பொன்மகள் வந்தாள்.19🌹

PMV.19

”என்ன… அம்மாவும் பையனும் புதுமை விரும்பிகளோ? வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு பாக்குறீங்களா? நான் ஒரு செகன்ட்ஹேன்ட் பொண்ண என் தம்பி கட்டிக்க ஒருநாளும் சம்மதிக்க மாட்டே.” என ஹாலில் இருந்து கொண்டு கோபமாக கூறியவள் முகத்தில் எண்ணெயில்லாமலே கடுகு பொறிந்தது.

“அக்கா.” என அதட்டினான் சக்தி, அந்த வார்த்தையை சகிக்க முடியாமல்.

“யாரும் யாருக்கும் இங்க வாழ்க்கை கொடுக்கல. நான் பொம்மியப்பத்தி எல்லா விவரமும் சொன்னது அவளைப்பத்தி நீங்களும் முழுசா தெரிஞ்சுக்கணும்னு தானே ஒழிய, நீ அவள செகன்டஹேன்ட்னு தாழ்த்திப் பேசறதுக்காக இல்லக்கா.” என்று தவிப்பாய் கூறினான். ஏனோ அந்த வார்த்தை அவனுக்கு சுருக்கென்றது.

“நான் சொன்னதுல என்னடா தப்பு. நம்ம கடையில ஒரு பொருள், பில்போட்டு கடையவிட்டு வெளியேறிட்டாலே, அது செகன்ட் ஹேன்ட் தானடா. ஒருவீட்ல அது ஒருவாரம் இருந்தா என்ன? ஒருவருஷம் இருந்தா என்ன? என்னங்கம்மா நாம்பாட்டுக்கு பேசிட்டே இருக்கே? நீங்க பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க?”

“எங்கள எங்க பவானி பதில் பேசவிட்ட… வந்ததுல இருந்து எப்பவும்போல நீதான் பொறிஞ்சு தள்ளிட்டு இருக்கியே?” என்றார் காவேரியும்.

“இவனுக்கு எப்படிப்பட்ட பொண்ணெல்லாம் பாக்கணும்னு நினச்சுருந்தோம்? இவன் என்னடான்னா ஏற்கனவே கல்யாணமானவள கை காட்டுறான். நீங்களும் அதுக்கு தலையாட்டுறீங்க.” என ஆதங்கமாக, ஆத்திரத்தை தாயின் பக்கம் திருப்பினாள்.

தம்பி எப்பொழுது பொம்மியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினானோ அப்பொழுதில் இருந்து இவளும் எத்தனையோ வகையில் மறுப்பு சொல்லிப் பார்க்கிறாள். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை அம்மா வீட்டிற்கு வருபவள், இந்த வாரமும் வந்ததும் ஆரம்பித்து விட்டாள்.

“ஆனா நீதானே பவானி, அந்தப்புள்ளயையும் பொண்ணு கேக்கணும்னு சொன்ன? தம்பி ஆசப்பட்டத நிறைவேத்தி வைக்கணும்னு வேற சொன்னீயே?” என பவானியிடமே, காவேரி கேட்க,

“நீ ஆரம்பிச்சு வச்சதுதான் க்கா. கடைமுழுக்க தெரியும். ஏதோ அவங்க அம்மா இறக்கவும் அது அப்படியே அமுங்கி போச்சு. கடையில வேலபாக்குற பொண்ணுங்க பேரே எதுலயும் அடிபடக்கூடாதுனு கவனமா இருப்பே. நீ என்னடான்னா அன்னைக்கி கடையில வச்சுப் பேசுனது எனக்கும் அவளுக்கும் லவ்வுங்கற அளவுக்கு பரவிருச்சு. அதுதான் உண்மையும் கூட.”

