பொன்மகள் வந்தாள்.16🌹

PMV.16.

“அய்யோ சாமி!! ஏம்புள்ள!!” ஓடிவந்து பொம்மியை வாரி அணைத்திருந்தார் கௌரி. அம்மா என்ற சுரணை கூட இல்லாமல் இருந்தாள் மகள்.

தலைவிரி கோலமாய், நெற்றி தலையெல்லாம் திருநீறும், குங்குமமுமாக, கோடாங்கி முன் அமர்ந்திருந்தாள் பொம்மி. கோடாங்கி கையில் இருந்த உடுக்கை, சொர்ணம் பிடித்துத் தள்ளிய வேகத்தில் பறந்து விழுந்திருந்தது. 

நாத்தியும், நாத்தியும் இப்பொழுது போயோட்டுபவனை, பேயோட்டும் ஆங்காரத்தில் இருந்தனர்.

விஷயம் கேள்விப்பட்டவுடன் சொர்ணம் பதறியடித்து வர, அண்ணன் வீட்டிலோ எந்த பரபரப்பும் இல்லாமல் விருந்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ‘ஒரு வேள நமக்கு கெடச்ச தகவல் தான் பொய்யோவென.’ ஒரு நிமிடம் குழம்பியவர் மனம், ‘ஆத்தா மகமாயி… பொய்யாவே இருக்கணும். உனக்கு ரெட்டக்கெடா வெட்டுறே.’  என வேண்டுதல் வைக்கவும் மறக்கவில்லை.

“அண்ணி… அண்ணே எங்க? பொம்முக்கு ஃபோன் பண்ணியா?” அவசரமாகக் கேட்க,

“ரெண்டு நாளாச்சு அண்ணி பேசி. எப்ப பண்ணாலும் தூங்கறதா, கவிதா சொன்னா. நானும் சின்னஞ் சிறுசுகன்னு போடல.” 

“போயி பாக்க வேண்டியது தான?”

“வெள்ளிக்கெழமை கூட, குலசாமி கோயிலுக்குப் போறாங்கனு, நானும் உங்க அண்ணனும் கூட போய்ட்டு வந்தோமே அண்ணி.”

“எப்படி இருந்தா?’

“என்ன அண்ணி… இன்னும் சின்னப்பிள்ளயா என்ன? சுப்பு சொல்லச் சொல்ல என்ன அழகா கோயில்ல பொங்கல் வச்சா தெரியுமா? இங்க என்னையத்தா ஏச்சுட்டு இருந்திருக்கா.” மகள் புகுந்த வீட்டில் பொங்கல் வைத்ததைப் பார்த்து தாய்  பெருமையில் பொங்கினார்.

“அதுக்கு பின்னாடி போகலியா? பிள்ளைகள யாரையாவது அனுப்ப வேண்டியது தான?”

“நானும் நம்ம மில்லுல வேல பாக்குற  கண்ணப்பன் மகள அனுப்பி அக்காவ பாத்துட்டு வாம்மானு சொன்னே. அங்க அவங்க இல்லையாம். எல்லாரும் தோப்பு வீட்ல இருக்காங்களாம்.‌ சும்மா சும்மா அனுப்புனா அந்தக் காளியம்மா எதாவது சொல்லுவான்னு அனுப்பல. ஊடால ரெண்டு நாளுதானேன்னு பல்லக் கடிச்சுட்டு இருந்தே.” என்க,

“அவங்க தானே வரக்கூடாது. ஏதாவது எடுத்துட்டுப் போறமாதிரி போய் பாக்கக் கூடாதா?” எனக் கேட்க,

அப்பொழுதுதான் கௌரி சுதாரித்தார். வந்ததும் வராததுமாக இத்தனை கேள்வி கேட்கும் நாத்தனாரை, பதட்டத்துடன், “என்ன அண்ணி? ஏதும் பிரச்சினையா?” எனக் கேட்க,

“மொதல்ல கெளம்பு, என்னானு போய் பாத்தா தான் தெரியும்.” என பரபரவென நாத்தியை இழுக்காத குறையாக, ஓட்டமும் நடையாக தோப்பு வீட்டை நெருங்க, அவர்களுக்கு உடுக்கை சத்தம் நன்றாகவே கேட்டது. 

அச்சத்தத்திற்கு இணையாக இவர்கள் இதயத்துடிப்பும் மத்தளமாய் இணைசேர, 

“என்ன அண்ணி சத்தம் இது?” என கேட்டுக்கொண்டே, ஏதோ சரியில்லை போல எனப்பதட்டத்தோடு வாசல் தான்டி உள்ளே செல்ல… அவர் கண்ட காட்சியில் பெற்ற வயிறு பற்றி எறிய, தான் என்ன செய்கிறோம் என்ற சுரத்தையின்றி… பொம்மியின் உச்சிமுடி பிடித்து ஆட்டிய கோடங்கியைப் பார்த்த கௌரிக்கு என்ன செய்கிறோம் என்ற நினைப்பு மூளையைத் தாக்கும் முன்னரே, கோடாங்கியை பிடித்துத் தள்ளியிருந்தார் ஆங்காரமாக. தள்ளியவர் தான் மகளை வாரி அணைத்திருந்தார். கண்ணகியின் சக்தி மட்டும் இருந்திருந்தால் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தை சாம்பல் கூட மிஞ்சாத அளவிற்கு எரித்து பஸ்பமாக்கி இருப்பார் கௌரி. 

ஆசை ஆசையாக தன்மகள் கொண்டவன் கைபிடித்து குதூகலமாக, மறுவீட்டு விருந்திற்கு வருவாள் என பெற்றவள் கொள்ளை ஆசையுடன் எதிர்பார்த்திருக்க, அவள் இருந்த கோலம், பெற்றவளை, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றாக்கியது.

