பொன்மகள் வந்தாள்.10.🌹

PMV.10.

சக்தியும் அவளிடம் பேச வேண்டுமென முடிவெடுத்து ஒரு வாரம் ஓடிவிட்டது. நெல் கொள்முதல் வேலையாக, அக்கம்பக்கம் ஊர்களுக்கு சென்று வந்ததில் அவனுக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். மில் இப்பொழுதுதான் வளர்ச்சியடைய ஆரம்பித்து இருக்கும் நேரம். சுணக்கமில்லாமல் ஓடினால் தான் அதைத் தக்க வைக்க முடியும். இன்று இருக்கும் போட்டி வாழ்க்கையில் கொஞ்சம் அசந்தாலும் பின் தங்கிவிடும் நிலைதான். 

பேச நேரம் கிடைக்கவில்லை என்பதைவிட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பது தான் உண்மை. ‘பொண்ணோட பேசறதுக்கு சரியான லொக்கேஷன் கிடைக்காமல் தவிப்பவன் நானாகத்தான் இருப்பேன்.’ என நொந்து கொண்டான். இத்தனைக்கும் காலையிலிருந்து மாலை வரை உடனிருப்பவளிடம்‌. அவளிடம் ஸ்டோரின் விபரம் தவிர்த்து வேறு ஏதாவது பத்து நிமிடம் பேசினாலும் என்ன பேசப்படுகிறது என உற்றுக் கவனிக்கப்படும். வெளியேயும் எங்கும் பேச முடியாது. வீடு விட்டா கடை. கடைவிட்டா வீடு என இருப்பவள். இருவரும் சந்திக்கும் ஒரே இடம் காவேரி ஸ்டோர்ஸ் தான். அப்படியிருக்க பேசத் தனிமையும் சந்தர்ப்பமும் கிடைக்காமல் தவித்துப் போனான்.

இவனுக்கு அவளது நிலமை என்னவென்று தெரிந்து கொண்டால் போதும். அவளது‌ சம்மதம்‌ கிடைத்துவிட்டால் போதும். அதற்கு அவளது கடந்த காலம்‌ தெரியவேண்டும். அதன் பிறகு தன் தாயிடம் கூறிவிட்டால் அதற்கு மேல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை. சக்தி அண்ணே தன் கடையில வேலை பார்த்த பொண்ணையே டாவடிச்சுக் கட்டிக்கிட்டாருன்னு பேசுபொருளாக விருப்பமில்லை. இது பொம்மிக்கும் பிரச்சினை. அவளை எந்தப் பேச்சிற்கும் இடமில்லாமல் கை பிடிக்க வேண்டும். ஏற்கனவே பார்த்து ஆசைப்பட்ட பெண்ணிற்குத் தான் வேலை கொடுத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது வேலை பார்ப்பவர்களுக்கு இடம் கொடுத்தது போல் ஆகிவிடும். இருக்கும் இடம் அறிந்து, பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் எண்ணினான். இதுவே அவள் வெளியிடத்தில் வேலை பார்த்தால் துணிந்து காரியத்தில் இறங்கலாம்.  

இத்தனைக்கும் இடையில் பொம்மியை பில்லிங் செக்ஷனுக்கு மாற்றுவதற்குள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வைத்தாள்.

காலை அங்காடி வந்தவன் வழக்கமான பூஜை வேலைகளை முடித்து விட்டு, வாடிக்கையாளர்கள் கூடும் முன் கடையை முழுதும் தன் பார்வையை ஓட்டினான். அடுக்கியிருந்த உணவுப் பொருட்களை எடுத்துப் பார்த்தவன்… பொம்மியை அழைத்தான்.

ஏதோ லிஸ்ட் எடுக்க வேண்டும் போல என எண்ணிக்கொண்டு நோட்பேடோடு வந்தாள். 

தன் கையிலிருந்த பொருளை எடுத்துக் காட்டியவன், “இன்னும் ஒரு மாசத்துல எக்ஸ்பையரி ஆகிறும். இன்னும் ஆஃபர் செக்ஷனுக்கு மாத்தாம என்ன பண்றீங்க. இதெல்லாம் நான் வந்து பாக்குறதுன்னா அப்புறம் நீங்க எதுக்கு.” எனக் காலையிலேயே கத்த ஆரம்பித்தான்.

