பூவுக்குள் பூகம்பம் 8

பூவுக்குள் பூகம்பம் 8

பூவுக்குள் பூகம்பம் – 8

சௌமி குஷி பீச் சென்று வந்த அன்று… தாய் வசுமதியின் வற்புறுத்தலினால் அவள் ப்ருத்வியோடு காதல் வயப்பட்ட கதையை கூறும்படி நேர்ந்தபோது, “உனக்கு நீயே மாப்பிள்ளை தேடுறதுக்குத்தான் நாங்க உன்னை படிக்க அனுப்பிச்சோமா?

இல்லை…! எங்களுக்கு அந்த சாமார்த்தியம் பத்தாதுன்னு… நீயே உனக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டியா?” என்றெல்லாம் கேட்டு மகளை நையப்புடைத்திருந்தார் வசுமதி.

சௌமி தனது வாழ்வில் ப்ருத்வி வந்தது எதேச்சையாக நடந்த ஒன்று என்பதையும், தனக்கு அவனையே திருமணம் செய்து வைக்கும்படியும், அதுவும் தனது பட்டப் படிப்பு முடிந்தபின் செய்யுங்கள் என்றும்  பெற்றோரிடம் அழுகையோடு கெஞ்ச, செழியனும் மதியும் உக்கிர தாண்டவமாடியிருந்தனர் மகளிடம்.

வசுமதி, “ம்ஹ்ம்… பெரிய மனுசியாயிட்டீங்கள்ல…! நீங்க உத்தரவு போட்டாக்கா அதைச் செய்யத்தானே நாங்கள்லாம் இருக்கோம்.  கட்டளையிட்டா மறுப்பேதும் சொல்லாம… கண்டிப்பா செஞ்சிரலாம்!” என்றெல்லாம் மகளிடம் பேசினார்.

செழியன், “நீ காமிக்கறவனைக் கட்டி வச்சிட்டு, ஊருக்குள்ள நிமிந்து நடக்க முடியாம… தலையில துண்டைப் போட்டுக்கிட்டு திரியறதுக்கு உங்கப்பன் ஒன்னும் சொம்பைப் பைய கிடையாது!

நான் சொல்றதைக் கேட்டு, காட்டுறவனுக்கு கழுத்தை நீட்டறதா இருந்தா… உன்னை விட்டுவைப்பேன். 

இல்லையா… வளத்த கையாலேயே கழுத்தை நெரிச்சுக் கொன்னுறுவேன்! வசதி எப்படின்னு நீயே முடிவு பண்ணிக்கோ!”

அதிர்ந்து போய் மகள் தந்தையைப் பார்க்க, “என்ன பாக்கற…! முதல்ல மானம்…! அப்புறந்தான்… பொண்டாட்டி… புள்ளை… எல்லாம்…” மிரட்டியிருந்தார்.

தந்தையின் பேச்சைக் கேட்டு, “ப்ருத்வியத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்.  மீறி பண்ணா நீங்க என்ன… என்னைக் கொல்லுறது!  நானே செத்துப் போயிருவேன்” வீராவேசமாகப் பேசி சௌமி அன்று வாங்கிய அடிகள் ஏராளம்.

திருமண விசயத்தில் தங்களின் பேச்சை மட்டுமே தனது பிள்ளைகள் கேட்டு மதித்துச் செயல்படவேண்டும் என்பதைத் திணித்துப் பழகிவிட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர் செழியன்.

பிள்ளைகள் தங்களின் விருப்பங்களை ஏற்க மறுத்தால், தங்களை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தி விட்டதாகவே நம்புகிறது அச்சமூகம்.

தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டதாக எண்ணி மருகி, தனக்குத்தானே ஒரு வேலி அமைத்து அதற்குள் இருக்கப் பழகிவிட்டது.

செழியனும் அதே மனநிலையில்தான் அப்போது இருந்தார்.  தான் எத்தனை நம்பியிருந்த மகள் வேறு ஒருவனுக்காக தன்னை எதிர்க்கத் துணிந்து ஒரு முடிவெடுத்திருக்கிறாள் என்பதை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரால்.

