பொன்மகள் வந்தாள்.12🌹

PMV.12.

“பொம்மி…”

“……….”

“பொம்மீஈ…” சற்று அதட்டலாகக் கேட்டது சக்தியின் குரல். 

“ம்ம்ம்…” என விலுக்கென நிமிர்ந்தாள்.

“என்ன பண்றீங்க?”

வாடிக்கையாளர்கள் வரிசை தன் முன் நிற்க,

‘இதென்ன கேள்வி?’ என்ற யோசனையோடு, “கேஷ் கலெக்ட் பண்றே.” என்றாள்.

“எப்படி?”

“கார்டு கொடுத்திருக்காங்க. பின் நம்பர் போட்டுட்டு இருக்கே.”

“அதுக்கு என்னோட பின் நம்பர் போடணும் மேடம். என் கார்டுக்கு உங்க பின் நம்பர் போட்டா எப்படி வொர்க் ஆகும்?” அவள் முன் நின்றிருந்த வாடிக்கையாளர் இவளைப் பார்த்துக் கேட்க, பொம்மி சக்தியின் முகத்தைப் பார்த்தாள். அவன் இவளையே பார்த்துக் கொண்டிருக்க,

“சாரி… உங்க பின் நம்பர் போடுங்க.” என மெஷினை அவனிடம் நீட்டினாள். 

அவன், “வேலைக்குப் புதுசா?” என்க, அதற்குள், “நீங்க இங்க வாங்க சார். அவங்க புதுசு. ட்ரெயினி….” என சக்தி கூறிவிட்டு,

“நீங்க அடுத்தவங்களைக் கவனிங்க…” என்றான் பொம்மியிடம்.

“பரவாயில்லை இவங்களே பில் போடட்டும். ” என்றான் அவன்.

வரிசை நகராமல் இருக்கவும், இவள் என்ன செய்கிறாள் என சக்தி நிமிர்ந்து பார்க்க, அவளோ பில்லிங் மெஷினில் அவன் கொடுத்த கார்டை சொறுகி விட்டு, பின் நம்பர்களை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டு இருந்தாள். 

இரண்டு நாட்களாகக் கவனிக்கிறான். எதிலும் அவளால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. செயல்களில் பதட்டம். நிதானமில்லாமல் அவசர கதியில் எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் போல் வேலை செய்கிறாள் என்பது தெரிகிறது. அதனால் தான் இன்று அவன் மில்லுக்குக் கூட கிளம்பவில்லை. 

எதிரில் நின்றவன் பார்வையோ, ஈ மொய்க்கும் பார்வையாய் அவள் மீதே இருக்கவே, பொம்மி என அதட்டி அழைக்க, அவனும் பார்வையை மாற்றினான். சக்தி அழைத்தும் அவன் பக்கம் போகாமல், தன் கையில் வாங்கிய மெஷினில் பின் நம்பரைப் போட்டுக் கொடுக்க, வாங்கிக் கொண்டவள், பில்லையும் கார்டையும் எடுத்து அவனிடம் நீட்டினாள். அவனது பார்வையோ வளிசலோ அவள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. 

கடையில் பேச்சு அரசல் புரசலாக கருப்பட்டியின் மூலம் சக்தியின் காதுகளை வந்தடைந்திருந்தது. ஒரு வேளை அது தான் அவளை இடைஞ்சல் செய்கிறதோ என யோசித்தான்.

வேறு‌மாதிரி பேச்சு அடிபடாமல் கல்யாணம் பேசுகிறார்கள் என்று தானே பேச்சு வெளியாகிறது என எண்ணிக் கொண்டான். ஆனால் அவன் ஒன்றை மறந்து விட்டான். கண் பார்வை வேண்டுமானால் நேர்கோட்டில் இருக்கலாம். முன்னால் மட்டும் பார்க்கலாம். ஆனால் நாக்கு நாலாபுறமும் சுழலுமே.

சக்தி அண்ணாக்கும் பொம்மி அக்காவுக்கும் சம்பந்தம் பேசுறாங்களாம்.? ஒருத்தரை ஒருத்தர் ஆசப்படுவாங்க போல… அதான் கேஷ் கவுன்டருக்கு மாத்திட்டாரா?இருக்கலாம்… யார் கண்டது… ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி கல்யாணப் பேச்சு காதலில் வந்து நின்றது. 

