திருந்த கட்அவுட்கள் விளக்கிச் சொன்னது.

இருபெரும் பெயிண்ட் டீலர்களின் சம்பந்தம் என்பதால் அழைப்பு விடுவிக்காமலேயே ஊர் முழுக்க விசயம் கட்அவுட்களின் உபயத்தால் தெரிய வந்திருந்தது.

சிலர், “மூத்த பொண்ணை சொந்தத்துல கொடுத்தாரு.  இந்தப் புள்ளைய அன்னியத்துல கொடுக்கறாரு” எனப் பேசுமளவிற்கு கட்அவுட்கள் மூலம் ஊர் மக்கள் மட்டுமன்றி மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி வரையுள்ளவர்கள் வரை விசயம் தெரிய வந்து விவாதிக்கப்பட்டது.

“பொண்ணுக்குப் படிப்பு முடியும் முன்னே ஏன் இந்த அவசரக் கல்யாணம்?” என்பது போன்ற பேச்சுகளும் அடிபட்டது.

இதை எதுவும் அறியாத மாப்பிள்ளை வீட்டார் நிகழ்ச்சி முடிந்ததும் நிறைவோடு விடைபெற்றிருந்தனர்.

***

கவி சௌமியாவின் நம்பிக்கை தளரத் துவங்கி இருந்தது.  அவளால் ப்ருத்வியின் நினைவுகளிலிருந்து மீள முடியும் என்று தோன்றவில்லை.  வரப்போகும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுமளவிற்கான மனமும் இல்லை.

திண்டாடியவள் இடையில் இருக்கும் சொற்ப தினங்களுக்குள் ப்ருத்வியை அடைவதைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கினாள்.

ஆனால் எப்போது திருமண ஒப்பந்த ஓலை சபையினர் முன் வாசிக்கப்பட்டதை ப்ருத்வி பிறர் மூலம் அறிந்துகொண்டானோ, அப்போதே கவி சௌமியாவை அடையும் எண்ணத்தை ஒதுக்கி அமைதியாகியிருந்தான் ப்ருத்வி.

அதுவரை அவன் எடுத்த முயற்சிகளை அத்தோடு விட்டிருந்தான்.  ஆனால் அவளின் தாக்கத்தை தன் மனதிலிருந்து குறைக்க வேண்டி, வேலையில் மேலும் கவனம் செலுத்தலானான்.

மகனின் சோர்ந்த நிலையைப் பார்த்த ப்ருத்வின் தந்தை கேசவனோ குடும்பப் பின்னணி மற்றும் அந்தஸ்து இது எதையும் பார்க்காமல் சௌமியைக் காட்டிலும் அழகான பெண்ணாக மகனுக்குப் பார்க்க தரகரை நாடியிருந்தார்.

சௌமியை மறக்க வேண்டுமெனில் அவளைக் காட்டிலும் அழகில் சிறந்தவளாக இருக்க வேண்டும் என்கிற கேசவனின் கணிப்பு ஓரளவிற்கு சிறந்த  பயனைத் தந்தது.

ப்ருத்வியின் அதிர்ஷ்டம் பெண் அழகாக இருந்ததோடு அவர்களைக் காட்டிலும் அந்தஸ்திலும் சிறந்த குடும்பமாக எதிர்பாராமலேயே அமைந்திருந்தது.

இதை அறியாதவளோ ப்ருத்வியுடன் கழித்த நிமிடங்களை மனக்கண்ணில் கொண்டு வந்து தனது தற்போதைய நிலையை எண்ணி கண்ணீர் வடித்தாள்.

பிறரறிய கண்ணீர் வடிக்காவிட்டாலும் அவளின் சிவந்த கண்கள் காட்டிக் கொடுத்தது.  இதைக் கண்டு கொண்டாலும் கவனிக்காததுபோல பிரபாவதியும், தேன்மொழியும் நடந்துகொண்டனர்.

