பொன்னூஞ்சல்-8

பொன்னூஞ்சல்-8

ஊஞ்சல் – 8

ஜெயஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகாபதே
ஜனவிமொக்ஷனா கிருஷ்ணா ஜென்மமோக்ஷனா
கருடவாகன கிருஷ்ணா கோபிகாபதே
நயனமோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா

மெல்லிய குரலில் பக்தி பாடல் ஒன்றை பாட்டியின் அறையில் பொம்மி பாடிக் கொண்டிருக்க, வெளியில் இருக்கும் அனைவருக்கும் குட்டிப்பெண்ணின் குரல் சன்னமாய் கேட்டது.

இந்த நேரத்தில் அவள் முன்பு சென்றால், பாடுவதை நிறுத்தி விட்டு தாயை கட்டிக்கொண்டு ஒளிந்து விடுவாள். வீட்டில் மட்டுமே வளைய வருபவள், பெண்களிடம் ஒரு வழியாக பழக ஆரம்பித்து விட்டாள்.

அதன் வெளிப்பாடே கோகிலம்மா பாட்டியிடம் தன் திறமையை காண்பித்து, அவர் அன்பை ஒட்டு மொத்தமாக களவாடிக் கொண்டாள். பெரியவரும் சொல்லில் வராத தனது பாசத்தை எல்லாம் கண்ணோர ஆனந்தக் கண்ணீரில் வெளிப்படுத்தி விடுவார்.

“நா சின்னி தேவத! உன் பாட்டு ஒன்னே போதும்! நான் எழுந்து நடமாட ஆரம்பிச்சுடுவேன்!” என்று தழுதழுத்த குரலில் கூறிட,

“அழக்கூடாது அவ்வா! அழுதா அம்மா உங்களையும் திட்டுவாங்க!” சகஜமாக பதில் பேசினாள்
பேத்தி.

“ஏய் வாலு! நான் சொன்னதும், உன் அழுகைய நிப்பாட்டிட்டுதான் வேற வேலை பாக்குறியா?” என்று அவளை செல்லமாக கடிந்து கொண்டாள் அசலாட்சி.

“நா பங்காரம்! அம்மா பேச்சை எப்போவும் கேட்பாளே! பள்ளிகூடத்துக்கு போகச் சொன்னா மட்டுமே அழறா! ஏன்ரா அம்மு?” கோகிலம்மாவின் திக்கும் வார்த்தைகளும் சற்றே கோர்வையாக வர ஆரம்பித்திருந்தது.

“அம்மாவ விட்டு எங்கேயும் போக மாட்டேன்!” என்று வேகமாக சொல்லியபடியே, அசலாவை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

அவ்வளவுதான் பொம்மியின் பழக்கம். தனக்கு தோன்றினால் மட்டுமே எதையும் செய்வாள். மீறி ஒரு வார்த்தை கேட்டாலும் அந்த இடத்தில் இருந்து ஒதுங்கி விடுவாள்.

“ஏமி கோபமுரா அம்மு? தாத்தையாட்ட செப்புரா!” என்று வேங்கட ராமைய்யா கையைப் பிடித்து இழுக்காத குறையாக கேட்டாலும் பதில் அளிக்காமல் அசலாவின் பின்னே ஒளிந்து கொண்டாள்.
காலை வேளையில் நீராகாரத்தோடு, வயிற்றுக்கு தாரை வார்ப்பதை முடித்துக் கொள்ளும் அந்த குடும்ப உறுப்பினர்கள், வீட்டு மருமகளின் அன்பான கட்டளையில் சத்துமாவு கஞ்சியும், திடஆகாரங்களும் எடுத்துக் கொள்ள தொடங்கியிருந்தனர்.

மூன்று வேளை உணவும் வீட்டிற்கு வந்து எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ரிஷபனும் முன்னேறி இருந்தான். எக்காரணம் கொண்டும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றவனின் மாற்றங்கள் தொடங்கியது.