பெரும்பாலும் எக்பையரி தேதி நெருங்கும் தருவாயில் இருக்கும் பொருட்களை லாபக் கணக்குப் பார்க்காமல் ஆஃபரில் போடுவது வழக்கம். பிரெட், பிஸ்கட் மாதிரியான உணவுப் பொருட்கள் எனில் எக்ஸ்பையரி ஆவதற்கு முன் அருகிலிருக்கும் ஹோம்களுக்கு அனுப்பிவிடுவான். காஸ்மெடிக்ஸ் எல்லாம் டிஸ்ப்ளேயில் ஆஃபரில் வைங்கப்படும். அவற்றை இந்த மாதம் இன்னும் பிரிக்காமல் இருப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். 

“சாரி சார்… இப்பவே இதைப் பிரிக்கச் சொல்றே.”

“சாரி சொல்றதுக்கா வேலை பாக்குறீங்க. செய்ற வேலைய ஒழுங்கா செய்ய வேண்டாமா? அதுக்கு தான உங்கள வச்சிருக்கிறது.”

இவன் கத்த ஆரம்பிக்கவும், “போச்சு… இன்னைக்கி பொம்மிக்காவுக்கு நல்லா டோஸ் விழுகப் போகுது.” என வேலை பார்க்கும் பிள்ளைகள் கிசுகிசுக்க ஆரம்பித்தன. ஏதாவது ஒரு நாள் இப்படி இவன் ருத்ரமூர்த்தியாகி விடுவான். யாராவது சிக்கி விடுவார்கள். இன்று பொம்மி. எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளர்களிடம் இணக்கம் காட்டுகிறானோ, அந்த அளவுக்கு சிறு குறை என்றாலும் கண்டிப்பும் காட்டுவான்.

ஓய்வில்லாமல் ஓடுவதாலோ என்னவோ இன்று காலையிலேயே ஆரம்பித்து விட்டான். 

“நானே க்ளியர் பண்றேன் சார்.” என வேலையை ஆரம்பிக்க,

“அதெல்லாம் வேண்டாம். இந்த வேலையை கருப்பட்டி பார்க்கட்டும். இல்லைனா வேற ஆளப் பாக்க சொல்லிக்கிறேன். நீங்க இனிமேல் பில்லிங் செக்ஷனுக்கு வாங்க.” எனக் கூறிவிட்டு தனது இருக்கைக்கு நடையைக் கட்டினான். இதைப் பார்த்தால் இவள்‌ ஒழுங்காகக் கவனிக்காததால் தான், சூப்பர்வைசரை மாற்றிவிட்டார்‌ என்பது போல் தான் தோற்றம் உருவானது.

“நான் சூப்பர்வைஸிங்கே பண்ணிக்கறேன் சார். எனக்கு கணக்கு வழக்கு ஒத்து வராது.” எனக் கூறிக் கொண்டே பின்னால் சென்றாள். ஏதோ தவறு செய்துவிட்டு, அதற்குத் தண்டனை போல் வேறுவேலைக்கு மாறுவது பிடிக்கவில்லை அவளுக்கு.

“ஏன்… நீ அக்கவுண்ட்ஸ் தானே படிச்ச. இல்ல… ஏச்சு சர்டிஃபிகேட் வாங்கிட்டியா?” என்றான் திரும்பி நின்று. மற்றவர்கள் முன்தான்‌ மரியாதை. தனிப்பட்டு பேசுவதென்றால் அதெல்லாம் காற்றில் பறந்துவிடும்.

“ஏச்சு வாங்கவேண்டிய அவசியமில்லை. படிச்சு வாங்கினது தான்.” என்றாள் ரோஷமாக.

“ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சலில்ல.”

“வேற எதுல சார் குறைஞ்சு போயிட்டோம்.” பேச்சில் வீராப்பு தொனித்தது. இன்று அவளே எப்படியும் கவனித்திருப்பாள். அதற்குள் வந்ததும் வராததுமாக பார்த்துவிட்டு, அத்தனை பேர் முன்பு  கத்த ஆரம்பிக்கவும், வெளியே காட்ட முடியாத கோபம் உள்ளுக்குள். 