தீர்த்தபதி சௌமியின் விசயம் அறிந்து தாயிடம் பதறிக் கேட்க, சௌமியின் சாதகத்தினால் தீர்த்தபதிக்கு நேரவிருக்கும் பாதக விசயங்களாக தேன்மொழி பலதைக் கூறி மகனைச் சமாதானம் செய்திருந்தார்.

தனது உயிரைப் பற்றி தாயார் சொன்ன விசயங்களால் அரைமனதாக சௌமியைப் பற்றிய தன் திருமணக் கனவை விடத் துணிந்திருந்தான் தீர்த்தபதி.

***

பத்திரிக்கை அடித்து வந்ததும் அதனை விநியோகிக்க செழியன் மதி தம்பதியர் சென்றுவிட, வீட்டையும் சௌமியாவையும் தேன்மொழி வந்திருந்து பிரபாவதியோடு பொறுப்பாக கவனித்துக் கொண்டார்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உறவினர்கள், பெயிண்ட் டீலர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை வைக்கப்பட்டது.

சென்னைக்குச் சென்றவர்கள் வானதி வீட்டாருக்கு அழைப்பைத் தந்ததோடு, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு ஓனரின் குடும்பத்திற்கு வானதியின் விருப்பத்தின் பெயரில் செளமியின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஞானபிரகாசம், ஜெயமாலினி தம்பதியரின் வீட்டில்தான் வானதியின் குடும்பம் குடியிருந்தது. மூன்றரை ஆண்டுகள் இரு குடும்பத்திற்கும் இடையே நல்ல பழக்கம்.

ஞானபிரகாசம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் இந்திய கடலோர படையில் பணிபுரிந்து, மாற்றல் காரணமாக அதன்பின் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து… வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கி தற்போது குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகியிருந்தார்.

அவர்கள் குடியிருக்க தனி வீடும், அதனருகே கிடந்த இடத்தில் இரண்டு மாடி வீடுகள் கட்டி வாடகைக்கும் விட்டிருந்தனர். அதில் ஒரு வீட்டில்தான் வானதி குடும்பம் வசித்து வந்தது.

ஞானபிரகாசம் ஜெயமாலினி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு வளர்ப்பு மகன்.  மூத்தவன் சிபி சக்கரவர்த்தி.  பொதுநல மருத்துவம்(General Medicine) முடிக்க இன்னும் சில மாதங்களே இருந்தது.  அதன்பின் மனநல மருத்துவத்தில் பட்டயம் படிக்க எண்ணி அதற்கான முயற்சிகளில் முழுமூச்சாக இருக்கிறான்.

வாய்ப்பு கிட்டும் பட்சத்தில் பணி புரிந்துகொண்டே பட்டயம் படிக்கும் அபிப்ராயத்தில் இருந்தான்.  தற்போது பொது மருத்துவம் படித்துக்கொண்டிருப்பதைக் கொண்டு பகுதி நேரப் பணியாக இரு வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகிறான்.

தாயின் கனவைத் தள்ளிப்போடுவதில் தயாளன். ஆம், ஜெயமாலினி மூத்த மகனுக்குப் பெண் பார்க்க நினைக்க, இதுவரை பிடி கொடுக்காமல் இருந்தவன் இனி அதனை தொடரும் உத்தேசமில்லாமல் இருக்கிறான்.

சிறியவன் மகேந்திரவர்மன்.  தற்போது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு ஐட்டி(IT) படித்து வருகிறான்.

மூன்றாமன் பல்லவவர்மன்.  சிபியின் தேடலால் அக்குடும்பத்திற்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிஷம்.

பத்திரிக்கை செழியன் மதி தம்பதியினர் அவர்கள் வீட்டிற்கு கொடுக்க வந்தபோது உடன் இருந்த மகேந்திரன் அவர்கள் செல்லும்வரை அமைதியாக இருந்துவிட்டு, “ம்மா எனக்கு விபரம் தெரியாத வயசுல அங்க நீங்க இருந்ததால, கல்யாணத்துக்கு போற சாக்குல நீங்க இருந்த இடத்தையெல்லாம் ஒரு ரவுண்ட்ஸ் பாத்திட்டு வர்றோம்” என்றதும்,

அதுவரை தம்பதியர் சகிதமாக வந்து செல்ல எண்ணியிருக்க, மகனின் பேச்சில் தாயும் மகனும் திருமணத்திற்கு வந்து செல்ல முடிவெடுத்திருந்தனர்.