எந்த ஞானமும் இன்றி இவ்வுலகிற்கு நமது பொறுப்பில் வரும் பிள்ளைகளுக்கு, அவர்களின் தேவையறிந்து அவசியமானவற்றைக் குறைவின்றிக் கொடுத்து, உடல்நலம் பேணி… உள்ள வளம் குன்றாதிருக்கும் ரகசியம் கற்றுத் தந்து, குற்றமற வளர்த்து…

அவர்களின் எதிர்கால நலனுக்காக கல்வியையும், ஒழுக்க பழக்கத்தையும், தொழிலறிவையும், மெய்ஞ்ஞானத்தையும் தந்து சமூகத்தில் தனித்திறனோடுடனான ஆளுமையாக…

பிறருடைய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்படி வளர்த்தலே இப்பிறவி அடுத்த பிறவியான குழந்தைக்குச் செய்யும் முக்கியக் கடமை என்பதைத் தெரிய மறந்துபோன சமூகம் இது. அதில் செழியனும் ஒரு அங்கம்.

தெரிய வந்தாலும் அதனை இம்மியும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகம்!

சௌமியின் தேர்வை ஆமோதிக்கும் முன்பு, அவளின் காதலன் என்கிற நிலையில் இருந்து பாராமல், தாங்கள் தேர்ந்தெடுக்கும் வரனிடம் உள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவனாக ப்ருத்வி இருக்கிறானா என அறிந்து கொள்ளும் முயற்சியில் இறங்குவதே தலைக்குனிவாக நினைக்கும் சமூகத்தின் அங்கமாக செழியன் இருந்தார்.

அதனால் அந்த நிலைக்கு தன்னை கொண்டு செல்லவே விரும்பாமல் தனது மனம்போன போக்கில் முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து அதனை அதிகாரத்தோடு திணிக்க எண்ணினார்.

சம்பவத்தன்று சௌமியின் பேச்சில் அவளின் எண்ணம் வெளிப்பட்டது முதலே… முழுநேர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர அவளின் பேச்சில் அவளையறியாமல் வந்த அவளின் எண்ணங்களும் முக்கியக் காரணமாகியிருந்தது.

சௌமியின் எண்ணத்தை அவள் பகீரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்ததால், பிரபாவதி, கதிரவன் மற்றும் தேன்மொழி மூவருக்குமே அதைத் தெரியப்படுத்தித்தான் காவலைத் தொடர்ந்திருந்தனர்.

முக்கியமாக செளமி இருந்த அறையின் தாழ்ப்பாள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்த நிலையிலும் கண்காணிப்பை கர்ம சிரத்தையோடு அனைவருமே இதுவரை கடைபிடித்திருந்தனர்.  அப்போதே சந்தேகம் கொள்ளும்படி எந்த முயற்சியும் செய்யாதவளை… திருமணம் நெருங்கிய வேளையில் நம்பி மோசம் போயிருந்தது அக்குடும்பம்.

கனியின் அறையில்தான் அவள் தனது குழந்தைக்கு தூளியமைத்து இருந்தாள்.  தனது எண்ணத்தைச் செயலாக்க தற்போது கவி சௌமியா தனது தமக்கையின் அறையில்தான் தூளியமைக்கப் பயன்படுத்திய கயிற்றின் துணையோடு தூக்கில் தொங்கியிருந்தாள்.

***

சௌமியின் நிலை சரிவரத் தெரியாமல், அவளை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது… நின்று கவனித்தவர்கள் விசயம் என்ன என்று கேட்டவர்களிடம் யூகமாகப் பேச, அது மாறி மாறி வேறு விதமாக செய்தி வெளியே சென்று கொண்டிருந்தது.

“அந்தப் புள்ளையத் தூக்கிட்டுப் போகும்போதுதான் நான் என் கண்ணாலே பாத்தேங்கிறேன்ல!  ஒன்னுமில்லை…! அவ்ளோதான்!” கூறியவரின் உடல்மொழி மற்றும் முக அமைப்பைக் கொண்டு… கேட்டவர்கள் சௌமியின் உயிர் போய்விட்டதாக தாங்களாகவே முடிவு செய்துகொண்டனர்.

அதைக் கேட்டு மற்றவர்களிடம் பகிர்ந்தவர்கள், “முடிஞ்சிருச்சு! இப்டி ஒரு நிலைமை அந்தப் புள்ளைக்கு வந்திருக்க வேணாம்!” பரிதாபப் பேச்சு துவங்கியது.

இதனைக் கேட்டு சொன்னவர்கள், “என்ன பிரச்சனையின்னு சரியாத் தெரியலை. ஆனா அதுவே அது வாழ்க்கைய முடிச்சிக்கிச்சாம்!” இப்படி முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.