இவை எதையும் கண்டு கொள்ளவில்லை சக்தி. சில விஷயங்களைத் தோண்டிக் துருவாமல் விட்டுவிட்டாலே நீர்த்துப் போகும். முக்கியத்துவம் கொடுத்து நாமே அதற்கு கண், காது, மூக்கு வைக்க இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். 

இவளும் இரண்டு நாட்களாக சுரத்தையில்லாமல் இருப்பதுவேறு இது தான் காரணமோ என சக்தியை எண்ணம் கொள்ள வைத்தது. அவ்வப்பொழுது வேலை பார்ப்பவர்கள் பார்வை இவர்களை தொட்டுச் சென்றது. வேலை பாக்கும் வயசுப் பிள்ளைகளுக்கு இதை வைத்து ஒரு கிலுகிலுப்புத் தேவைப்பட்டது. ஆனால் சக்தியின் பார்வை அதற்கு கிஞ்சித்தும் இடம் கொடுக்கவில்லை. அவளோ இந்த உலகத்திலேயே இல்லை. 

இரண்டு நாட்களாக அவளுக்கோ மனது நிலை கொள்ளவில்லை. அம்மாவிடம் கோபமாகப் பேசியதை நினைத்தே உழண்டு கொண்டிருக்க கடை ஊழியர்களின் பார்வை மாற்றம் பெண்ணவள் கருத்துக்கு எட்டவில்லை. 

நமக்கு என்ன அப்படியொரு கோபம். வயசான காலத்துல அவங்களுக்குப் பிறகு நமக்கு யாரென்று யோசிப்பது சரிதானே? அதற்காக அவ்வளவு பெரிய வார்த்தையை விடுவதா? என்று மேலும் மேலும் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் உறுத்த, இன்று காலையில் இருந்தே அம்மா எழுந்திரிக்காதது வேறு, இவளுக்கு வேலையே ஓடவில்லை.. எப்பொழுதும் நடப்பது தான்.‌ எனினும் இரண்டு நாட்களாகப் பேசவும் இல்லை.‌ 

‘பேசிப்பாத்து வேலைக்கு ஆகவில்லை என அடுத்து மௌனப் போராட்டமா?’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள்… இன்று சிதம்பரம் கௌரியை மருத்துவ மனைக்கு அழைக்கும் வரை. அது வரை உடம்பு சரியில்லை என்பது தெரியவில்லை. வழக்கம் போல, இரண்டு நாட்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு இருந்துவிட்டு, சகஜமாகிவிடுவார் என்று நினைத்தாள். இதுதான் பெற்றமனம் பித்து. பிள்ளை மனம் கல்லு என்பதோ. இதுவே இவள் வீம்பு பிடித்திருந்தால், ஒரேநாளில்… என் தங்கம், பவுனு என்று கொஞ்சி சமாதானம் செய்திருப்பாரே.

“எந்திரிம்மா… ஆஸ்பத்திரி போலாம்.” எனத் தந்தை எழுப்பவும் தான் உடம்பு சரியில்லை என்பதே தெரிய… அவ்வளவு சுயநலவாதியாகவா மாறிவிட்டோம். ஒரு மனுஷி வீட்ல உடம்பு சரியில்லாம இருக்கறது கூடத் தெரியாத அளவுக்கு அப்படி என்ன வீம்பு எனத் தன்மீதே கோபமும், எரிச்சலும் மண்டியது.‌ 

“ம்மா… என்னம்மா பண்ணுது…” கட்டிலின் அருகில் அமர்ந்து வாஞ்சையாய்க் கேட்க,

“எனக்கு ஒன்னுமில்ல… நீ வேலைக்குக் கிளம்பு…” பலவீனமாகத்தான் வந்தது பதில். 

“நான் இன்னைக்குப் போகல… வாம்மா ஹாஸ்பிடல் போலாம்.” 

