பொன்மகள் வந்தாள்.13🌹

PMV.13.

“அழுதுறு‌ ம்மா.”

“முடியல மாறன்.”

“கல்லு மாதிரி இருக்காத. இத்தனை அழுத்தம் ஆகாது.”

“……..”

“எங்கிட்ட வாயேன்.” கைநீட்டி அழைத்தான் சக்தி.

“ம்ம்கூம். என்னால முடியாது.”

“ஏன் முடியாது?”

“உங்களுக்கு சொன்னாப் புரியாது.

வெடிச்சு அழணும்னு ஆத்திரமா இருக்கு‌ மாறன். முடியல.”

“…………”

“என்னால அழ‌முடியாது.‌ சிரிக்க முடியாது. சந்தோஷப்பட முடியாது. துக்கப்பட முடியாது. வெட்கப்பட முடியாது. செத்துருக்கறது என்னோட அம்மா. அதுவும் எத்தனை கோயில்… எத்தனை விரதம்… எத்தனை ஏச்சுப்பேச்சு… எத்தனை மலடிப்பட்டம்… நான் பொறக்கற வரைக்கும் எந்த நல்லது கெட்டதுக்கும் கூட போனதில்லையாம். இப்படி தவமா தவமிருந்து என்னையப் பெத்த அம்மா செத்துக்கெடக்கு.”

“……..”

“பெத்தவங்களுக்கு கொள்ளி வைக்க ஆம்பளப் புள்ளையும், மாரடிச்சு அழுகத்தான் பொம்பளப்புள்ளயும் கேப்பாங்களாம். என்னால எங்கப்பாவைக் கட்டிப்புடுச்சுக் கூட ஆறுதலா அழமுடியல. என்னைய ஒருத்தன் உயிருள்ள ஜடமா ஆக்கிட்டான் மாறன்.” கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றவள், சக்தியை நேருக்கு நேராகக்கூடப் பார்க்காமல் மேலே பார்த்தவாறே வெறுமையான குரலில் கூற,

“ஒரு நிமிஷம் என்கிட்ட வாம்மா.” தன்மையாய் அவளை அழைத்துக் கொண்டே, அவளருகில் சக்தி வந்திருந்தான்.

“என்னால முடியாதுனு சொல்றேன்ல. என்னோட நிலமை தெரியாம பேசாத.” மெதுவாக அழமுடியாத இயலாமை கோபமாகத் தலை தூக்கியது.

“அப்படி என்னாடீ  உன் நிலமை? ஆற்றாமையாய்க் கேட்டவன், “சொன்னாத்தானே புரியும்.” எனக் குரல் உயர்த்த,

“புரிஞ்சுக்க முடியாது. சொன்னா நீயும் என்னையப் பைத்தியம்னு சொல்லுவ. பைத்தியம் எங்கயாச்சும் அழுது பாத்துருக்கீங்களா?” ஒருமையும் பன்மையும் கலந்துகட்டியது பேச்சில். 

“உன்னப் போய் யாராவது அப்படி சொல்லுவாங்களா லட்டு…” எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் சென்றவன், அவளை இழுத்து ஆதுரமாய்த்தழுவி முதுகு நீவியவன், “அழுதுருடீ லட்டு.” எனக்கூற,

ஆயிரம் ஆறுதலுக்கு ஈடாய் இருந்தது அவனது அணைப்பு. அப்படியே நெஞ்சத்தில் தஞ்சம் கொள்ள மனம் ஏங்கியது. என்னை விட்டுவிடாதே எனக் கெஞ்ச வேண்டும்போல் இருந்தது. ஆனால் அவளால் தான் ஒன்ற‌முடியவில்லை. அதற்குள் பரபரவென மூளைக்குள் ஏதேதோ எண்ணங்கள் கரையான் கூட்டமாய் அரிக்க, தன் பலம் கொண்ட மட்டும், அவனது நெஞ்சில் கைவைத்து அழுத்தித் தள்ளினாள். தடுமாறி நின்றான் அவன்.

