பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 23

காரிருள் சூழ உடுக்களோடு நிலவும் முளைத்து வானை அலங்கரித்திருந்தது…

மருந்து வீரியத்தில் உறங்கிப் போயிருக்க, மயூரனோ, அவளை எண்ணிக் கவலைக் கொண்டிருந்தான். முதல் முதலாய் அவளைப் பார்த்த கணத்தில் கண்ட வதனமும் இன்று வதங்கியிருக்க, அதற்குத் தானும் ஒரு காரணமென கலங்கிருந்தான்.

செழித்தருந்த அதரங்களும் வாடிப்போயிருந்தது… இலவம்பஞ்சாய் இருக்கும் இருக்கன்னங்களும் நீரைத் தாங்கியிருந்தது… அவளைப் பார்த்துக்கொண்டே அமர்ந்தவனும் ஒரு கணத்தில் உறங்கிப் போனான்.. 

வெகுநேரம் கழித்தே இமைகளைப் பிரித்தவள் தானிருக்கும் சூழலை நினைவிற்கு கொண்டு வந்தாள். கண்களில் கண்ணீர் கொட்ட, வருணை எண்ணி மனம் வலித்தது. 

அவனைத் தேடி வந்தவளுக்கு., அவன் இவ்வுலகில் இல்லாமல் போனது பெரும் ஏமாற்றமே! வருண் தான் தன் வாழ்க்கை என எண்ணியவளுக்கு  அவன் இல்லாத தன் வாழ்க்கை இன்று யாதுமற்ற கிரகமாகவே தோன்றியது,

‘ இனியும் தனக்கு ஒரு வாழ்க்கை உண்டா? ‘ என்ற கேள்விக்குப் பதிளின்றி போக, எழுந்து அமர்ந்தவள் யாரையும் பற்றி எண்ணாமல்  அந்த முடிவை எடுத்தாள். தனது,

இடது கையில் உள்ள வென்ஃப்ளானை கழட்டியவள் மெத்தையிலிருந்து இறங்கினாள்..

அந்த அறையிலே இருக்கும் பால்கனிக்குச் சென்று

கலங்கிய விழிகளைத் துடைத்தவாறு  கீழே பார்த்தவள்.. தன்னைச் சமண் செய்து குதிக்க முயலும் போது அவள் கையைப்பற்றி இழுத்தவன், ஒரு அறை கொடுக்க, சுருண்டு விழுந்தாள்.. 

தனது கை முஷ்டியை இறுக்கியவன், அருகே சுவரில் குத்தினான்.. கன்னத்தில் கை வைத்தவாறு அழுதுக் கொண்டிருந்தாள். 

” மேடம் அப்போ சாக முடிவு பண்ணிட்டீங்க? ம்ம்… இங்க இருந்து குதிச்சா, கைகால் தான் ஃப்ரேக்சர் ஆகும்.. ஹாஸ்பிட்டல் இருக்க மொட்ட மாடிக்குப் போங்க.. விழுந்ததும் ஸ்பாட் ஆவுட் தான்.. ம்ம் போங்க! ”  என்றான் இன்னும் மட்டுப் படாத கோபத்தோடு.. 

விம்மி விம்மி அழுதுக்கொண்டிருந்தாள்.. ” உனக்கு வருண் தான் உலகமா? அவன் இல்லைன்னா உனக்கு யாருமில்லையா? ஏன்டி உன்னோடு சேர்த்து என்னையும் கொல்ற! அவன் உனக்கு அன்பையும் பாசத்தையும் காட்டிருக்கலாம். ஆனா,  உன் மேல அவன் மட்டும் தான்  அதெல்லாம் வைச்சிருக்கான் நினைக்காத!   நாங்களும் இருக்கோம், என் நானும் அதில இருக்கேன். உன்னைத் தேடி வராதது தான் என் தப்பு . ஆனால் உன் மேல நான் வச்ச காதல் உன் வருணை விட அதிகம்.. வருணுடைய இறப்பை உன் கிட்ட சொல்லாதது தப்பு தான்., இதோ இது மாதிரி எதாவது காரியத்தைப் பண்ணிடுவியோன்னு பயம் தான்… ” என  அவன் பேச பேச. அவனுடைய வார்த்தைகள் அவள் நெஞ்சில் பதிய ஆரம்பித்தது.