“எதுல கூடுதல் கொறச்சல்னு நேரம் வரும்போது சொல்ற. இங்க ரொம்ப நேரம் பேச முடியாது. கஸ்டமர் வருவாங்க. புள்ளைகளும் என்ன பேசுறாங்கனு கவனிக்க ஆரம்பிச்சுருங்க.”

“அப்படி பயந்து பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது.”

“இது பயமில்லை. தொழில் நடக்குற எடத்துல நாம எப்படி நடந்துக்கறோமோ அதை வச்சுத்தான்… வேல பாக்குறவங்களும் நடந்துப்பாங்க. தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி.” தன் தலைமைப் பொறுப்புணர்ந்து கூற,

“இப்ப வேறுமாதிரி பாக்குற அளவுக்கு பெருசா என்ன நடந்து போச்சு.” என்க,

“அதெப்படி ஒன்னுமே தெரியாத மாதிரியே கேள்வி கேக்குற?” கோபம் குறைந்து சிரித்தமுகமாகக் கேட்க,

“இப்பப் பேசவேண்டியதைப் பேசுங்க.” என்றாள் பட்டென.

“உடனே பேச்சை மாத்துறதுல இருந்தே தெரியுதே… நமக்குள்ள என்ன நடக்குதுனு.”

“எனக்கு கேஷ் கவுன்ட்டர் சரிப்படாது சார். நான் சூப்பர்வைஸராவே இருந்துக்கறே.” வேலையைப் பற்றி மட்டுமே கவனமாகப் பேசினாள்.

“நான் ஒன்னும் உன்னை முழுநேரமும் இங்க உக்காரச் சொல்லல. நான் இல்லாதப்ப பாத்துக்கிட்டா போதும்.”

“உங்களுக்கு வேலை அதிகம்னா எக்ஸ்ட்ரா வொர்க்கர்ஸ் அப்பாயின்ட் பண்ண வேண்டியது தானே சார்.” எனக் கேட்க, ஒருகணம் அவளை ஊன்றிக் கவனித்தான்.

“நான் ஒன்னு கேக்கவா?” எனக் கைகளைக் கட்டிக் கொண்டு, வலது காலை மடக்கி டேபிளில் சாய்ந்து நின்றுகொண்டு கேட்டவனை, என்னவென்று‌ பார்க்க,

“இங்க யாரு முதலாளி?” என்றான்.

“இதுல என்ன சந்தேகம்… நீங்க தான்.”

“இப்ப வரைக்கும் பேசினதை வச்சுப் பாத்து, எனக்கே சந்தேகம் வந்திருச்சு. நான் தான் முதலாளியான்னு. அப்ப… நான்‌ சொல்றதை மட்டும் செய். ஆளுங்களை எப்ப வேலைக்கி எடுக்கணும்… யாருக்கு எந்த வேலை கொடுக்கணும்னு எனக்குத் தெரியும்.”

“அக்கவுன்ட்ஸ் எல்லாம் பாக்க உக்காந்தா என்னால சீக்கிரம் வீட்டுக்குப் போக முடியாது. ஒன்பது மணிக்கு மேல ஆகிறும். வீட்ல ஒத்துக்க மாட்டாங்க.”

“அது எங்களுக்குத் தெரியாதா? நீ எப்பவும் போற‌ நேரத்துக்கே போலாம். மில்லுக்கு போய்ட்டு ஈவ்னிங் வந்துருவேன். மறுபடியும் நைட் மில்லுக்குப் போயிக்குவேன்.”

“இப்படி நேரங்காலம் பாக்காமல் வேலை பாத்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.” அவளையும் அறியாமல் பேச்சில் அக்கறை காட்டிவிட,

“அக்கறை வெறும் பேச்சுல மட்டும் தான் தெரியுது. உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தா நான் சொன்னவுடனே, நான் பாத்துக்கிறேன். நீங்க மில்லைப் பாருங்கனுல்ல சொல்லியிருக்கணும்.”