“சொன்னாப் புரியாதா உனக்கு? மனுஷியோட நிலமை புரியாமா ஆறுதல் சொல்றே ஆணியப் புடுங்கறேன்னுட்டு கிட்ட வந்தே… நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். என்ன… என்னையப் பாத்தா பரிதாபமா இருக்கா? ஐயோ பாவம்னு தோணுதா? அந்த ஈனவெங்காயமெல்லாம் இங்க  யாருக்கும் வேண்டாம். வந்த வேல முடிஞ்சுதுல்ல… நீ கெளம்பு.”

அழமுடியாத ஆத்திரம் அவளது வார்த்தைகளில் வெடித்துச் சிதறியது. தேள்கொடுக்காய் கொட்டியது. கூறிய நகமாய் சதை கீறிப்பார்த்தது. அப்படியாவது அவளது ஆத்திரம் தீரட்டும் என்று அசையாமல் நின்றான். 

“என்ன இதச்சாக்கா வச்சு எங்கிட்ட நெருங்கலாம்னு பாக்குறியா? அந்தளவுக்கு நான் ஒர்த்தான பீஸ் இல்ல. தாய்க்கெழவி சாகப்போகயில கையைப் புடிச்சதை வச்சு வேறெதுவும் மனசுல வச்சுக்காதே.  நானொன்னும் சாமிக்குப் போட்ட மாலையில்ல. மறுபடியும் வீட்ல கொண்டு‌ வந்து வைக்கிறதுக்கு. பொணத்துக்குப் போட்ட மாலை. தெருவுல கூடப் போட‌முடியாது. இனி சுடுகாட்டுல தான் போடணும்.”

“ஏன் பொம்மு இவ்ளோ கொடுமையான வார்த்தையெல்லாம் பேசுற. வேணான்டீ. எதுனாலும் மறக்க முயற்சி பண்ணுடீ. அழுதுட்டாலே உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லடீ.”

துக்கமென்றால் அழுகவும், சந்தோஷம் எனில் சிரிக்கவும் தெரிந்த ஒரே மிருகம் மனிதன் தான். சிரிப்பதற்கு மட்டுமல்ல சிலநேரங்களில் வாய்விட்டு அழுவதற்கும் கொடுப்பினை வேண்டும். நினைத்த நேரத்தில் அழும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.  ஆனால் ஒரு மனிதனின்‌ மிருகச் செயல் ஒருத்தியை அதற்கும் தகுதி இல்லாதவளாக்கி விட்டதுதான் கொடுமையிலும் கொடுமை. வெளியேற்ற முடியாத அழுத்தம், அவளுக்குள்ளேயே இறுகிப்போய் அவளையும் கரும்பாறையாய் மாற்றியது.

“அப்ப… என்னையப் பைத்தியம்கறீயா?”

“நான் போயி உன்ன அப்படி சொல்லுவனா ம்மா?”

“அப்ப பேய் புடிச்சவங்கறீயா? மத்தவங்க அப்படித்தானே சொல்லுவாங்க. ஏற்கனவே என்னைய இந்த ஊரு ஆளுக எல்லாம் அப்படித்தான் சொன்னாங்க. இப்ப பாரு ஊருக்காகக் கூட என்னால அழ‌முடியலயே மாறன். இவ எல்லாம் என்ன பொம்பளைனு தானே சொல்லுவாங்க?” அம்மாவின் இழப்போடு சேர்த்து பழைய நினைவுகளையும் கிளறிவிட்டிருந்தது அவள் பிறந்து வளர்ந்த ஊர்.

“நீ ஏன்டி‌ ஊருக்காகனு பாக்குற. உங்கம்மாவுக்காக,  உன் துக்கத்தை வெளியேத்தறதுக்காக அழச் சொல்றேன் பொம்மு. இல்லைனா நெஞ்சு வெடிச்சுறும் லட்டு. அழுதுறுடீ.” குழந்தையிடம் கெஞ்சுவது போல் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“அப்படிக் கூப்பிடாதே. அதுக்கு எனக்கு அருகதையில்லை. நெஞ்சு வெடிச்சு சாகுறே போ. என்னால யாருக்கும் நிம்மதி இல்ல.”

