கொள்ளை 33
தன் தந்தையை எதிர்த்துப் பேசினது மட்டும் இல்லாமல், கெளரவத்திற்காக குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் பறித்து விடுவார் என்ற விதையையும் தன் குடும்ப மக்களின் மனதில் விதைத்து விட்டு, தன் குடும்பத்தை மட்டும்அழைத்துச் சென்று விட்டார்.
வாசு தேவ் கிருஷ்ணனை அங்கிருப்போரின் மனங்களும் எதிர்க்க ஆரம்பித்தது.
வாசுதேவ் கிருஷ்ணனுக்கு முகத்தில் எள்ளு வெடித்தது.. தன்னைப் பேசினதும் இல்லாமல் வீட்டில் உள்ளோரையும் தனக்கு எதிரே திருப்பி விட்டுச் சென்றதை எண்ணி பலராமன் மேல் கோபம் வந்ததே ஒழிய, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் வரவே இல்லை. சீக்கிரம் திருந்தி விட்டால், தன் கெளரவம் என்னாவது. அதனால் வீட்டிற்குச் செல்லாமல் தோட்டத்திற்குச் சென்று விட்டார்.. மகிழ்ச்சியை இழந்து இருந்தது அந்த வீடு.
வெளிய வந்த நால்வரும், மீண்டும் மதுரைக்குச் சென்றனர் . என்ன தான் தன் பிறந்த வீட்டை விட்டு வந்தது ஒரு பக்கம் வேதனையைத் தந்தாலும், விஷ்ணு சென்ற பின்,. அவர்கள் கேட்ட ஏகபோக பேச்சுக்களும், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் உயிரைப் பறித்துக்கொண்டுருந்தது. அதுவும் மீசையே அச்செயலைச் செய்தார். இன்று அங்கிருந்து வெளியே வந்ததே பெரும் நிம்மதி…
நால்வரும் அமைதியின் பிடியில் இருந்தனர். அதனைக் கலைத்தார் பலராமன்.
” உங்களுக்கு என் மேல கோபம் இருக்கலாம், என்னடா இவன் நம்ம கிட்ட ஒருவார்த்தைக் கூட கேட்காம இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கான்னு.ஏன் உங்களுக்குத் தோணும், வசதியா வாழ்ந்த நம்மல இப்படி கஷ்ட படுத்த போறானேன்னு. ஆனா, எனக்கு இதைத் தவிர வழித் தெரியல. அப்பாக்கு, அவரோட கெளரவத்தை விட, குடும்பம் தான் முக்கியம் எண்ண வைக்க தான் இந்த முடிவு. என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க” என்றதும் மூவரும் பதறினார்கள்.
” என்னங்க, நீங்க எங்கிட்ட போய் மன்னிப்பு கேக்குறீங்க? நீங்க பண்ணினது சரி தான். சொர்க்கமா இருந்தாலும் அங்க நிம்மதி இல்லைனா அது சொர்க்கமே இல்லைங்க . சின்ன பையன்னு கூட பார்க்காம இவனையும் குத்திக் காட்டிப் பேசி, கேட்கக் கூடாது வார்த்தைக எல்லாம் கேட்டு நொந்துட்டேன் ங்க, இப்ப தான் என்னால மூச்சே விட முடியுது. நாங்க யாரும் உங்களைத் தப்ப நினைக்கலங்க… நீங்க கவலைப் படாதீங்க..” தன் கணவனை தேற்றினார் சசிகலா.
“நான் மட்டும் போகாம இருந்திருந்தா, உங்களுக்கு இந்த நிலைமை வந்துருக்காதுல மா, பாவம் என்னால இவனும் அவர் வாயில வேண்டியாத போச்சு சாரிமா, சாரிடா…” அவளும் கண்ணீர் சிந்த,
” என்னக்கா பேசுற நீ, இந்தப் பேச்சை எல்லாம் நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டேன்… எனக்கு அது பெருசா தெரில அக்கா. ஆனா, நீ இங்க இருந்தா அந்த கெடா மீசைக்கு உன்னைக் கட்டிக் கொடுத்து உன்னையும் மகா அக்கா போல ஆகிருப்பார் அந்த மீசை.. விடுக்கா, இப்பதான் அம்மா சொன்னது போல ரிலிஃப் இருக்கு. ஆனா, ஒண்ணும் மட்டும் தான் எனக்கு புரியவே இல்லை ” என்றவன் பீடிகைப் போட்டான்..