“நீங்க எல்லாம் மனுஷங்க தானா? கல்யாணமான நாலுநாள்ல பச்சப் புள்ளய என்ன பண்ணி வச்சுருக்கீங்க?” சொர்ணம் கோபமாகக் கேட்க,

“உங்க அண்ணமக பண்ணுன காரியத்துக்கு என்ன பண்ணச்சொல்ற? எங்க அண்ணே மகனுக்கு எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியுமா?” காளியம்மா அசட்டையாக பதிலுரைக்க,

“அப்படி என்ன பண்ணீட்டா? எதுவா இருந்தாலும் சொல்லிவிட வேண்டியது தான?” ஆத்திரம் அடங்கவில்லை சொர்ணத்திற்கு. 

“சுப்பு… உன்கிட்ட சொல்லிட்டு தானே போனே. அவ சின்னப்புள்ள. எதுனாலும் பக்குவமா சொன்னா புரிஞ்சுப்பானு. எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்ல வேண்டியது தான. நாங்க என்ன செத்தா போய்ட்டோம். நல்லது கெட்டதுனா உடனே தெரியணும்னு தான உள்ளூர்ல கட்டிக் கொடுத்தது?”

“அதுக்கு தான் உள்ளூர்ல கட்டிக் கொடுத்தீங்களா? இல்ல… வெளியூர் போனா இவ பேய்புடிச்சவன்னு தெரிஞ்சுறும்னு உள்ளூர்ல எங்க தலைல கட்டிட்டீங்களா?”

“காளியம்மா! நாக்குல நரம்பில்லாம பேசாத… நீயும் ஒரு பொண்ணு வச்சிருக்க. வார்த்தையப் பாத்துப் பேசு. சொல்லும், செயலும் நாளைக்கி நம்ம புள்ளைகளுக்கு தான் போய்ச்சேரும்… பாத்துக்க.” ஆவேசம் அடங்காமல், பூவாக வளர்த்த பிள்ளையின் நிலை கண்டவர் ஆத்திரமாக சொர்ணம் கேட்க,

“உங்க வீட்டுப் புள்ளய சொன்னா, நீங்க ஏம்மகளுக்கே வாக்கு விடுறீங்களா? நல்லா இருக்கே சங்கதி.” என நொடித்துக் கொள்ள,

“சுப்பு… பொங்க வைக்கிற அன்னைக்கெல்லாம் நல்லா தானே இருந்தா. உன் கூடவே தானே முந்தானையப் புடிச்சுட்டே திரிஞ்சா.” என சுப்புலட்சுமியை கௌரி கண்ணீரும் கம்பலையுமாக கேள்வி கேட்க,

“அன்னைக்கு மறுநாள்ல இருந்து தான் அண்ணி ஒரு மாதிரியா இருந்தா. நாங்கூட உங்க வீட்டு நெனப்பு வந்திருச்சு போலன்னு நெனச்சே. முந்தா நாளெல்லாம் எந்திரிக்கவே இல்ல. வெரிச்சுப் போயி உக்காந்திருந்தா. நாகு கிட்டப்போனாலே மிரண்டு போய் குறுக்கிக்கிட்டா அண்ணி.” என்க,

மகளுக்கு என்ன ஆயிற்றோ என பெத்த மனமும் பரிதவித்துப் பித்துப்பிடித்தது.

திருமணத்தன்றே இரவு நேரம் வந்ததும் முகம் சுணங்கியது பொம்மிக்கு. புது இடம் மனம் ஒட்டவில்லை. கவிதா கொஞ்சம் நட்பு பாராட்டி இருந்தாலாவது கொஞ்சம் சகஜமாகி இருப்பாள். நடமாடியவர்கள் எல்லாரும் புது ஆட்கள். வெளியிடங்களில் தங்கி பழக்கமில்லை. மெதுவாக சுப்புவிடம் வந்தவள், “அத்தை அம்மாவைப் போய் பாத்துட்டு வரவா?.” என மெதுவாகக் கேட்டாள். இதுவரை பிரிந்ததில்லை என்பதால், எப்பவும் தந்தையின் தோள் பிடித்துத் தொங்குபவள், அன்னையைத் தேடினாள். என்னதான் பெண்கள் அப்பா செல்லம் என்றாலும் தனிமையில் தேடுவது தாயைத்தான்.

“இதுவரைக்கும் தான உங்கம்மா முந்தானையிலயே இருந்த. இனிமே புருஷன எப்படி ஓம்முந்தானையில போடுறதுனு கத்துக்க. இன்னமும் பால்குடிக்கிற புள்ளயாட்டம் அம்மாவத் தேடுற.” வெடுவெடுவென பேசிய காளியம்மா பேச்சில் விக்கித்துப் போனாள். வீட்டில் இந்த மாதிரி யாரும் அதிர்ந்து பேசி கேட்டதில்லை. இதுவரை யாரும் அவளை கடிந்து ஒரு சொல் கேட்டிராதவளுக்கு, இது முற்றிலும் புதுமையாக இருக்க திருதிருவென முழித்துக் கொண்டே சுப்புவைப் பார்த்தாள்.  

“அத்தாச்சி, நான் பாத்துக்கறே. சாப்பாட்டு வேலைய முடிச்சுட்டு, கவிதாவக் கூப்புட்டுப் போய் படுங்க.” என சற்று குரலை உயர்த்தினார் மருமகளுக்காக, மாமியார் முதன் முறையாக.

“சரி… சரி… அடுத்து ஆகவேண்டியதப் பாருங்க. இந்த மாதிரி காரியத்துக்கு எல்லா நம்மள முன்னாடி நிக்க விடாம வச்சிருச்சு ஆண்டவ… வீட்லயும் வயசுப் பொண்ணு இருக்கு… உங்க மருமகளுக்கு சொல்லி அனுப்புங்க.” என போற போக்கில் அலுப்பும் சளிப்புமாக பொறுமி விட்டுப் போக, நொந்து போனார் சுப்புலட்சுமி. 

இருக்க கொஞ்சம் இடம் கொடுக்க, மடத்தையே பிடுங்கிய கதை ஆகிப்போயிற்று சுப்புலட்சுமியின் வாழ்க்கை.

அப்பொழுதுதான் நாகராஜ் இறங்கி வந்தான். இன்னும் புது மனைவியிடம் ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. 