“மனசு விட்டுப் பேசு லட்டு. எல்லா ஆதங்கத்தையும் கொட்டிருடி.” மென்மையாகவும், அதே நேரத்தில் சற்று வன்மைமேலிடக் கேட்க, 

“என்னால யாரையும் நேருக்கு நேராப் பாக்க முடியாது மாறன். எந்த ஆம்பளை எங்கிட்ட  வந்தாலும், அவன் அண்ணனா தம்பியா… மாமனா மச்சானா… சித்தப்பாவா பெரியப்பாவா… இப்படி என்ன உறவு முறைனு கூடப் பாக்காம, அவங்க என்னைய ஏதாவது பண்ணிருவாங்களோனு விபரீத எண்ணமெல்லாம் என்னையும் மீறித்தோணும் தெரியுமா? கன்ட்ரோல் பண்ணவே முடியாது. ஓ…ன்னு கத்தணும்போல இருக்கும். எங்க அப்பா கிட்டக்கூட என்னால சகஜமா உட்கார முடியாது. ட்ரீட்மென்ட்க்குப் பின்னால தான் என்னால எங்க அப்பா கிட்டயே சகஜமாக முடிஞ்சது.” அவள் கூறியதை வைத்து ஏதோ மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள் எனப் புரிய,

அதற்குமேல் அவளது நிலமை கண்டு கட்டுப்படுத்த முடியவில்லை. 

முன்தினம் அவளது அன்னை இறந்தலிருந்து பார்க்கிறான். அதிர்ச்சியில் கண்கள் நிலைகுத்தி நின்றவள் தான். மூச்சுவிடும் சிலையாகிப் போனாள். அத்தையும், அப்பாவும் அழுது கொண்டிருக்க,

சொர்ணத்தின் மகன்களுக்கு இவன் தான் ஃபோனில் தகவல் கூறினான்.

“இங்க எடுத்துட்டு வர்றாங்களா? இல்ல… அங்கயே எல்லாம் பண்றாங்களா?” எனக் கேட்க, கைபேசியை சிதம்பரத்திடம் கொடுத்தான்.

“ஊருக்கு தாம்ப்பா எடுத்துட்டு வரணும்.” என்க. ஃபோன் சக்தியிடம் மாறியது.

“சார்… ஒரு உதவிமட்டும் பண்ணுங்க. ஆம்புலன்ஸ் புடிச்சு அனுப்பி வச்சுறுங்க. மத்த ஏற்பாடெல்லாம் இங்க பாத்து வச்சுர்றோம்.” எனக் கேட்டுக் கொள்ள, அதன் பிரகாரம் சக்தியும் மருத்துவமனை ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து விட்டு, ஆம்புலன்சில் ஏற்றினான். 

“அண்ணே… வெளியூர்ல செத்தவங்கள ஊருக்குள்ள கொண்டுபோக விடமாட்டாங்ள்ல?” என சொர்ணம் தன் அண்ணனிடம் அழுகையினூடே ஊர்வழக்கத்தை வினவ,

“ஊருக்குள்ள தானம்மா கொண்டு போகக் கூடாது. நம்ம பண்ணவீட்டுக்குக் கொண்டு போயிருவோம். அங்க யாரும் ஒண்ணும் சொல்ல முடியாது.”

அவருக்கு தன் மனைவியின் இறுதி ஊர்வலம், தனது ஊரில் நடக்க வேண்டும். தன் ஊர் மண்தான் தன் மனைவிக்கு வாய்க்க வேண்டும்… இங்கு பட்டணத்தில், இறந்தது யார் என்று கூடத்தெரியாமல் தலைநீட்டிப் பார்க்கும், ஊமைஊர்வலம் தன் மனைவிக்கு வேண்டாம் என எண்ணினார். 

அத்தைக்கும் அதற்குள் அழுதே மயக்கம் வந்திருக்க, அவருக்கும் முதலுதவி செய்தே ஆம்புலன்சில் ஏற்ற வேண்டியதாய்ப் போயிற்று. 