“என்னடா புரியலை உனக்கு? ”
“இல்லக்கா, நம்ம அப்பா மீசைக்கு எங்க இருந்து இவ்வளவு தைரியம் வந்தது?!. அதுவும் அந்தப் பெரிய மீசையை எதிர்த்து பேச, எங்க இருந்து கட்ஸ் வந்துச்சு? திடீர்னு என்ன ஒரு ஞானோதயம்? அதான் புரியலை அக்கா” என்றான் தந்தையின் திடீர் வீரத்தைப் பார்த்து..
தன் கணவனைப் பேசியதும் சிறு கோபம் சசிகலாவிடம் எட்டிப்பார்த்தது,
” டேய் என்னடா, அப்பாவ போய் மீசை அது இதுன்னு. அப்பா ன்னு கூப்பிடுடா. அப்றம் என்ன உனக்குப் புரியல, அவர் நமக்காக தான் பேசிருக்கார். அவருக்குப் பாசம் இல்லமா இல்லை.ஆனா, அப்பா மேல கொஞ்சம் பயம் , மரியாதை. அது ஒண்ணும் தப்பில்லையே.. இனிமே அவரை ஏதாவது சொல்லு, பிடிச்சு தள்ளி விட்டுருவேன் பார்த்துக்க…” தன் மகனை எச்சரிக்கை
செய்ய, அவரைக் காதலாய் பார்த்தார் பலராமன்..
சாரதி கண்ணைக் காட்ட, விஷ்ணு நமட்டுச்சிரிப்பு சிரித்தாள். அப்போது தான் புரிந்தது அதிகமாக அதுவும் கணவனுக்கு ஆதரவாகப் பேசியது, இருவரையும் பார்த்தவர் தன் கணவனைப் பார்க்க, அதில் வழிந்த காதலைக் கண்டதும் வெட்கம் கொண்டார்.. அவரை தன்னோடு அணைத்துக் கொண்டார் பலராமன் கொஞ்சம் நெளிந்தவர், அதன் பின் அடைக்களமென ஆனார்…
அதை இருவரும் ரசிக்காமல் இல்லை, இருந்தும் கேலியும் கிண்டலும் செய்து அவர்களை ஒருவழியாக்கி விட்டனர்.
மதுரை வந்தடைய, சசிகலாவின் அண்ணனும் பலராமனின் நண்பாருமான வீரலிங்கம் வீட்டிற்கு வந்தனர். அவர்களை வரவேற்றனர்..
நடந்தவைகளை எல்லாம் அசைப்போட்டு விட்டு, அங்கேயே மதிய உணவையும் முடித்து விட்டு, ஓய்வு எடுக்க, தன் நண்பனை அழைத்துக்கு கொண்டு வெளியே சென்றார் பலராமன்..
ருக்கு மட்டும் புலம்பிக் கொண்டிருக்க மற்றுவர்கள் அமைதி மாநாட்டில் இருந்தனர்..
சாப்பிட வந்தார் பெரிய மீசை, அவிழ்க மேசையில் அமர, எப்பயும் உடன் அமரும் மகன்களும் பேரனும் இல்லாமல் போக,
ருக்குவிடம்,” எங்க யாரையும் காணோம்? எனக்கு முன்னாடியே சாப்பிட்டாங்களா என்ன?” எனக் கேலியாக கேட்டாலும், உள்ளுக்குள் அச்சம்,பலராமனைப் போல இவர்களும் தன்னை மதிக்காமல் போயிடுவார்களோ என்று..