***

செழியனால் விசயம் பகிரப்பட்டது முதலே தேன்மொழி கண்ணும் கருத்துமாகத்தான் கவனித்துக் கொண்டிருந்தார். 

அத்தனை தூரம் கவனித்தும் இன்று பலனில்லாமல் போனதை எண்ணி… அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் நின்றபடி புலம்பிக் கொண்டிருந்தார்.

மகேந்திரவர்மன் தன் தாயோடு தேன்மொழி சௌமி மருத்துவமனைக்கு ஏற்றி வந்த ஆட்டோவிலேயே உடன் வந்திருந்தான்.

முக்கியமான சிலர் மட்டுமே அவரின் பின்னே வேறு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

“குழந்தை அழுகுதே… பாலைக் காய்ச்ச அடுப்புல வச்சிட்டு வருவோம்னு போயிட்டுத் திரும்பி வரதுக்குள்ள பாவி மக இப்படி பண்ணுவாளா?

எப்படா நேரம் கிடைக்கும்னு இருந்தவளைப் புரிஞ்சிக்காம… அறிவைக் கடங் குடுத்துட்டேனே…! அசந்த நேரத்துல… என் அங்கமெல்லாம் பதறுறமாதிரி கொண்டு வந்து முச்சந்தியில நிறுத்திட்டாளே…!

அவங்க அப்பன் வந்து எம்புள்ளை எங்கனு கேட்டா… என்ன பதிலைச் சொல்லுவேன்… கரு மாரியாத்தா… கருணை வச்சி அந்தப் புள்ளைக்கு உயிர் பிச்சை குடுத்துரு தாயி…” அழுது தீர்த்தார் தேன்மொழி.

***

     அதேநேரம்… சென்னையில் தங்களின் வீட்டிலிருந்தவன் எதிர்பாராமல் கண்ணில் பட்ட ரமணா வெட்ஸ் கவி சௌமியா எனும் திருமண அழைப்பிதழ் தாங்கிய கவர் கண்ணில் படவே, அதனை எடுத்துக்கொண்டு அவனது அறையோடு கூடிய பால்கனியில் சென்றமர்ந்தான் சிபி.

நிதானமாக அதனுள் இருந்த திருமண அழைப்பிதழை எடுத்துப் பார்த்தான்.

அவனது பால்ய பிராயம் இராமநாதபுரத்தில் என்பதால் அதில் குறிப்பிட்டிருந்த ஊரின் பெயரைப் பார்த்ததும் ஏனோ இனம் புரியாத மகிழ்ச்சி அவனுள் அலையலையாக எழுந்தது.  இது வழமைதான் அவனுக்கு.

சிறு வயதில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவன் தனிமை கிடைக்கும் வேளைகளிலெல்லாம அசைபோட்டு அந்த நிகழ்வுகளோடு மூழ்கிப் போவான்.

     அவர்களது பூர்வீகம் தஞ்சாவூர்.  அங்கு சென்று தங்கியிருந்தது அத்தனை அவனை ஈர்த்ததில்லை.  ஏனோ அவனது விவரமறிந்த காலத்தில் வாழ்ந்த இராமநாதபுரத்தை அவனால் எப்போதும் மறக்க முடிந்ததில்லை.

     அதன்பின் பல இடங்களில் சென்று தங்கியிருந்தாலும், அந்த ஊர் ஏற்படுத்திய பாதிப்பை வேறு எந்த ஊரும் அவனுக்குள் இதுவரை ஏற்படுத்தியிருக்கவில்லை.

தற்போது தாயும் தம்பியும் இராமநாதபுரத்திற்கு திருமணத்திற்கு சென்றிருப்பதாகக் கூறியதும் எழுந்த ஆவலின் காரணமாகவே அந்த பத்திரிக்கையை எடுத்துப் பார்க்கத் தூண்டியது.

     தன்னோடு படித்தவர்கள் அல்லது தனக்கு ஏதேனும் வழியில் அறிமுகமானவர்களை அவனெதிர்பாராமல் நேரில் சந்திப்பதோ, அல்லது அவர்களைப் பற்றி பிறர் வாயிலாகக் கேட்டறிவதோ, காண்பதோ போன்ற விசயங்கள் அவனை ஆகர்சிக்கும்.

     கனி சௌமியாவின் சகோதரிக்குத் திருமணம் என்பதெல்லாம் அவன் தாய் சொல்லி சிபிக்குத் தெரிந்தே இருந்தது.