இருவரும் வயதானவர்கள். இவளோ பிரமை பிடித்துப் போய் நிற்க, 

“சார்… வேர யாரும் துணைக்கு இல்லையா. பொணத்தக் கொண்டுட்டுப் போறது. இருட்டிருச்சு. ஆம்பளைங்க யாரும் கூட வந்தா நல்லா இருக்கும்.” என டிரைவர் அவருக்குரிய பயத்தில் கேட்க,

“நானே வர்றே.” என்றான்.

தன் அம்மாவிற்கு அழைத்து விபரம் கூறியவன், விடிவதற்குள் வந்துவிடுவதாகத் தகவல் கூறினான். 

“சரி சக்தி… எதனாலும் ஒருதடவைக்கு நாலு தடவை நல்லா யோசிச்சு முடிவு பண்ணுப்பா.” மகனிடம் தாய் கூறிய இந்த வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என புரியாத மகனா என்ன?

“சரிம்மா… சாப்பிட்டு மாத்திரையப் போடுங்க. நான் காலையில வந்துர்றே.” என அழைப்பைத் துண்டித்தான். கருப்பட்டியை அழைத்து கடையில் பார்க்க வேண்டியதைக் கூறிவிட்டு, காலைக்குள் வந்துவிடுவதாக அவனிடமும் கூறினான்.

ஊருக்குள் கொண்டு செல்லாமல், களத்து வீட்டிற்கே செல்ல, அதற்குள் சொர்ணத்தின் மகன்கள், களத்திலேயே பந்தல், சேர், மேளம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தனர். உறவுகளுக்கும் தகவல் கூறிவிட அருகிலிருந்தவர்கள், ஒருசிலர் வந்திருக்க, இறுதிச்சடங்கு எப்படியும் மறுநாள் தானே நடக்கும் என அறிந்தவர்கள், நாளைக்கி போய்க்கலாம் என முடிவு செய்திருந்தனர். அத்தையின் மருமகள்கள் பொம்மியைக் கட்டிப்பிடித்து அழ, அப்பொழுதும் அவள் இறுக்கமாகவே இருந்தாள். 

“உன் கவலை தான்டீ உங்க அம்மாவுக்கு.” 

“உன் நெனப்புலயே உசுர விட்ருச்சு.”

என ஆளுக்கொன்றாய்க் கூற, சுதாரித்த சொர்ணம்… 

“பண்டு… உள்ள போ.” எனக் கூற, அவள் நகராமல் இருந்தாள்.

சக்திக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அறிமுகமில்லாத இடம். மீண்டும் வந்த ஆம்புலன்சிலேயே திரும்பி விடுவோமா என யோசித்தான். சொர்ணத்தின் மகன்களிடம் ஆம்புலன்ஸ் வாடகையை வாங்கி கணக்கு முடித்தான். 

ஆனால் இவளை இப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. மருத்துவமனையிலிருந்து பார்க்கிறான். பித்துப்பிடித்தது போலவே பிரமை பிடித்துப் போய் இருக்க… சாவிகொடுத்த பொம்மையாய் சொல்வதைச் செய்கிறாள். ஐஸ்பெட்டியில் வைக்கப்பெற்ற அம்மாவின் சடலத்தையே வெறித்துக் கொண்டு தந்தையின் அருகில் அமர்ந்து விட்டாள். அழவும் இல்லை. அப்படி என்ன அழுத்தம் அவளுக்குள் என்று எண்ணம்‌‌வர, விட்டுச் செல்ல மனமில்லாமல் அவனும் அங்கேயே ஆண்களோடு சேரில் அமர்ந்துவிட்டான். உள்ளூர் ஆட்கள்

ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, விடிந்தபிறகு வெளியூர் ஆட்களும் வர கூட்டம் சேர்ந்தது.

நேரம் கடந்து கொண்டிருக்க, ஊர்ஆட்கள் சேர்ந்து “வயசானவங்க…சீக்கிரம் எடுத்தரலாம்.” என பேச… மற்ற வேலைகள் துரிதமாக நடந்தது. செய்ய வேண்டிய சாங்கியங்களை செய்துவிட்டு, பெண்பிள்ளை என்பதால் கொள்ளியை பொம்மி தொட்டுக்கொடுக்க, வாங்கிக்கொண்டு, கௌரி தனது இறுதியாத்திரையைத் தொடங்கினார். 