” என்னைக்குங்க, அவங்க உங்களுக்கு முன்னாடியே சாப்டுருக்காங்க, இன்னைக்கு சாப்பிட, என்ன நடந்தாலும் எதுவும் மாறாதுங்க? ” பொடி வச்சு பேசும் தன் மனையாளைப் பார்க்க, ” அதாங்க, உங்க மேல அவங்க வச்ச மரியாதையைச் சொன்னேன்.. இன்னக்கி நடந்த பிரச்சனையால எல்லாரும் சாப்பாடு வேணாம் மறுத்துட்டாங்க,” என்றதும் அமைதியாக சோற்றைப் பிசைந்தார். “விடுங்க நீங்க சாப்பிடுங்க” மேலும் மேலும் பறிமாறினார், வாய்க்குள் சோறு எளிதில் இறங்கினாலும் தொண்டைக் குழியில் இறங்க மறுக்க, பாதிலே கை கழுவி விட்டு எழுந்தார். ருக்குவும் ஏதும் சொல்ல வில்லை, ‘ இனியாவது, இங்கு இருப்பவர்களின் மனதைப் புரிய முயற்சி பண்ணட்டும் ‘ என்று அவரும் தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்..
அதே நிலைமை தான் மும்பையிலும். விஷ்ணுவின்
கலகலப்பான பேச்சுன்றி, அமைதியாக அவரவர் வேலைகள் செய்வதில் கழிந்தது.. முகத்தில் சிரிப்பில்லை, ஒரு உணர்வின்றி இருந்தனர். இது தான் அங்கிருப்போரின் நிலை, அதையெல்லாம் வைகுண்டம் கவனிக்காமல் இல்லை, அதைப் பற்றி சிந்திக்காமலும் இல்லை. அங்கே மயூரனும் இயந்திரத்தைப் போலவே இருந்தான்..
பிரிந்த ஒரு நாளும், அவனுக்கு யுகமென ஆனது, நாட்காட்டிகள், எதிரியென ஆகின, மெத்தையும் கடன்காரனென ஆனது, நொடிக்கு ஒரு முறை அவளைக் கேட்டு நச்சரித்தது.. வீடெங்கும் அவள் நினைவுகள் அவனைப் பாடாய் படுத்தியது.. அனைவரையும் தவிர்த்தான், தன் அன்னை முதற்கொண்டு யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை… அவனிடம் யாராவது ஏதாவது கேட்டால் அழுது கத்தி விஷ்ணு வேணும் என்பான் அதற்காவே யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை..
காரிருளைப் போர்வையாய் போர்த்திக் காவலுக்கு நிலவையும் எண்ணற்ற, நட்சத்திரங்களையும் வைத்து விட்டு உறங்கச் சென்றது.
மாடியில் நால்வரும் உறங்காமல் பேசிக்கொண்டு இருந்தனர்..
” ஏங்க, இங்கயே எத்தனை நாள் தங்க, அண்ணனா இருந்தாலும் கொஞ்ச நாள் இருக்கலாம் அதுக்கு மேல, சீக்கிரம் வேற வீடு பாருங்க, காசு தேவைப் பட்டால் சொல்லுங்க, நான் என் செயினை தரேன் அதை வச்சு அட்வான்ஸ் கொடுக்க, இதர ஜமானுக்கு, சாப்பாட்டுக்கு எல்லாத்துக்கும் பார்த்துக்கலாம் அப்றம்…” என்று சொல்லும் போதே அவர் இடைவெட்டியவர் ” சசிமா, நான் இந்த முடிவு எடுக்கும் போதே எல்லாத்தையும் யோசிச்சுட்டு தான் எடுத்தேன். அதுக்கான வேலையும் ஆரம்பிச்சுட்டேன், நாளைக்குப் புதுவீட்டுக்குப் போறோம்.. தேவையானதெல்லாம் உன் அண்ணன்னும் நானும் வாங்கிட்டோம். அப்றம் நாளாக்கே நாம பால் காய்ச்ச போறோம்… ” என்று கூறி அதிர்ச்சியைத் தந்தார்..