“ஆஸ்பத்திரிக்குப் போயி என்னத்தப் பண்ணப்போறேன். இன்னைக்கு என்ன புதுசாவா இருக்கு… என்னைக்கும் இருக்கறதுதான… நித்யகண்டம் பூரண ஆயுசுன்னு தான எம்பொழப்பு ஓடுது. அண்ணி கஷாயம் வச்சு கொடுத்துருக்கு. சரியாப் போகும்.” மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக் கொண்டே பேச,

“ஏம்மா அத்தையையும் கஷ்டப்படுத்துற. அதுக்கும் வயசாகுதும்மா.”

“நான் எது சொன்னாலும் உனக்குக் கோபம் வரும். இன்னும் எந்தப் பேரன் பேத்தியப் பாக்க என்னைய உயிர் வாழச் சொல்ற.” மேலும் மூச்சு வாங்க… சலிப்பு மண்டியது பேச்சில்.

“ம்மா… வீசிங் அதிகமாகுது… அன்னைக்கு மாடில போய் காத்துல உக்காந்தது தான் சேரல போல… எந்திரிம்மா… ஆட்டோ கூப்டுறே.”

வழக்கமாக வரும் மூச்சிறைப்பு தான். என்ன இப்பொழுது கொஞ்சம் இரத்தக் கொதிப்பும் துணைக்கு சேர்ந்து கொண்டது மகள் வாழ்க்கையை எண்ணி.

“விடு பண்டு… எப்புவம்‌ வர்றது தானே.‌ நான்பாத்துக்கிறே… நீ கிளம்பு. நானும் இன்னைக்கு ஊருக்கு கிளம்பலாம்னு இருந்தே. இப்படியே விட்டுட்டு எப்படி போறதுன்னு யோசனையா இருக்கு.”

“சரித்தை… நான் இன்னைக்குப் போயிட்டு, ரெண்டு நாள் லீவு சொல்லிட்டு வந்துர்றே… கொஞ்சம் பாத்துக்கோ… அதிகமாச்சுனா உடனே ஃபோன் பண்ணு.” எனக் கூறிவிட்டு வந்தவளுக்கு தான் மனது அன்னையின் நினைப்பாகவே இருக்க… ஏதோ நடக்கப் போவதாகவே ஒரு உள்ளுணர்வு. அதுதான் வேலையில் அத்தனை தடுமாற்றம். அவளுக்குத் தெரியும் தன்னுடைய நிலை. சிறு விஷயமும், புத்தி ஒரு நிலையில் நில்லாமல், தன்னை நிலை தடுமாற வைக்கும். சிந்தனை ஒரு நிலையில் நில்லாது. வார்த்தைகளில் நிதானம் இருக்காது. தெளிவாக யோசிக்க முடியாது என்று. அதனால் தான் கேஷ் கவுன்ட்டரில் உட்கார மாட்டேன். அது பணவிஷயம், என வாதாடிப் பார்த்தாள் அன்று.

கைபேசி ஒலித்து தன்னிச்சையாக பில் போட்டுக் கொண்டிருந்தவளைக் கலைத்தது. யாரென்று பார்க்க, தந்தையின் அழைப்பு. ஏனோ மனம் படபடத்தது. பதட்டம் அதிகமாக, ஒரு பயத்துடனே அழைப்பை ஏற்றாள். மூச்சிறைப்பு அதிகமாகி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தகவல். 

கைபேசியைக் கூட காதிலிருந்து எடுக்கவில்லை. அப்படியே சமைந்து உட்கார்ந்திருந்தாள். 

“என்னாச்சு பொம்மி…” இவளைப் பார்த்தவன் கருப்பட்டியை அழைத்து அவனிடம் பில் போடச் சொல்லிவிட்டு அவளருகில் வந்து வினவ…

“அம்மா… ஹாஸ்பிட்டல்ல… நான் போணும்.” உடைசலாய் வார்த்தைகள்.

“எப்படிப் போவ… எந்த ஹாஸ்பிடல்.”

“தெரியல…”

மருத்துவமனை பெயர் தந்தை சொல்லியிருந்தார். இவளுக்கு தான் அது கவனத்தில் இல்லை. 

“கருப்பட்டியக் கூட அனுப்பறீங்களா?” தானாகக் கேட்டாள். தன்னால் வண்டி ஓட்ட முடியாது என புத்திக்கு உரைத்தது.