பல்லவன் தந்தையோடு ஒட்டுதல் என்பதால் அவன் அவரோடு இருந்துகொண்டான்.

மகேந்திரன் இரண்டு வயது வரை இராமநாதபுரத்தில் இருந்துவிட்டு தந்தையின் வேலை மாற்றல் காரணமாக அங்கிருந்து வேறு ஊருக்குச் சென்றிருந்ததையே அவ்வாறு குறிப்பிட்டிருந்தான்.

தமையன் மற்றும் பெற்றோர் அவ்வூரைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடும்போது சிறியவனுக்கு ஏக்கமாக இருக்கும்.

தான் சிறுவனாக இருந்தமையால் அவர்கள் கூறும் இடங்களைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல் இருப்பதை எண்ணிய வருத்தம்தான் அது.

அந்த ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ள சௌமியின் திருமணத்தை அரிய வாய்ப்பாக கருதினான். ஆகையால் தாயுடன் இந்தப் பயணத்தை தீர்மானித்தான் மகேந்திரவர்மன்.

பல்லவனுக்கு சிபியும் தந்தையும் செல்லாததால் தானும் அங்கு செல்ல வேண்டாமென்று முடிவெடுத்திருந்தான்.  

***

சென்னைக்குச் சென்று பத்திரிக்கை வைத்துவிட்டுத் திரும்பும்போது மூத்த மகளையும், பேரனையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தார்கள் செழியன் தம்பதியினர்.

கனி சௌமியாவிற்கு இதுவரை புரியாத புதிராக இருந்த செய்திகள் வீடு வந்ததும் அரசல் புரசலாக புரிந்தது.  ஆனால் விசயம் இதுதான் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தங்கை சௌமியை கண்காணிக்க அம்மாச்சி பிரபாவதி, தாத்தா கதிரவன் மற்றும் அத்தை தேன்மொழி என மூவர் இருப்பதைப் பார்த்ததோடு, அவளை குளிக்கச் செல்லும்போதுகூட நம்பிக்கையின்றி நடந்துகொண்டவர்களை புரியாமல் பார்த்திருந்தாள்.

 ஆனால் தினசரி கணவன் அவளுக்கு அழைத்துப் பேசும்போது இதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை அவள்.

கனி நெருங்கினாலும், சௌமியா ஒதுங்கி இருந்தது வேறு மூத்தவளின் மனதைக் குடைந்தது. குழந்தையை தங்கையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றாலும், அவளிடமிருந்த குழந்தையை தனது பொறுப்பாக்கிக் கொண்டு சௌமியை தனித்து விட்ட மூவரின் செயலுக்கான காரணம் முழுமையாகப் புரியவில்லை.

தாயிடம் கேட்டபோது, கனியின் கேள்வி காதில் விழுந்தாற்போலயே காட்டிக் கொள்ளாமல் வேறு பேசிய தாயின் செயல் குழப்பத்தையே தந்தது.

எதையும் தோண்டித் துருவும் ரகமல்ல கனி.  ஆகையினால் பொறுமை காத்தாள்.

இரு வீட்டார் சார்பாக மொத்தக் குடும்பமும் மதுரைக்குச் சென்று ஆடை, அணிமணிகள் குறிப்பிட்ட தினத்தில் வாங்கிக்கொண்டு அவரவர் ஊரை நோக்கி வந்திருந்தனர்.

சௌமியாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தனர்.  அவளின் நிறத்திற்கு ஏதுவாகப் பொருந்தும் நிறங்களில் ஏராளமான பட்டுப் புடவைகளை வாங்கிக் குவித்திருந்தார் செழியன்.