” சரிப்பா,இந்த மாசம் ஓட்டிருவோம், அடுத்த மாசம்… என்னப்பா பண்ணா, நான் வேணா வேலைக்குப் போகவா?” எனவும்
அவளைக் கண்டு, முறுவலித்தவர், ” விஷ்ணுமா, அப்பாத்தான் சொல்லுறேன் ல, எல்லாத்தையும் யோசிச்சுட்டு தான் இந்த முடிவுன்னு. அப்பா, வேலைக்குப் போக போறேன்.” அடுத்த அதிர்ச்சியைக் கொடுக்க,
” அப்பா, வேலைக்கா? என்ன வேலைக்கு, இந்த வயசுல வேணாம்பா, நான் போறேன் இதோ இவனும் ஏதாவது வேலைக்கு போய்கிட்டே எம் . பி. ஏ படிக்கட்டும், நீங்க போக வேணாம்பா…” அவள் தன் தந்தையின் உடல் நிலையைக் குறித்து பயம் கொள்ள,
” விஷ்ணுமா, நீ பயப்படுற மாதிரி அப்பா, கஷ்டமான வேலைக்கு போகல, அப்பா, கல்லூரில
தமிழ் ஆசிரியரா வேலை பார்க்க போறேன்.. என் நண்பன் கிட்ட வேலை இருக்கான்னு கேட்டேன், அவன் தான்****** கல்லூரி, முதல்வராக இருக்கான். பிரச்சனையை சொன்னேன் வாடான்னு சொல்லிட்டான்.. ரொம்ப நாள் கழிச்சு கிளாஸ் எடுக்க போறேன்…” ஒரு வித வெட்க புன்னையில் கூற, அவரைப் பிடித்துக் கொண்டனர்.
பலராமன் தான் அங்கு முதல் பட்டதாரி, அதுவும் தமிழில் பிகேச்டி முடித்தவர், அதன் பின் பரதன் பலராமனின் தம்பி, பி.எஸ்சியோடு முடித்துக் கொண்டார்.. திருமணம் ஆகும் வரை கல்லூரியில் பணிபுரிந்தார். அதன் பின் தந்தையுடன் தொழிலில் இறங்கி விட்டார்… விவசாயமே அக்குடும்பத்தின் முதுகெலும்பு, தோப்பு துறவு என அனைத்தும் இருக்க, பத்து தலைமுறைக்கு உக்காந்து தின்னும் அளவுக்கு சொத்து பத்து இருக்கிறது. அதனால், வேலைக்குச் செல்ல வேண்டாம் மறுத்து விட்டார் வாசு..
இப்போது மீண்டும் போவது அவருக்கு பெரும் சந்தோசம் தான்…அவருக்கு மட்டும் அல்ல, சசிக்கும், விஷ்ணுவுக்கும், சாரதிக்கும் தான்.
” ஹேய், வாத்தி இஸ் பேக்..” என இருவரும் ஹைபை போட்டுகொண்டனர்… ” ஆனா, அப்பா நானும் வேலைக்குப் போவேன். என்னால வீட்டில சும்மா இருக்க முடியாது நானும் போறேன்” என்றதும் அவர் எதுவும் யோசிக்க வில்லை,” சரிடா, போயிட்டு வா” என்றதும் அவர் மடியில் படுத்துக் கொண்டாள்.. அன்னை மடியில் சாரதி படுத்துக் கொண்டான்.
இதை தானே அவர்கள் எதிர் பார்த்து… மாட மாளிகையாக இருந்தாலும் அன்பு, பாசம் , பரிவு,இல்லை என்றால் அது பாழுங்கிணறு தான்.
இருவரும் உறங்கி இருக்க, ” ஏங்க, விஷ்ணுவைப் பத்தி என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?”
” ம்ம் , கொஞ்ச நாள் நம்ம கூடயே இருக்கட்டும். மாப்பிள்ளை விஷ்ணுவ ரொம்ப காதலுக்கிறார், கண்டிப்பா அவர் விஷ்ணுவா, அப்படியே விட மாட்டார்.. நீ அவளை நினைச்சு கவலைப் பாடாத சசி.. அவகிட்ட எதையும் கேட்டும் வைக்காத, அவ நிம்மதியா இருக்கட்டும்..” என்றார் அதுவும் சரியான பட தலையசைத்தார்..
