பொன்மகள் வந்தாள்.14🌹

PMV.14.

 

“கௌரி நம்ம பொம்முவ பெரிய வீட்ல பொண்ணு கேக்கலாங்கற அபிப்ராயத்துல இருப்பாங்க போல.” சாப்பிட்டு முடித்தவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்து முதுகை இலகுவாக்கியவாறே, மனைவியிடம் கூற,

“என்னங்க சொல்றீங்க? அவ இன்னும் பன்னெண்டாவதே முடிக்கல. இப்ப தான் பரீட்சையே எழுதறா. பதினேழு கூட முழுசா முடியல. அதுக்குள்ள கல்யாணமா? உங்ககிட்ட யாரு சொன்னது?” மகளை இன்னும் சிறுபிள்ளையாகவே நினைக்கும் தாயின் பதட்டத்தோடு, சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுங்க வைத்துக் கொண்டே கடகடவென கேள்விகளைத்தொடுக்க, 

“ஏன் இத்தன கேள்விய அடுக்குப் பானையாட்டம் அடுக்குற?”

“அப்பறம்… சின்னப்புள்ளய பொண்ணு கேட்டா?”

“ரைஸ்மில்லுக்கு முருகேசன் தங்கச்சி காளியம்மா வந்திருந்துச்சு. அதுதான் எங்க வீட்டுப் பயலுக்கு உங்க பொண்ண கேக்கலாம்னு இருக்கோம்னு சொல்லுச்சு.”

“அந்தக் காளியம்மா இருக்கற வீட்டுக்கா? ஏன்… அது மகளத்தான கொடுக்கிறதா பேச்சு அடிபட்டுச்சு?”

“ஏதோ சாதகம் பொருந்தலையாம். ரெண்டாவது பயலுக்கு பாத்துக்கலாம்னு முருகேசன் சொல்லிட்டாப்ல போல. பெரியவீட்டு முருகேசனப் பத்திதான் தெரியுமே. தண்ணி குடிக்கணும்னா கூட ராகுகாலம் எமகண்டமெல்லாம் பாக்குற ஆளாச்சே. பஞ்சாங்கத்த கக்கத்துல வச்சுட்டு சுத்தற ஆளு.”

“அப்படியாப்பட்ட வீட்டுக்கு பொண்ணு கொடுப்பாங்கலாமா? அதுவுமில்லாம சின்னப் புள்ளயக் கேப்பாங்கலாமா?”

“இன்னும் முடிவாத் தெரியல. சாதகம் கேக்கலாம்னு இருக்கோம்னு சொல்லுச்சு. கௌரி…‌ நீ ஒன்ன மறந்துட்ட. நம்ம‌ பிள்ளைக்குதான் சின்ன வயசு. நமக்கு என்ன வயசாச்சுன்னு நினச்சுப் பாத்தியா?” சிதம்பரம் தங்கள் வயதை மனதில் நிறுத்தி, மகளின் வாழ்க்கையில் முடிவெடுக்க விழைந்தார். இவர்கள் கேட்காவிட்டாலும் விரைவில் மகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவர் தான். தங்கள் வசதிக்குத் தகுந்த மாதிரி உள்ளூரிலேயே அமைந்தால் அவருக்கும் மகளைப் பிரிய வேண்டாமே என்ற எண்ணம். 

“ஏங்க… அதுக்காக அந்தப்‌ பயலுக்குப் போயா கொடுக்கணும்னு சொல்றீங்க? பார்வைக்கு லட்சணமாத்தான் இருக்கான். ஆனா இப்பவே மொரட்டுப்பயலா தெரியறான். ஊர்த்திருவிழால பாத்தோம்ல… சண்டியராட்டம் வேற இருக்கான்.”

“எல்லாம் வயசுல அப்படி இப்படினு இருக்கறதுதான் கௌரி. கோவணத்துல நாலு காசு இருந்தாலே கோழி கூவ பாட்டு வரும். பெரிய இடத்துப் புள்ளைக, மவுசு காட்ட கூட்டத்துல அப்டி இப்டின்னு தான் இருக்குங்க. நம்ம பொம்மு மட்டும் என்ன… நாத்தனார் ரெண்டு பேரும் சேந்துகிட்டு, புள்ளைக்கு ஊட்டம் ஏத்துறேனுட்டு, வயசமீறித்தான வளத்து வச்சுருக்கீங்க.”