மாப்பிள்ளை வீட்டார், “நீங்களே எல்லா கலர்லயும் எடுத்திட்டா, அப்ப நாங்க எந்தக் கலர்ல எங்க மருமகளுக்கு சேலை எடுக்கறது” என்று சம்பந்தி நியாயம் கேட்டு சண்டைக்கு வர,

“இதுதான் நம்ம வீட்டுல நடக்கிற கடைசி விசேசம்.  அத நினைச்சு கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன் சம்பந்தி.  நான் இதுல பாதிக்கு பொறுப்பெடுத்திக்கிறேன்.  அதுல வராத கலர்ல நீங்க எடுங்க” என பெருந்தன்மையோடு ஒதுங்கிக் கொண்டார் செழியன்.

“அப்டிச் சொல்லாதீங்க.  இதை அடுத்தடுத்து இன்னும் நிறைய ஃபங்சன் இருக்கு” என மதியும், சம்பந்தி வீட்டு அம்மாவும் ஒருங்கே குரல் கொடுக்க, கைகுவித்து தனது தவறை ஒத்துக் கொண்டார்.

இதுவரை அவர்களோடு பழகியதில் எந்த சுணக்கமும் செழியன் குடும்பத்திற்கு உண்டாகவில்லை.  அவர்களின் செயலில் மொத்தக் குடும்பமும் மெய்சிலிர்த்துப் போயிருந்தது.

திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்க, அன்று பந்தக்கால் நட்டார்கள்.  சௌமியின் பெற்றோர் மற்றும் பாட்டி, தாத்தா நால்வரும் அன்று திண்டுக்கல் சென்றிருந்தனர்.

அதேநேரத்தில் அன்று மாப்பிள்ளை வீட்டில் தாலிக்கு பொன் உருக்கும் வைபவம்.  ஆகையால் அன்று தேன்மொழி மற்றும் அவர்களின் குடும்பம் இராமேஸ்வரத்தில் உள்ள மணமகள் வீட்டில் முன்னின்று பந்தக்கால் நடுவதை சிறப்பாகச் செய்தனர்.

உறவினர்கள், நண்பர்கள் என திருமணத்தை முன்னிட்டு வீட்டிற்கு வரத் துவங்க, அவர்களின் வீட்டில் சிலரையும், அங்கிருக்கும் வீடுகள் சிலவற்றை வாடகைக்கு எடுத்து அதில் சிலரையும் தங்க வைத்திருந்தனர்.

திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பே கனியின் மாமியார் வானதியுடன், ஜெயமாலினி மற்றும் அவரது இரண்டாவது மகன் மகேந்திரவர்மனோடு இராமேஸ்வரம் வந்திருந்தனர்.

அவர்களை நெடுந்தொலைவில் தங்க வைக்க விரும்பாத வானதி, செழியனின் வீட்டருகே இருந்த வீட்டில் தங்க வைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தமையால் அதனைச் செய்து தந்திருந்தார் செழியன்.

திருமண நாள் நெருங்க நெருங்க, உறவினர்கள், நண்பர்கள் என நிறைய மக்களை கவனிக்க வேண்டிய சூழலில் இருந்தமையால் பிரபாவதி மட்டுமே அன்று சௌமியுடன் இருந்தார்.

மற்றவர்கள் வெவ்வேறு பணிகளில் மூழ்கியிருந்தனர்.  வானதி தன்னோடு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மண்டபம் கேம்ப், பாம்பன், அப்துல்காலம் மெமோரியல் ஹால், குந்துக்கல், தனுஷ்கோடி, அரிச்சல்முனை என்று சென்றிருக்க, கனி தனது குழந்தையோடு தனியாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்.

சௌமிக்கு முற்றிலுமாக ப்ருத்வியின் மீது நம்பிக்கை போயிருக்க, ரமணனை கணவனாக ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

தனது முடிவைச் செயலாக்க நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கியிருந்தாள்.

அதற்கான தனிமையை அவள் எதிர்நோக்கியிருக்க, அவளுக்கான வாய்ப்பு கிட்டியதா?

***

சந்தர்ப்பத்தை உருவாக்கிச் சாகத் துணிந்தவள் சாக வேண்டிய வழியினைத் தேர்ந்தெடுப்பதில் முனைப்பாக இருந்தாள்.