வந்தவர்கள் சுடுகாட்டோடு கிளம்பிவிட, சொர்ணத்தின் மகன்களொடு சக்தியும், சிதம்பரத்தோடு வீட்டிற்கு திரும்பி வந்தான். செலவு கணக்குப் பார்க்க பந்தலில் ஆண்கள் அமர்ந்துவிட, பெண்கள் வீடுவாசலைக் கழுவிக்கொண்டிருந்தனர். பொம்மியைத் தேட, அருகிலிருந்த அறையில் அத்தையின் குரல் கேட்க அங்கு சென்றான்.

ஈரத்தலையோடு முழங்காலைக்கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள். கையில் காபியை வைத்துக் கொண்டு அவளிடம் குடிக்குமாறு கெஞ்சிக் கொண்டருந்தார் சொர்ணம். இவன் வந்ததைப் பார்த்து எழுந்து கொண்டவள், சுவரோரம் சாய்ந்து நின்று கொள்ள,

“வாப்பா…” என்க,

“அதக் கொடுங்கம்மா.” என கேட்க, அத்தை கஃபியை சக்தியின் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.

“நீங்க வந்ததைக் கூட கவனிக்கல மாறன்…” என்றாள் மெதுவாக. சக்தி முன்சீட்டில் ஓட்டுனருடன் அமர்ந்து கொள்ள அவள் கவனிக்கவில்லை.

இவள் என்ன இவ்வளவு பேதலித்துப் போயிருக்கிறாள் என்றுதான் நினைத்தான்.  

“நீயே இப்படி இருந்தா இனிமே உங்க அப்பாவப் பாத்துக்கறது யாரு?” எனக்கேட்க, கண்களில் விரக்தி தாங்கிப்பார்த்தவளைத்தான், வாய்விட்டு அழச்சொல்லி ஆற்றுப்படுத்த முயன்று கொண்டிருக்கிறான். மனம் திறக்க மறுக்கிறாள்.

அவளது வாய்வார்த்தைகளில் இருந்த உக்கிரத்தை கொண்டு, ஏதோ மனதளவில் பிரச்சினை என ஊகித்தவன், சட்டென கைபிடித்து இழுத்தவன், அவள் சுதாரிக்கும் முன், அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு முதுகு நீவிவிட, அவளது இதயம் துடிப்பது இவனுக்குக் கேட்டது. படபடத்து பெருமூச்சு வாங்கியது. உடலில் நடுக்கம் உணரமுடிந்தது. அவனுக்குள் அடங்க முடியாமல் திமிறியவள், அவனின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தவித்தாள், ஏதேதோ எண்ணங்கள் மூளைக்குள் கொதித்தது. ஒருநிலையில் கொதித்தது அடங்கித்தானே ஆக வேண்டும். சற்று நேரம் தாக்குப்பிடித்து அடங்கியது. சில கணங்களில் விடுபட விருப்பமில்லாமல், அவனது அணைப்பிற்குள் ஆசுவாசப்பட… அவளது தோளில் விழுந்த அவனது  கண்ணீரின் வெம்மையில், நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். கன்னத்திலும் சொட்டியது… அவன் கண்களிலும் கண்ணீர் தன்னவளின் நிலை நினைத்து. பெற்றவர்கள்  தவிர்த்து தனக்காக ஒருவன் கண்ணில் கண்ணீர் கண்டு, 

“நீ ஏன் அழற. எனக்காகவா… அம்புட்டுப் பாவமாவா தெரியறே?” தொண்டை கமறியது. ஏனோ அவனது கண்ணீரைப் பார்க்க முடியவில்லை. இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. அதிகம் பேசியதாலேயோ என்னவோ அவனது கண்ணீரின் வெப்பச் சூட்டில் இவளது இரும்புத் திரையும் இளக்கம் கண்டது… தகர்க்கப்பட்டது. கரும்பாறையாகவே இருந்தாலும் மெல்லிய வேருக்கு வெடித்து தானே ஆகவேண்டும்.  வெடித்தாள்… ஆங்காரமாக, இத்தனை நாளாக வெளியேற்றப்படாத‌ மன அழுத்தங்களும்,‌ ஆத்திரமும், கோபமும், இயலாமையும் அழுகையாக மடைஉடைத்த வெள்ளமென வெளியேற, அவளது குரல் அந்த அறையையே கிடுகிடுக்கச் செய்தது. அவனுக்கே ஒருகணம் மூச்சு வாங்கியது… அவளின்‌ நீண்ட அழுகையில். இறுகிப் போனவளை உடையவிட்டான். நெஞ்சு வெடிப்பதுபோல் அழுதாள். 