எடை குறைவாக, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை என இருவரும் கவனித்த கவனிப்பு பொம்மியை வயதுக்கு மீறி தோற்றம் அளிக்க வைத்தது. எப்பொழுதுமே ஆண்கள் ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் பெண்கள் அதிலுள்ள சாதகங்களைவிட, பாதகங்களைத்தான் உடனே கூறுவர். என் கணவன், என் பிள்ளைக, என்வீடு, என்குடும்பம் என சிறுவட்டத்திற்குள் 360 டிகிரியும் சுழல்வதால், ஆண்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கான சாதகபாதகங்களை உள்ளுணர்வு சட்டென உணர்த்திவிடும். நூற்றுக்கு தொன்னூறு வீடுகளில் நடக்கும் நடப்பு இது. எது சொன்னாலும் உடனே வாய்வைக்காதே என்று தட்டிக்கழிப்பது தான் ஆண்களின் வழமை. ஏதோ மீதியிருக்கும் பத்து வீடுகளில் தான் பொம்பள ஏதோ சொல்றா… என்னான்னு யோசிப்போம் என நினைப்பது.

இங்கு சிதம்பரமும் கௌரி சொன்னவைகளை வைத்து சற்று யோசித்திருந்தால் பல அனர்த்தங்களைத் தவிர்த்திருக்கலாம். ஒரு விஷயத்தை ஆண்கள் பார்க்கும் கோணம் வேறு. பெண்கள் பார்க்கும் கோணம் வேறு.

“ஏன்‌ நம்மகிட்ட காசுபணம்‌ இல்லையா? நீங்க அந்த வயசுலயும் பவுசு காட்டலியே?”

“அதுக்குள்ள தான் உன் முந்தானையில போட்டு கோழி அமுக்கற மாதிரி அமுக்கிட்டியே?” பழைய நினைப்பில் மனைவியை கேலி செய்து சிரிக்க,

“புள்ள இல்லாத வீட்ல கெழவன் துள்ளி விளையாண்ட‌ மாதிரி… இந்த வயசுலயும் குசும்பப் பாரு?” நொடித்துக் கொண்டார் கௌரி.

“ஏம்மா… எனக்கு அப்படி என்ன வயசாயிருச்சு? இப்ப தான் அறுபத்தேழு ஆகுது. நீ தான் ஒத்துக்க மாட்டேனுட்ட. இல்லைனா பொம்முக்கு ஒரு‌ தம்பியோ தங்கச்சியோ ஏற்பாடு பண்ணிருக்கலாம்.”

“ஏன் சொல்ல மாட்டீங்க. அந்த வயசுல வயித்தத் தள்ளிட்டு நின்னது எப்படி இருந்துச்சுனு எனக்குத் தான் தெரியும்? அதுவும் உங்க தங்கச்சி மருமகளுக முன்னாடி எல்லாம் எவ்ளோ சங்கட்டமா இருந்துச்சு தெரியுமா? வரம் கெடச்சும் முழுசா சந்தோஷப்பட முடியாம எவ்வளவு தவிப்பா இருந்ததுன்னு எனக்குத் தான் தெரியும்.”

“அதுக்கென்ன பண்ண முடியும்? அந்தக்காலத்துல எல்லாம் மாமியாரும் மருமகளும் ஒரே வீட்ல மாசமா இருக்கறது எல்லாம் சகஜம். ஏன்… எனக்கும் என் கடைசி சித்தப்பாவுக்குமே ரெண்டு மூனு வருஷம் தான் வித்யாசம். எங்க அம்மாவும் அப்பத்தாளும் ஒரே வீட்ல மாசமா இருந்திருக்காங்க.”

“உங்க அம்மாவப் பத்தி சொல்லாதீங்க. பிள்ளை இல்லைனு எத்தன பேச்சு பேசுச்சு கெழவி. வெத்தல உரல்ல வெத்தலைக்குப் பதிலா என்னையப் போட்டு இடிக்காத கொற ஒன்னுதான் பாக்கி.” எத்தனை காலம் கடந்தாலும் இன்னும் தன் மாமியார் தன்னைப் பழித்ததை இடித்துக் கூற,

“எங்க அம்மா உன்னைய மட்டுமா பேசுச்சு. பாக்குக்குப் பதிலா என்னையும் தான் சேத்துப் போட்டு இடிச்சுது… நான் ரெண்டாங்கல்யாணம் பண்ணமாட்டேங்குறேனு.”