“என்ன, நான் சொன்னத எனக்கே திருப்புறீங்களா ரெண்டு பேரும்? அன்னைக்கி அவளப் பத்தி தெரியல. அதனாலதான் ஜாதகம் கேட்டப்பகூட சரியா பதில் சொல்லாம… தட்டிக் கழிச்சிருக்காங்க. இப்ப தெரிஞ்சுறுச்சு இல்ல. கண்ணத்திறந்துட்டே போயி யாராவது கெணத்துல விழுவாங்களாடா?” வெடுவெடுவென பவானி கேட்க,

“சரிக்கா… நீ சொன்னபிரகாரமே வர்றே. பொம்மியப் பத்தி தெரிஞ்சதால வேண்டாங்கறே. இதேது தப்ப மறச்சு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்கன்னா என்ன பண்ணுவோம். இன்னைக்கி எத்தனையோ பாக்குறோம். நம்ம கடைக்கே படிக்கும்போது ஒருத்தனோட வர்றாங்க. கல்யாணம் பண்ணிட்டு இன்னொருத்தனோட வர்றாங்க.” என்று கூற, 

“அதான்டா… நமக்கு தெரியாமங்கும்போது, பிரச்சினை இல்ல. தெரியும்கறப்ப தானே மனசு உறுத்துது. என்னம்மா… சொல்லுங்கம்மா.” என விதவிதமாக அவளும் மறுப்பு தெரிவிக்கிறாள்.

காவேரிக்குமே இதில் முழு சம்மதம் இல்லைதான். ஏன் இப்படி, ஏற்கனவே திருமணமான பெண்ணை மகனுக்கு முடிக்க வேண்டும்? என உறுத்தல் இருக்கதான் செய்கிறது. ஆனால் மகன் ஒருமுடிவை தீர ஆலோசிக்காமல் எடுக்க மாட்டான். எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டான் எனத் தெரியும். அவசரப்பட்டு முடிவு எடுக்க விடலைப் பருவமும் இல்லை. சொல்லி திருத்துகின்ற அளவுக்கு விவரம் புரியாதவனும் இல்லை. அவனிடம் பேசி பிரயோஜனமும் இல்லை என காவேரிக்குத் தெரியும்.

“பவானி, நானும் சின்ன வயசுல கணவன இழந்துட்டு தனியா இந்த சமூகத்த சமாளிச்சவதான். அந்த கஷ்டம் என்னானு எனக்குதான் தெரியும்… அப்படினு சோகமா சினிமா டயலாக் பேசச்சொல்றியா? எனக்கும் இதுல முழு சம்மதமில்ல. ஆனா, எம்மகன் மொதமொதன்னு ஆசப்பட்டது. நீதானே, தம்பி எதுக்கும் ஆசப்பட்டது இல்ல… அவன் ஆசப்பட்ட வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கணும்னு சொன்ன… அதைத்தான இப்ப செய்யப்போறேன்.” எனக்கூறினார் காவேரி.

ஆக மொத்தம் பெண்கள் இருவரும் விரும்புவதும் இவனது நலனைத்தான். தம்பிக்கு ஏன் ஏற்கனவே திருமணமான பெண்ணை மணக்க வேண்டும் என அக்காவும், மகனது ஆசை… வாழப்போவது அவன்தானே,  நிறைவேறட்டுமே என அம்மாவும், என இருவரும் நடத்துவது உரிமையான பாசப்போர். அதனால்தான் சக்தியும் அக்காவின் சம்மதத்திற்காக இத்தனை நாட்களாகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.

“நல்லா பேசறீங்கம்மா. நாளைக்கு சொந்தம்பந்தம் கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க. அப்படி எதுல கொறஞ்சு போயிட்டான். உங்க பையனுக்கு ஏதாவது தோஷமா, இல்ல வேற ஏதாவது கொறையானு கேப்பாங்க. அப்ப மொகத்த எங்க கொண்டுபோய் வச்சுப்பீங்க.”