     இராமநாதபுரத்தில் அவன் வாழ்ந்திருந்த காலத்தில் மறக்க முடியாத, மறக்க விரும்பாத மகிழ்ச்சியான தருணங்களில் பூ பாப்பாவைச் சந்தித்த நாள்களும் அடக்கம்.

     குழந்தையாக இருந்தபோதே அத்தனை அழகையும் ஒருங்கே தனக்குள் கொண்டிருந்த அந்தக் குழந்தை தற்போது குமரியாகியிருப்பாள்.

     அவளுக்கும் தனது தம்பி மகேந்திரனும் ஒத்த வயது. அவளும் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பாளாக இருக்கும்.

     ஏனோ… சமீப காலமாகவே அந்த பூ பாப்பா என்று அவனால் அழைக்கப்பட்டவளை… தற்போது அவள் எப்படியிருப்பாள் என்று பார்க்க வேண்டும் எனும் தீராத ஆசை அவனுக்குள் தற்போதும் ஆழிப்பேரலையாய் எழுந்த வண்ணமிருந்தது.

     அந்த எண்ணத்திற்கான விதை விதைக்கப்பட்டிருந்ததால்தான் இன்று களையெதுவும் இருந்தால் அதைக் களைந்து விதை வளர உதவலாம் என்கிற நோக்கில் பத்திரிக்கையை வாசிக்கிறான்.

     ஒரு சமயம் வீட்டில் நால்வருமாக அமர்ந்து ஓய்வாக பேசிக்கொண்டிருந்தபோது தந்தையிடம் அதைப்பற்றிப் பேசியிருந்தான் சிபி.

     அவரோ, “வயசான பாட்டி, அவங்க மருமக… அத்தோட அந்த குழந்தையோட அம்மா… இவங்களை இப்போ எங்க போயித் தேடிக் கண்டுபிடிச்சு… அந்தப் புள்ளையப் பாக்கறது” எனக் கேட்டு சிரித்தவர், 

     “குழந்தையோட அம்மாவைவிட, அவங்கம்மாவோட வயசான பாட்டியைத்தான் எனக்கே ஞாபகம் இருக்கு. ஊரு ஊராப் போயி வீடு வீடாத் தேடினாக்கூட அவங்களை கண்டுபிடிக்க இன்னும் ரெண்டு வருசமாகிரும்.

     ஆனா… அந்தப் பாட்டி உயிரோட இருக்கறதுக்கு வாய்ப்பும் ரொம்பக் கம்மிதான்! அந்தப் பொண்ணோட அம்மாவை… பிரபாவா… ஹேமாவா…ன்னு தெரியலை.  அந்த மாதிரிக் கூப்பிட ஞாபகம்!” என்று கூறியதும், தந்தையை கலாய்க்க… சற்று நேரம் வீடே கலகலப்பாக இருந்தது.

     அதன்பின்னும் விடாமல் தொடர்ந்தவர், “அந்த பொண்ணை யாருக்காவது இன்னேரம் கல்யாணம்கூட செய்து குடுத்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.

     அப்போது இளையவன் தனது சகோதரனின் கதையை கேட்டறிந்துகொள்ளும் ஆர்வத்தில், “வெரி இண்ட்ரெஸ்டிங்ப்பா…! அப்ப என்ன நடந்ததுனு சொல்லுங்கப்பா…” ஆர்வமாகக் கேட்டதும், அப்போது நடந்த விசயங்கள் அனைத்தையும் ஞானம் மகன்களோடும், மனைவியோடும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

     பழைய நினைவுகளோடும், பூ பாப்பாவின் நினைவில் அந்த பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தவனுக்கு மல்டி கலரில் அடிக்கப்பட்டிருந்த ஏத்ரீ அளவு பத்திரிக்கையின் முன் பக்கத்தில் மணமக்களின் ஆளுயர புகைப்படம் கண்ணில்பட, அதையே நீண்ட நேரம் பார்த்திருந்தான்.

     தனக்குத் தெரிந்த பெண்ணா, பரிட்சயமான முகமா என்பதைத்தான் முதலில் பார்த்தான். கனியின் சாயல் எதுவும் கவி சௌமியாவிடம் இல்லை. ஆனால் அவன் எதிர்பார்த்ததைவிட அழகாகத் தெரிந்தாள்.

