பொன்மகள் வந்தாள்.18🌹

  • PMV.18. 

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே

இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

………………. 

உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து

கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்

வேளை வரும்போது விடுதலை செய்து

வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்

ஆம்!! நான்கு வருடங்களாக ரகசிய சிநேகிதன் தான் அவளது மாறன்… காகிதப்பூவாய் இருந்தவளை அவனே அறியாமல் வாசம் கொள்ளச் செய்தவன். செல்கள் எல்லாம் பூக்கள் பூக்கச்செய்தவன், அவளது ரகசிய சிநேகிதன். அவளது சிறகுகளுக்கு வண்ணம் சேர்த்தவன்.

பீரோவில் துணிகளை அடுக்குகையில், ஊரைவிட்டுச் செல்லும் முன் மடித்துவைத்த அவனது கைக்குட்டை சீருடைகளுக்கடியில் கண்ணில் பட்டது. பார்த்தவுடன் இதழில் புன்னகைபூக்க, பார்த்த கண்கள் சட்டென அவன் நினைவில் பனிக்க, அதை கையில் எடுத்தாள். உள்ளிருந்த அந்துருண்டை வாசனையோடு சேர்த்து பெட்டி வாசனையும் நாசி நெருடியது. ஆனால் அவனது காதல் வாசம் மட்டும் இன்னும் பசுமை மாறாமல் கைக்குட்டையினுள். 

இப்பொழுது எடுத்துப் பார்க்கும் பொழுதும், ‘சின்னப்புள்ளயா இருக்க… நாலஞ்சு வருஷம் எனக்காக காத்திட்டிருக்கியா?’ எப்பவும்போல் இப்பொழுதும் கேட்டு மந்தகாசமாய் சிரித்தான் மனக்கண் முன். 

சைக்கிளை இழுத்துப் பிடித்து ‘துப்பட்டாவை முடிபோட்டு போம்மா.’ அக்கறையாய் அவனது வார்த்தைகள் இன்றும் செவிக்குள் சில்வண்டின் ரீங்காரமாய்.

‘சக்திமாறன்.’ கண்கள் சிரிக்க குறும்பாய் பேர் சொன்னான் காரிகையின் முகம்பார்த்து கள்ளனாய் இன்றும் அவளது கனவுக்குள்.

‘என்னால நான்கு மாதங்கள் கூட காத்திருக்க முடியவில்லை மாறன். நீங்க சொன்னதோட அர்த்தம் புரிவதற்குள் விதி கைமீறிப்போயிருச்சு…’ தனக்குள் கூறிக்கொண்டாள். 

அர்த்தம் புரிந்த நாள்முதலாய் ரகசிய சிநேகிதனாய் அவளது மாறனை மனதிற்குள் பூட்டிக்கொண்டாள்.

அதற்கு எந்தத் தடையும் இல்லையே. யார் கேட்பார்கள்? கண்ணனை மட்டும் விரும்பும் ஆண்டாளாக இருந்து விட்டுப் போகிறேனே… இப்படிதான் மாறனின் பொம்மியாகத் தன்னை வரித்துக் கொண்டாள். பாரதிக்கு கண்ணம்மா என்றால் எனக்கு மாறன். ஆனால் எனது மாறனோ கண்ணனைப்போல், கண்ணம்மாவைப்போல் கற்பனை உருவம் இல்லை. கண்முன் உயிரோடும் உணர்வோடும் நடமாடுபவன் என்ற பெருமிதம் வேறு அவளுக்குள். பெண்களுக்கு எப்பொழுதுமே கற்பனை வாழ்க்கை ஒன்று உண்டு. அது அவர்களுக்கு மட்டுமே ஆனது. அதில் இப்பொழுது மாறனும் கைகோர்த்துக் கொண்டான் அவளோடு. கற்பனையிலேயே அவனோடு வாழ்ந்து வந்தவளுக்கு, அன்று இரண்டாம் முறையாக கோவிலில் அவனை சந்தித்த பொழுது பொங்கும் பால்பாத்திரமாக உள்ளம் பொங்கிபூரிக்க, அதை வெளிக்காட்டாமல் தான் தன்னவனை கண்களில் நிரப்பிக்கொண்டிருந்தாள். அவளது கற்பனையில் இருந்தவனோ முதன்முதலாக தனது ஊரில் பார்த்த இருபத்தைந்து வயது கட்டிளங்காளை. ஆனால் அன்று கோவிலில் பார்த்தவனோ வெற்றியின் பூரிப்பில் அதன் ஆளுமையில் தளும்பி நிற்கும் காங்கேயங்காளை. 