விசம் அருந்தக் கூடிய வாய்ப்புகளை அலசிப் பார்த்ததில் அதற்கான வாய்ப்பு தனது வீட்டில் இல்லை எனும் முடிவுக்கு வந்திருந்தாள்.

மாத்திரைகளை விழுங்க எண்ணியவளுக்கு, தனது தாமதமான திட்டம் அதனை ஒத்திபோடச் சொன்னது.

எடுத்த திட்டங்கள் ஒவ்வொன்றும் காலாவதியாக கலங்கிப் போனவளின் கண்களில்… கனி குழந்தையின் தொட்டில் கயிறு தென்பட்டது.

குழந்தையை கனி கையில் வைத்திருக்கும் நேரங்களில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை உணர்ந்தவள், கனி குழந்தையோடு அறையை விட்டுச் செல்வதற்காகக் காத்திருக்கத் துவங்கினாள் கவி சௌமியா.

மறுநாள் பெண் அழைப்பு.

அதற்குள் தனது சங்கல்பத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும்.  தீர்மானமாக காத்திருந்தாள்.

ப்ருத்வியோடு ஊன் உரச, உயிர் உணர, உணர்வுகளோடு உணர்வைக் கலக்கச் செய்து, மனமொன்றி பல நேரங்களில் இழைந்து, ஒருவரோடு ஒருவர் மெய்மறந்து, ஒருவரின் அணைப்பில் மற்றவர் குளிர்காய்ந்து, இதழ் தூண்டி… நா வழியே மோக தாகத்தை ஒருவருக்கொருவர் தீர்த்துக்கொண்ட தருணங்கள் அனைத்தும் நினைவில் வந்து அவளை கேலி செய்தது.

ஆடை களைந்து அணைத்தால்தான் அது காமமா? மனம் முழுக்க நிர்வாணமாய் அணைத்துக் கொண்டாலும்… காமமே!

காமமும், மோகமும் கற்றுக்கொடுத்தவனை விடுத்து, கண்டவனோடு எல்லாம் கூட அவள் தாசியல்லவே!

கற்பை தொலைத்தால்தான் களங்கமென்பது இல்லையே!

சல்லாபமும், உல்லாசமுமாக கண்டவர்களோடெல்லாம் ஒரு பெண்ணால் ஒன்றி ஈடுபடமுடியுமா?

கனவால், நனவால் கற்பைக் களவாட இடந்  தந்தாலும் களங்கம்தானே!

கைம்பெண் ஆனாலும் மாற்றானை ஏற்றுக்கொள்ள எல்லாராலும் இயலாது! இதுபோன்றதொரு வாழ்க்கை தனக்கு வேண்டாமென சௌமி தீர்க்கமாகவே முடிவெடுத்துவிட்டாள்!

பரிசுத்தமாக இல்லாததைப்போல தன்னையே அருவெறுத்தாள் சௌமி.

இதுவரை தான் எண்ணியவன் வந்து தன்னைக் காப்பான் என நம்பிக்கையிருந்தது. அதனால் வாழ்நாளை நீட்டித்தாள்.  இனி நீட்டிக்க விரும்பவில்லை.

மனம் ஒன்று சேராமல் பெண்ணால் எதையும் சகிக்க இயலாது.

ஆம்.  செளமியால் ரமணனை சகிக்க முடியும் என்று தோன்றவில்லை.  உயிரோடு உணர்வற்று வாழ்வதற்கு சாவதே மேல் எனத் தீர்மானித்தாள்.

தற்போது அந்த நம்பிக்கை முற்றிலும் அறுந்து போயிருந்தது! இனி வாழ தனக்கு அருகதை இல்லை என உயிரை முடித்துக்கொள்ள தகுந்த சமயம் பார்த்துக் காத்திருந்தாள்.

கனி குழந்தையோடு அகலும் சமயம் தனது திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் எனும் வெறியோடு உயிரைத் துச்சமாக எண்ணிக் காத்திருந்தாள் சௌமி.

நேரம் போனது! வாய்ப்புகள் கண்ணுக்குப் புலப்படவே இல்லை!