“ஏன் பவானி… நாம பாக்காத சொந்தபந்தமா? எங்கே… நம்மகிட்ட உதவிக்கு வந்துருவாங்களோன்னு தெருவுல பாத்தாகூட பாக்காத மாதிரி போனவங்க தான, நாம பாத்த சொந்தபந்தம் எல்லாம். இன்னைக்கி… அதே நாலுகாசு வந்தவுடனே, இவங்களுக்கு வந்த வாழ்வப்பாருன்னு இப்பவும் தான் மூஞ்சியத் திருப்பிட்டு போறாங்க. கீழவிழுந்தவங்க எந்திரிக்க மாட்டாங்க, நாளப்பின்ன நம்மகிட்டதான் வரணும்னு எகத்தாளமா நினச்சு, கைகொட்டி சிரிச்சவங்களப் பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்ல. எவனாவது கேட்டா, ஆமா எம்பையனுக்கு ரெண்டாந்தாரப் பொண்ணுதான் அமையும்னு இருந்துச்சுனு ஊனிச்சொல்லுவே. எம்பையனால ஒரு பொண்ணும், அந்தப் பொண்ணால எம்பையனும் சந்தோஷப்படுவான்னா, நான் வேற யாரப்பத்திக் கவலப்படணும் சொல்லு.” எனக் கூறிய அம்மாவை கண்கள் விரியப் பார்த்தான் சக்தி. அப்படியே தாயை, அலேக்காகத் தூக்கி சுற்றவேண்டும் போல் இருந்தது. இதுதானே நாகரீகம். நாகரீகம் என்பது கட்டும் உடையோ, வெட்டும் நடையோ, நுனிநாக்கு ஆங்கிலமோ இல்லை. அது வெறும் தோற்ற மாற்றமே. நாகரீகம் என்பது சிந்தனை மாற்றம். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் நடப்பது எல்லாமே கேலிக்கூத்துகள். 

“அவனோட சேந்து, கண்டகண்ட புக்கையும் படிச்சுட்டு, அப்படியே ஒப்பிக்கறீங்க ம்மா. ஊருக்கு தான் உபதேசம் எல்லாம். நடைமுறைக்கு ஒத்து வராது. அது தெரிஞ்சு தான் அவளே, ரெண்டாந்தார மாப்பிள்ளை பாக்க சொல்லியிருக்கா.”

“என்னடா இவ… நான் பேச வேண்டியதெல்லாம் இவ பேசுறா. இவ பேசவேண்டியத நான் பேசுறே.” என காவேரி அலுத்துக் கொள்ள,

“ஆமா ம்மா… நீங்க ட்ரெண்டிங் மாமியாரா மாறலாம்னு பாக்குறீங்க. ஆரம்பத்துல நல்லா தான் இருக்கும். தெரியாமலா சொல்லி இருக்காங்க. புதுமாமியாரும், அரிப்பும் ஒன்னுன்னு. ஆரம்பத்துல சொரியும் போது சுகமாத்தான் இருக்கும். போகபோகத்தானே தெரியும் எரிச்சலும், வலியும். அப்ப அவசரப்பட்டுட்டோமேனு யோசிப்பீங்க.”

“என்னடி சாபம் விடுற மாதிரி பேசுற? நானும் சொல்றே… உன் தம்பியப் பாத்து நீயும் சொல்லுவ. நல்ல பொண்ணதான் செலக்ட் பண்ணியிருக்கான்னு.” இது மகன் மீது கொண்ட நம்பிக்கையில் தாய் கூறியது.

“மாமா… நீங்களாவது சொல்லுங்க. நான் சொல்றது இவங்களுக்குப் புரியமாட்டேங்குது. அந்தப் பொண்ணே இவனப் புடிக்கலைனு வேறபக்கம் கல்யாணம் பேச சம்மதிச்சுட்டாள்ல. மறுபடியும் ஏன் இவன் வலிய போகணும். அப்படி என்ன உலகத்துல வேற பொண்ணா இல்ல? அப்படி எத்தன பொண்ணப்பாத்து அலுத்துட்டோம் சொல்லுங்க?” இவர்களிடம் பேசி வேலைக்காகாமல் கணவனிடம் தனது ஆற்றாமையைக் கொட்ட,

“அக்கா! அவ… என்னயப் புடிக்காம விலகிப்போல. என்னையப் புடிச்சதாலதான் என்னைவிட்டு விலகிப்போறா. நான் நல்லா இருக்கணும்னு ஆசப்படுறவள, நாமட்டும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் சொல்லு?”

“பவானி அவன் சொல்றது உனக்குப் புரியலியா? அவன் மனசுல எப்பவோ அந்தப் பொண்ணு வந்துருச்சு.” என விஷ்ணு, மனைவிக்கு புரியவைக்க முயல,

“ஏங்க… அது ஏதோ சின்னவயசுல விளையாட்டுத்தனமா சொல்லிட்டு வந்துட்டான். நீங்க அதையே புடிச்சு தொங்கறீங்க?”