அவன் வேலைக்கு அழைத்ததும் தந்தை கூட சற்று தயக்கம் காட்ட, கௌரியோ சுத்தமாக மறுத்துவிட, இவள்தான் தந்தையிடம் பேசி சம்மதம் கேட்டாள். கற்பனையில் இருந்தவனை நாள்முழுதும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆவலோடு தான் வேலையில் சேர்ந்தாள். 

பழைய நினைவில் கைக்குட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அன்றையதின அணைப்பும் ஆறுதலும் ஆயுள் முழுக்க வேண்டும் என ஏக்கம் நெஞ்சம் முழுதும் தளும்ப, பேராசையாகத் தோன்றியது பேதைக்கு.

துக்கம் முடிந்து ஒரு மாதம் கடந்து விட்டது. இன்னும் திருச்சிக்கு செல்லவில்லை. துக்கவீட்டில் சொல்லிக்கொண்டு செல்வது வழமையில்லை என… செல்லும் பொழுது சக்தியும் சொல்லிக்கொள்ளவில்லை. அதன் பிறகு அவளை தொடர்பு கொள்ளவுமில்லை.

‘இது மட்டுமே போதுமா?” என்றது மனசாட்சி.

‘போதும்.’ என்றாள் அழிச்சாட்டியமாக.

‘இத… இன்னும் உன்ன சினனப்புள்ளயா நினச்சுட்டு இருக்கிற உங்க அப்பாகிட்ட சொல்லு. உன் கூடவே இருக்கற என்கிட்ட சொல்லாத.’ என எள்ளி நகையாடியது.

‘அப்படி உனக்கு மட்டும் என்ன தெரியும். இத்தனவருஷமா இருந்த மாதிரி இப்பவும் இருந்துட்டு போறே.’

‘அப்ப ஏன் அவன் சொல்லாம போனதப்பத்தியும், ஃபோன் பண்ணாததையும் நினச்சு உள்ளுக்குள்ளயே அவுச்ச நெல்லாட்டம் புழுங்கிப்போற.’ மனசாட்சி விடாப்பிடியாக கேட்க, தனக்குத்தானே பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். அதுவும் உண்மைதானே. ஒருசமயம் ஏன் ஃபோன் பண்ணவில்லை என கோபம் வருகிறது. ஒருசமயம் இதுவும் நல்லதுக்குதான். நம்மலப்பத்தி தெரிஞ்சுறுச்சுல்ல… அவர் வாழ்க்கைய அவர் பாத்துக்கட்டும்… இப்படியே ஒதுங்கிக் கொள்வோம.’ என தோன்றுகிறது. ஒருநாள் அவனை நினைத்து உருகுகிறாள். மறுநாளே இது சரிப்படாது என வெறுக்கிறாள். வேண்டும் வேண்டாமென தனக்குத்தானே முரண்டு பண்ணுகிறாள். ஒருநாள் அவனை நினைத்து சிரிக்கிறாள். ஒருநாள் நான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என அழுகிறாள். இதுநாள்வரை உணர்ச்சியின் பிடிக்குள் ஆட்படாமல் இருந்தவள்,‌ இப்பொழுது சிலந்திவலையில் சிக்கிய பூச்சியாக விடுபட முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கே அவளைப் புரியாமல் குழம்பிப் போகிறாள். தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வரமுடியாமல் நீருக்கு ஏங்கும் வேராக தவித்துப் போகிறாள்.

அவளுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே ஏன் நாம் இப்படி இருக்கிறோம் என பலநேரங்களில் புரிவதில்லை. இதில் ஆண்களுக்கோ பெண்கள் என்றும் புரியாத புதிர் என்ற வியாக்யானம் வேறு. 

ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி ஒரு கிளிக்கூட்டுக்குள் இருக்கும் மாயாவியின் உயிரைப் போல, பெண்ணுக்குள்ளும் ஏழுகடல்தாண்டி, ஏழுமலை தாண்டி பாதுகாக்கப்படும் உயிர்போல, பல லட்சம் இளவரசிகளின் உயிர், கருமுட்டை வடிவில் பாதுகாக்கப்படுகிறது. அண்டம் என்றால் உலகம் என்று மட்டுமல்ல… கருமுட்டை என்றும்‌ பொருள். அந்த அண்டத்தையே தனக்குள் அடக்கி வைத்திருப்பவள் பெண். அந்த அண்டமாகிய இளவரசி தான் பெண்ணை சேடிப்பெண்ணாகக் கொண்டு தனக்குள் அடக்கி வைத்து ஆட்டிப்படைக்கிறாள். சினைப்பையிலிருக்கும் பருவத்திற்கு வந்த இளவரசி தனது இளவரசனைத்தேடி கருப்பை நோக்கி தன் பயணத்தை துவங்குகிறாள். அவள் கருப்பை வந்து சேர்வதற்குள் இளவரசனை கொண்டு வந்து சேர்க்கவேண்டி, தனது சேடிப்பெண்ணைத் தயார் படுத்துகிறாள். சந்தோஷப்பட செய்கிறாள். குதூகலிக்க வைக்கிறாள். கடைக்கண் காட்டச்சொல்கிறாள். காதோரம் கூந்தல்  ஒதுக்கி ஓரப்பார்வை வீசச் செய்கிறாள். மற்றவர்கள் கவனத்தை கவரச்செய்கிறாள். அதற்கு மூளையில் செரட்டோனின் என்ற வேதிப்பொருளின் உற்பத்தியை தூண்டிவிடுகிறாள். அப்பொழுதெல்லாம் பெண் சந்தோஷமாக பூரிக்கிறாள். சுறுசுறுப்பாக இயங்குகிறாள். இதற்கு செரட்டோனின் சுரப்பு மிக முக்கியம். அப்பொழுதுதான் எட்டணா சாக்லேட்டுக்கே குதிக்கும்   குழந்தையாய் நம்மால் குதூகலிக்க முடியும். இல்லையெனில், “என்னடா எருமச்சாணிய மூஞ்சியில அப்புன மாதிரியே திரியறேன்னு.” கவுண்டமணி செந்தில பாத்துக் கேட்ட மாதிரிதான் சப்புன்னு திரிவோம்.

இப்பொழுது கன்னிமாடம் கடந்து வந்து தனது இளவரசனைத் தேடுகிறாள் இளவரசி. தாபத்தோடு வந்தவளுக்கு, ஆலிங்கனம் செய்து அணைத்துக் கொள்ள இளவரசன் வரவில்லை. தாபம்தணிக்க இளவரசனுக்காக காத்திருக்கிறாள் இளவரசி. அவளது ஆயுட்காலம் ஒருநாள்தான். அதற்குள் இளவரசன் எனும் உயிரணு வந்து சேரவேண்டும். வரவில்லை எனில் ஆங்காரமாக வெடித்துச் சிதறி ரத்தமும் சதையுமாக வெளியேறுகிறாள். இவளுடைய ஏக்கத்தையும், கோபத்தையும், தாபத்தையும்… தலைவலி, வயிற்றுவலி, இடுப்புவலி என சேடிப்பெண்ணிற்கு மடைமாற்றி விட்டு வெளியேறுகிறாள்.  ஒவ்வொரு இருபத்தியெட்டு நாள் மாதவிடாய் சுழற்சிக்குள்ளும், சிரித்து, மகிழ்ந்து, ஆவலோடு எதிர்பார்த்து, வெறுத்து, வெடித்து, என இத்தனை உணர்வுகளையும் கடந்து, அடுத்த இளவரசியின் வருகைக்கு தயாராக வேண்டும். அதுவும் ஒவ்வொரு சுழற்சியின் கடைசிவாரம் என்பது மிகவும் அழுத்தமான நாட்கள். இந்த நாட்களில் மூளையில் செரட்டோனின் சுரப்பு குறைந்துவிடும். இளவரசன் வராத கோபத்தை இளவரசி சேடிப்பெண்ணிடம் கடத்த அவளோ தன்னைச் சூழ்ந்தவர்கள் மீது காட்டுவாள். சிக்கியவர்கள் சிதறுதேங்காய் தான் அந்த நாட்களில். எல்லாம் இருந்தும் எதுவுமில்லா ஒரு வெறுமை தோன்றும். தனக்குதானே கழிவிரக்கம் பிறக்கும். நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற ஆற்றாமை கூடும். தேவையில்லா பயத்தோடு, சிறுபிரச்சினை என்றாலும் அழத்தோன்றும். 