“உங்க மேல அக்கறைப்பட நான் யார்‌ சார்? ஏதோ முதலாளி ஆச்சேனு ஒரு அக்கறையில தெரியாமக் கேட்டுட்டே… விட்ருங்க.”

“உங்க அக்கறை ஆணியெல்லாம் எங்களுக்கு ஒன்னும் வேண்டாம். நாங்க சொல்றதை மட்டும் செஞ்சா போதும்.” என்றான் அவள் கூறிய முதலாளியாகப் பார்த்தேன் என்ற வார்த்தைகளில் கோபம் கொண்டவனாக.

“இப்படி ஒரு வேலைய அரையும் கொறையுமா என்னால பாக்கமுடியாது சார். சூப்பர்வைஸிங்கோ, பில்லிங்கோ எதைனாலும் ஒன்னுதான் உறுப்படியா பாக்கணும். என்னால ஆத்துல ஒரு‌கால் சேத்துல ஒரு‌கால்னு வேலைசெய்ய முடியாது.” என்றவளிடம்,

“ஷ்ஷ்ஷப்பா…” என அலுத்துக் கொண்டவன்,

“அப்படினா வேற ஒரு ஏற்பாடு பண்ணலாம். உனக்கு மில்லப்பத்தி நல்லாத் தெரியும் தானே? ஒரே வேலையா மில்லுக்குப் போறியா?”

“அதெல்லாம் முடியாது சார். அது சிட்டிக்கு அவுட்டர்ல இருக்கு.” என முகத்தை உம்மென வைத்துக்கொண்டு சிறுபிள்ளையென அவள் கூறியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தான். கோபத்தில் இறுகிப் போன முகம், சிரிக்கும் பொழுது மந்தகாசம் காட்ட… ஒருகணம் அச்சிரிப்பில் தன்னைத் தொலைத்தவள், அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

“உன்னைப்பாத்தா ஸ்கூலுக்குப் போக வயித்தவலி, தலைவலின்னு சாக்குப்போக்கு சொல்ற சின்னப்பிள்ளையாட்டம் இருக்கு. உன்னை முதல் தடவைப் பாத்தப்பவே இப்படித்தான் இருந்த.”

“விபரம் புரியாத சின்னப்பிள்ளையாவே இருந்தது தான் எல்லாருக்கும் பிரச்சினையே.” என்றாள் விரக்தியாக.

“எதுல நீ விவரமில்லாமப் போயிட்ட?”

“அது எதுக்கு உங்களுக்கு… நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க?”

“அப்ப, கேஷ் கவுன்ட்டர்லயே உக்காரு. உனக்குனு தனியா கம்ப்யூட்டர் போட்டுக்கலாம். ஏன்… என் பக்கத்துல உக்கார பயமா இருக்கா?” எனப் பேச்சில் எள்ளல் தெறிக்க,

“எனக்கென்ன பயம்? நீங்க என்ன சிங்கமா… புலியா?”

“உனக்கு பயம்… எங்க என் பக்கத்துல உக்காந்தா உன் குட்டு வெளிப்பட்டுறுமோனு பயம்.”

“ஏதாவது அப்படி ஒன்னு இருந்தா தானே வெளிப்படும். தேவை இல்லாததைப் பேசாம, நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க.” என்றாள், நீ பேசுவது எனக்கு வேண்டாத வேலை என்பவள் போல் பட்டும் படாமலும்.

“அப்ப நாளையில் இருந்து கேஷ் கவுன்ட்டரைக் கவனி.” அவளிடம் முடிவாகக் கூறிவிட்டு 

அதற்கான ஏற்பாடுகளைப் பார்த்தான். ட வடிவ டேபிள்… அதில், அவன் ஒரு பக்கமும்,‌ இவள் ஒரு பக்கமும் என பில் போட ஆரம்பித்தனர். மேலே தனித்தனியாக ஒவ்வொரு தளத்திலும் பில் போட்டு அனுப்ப, பணம் கட்டுவது மட்டும் கீழ் தளம்தான். அதனால் இதுவரை இவன் ஒருவனே கேஷ்கவுன்ட்டரைக் கவனித்து வந்தான். 