“இருந்தாலும் கெழவி கடுசான கட்டதான். பேத்தியப் பாத்துட்டு தானே காடுபோயி சேந்துச்சு.” இருவரும் பழைய நினைவுகளைக் கிளறிக் கொண்டிருக்க, 

“என்ன… எங்க ஆத்தா பேச்சு வீதி வரைக்கும் கேக்குது.” எனக் கேட்டவாறே சொர்ணம் உள்ளே வர.

“வாங்க அண்ணி. என்ன இந்த வெயில்ல… பொழுதுசாய வந்திருக்கலாம்ல? இருங்க தண்ணி எடுத்துட்டு வர்றேன்.” என்று நாத்தனார்க்கு தண்ணீர் எடுக்க… கையை ஊன்றி எழுந்தவர்… உள்ளே செல்ல,

“வாம்மா… மாப்பிள்ளைக எல்லாம் என்ன பண்றானுக? இந்த வேகாத வெயில்ல வராட்டி, செத்த பொழுது சாய வந்தா என்னம்மா?” என தங்கையின் மீது கரிசனம் காட்ட,

“அவங்களுக்கென்ன? எல்லாம் நல்லா இருக்கானுக. இது மொதலாளி பொழுதாச்சே… சாயங்காலம் ஆனாலும் வெயில் தாளாது ண்ணே.” என்றவர்,

“அப்பனே முருகா…” என்றவாறே அண்ணனுக்கருகில் இருந்த இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தார்.  

“இந்தாங்க அண்ணி…. தண்ணி குடிங்க. வாங்க சாப்புடலாம்.” என வீட்டிற்கு வந்த நாத்தனாரை உபசரிக்க…

“நான் சாப்புட்டு தான் வந்தே அண்ணி. இன்னும் நீங்க சாப்டலயா?”

“இப்ப தான் உங்க அண்ண மில்லுல இருந்து வந்தாங்க.‍ நாங்களும் இப்பதான் சாப்புட்டோம்.”

“பொம்மிக்கு எப்ப பரீட்சை முடியுது? இன்னும் வரலியா? பரீட்சைனா மதியமே வந்துருவாள்ல.”

“இந்த வாரத்துல முடிஞ்சுறும் அண்ணி. இந்தா கூப்புட்டு வர உங்க அண்ணன அனுப்பணும் அண்ணி.”

“உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கே. அவளை கொஞ்சம் தனியா விட்டுப் பழக்கு… உன் கைக்குள்ளேயே வைக்காதேனு.”

“என்ன அண்ணி பண்றது அப்படியே பழகிறுச்சு. தனியாவிட மனசு வரமாட்டேங்குது.”

பொதுவாகவே முதல் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் நலத்தின் மீது தாய்க்கு ஒரு இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும். சிறு காய்ச்சல், சளி என்றாலே என்னவோ ஏதோ என மனது பதறிவிடும். அதுவே இரண்டாவது குழந்தைக்குப் பழகிவிடும். பயமின்றி வளர்க்கப்படுவதாலோ என்னவோ இளையது காளையாகவும், அச்சத்துடனே வளர்க்கப்படுவதாலோ என்னவோ மூத்தது மோழையாகவும் போய்விடுகிறது. மிகவும் அக்கறை காட்டப்படும் குழந்தையும், அதிகமாக பாராட்டப்படும் குழந்தையும் பூஞ்சையாகத்தான் இருக்கும். பாராட்டு என்பதும் போதை வஸ்து போலத்தான் குழந்தைகளுக்கு. மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கும். கிடைக்காத பட்சத்தில் உடனே சோர்ந்து விடும். தடவிக் கொடுக்க கொடுக்க தூக்கம் தானே வரும். தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கொடுத்து, தட்ட வேண்டிய நேரத்தில் தட்ட வேண்டும்.