தங்களின் நேசத்தை அறிந்து கொண்ட இருவரும் மனதோடு சங்கமித்து கண்களாலும் பேச்சாலும் தங்கள் உறவை மேம்படுத்திக் கொண்டனர். சிறுசிறு தீண்டல்கள் அவர்களின் காதல் வாழ்க்கையை மெருகேற்றியது.

தனது வீண் பிடிவாதங்களை ஒதுக்கி வைத்து, சின்னாவுடன் வெளியே சென்று வருவதை பழக்கப்படுத்தி கொண்டிருந்தாள் அசலாட்சி.

சின்னாவும் அசலாட்சியின் உறவை கொண்டாடி மகிழ்ந்தான். இத்தனை வருடங்களில் தன் மேல் அக்கறை கொண்டவர்களாக அனைவரும் இருந்தாலும், ‘அம்மா’ என்று அழைக்க ஒரு ஜீவன் இல்லாமல் தவித்தவனுக்கு, அசலாவின் வருகை அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது.
இயல்பிலேயே பொறுப்பானவன் பொம்மியின் ஏட்டிக்கு போட்டியான பேச்சுக்களை என்றும் கவனத்தில் கொள்வதில்லை.

ஆனால் பொம்மியின் நிலை மட்டுமே மாற்றம் என்பது இல்லாமல் அதே இடத்தில் நின்றது. வீட்டில் பாடம் படிப்பதோடு சரி, பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அத்தனை பிடிவாதம் பிடித்தாள்.
“உன் பின்னாடியே இன்னும் எத்தன நாளைக்கு சுத்த வைக்க போற சாலா?” காலை உணவிற்காக அமர்ந்திருந்த ரிஷபன் கேட்க, மனைவியிடம் இருந்து பதில் வரவில்லை.

“அவ போகமாட்டேனு அடம் பிடிக்கிறாளே? நான் என்ன செய்ய?”

“அவள பத்தி உனக்கு தானே தெரியும், என்ன செய்யணும்னு யோசி?” அசிரத்தையுடன் ரிஷபன் பேச,

“ஏதாவது செஞ்சு அவள ஸ்கூலுக்கு அனுப்ப பாருங்களேன்! உங்களுக்கா தெரியாது?” மகள் படிப்பதற்காக கணவன் செய்த மாற்றங்களை மனதில் வைத்து மனைவி கூறினாள்,

“அவ அழுவா! நீ என்கிட்டே சண்டைபோடுவ! வேண்டாம்” என்று முதல் தடவை நடந்ததை நினைவு படுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அதற்கு மறுநாளில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் பாடம் படிக்க ஆசிரியரும் சிறுமிகளும் வரவில்லை. முதல்நாள் வாசலை பார்த்து ஏங்கிய சின்னவள், இரண்டாம்நாள் தாயை நச்சரிக்க ஆரம்பித்தாள்

“என் ஃபிரண்ட்ஸ் ஏன் வரல அச்சும்மா? நான் அவங்க கூட பேசணும் விளையாடனும்”

“எனக்கு தெரியாது பொம்மி? அப்பாகிட்ட கேளு”

“நீ கேட்டு சொல்லும்மா”

“உனக்கு வேணும்னா நீதான் கேக்கணும்” என்று அவளை பிடித்து ரிஷபனிடம் தள்ளினாலும், விடாப்பிடியாக அசலாவையே கேட்க வைத்தாள் பொம்மி.

“நீயா அவங்களோட விளையாடப் போற?” என்று வேண்டுமென்றே ரிஷபன் மனைவியை சீண்ட,

“எனக்கு என்ன தேவை இருக்கு? உங்க பொண்ணுதான் கேக்க சொல்றா!”

“அப்போ அவளே கேட்கட்டும்”

“கேட்டுக்கோடி! உன்கிட்ட மட்டுந்தான் சொல்வாராம்” என்று சமயம் பார்த்து நொடித்துக் கொண்டாள் அசலாட்சி.