அவனுக்கு இடப்புறமென இவளும், இவளுக்கு வலப்புறமென அவனும் எதிரெதிர் இருக்க… பார்வைகள் அடிக்கடி மோதிக்கொள்ள வேண்டிய சூழல். மதியம் வரைதான் அங்கிருப்பான். மதிய உணவு வேளைக்குப் பிறகு, அவளிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு மில்லுக்குக் கிளம்பி விடுவான். எப்பொழுதும் உணவிற்குப் பிறகு சற்று ஓய்வெடுப்பான். இப்பொழுது அதற்கும்‌ இயலாமல் ஓடிக்கொண்டிருக்கிறான். ஓடவேண்டிய வயதில் ஓடினால் தான் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் நிம்மதியாக உக்கார‌முடியும் என்பதில் குறியாக இருந்தான்.

            **********************

“பொம்மிக்கா.”

“என்ன கருப்பட்டி?” என்றாள் நிமிர்ந்து பார்க்காமல் பில் போட்டுக் கொண்டே.

“இங்க பண்டு யாருக்கா?” எனக் கேட்க, பட்டென நிமிர்ந்தவள், எதிரே அத்தை நிற்பதைப் பார்த்தாள். மதிய நேரமாதலால் கூட்டம் குறைவாக இருந்தது. 

“யக்கா… நம்மலப்போலயே உங்களுக்கும் பட்டப்பேரு வச்சு முடி சூட்டியிருக்காங்க போலயே.” எனக் கேட்டு சிரிக்க, அத்தையை முறைத்துப் பார்த்தாள்.

“ஏன் பண்டு மொறைக்கிற… பட்டுனு கேட்டுட்டே. அப்புறம் பொம்மின்னு சொல்லவும் தான் தம்பி இங்க கூட்டிட்டு வந்தாப்ல.” என்றார்… கொஞ்சம் கனத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு, மதிய வெயிலில்‌ வந்ததில் மூச்சு வாங்கியவறாக, முந்தானை கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டே கூறினார். 

இன்று காலையிலேயே கிளம்பும் போதே அத்தை கடைக்கு வருவதாகக் கூறியிருந்தார். இன்று வெள்ளிக்கிழமை. நகைக்கடைக்குப் போய்விட்டு, அப்படியே கோவிலுக்குப் போக வேண்டுமெனக் கூறினார். 

கிராமத்தில் தோட்டம் வீடு என அலைந்தவருக்கு, இங்கே ஒரே இடத்தில் இருப்பது முடியாத காரியமாக இருந்தது. அதனாலயே இன்று வெளியே செல்லத் திட்டமிட்டு பொம்மியிடம் கேட்க,

“நகைக்கடைக்கு நான் வரமாட்டேன். கோவிலுக்கு வேணும்னா கூட்டிட்டு போறேன். கடைக்கு அம்மாவைக் கூட்டிட்டுப் போ.” எனக் கூற,

“உங்கம்மாவுக்கு அலைச்சல் ஒத்துக்காது. உங்க அம்மாவ தனியா விட்டுட்டு எங்க அண்ணனும் வரமாட்டாரு. உனக்கு வாங்குற நகைய நீ பாத்து வாங்கினாப் போதும்.”

“இப்ப எதுக்கு நகை எடுக்கணும். இருக்கறது பத்தாதா? அதைப் போட்டுட்டு எங்க போகப் போறேன்.” சிடுசிடுத்தாள்.

“குத்தகைப் பணத்தை என்னடி பண்றது. நகையா எடுத்து வச்சா நாளைப்பின்ன உதவும்ல?”

“ஏன்… அதிகமா சேத்து வச்சு எனக்கு எடைக்கு எடை போட்டு அனுப்புற ஐடியா எதும் இருக்கா? செகன்ட் ஹேன்ட் பொருள்னா கம்மி விலைக்கு விக்கணும். அதுவே செகன்ட் ஹேன்ட் பொண்ணுனா அதிக விலை கொடுக்கணும். அப்படித்தானே? அந்த மாதிரி ஏதாவது நினப்பு இருந்தா அதை மூனு பேரும் அடியோடு அழிச்சிருங்க.” என மூவரையும் வார்த்தைக் கணை கொண்டு தாக்கிக் கொண்டிருந்தாள். 