மறுநாள், நல்ல நேரம் பார்த்து பாலைக் காட்சினார்கள், இரண்டு அறை ஒரு ஹால், அதிலே பூஜை அறை என லட்சணமாக இருந்தது அந்த வீடு.
குடும்பமாக அனைவரும் கடவுளை வழிபாட்டனர். சசியும்,விஷ்ணுவின் அத்தையும் தாலியில் குங்குமம் வைக்க, அதைக் கண்டவுளுக்கோ ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலியே ஞாபகம் வந்தது. நெஞ்சைத் தொட்டுப்பார்த்துக் கொண்டாள்.
மாமா, குடும்பத்தோடும் நேரத்தைச் செலவிட்டாள்.. இங்கோ வேலைக்கு வந்த மயூரனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. அப்துலும் பலமுறைக் கேட்டுப் பார்த்து விட்டான் பதில் இல்லை.. மேத்தாவும் அவனை அழைத்து கேட்க, அனைத்தையும் மடைத்திறந்த வெள்ளம் போல் கொட்டித் தீர்த்தான்..
” அட துரோகி இவ்வளவு நடந்துருக்கு எங்க கிட்ட ஒருவார்த்தை சொன்னியாடா, அயோக்கிய பயலே! ” அப்துல் அவனைத் திட்ட மேத்தா சிரித்து விட்டார், ” சிரிக்காதிங்க மேத்தா இவனைப் பார்த்தா கோபம் தான் வருது, ஒரு விஷயமாவது சொன்னானா இவன்… இதுல நண்பன்னு மட்டும் சொல்லிக்கிறான்..” மேலும் அவனைக் கடிந்தான்.
” சரி விடு அப்துல், இப்ப நாம தான் அவனுக்குத் துணையா இருக்கணும், ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு மொத்தமா நாம பைசல் பண்ணலாம், இப்ப நீ அமைதியா இரு… நீ சொல்லு மயூ, உனக்கு விஷ்ணு வேணுமா? ” என்றதும் சிறு பிள்ளைய போல ஆட்டி வைத்தான் தலையை, ” அப்றம் ஏன்டா, இன்னும் இங்க இருக்க? போடா போய் அவள போய் பாரு உன் காதலைப் புரிய வை.. இங்கே உக்காந்து நீ பீல் பண்ணிட்டு இருந்தா, உன்னை அவ மறந்திடுவா, நீ தான் உன் காதலைப் புரியவைக்கணும் அவளுக்கு. அவளை தேடிப் போ,” என்றார்..
“வாரணம் ஆயிரம், படத்துல சூர்யா அமெரிக்கா போவார்ல அது போல, நீயும் மதுரைக்குப் போற. அவங்கல லவ் பண்ணா மட்டும் போதாது. அவங்க கிடைக்க, முயற்சியும் செய்யணும். இங்க இருந்துட்டே அவங்க பெயரை சொன்னா வந்திடுவங்களா? இந்த ரெண்டு நாளை நீ வேஸ்ட் பண்ணிட்ட, இன்னும் நாளைக் கடத்தாம, சீக்கிரமே மூட்டை முடிச்சோட அங்க போய்ட்டு” என்றான்.
” சரிடா, ஆனா தாத்தா….” என அவனிழுக்க, ” அடேங்கப்பா, தாத்தா கிட்ட கேட்டுத்தான் லவ் பண்ணிங்களா சார்? அவரைக் கேட்டுத்தான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திங்களா? ஆனாலும் தாத்தா சொல்லை தட்டாத பிள்ளை பாரு நீ, போடாங்கு…” நாக்கைத் துறுத்திக் காம்பித்தான்
” எல்லாம் என் நேரம் டா, பிள்ளை பூச்சிக் கிட்ட எல்லாம் அட்வைஸ் கேக்கணும் தலையெழுத்து…” என்றான்
பல்லைக் கடித்துக் கொண்டு.