இதுவரை ரிஷபனின் முன்நின்று பேசியிருக்கவில்லை பொம்மி. தனக்கு தேவையானது கிடைக்க, தான்பேசினால் மட்டுமே முடியும் என்பது விளங்கிட முதன் முறையாக பேசினாள்.

“சீனிப்பா என் ஃபிரண்ட்ஸ் கூட நான் விளையாடனும், அவங்கள இங்கே வரச் சொல்லுங்க!” மகளின் அழைப்பு ரிஷபனுக்கு தேனாக இனித்தாலும், மேலும் சீண்டிப் பார்க்க எண்ணியே,

“நாணானு கூப்பிட மாட்டியா பங்காரம்?!”

“நான் என் ஃபிரண்ட்ஸ் கூட விளையாடனும் வரச் சொல்லுங்க!” தனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே தொடர்ந்து கேட்டாள் பொம்மி.

“என்கூட வா! நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்று ரிஷபன் அவள் கைபிடிக்க முன்வர சட்டென்று பின்னடைந்தவள்,

“ம்ஹும்… எல்லாரையும் இங்கே வரச் சொல்லுங்க!” – பொம்மி.

“உனக்கு தேவைன்னா நீதான் தேடித் போகணும் பொம்மி” ரிஷபன் விடாமல் முறுக்கிக்கொள்ள

“நாணாகூட போ பொம்மி! நானும் உன்கூட வரவா?” இது சின்னா

“மாட்டேன்… இங்கே வரச் சொல்லுங்க சீனிப்பா”

“அந்த மிஸ் ஸ்கூல்லயே டியூசன் எடுக்குறேன்னு சொல்லிட்டாங்க… அதனால இங்கே வர மாட்டாங்க” – ரிஷபன்.

“அப்போ நான் விளையாட முடியாதா சீனிப்பா?” உதடு பிதுக்கி அழுது விடுபவள் போல் ஏக்கத்துடன் மகள் கேட்க, தந்தையானவன் வீழ்ந்தே போனான்.

“என் பங்காரம்கூட எல்லாரும் விளையாட வருவாங்க! நீ ஸ்கூலுக்கு மட்டும் போனா போதும்ரா அம்மு!” – ரிஷபன்

“ம்ஹும்… நான் போக மாட்டேன்” – பொம்மி.

“பொம்மி நல்ல பொண்ணு! எங்ககூட விளையாட வருவான்னு உன்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க அது நடக்காதா?” மகளை சீண்டிப் பேசுவதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.

பொம்மிக்கு இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை. தோழிகளுடன் பொழுதைக் கழிக்க வேண்டும். அதே சமயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லவும் பயம் வந்து சேர, சோகமாக அசலாவிடம் சென்று அமர்ந்து விட்டாள்.

கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த தங்கையை பார்த்து, “லஞ்ச் டைம்ல அம்மாவோட வந்து, விளையாடிட்டு போ பொம்மி” பாசத்துடன் சின்னாவும் கூறிட,

“ம்ப்ச்… சின்னா மாட்லாடகா(பேசாதே)” மெதுவாக ரிஷபன் அவனை அதட்டினான்.

“எனக்குத் தெரியாம எதையோ பேசுறாங்க, என்னை பயங்காட்ட பாக்கறாங்க… இவங்க யாரும் வேணாம்” என்று அழுகையோடு, அசலாவை இழுத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.

ஏற்கனவே நிராசையுடன் அமர்ந்திருந்தவளுக்கு, தன்னை பார்த்துக் கொண்டே இருவரும் புரியாத பாஷையில் பேசிடவும் சிறுமிக்கு கோபம் பொங்கி விட்டது. ரிஷபன் மனதிற்குள் சிரித்துக் கொள்ள, சின்னா புரியாமல் பார்த்தான்.

மறுநாள் காலை முதல் முகத்தை தூக்கி வைத்துகொண்டு யாருடனும் பேசாமல், தன் பாட்டிக்கு பிடித்த பாட்டும் பாடாமல் பொம்மி வலம் வர, காரணத்தை கேட்ட பெரியவரிடம் அழகாய் தன் ஆதங்கத்தை சொல்லி வைத்தாள் சுட்டிப்பெண்.