“நாகு குளிச்சிட்டு வா. சாமிகும்பிடணும்.” என்க,

“இப்ப தான் எந்திரிச்சு வர்றே. அலுப்பா இருக்கும்மா. பசிக்குது… சாப்பாட்டப் போடுங்க.” என்க,

“சரிடா… பொம்மி நீயும் சேந்து உக்காரும்மா… ரெண்டு பேரும் சாப்புடுங்க.”

“எனக்குப் பசிக்கல த்தே.” ஏனோ அவன் அருகில் உரசியபடி அமர்ந்தது பிடிக்கவில்லை பெண்ணிற்கு.

இதுவரை பேசியிராதவன், கொஞ்சம் பேசி அவளது கவனத்தைத் தன் பக்கம் திருப்பி இருக்கலாம். செய்யவில்லை.

“வெறும் வயிறோட படுக்கக் கூடாதுடாம்மா. ஒரு தோசையாவது சாப்பிடு.” என தாயைப் போல அன்பாக அதட்ட அவளுக்கு மாமியாரைப் பிடித்துப் போயிற்று. மாமியாருக்காக சிறிது சாப்பிட்டாள். 

அங்கு வந்த இளையவன் ஜெயக்குமாரும் சென்னைக்கி கிளம்பி இருந்தான். அன்னையிடம் சொல்லிக் கொண்டவன், 

“அண்ணி… போய்ட்டு வர்றே.” என புதியவளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப…

“ரெண்டு நாள் இருக்கிற மாதிரி வரக்கூடாதா ஜெயா. வந்தவுடனே சுடுதண்ணிய கால்ல கொட்டுனவாட்டம் பறக்குற.” என்க,

“ஏம்மா… இங்க இதுக பண்றதெல்லாம் நம்மால தாங்க முடியாதுன்னு தானே, நான் வெளிலபோய் படிச்சேன். இப்பவே சொல்லிட்டே ம்மா… என் கல்யாணம் என் முடிவுபடி தான் நடக்கும். நேரங்கெடைக்கும் போது அப்பா காதுல போட்டு வைங்க.” என போற போக்கில் குண்டு போட்டுவிட்டுப் போனான்.

கல்யாணத்திற்கு வந்ததில் இருந்து பார்க்கிறான். காளியம்மா சாடைமாடையாக, அடுத்து தன் மகள் திருமணத்தைப் பற்றிதான் பேசுகிறார். கவிதாவின் பார்வை மாற்றமும் தெரிகிறதே. எப்படியும் கவிதாவை நாகராஜிற்கு தான் பேசுவார்கள் என எண்ணியிருக்க, எதனால் பேச்சு மாறிப்போச்சு எனப் புரியவில்லை. அடுத்து தனக்குதான் தூண்டில் விழும் என நினைத்தவன் சிக்க விரும்பவில்லை. அவனுக்குத் தெரியும், அத்தைக்குத் தப்பாத மகள் கவிதா என்று. அதுவும் இப்பொழுது பொம்மியைப் பார்த்த பிறகு, அண்ணியை மாதிரி அழகான பெண் தேடவேண்டும் எனத் தோன்றிவிட்டது. 

“ஏன்டா நீயும் என்னைய விட்டு விலகிப்போற. அவன் தான் என்பேச்சைக் கேட்க மாட்டேங்குறான். நீயும் சென்னையே கதின்னு செட்டில் ஆயிட்டா, நான் என்ன தான்டா பண்றது.” என சுப்புலட்சுமி மகனிடம் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.

தலைமகன் தாய்க்கு, இளையமகன் எடுப்பார் கைப்பிள்ளை என இருக்க, இங்கே மூத்த மகன் எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனான். இளையவன் மட்டும் அம்மாவிற்காக பார்ப்பான். இவர்கள் பேச்சைக் கேட்டு கவிதாவை திருமணம் செய்தால், அத்தையையும் மகளையும் அசைக்க முடியாது என நினைத்தான். எனவே தான் தனது திருமண முடிவை அம்மாவிற்கு கோடிகாட்டிவிட்டு செல்கிறான். இது தெரிஞ்சு இந்த காளியம்மா என்ன ஆட்டம் போடப் போறாளோ என இப்பவே சலிப்பு ஏற்பட்டது சுப்புலட்சுமிக்கு. 

திருமணத்திற்கு வந்த சுமங்கலிகளைக் கொண்டு மருமகளை தயார் படுத்தியவர், அவளை நாகராஜின் அறையில் விட்டுவிட்டு வெளியே வந்தார். வரும்முன், “எதுன்னாலும் நாகு கிட்ட தயங்காம சொல்லு. இனிமே எல்லாமே அவன் தான் உனக்கு.” என்று சொல்ல தலையாட்டி வைத்தாள் பொம்மி. புது இடம் என்ற மிரட்சி தவிர அவளிடம் வேறு எந்த உணர்வும் இல்லை. அச்சமோ, நாணமோ, சங்கோஜமோ, கூச்சமோ எதுவும் இல்லை. இவளைப் பார்த்து இந்தக் காலத்து பொண்ணுகளுக்கு எதுவும் சொல்லத் தேவையில்ல… எல்லாம் தெரிஞ்சுட்டுதான் வருதுக எனப் பேசிக்கொள்ள… அவர்கள் ஒன்று யோசித்திருந்தால் நினைவிற்கு வந்திருக்கும்… தமக்கும் அப்படித்தான் கூறப்பட்டது என்று. ஏன்… நம் பாட்டியைத் தயார் செய்தவர்களும் அதைத்தான் சொல்லியிருப்பார்கள். எல்லாம் என்பது கடைசி வரைக்கும் எது என்றே புரிவதில்லை.

‘நாங்க எல்லாம் அந்தக் காலத்துல…’ எனச் சொல்லும் மாற்றமில்லாத வாசகம் போல இதுவும் எந்தக் காலத்துலயும் மாறாத ஒன்று.

கதவைத் தாழிட்டு உள்ளே நாகராஜ் வர… கட்டிலில் இருந்தவள் திரும்பிப் பார்த்தாள். 