அந்த மூன்றுநாட்கள் முடிவிற்குப்பின், தெளிந்த நீரோடைபோல அப்படியோர் அமைதி மனத்தினுள் பிறக்கும். மீண்டும் இதே சுழற்சி தான் ஒவ்வொருமுறையும், இளவரசியை இளவரசன் சேரும் வரை. இவையெல்லாம் பெண்ணிற்கு உள்ளிருந்து அழுத்தும் அகக்காரணிகள். இதற்கு மேல் கணவன், குழந்தை, படிப்பு, குடும்பம், பொருளாதாரம், உறவுகள் என அழுத்தும் புறக்காரணிகள் வேறு. இங்கு ஏழு குதிரைகள் பூட்டிய சூரியனின் ரதம் போலத்தான் பெண். அத்தனை இழுவைக்கும் ஈடு கொடுக்க வேண்டும். இந்தக்காலத்தில் பத்துவயதில் எல்லாம் வயதிற்கு வந்துவிடும் சிறு பிள்ளைகள், இளவரசிகளின் சுழற்சி ஆட்டத்தில், தனக்குள் என்ன நடக்கிறது என்றே புரியாமல் திக்குமுக்காடிப் போகிறார்கள். காரணம் புரியாமல் நம்மீது எரிந்து விழுவார்கள். உடனே, “நானெல்லாம் அந்தக்காலத்துல எங்க அம்மாவைப் பார்த்தாலே நடுங்குவே.” என ஆரம்பிப்போம். அன்று நமக்கும் புரியவில்லை… நமக்குள் என்ன நடந்தது என்று. ஆனால் இன்று எந்த நேரத்தில் நம்மகள் மனநிலை எப்படி இருக்கும் என்று பார்த்து வழிநடத்தலாம். ஏனெனில் அவர்கள் தடம்மாறவும், அவர்களைத் தடம் மாற்றவும் இன்று சூழல்கள் ஏராளம்.  

இதே அழுத்தம் ஆண்களுக்கு இல்லையா எனில் அவர்களுக்கும் உண்டு. அவர்கள் அழுத்தம் நேர்கோட்டுப் பாதை. சுழற்சி முறையில் ஊஞ்சலாட்டமாக முன்னும் பின்னுமாக சுழற்றப்படுவதில்லை. ஆண்கள் நட்பு வட்டம் போல் பெண்கள் நட்பு வட்டம் அமைவதில்லை. சிலவிஷயங்களை வெளிப்படையாக பேசியே வடிகால் தேடிக்கொள்கின்றனர் ஆண்கள். ஆனால், மாதவிடாய்ப் பிரச்சினைகளைக் கூட பெண்கள் இன்னும் வெளிப்படையாகப் பேசி நட்புவட்டத்தில் ஆலோசிப்பதில்லை. அதிலும் நாற்பதுகளைக் கடக்கும் பொழுது, இனி இவளிடம் நமது ஆட்டம் செல்லாது என எண்ணம் கொள்ளும் இளவரசி, ஹார்மோன்களின் கூட்டு சதியொடு காட்டும் ஆட்டம் ஒரு‌ பக்கம் எனில், இனி நம் இளமைக்கு மூடுவிழாவா என ஏங்கும் ஏக்கம் ஒருபுறம் என அவளைப்பாடாய் படுத்திவிட்டுதான் டா…டா… பை…பை… காட்டிவிட்டுச் செல்லும். இத்தனை உள்அழுத்தம், வெளிஅழுத்தம் என அழுத்தப்படும்பொழுது பெண்களுக்கு மன அழுத்தம் எனும் பேய் பிடிக்காமல் என்ன செய்யும். (போரடிச்சா இந்தப்பகுதிய தள்ளிட்டுப் படிங்கம்மா. எப்படி கரெக்டா கடைசில சொன்னனா!!!!)