அவள் அருகில் அமர்ந்தவன். ” ஏன் விஷ்ணு! சாகறது மட்டும் தான் உன் வலிக்கு மருந்தா?  காதலன் போயிட்டா வாழ்க்கையே இல்லைன்னு சாகணும் அப்படித்தானே. அப்படினா வா, நானும் உன் கூட சாகுறேன்.. நீ உன் காதலனுக்காகச் சாவு, நான் என் காதலிக்காகச் சாகுறேன். நீ இல்லாத உலகத்தில நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன்? வா விஷ்ணு! ” என அழைக்க முட்டியில் முகம் புதைத்து அழுதாள்.. 

அவளைச் சமாதானம் செய்ய வார்த்தைகளற்று போனது அவனுக்கு… ” விஷ்ணு! ” அவள் கைப்பற்ற, தட்டிவிட்டாள்.. ” ப்ளீஸ் விஷ்ணு அடம்பிடிக்காத, வா வந்து படு! ” என அவளை எழுப்ப  முயல அவளோ பிடிக் கொடுக்கவில்லை..  வேறு வழியின்றிப் போக அவளைத் தூக்கினான்..  அவளோ திமிர, அதனைப் பொறுப்படுத்தாமல் மெத்தையில் கிடத்தினான். அவள் எழ முயற்சிக்க, இருக்கைகளை அணையிட்டவன் அவளை நெருங்கி, ” இதுக்கு மேல நீ, நான் சொல்லுறத கேட்கல வையேன். அப்புறம் நான் புருசனா நடந்துக்க வேண்டியது வரும்.. உன் கழுதுல நான் கட்டுன்ன தாலி தான் இருக்கு.. அதுக்கான உரிமையை  எடுக்க வேண்டியது வரும்.  ” என்றான். 

அவள் ஏதோ பேச வர வாயில் விரலை வைத்து தடுத்தான்.. நர்ஸை அழைக்க மீண்டும் அவள் கையில் வென்ஃப்ளானை மாட்டிவிட்டுச் சென்றார்.. 

அவள் உறங்காமல் விழித்திருந்தாள்.. வெகு நேரம் சென்றிருந்தது.. அவனுக்குத் துணையாக  இருக்கிறேன் என்று சொன்ன பலராமனையும் அனுப்பி வைத்தான்..  இருவரும் பேசாமலிருக்க அங்கே அமைதி மட்டுமே நிலவியது.. 

” வருணை ஏன் கொன்னாங்க? வருண் எப்படி செத்தான்? எப்படி நீ என்னைத் தேடி வந்த? ” என அவனைப் பாராமல் கேட்க. 

” விஷ்ணு! நீ ரெஸ்ட் எடு! வீட்டுக்குப் போனதும் பேசிக்கலாம்… ” என்றான். 

” எல்லாரும் என்னை ஏமாத்திட்டிங்கல? வருண் இறந்தது கூட தெரியாம என்னைப் பைத்தியகாரி மாதிரி அலைய விட்டிங்கல? நான் என்ன பாவம் பண்ணினேன். ஏன் என்னை ஏமாத்தின மயூ? ஏன் என்னை ஏமாத்தின ? ” என அவன் சட்டையைப் பிடித்து கேட்க, அவன் கண்களும் கலங்கிப் போயிருந்தது.

 ” நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுறேன். ஆனா இப்ப இல்லை. ப்ளீஸ் கொஞ்சம் ரெஸ்ட் எடு டி.. ” என்றான் அவள் கைகளைப் பற்றி, வெடுக்கென அவனிடம் தன் கைகளை இழுத்துக் கொண்டாள்.. 

மீண்டும் அமைதியே சூழ, டாக்டர் வந்து அவளைப் பரிசோதித்து விட்டு அழைத்து போகச் சொன்னார்.. அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்… 

வரும் வழியெல்லாம் அமைதியே நிலவயது.. அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே வந்தான்.. அங்கே விஷ்ணுக்காகவே  காத்திருந்தனர்., வீடுக்கு வந்த, முத்துவும் லட்சுமனன் அவள் மயக்கம் அடைந்ததை மேலோட்டாமாகக் கூறி வைத்திருந்தனர்.