அவளைப் பார்த்தவுடன், இவனது கண்களில் ஒரு வெறி என்றே சொல்லலாம். தலைநிறைய பூவோடு, மென்பட்டில் பொம்மையென அமர்ந்திருக்க,‌ அவனது கண்கள் தாமாக சிவப்பேறியது. கைகள் நடுங்க, பல்லை இறுகக் கடித்தவன், அதை மறைக்க கட்டிலை இறுகப் பற்றிக் கொண்டான். படபடத்து பெருமூச்சு வாங்கினான். 

“நாளைக்கி அம்மா வீட்டுக்கு கூப்புட்டுப் போறீங்களா?” வேறு எந்த உணர்வுமின்றி வந்தவனிடம் கேட்டாள். அவனைப் பார்த்து சிறு வெட்கமோ, படபடப்போ இல்லை. 

“சரி…” என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவன், வேறு பேச்சின்றி கட்டிலில் ஒருபுறம் அமைதியாகப் படுத்துக் கொண்டான். அவள் தான் விடிய விடிய தூக்கமில்லாமல் கட்டிலின் ஓரம் அமர்ந்திருந்தாள். 

மறுநாளும் வழக்கம் போல செல்ல, 

“நாளைக்கி கோயிலுக்கு போகணும் பொம்மி. உங்க அப்பா அம்மாவையும் வரச்சொல்லலாம். மறுவீடு போய்ட்டு வந்து, நீ எப்ப வேணும்னாலும் போய்ட்டு வா.” என சுப்பு சொல்ல, ஒப்புக் கொண்டாள். 

சுப்பு அவளிடம் அன்பாக நடந்து கொள்ள, அங்கு போலவே இங்கும் மாமியார் பின்னாலே சுற்றினாள். நாகராஜ் தோப்பில் வேலையிருப்பதாக சென்று விட்டான். சந்தோஷமாகவே குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்க வந்தனர். 

“புதுப்பொண்ணு, இனி நீ தான் மூத்த மருமக. நான் சொல்றமாதிரி பொங்க வை பொம்மி.” என அடுத்து வந்தவளுக்கு வீட்டு வழமையை உடனிருந்து சொல்லிக் கொடுக்க முற்பட,

“பாரு… இப்பவே பெரியவன்னு அவளுக்கு காவடி தூக்க ஆரம்பிச்சுட்டாங்க.” என கவிதா தாயிடம் பல்லைக் கடித்தாள். 

மாமியார் சொல்படி பொங்கல் வைத்தவள், அடுத்து கோவிலுக்கு கௌரியும், சிதம்பரமும் வர அவர்களை விட்டு விலகவில்லை. 

“போய் தம்பி கிட்ட நில்லு பொம்மு.” எனக்கூற, 

“போம்மா… ரெண்டு நாளாச்சு உங்களப்பாத்து. இப்பவும் அவங்ககிட்ட போகச் சொல்ற.” என்றாள்.

கணவனின் காதல் கிடைத்திருந்தால் பெற்றோரை விட்டு எத்தனை நாள் பிரிந்திருந்தாலும், அவனை விட்டு விலகியிருக்க மாட்டாள்.

“சின்னப் பிள்ளையாவே இருக்கியே?” 

“இந்த சின்னப்பிள்ளைக்கு தான் கல்யாணம் பண்ணி விரட்டிவிட்டுட்டீங்களே?” என கோபம் காட்டினாள் பெற்றவர்களிடம். ஏனோ ஒரு ஒட்டுதலற்ற தன்மை. அவளது பேச்சைக் கேட்டு இருவரும் சிரித்தனர். வீடுவரை வந்து மகளுடன் இருந்துவிட்டுதான் சென்றனர்.

கோவிலிலிருந்து வந்தவன், தோப்பிற்கு சென்று விட்டு, இரவு நேரங்கழித்தே வந்தான் நாகராஜ். அதற்கு முன் தான் முருகேசன் கத்திவிட்டு சென்றார்.

“இன்னைக்கும் தோப்புக்கு போயிருக்கான். வேறமாதிரி வந்தான்னு வை… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். சொல்லிவை உன் மகன்கிட்ட.” என சாப்பிடும்போது மனைவியிடம் கத்திவிட்டு சென்றார். 

‘இத தங்கச்சி கிட்ட சொல்ல வேண்டியதுதான. காசு கொடுத்து அவன கெடுக்கும் போதெல்லாம் சும்மா இருந்துட்டு, இப்ப என்னைய பேசுனா எப்படி?’ மனதிற்குள் தான் கேட்க முடிந்தது சுப்புவால்.

நேரங்கழித்து வந்தவனை சாப்பிட வைத்து அனுப்பினார். 

“டேய்! நீ மேல போய் படு. நீ இன்னைக்கி சரியில்ல.” என்க,

“அது எங்களுக்கு தெரியும். நீங்க உங்க வேலையப் பாருங்க.” என்றவன், நிற்காமல் அவனது அறைக்கு சென்றுவிட்டான். 

கோவிலுக்கு சென்றுவந்த அலுப்பில், இரண்டு நாட்களாக புது இடமென சரியாக தூக்கமில்லாமல் இருந்தவள், அறையில் யாருமில்லா தனிமையில் நிம்மதியாக, நன்கு அசந்து விட்டாள். 

உள்ளே வந்தவன், தூங்குபவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குள் சுயம் மெதுவாக வெளிவரத் துவங்கியது. புது இடமென்ற குறுகுறுப்பில், குழந்தையென கால்களை குறுக்கிக் கொண்டு கழுத்தில் கைகொடுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் வீடாக இருந்திருந்தால் காலும் கையும் அம்மா மீது கிடக்கும். வேகமாக நகம் கடிக்க ஆரம்பித்திருந்தான் அவளது கோலம் கண்டு சித்தம் கலங்கியவன். மதுபோதையோடு சேர்த்து பேதையும் போதை ஏற்ற…

தூக்கத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அரண்டு,‌ ஏதோ கெட்ட கனவு கண்டவள்‌ போல கண்விழிக்க, என்னவென்று உணரும் முன் அவளை ஆக்கிரமித்திருந்தான். நடப்பது புரியவே சில கணங்கள் பிடித்தது பேதைக்கு. கத்துவதற்கு வாய் திறப்பதற்கு கூட சுரணை இல்லை அவளுக்கு. கண்கள் விரிய நிலைகுத்தி நின்றன. தூக்கம் தெளியா கனவெனவே இருந்தது. 