மீண்டும் அவளது தந்தையின் கைபேசிக்கு அழைத்தவன், மருத்துவமனையைக் கேட்டறிந்து, அவளை கருப்பட்டியோடு அனுப்பி வைத்தான்.

“அங்க போய் பாத்துட்டு நிலைமை என்னன்னு உடனே ஃபோன் பண்ணுடா.” என்க,

”சரி ண்ணே.” என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அங்கே சென்று பார்க்க,.. வயதானவர்கள் இருவரும் கௌரியை அட்மிட் செய்து விட்டு செய்வதறியாது இருந்தனர், அவசர சிகிச்சைப் பிரிவின் முன்பு.

விரைவாக அப்பாவிடம் வந்தவள், “ப்பா… டாக்டர் என்னப்பா சொன்னாங்க?” 

“ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்கடி…” அருகில் அமர்ந்திருந்த அத்தை தொண்டையடைக்கக் கூறினார்.

இவள் கிளம்பும் வரைக்குமே சற்று தெளிவாகத்தான் இருந்தார். வழக்கமான ஒன்று தானே என்று‌ தான் அவளும் அத்தையிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். சொர்ணமும் சுடு தண்ணீர், கஷாயம், இன்ஹெலர் எல்லாம் பயன்படுத்தியும், மூச்சுத் திணறல் அதிகரித்தது. 

“எம்புள்ள…ய விட்…றா…தீங்க… ண்ணி.” மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டே அவர் கூறிய கடைசி வார்த்தைகள் இவை தாம். அவசரமாக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். 

தெம்பற்று தந்தை சேரில் அமர்ந்திருந்தது மகளை என்னவோ செய்தது. என்னவோ அவரும் மிகவும் பலவீனமாகப் போனது போல் இருந்தது. உடல் நலமில்லாமல் இருந்தாலும் இந்த அளவிற்கு கௌரியின் நிலை மோசமாகி அவர் பார்த்தது இல்லை. 

உடலின் பலம் என்பது உடலில் இல்லை. நம் எண்ணத்தில் இருக்கிறது. தள்ளாத கிழவியையும் அதிகாலை  எழுந்து, சமையல் செய்து பட்டணத்திலிருந்து வரும் பேரன் பேத்திகளை எதிர் நோக்கச் செய்வது உடல் பலமில்லை. மனோபலமும், பேரன் பேத்திகள் மீது கொண்ட ஆசையும் தான் மூதாட்டிகளைப் பலமூட்டுவது.  இங்கு சிதம்பரத்திற்கு மனைவியின் நிலைமை அவரையும் பலவீனப்படுத்தியது. 

“மாமனுகளுக்கு ஃபோன் போட்டேன் பண்டு. ஒருத்தன் வேல விஷயமா சென்னைக்குப் போயிருக்கானாம். மத்தவனுக நடவு போய்க்கிட்டு இருக்கு… சாயங்காலம் வர்றோம்னு சொல்றானுகடி.” என்று தற்போது உதவிக்கு யாரும் இல்லை என்பதை பொம்மியிடம் கூற, 

“நம்மலே பாத்துக்கலாம் த்தை. அவங்கள எதுக்கு தொந்தரவு பண்ற?” என்றாள்.

அவர்களுக்கு பொம்மியின் தந்தை மீது சற்று கோபம். குடும்ப கௌரவம், பெண்பிள்ளை விவகாரம் என தாங்கள் கூறியதை சிதம்பரம் கேட்கவில்லை என சொர்ணத்தின் மகன்களுக்கு மாமனின் மீது மனத்தாங்கல். அவனுகளை கோர்ட்டு, கேஸுன்னு போட்டு ஒரு கை பாக்கலாம் மாமா என்று சொர்ணத்தின் மகன்கள் கூற, 

“அவனுகளோடு சேந்து நம்ம புள்ள பேரும் தாம்ப்பா நாறிப்போகும். அதனால மரியாதையா ஒதுங்கிக்குவோம்.” என சிதம்பரம் சொல்லிவிட, அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையில், அது அவர்களுக்குக் கௌரவ குறைச்சலாகவும் போய்விட்டது.

மருத்துவர் வெளியே வர, வேகமாக அவரிடம் பொம்மி செல்ல.