“நானும் அதைத்தான் க்கா சொல்றேன். சின்னப் புள்ளையா இருந்தவகிட்ட, விளையாட்டுத்தனமா தான் சொல்லிட்டு வந்தேன். இல்லைங்கல. நானும் அவளத் தேடி போகல. ஆனா அவளுக்கு கல்யாணம் ஆகியும், வாழாம… அவ நானிருக்க இடத்துக்கே வந்திருக்கான்னா, அவள எனக்குனு விதி விதிச்சிருக்கும் போது, வேற ஒருத்தனோட எப்படி வாழ்வா சொல்லு?”

“அப்படிப்பட்டவ, எதுக்குடா வேறமாப்பிள்ளை பாக்க சொல்லணும்.?”

“இப்ப நீ பேசுனதை எல்லாம் அவளும் யோசிச்சிருப்பாள்ல க்கா? வெளிப்படையா சொல்லிக்கலியே தவிர, ரெண்டு பேர் மனசும் எங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும். நான் அவங்க அம்மா செத்தபின்னாடி அப்படியே கெளம்பி விட்டுட்டு வந்தவன் தான். ஒரு ஃபோன் கூட பண்ணல. பண்ணினா இப்ப நீ பேசுனத எல்லாம் அவளும் பேசுவா. எனக்கு பதில் சொல்லி முடியாது. அதனால் தான் உங்க சம்மதம் கெடச்சா போதும். அவள வழிக்கு கொண்டு வர்றது எப்படின்னு எனக்குத் தெரியும்.” என்றான் அக்காவிடம்.

“பவானி நான் ஒன்னு சொல்லட்டுமா?” என விஷ்ணு மனையாளிடம் கேட்க, என்னவென்று கணவனை பார்த்தாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடியே உன்ன எனக்குப் புடிக்கும்கறது… கல்யாணத்துக்கு அப்புறம் தான் உனக்கே தெரியும். ஆனாலும் பொண்ணு கேக்க தயங்கினேன். அப்பவும் கூட மளிகைக் கடைதான் நடத்திட்டு இருந்தீங்க. அப்படி இருந்தும் நீங்க முன்னாடி இருந்த வசதிய நினச்சு பொண்ணு கேக்க ஒரு தயக்கம். இவங்க பழைய மாதிரி இருந்தா நாமெல்லாம் இவங்க வீடேறி பொண்ணு கேக்கமுடியாமானு யோசிச்சிருக்கேன். அதனால்தான் கவர்மென்ட் வேலைக்கு தீவிரமா முயற்சி பண்ணினேன். வேலை கெடைக்கவும் தான் துணிஞ்சு பொண்ணு கேட்டே. இத்தனைக்கும் நான் உனக்கு உறவு முறையில முறைப்பையன் வேற. நானே அவ்வளவு யோசிக்கும் போது அந்தப் பொண்ணுக்கும் தயக்கம் இருக்குமில்ல.” எனக் கூற, கணவனின் வார்த்தைகளில் இருந்து உண்மைத்தன்மையில், பவானியும் சற்று தணிய, 

“மாப்ளே… உங்க அக்கா கொஞ்சம் ஆஃப் ஆயிட்டா. சீக்கிரமா அடுத்த ஸ்டெப் எடுத்துவை டா.” என சக்தியிடம் கண்ஜாடை காட்டினான் விஷ்ணு. 

“அக்கா எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அவகூட தான். அதுவும் நீங்க எல்லாரும் சம்மதிச்சா மட்டும்தான். இல்லைனா இப்படியே இருந்துர்றே.” என முடிவாகக் கூறிவிட,

“டேய் நடிக்காதடா… இது என்ன உங்க மாமா ட்ரெயினிங் கா?” என்றாள் கோபம் தணிந்து சற்று நக்கலாக.

“ஆமான்டி… உன் தம்பிக்கு வாயில விரல்வச்சாகூட கடிக்கத் தெரியாது பாரு. நாங்க சொல்லிக் கொடுக்க.” என்றான் விஷ்ணுவும் எகத்தாளமாக.