” இந்த நிலைக்கு வந்தது நீ தானே டா. இங்க பாரு நீ என்ன கடைசி வரைக்கும் உங்க தாத்தா கூடயா வாழ போற? அவரை அப்றம் பார்த்துக்கலாம், இப்ப உன் எண்ணம் முழுக்க, விஷ்ணு தான் இருக்கணும். இங்க என்ன சொல்லுது விஷ்ணு விஷ்ணு சொல்லுதா, போடா போய் அவ, மனச மாத்திக் கூட்டிட்டு, வந்து வாழ வழிய பாரு.. ” என்றார் .
” ஆனா, வேலை… நான் போய்ட்டா என் வேலையை யாரு பார்ப்பா? ” என்றதும் அப்துலுக்கு கோபம் வர, ” இருந்த மட்டும் நீ பார்த்து கிழிச்சிடுவ, பார்த்தோமே இந்த ரெண்டுநாள் நீ பார்த்த வேலையை.. அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” மீண்டும் அவனைக் கேலிச் செய்ய அவனை வெறியாய் பார்த்தான் மயூ ” டேய், உங்க அழும்புகளை நிறுத்துங்கடா, இங்க பாரு மயூ, நீ மதுரைக்குப் போ, அங்க, நீ நியூஸ் சேனல், அல்லது நாளிதழில் வேலைப் பார்க்க நினைக்கிறீயோ சொல்லு. நான் உனக்கு வேலை வாங்கி தரேன் நீ தைரியமா போ.. ஆல் தி பெஸ்ட்” என்றதும் அவனுக்குச் சந்தோஷம் தாளவில்லை.. அவரைக் கட்டியணைத்து முத்தம் இட்டான். தந்தையாய், வேலை சேர்ந்த நாள் முதல் இன்றுவரை அவனுக்குத் துணையாக இருந்தவர் இதற்கு உதவ மாட்டாரா? ஒரு முடிவு எடுத்தவனாய் அங்கிருந்து இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
அதே சந்தோஷத்தோடு இல்லம் வந்தவன், அங்கே வைகுண்டத்தைப் பார்த்ததும் அமைதியாக மாடி ஏற, அவனது பெயரைச் சொல்லி அழைத்தார்.. அவனும் அதிர்ச்சி மாறாமல் அவர் முன் நிற்க, அவனை அருகில் அமரச்சொன்னார்.
” எனக்கு மரியாதை கிடைக்கும் எதிர் பார்த்தது உண்மை தான். ஆனா அது, உங்க சந்தோஷத்தைப் பறிச்சுட்டு தான் கிடைக்கணும் இல்ல… எனக்கு இங்க இருக்கிறவங்க சந்தோசம், நிம்மதி தான் முக்கியம், நீயும் என் பேரன் தான்டா, உன் சந்தோஷத்தை விட, வேற எனக்கு எதுவும் பெருசு இல்லை .போ போய் என் பேத்திய, அவ விருப்பத்தோடு இங்க கூட்டிட்டு வா, இந்தக் குடும்பதோட, சந்தோசம் அவ தான். நீ போறியா இல்ல நானும் வரணுமா?” என்றதும் அவரைக் கட்டிக் கொண்டான், ” தாத்தா…” அதற்கு மேல் வார்த்தைகள் வாராமல்,அவர் நெஞ்சில் சாய்ந்து விசும்பினான்.
” குழந்தை மாதிரி அழாம, அடுத்து என்ன பண்ணலாம் யோசி. எப்படி என் பேத்தியா கூட்டிட்டு வரணும் யோசிடா பேரா?” எனவும் மேத்தா சொன்னதைச் சொல்ல, அதற்கு பின் அங்கே மறுப்பே இல்லை
அனைவரின் ஆசிர்வாதத்தோடு மதுரை வந்தவன், பலராமனிடம் அனைத்தையும் சொல்லி அவரிடம் விவரம் கேட்க, அவரும் மகிழ்ச்சியடைந்தவர், தன் பக்கத்து வீட்டிலே தங்கிக் கொள்ள சொன்னவர், விஷ்ணு வேலைப் பார்க்கும், அந்த நாளிதழின் பெயரையும் சொல்ல, அவனும் மேத்தாவின் உதவியோடு அங்கு சேர்ந்தான்.