பச்சை மண்ணாக இருந்தவள், தேர்ந்த சிற்பியின் கையில் கிடைத்திருந்தால் பதமாகக் குழைத்து, பக்குவமாக சிலைவடித்து, தகுந்த வர்ணம் தீட்டி, அவளது உறங்கும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருப்பான். 

அவளோ சூளைக்காரன் கையில் கிடைத்த மண்ணாகிவிட, அச்சில் இட்டு சூளையில் ஏற்றிவிட்டான். 

விழிக்காத உணர்வுகள், உள்ளேயே பொசுங்கிப் போயின… என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லை. அவன் கூறிய வார்த்தகளெல்லாம் இதுவரை அவள் கனவிலும் கேட்டிராத வார்த்தைகள். 

அவனது வன்முறைகள் எல்லாம் அர்த்தம் புரியாத அணர்த்தங்களாக… அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.‌ 

“அப்படி என்ன இருக்குனு ஊர்ப்பயலுக எல்லாம் உன் பின்னாலே நாயாட்டம் நாக்கத் தொங்கப்போட்டுட்டு அலஞ்சானுக. எல்லாத்துட்டயும் இருக்கறது தான உன்கிட்டயும் இருக்கு.” முதன்முறையாக கணவன் பேசிய பேச்சு. அவனது பேச்சும் செயலும் அருவருப்பைத் தர,‌ தனக்குப் பிடிக்காத, விருப்பமில்வாத,. தன்னால் ஒன்ற முடியாத செயல் நடக்க, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மூளை ஸ்தம்பித்து விட்டது. கிட்டத்தட்ட பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் நிலைமைதான் அவளுக்கும். என்ன நடந்தது என்று புரியாமலும், அதை சொல்லத் தெரியாத நிலையும். பேதை பேதலித்துப் போனாள். 

மறுநாள் அனைவரும் எழுவதற்கு முன் தோப்பிற்கு கிளம்பிவிட்டான். வெகுநேரமாகியும் பொம்மி எழாமல் இருக்க, 

“என்ன அத்தாச்சி, இன்னும் உன் மருமகளுக்கு விடியலியா.‌ இல்ல மாகாராணிக்கு, எல்லாம் படுக்கையறைக்கே கொண்டு போய் கொடுக்கணுமா?” காளியம்மா போட்ட சத்தத்தில் மெதுவாக கண்திறந்தவளுக்கு, எல்லாம் கனவு போலவே இருக்க, நடந்ததை நினைத்துப் பார்க்க முயல, உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. 

எழுந்து வெளியே வந்தவளை, “குளிச்சிட்டு வரணும்னு தெரியாதா? மருமகளுக்கு பொங்க வைக்க சொல்லிக் கொடுக்க தெரிஞ்சது. இதெல்லாம் சொல்லிக் கொடுக்கலியா?” என ஆரம்பித்துவிட்டார். அவருக்கு இவளையும் ஆரம்பித்திலேயே தன் கைக்குள் வைக்கவேண்டுமென்ற எண்ணம். இதைக்கேட்டு குளித்துவிட்டே வந்தாள். 

உடல் அப்பொழுதே சூடேற ஆரம்பித்திருந்தது. 

சாப்பிட வந்தவள், நாகராஜூம் உள்ளே வர அவனைப் பார்த்தவள் பயந்து குறுகிக் கொண்டாள். அன்று முழுதும் அமைதியாகவே இருந்தவள், இரவு ஆனதும் அறைக்கு செல்ல மறுத்துவிட்டாள். அவனைப் பார்த்தாலே மிரண்டு விழிப்பதைப் பார்த்தவர், உடல் சுடுவதையும் பார்த்த சுப்புலட்சுமி, வீட்டிலிருந்த பாரசெட்டமால் ஒன்றைக் கொடுத்து, தன்னோடு இன்று படுத்துக் கொள்ளட்டுமெனக் கூறினார். 

இரவு முழுதும் பதறிப்பதறி கண்விழித்தாள். அமைதியாக கண்மூடமுடியாமல் அவஸ்தைப் பட்டாள். உடல் கொதிக்க ஆரம்பித்தது. 

“என்னடா பண்ணின. அந்தப் புள்ள இவ்ளோ மிரண்டு போயிருக்கு.” காலையில் மகனைப் பிடித்துக் கொண்டார். 

“என்னம்மா இது கேள்வி… அசிங்கமா?” என மகன் ஜகா வாங்க,

“ஏன் அத்தாச்சி? கல்யாணம் ஆனவன்கிட்ட கேக்குற கேள்வியா இது. விவஸ்த்தையில்லாம, கேக்குறீங்க…” என வழக்கம்போல காளியம்மா இடையில் வர.

“நீங்க கொஞ்சம் இதுல தலையிடாதீங்க… நேத்துலருந்து அந்தப்புள்ள சரியில்ல. இவனப்பாத்தாலே மிரளுது. ஏதாவது சண்டகிண்ட போட்டானான்னு தெரிய வேண்டாமா? ராத்திரில அலறிஅலறி வேற எந்திரிக்குது.” என நாத்தானாரிடம் நெடுநாட்கள் கழித்து சத்தமாக பேசினார். ஏற்கனவே இவர்கள் இம்சை தாங்க மாட்டாமல் தான் இளைய மகன் தன்னை விட்டு விலகிவிட்டான். அருகே இருக்கும் இவனையாவது வழிக்கு கொண்டு வரவேண்டுமே என்ற ஆதங்கம். இதுவுமே தும்பை விட்டு வாலைப்பிடித்த கதை தான்.  

“என்ன ரெண்டு பேரும் காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா? மனுஷ நிம்மதியா இருக்க முடியுதா வீட்ல.” எனக் கேட்டுக் கொண்டே முருகேசன் வர,

“அத, உங்க தங்கச்சி கிட்ட சொல்லுங்க. ஏம்புள்ளைககிட்ட கூட பேச முடியல. அந்தப்புள்ளைக்கி உடம்பு சரியில்லைனா, இவனத்தானே கேட்க முடியும்.”