“என்னை தனியா விட்டுட்டு சின்னையாவும் நாணாவும் என்னவோ பேசுறாங்க அவ்வா… எனக்கு பிடிக்காதத செய்ய சொல்றாங்க நாணா!” என்று ஏகத்திற்கும் புகார் வாசிக்க, சிரித்தபடியே அசலாட்சி விளக்கினாள்.

நேரில் ‘சீனிப்பா’ என்று அழைத்தவள், மற்றவர்களிடம் ‘நாணா’ என்று சொல்லவும் ஆரம்பித்து விட்டாள்.

அவரும் மகனை அழைத்து பேத்தி முன்பு கண்டிக்க, முதலில் முறுக்கி கொண்டவன், இறுதியில் தாயோடு மகளையும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தான்.

“ஸ்கூலுக்கு வருவேன்! கிளாஸ்ல போய் உன் ஃப்ரண்ட்ஸ நீதான் பார்க்கணும்! நான் உள்ளே வரமாட்டேன்” என்று சமயம் பார்த்து அசலாட்சியும் கண்டிப்பாக சொல்லி விட, பிள்ளை மனம் தனது ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள அனைத்திற்கும் தலையாட்டி வைத்தது.

காலை வேளையில் அவளுடன் படித்த தோழிகள் அனைவரும் அமர்ந்திருந்த வகுப்பை எட்டிப் பார்த்தவள், அசலாவை உள்ளே அழைக்க, அவள் மறுத்து வகுப்பறை வாசலில் நின்று கொண்டாள்.

“ஸ்வேதா” என்று தயக்கத்தோடு அழைக்க, அந்த வகுப்பு ஆசிரியரும்,

“இப்போ கிளாஸ் நடக்குது பொம்மி, நீயும் வந்து உட்காரு அடுத்து பேசலாம்.”

பின்னால் திரும்பி பார்வையால் தாயிடம் அனுமதி கேட்டு, ஒரு வழியாக வகுப்பறையில் சென்று அமர்ந்து விட்டாள். அரைமணிநேரம் கடந்திருந்தது.

ஆசிரியர் சொல்லி கொடுத்த பாடத்தில் இருந்து கேள்வியை கேட்க, வழக்கம்போல் பொம்மி பதிலை முந்திக்கொண்டு சொல்லிவிட்டாள். அதைக் கரும்பலகையிலும் எழுதிக் காட்டச் சொல்லி ஆசிரியர் உத்தரவிட, அதையும் செய்தாள்.

“பொம்மி குட்கேர்ள்! ஒரு தடவை சொன்னாலே புரிஞ்சுக்குறா! எல்லாரும் கைதட்டுங்க” ஆசிரியர் சொல்லியதும், சக பிள்ளைகளின் கரகோஷம் பொம்மிக்கு குதூகலத்தை அளித்தது.

“பார்த்தியா பொம்மி! எல்லாரும் உன்னை நல்ல பொண்ணுன்னு சொல்றது உனக்கு சந்தோசமா இருக்கு தானே?”

சந்தோச அலையோசை மனமெங்கும் ஒலித்திட ‘ஆம்’ என்று தலையசைத்தது அந்த சிட்டு.

“நீ தெனமும் ஸ்கூலுக்கு வந்தா, இந்த கைதட்டல் அடிக்கடி கிடைக்கும் வர்றியா?” என்ற அவரின் கேள்விக்கு முதலில் என்ன பதில் சொல்வது தெரியாமல் நொடிநேரம் யோசித்து, தன் மனதின் மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்க முடியாமல்,

“நான் வர்றேன் மிஸ்!” என்றவள் வெளியே ஓடிச்சென்று தன் பெற்றோரை பார்க்க, மரநிழலில் அசலா அமர்ந்திருக்க ரிஷபன் யாருடனோ சற்று தள்ளிச் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

“சீனிப்பா என்னை டெய்லி ஸ்கூலுக்கு மிஸ் வரச் சொல்றாங்க, நான் வரவா?” என்று அவனிடம் சத்தமாக அனுமதி கேட்க, அந்த குரலில் திரும்பி பார்த்த அசலாட்சிக்கும் நம்ப முடியாத ஆச்சரியம்தான்.