மகளின் அழுகைச் சத்தம் கேட்டு உள்ளே வந்த சிதம்பரத்திற்கு, மனைவியின் இழப்பைவிட மகளின்‌ அழுகை நெஞ்சைப் பிசைய,‌ வெளியேறிவிட்டார். மகளின் அழுகை ஒருபக்கம்  ஆனந்தமாக இருந்தது இந்த விசித்திரத் தந்தைக்கு. 

முதுகு நீவிக்கொடுத்தவன், “போதும் பொம்மு. மூச்சு வாங்கது பாரு.” என்றான். அப்பொழுதும் அவன் கைக்குள் இருக்க, சுதாரித்தவள் விலக முற்பட, பிடியைத் தளர்த்தினான். கண்களைத் துடைத்தவன், “இரு தண்ணி கொண்டு வர்றே.” என வெளியேற முற்பட,

“உங்களுக்கு எது எங்க இருக்குனு எப்படித் தெரியும்?  இருங்க நாம்போயி உங்களுக்கும் கொண்டுட்டு வர்றே.” என்றவள்

வெளியே சென்று பார்க்க, தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்திருந்தனர். ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு வந்தாள்.

தண்ணீரைக் கொடுத்தவள், அவளும் சுவற்றில் சாய்ந்து கீழே கால்நீட்டி அமர்ந்து கொண்டாள். சக்தி அருகில் இருந்த ஷோஃபாவில் அமர்ந்திருந்தான். அவள் தண்ணீர் எடுக்க வெளியே செல்ல, அறையைப் பார்வையிட அது பொம்மியின் அறை என்பது தெரிந்தது. இப்பொழுதுதான் திறந்திருப்பார்கள் போலும். தூசி படிந்து இருந்தது. மற்றபடி அனைத்தும் ஒழுங்காக அடுக்கி ஒரு இளவரசியின் அறைபோல் மகளுக்கு அமைத்துக் கொடுத்திருந்தார் சிதம்பரம். 

“செக்ஸ்னா என்ன?” 

தன் காதில் விழுந்த கேள்வியில்.

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென புரையேற, தண்ணீரோடு இறும ஆரம்பித்தான். 

கண்களிலும் நீர் வடிய பொம்மியைப் பார்க்க,

“என்னடா இவ! அம்மா செத்த துக்கம் கொஞ்சங்கூட இல்லாமப் பேசுறாளேனு பாக்குறீங்களா? இது எங்கம்மாவுக்கு விடுதலை தான்.‌ உடம்பாலயும், மனசாலயும் ரொம்ப நொந்து போச்சு. வயசும் ஆகிப்போச்சு பாருங்க. நான் பொறக்கும் போதே எங்கம்மாவுக்கு நாப்பத்தியஞ்சு வயசாம்.  இப்பவாவது நிம்மதியா இருக்கும்.”

அவள் ஏதோ சொல்ல விழைகிறாள் எனப் புரிய அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“எதொன்னுலயும் பாசிட்டிவ மட்டும் பாருன்னு சொல்லிச் சொல்லியே, இப்படி ஆகிட்டேன். ரொம்ப ப்ராக்டிகலா யோசிக்கறதா நெனச்சு இந்த மாதிரி ஏதாவது உளறுவே. அதெல்லாம் கண்டுக்காதீங்க.” எனக் கூறியவளிடம்… மறுபேச்சு பேசாமல்… மனம் விட்டுப் பேசட்டும் என அமைதி காத்தான். 