“அத தனியா கேட்டா என்ன? இப்படித்தான் நடுக்கூடத்துல வச்சு விசாரிப்பியா?” என முருகேசன் கேட்க,

“இங்க எங்க தனியா எம்புள்ளைககிட்ட கூட பேச முடியுது?” என சுப்புலட்சுமி ஆதங்கப்பட,

“அப்ப நான்தான் உங்க எல்லாருக்கும் எடஞ்சலா போயிட்டனா? எந்தலையெழுத்த அந்த ஆண்டவ இப்படி எழுதி வச்சுருச்சு. நான் என்னமோ இங்க சும்மா உக்காந்து திங்கறமாதிரி. எம்புருஷ வீட்டு சொத்தையும் இங்க தானே கொண்டுவந்து கொட்டியிருக்கே.” என மூக்கால் அழ ஆரம்பித்தார். தன் காசில் இருந்து ஒரு பைசா வீட்டிற்காக செலவழிக்க மாட்டார் என அண்ணனுக்கும் தெரியும். இருந்தும் வாழாமல் சிறுவயதிலேயே கணவனை இழந்தவளாயிற்றே என்ற சிறுபச்சாதபத்திலேயே இங்கு நாட்டாமை செய்கிறார்.

தங்கையின் கண்ணீரைப் பார்த்ததும், அண்ணனுக்கும் மனது கேட்கவில்லை. மனைவியைத் தான் கடிந்தார் முருகேசன்.

“நீங்க என்னங்க… ஏதாவது ஒன்னுன்னா, நாளைக்கி புள்ளயப் பெத்தவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா?”

“ஆமா! நல்ல புள்ளய கட்டிக் கொடுத்திருக்காங்க. வந்தமூனா நாளே வீட்ல பிரச்சினைய உண்டு பண்றா. நல்ல மகராசி தான்.” என அண்ணனின் பலவீனம் தெரிந்து பேச,

“இப்ப எப்படி இருக்கு?” என விசாரித்தார் மனைவியிடம்.

“நைட்டெல்லாம் தூங்கல. வெறிச்சு உக்காந்திருந்தா. இப்ப தான் கண்ணசந்தா. இவனைப் பாத்தாலே பயப்புடுறா?”

“அப்ப காத்துகருப்பு ஏதாவது அண்டியிருக்கும். புதுப்பொண்ணுனு பூவ தலைநிறைய வச்சுட்டு அவங்க களத்து வீட்டுப் பக்கம் சுத்தியிருப்பா. அங்கிட்டு தான் சுடுகாடு இருக்கே? ஏதாவது புடுச்சிருந்தா தான்  புருஷங்கூடவும் சேரவிடாம பண்ணும். கோடாங்கிய கூட்டியாந்து திருநீரு போட்டா சரியாப்போகும்.” என காளியம்மா யோசனை கூற,

“அதெல்லாம் வேண்டாம். ஆஸ்பத்திரிக்கி கூட்டிப் போவோம். முதல்ல காய்ச்சல கொறைக்கணும்.” என சுப்புலட்சுமி கூறினார். 

“ம்மா… அதான் அத்தை சொல்லுதுல்ல. அதுமாதிரியே செய்யலாம். அவ என்னையப் பாத்தாலே மிரள்றா. முதல்ல பயத்த தெளியவச்சா காய்ச்சல் தன்னால கொறையப் போகுது.” என தடைபோட்டான் மகன். அவனுக்கும் உள்ளுக்குள் பயம் கொண்டது. 

முருகேசனுக்கும் தங்கச்சி சொல்வதே சரி எனப்பட்டது. அவருக்கும் அதில் தான் நம்பிக்கை. 

“கோடாங்கிய வரச்சொல்லி மந்திரிங்க. அதுக்கப்புறமும் காய்ச்சல் கொறையலைனா ஆஸ்ப்பத்திரி போலாம்.” எனக் கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

             ******************

வெளியேற்ற முடியாத கோபம், எதிர்க்க முடியாத ஆற்றாமை, அழ முடியாத ஆதங்கம், செயல்படுத்த முடியாத வெறுப்பு இவை அனைத்தும் கொடுக்கும் ஆழ்மன அழுத்தமே பேய். அதென்னமொ பெண்களுக்கு மட்டும் தாங்க பேய்புடிக்குது. அடக்கப்படுவது எதுவும் ஒருநாள் வெடிக்கும். அது மனித உணர்வுகள் எனில் இன்னும் ஆங்காரமாக இருக்கும். 

கோடாங்கியை வரவழைத்தவர்கள், அவர் முன் பொம்மியை அழைத்து வந்து நிறுத்தினர். அவரைப் பார்த்தும் அவள் உடல்நடுங்க குறுக ஆரம்பிக்க… கண்களை மூடி வாய்க்குள் ஏதோ முனுமுனுத்தவர்,

“கன்னிகழியாம செத்த கன்னிப்பொண்ணுக ஆவிதான் புடிச்சுருக்கு. அதுதான் இப்படி இந்த புள்ளைய படுத்தி வைக்குது. சாங்கியம் செஞ்சு கழிப்பு கழிச்சா சரியாப்போகும்.” என கண்களை மூடிக்கொண்டு அருள்வந்தவராகக் கூறினார். 

இதில் எந்த அளவிற்கு உண்மை என்பதைவிட, இன்று வருமானத்திற்கு வழிசெய்ய நினைத்து விட்டார் கோடாங்கி. அவர்கள் மந்திரிக்க மட்டும்தான் வரச்சொல்லியது. வந்து பார்த்தவுடன், முருகேசனைப்பற்றி தெரியும் என்பதாலும், அவருக்கு சாதகம், பஞ்சாங்கம், பில்லி சூன்யம், பேய்பிசாசு, இதில் எல்லாம் அதிக நம்பிக்கை எனத் தெரிந்து, கனிசமான தொகை தேற்றலாம் என்ற முடிவிற்கு வந்தார்.