இது ஒரு புதுமையான அனுபவம் பொம்மிக்கு. பாராட்டும் புகழும் ஒருவரை மயக்குவதில் பாரபட்சம் பார்ப்பது இல்லை.

தனது இந்த சந்தோசம் தொடர்ந்து கிடைக்க, மனமெங்கும் பொங்கிய உற்சாகத்தில் தன்னையும் மறந்து தந்தையுடன் பேசி, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டாள்.

இத்தனை சீக்கிரமாய் பொம்மி சம்மதித்து விடுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

‘நீயா பேசியது? என் மகளே நீயா பேசியது?’ என்ற ரீதியில் புன்னகை முகத்துடன் அசலா, பொம்மியை நோக்கிச் செல்லும் நேரத்தில், மகளின் அழைப்பில் வேகமாய் சென்று அவளை அள்ளிக் கொண்ட ரிஷபன்,

“என் பங்காரம் என்ன செஞ்சாலும் எனக்கு சந்தோசம்” அவளை தூக்கி முதன்முதலாய் அன்பு மகளுக்கு தன் ஆசை முத்தங்களை பரிசாக கொடுத்தான்.

பொம்மியின் படிப்பிற்கென்று தான் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்த சந்தோசத்தை விட, மகள் தானாக வந்து தன்னிடம் பேசியதும், பின்னடைந்து செல்லாமல் தன் தோளில் வந்ததும் மனநிறைவைக் கொடுத்தது ரிஷபனுக்கு.

தந்தை மகள் இருவரின் உற்சாகத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த அசலாவிற்கு தான் என்ன மாதிரியாக உணர்கிறோம் என்றே சொல்லத் தெரியவில்லை.

தன் வயதிற்கே உரித்தான குறும்புடன் அவள் மீண்டு வருவது தாயவளுக்கு சந்தோஷ ஆர்ப்பரிப்பை அளிக்க, அதற்கு காரணமானவனை விழிவழிந்த ஆனந்தக் கண்ணீரில் நன்றி தெரிவித்தாள்.

“சீனிப்பா என்னை எல்லோரும் குட்கேர்ள்ன்னு சொல்வாங்களா?”

“ஆமாரா பங்காரம்”

“பேட் பீப்பில்ஸ் யாரும் இங்கே வரமாட்டாங்க தானே?”

“நாணா இருக்குறவரைக்கும் நீ பயமில்லாம இருக்கலாம்ரா அம்மு”

“இப்போ திரும்பவும் கிளாஸ்ல போய் உக்காரவா சீனிப்பா”

“இப்போ போனா நாணா சாயந்திரம் வந்து கூட்டிட்டு போவேன். அம்மாவும் என்கூட வீட்டுக்கு வந்திடுவா! எங்கள தேடாம இருப்பியா பங்காரம்?” தந்தையின் பேச்சில் மகளின் முகம் கூம்பிவிட

“யாரோட அம்மா, அப்பாவும் இங்கே இல்ல! உனக்கு மதியம் சாப்பாடு குடுக்க வரேன்டா, சின்னாவும் இங்கே தான் இருக்கான்” என்று அசலாட்சியும் தன் பங்கிற்கு சமாதனம் பேசினாள்.

“நூவு ராரா! சின்னா கிளாஸ் போய் பார்த்துட்டு வரலாம்” என்று மகளுக்கு நம்பிக்கை அளிக்க அவளை தூக்கிக் கொண்டு மகனின் வகுப்பறைக்கு சென்றான்.

தோளில் இருந்தவளை கீழே இறக்கவில்லை. எத்தனை நாட்கள் ஏக்கம் இது! வேண்டி விரும்பியே தன் சுகமான சுமையை சந்தோசத்துடன் தாங்கிக் கொண்டான்.