அப்படியிருக்க… எத்தனையோ வருடங்கள் கழித்து இனி நமக்குத் தாயாகும் பாக்கியம் இல்லை என முடிவான பிறகு… தேவதைகள் தான் வரம் கொடுக்கும்… ஆனால் இங்கு தேவதையே வரமாக வந்து மடி நிரப்ப, கௌரி மகளை ஒருநிமிடமும் மடியை விட்டு இறக்கவில்லை. ஏற்கனவே சிலமுறை கருவிலேயே தனது கனவுகள் கரைந்திருக்க, இனி வாய்ப்பேயில்லை என முடிவானபிறகு, வாராது வந்த மாணிக்கமாக, அதுவும் உலக அழகிற்கெல்லாம் நானே குத்தகை எடுத்தவள் எனும் விதமாக, தாயின் நிறத்தையும் தந்தையின் வாளிப்பையும் கொண்டு பிறந்தவளை, யார் கண்ணிலும் படாமல் தான், கண்ணிற்குள் வைத்து கண்ணின் மணியாக வளர்த்தார். வளர்ந்த பிறகும் கூட மனதளவில் இடுப்பை விட்டு இறக்கவில்லை. பொம்மியும் வளர வளர அவளது வாளிப்பு கௌரிக்கு பெருமையோடு சேர்த்து இலவச இணைப்பாக பயத்தையும் கொடுத்தது. தனியாக எங்கும் செல்ல அனுமதித்ததில்லை. அருகில் தான் அத்தையின் ஊரும்கூட… அங்கும்‌ செல்ல அனுமதியில்லை என்பதைவிட, பிரிய முடியவில்லை கௌரியால். 

சிறகு முளைத்தது கூடத்தெரியாமல் கூட்டைக் கிழிக்காத பட்டாம்பூச்சியாகவே, அம்மாவின் கைக்குள் கூட்டுப்புழுவாகவே இருந்து விட்டாள் பொம்மி. 

என்னதான் ஆலமரமாகவே இருந்தாலும், அதன் நிழலில் வளரும் செடி வளமை குன்றித்தான் இருக்கும். செடி என்றால் வெயிலில் காய வேண்டும். மழையில் நனைய வேண்டும். இரண்டுமில்லாமல் பொம்மி நிழல் செடியாக வளர்ந்து நின்றாள். கேட்டது கிடைத்தது என்று சொல்வதை விட, கேட்கும் முன் கிடைத்தது என்று தான் கூறவேண்டும். மகளுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து இருவரும் செய்ய, அவளும் தனக்கு  தேவை என்னவென்றே தெரியாமல் வளர்ந்தாள். இதற்கு அவர்கள் வயதும் ஒரு காரணம். பேத்தி எடுக்கும் வயதில் மகள் எனும் பொழுது, அவர்கள் பேத்தியிடம் காட்டும் சலுகையைக் காட்டினர். அவள் இன்னும் குழந்தை என்று சொல்லியே அவளை குழந்ததைத்தனத்தை விட்டு வெளியேற விடவில்லை. மொத்தத்தில் பாசம் எனும் தங்கக் கூண்டில் வளர்க்கப்பெற்ற கிளி அவள்.

“அடுத்து என்ன பண்ணப்போறீங்க ண்ணே? காலேஜ் சேக்கணுமில்ல?” அண்ணன் மகளின் வாழ்க்கையில் அக்கறை கொண்டு விசாரிக்க,

“அதாம்மா யோசனையா இருக்கு. மேல படிக்க வைக்கலாமா? வச்சுருந்து கட்டிக் கொடுக்கலாமானு இருக்கு சொர்ணம். எங்களுக்கும் வயசாச்சுல்ல…”

“ம்ம்ம்… ஒன்னுக்கு மூனு மொறப்பையனுகளப் பெத்தும் எனக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சு. கிளி மாதிரிப் பொண்ண யாருக்கோ தூக்கிக் கொடுக்க வேண்டியிருக்கு.”

“அதுக்கு என்ன அண்ணி பண்ண முடியும்? எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கணும்னு நமக்குத்தான் சொல்லி இருப்பாங்க போல.”

“அதென்னமோ உண்மை தான். மூனு மாப்பிள்ளைகள வச்சுருந்தே. ஒருத்தனுக்குக் கூட செட்டாகலயே? எல்லாத்துக்கும் சின்னப்புள்ளயா போயிட்டா.” பெண்கள் இருவரும் தாங்கள் சம்மந்தி ஆகமுடியாத ஆதங்கத்தை தங்களுக்குள் அங்கலாய்த்துக் கொண்டிருக்க,

“பெரியவீட்டு முருகேசன் அவரோட பெரிய மகனுக்குக் கேக்குற மாதிரி தெரியுது சொர்ணம்.” என்றார் தன் தங்கையிடம்.