     திருமண பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் சௌமியாவோடு ரமணனை பார்த்ததும், ‘இவனுக்குப்போயி… இப்டி ஒரு பொண்ணா?’ என்றும் தோன்றியது. பொருத்தமில்லாமல் தோன்றியதால் உண்டான வருத்தம் அது.

     ‘இந்த பொண்ணு மாதிரி, அந்தப் பூவும் அழகா இருக்குமா?’ எனும் நினைப்பு சிபியின் மனதில் ஓட… ஏனோ பத்திரிக்கையிலிருந்து கண்ணை விலக்க மனமின்றி, கையிலிருந்த அலைபேசியில் ரமணனைத் தவிர்த்து அந்தப் பெண்ணை மட்டும் ஒரு ஸ்டில் எடுத்திருந்தான் சிபி.

     அது எப்படி நடந்தது என்பதை அவன் யூகித்தால் அதற்கான காரணத்தை நிச்சயமாக அவனால் சொல்லவே முடியாது எனும் நிலை. மாந்ரீகனின் மந்திரத்திற்கு கட்டுப்பட்ட ஏவலைப்போல மாறனின் கட்டுப்பாடு அவனை ஆதிக்கம் செய்யத் துவங்கியிருந்தது.

     மறுநாள் அப்பெண்ணுக்குத் திருமணம்.  தனது செயல் தவறு என்று தோன்றினாலும் அந்தப் பிக்கை அழிக்க மனம் வரவில்லை சிபிக்கு. நீண்ட நேரம் பார்த்தபடி இருந்தான்.

     ‘பூ… இவளா இருந்தா…’ என்று எங்கிருந்தோ சட்டென நினைப்பு தோன்ற… தலையைக் குலுக்கி அதனை ஏற்க முடியாமல் சிலுப்பியவன்,

“பூ எங்கிருந்தாலும்… எவ்ளோ நாளானாலும்… எங்கிட்ட சேஃபா வந்துருவா…!” மெல்லிய குரலில் நம்பிக்கையோடு இயம்பிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்புவதற்கு ஆயத்தமானான் சிபி.

***

பிரபாவதி அன்று நடக்கவிருந்த மாப்பிள்ளை அழைப்பிற்கான நிரலை மேற்பார்வையிடச் சென்றுவிட்டதால் சௌமிக்கு காவல் எண்ணிக்கை குறைந்து தேன்மொழி மட்டும் இருக்கும்படி நேர்ந்திருந்தது.

கதிரவன் நான்கு நாளுக்கு முன்பே மஹாலில் அலங்கரிப்பு, வந்திருந்தவர்களுக்கான உணவு பரிமாற்றப் பணிகளை உரிய நபர்களைக் கொண்டு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார்.

இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்றிருக்க, இறுதியின் அனைத்தும் தேன்மொழியின் பொறுப்பாக மாறியிருந்தது.

அலைபேசியில் சௌமியின் பெற்றோருக்கு விசயத்தைக் கூறும்பொருட்டு அழைத்தபோது அங்கிருந்த சத்தத்திலோ, வேறு பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தினாலோ இருவருமே அழைப்பை ஏற்கவில்லை.

விசயத்தை பெற்றவர்களுக்கு தகுந்த நபர் மூலம் நேரடியாகச் சென்று தெரியப்படுத்த பணித்துவிட்டு, அவசரத்திற்கு வழியில் சென்ற ஆட்டோவில்… பிடுங்கி நேரஞ் சென்ற கீரைத் தண்டாக வாடி மயங்கிக் கிடந்தவளை அள்ளிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருந்தனர்.

மருத்துவர்கள் அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். “எப்டிம்மா என்ன நடந்துச்சு?” என்று கேட்டதற்கு அழுகையினூடே தேன்மொழி கூறியது… பாதிக்குமேல் அவர்களுக்கு புரியவில்லை.

சௌமியின் விழி வழக்கத்திற்கு மாறாகத் திறந்து பிதுங்கி அகோர நிலைக்குச் செல்லும்முன் மகேந்திரவர்மன் அறைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்திருந்தான்.

இன்னும் சற்று தாமதித்திருந்தாலும் சௌமியின் உயிர் உடலை விட்டுப் போயிருக்கும். ஆபத்பாந்தவனாக அந்நேரத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று தொங்கிக் கொண்டிருந்தவளை தூக்கிப் பிடித்துக் காப்பாற்றிய பெருமை மகேந்திரவர்மனையே சாரும்.