அவள் வந்ததும் அவளைச் சுழ்ந்து அக்கறையாக விசாரித்தனர். அவர்களைக் காணும் போது தான் நினைத்தது தவறோ என்றிருந்தது.. அவள் முகத்தை ஏந்திய சகுவோ, ”  விஷ்ணு பேட்டா! இனி உன்னைக் கவனிச்சுகிறத விட வேற வேலை இல்லை எனக்கு… உனக்கு நாங்க இருக்கோம். உனக்கு இங்க என்ன குறையோ அதை சொல்லுமா? உள்ளுக்குள்ளே வச்சு கஷ்டபடாத… உன் பாட்டி இந்தச் சகு இருக்கேன். எதையும் நினைச்சு வருந்தாத.. ” என்றவர் அவளை உச்சி முகர்ந்தார்., அனைவரும் அக்கறையாய்  பேச  அவளோ ஆடிப்போனாள்.

அவளை அழைத்துக் கொண்டு அவன் அறைக்கு வந்தான் இருவரும் மட்டுமே இருந்தனர்.. 

அவள் உடல் நடுக்கம் கொண்டிருந்தது, அவள் பயப்பிடுவது அப்பட்டமாகத் தெரிய, ” விஷ்ணு! இங்க நீ எப்பையும் போல இருக்கலாம்.. நான் இன்னைக்குச் சொன்னது கூட உன்னை அமைதி படுத்ததான்.. நீ பயப்பிடாம ரெஸ்ட் எடு! ” என்றான்.. 

” என்னால முடியல மயூரன். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு! என்னை உனக்கு முன்னாடியே எப்படி தெரியும்? வருண் என்னைக் காதலிக்கிறது எப்படி உனக்கு தெரியும்? எப்படி நீ எங்க ஊர்க்கு வந்த ப்ளீஸ் சொல்லு மயூரன்.. ” எனவும் வேற வழியின்றிச் சொல்ல முயன்றான். 

அவளை அழைத்துக் கொண்டு தனது அறையில் இருக்கும் அவனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே ஒரு பக்க சுவரு முழுக்க விஷ்ணுவின் புகைப்படமே இருந்தது… அவளது சிறு வயது முதல் தற்போதைய வயது வரையில் அவளுடைய புகைப்படம் சுவரில் மாட்டிருக்க, அதிர்ந்துப் போனாள்.

” நீ தான் என் உலகம் அப்ப எனக்கு தெரியல விஷ்ணு! ஆனா, எப்போ என் அம்மா இவ தான் உன்னைக் கட்டிக்கப் போறவ கடைசி வரைக்கும் உன் கூட வாழப்போறவன்னு சொன்ன நேரம்  நான் உணர்ந்தேன் நீ தான் என் உலகம்..  ” என்றவன் உண்மையைக் கூறினான்.

வைகுண்டம்  வாசுதேவ கிருஷ்ணனும் பாலிய சினேகிதர்கள்… ருக்குவின் அண்ணன் தான் வைகுண்டம். ருக்குவை மணம் முடிக்கும் வரைக்கும் செல்வந்தராக இருந்த வைகுண்டம், தன் தந்தையின் இறப்பிக்குப் பின் உறவுக்காரர்களின் சூழ்ச்சியால் அனைத்து சொத்தையும் இழந்தார்.. தன் தாயுடன் தனித்து விடப்பட்டார் வைகுண்டம்.. அவரை அரவணைக்க எண்ணிய வாசுதேவரோ, தன் தங்கையைக் கட்டிக்கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கச் சொல்ல, வைகுண்டத்திற்கு தான் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. தன் தாயை அழைத்துக்கொண்டு மும்பைக்குச் செல்ல, அங்கே சகுந்தாலா தந்தையின்  அரவணைப்பால் தொழிலைக் கற்று அதில் முன்னேற்றமும் கண்டார். சகுந்தாலாவின் தந்தை, வைகுண்டத்தைத் தன் மருமகனாக்க முடிவு செய்தார்.. தன் தாயின் சம்மத்தோடு சகுந்தலாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இருவருமாக சொந்தம் ஊருக்குச் செல்ல, வாசுதேவ கிருஷ்ணருக்கோ, தன் நண்பன் வைக்குண்டத்தின் மீது அளவுக்கடந்த கோபம்.. தன் தங்கையைக் கட்டாமல் வேறு மொழிப் பேசும் பெண்ணைத் திருமணம் செய்து வந்ததால். அவருக்குத் திருமணம் முடிந்ததை அறிந்துக்கொண்ட வைகுண்டத்தின் தங்கையோ  ஒருபக்கம் சந்தோசம் கொண்டாலும், தன் கணவரை எண்ணிக் கலங்கினார்.. வாசுதேவரின் தங்கை கற்பகமோ, வைகுண்டத்தின் மேல் காதல் கொண்டிருக்க, இந்த விசயத்தைக் கேட்டு தற்கொலைச் செய்துக்கொண்டார்… 