எப்பொழுதுமே கிராமங்களில் எந்த கன்னிப்பெண் உடம்பு சரியில்லாமல் போனாலும் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் பேர்தான் அடிபடும். அவர்கள் பேரைச் சொல்லியே இந்த மாதிரி ஆசாமிகள் பிழைப்பை ஓட்டிவிடுவர். 

அக்கம்பக்கம் ஊர்க்காரர்கள் என்பதால், அனைத்து குடும்பவிவரங்களும் இவர்களுக்கு அத்துப்படி. எப்பொழுதும் அப்டேட்டாக இருப்பார்கள் போலும்.

எனவே சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயரைச்சொல்லி அதனுடைய ஆவிதான் பிடித்திருக்கிறது. பேயோட்டினால் சரியாகிவிடும். தேவையான சாமான்களை வாங்கிட்டு வாங்க… என பெரிய லிஸ்ட் ஒன்று கொடுக்கப்பட்டது.  

“இத பொம்மி வீட்டுக்கு சொல்லி விடணும். அவங்களும் வரட்டும்.” என சுப்புலட்சுமி கூறியதற்கு,

“ஏன்… பெரிய வீட்டு மருமகளுக்கு பேய்புடுச்சுருக்குனு ஊர்முழுக்க தம்பட்டம் போட வேண்டியது தான. அங்க சொல்விவிட்டா தொட்டோட அத்தனைபேரும் வருவாங்க.  அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மந்திரிச்சுட்டா சரியாகப் போகும்.” என அண்ணன் மனைவியின் வாயை அடைத்துவிடடார்.

“தோப்பு வீட்டுக்கு கூட்டிப்போயிருவோம். இங்கனா ஊருக்குள்ள தெரிஞ்சு போயிரும்.” என அனைவரும் பொம்மியை அழைத்துக் கொண்டு தோப்பிற்கு சென்றுவிட்டனர். 

ஏற்கனவே பேதலித்து நிலையில் பெண். துணைக்கு காய்ச்சல் வேறு. 

நெற்றி நிறைய திருநீறு, பெரிதாக குங்குமப் பொட்டு சடாமுடி என கோடாங்கியே பார்க்கப் பயங்கரமாக இருக்க, அவள் முன் கொண்டு வந்த எலுமிச்சை, பூசணி, முட்டை, சிறு பொம்மை போன்ற பொருட்கள் அனைத்தையும் பரப்பிவிட்டு, கண்களைமூடி முனுமுனுத்துவிட்டு,

உடுக்கை அடிக்க ஆரம்பித்தார். உடுக்கையின் தாளத்திற்கு ஏற்றவாறு ஏதோ பாடிக்கொண்டே அடிக்க, சற்று நேரத்தில் அருள் வந்தது போல் கோடாங்கியும் ஆட ஆரம்பிக்க, எதிலும் கவனம் போகவில்லை பெண்ணவளுக்கு. அசையாமல் அமர்ந்திருந்தாள். 

உடுக்கைசத்தத்திற்கும், அவர்பாடும் பாட்டிற்கும் தன்னால் தலை ஆடவேண்டும். இல்லையெனில் பிரம்பு கொண்டு காலில் அடிக்கப்படும். 

இது ஒருவகையான அதிர்ச்சி வைத்தியம் என்றே சொல்லலாம். ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களை விடுவிக்க அந்தக்காலத்தில் செய்யப்பெற்ற சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட். 

உடுக்கை சத்தமும், பாட்டும் எதிரிலிருப்பவர்களை தன்னால் தலையாட்ட வைக்கும். இல்லை எனில் பிரம்பு கொண்டு சுளீர் என அடிக்க, அந்தக் கோபம் அவர்களைத் தூண்டி, ஆங்காரமாக ஆடவைக்கும். தலையைச்சுழற்றி அந்த உடுக்கை அடிக்கு ஏற்றவாறு ஆடும் பொழுது அடக்கியிருந்த அழுத்தமெல்லாம் ஆட்டத்தோடு அழுகையாக வெளியேறும். வாய்விட்டு அழுதாலே பாதி அழுத்தம் குறைந்த மாதிரி.

இன்றும் பல கார்ப்பரேட் யோகா மையங்களில் பாடல்களைப் போட்டுவிட்டு ஆடுவதைப் பார்க்கலாம். ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா உங்க மனசுக்குப் புடிச்ச பாட்டைப் போட்டுவிட்டு தெரிந்ததை ஆடுங்கள் என்று சொல்லக் கேட்கலாம். 

இன்று… ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு… என எல்.கே.ஜி. படிக்கிறது கூட ஈஸியா சொல்லுதுக. 

அப்ப… அந்தக்காலத்தில் அதற்கான வைத்தியம் என்ன? போயோட்டுவது. என்ன… எதை ஒன்றையும் காரணகாரியத்தோடு, அதன் வழிமுறைகளை அடுத்த தலைமுறைக்கு முழுதாகக் கடத்தாமல், மூடநம்பிக்கை என்ற பெயரில் மக்களை பயமுறுத்தியே சொல்லித்தரப்பட்டிருக்கிறது. சாப்பிடலைனா சாமி கண்ணக்குத்திறும்… என பயமுறுத்தி குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல, அனைத்தையும் கடவுளுடன் தொடர்பு படுத்தி பயம் காட்டியே சொல்லித் தரப்பட்டது.  இன்று அதனுடைய வழிமுறைகளும் முழுதாகத் தெரியாமல், அரைகுறையாக பணம் சம்பாதிக்கும் ஒன்றாக மட்டுமே போய்விட்டது. எதை ஒன்றையும் காரணகாரியமின்றி உருவாக்கவில்லை நம்முன்னோர். என்ன ஒன்று, இன்று காரியம் இருக்கிறது. காரணம் தெரியவில்லை.

சொர்ணமும், கௌரியும் உள்ளே வரும்பொழுது அவர்கள் கண்ணில் பட்டது, பிரம்பு கொண்டு பொம்மியை அடித்து, அவளது உச்சிமுடியைப் பிடித்து ஆட்டியதைத்தான். 