 அத்தோடு தனது வேலை முடிந்தது என்றில்லாமல், சௌமியின் நிலையை நேரில் கண்டுணர்ந்தால் மட்டுமே நிம்மதி எனும் நினைப்போடு தாயை அழைத்துக்கொண்டு அவனும் மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

மருத்துவமனையில் தனதருகே நின்ற மகேந்திரவர்மனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “எஞ்சாமி… எங்க இருந்து… வந்த அய்யா? எங்குலத்தை காக்க வந்த தெய்வமே!”

நெடுஞ்சாண் கிடையாக அவனது காலில் விழப்போன தேன்மொழியைத் தடுத்து நிறுத்திய அவனது தாய் ஜெயமாலினி, “என்ன பண்றீங்க.  அவன் சின்னப் பையன்.  அவன் காலுல போயி விழுந்துட்டு…” நிறுத்தி தேன்மொழியை தன்னோடு இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

வாடி சீவனற்றுக் கிடந்தவளின் முகத்தில் தண்ணீர் தெளித்தும் கண் திறக்காமல் சலனமன்றிக் கிடந்தவளை கைகளில் ஏந்திக்கொண்டு செல்லும் தொலைவில் மருத்துவமனை இல்லாததால், வெளியில் ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தனர்.

தனியார் மருத்துவமனையில் அவளைச் சேர்க்கமாட்டேன் என்றதும், அவசரத்திற்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

கயிறு நீளம் குறைந்து இருந்தமையால் சௌமியின் எடையில் சுருக்கு இறுகி அவளின் கழுத்தை இறுக்கும் சமயம் அவளின் கால் தரையில் எக்கித் தொடுமளவிற்கு இறங்கி இருந்தது.

ஆனால் அது தெரியாதவளோ இவர்கள் அறைக்குள் நுழையும் வேளையில் கால்களிரண்டையும் உதறிக் கொண்டிருந்தாள்.

நாற்காலியை தள்ளிவிட்டதும் அவளின் உடல் எடை மொத்தமும் கயிற்றில் இருக்க… சட்டென கீழிறங்கிய வேகத்தில் அவள் கழுத்தில் உண்டான இறுக்கத்தால் உள் மற்றும் வெளிப்புறங்களில் இலேசான உள்காயம் தவிர பெரியளவு பாதிப்பின்றித் தப்பித்திருந்தாள் சௌமி.

உள்காயத்தில் ஏற்பட்ட உடலின் சமச்சீரற்ற மூச்சு மற்றும் உணவுக்குழாயில் உண்டான இறுக்கம் இதனால் ஏற்பட்ட பிசகால் மூளைக்குச் செல்லும் ஆக்ஜிசன் அளவு சற்றுக் குறைய மயங்கியிருந்தாள்.

உள்கழுத்து பகுதிகள் நெறிபடுவதற்கு துவங்கும் முன்பே மகேந்திரவர்மன் சௌமியின் இடுப்போடு தூக்கிப் பிடித்திருந்தமையால் அதிக சேதமின்றி காப்பாற்றப்பட்டிருந்தாள்.

மருத்துவர்கள் முதலுதவி செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். விசயம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்கு நேரில் வந்துவிட்டிருந்தனர்.

அதன்பிறகே செழியன், வசுமதி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துமனைக்கு விரைந்திருந்தனர்.

செழியனுக்கும், வசுமதிக்கும் நடப்பதை புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திக்பிரமையில் இருந்தனர்.

விசயத்தை இருவரிடமும் இலகுவாகக் கொண்டு போய் நேர்த்தியாகச் சேர்க்க நேரமெடுத்திருந்தது.  மாப்பிள்ளை மற்றும் அவர்களின் குடும்பத்து முக்கிய உறுப்பினர்களும் உடன் வந்திருந்தனர்.

தங்களோடு அனைத்து சந்திப்புகளிலும் தனது மனப் பிணக்கை எந்த விதத்திலும் காட்டியிராத சௌமி என்பவள் திடீரென அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குள் வருவதற்கான காரணம் இன்னும் விளங்காமல் அசௌகர்யமாக நின்றிருந்தனர் மணமகன் வீட்டார்.

இராமேஸ்வரத்திலுள்ள அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சௌமியை அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் முயற்சியில் சௌமியின் நலனைக் கருதி மருத்துவ நிர்வாகம் அவசர முடிவெடுத்தது.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்க, விசயம் காவல்துறையின் கீழ் சென்றுவிட்டதால் முடியாது என மறுக்கப்பட்டு அடுத்தடுத்த நிகழ்வுகள் அவசரகதியில் அரங்கேறியது.