“அக்கா, அவ ரொம்ப மனசளவுள காயம் பட்டுருக்கா. இன்னும் சின்னப்புள்ள க்கா அவ. அதனால தான் எனக்கு நல்லது செய்யறதா நினைச்சுட்டு வேற எடத்துல மாப்ள‌ பாக்க சொல்லியிருக்கா. ஏற்கனவே ஒருதடவ அவள மிஸ்பண்ணிட்டே. நம்ம குடும்பத்துக்கு வந்தா சந்தோஷமா இருப்பா. சம்மதம் சொல்லுக்கா.” என சக்தியும், தன்மையாகக் கேட்க, வளர்ந்து இவ்வளவு பெரிய ஆளாகியும்,‌ இன்னும் சிறுபையன் போல் தன் சம்மதம் கேட்டு நிற்கும் தம்பியைப் பார்த்து ஒரு பக்கம் பெருமிதமாக உணர்ந்தாலும், பவானிக்கு நெருடலாகவே இருந்தது. அவள் எத்தனைவிதமாக மறுப்பு தெரிவித்தாலும், அவனும் தனது முடிவில் உடும்புப் பிடியாக நிற்பது புரிகிறது. என்ன இருந்தாலும் வாழப்போவது அவன் தானே என அவளுமே முடிவிற்கு வரவேண்டியதாய்ப் போயிற்று. இறுதியில் தம்பியின் விருப்பமே முக்கியம் என இறங்கி வந்தாள். 

“சரிடா… எப்ப பொண்ணு கேட்டு போறது.” என்றாள் பட்டும் படாமலும்.

“கெட்டுது போ. அவள பொண்ணு கேட்டு போயி, அவ சம்மதம் வாங்கித்தான் கல்யாணம் பண்ணனும்னா நான் அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும். நீயாவது இதோட நிறுத்திட்ட. அவ இதுக்கு மேல பேசுவா. ஸ்ட்ரெயிட்டா கல்யாணம் தான். அதுவும் நான் தான் மாப்பிள்ளைனு தெரியக்கூடாது.” எனக் கூற,

“பவானி… உன் தம்பிக்கு இப்ப தான்டி கல்யாண யோகமே வந்திருக்கு.” என்றான் விஷ்ணு சிரித்துக் கொண்டே.

“எப்படி சொல்றீங்க!?” என்றாள் அடிக்குரலில்.

“கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே, வரப்போற புள்ளயப் பாத்து இவ்ளோ பம்முறான் பாத்தியா?” என கேலி பேசிய கணவனை முறைத்தவள், தம்பி கூறியதைக்கேட்டு, மறுபடியும் பவானி முறுங்கை மரம் ஏறினாள். 

”அதெப்படி டா. பொண்ணு பாக்காம, பூ வைக்காம கல்யாணம் பண்றது. எனக்கு என்ன நாலஞ்சு அண்ணதம்பியா இருக்கான். ஒருத்தன் இல்லைனா ஒருத்தனுக்கு செஞ்சு அழகு பாக்க.”

“நீ என்ன நினைக்கிறியோ அதெல்லாம் செஞ்சு பாரு. வேண்டாங்கல. ஆனா நான்தான் மாப்பிள்ளைனு சொல்லாத.” 

“அப்படி என்ன தான் உசத்தியோ தெரியல.” என அலுத்துக் கொண்டாள். 

பொம்மி திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள் எனத் தெரிந்ததில் இருந்து இவனது திட்டம் இதுதான். அவளது அம்மாவின் துக்கத்திற்கு சென்று திரும்பி வந்ததிலிருந்து பொம்மியிடம் பேசவில்லையே ஒழிய தினமும் அவளது அத்தையிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறான். அவளைப் பற்றி முழுமையாக தெரிந்த பிறகு, அவளை இன்னும் தவிக்க விட அவன் தயாராக இல்லை. முதலில் அம்மா மற்றும் அக்காவின் சம்மதம் வேண்டும் என்பதால் தான் இருவரிடமும் அவளைப் பற்றி கூறினான். 

அவள் இருக்கும் மனநிலையில் இவனை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டாள் எனத் தெரியும். ஆனால் ரெண்டாந்தார மாப்பிள்ளை பார்க்க சொன்னதாக அத்தை கூறவும், இவனும் ஒரு முடிவிற்கு வந்து விட்டான். அக்காவிடம் கெஞ்சியது போல் அவளிடம் கெஞ்ச முடியாது. மயிலே மயிலே இறகு போடு என்றால் இறகு போடும் ரகம் இல்லை அவள். 

அந்த சக்தியின் மகன் அண்ணனின் துணையோடு வள்ளியை மணந்தது போல் இந்த சக்திமாறனும் அக்காவின் துணையோடே பொம்மியை மணப்பது என முடிவெடுத்தான்.