ஒரே நாளில் அத்தனையும் நிகழ்ந்தது, இதை சசியிடம் மட்டுமே அவர் பகிர்ந்தார். மறுநாள் சம்பிரதாயப் படி, பாலைக் காட்சினார்கள் விஷ்ணு எழும் முன்னே.
” ரொம்ப சந்தோஷமா இருக்கு மாப்ள, நீங்க விஷ்னுவைத் தேடி வருவீங்கன்னு நான் எதிர் பார்க்கல. என் பொண்ணு வாழக்கை நினைச்சு கொஞ்சம் இருந்த கவலையும் போயிருச்சு, நன்றி மாப்ள” கைக்கூப்பி வணங்க, அவர் கரம் பற்றியவன் ” மாமா, அவன் என் மனைவி.. அவ என் உயிர், யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். இனி இங்க இருக்க பிரச்சனை, எல்லாத்தையும் தீர்த்து, ரெண்டு குடும்பத்தையும் சேர்த்து வச்சு, முறைப்படி எல்லாருடைய ஆசிர்வாதத்தோடு எங்க கல்யாணம் நடக்கும். நீங்க தைரியமா இருங்க, நான் பார்த்துக்கிறேன்… “அவர் இரு கரத்தையும் பற்றி நம்பிக்கை ஊட்டினான்..
காலைக் கடன்களை முடித்தவள் தன் தாயைத் தேட, வெளியே இருந்து டம்ளரோடு வந்தார்.. ” மா, டீ” என வந்தவளின் கையில் திணித்தார் அதை.
” மா, என்னது இது?”
” பார்த்தா தெரியல, பால் டி” என்றார்..
” பாலுன்னு எனக்குத் தெரியாதா? என்ன வெறும் பாலா இருக்கு” என்றதும், ” இப்பதான் டி காய்ச்சி எடுத்து வந்தேன்” எனவும் அவரை முறைத்தவள் ” மா, பாலைக் காய்ச்சி தான் மா தருவாங்க. நான் அதைக் கேக்கல, ஹார்லிக்ஸ், பூஸ்ட் இல்லையா, வெறும் பாலை எப்படி குடிக்கிறது, உவே” அதைப் பார்த்தவாறு.
” இப்பதான் பக்கத்துல புதுசா ஒரு தம்பி, குடி வந்துருக்கு, அதான் வீட்டுக்கு பெரியவங்களா, எங்களைக் கூப்டுச்சி, நானும் உன் அப்பாவும் போய் பாலைக் காய்ச்சிட்டு, உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வந்தேன் குடி” என்றார்.
“ஏன், அவங்க வீட்டுல பெரியவங்க இல்லையா? இல்ல வரலையா? யாருனே தெரியாம கூப்பிட்டா போய்டுறதா, வந்தவன் திருடனா கூட இருக்கலாம்” என அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே வரண்டாவிற்கு வந்தவள், ஒரு மிடறு பருகிய வாறே, பக்கத்து வீட்டு வாசலை எட்டிப் பார்க்க, உள்ளிருந்து அந்தக் கள்வன் திருடன் வெளியே வந்தான்.
பருகிய பாலைத் துப்பியவள், அவனைக் கண்டதும் விழிக்க ஆரம்பித்தாள்.
“ஹாய், பொண்டாட்டி… எப்படி இருக்க? ” அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், ” ச்சா… இந்த மாமாவை பார்க்காம எப்படி இழச்சு போய்ட்டியே பொண்டாட்டி. கவலைப் படாத. மாமா, வந்துட்டேன் ல இனி, நான் உன்னை பார்த்துக்கிறேன்” அவளைக் ஒரு கையால் தோளோடு அணைத்தான்.