சின்னாவை காண்பித்து, அவனை அழைத்தும் சொல்லி விட்டான்.

“சின்னா! இன்னையில இருந்து பொம்மியும் இங்கே படிக்கப் போறா… நீதான் வந்து பார்த்துக்கனும்ரா!”

சின்னாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நேற்று வரை மாட்டேன் என்று அடம்பிடித்தவள் இன்று எப்படி வந்தாள் என்றும் தெரியவில்லை.

தான் பள்ளியில் படித்த இத்தனை வருடங்களில் தன்னைப் பார்க்க வராத தந்தை, இன்று தங்கையுடன் வந்ததை பார்த்ததும் அந்த சிறுவனின் மனதில் சொல்லத் தெரியாத வருத்தம் வந்தமர்ந்தது. இதன் வெளிப்பாடாக தந்தையின் பேச்சிற்கு தாயிடம் பதில் சொன்னான் சின்னா. மகனின் இந்த முகமாற்றத்தை அசலாட்சி கவனித்து விட்டாள்.

“பொம்மி இங்கே இருப்பாளா? என் ஃபிரண்ட்ஸ் முன்னாடி மட்டும் அழாம இருக்க சொல்லுங்கம்மா!” பெரிய மனித தோரணையில் தன் சந்தேகத்தை கேட்டு அவளைச் சீண்ட,

“சீனிப்பா இருக்காரு! நீ ஒன்னும் என்னைப் பார்த்துக்க வேணாம் சின்னையா! நான் சொன்னது சரிதானேப்பா” பதிலுக்கு பொம்மியும் விறைப்பாக பதில் அளித்தாள்.

“உங்க ரெண்டு பேரையும் எப்படி சமாதனம் பண்ணறதுன்னு தெரியல எனக்கு” அலுத்துக் கொண்டே அசலாட்சி சொல்ல,

“நாம கிளாஸ்க்கு போவோம் சீனிப்பா! நீயும் மிஸ் சொல்றத கேட்டு ஒழுங்கா படி சின்னையா!” அதிகாரமாக சொல்லிவிட்டு தன் வகுப்பை தொடர சென்றுவிட்டாள் பொம்மி.

மகளின் மாற்றத்தை வீட்டுப் பெரியவர்களிடம் பகிர்ந்துகொண்ட அசலாட்சி, மிதமிஞ்சிய உற்சாகத்தில் தத்தளித்தாள்.

மகளின் பேச்சும், நடவடிக்கையும் மாறிவருவதற்கு காரணமானவனை நன்றியுணர்ச்சிடன் நோக்கி,
“ரொம்ப தாங்க்ஸ் பாவா! நீங்க இல்லன்னா பொம்மிக்கு இந்த மாற்றம், இத்தனை சீக்கிரம் வந்திருக்காது” என்று தன் மகிழ்ச்சியை மனமுவந்து வெளிப்படுத்த, அதைகேட்டவன் அவளை முறைத்துக் கொண்டே தங்கள் அறைக்கு சென்று விட்டான்.

‘இப்போ எதுக்கு இப்படி முறைச்சுட்டு போறாரு? தாங்க்ஸ் சொன்னது தப்பா போச்சா? கடவுளே ஒரு சந்தோசத்தை நிம்மதியா கொண்டாட விடமாட்டியா?’ என்று ஆயாசமாக மனதிற்குள் எண்ணியபடியே அவனை பின்தொடர்ந்து சென்றாள்.

“என்ன கோபம் பாவா? சட்டுன்னு வந்துடீங்க” வெளியே கிளம்பியவனிடம் கேட்க,

“உன்னோட நன்றிய எதிர்பார்த்துதான் நான் இதெல்லாம் செய்றேனா?”

“அப்படியில்ல பாவா! நடந்தது சின்ன விஷயம் இல்லையே?”