     ******************************

“அம்மா… அவகிட்ட மாப்பிள்ளை ஃபோட்டோ பாக்குறியான்னு மட்டும் கேளுங்க. சரின்னு சொன்னா அவ சொன்ன மாதிரியே மாப்பிள்ளை பாருங்க. மறுத்துட்டா நான்தான் மாப்பிள்ளை.” எனக் கூறிவிட்டான் சொர்ணத்திடம்.

“என்னப்பா… அவ மனசுபூரா நீதான் இருக்கே. அழுக மாட்டாளான்னு நினைச்சோம். ஆனா இப்ப எல்லாம் அவ அம்மாவ நினச்சு அழுகுறாளோ இல்லியோ உன்ன நினச்சு அழறாப்பா.”

“………….” எதிர்ப்பக்க மௌனமே அவன் தவிப்பையும் உணர்த்த,

“அவ சம்மதம் சொன்னவுடனே, நாங்கூட கேட்டே தம்பி. அன்னைக்கி சக்தியோட அக்கா ஜாதகம் கேட்டாங்கள்ல… கொடுக்கலாமான்னு கேட்டதுக்கு, ஏன் அத்தே! எச்ச எலையில விருந்து போடுவியான்னு பட்டுனு கேட்டுட்டா. எனக்கு மனசே ஆறல தம்பி.” எனக் கூறிவிட்டு ஃபோனிலேயே அவர் அழுவது கேட்டது சக்திக்கு. அவளது வார்த்தைகளில் இருந்த வெம்மை எதிர்முனையில் இருந்தவனையும் வெகுவாகச் சுட்டது. அவள் தனக்கு தகுதியானவள் இல்லை எனத் தன்னை குறுக்கிக் கொள்வது தெரிகிறது. இப்படிப்பட்டவளிடம் எப்படி பேசி சம்மதம் வாங்க முடியும்.

அத்தையிடம் திருச்சிக்கு வராம பாத்துக்கோங்க என்று மட்டும் கூறினான். 

“முப்பதெல்லாம் முடிஞ்சிறுச்சுல்ல. திருச்சிக்கு எப்ப கெளம்பலாம்னு கேட்டா தம்பி.” என்க, 

“அதை நான் பாத்துக்கிறேன்.” எனக் கூறிவிட்டான்.

இரண்டு நாட்கள் கழித்து சக்தியிடம் இருந்து அவளது ஃபோனிற்கு அழைப்பு வர, படபடத்த நெஞ்சோடு ஆர்வமாக அழைப்பை ஏற்றாள். 

“ஹலோ… மாறன்.” குரலில் சிறு துள்ளல் அவளே அறியாமல்.

“எப்படி இருக்கீங்க பொம்மி. அப்பா எப்படி இருக்கார்?” என சாதாரணமாக விசாரிக்க,

“ம்ம்ம்… இருக்கோம்.” என உள்ளுக்குள்ளே நத்தையாக சுருங்கியது மனமும், குரலும் அவனது மரியாதையைப் பார்த்து.

“ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. எப்ப வேலைக்கு வர்றீங்க?” என அவன் கேட்க,

“தெரியல சார்! அப்பாவ கேக்கணும்.” என்றாள் அவளும். மாறன் மாற்றம் பெற்றது சார் என.

“எப்பனு உறுதியா சொன்னீங்கனா, நானும் அதுக்கு தகுந்த மாதிரி ஆட்கள ஏற்பாடு பண்ணுவே.‌ சீக்கிரம் வரப்பாருங்க. சமாளிக்க முடியல.” இது அவனுக்காகவும் கூறிக்கொண்டான்.

“இந்த ஒரு மாசமா எப்படி சமாளிச்சீங்களோ… அதே மாதிரி சமாளிக்க வேண்டியது தான சார்?” வெடுக்கென கேட்டாள்.