அதனால் ஆத்திரம் கொண்ட வாசுதேவரோ வைகுண்டத்தோடு சண்டையிட இரண்டு குடும்பமும் பிரிந்தது… 

அவரும் மும்பைக்குச் சென்றார்.,  இருந்தும் தன் சொந்த ஊரில் நிலங்களையும் வாங்கிப் போட்டார் தன் தாயின் கட்டளைக்கு இணங்க. அவர் இறந்த பின், தன் சொந்த ஊரில் தான் தன்னை எரிக்கணும் என்று கூற, அது போல் இறந்தப்பிறகும்  சொந்த ஊருக்குக் கொண்டு வந்தார். ருக்குவைத் தனது தாயைக்கூட பார்க்க விடாமல் செய்தார் வாசுதேவர்.. அதன் பின் வருடம் வருடம் தாயின் நினைவு நாளில் வைகுண்டம் வரும் போதெல்லாம் தெரியாமல் தெரியாமல் ருக்கு, அவரைப் பார்க்க வருவார்  அப்போது தன் மகள் முத்துவையும் அழைத்துச்செல்வார், வைகுண்டம் தன் மருமகள் என கொஞ்சுவார்.. 

முத்துவின் சடங்குக்கு கூட அவரை அழைக்கவில்லை.,  ஆனால் அவரும் வீடு வாசல் வரை வந்து முறைச் செய்துவிட்டுப் போனார்.. 

மும்பையில் ஆங்காங்கே கிளைகளையும்  திறந்தார் வைகுண்டம்..  ஊரில் இடப்பிரச்சனை  வர தனது இரண்டாவது மகனை ஊர்க்கு அழைத்து வரும் போதெல்லாம் ருக்குவும் வந்து பார்ப்பார். அப்போது தான் முத்துலட்சுமியின் மேல் காதல் கொண்டார் லட்சுணன்.. ஒருநாள் நேரடியாகவே முத்துவிடம் கேட்க பயந்து ஓடியே போயிவிட்டார்.. வயது பெண்ணை வீட்டில் வைக்கக் கூடாது என்று தனது மூத்த தங்கையின் மகனைக் கட்டிக்கொடுக்க வாசுதேவர் எண்ண, அவருக்கு லட்சுமணனைத் தான் பிடித்திருந்தது. அவரோடு காதல் திருமணம் செய்துக்கொள்ள, மேலும் வாக்கு வாதம் சண்டை இனி சேரக்கூடாது அளவில் இரு குடும்பங்களிடையே  பிளவு ஏற்பட்டது.. 

முத்துவிற்கு தைரியம்  கொடுத்து திருமணம் செய்யச் சொன்னதே பலராமன் தான். அந்தக் குடும்பத்திலே பாசக்காரர் என்றார் அவர் மட்டுமே! தன் தங்கையின் வாழ்க்கையை எண்ணியவர் அவரை வாசுதேவருக்குத் தெரியாமலே அனுப்பிவைத்தார்.. 

அதன்பின் அர்ஜூனின் பிறப்பென வீட்டில் நடக்கும் அனைத்தையும் கூறி  தனது தங்கைக்குக் கடிதம் எழுதுவது வழக்கம்., இங்கு நடக்கும் யாவையும் எழுதி அனுப்ப, அவரும் எழுதி தனது கணவர் மூலமாக கொடுத்து அனுப்புவார்., இப்படியே இருவரும் இரு மீசை தாத்தாவிற்குத் தெரியாமல் பேசிக்கொள்வார்கள்.. 