“நீ யாரும்மா அவங்களுக்கு?” எனக் கேட்டார்.

“அவங்களோட மக.” என்க.

“போய் உள்ளே போய் பாருங்க. ரொம்ப பலவீனமா இருந்திருக்காங்க. பிபி வேற ரொம்ப லோவா ஆகியிருக்கு. முடிஞ்ச அளவு பாத்திருக்கோம்” என்று அவர் பட்டும் படாமல் கூறியதே அவளை உடையச் செய்தது. எப்பொழுதும் போல மூளை ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. அத்தை தான் அவள் அருகில் வந்து, “பொம்மி…” என உலுக்கினார்.

அதற்குள் கருப்பட்டியின் கைபேசி அழைக்க, “சொல்லுங்க ண்ணா.” என்றான்.

“………..”

“டாக்டர் சொல்றது ஒன்னும் சரியில்லைண்ணா. அவர் சொன்னதைக் கேட்டு பொம்மிக்கா பேயரைஞ்ச மாதிரி முழிச்சிட்டு நிக்குது. அவங்க அத்தையும், அப்பாவும் அழுதுட்டு இருக்காங்க. ஆம்பளைக யாரும் கூட இல்ல ண்ணா.” என்றான்.

“நீ உடனே இங்க வாடா!” என அழைத்தவன்,

அவன் வருவதற்குள் மேல் தளத்தில் பில் போட்ட பெண்களில் ஒருவரை அழைத்து, பொம்மியிடத்தில் அமர வைத்துவிட்டு, கருப்பட்டி வரவும், அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

மருத்துவமனையை அடைந்தவன், அங்கு விசாரித்து அவர்கள் இருக்கும் இடம் சென்றான்.

அத்தை அழுது கொண்டே இருக்க, பொம்மியோ அவளது தந்தையின் இடக்கையோடு கோர்த்துக் கொண்டு அருகில் கல்லென அமர்ந்திருந்தாள்.

மருத்துவர் சொல்லியும் உள்ளே சென்று அம்மாவைப் பார்க்கவில்லை. தைரியம் இல்லை. கைக்குள்ளேயே வைத்து வளர்த்தவர்… எங்கேயும் வெளியே விடப் பயந்து, நாலு பேரு கண்ணுபட்டுறும், எம்புள்ள என் கண்முன்னே நடமாடணும், என்று தன் பார்வை வட்டத்தை விட்டு எங்கும் செல்ல அனுமதித்ததில்லை. மகளைப் பிரிந்து தன் மனைவியால் இருக்க முடியாது என்பதற்காகத் தானே மகளுக்கு உள்ளூர் சம்பந்தமே பார்த்தது. 

“பொம்மி…” அவளது மந்த நிலையை சக்தியின் குரல் கலைக்க, நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் வெறுமை மட்டுமே. கண்ணீருக்கான சுவடே இல்லை. 

“டாக்டர் என்ன சொன்னாங்க?” 

“போய் பாக்க சொன்னாங்க.”

“பாத்தியா?”

“இல்ல.”

“ஏன்?”

“பயமாயிருக்கு.”

“வா… நான் கூட வர்றேன்.”

“வேண்டாம்.”

“அறிவிருக்கா… அவங்களும் அழுதுட்டு இருக்காங்க. உங்க அப்பாவும் ரொம்ப டல்லா இருக்காரு. நீயும் இப்படி உக்காந்திருந்தா உங்க அம்மாவை யாரு பாத்துக்குவா?” குரலை உயர்த்த, அது கொஞ்சம் அவளிடம் வேலை செய்தது.‌ இவ்வளவு நாட்களில் அவனுக்கு ஒன்று புரிந்தது. இவளிடம் பொறுமை வேலை செய்யாது. சிலரைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். சிலரைத் தட்டி வேலை வாங்க வேண்டும். இவள் இரண்டாம் ரகம். அவள் போக்கிலேயே சென்று செல்லம் கொடுத்து வளர்த்து விட்டிருந்த படியால், என்ன செய்ய வேண்டும் என அவளுக்கே தெரியாது. அதட்டினால் தான் வேலைக்காகும்.