“ஏம்புள்ளய இப்படி பாக்கவா, உள்ளூர்லயே கட்டிக்கொடுத்தே.” என கௌரி மகளை கட்டிக்கொண்டு அழ,

“சுப்பு… கட்டுனவன் எங்க? என்ன நடந்துச்சுனு தெரியணும்?” என சொர்ணம் கேள்வி கேட்க,

“அவன் என்னத்த சொல்லுவான். இவ தான் அவனக் கண்டாலே பேயக்கண்ட மாதிரி மிரள்றாளே.”

“அப்படி பயப்படுற அளவுக்கு என்ன நடந்துச்சு. நான் தான் சின்னப்புள்ளனு சொல்லிட்டு தானே போனே.”

“அதுக்குன்னு கட்டிட்டு வந்துட்டு சாம்பிராணியா போடச்சொல்ற. உங்க அண்ணே மக வயசுக்கு வந்துட்டா தானே. இல்ல… அதுவும் ஊருக்கு முன்னாடி சும்மா சீர் செஞ்சீங்களா?” 

எப்பொழுதும் முழுதாக வாழ்ந்தவர்களை விட அரைகுறையாக வாழ்ந்தவர்கள் வார்த்தையில் விரசம் அதிகம் இருக்கும். அவர்களின் வாழமுடியா ஏக்கமோ, மற்றவர்கள் வாழ்வைப் பார்த்து வந்த பொறாமையோ வார்த்தைகளில் அத்துமீறல் அதிகமிருக்கும். 

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் விவரம் கேள்விப்பட்டு, சிதம்பரமும் அங்கு அவசரமாக உள்ளே நுழைந்தார். 

வந்தவர் எதுவும் பேசவில்லை. பேசும் நிலமையிலும் இல்லை. பெண்கள் தங்கள் ஆத்திரத்தை வார்த்தைகளாக கொட்டிக் கொண்டிருக்க… ஆணாக அவர் அனைத்தயும் அடக்கிக் கொண்டு மகளிடம் செல்ல, தந்தையைப் பார்த்தவளும் முழங்காலைக் கட்டிக் கொண்டு அன்னையோடு ஒட்டிக் கொள்ள, ஆணாக இருந்தாலும் தலையிலடித்துக் கொண்டு கதறிவிட்டார்… நடந்தது என்னவென்று புரியாத நிலையில். 

ஆயிற்று… ஒருவாரம் கடந்து விட்டது. மறுவீட்டிற்கு மருமகனோடு வரவேண்டியவளை, உடல் கொதிக்க காய்ச்சலோடு, சுயநினைவின்றி தனியாக அழைத்து வந்தனர். மருத்துவமனை சென்று காய்ச்சலுக்கு வைத்தியம் பார்த்தனர். குளிக்க வைக்க மகளின் ஆடைகளைக் களைந்தவருக்கு, அவளது நிலைக்கான காரணத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அவரும் கணவனோடு காதல் வாழ்க்கை வாழ்ந்தவர் தான். காதலின் அடையாளங்களைக் கண்டவர் தான். ஆனால் மகளின் மீதிருந்த அடையாளங்கள் ஆணின் காதலைச் சொல்லவில்லை. அவனின் வெறித்தனத்தை கட்டியம்கூற, இப்பொழுது வெறித்து நிற்பது தாயின் முறையாயிற்று. மகள் இருந்த சூழ்நிலையை நினைத்து… நெஞ்சில் அடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார். 

சுப்புலட்சுமி தான் மருமகளை வந்து பார்த்துவிட்டு சென்றார். இங்கு… முருகேசனுக்கோ தன்னையும், மகனையும்  கேட்காமல் எப்படி அழைத்துச் செல்லலாம்… அவர்கள் தானே அழைத்துச் சென்றார்கள்… அவர்களே கொண்டு வந்து விடட்டும் என கௌரவம் பார்த்தார். 

அடுத்தடுத்து நடந்த செயல்களால் பொம்மியை முழுவதுமாக அத்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தனர்… முருகேசன் குடும்பத்தினர்.

 

(Hi friends ❣️

இங்க பேயோட்டுறது நான் ஊர்ல சின்ன வயசுல பாத்ததை வச்சு சொல்லியிருக்கே. இப்ப யாரும் இந்தளவுக்கு பண்றது இல்லைனு நினைக்கிறேன். இதுல சேவல் மிஸ்ஸிங். அதை அறுத்து ரத்தத்தை மேல தெளிச்சு விடுவாங்க. இப்பவும் இது நடக்குது. கோடாங்கிக்கு ஒரு சேவல் கிடைக்குமே. பிரம்புக்கு பதிலா எருக்கங்குச்சி ஒடிச்சுட்டு வந்து அடிச்சுப் பாத்திருக்கே. இப்ப தான் பிரம்பு வச்சு சும்மா தலைல தட்றாங்க. சின்னவயசுல நான் பாத்ததுல சுளீர்னு அடிப்பாங்க. அதுக்குப் பயந்துட்டே தன்னால ஆட‌ஆரம்புச்சுருவாங்க. (புருஷங்கூட வாழமாட்டேனு சொன்ன எங்க சித்திக்கு, பக்கத்து வீட்லயே பேயோட்டிப் பாத்திருக்கே. இப்ப அவங்க இல்ல). சின்னப்பிள்ளைகள விரட்டி விடுவாங்க… பயந்திருவோம்னு. இல்லைனா வெளியேறுற பேய் எங்களப் புடுச்சுக்குமாம். அதுவும் வயசுக்கு வந்த பொண்ணுங்க, புதுசா கல்யாணம் ஆனவங்க இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் பேய் பிடிச்சுருக்குனு அதிகமா சொல்லுவாங்க. வயசுப் பொண்ணு பூவச்சுட்டு ஒத்தையில போயிருப்பா. அதான் காத்து காருப்பு புடுச்சிருக்கும்னு நிறைய கேட்டுருக்கோம். ஏன்னு யோசிச்சுருக்க மாட்டோம். அந்த அந்த நேரத்துல அவங்களுக்கிருந்த குழப்பம்‌தான் பேய். சாமியும் பேயும் மனுசனோட உள்ளுணர்வு தான.)