தனக்கு மகன் பிறந்து பெயர் வைத்ததையும் கூறியிருந்தார் முத்து… அதன் பின் அவனது புகைப்படத்தையும் அனுப்பி வைப்பார்.. தனக்கு கல்யாணம்  என்பதையும் எழுதி அனுப்பினார்.. 

 

இவ்வாறு கடிதங்கள் வழியே அனைத்து விசயங்களையும் விஷேசங்களையும்  இருவரும் அறிந்துக்கொண்டனர். மயூரனுக்கு இரண்டு வயது இருக்கும் போது தான் விஷ்ணுப்பிரியா பிறந்தாள். சசிகலா கருவுற்றபோதே பெண் குழந்தைப் பிறந்தால் மயூரனுக்கென்றே முடிவு செய்தனர் பலராமனும் முத்துவும் யாரு எதிர்த்தாலும் இந்தக் கல்யாணம்  நடக்கும் இருவருக்குத்தான் இருவர் என பேசி முடிவு செய்தனர்.. விஷ்ணுப் பிறந்த போது புகைப்படத்தை மயூரனுக்கு காட்டவே அழகாய் ”  பாப்பா ” என்று முத்தமிட்டான்.,

மயூரனும் வளரே விஷ்ணுவும் வளர்ந்தாள்.. பலராமன் அனுப்பிய விஷ்ணுவின் புகைப்படத்தைக் மயூரனிடம் காட்டுவார் முத்து. அவனும் அதைப் பொக்கிஷம் போல பார்த்துக்கொள்வான். ஆனால், பலராமனோ மயூரனின் புகைப்படத்தைக்  விஷ்ணுவிடம் காட்டவில்லை, அவருக்குள்  பயம் உலறி வைத்திடுவாளோ என்று. விஷ்ணு வாயாடி. மயூரனோ தாயின் சொல் பேச்சு கேட்டு நடப்பவன்… 

இவ்வாறு மயூரனின் காதல் ஆசை அவனோடு வளர, அவளது பதின்பருவத்தில்  பெரிய மனுசியாய் ஆன போது எடுத்த புகைப்படத்தைக் காட்டும் போது மயூரனுக்குள் மாற்றங்கள் தோன்ற அவளைக் கண்ட பின்னே தானும் வயதுக்கு வந்ததை  நினைவுற்றான்,. அவனோடு வளர்ந்த காதலும் அப்போது தான் அவனுக்குப் புலப்பட ஆரம்பித்தது.. 

பலராமனோ, விஷ்ணுவிடம் மயூரனைப் பற்றி பேசு எண்ணியிருந்தார். அதனைத் தன் தங்கையிடம் கூட மயூரனோ வேண்டாம் அவள் படிக்கட்டும் படித்து முடித்தப் பின் நானே பேசி சம்மதம் வாங்கிக் கொள்கிறேன் என்றான்.. 

அவரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. அவள் கல்லூரிக்குச் செல்ல. அங்கே வருணைக் காதலிக்க ஆரம்பித்தாள். இதை அறியதா பலராமனோ தன் தங்கை மகனோடு மகளை இணைத்து பெரும் கோட்டையைக் கட்டிவைத்தார்.. 

மயூரன் அவள் மேல் பைத்தியமானான்… அவளை ஒரீரு முறைக்கு கூட சென்னையில் பார்த்திருக்கிறான். ஆனால் பேசிக்க வில்லை, அவள் படிக்கிறாள் என்பதால் தொந்தரவு செய்யவில்லை… ஆனால் அவள் படிக்கவில்லை காதலிக்க தான் கல்லூரிக்குச் சென்றிருக்கிறாள் என்று அறியவில்லை.. 

அவள் படிப்பை முடிய, பலராம், முத்துவிடம் சம்பந்தத்தைப் பேச, வாசுதேவரோ தனது கடைசி தங்கையின் கடைசி மகனை விஷ்ணுவிற்குக் கேட்டார்… விஷ்ணுவோ காதல் வயப்பட்டிருக்க

மூவரும் மூன்றுவிதமான முடிவுகளில் இருந்தனர்..