“நான் என்ன பண்றது?” சிறுபிள்ளையாய்க் கேட்டவளை,

“எந்திரிம்மா முதல்ல… உள்ள போய் பாக்கலாம்.” என அவளை வலுக்கட்டாயமாக, எழுப்பியவன், அவர்களையும் அழைத்துக் கொண்டான். அவளது அம்மா இருந்த அறைக்குள் அழைத்து செல்ல, உபகரணங்கள் உதவியுடன் மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் கௌரி. நெஞ்சுக்கூடு மட்டும் ஏறி இறங்கியது. கண்கள் திறந்தே இருந்தது. 

மனைவியின் கால் அருகே சிதம்பரம் அமர்ந்து கொண்டார். சிறுபிள்ளையாய் தேம்ப ஆரம்பித்துவிட்டார்.

“கௌரி… அம்மாடீ…” சிதம்பரத்தின்  அழைப்பு. வயதைப் போலவே குரலும் மிகவும் தளர்ந்திருந்தது. அவரது கை மனைவியின் கால்களைப் பிடித்து விட்டது. ஏக்கம் முழுதும் குரலில் தேக்கி அழைக்க, அதற்கு மேல் மூடியாமல் தொண்டை அடைக்க, தழுதழுத்தது குரல். 

மனைவியை அந்த நிலைமையில் அவரால் பார்க்க இயலவில்லை. குழந்தை இல்லா காலத்தில் தனக்கு மனைவிக்கு மனைவியாகவும், குழந்தைக்கு குழந்தையாகவும் இருந்த காதல் மனையாட்டி ஆயிற்றே. 

கௌரியின் கடைக்கண்களிலிருந்தும் கண்ணீர் சொட்டுகள். கால்மாட்டில் சிதம்பரம் அமர்ந்திருக்க, கௌரியின் கை மகளை நோக்கி நீண்டது. உள்ளே வந்தவள் அன்னையிடம் செல்லாமல் சுவரோரமாகவே நின்று கொண்டாள். அவளுக்கு அருகே செல்ல தைரியம் இல்லை. தன் வார்த்தை தான் பலித்து விடுமோ என்ற பயம். சக்தி அவளைப் பார்க்க, அவள் அசையாமல் நிற்கவும்,

“பொம்மி… கூப்புடுறாங்க பாரு. போ.” என்றான். அவளது பார்வை நிலைகுத்தி நின்றதே ஒழிய, தந்தையைப் போலவோ, அத்தையைப் போலவோ கண்ணீர் வடிக்கவில்லை. மகள் இனி என்ன செய்வாளோ என்ற எண்ணம் மட்டும் தாயின் மனதில் அழுத்த, கண்ணீராய் வடிந்து கொண்டு இருந்தது. அவருக்கு தன் முடிவு தெரிந்ததோ என்னவோ, மீண்டும் கை அசைய, சக்திதான் அவளை கைபிடித்து இழுத்துக் கொண்டு, அவரின் அருகில் அழைத்துச் சென்றான். அது கூட அவளுக்கு சுரணை இல்லை. அவளது கையெடுத்து, நீட்டிய கரத்தில் வைக்க, இருவரது கரங்களையும் சேர்த்துப் பிடித்தே அவரது கை துவண்டது. கண்ணீர் வடிந்தபடியிருக்க, பார்வை நிலைகுத்தியது. மானிட்டரில் நேர்கோடு காட்டி சத்தம் எழுப்ப, செவிலி விரைந்து வந்தார். நிலமையை ஊகித்து மருத்துவரை அழைக்க விரைந்தார். 

“அண்ணீ… அடிப்பாவி, தலையில கல்லப் போட்டுட்டியே?” வயதின் அனுபவம், தன் அண்ணியின் முடிவை சொர்ணத்திற்கு உணர்த்த… அத்தையின் ஓலம் தான் அந்த அறையை நிரைத்தது. 

பொம்மியின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை தாய்க்காக. 

“நான் செத்தாலாவது எம் மக மனசுவிட்டு அழுது அவ மனபாரத்தை எல்லாம் வெளியேத்துவாளா அண்ணி…” எப்பொழுதும் கௌரி தன் மகளை நினைத்துப் புலம்பும் வாக்கியம் இது.