குழந்தையோடு கனி வெளியில் சென்றதும் இவள் அறையை அணுகும்போது, தாய் மதி வந்து மகளிடம் எதாவது சொல்கிறார்.

அத்தை தேன்மொழி அதனை அடுத்து தன்னை அழைத்துச் சென்று முகத்தை சீர்செய்யும் பெண்ணின் முன் அமர வைக்கிறார்.

இப்படி சந்தர்ப்பங்கள் அவளுக்கு சதி செய்தது!

மாப்பிள்ளையின் குடும்பம் இராமேஸ்வரம் வந்துவிட்டதாகச் செய்தி வந்ததும் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்க கனி சென்றுவிட, கனியின் குழந்தையோடு தேன்மொழி சௌமியுடன் இருந்தார்.

குழந்தை அத்திபூத்தாற்போல அழ, அவனுக்கு பாலைக் காய்ச்சிக் குடுக்க தேன்மொழி குழந்தையோடு அகல, அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரைந்தாள் சௌமி.

அறைக்கதவை சட்டென சத்தமில்லாமல் சாத்திவிட்டு, கயிறோடு கட்டியிருந்த தொட்டில் துணியை அவசரமாக அகற்றி, அவளுக்கு ஏதுவான உயரத்தில் சுருக்கு வகை முடிச்சிட்டு, ஏறி நிற்க அங்கே கிடந்த நாற்காலியை எடுத்து சத்தமில்லாமல் போட்டு ஏறி நிற்கும்முன் வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அத்தை தேன்மொழிதான்!

அவசரமாக அவர்களின் பேச்சைக் கவனத்தில் கொள்ளாது அவசரமாக சுருக்கை தலை நுழையும் வகையில் அட்ஜெஸ்ட் செய்தாள்.

அதற்குள் வெளியே நின்றிருந்த தேன்மொழி, “யாராவது வாங்களேன்.  கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டுத் திறக்க முடியலை.  சீக்கிரம் வாங்களேன்” என்று கையில் கனியின் குழந்தையோடு நின்று கத்தினார்.

தேன்மொழியின் கத்தலில் குழந்தை வீறிட்டு அழ, அதனைச் சமாதானப்படுத்த இது சமயமல்ல என்பதை உணர்ந்தவர் அதனை சட்டை செய்யாது, இன்னும் அதிக சத்தத்தோடு அருகே இருந்த வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த திருமணத்திற்கு வந்த உறவினர்களை நோக்கிக் கத்தி கூப்பாடு போட்டார்.

பெரும்பாலானோர் மாப்பிள்ளை அழைப்பைக் காணப் புறப்பட்டிருக்க வெகுசிலரே அங்கிருந்தனர்.

சத்தம் கேட்டு சிலர் வந்து எட்டிப் பார்த்துவிட்டு செழியனின் வீட்டை நோக்கி வந்தனர்.

“சீக்கிரம் யாராவது வந்து காப்பாத்துங்க… உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.  யாராவது வாங்களேன்…” பெருங்குரலெடுத்து தேன்மொழி அழத் துவங்கியிருந்த வேளை, அத்தையின் கூப்பாடு அனைத்தும் கேட்டு கலங்கி ஒரு கனம் தயங்கி நின்றவள், தன்னைச் சமாளித்து கால்களுக்கு கீழே இருந்த நாற்காலியை வைராக்கியத்தோடு எட்டி விட்டிருந்தாள் சௌமி.

வெகு தூரம் போகாமல் வீட்டருகே நின்று கத்திய தேன்மொழியின் காதுகளில் மர நாற்காலி கீழே விழும் சத்தம் துல்லியமாகக் கேட்க, குழந்தையை வந்தவர்களிடம் விட்டுவிட்டு அறைக்கதவைத் தன்னால் இயன்ற மட்டும் உடைத்தெறிந்து உள்ளே செல்லும் முயற்சியில் இறங்கினார்.

உயிரைவிடத் துணிந்த சௌமியை காப்பாற்ற முடிந்ததா?

***