அத்தை வந்தால் எப்படியும் ஒரு வாரத்தில் கிளம்பி விடுவார். இங்கே நமக்குப் பொழுதே போக மாட்டேங்குது. அங்க எல்லாம் அப்படி அப்படியே கெடக்கு என இரண்டு நாட்களில் புலம்ப ஆரம்பித்து விடுவார். இந்தமுறை இன்னும் கிளம்பாமல் இருப்பதிலிருந்தே அவளுக்கு சந்தேகம். ஏதோ மூன்று பேரும் சேர்ந்து பேச முடிவெடுத்திருப்பது தெரிகிறது. அதனால் தான் ஏதாவது பேச்செடுத்தாலே எரிந்து விழுந்து அவர்கள் அதற்குமேல் பேசமுடியாத படி செய்து விடுகிறாள். 

“எங்கேடி இப்படி எல்லாம் பேசக் கத்துக்கிட்ட. நீ நான் வளத்த என் பண்டுவே இல்லடி.” என இவளது பேச்சைக் கேட்டு, காலையிலேயே அத்தை அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.

அவளுக்கும் அவள் கேட்ட வார்த்தைகள் உறுத்தியதோ என்னவோ… வயதான காலத்தில் ஏன் கஷ்டப்படுத்திப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியதோ என்னவோ, 

“சரித்தை… மதியத்துக்கு மேல கடைக்கு வா. ஆட்டோல ஏறிட்டு காவேரி ஸ்டோர்ஸ்னு சொல்லு. அவனே கொண்டு வந்து விட்டுறுவான். ரொம்ப அலையாதே.” எனக் கூறிவிட்டு வந்தாள். வேலையில் கவனமாக, மறந்து விட்டாள். 

“கருப்பட்டி, அத்தைக்கு ஒரு சேரை எடுத்துப் போடு.” என்றவள், அத்தையிடம்,

“உக்காரு த்தை. கொஞ்சம் வெயில் தாழ வரலாம்ல?’ எனக் கேட்டவாறே பில்லைக் கொடுத்து பணத்தை கணக்குப் பார்த்து வாங்கிப்போட்டாள். 

அதற்குள் ஒரு சேரை எடுத்துப் போட்டு, அவருக்கு ஒரு கூல்டிரிங் பாட்டிலையும் எடுத்துக் கொடுத்திருந்தான் கருப்பட்டி. 

தன்முன் நின்றவர்களுக்கு பில் போட்டு விட்டு, சக்தியை நிமிர்ந்து பார்த்தாள். இது அவன் மில்லுக்குக் கிளம்பி வேண்டிய நேரம். 

“நான் பாத்துக்கறேன். நீ அவங்களைக் கவனி.” என்றான். 

“இல்ல… அத்தை கோயிலுக்குப் போகணும்னு வந்திருக்காங்க. வெளிய வேற போகணும்.” என்றாள்.

“இந்த வெயில்ல எங்க போறீங்க? ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கச் சொல்லு. சாயங்காலமாப் போவீங்க.” என்க,

“கடைக்கு வேற போகணும்.” என்றாள்.

“வேற எந்தக் கடைக்குப் போகணும்.” என அவன் கேட்க,‌ கேள்வி மேல் கேள்வி கேட்பவனை,

“தம்பி யாரு பண்டு?” என்றார்.

“இவரு தான் அத்தை ஓனர்.” என்க,

“பரவாயில்லையே தம்பி… இந்த சின்ன வயசிலேயே இம்புட்டுப் பெரிய கடை கட்டியிருக்க.” என அவன் பக்கமாகத் திரும்பி  வியந்தவர், அவன் கேட்ட கேள்விக்கு அவரே பதில் சொல்ல ஆரம்பித்தார். 

“நகைக் கடைக்குப் போகணும் தம்பி. இந்த வருஷத்து குத்தகைப் பணம் வந்துச்சு. அதுல பண்டுக்கு நகை வாங்கணும்னு காலையிலேயே சொல்லி விட்டேன்.” என்றார். ஒளிவுமறைவில்லாமல் பேசும் கிராமத்து மனுஷியாக.