“என்ன ண்ணே சொல்ற? காளியம்மா இருக்கற வீட்டுக்கா? முருகேசன் பொண்டாட்டி சுப்புலட்சுமியப் பத்தி ஒன்னும் பிரச்சினை இல்ல. வாயில்லாப் பூச்சி… ஆனா அங்க காளியம்மா ராஜ்யம்ல நடக்குது.” எனத் தங்கையும், மனைவி கேட்டதையே கேட்க,

“நானும் அதைத்தான் கேட்டேன் அண்ணி.” என்றார் கௌரி.

“நானும் இதப்பத்தி யோசிச்சே சொர்ணம். காளியம்மா வட்டி தொழில் பண்ணிகிட்டு இருக்கு. கொஞ்சம் அடாவடி பார்ட்டி தான். வட்டிக்கி வாங்குனவங்ககிட்ட அப்படி நடந்தாதான் காசு திரும்ப கெடைக்கும். உன்னைய மாதிரியும் உங்க அண்ணிய மாதிரியும் இருந்தா தலையில துண்டப் போட்டுட்டு போக வேண்டியதுதான்.”

“அவங்களே கஷ்டம்னு தான காசு வாங்குறாங்க. இல்லா கொடுமைக்கு வாங்குறவங்ககிட்ட அடாவடி காமிச்சா எப்படி? இருந்தா தரப்போறாங்க?” என்று கௌரி யார்யாருக்காகவோ வெள்ளந்தியாக வருத்தப்பட,

“நல்லவேளை கௌரி… நான் வட்டி ஏவாரம் பண்ணல. நீயே வாங்குனவங்ககிட்ட எல்லாம் வீடுவீடாப் போயி இருக்கறப்ப கொடுங்கனு சொல்லிட்டு வந்துருவ. நாம தெருவுல தான் நிக்கணும்.” எனத் தன் மனைவியின் வெகுளித் தனம் கண்டு கேலி பேசி சிரிக்க,

“என்ன அண்ணி நீயி… இன்னும் நாட்டு நடப்புத் தெரியாம பேசிட்டு இருக்க. நீயும் இப்படி இருந்து பொம்மியையும் அப்படித்தான் வளத்து வச்சிருக்க.” நாத்தனாரை சொர்ணமும் கடிந்தார். வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் கூறுவதுதான். அவளை பொத்திப்பொத்தி வைக்காத. வெளியே தெருவ அனுப்பி வை. நல்லது கெட்டது சொல்லிக்கொடு… என்று சொல்வதுண்டு. ஆனால் கௌரிக்கு பொம்மி எப்பொழுதும் குழந்தை தான்.

“ஆமா… போகயில அப்படியே வாரிஅள்ளிட்டுப் போகப் போறோமாக்கும். போங்க அண்ணி… நாலு பேரு வாயில விழுகாம இருந்தா போதும். இந்த காளியம்மாவ என்ன என்ன பேசுறாங்க.” என நாத்தனாருக்கு பதில் கூறினார். 

கொடுத்த பணத்தைக் கேட்டால் வம்பு பேசத்தான் செய்வார்கள். வாங்கும் போது இருக்கும் குழைவு, கொடுக்கும் போது இருப்பதில்லை. அதனால் அடாவடியான குடும்பம் என ஊருக்குள் ஒரு பேரு உண்டு… முருகேசன் குடும்பத்திற்கு. 

யாரு வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக கொண்டு செலுத்தும் குடும்பம் சிதம்பரத்துடைய குடும்பம்.‌ கஷ்டம் என வந்தால் தன்னால் ஆனதை மனம் கோணாமல் செய்பவர். அதிலும் ஒரு சுயநலம் தான். முதலில் இப்படியாவது தனக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்காதா என்று இருந்தது. பிறகு அதுவே பழக்கமாகி இந்தப் புண்ணிய மெல்லாம் நம் சந்ததிக்குதானே என அதில், மனநிறைவு காண ஆரம்பித்து விட்டார்.