அதனை தட்டி விட்டவள், ” பொண்டாட்டியா? மாமாவா? யாருக்கு யாருடா பொண்டாட்டி?. இன்னொரு வாட்டி என்னை பொண்டாட்டின்னு சொல்லு அப்ப இருக்கு உனக்கு. ஆமா,நீ ஏன் இங்க வந்த? எதுக்கு இங்க வந்த? ” அவனிடம் எகிற ஆரம்பித்தாள்.
” கூல் கூல் விஷ்ணு… நான் இங்கே என் ஒயிஃப் தேடி வந்திருக்கேன்?”என்றான் அமர்த்தலாக
” என்னா? “
” அதான்மா என் லைஃபை தேடி இங்க வந்துருக்கேன் ”
” மும்பையில இல்லாத லைஃப், இங்க கிடைக்காத போகுதா? ” இடையில் கையை வைத்து சன்னமாக கேட்க, ” என்ன பண்ண, என் தலையெழுத்துல மதுரையில தான் டா உன் தேவதை இருக்கா ன்னு, அந்தக் கடவுள் எழுதி வச்சுட்டார். அதான் அவளைத் தேடி வந்திருகேன் ” என்றான் எங்கோ பார்த்து.
அவனைத் தீயாய் முறைத்தாள். ” தம்பி, அவ கிட்டா என்ன வெட்டி பேச்சு, நீங்க உள்ள வாங்க. அடியே வேலைக்கு நேரம் ஆகல, வந்து குளி டி” என்றவர் உள்ளே செல்ல, விசில் அடித்த படியே, அவளை இடித்துக்கு விட்டு உள்ளே நுழைந்தான்.
தங்கு தங்கு என வீடே அதிரும் அளவு பதங்களை எடுத்து வைத்தவள் தன் அறைக்குள் நுழைந்து,அவனைத் திட்டியவாறே குளிக்கச் சென்றாள். அவள் வரும் வரை, அவளுக்காக காத்திருந்தான். அவளும் வர, சசி அவர்களை சாப்பிட அழைக்க, விஷ்ணு, மயூ, பலராமன் மூவரும் கீழே அமர்ந்தனர். அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தவன், தன் முட்டியை, அவள் முட்டியின் மேல் வைத்தான்.
அதனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு, ” என்ன இது? என்னை இடிச்சிட்டு தான் உட்காரணுமா? தள்ளித்தான் உக்காரேன்” அவனுக்கு மட்டும் கேக்கும் படி சொல்ல,
அவன், பக்கவாட்டைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தண்ணீரை ஊத்தியவன், ” இங்க தண்ணீக் கொட்டி கிடக்கு” என்றான். பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு, அந்தப் பக்கம் தள்ளி அமர எண்ணுவதற்குள் பலராமன் அமர, அவன் உதட்டை மடித்து சிரித்தான்… ‘ கடவுளே, குடும்பம் மொத்தமும் நமக்கு எதிராக சதி பண்ணுதே…’ எண்ணியவள் இரண்டு தோசையை விழுங்கி விட்டு எழுந்துக் கொண்டாள்.
அவள் வேலைக்குக் கிளம்ப, அவளைத் தடுத்த பலராமன், ” தம்பியையும் கூட்டிட்டு போமா, மதுரைக்குப் புதுசு வழி தெரியுமா நிக்கும்.. தம்பி எங்கே போகணும் விருப்பப் படுதோ அங்க விட்டுருமா ” என்றார்.
அவன் சிரித்த முகமாய் நின்றான்’ மதுரைக்கு வர, வழி தெரிஞ்சவனுக்கு, மதுரைக்குள்ள இருக்க, இடத்திக்குப் போக தெரியாதாமா, ஸ்கூல் படிக்கிற பையன் வழித்தெரியமா நிக்க போறான். காலக் கொடுமை டா’ என எண்ணியவள், ” எங்க போகணும் ? ” எனக் கேட்க, அவனும் போக வேண்டிய இடத்தைச் சொல்ல, மீண்டும் ஒரு அதிர்ச்சி அவளுக்கு.