“ஏன் க்கா… நகை எடுக்கற அளவுக்கு குத்தகைப் பணம் வருதா? நீங்க பெரிய ஆளுதான் போலயே?” என கருப்பட்டி வியப்பு காட்ட, 

“அத்தைஐஐஐ…” எனப் பல்லைக் கடித்தாள், பண்டு எனக் கூறியதைக் கேட்டு.

“ஏன் தம்பி… நீயே சொல்லுப்பா… சின்னப்பிள்ளையில இருந்து கூப்பிட்டுப் பழகியாச்சு. திடீர்னு எப்படி மாத்தறது. இதுக்குப் போயி கோபப்பட்டா எப்படி?”  சக்தியிடம் வெள்ளந்தியாகப் புகார் வாசிக்க, 

“அதெப்படி ம்மா மாத்த முடியும். நமக்குப் புடிச்சவங்கள, நமக்குப் புடிச்ச மாதிரி தானே கூப்பிட முடியும்.” எனக்கூறிவிட்டு நமட்டுச் சிரிப்போடு அவளைப் பார்க்க, 

‘ம்க்கும்… வேலிக்கு ஓணான் சாட்சியாக்கும்.’ என நினைத்துக் கொண்டாள்… அவன் வைத்த பெயரும் நினைவிற்கு வந்தவளாக.

“லட்டு…” என்று அவனும், சத்தமில்லாமல் கணினித்திரையில் கவனம் வைத்தவாறே, வாய் அசைக்க… பார்த்தவளும் பட்டெனப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். 

“வா அத்தே… சாப்பிட்டுக் கிளம்பினா சரியா இருக்கும்.”

“இன்னுமா சாப்பிடல. மணி என்னாகுது.”

“பசிக்கல… கஸ்டமரும் வந்துட்டு இருந்தாங்க.”

“காலையில ரெண்டு இட்லியைப் பிச்சுப் போட்டு வந்தது… இன்னுமா உனக்குப் பசிக்கல. நாங்க எல்லாம் அந்தக் காலத்துல படிஅரிசிச் சோத்த ஒத்த ஆளாத் திண்ணுட்டு, காட்டுல ஆளுகளோட ஆளா இறங்கினோம்னா பொழுது உச்சிக்கு வர்றதுக்குள்ள சிறுகுடல பெருகுடலு திங்கும். இப்படியே, உக்காந்தே வேல பாத்தா எங்கேருந்து பசிக்கும்.” என அவர் கூறியதைக்கேட்டு, பில்போட வந்தவர்களும் சிரிக்க, 

“அக்கா… உங்க அத்தை வேற லெவல்.” என்றான் கருப்பட்டி… அவர் கூறியதைக் கேட்டு.

“ஆமாடா தம்பி. நாம இறங்காம வேலைக்கு வர்றவளுக, வேலைய நகத்த மாட்டாளுக. நாம முன்னாடி போனாத்தா… நம்ம பின்னாடி வருவாளுக. காட்டுக்காறவுகன்னு ஜம்பமா உக்கார முடியாது. முன் ஏரு போற வழில தானே பின் ஏரு வரும்.” எனக் கேட்க,

அதைத்தான் அவனும் கூறினான். முதலாளி எவ்வழியோ தொழிலாளியும் அவ்வழி என்று… என யோசித்தாள்.

“அத்தை… பேச ஆளு கெடச்சா போதும். ஊர்ல… தெருவுல போறவங்க வர்றவங்கள எல்லாம் இழுத்து வச்சு வம்பளக்கற மாதிரி இங்கேயும் ஆரம்பிச்சுருவ. எந்திரி போலாம்.”

“யக்கா… எனக்கெல்லாம் இப்படி ஒரு அத்தையில்லைனு பொறாமையா இருக்குக்கா.” என்க,

வேலையில் கவனமாக இருந்தாலும், இவர்கள் பேச்சிலும் கவனம்‌ வைத்திருந்தவன், அவள் இயல்பாகப் பேசி இன்றுதான் கேட்கிறான்.

“சாப்பிடலையா?”

“சாப்பிடத்தான்… வா…” என எழுப்பிக் கொண்டு சாப்பிடும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.