கோலாகாலமாக கொண்டாட்ட மனநிலையில் இருந்த இராமேஸ்வரம் முழுவதிலும்… விசயம் காட்டுத் தீயாய் பரவியது.

விசயம் தெளிவாகத் தெரியாமல் ஆளுக்கொரு கதையை பரப்பிவிட்டிருக்க துக்கம் கேட்பதற்கு வீட்டை நோக்கி வரத் துவங்கியிருந்தனர். விசயம் தெரியாமல் எதுவும் பேசக்கூடாது என மிகச் சிலர்.

கிடைத்த அவலை அசகு வலித்தாலும் மெல்லும் வெறியில் பலர். தொழில்முறையில் போட்டி, பொறாமைகளில் இருந்தவர்களுக்கு ஆழ்மனதில் சந்தோச உணர்வுகூட வந்து போயிருந்தது.

***

குரல்வளையில் உண்டான லேசான காயங்கள் ஆறுவதற்கான சிசிக்சைகள் வழங்கப்பட்டது. இரண்டு நாள்களுக்குப்பின் நார்மல் வார்டுக்கு மாற்றி இருந்தார்கள்.

திருமணம் பேசியதற்கான சுவடே தெரியாமல் அனைவரது முகங்களிலும் சோகம் அப்பிக் கிடந்தது.  செழியனுக்குத்தான் யாரையும் நிமிர்ந்து காண முடியாத வேதனை. குறிப்பாக மனைவியை…

சௌமியின் தவறு கண்டறியப்பட்டதும் தானாகவே திண்டுக்கல் டீலரிடம் பேசி பெண் பார்க்க வரச் சொல்லிவிட்டு,  அதன்பின்னேதான் மனைவி வசுமதியிடம் விசயத்தைக் கூறியிருந்தார்.

மதி, “எதுக்குங்க அவசரப்படுறீங்க.  கொஞ்ச நாள் எல்லாத்தையும் ஆறப் போடுங்க.  பத்து நாளு போனதுக்குப் பின்ன என்ன செய்யலாம்னு நிதானமா யோசிச்சு… அந்தப் பையன் என்ன, குடும்பம் எப்படி என்னானு விசாரிச்சு… முடிவெடுப்போம்” என்றதற்கு கோபப்பட்டு மனைவியைத் திட்டியிருந்தார் செழியன்.

“எப்பப் பாத்தாலும் முட்டுக்கட்டை போட்டுக்கிட்டு… ஏன் எங்களுக்கு மூளையில்லையோ?  கடனுக்கா விட்டுருக்கேன் மூளைய…

தொழில் பண்ணி நல்லது கெட்டதுன்னு குடும்பத்துலயும், சொந்தத்துலயும் அத்தனையும் அசராமப் பாக்கறவனால… புள்ளையோட கல்யாண விசயத்துல முடிவெடுக்க முடியலைன்னு… நான் வந்து உங்கிட்டக் கேட்டேனா?

எதுக்கெடுத்தாலும் எடக்கு மொடக்காவே வந்து சொல்லிக்கிட்டு… இனி நான் சொல்றதை மட்டும் நீ கேளு…

பொட்டப் புள்ளைய ஒழுங்கா வளக்கத் துப்பில்லை.  எதுக்கெடுத்தாலும் நொட்டை சொல்ல கிளம்பிக்கிட்டு…” என்று மனைவியிடம் சாடியிருந்தார்.

சௌமியின் செயலால் ஏற்பட்ட கசப்பான மனநிலையில்… கணவன் தன்னிடம் அவ்வாறு பேசுகிறார் என்று அப்போது விட்டது, அதற்குப்பின் வசுமதியால் மகளுக்காக எதுவுமே பேச முடியாமல்… எல்லாம் தலைக்குமேல் போயிருந்தது.  அப்படிப் போனதுதான் இன்று இந்த நிலையில் வந்து நிற்கிறது.

மனைவியின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதோ என ஒரு மனம் அவரைத் தற்போது கடிந்து சொல்ல, மனைவியைப் பார்க்கவே அவரால் முடியவில்லை.