“எனக்கு கல்யாணம் முடிவாயிருச்சு பொம்மி. அந்த வேலவேற தலைக்கு மேல இருக்கு. நீங்களும் அங்க போய் இருந்துகிட்டீங்க. ஒரு மாசம் கழிச்சு வருவீங்கனு எதிர்பார்த்தே.” என்க,

“இங்க எனக்கும் தான் கல்யாணம் பேசுறாங்க. நீங்க வேற ஆளப்பாத்துக்கோங்க.” என்றவள் பட்டென அழைப்பைத் துண்டித்தாள். ஆறுதலாகப் பேசுவான் என ஆசையாக ஆரம்பித்தவள், அவனது பட்டும் படாமலும் பேச்சில் உள்ளம் அடுப்பில் வைத்த உலைப்பானையென கொதிக்க, வீம்பாக இனி திருச்சிக்கே போகக்கூடாது என முடிவெடுத்தாள். அவளது கோபம் கண்டு எதிர்முனையில் சிரித்துக் கொண்டான். ‘வீம்பு புடிச்சவ.’ மனம் கொஞ்சிக் கொண்டது.

சக்தி கூறியது போல் சிலநாட்கள் கழித்து, “பொம்மு மாப்பிள்ளை ஃபோட்டோ நாலஞ்சு வந்திருக்கு. பாக்குறியா? இல்லைனா உன் ஃபோனுக்கு அனுப்ப சொல்லவா?” என அத்தை கேட்க,

“அதெல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.” என்றாள் அசட்டையாக.

“ஆமாடி நானா கட்டப்போறே… மொத தடவ மாதிரி தப்பாயிறக்கூடாதுல. நீயே பாத்து முடிவு பண்ணு பொம்மு.” என்றார் அத்தை.

“நானும் அதைத்தான் சொல்றே. ஏற்கனவே பட்டுருக்கீங்கள்ல. அதனால நீங்களே கவனமா பாருங்க.” என்று முடித்துக் கொண்டாள்.

“நீ கடமையேனு கல்யாணம் பண்ண வேண்டாம். முழு மனசோட பண்றதுனா பண்ணு. இல்லைனா எப்பவும் போல இருந்திரு.” என்க,

“இங்க பாரு த்தே! அப்பாவுக்காகத்தான் இந்த கல்யாணம். எனக்குனு எதிர்பார்ப்பு எல்லாம் இல்ல. ஒரே எதிர்பார்ப்புனா, முடிஞ்சளவுக்கு சீக்கிரம் பாருங்க. முடிவு பண்ணிட்டு சொல்லுங்க. வந்து கழுத்தை நீட்டுறே.” என விட்டேத்தியாகக் கூறுபவளிடம் என்னவென்று சொல்வது. அவளது பேச்சும் செயலும் விரைவில் எதிலிருந்தோ தப்பித்துச் செல்ல விழைவது போல் இருந்தது. அவனது நினைப்பு எந்த அளவிற்கு துரத்துகிறதோ அந்த அளவிற்கு சீக்கிரம் அதிலிருந்து விடுபட வேண்டும் என எண்ணுகிறாள். ஆனால் அது கைரேகை போல எப்பொழுதும் அழியாது என்பதை ஏற்கவும் மறுக்கிறாள். 

அடுத்த சில நாட்களில்,  

“பொம்மு, பொண்ணு பாக்க வரச்சொல்லலாமா?” என தந்தை கேட்க, 

“அதெல்லாம் வேண்டாம் ப்பா. ஃபோட்டோவுல பாத்ததே போதும்” என அதற்கும் மறுப்பு தெரிவிக்க,

“ஏன் பண்டு நீதான் மாப்பிள்ளை ஃபோட்டோ கூட பாக்க மாட்டேங்கிற. அதே மாதிரி அவங்களும் இருப்பாங்களா? சம்பிரதாயத்துக்காவது பொண்ண பாக்க மாட்டாங்க?” எனக் கேட்க, பதில் சொல்ல முடியவில்லை. சம்மதிக்க வேண்டியதாயிற்று. மாப்பிள்ளைக்கும் மறுமணம் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. விபத்தில் மனைவியை இழந்தவன் என சொல்லி இருக்கின்றனர்.

“நம்ம சக்தியோட அக்கா சொன்ன சம்மந்தம் தான பொம்மு. அதனாலதான் நாங்களும் முழுமனசோட சம்மதிச்சோம். சக்தி தம்பிக்கும் கூட பொண்ணு முடிவாயிருச்சுனு கேள்விப்பட்டேன்.” என்றார் அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே. அவளோ, “அப்படியா?” எனக் கேட்டுவிட்டு சென்று விட்டாள். எவ்வித பாதிப்பும் முகத்தில் இல்லை.