“அப்பறமென்ன? எங்களுக்கு இப்ப அவசரம் இல்லைனு சொல்ல வேண்டியதுதான ண்ணே?” என சொர்ணமும், அண்ணனிடம் கேட்க,

“முதல்ல கேட்டு வரட்டும்… பாப்போம். நாமலே பேசிக்கிட்டா எப்படி?”  என்றார். அவரது பேச்சில் ஏதோ ஒன்று தொக்கி நிற்க,

“என்ன ண்ணே ஒரு இக்கனா வச்சுப் பேசுற மாதிரி இருக்கு?” என அண்ணனின் மனநிலை அறிய சொர்ணம் கேட்க, 

“நம்ம பிள்ளைக்கு வேணா பதினேழு கூட முடியாம இருக்கலாம் ம்மா. ஆனா எங்களுக்கு என்ன வயசாச்சுன்னு பாத்தியா? முன்னப்பின்ன தெரியாம வெளியே கொடுத்துட்டு, புள்ள எப்படி இருக்கோனு நெதமும் கவலைப்பட்டுட்டு இருக்க முடியாது. இந்த வயசுக்கு மேல தூரம் தொலைவுல கொடுத்துட்டு நாங்க அலைய முடியுமா சொல்லு? இல்ல உங்க அண்ணியாலதான் மகள விட்டுட்டு இருக்க முடியுமா. சீரோடு சேத்து உங்க அண்ணியையும் தான் அனுப்பி வைக்கணும்.”

“அண்ணே சொல்றதும் சரிதான அண்ணி. மில்லு, தோட்டம்தொறவெல்லாம் இங்க இருக்கு. வெளியூர்ல பாத்தா, நாளப்பின்ன இதெல்லாம் யாரு பாக்கறது? வீட்டோடு மாப்பிள்ளை எல்லாம் சரிப்பட்டு வராது. தாயா பிள்ளையா இருந்தாலும் ஓரடி விலகி இருக்கறதுதா ரெண்டு பேத்துக்கும் நல்லது. உள்ளூர் பயலா இருந்தா எல்லாத்தையும் அவனே கவனிச்சுக்குவான். அப்படி நம்ம வசதிக்கும் ஒத்து வர்ற ஆளுகன்னா பெரியவீட்டுக்காரவங்க தான்.” என்று தனக்குத் தோன்றியதை சொர்ணமும் கூற,

“நீங்க பேசிட்டு இருங்க… நாம்போயி பொம்முவ கூட்டிட்டு வர்றே.” என்றவர், சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

உள்ளூர் பள்ளிக்கூடம் என்பதால் சற்று நேரத்தில் வந்து விட்டனர். பக்கத்தில் இருக்கும் டவுனில் சேர்க்கலாமென சிதம்பரம் கூறியதற்கும் கௌரி சரி கொடுக்கவில்லை. 

“இது உங்க தாத்தா கட்டிவச்ச பள்ளிக்கூடம் தானே. எம்புள்ள கஷ்ட்டப்படாம படிக்கணும்.” என்று கூறிவிட, அதேபோல் தான் பத்தாம் வகுப்பு வரை பொம்மி கஷ்ட்டப்படாமல் படித்தாள். “பத்தாவதும், பனிரெண்டாவதும் பாஸ் ஆனாப் போதும்.” என்று கௌரி சொல்லிவிட, பொம்மி எதற்காகவும் மெனக்கெட்டதில்லை.

அதனால் தான் சக்தி அன்று கடையில் நீ படிச்சு தானே பாஸ் பண்ணின என்று கேட்டதற்கு அவளுக்கு கோபம் வந்தது. ஏனெனில் அதுமட்டும் தானே அவள் ஒழுங்காகப் படித்து வாங்கிய பட்டம் ஆயிற்றே. 

“அத்தே….” சிட்டாட்டம் ஓடி வந்தவள், அத்தையின் கழுத்தைக் கட்டிக் கொள்ள,,

“நா செத்தே….” என வழக்கம்போல் இருவரும் ரைமிங்காக செல்லம் கொஞ்ச,

“வாரா வாரம் இதையே சொல்லு. அட்டென்டன்ஸ் தவறாம போட்டுர்ற…?” வந்தவுடன் அத்தையை வம்பிழுக்க,

“என்னடி பண்றது? எங்கம்மாவப் பாக்காம இருக்க முடியலயே.” தன் தாய் ஜாடையில் இருப்பதாலும், பிறந்த சிறிது காலம் வரை கூடவே இருந்து வளர்த்து விட்டதாலும் அத்தையால், மருமகளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாராவாரம் தவறாமல் வந்து விடுவார்.