“இப்ப சொல்லுங்க… செக்ஸ்னா என்ன?” என மீண்டும் அதே கேள்வியைக் கேட்க,

“நீ இப்படிக் கேட்டதும் எனக்கு ஒரு கதை தான் ஞாபகம் வருது.” என்க,

“அப்படினா நீங்களும் ஒரு கதை சொல்லப் போறீங்களா? சொல்லுங்க… சொல்லுங்க…” 

“ம்ம்ம்… ஒரு வாரப்பத்திரிக்கையில படிச்சது. ரெண்டுங்கெட்டா வயசுப் பையன் ஒருத்தன், ஒரு பெரியவர்கிட்டப்போயி… இப்ப நீ கேட்ட மாதிரித்தான் கேட்டானாம். அவருக்கு முதல்ல அதிர்ச்சியா இருந்தாலும், பையன் ஏதோ அறைகுறையாத் தெரிஞ்சுக்கிட்டு, கெட்டுப்போயிடப் போறானுட்டு, அவரும் முழுசா அவனுக்கு விளக்கம் சொல்லிப் புரியவச்சாராம். அவனும் பொறுமையாக் கேட்டுட்டு இருந்துட்டு, இம்புட்டு வெவரத்தையும் இதுல எப்படி எழுதறதுன்னு ஒரு அப்ளிகேஷன் ஃபார்மக் காட்டுனானாம். அதுல செக்ஸ்ங்குற காலத்துல F/M ன்னு இருந்ததாம்.” என்று சொல்ல மெலிதாகச் சிரித்தாள். மனம்விட்டு அழுததாலோ என்னவோ சிரிப்பது எளிதாயிற்று.

“நீ கேட்டவுடனே இந்தக் கதைதான் ஞாபகம் வந்துச்சு” என்க,

“எனக்கும் அது மட்டும் தான் தெரியும். செக்ஸ்னா அப்ளிகேஷன் ஃபாரம்ல டிக் பண்ற F/M அப்படிங்கறது மட்டும்தான் தெரியும்… கல்யாணம் பண்ணும் போது.” என்று கூறிவிட்டு சிரித்தாள். ஏனோ இப்பொழுது அச்சிரிப்பில் உயிர்ப்பு இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. 

 

(Hi friends ❣️ இப்படிக் கேட்டவுடனே இது ஏதோ 18+ அப்படின்னு எல்லாம் நெனச்சுறாதீங்க மக்களே! அப்ப எல்லாரும் எல்லா தெரிஞ்சுகிட்டா கல்யாணம் பண்றாங்கனும் சண்டைக்கு வரக்கூடாது. நம்ம நாட்டைப் பொறுத்தவரை களவியலை ஒரு பெண்ணுக்கு, அறிமுகப்படுத்துறது அவளோட புருஷனாத்தான் இருக்கணும். ஆண்கள் இதில் விதிவிலக்கு. 

கதையில் பொம்மியோட குழந்தைத் தனத்தை புரியவைக்கத்தான் அந்தக் குட்டிக் கதை நண்பர்களே. மற்றபடி இது அப்டிஇப்டி கதை எல்லாம் இல்லை.  இன்னும் நான் அந்தளவுக்கு வளரல. இது 40+நெருங்கின பெற்றவர்களுக்குனு  வேணும்னா சொல்லிக்கலாம். பெண்ணுக்குத் திருமணம் பேசும்போது பெற்றவர்கள் பெண்  எந்த அளவுக்கு மனதளவில் தயாரகியிருக்கிறாள் என்பதை கவனிக்க வேண்டும். இப்ப எல்லாம் தியரியாகப் பள்ளிப் பாடத்திலேயே படித்து விடுகிறார்கள். அதனாலேயே எனக்கு எல்லாம் தெரியும்  என நினைக்கும் விடலை மனசுதான் இந்தக்காலத்துப் பிள்ளைகளிடம். எனவே தான் அவர்களுக்கு முதலில் தியரியாக களவியல் அறிமுகமாகிவிடுகிறது. பிராக்டிகலாக கற்பியல் புரிவதில்லை. இதுவும் science group எடுக்கும் பிள்ளைகளுக்குதான்.)