மதி எதையும் சொல்லி குத்திக் காட்டவெல்லாம் இல்லை.  அவர் மகளைக் கவனிப்பதில் மட்டும் கவனமாக இருந்தார்.  கணவனிடம் முகம் கொடுத்துப் பேசவே இல்லை.  அதுதான் அவரது வாட்டத்திற்கான முக்கியக் காரணம்.

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அத்தனையையும் துடைத்தாற்போல நிர்மலமாய் இருந்தது வசுமதியின் முகம்.

அதுதான்! மனைவியின் அந்த நிலைதான்… செழியனுக்கு உயிர்வதையாக உணரச் செய்தது.

பெண்ணை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு வரும்வரை வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.  இதற்கிடையில் செளமியின் செயலால் போலீஸ் விசாரணை வேறு.

அதனைச் சமாளித்து, மன உளைச்சல் மற்றும் நஷ்ட ஈடு வேண்டுமென புகார் செய்திருந்த திண்டுக்கல் டீலரின் புகாரைத் திரும்பப் பெறச் செய்யும் முயற்சியில் மண்டை காய்ந்து போயிருந்தது செழியனுக்கு.

எல்லாம் தானாகவே இழுத்து வைத்துக் கொண்டது.  யாரிடமும் எதையும் போய் ஆறுதலுக்குக்கூட கூற முடியாத நிலையில் செழியன் இருந்தார்.

தமக்கை தேன்மொழியிடம் மட்டும் தனது நல்ல, கெட்ட பக்கங்களைக் கொட்டித் தீர்த்து… விமோசனம் பெற்றதாக தன்னையே ஏமாற்றிய திருப்தியில் தன்னை மீட்டுக்கொள்ளும் முயற்சியில் இருந்தார் செழியன்.

ரமணன் கவி சௌமியா திருமணத்திற்கு என செலவளித்திருந்த தொகையைப்போல மேலும் ஒரு மடங்கு அதிகத் தொகையை வழங்க வேண்டுமென திண்டுக்கல் சம்பந்த வீட்டார் கேட்டதற்கிணங்க… எவ்வளவோ பேசியும் அதனைக் குறைக்க முடியாமல் நஷ்ட ஈடாக அதனை வழங்கும் பணியில் இடங்களை விற்பதில்… வேறு தொழில்முறையில் வரவிருந்த பணத்தை வசூலிப்பதில்… மும்முரமாக இறங்கியிருந்தார் செழியன்.

அதற்கே நான்கு தினங்கள் ஓடிவிட்டிருந்தது.

கவி சௌமியாவிடம் யாரும் எதுவும் பேசவில்லை.  எல்லாம் எல்லாருக்கும் தெரிந்து போய் ஊரெல்லாம் அதே பேச்சு.

மகளைக் கண்டிக்கக்கூட பயமாக இருந்தது செழியனுக்கு. 

காவல் துறையைச் சார்ந்தவர்கள், “செழியன்… நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க… விசயம் தெரிஞ்சும் இப்படி நீங்க இழுத்து வச்சுக்கிட்டு இருக்கீங்க…

விரும்புன பையனுக்கே பேசி முடிச்சு செட்டில் பண்ணி விடுங்க செழியன்.  நல்ல வேளை எதுவும் ஆகலை.  இல்லைன்னா இன்னும் ரொம்ப பிரச்சனையாகி இருக்கும்.

இதைப்பத்தி பொண்ணுகிட்ட இனி எதுவும் பேசவோ… திட்டிறவோ… வேண்டாம்.  போனது போகட்டும்.  அது உசிரையே இழக்கத் துணிஞ்சிருக்குன்னா நீங்க இனி என்ன செய்யணும்னு மட்டும் யோசிங்க…

சீக்கிரமா ஒரு நல்ல முடிவா எடுங்க…!” என்றதுதான் செழியனின் மனதில் நின்றிருந்தது.

எல்லாவற்றையும் செட்டில் செய்து அமைதியாக அமரட்டும்.  அடுத்து என்ன செய்யலாம் எனக் கூறலாம் என வசமதி நினைத்திருக்க…

கொட்டினால் தனக்கு மரணம் நிச்சயம் என்பது தெரிந்தும் கொட்டி உயிரை விடும் தேளின் அவசரம் செழியனுக்கு…

ப்ருத்வியைச் சந்தித்து அவனுக்கே மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் முயற்சியில் தனியொருவனாகவே முடிவெடுத்து இறங்கியிருந்தார் செழியன்.

ப்ருத்வி கவி சௌமியாவின் காதல் கை கூடியதா?

***

error: Content is protected !!