“நான் உங்க அம்மா மாதிரியே இருக்கேன்னு பாக்க வர்றியா? இல்ல இதசாக்கா வச்சு உங்க அண்ணங்கிட்ட வாராவாரம் ஏதாவது லவட்டிட்டுப் போலாம்னு வர்றியா?”

“எங்க அண்ணே கேட்டா கொடுக்கப் போறாரு? இதுக்கு எதுக்கு தெரியாம லவட்டணும்?”

அத்தையும் மருமகளும் தங்கள் வாய் வேலையை, உண்பதிலும், உரையாடுவதிலும் காண்பிக்க, பொழுது இருவருக்கும் நன்றாகவே கழிந்தது.

               **********************

பெரிய வீட்டுக்காரர் என கூறப்படும் முருகேசனும் அந்த ஊரில் ஒரு பெருந்தலை தான். என்ன ஒன்று… கல்யாண வீடாக இருந்தாலும் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடாக இருந்தால் நான்தான் பொணமாக இருக்க வேண்டும் என நினைப்பவர். எங்கும் எதிலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எண்ணுபவர். சாதகம், சாஸ்த்திரம், சாங்கியம் என்பவற்றில் கொஞ்சம் அல்ல… அதீத நம்பிக்கை கொண்டவர். அவருக்கு வலது கை என்றால் அவரது தங்கை காளியம்மா. 

சிறுவயதிலேயே, கணவனை இழந்துவிட, ஒரு பெண் குழந்தையோடு, புகுந்த வீட்டில் தனக்கு வரவேண்டிய, சொத்திற்குப் பதிலாக பணமாகப் பெற்றுக் கொண்டு வெளியேறி வந்து விட்டார். 

அண்ணன் வீட்டில் அவரது சொல்படி தான் எல்லாம் நடக்கும். கொண்டுவந்த பணத்தில்தான் வட்டி தொழில் ஆரம்பித்து, ஊருக்குள் காளியம்மா என்றாலே அலறும்படி வளர்ந்து இருக்கிறார். 

முருகேசனுக்கு தங்கையின் சாமர்த்தியத்தில் பெருமை. அதைக் கொண்டே மனைவியை மட்டம் தட்டுபவர். சுப்புலட்சுமியின் சாமர்த்தியத்தை காளியம்மா எங்கே காண்பிக்க விட்டார். 

சுப்புலட்சுமியும் கணவனை இழந்த பெண்ணாயிற்றே என நாத்தனார் மீது பரிதாபம் காட்டி  தன் வீட்டில் முக்கியத்துவம் கொடுக்க, நாட்கள் செல்லச்செல்ல, தனது அண்ணன் மனைவிக்கு அவ்வீட்டில் முக்கியத்துவம் இல்லாமல் செய்து விட்டார் காளியம்மா.

முருகேசனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மேம்போக்காக பேருக்குப் படித்துவிட்டு உள்ளூரிலேயே விவசாயம்,  அரிசிமில் என கவனித்துக் கொள்ள, இளையவன் சென்னையில் படித்து அங்கேயே பணியில் அமர்ந்துவிட்டான். எனக்கு கிராமம் சரிப்பட்டு வராது எனக் கூறும் ரகம்.

எது ஒன்றிலும் நல்லதை மட்டுமே பார்ப்பவர் சிதம்பரம். பேச்சு நடந்த சிலநாட்களில், உள்ளூர் என்பதால், முருகேசனே நேரில் சிதம்பரத்தை மில்லில் சந்தித்து சாதகம் கேட்டார். இதற்கு காளியம்மாவின் உந்துதலும் ஒரு காரணம். பொம்மி ஒரே பிள்ளை. அந்த ஊரில் அவர்களைவிட சொத்து உள்ள குடும்பம். தன் மகளுக்கு பட்டணத்தில் இருக்கும் இளையவன் மீதுதான் நோட்டம் என அறிந்து, மூத்தவனுக்கு பொம்மியைக் கேட்க, அண்ணனிடம் கோடி காட்டினார் காளியம்மா. சொத்தோடு சொத்து சேர்ந்துவிட்டால், அந்த ஊரிலேயே பெரியதலை இவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே வயது, மரியாதையை முன்னிட்டே முருகேசனே நேரில் வந்தார். 