“மதியம் சாப்பாடு ரெடி பண்ணிட்டு ஃபோன் பண்ணு சாலா!”

“நான் மாமாகூட போயிட்டு வரேன்! நீங்க வரவேணாம்”

“ஏன் அப்படி சொல்ற?”

“அது… இன்னைக்கு ஸ்கூல்ல சின்னா முகம் சரியில்ல… எதுக்குன்னு தெரியல பாவா?”

“என்னை விட எல்லாத்துலயும் பொறுப்பு அதிகம் அவனுக்கு நீ வீணா மனச போட்டு குழப்பிக்காதே!”

“பெரியவன்தான் ஆனாலும் அந்த வயசுக்குரிய ஏக்கம் இருக்குமே பவா”

“ உன்னிஷ்டம்! பையனோட கஷ்டம் புரியுது, புருசனோட கஷ்டம் புரியலையா?” என்று பூடகமாய் ரிஷபன் சொல்ல,

“என்ன சொல்றீங்க நீங்க?” என்று புரியாமல் பார்த்தாள்.

“கடமையை ஒழுங்கா செய்ற நேரத்தில காதலையும் செய்ய முயற்சி பண்ணலாம்னு சொல்றேன்” என்று சொல்லவும் கணவனை ஏறிட்டு பார்க்க முடியாத தடுமாற்றம் மனைவிக்கு வந்து விட்டது.

“எனக்கு நன்றி சொல்லி ரொம்ப தள்ளி வைக்கிற சாலா” ஏக்கத்துடன் சொன்னவனின் வார்த்தைகளில் விழிவிரித்து பார்த்தவள்,

“இதுக்கு தான் கோபமா இனிமே சொல்லல” என்று சமாதானம் பேசியவள்,

“என் ரிஷி பாவா இப்படி முகத்தை தொங்க போடறது கொஞ்சமும் நல்லா இல்ல” அவன் மீசையை முறுக்கி விட,

அவனோ தன் நெற்றியை காட்டி, “இங்கே ஒரு முத்தா குடுத்தா மட்டுமே இந்த பையன் சிரிப்பானாம்” என்று தன் தேவையை கேட்டான். இந்த மாதிரியான சின்ன சின்ன சந்தோசங்கள் இருவருக்குமிடையில் நடப்பது சகஜமாகிவிட்டது.

சொன்னதை செய்யும் கிளிபிள்ளையாய் மனைவியும் தப்பாமல் அவனுக்கு முத்தம் தந்த வேளையில், அவளை இடையோடு அணைத்திருந்தான்.

“நிறைய லஞ்சம் வாங்க ஆரம்பிச்சுட்டீங்க பாவா!” என்று நாணத்தோடு சொன்னவள், கணவனின் நெருக்கத்தில் தன்னை மறந்து நின்றாள். காதலும் காமமும் சேர்ந்த பார்வை இருவரையும் சிலிர்க்க வைக்க,

“அதுக்கு மேல போகவும் எனக்கு ஆசைதான்! நீ பச்சைக்கொடி காட்ட காத்திட்டு இருக்கேன் சாலா” என்று அணைத்த நிலையிலேயே ஆசையுடன் கன்னத்தில் தன் இதழை பதித்து விட்டு அன்றைய வேலைகளை பார்க்க சென்று விட்டான்.

நொடிநேரத்தில் தடம் மாறிய மனதை நினைத்தே நொந்தவளின் மனதில் மகனின் ஏக்கப் பார்வையே நிழலாடியது.

‘நாம இன்னும் சின்னாவ நல்லா கவனிக்கனுமோ? இவர் பொம்மிக்காக பேசுறது சின்ன பையனுக்கு பிடிக்கலையோ?’ என்ற பலவகையான குழப்பங்களும், சலனங்களும் சேர்ந்து அசலாவை அச்சம் கொள்ள வைக்க, அதையெல்லாம் ஓரம் கட்டும் விதமாக சின்னாவை குறி வைத்தே பெரிய பிரச்சனை ஒன்று வந்தது.

error: Content is protected !!