இத்தகையதோர் குழப்ப நிலையில்தான் பொம்மி தெளிவாக யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள். துணிகளை ஒதுங்க வைத்துவிட்டு வெளியே வர,

“பண்டு… சாப்பிடலாமா?” என அத்தை கேட்க, 

“ம்ம்ம்….” என்றவள், ஈஸிச்சேரில் சாய்ந்து படுத்திருந்த தந்தையின் காலடியில் சென்று அமர்ந்து கொண்டாள். தந்தையின் முழங்காலில் தலைவைத்துப் படுத்துக் கொண்டவள்.

“அப்பா நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்.” என்றாள்.

அத்தையும் அப்பாவும ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள,

“அம்மா தான் கடைசி காலத்துல நிம்மதி இல்லாம போயிருச்சு. நீங்களாவது இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருக்கணும்ப்பா. நமக்கு பின்னாடி நம்ம புள்ள என்ன செய்யுமோங்கற பயத்துலயே நீங்களும் இருக்க வேணாம் ப்பா. அதனால நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறே.” என்க, சிதம்பரம் வேகமாக நிமிர்ந்து அமர்ந்தார்.

“ஆனா… ஒரு கண்டிஷன்… மாப்பிள்ளைக்கும் ரெண்டாங்கல்யாணமா இருக்கணும். அவங்களுக்கு குழந்தை இருந்தாக்கூட பரவாயில்ல.” என்றவள் தந்தையின் பதிலைக்கூட எதிர்பாராமல், உணவை எடுத்து வைக்க எழுந்து அடுக்களை சென்றுவிட்டாள்.

          *************************

“லட்டூ…”

காதருகினில் கேட்ட குரலில் விக்கித்து திரும்பிப் பார்த்தவளின் கண்களில், அதிர்ச்சியும், ஆச்சர்யமும் டன்கணக்கில் போட்டிபோட, சட்டென செம்பருத்தியாய் விரிந்த விழிகளில், சடுதியில் உலக சந்தோஷம் அத்தனையும் கண்டவன், அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே பொன்தாலி கோர்த்த மஞ்சள்நிற மங்களநாணை மங்கையின் சங்கு கழுத்தில் புன்னகையுடன் பூட்ட, கழுத்தில் விழுந்த மஞ்சள்கயிற்றின் ஈரத்தில் உடல் சிலிர்த்தாள் பொம்மி. பொன்மஞ்சள் அரிசிகள் சரசரவென மழைச்சாரலாய் மேலே விழ, இரண்டு முடிச்சுகள் போட்டதும்,

“கையை எர்றா.” என கண்டனக் குரல் கேட்டு, தன்னவளின் பின்புறம் நின்ற தமக்கையைப் பார்த்தவன், வழக்கமான தனது பளீரிட்ட புன்னகையோடு கைகளை விலக்கிக் கொள்ள, உரிமையோடு நாத்தானார் முடி போட்ட அக்காவிடம்,

“தாங்க்ஸ் க்கா.” என்றான் சக்திமாறன் சந்தோஷமாய்.

“க்க்கும்.” என நொடித்துக் கொண்டாலும், அழகன் முருகனை மனதில் நிறுத்தி, தம்பியின் மணவாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டிக்கொண்டு மூன்றாவது முடிச்சை இறுக்கிப்போட்டாள் பவானி.

பின்னே… அக்காவை மலையிறக்க அவன் பட்டபாடு அவனுக்கு தானே தெரியும். கையில் வேப்பிலை இல்லாத குறையாக ஆடித்தீர்த்தவள், அவனை கல்லில் நார்உரிக்க வைத்துவிட்டு தானே தம்பியின் கல்யாணத்திற்கு சம்மதித்தாள்.