“என்ன முருகேசா… வீட்லயே பொண்ணு வச்சுக்கிட்டு, வெளியே பாக்குற.” என்க,

“சாதகம் செட்டாகல மாமா… அதுவுமில்லாம இவனும் தலச்சன்புள்ள, தங்கச்சி மகளும் தலச்சன் புள்ள… தலையும் தலையும் சேரக்கூடாதுல்ல மாமா?” எனக் கேட்டார். முருகேசனை விட பலவயது மூத்தவர் சிதம்பரம்… மாமா முறை.

“அப்ப… நம்ம புள்ளயும் தலப்புள்ள தானே முருகேசா?”

“அத யோசிக்காம இருப்போமா மாமா. கணக்குக்கு தான் அது மொதப் புள்ள. ஆனா அதுக்கு முன்னயே சிலது அக்காக்கு இல்லைனு போயிருக்குல்ல.” எனக் கேட்க,

“அது என்னமோ சரித்தான்.” என்றவர்,

“வீட்டுக்கு வந்து சாதகம் வாங்கிக்கோ ப்பா. பொருந்தி வந்தா மேற்கொண்டு பாக்கலாம். உங்க அக்காகிட்டயும் கேட்கணும்.” என்றார். 

சிதம்பரத்தைப் பொருத்தவரை, தொழில் வேறு. குடும்பம் வேறு. எனவே இவர்கள் குடும்பத்தைப் பொருத்தவரை நல்ல குடும்பம். அதற்கு முக்கிய காரணம் முருகேசன் மனைவி. அண்ணன் தங்கை இருவருக்கும் நேர் எதிர்ப்பதம். தங்கமான மனுஷி எனப்பெயர் வாங்கியவர். மாமியாரை மனதில் கொண்டே அவர் மகள் வாழ்க்கையை யோசித்தார். இன்னொரு காரணம் அவரது பரம்பரை சொத்துக்கள். தனக்குப் பிறகு அதை யார் கட்டிக் காப்பது என கவலை எப்பொழுதும் உண்டு. வெளியூரில் பெண்ணைக் கொடுத்துவிட்டால், அதன் பிறகு தன் சந்ததிக்கு, தலைமுறையாக வாழ்ந்து வரும் ஊரில் அடையாளம் இல்லாமல் போகிவிடுமே என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. பெரும்பாலும் மூத்த தலைமுறையினரின் எண்ணவோட்டம் இது. தனது பரம்பரை தனது ஊரில் காலத்துக்கும் வேரூன்ற வேண்டும் என நினைப்பது. 

அதனால் தான் பெரும்பாலும் ஆண் வாரிசை நம் சமூகம் எதிர்பார்ப்பது. வேறு இடத்தில் பிடிங்கி நடப்படுபவள் பெண் என்பதால் அசையும் சொத்துக்களான நகை, பணம், பண்டபாத்திரம் பெண்களுக்கு எனவும், ஒரே இடத்தில் இருப்பதனால் அசையா சொத்துக்களான வீடு, தோட்டம் ஆண்களுக்கு எனவும் அந்தக்காலத்தில் பிரித்தனர்.

வீட்டோடு மாப்பிள்ளை என்பதில் உடன்பட்டாலும், சொத்திற்காக என வரும் மாப்பிள்ளை சிதம்பரத்திற்கு உடன்பாடு இல்லை.

எனவே உள்ளூர் மாப்பிள்ளை அவருக்கு சரி எனப்பட்டது. மகளையும் பிரிய வேண்டிய அவசியம் இராது. நினைத்த நேரத்தில் மகளும் வந்து செல்லலாம். மனைவியின் ஆசைப்படி மகளும் தங்கள் கண்முன்னே இருப்பாள். வெளியிடத்தில் கொடுத்துவிட்டு வயோதிக காலத்தில் நல்லது கெட்டது என்றால் தங்களால் அலைய முடியாது என, தங்களின் வயது, சொத்து, தங்கள் கண்முன்னே மகளின் வாழ்க்கை என அனைத்தையும் யோசனை செய்தே சாதகம் கொடுக்க சம்மதித்தார்.‌

ஊர்ப்பக்கம் ஓர் பழமொழி சொல்வதுண்டு… உள்ளூர் சம்பந்தமும் சரி… உள்ளங்கை சிரங்கும் சரி என்று. அரிக்கும்… சொரிய முடியாது.