ஆனால் ஜாதகம் பவானிக்குதான் அனுப்பி இருப்பதாகக் கூறியபொழுது, “அவங்களுக்கு ஏன் அனுப்புனீங்க?” என அத்தையை ஒரு வழி பண்ணிவிட்டாள்.

“தெரிஞ்சவங்க கிட்ட சொல்லுறே… ஜாதகம் கொடுங்கனு, அன்னைக்கி கோயில்ல வச்சு கேட்டுச்சுல்ல. நமக்கு வேற யாரத்தெரியும்? வேணாம்னா சொல்லு, திரும்ப வாங்கிக்கலாம். நமக்காக ஒரு பொண்ணு மெனக்கெடுதேனு நினச்சே.” என இழுக்க,

“என்னமோ பண்ணுங்க?” என்றாள். அவள் மூலமாகத்தான் ரெண்டு மூனு ஜாதகம் வந்திருப்பதாகக் கூற, அதில் இரண்டு திருச்சிக்கு அருகில், ஒன்று பெங்களூர் எனக் கூற, பெங்களுர் மாப்பிள்ளை எனக்கு சம்மதம் என்றாள். சக்தியும் அதைத்தான் தேர்ந்தெடுப்பாள் எனக் கூறினான்.

”முடிந்தளவுக்கு எட்டத்துல போகத்தான் முடிவு பண்ணுவா ம்மா.” என கூறியிருந்தான். 

அதன் படியே பெங்களூர் சம்பந்தமே சரி என்பது போல் ஏற்பாடுகள் நடக்க, எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து கொண்டாள். இன்று மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வருவதாகக் கூற, மறுக்க முடியாமல் சிரத்தையின்றி அலங்கரித்துக் கொண்டாள். அன்று கடையில் விநாயக் சதுர்த்தி அன்று, கட்டிய புடவையை, ஒரு மணி நேரமாக பீரோவையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு தேர்ந்தெடுத்தது நினைவிற்கு வந்தது.

“பொம்மி, இன்னைக்கி சக்தியோட அக்காவும் மாமாவும் வர்றாங்க போல.” என்றார் அத்தை.

“யார் சொன்னது?” என்றாள்.

“சக்தி தம்பி தான் ஃபோன் பண்ணாப்ல. அந்த தம்பிக்கும் கல்யாணம் முடிவாயிருச்சாம். பொண்ணு நம்ம ஊருக்குப் பக்கத்துல தான். அந்தப் பொண்ணுக்கு பூவச்சுட்டு, அப்படியே நாம இங்க இருக்கறதால பத்திரிக்கை வைக்க வர்றாங்களாம்.”

“அதை ஏன் என்கிட்ட சொல்ற?” என்றவள் பேச்சில் நெடி தூக்கலாக இருந்தது. 

“நீதானடி பழக்கம். நானா வேலைக்குப் போனே. உனக்கு தான அழைப்பு கொடுக்க வர்றாங்க.”

“அப்ப எனக்கு தான ஃபோன் பண்ணனும்? உனக்கு எதுக்கு பண்ணாங்க? நீயே பாத்துக்க.” என்றவள் மனம் ஆறவில்லை. அவளும் எத்தனைமுறை அழைப்பை எதிர் பார்த்து ஏங்கியிருப்பாள். அன்று வேலைக்கு வருவது பற்றி பேச அழைத்தோடு சரி.

“இன்னைக்கி தான மாப்பிள்ளை வீட்ல இருந்தும் வர்றாங்க.” என்ற தகவலையும் சேர்த்து சொன்னார்.

“வந்தவுடனே, அடுத்த முகூர்த்தத்துலயே நாள் பாருங்க.” என்றாள் வேகமாக.

“ஏம்பண்டூ… அவ்ளோ அவசரம். ஆர அமர செய்யணும். அவசரப்படக்கூடாது.” என்றார் நிதானமாக. 

சக்தி கூறியதுதான். எனக்கு கல்யாணம் முடிவாயிருச்சுனு சொல்லுங்க. அவ எதையுமே யோசிக்க மாட்டா. அப்படியே ஆஃப் ஆயிருவா. நம்மபாட்டுக்கு கல்யாண வேலையைப் பாக்கலாம் எனக் கூறியிருந்தான்.

மாப்பிள்ளை வீட்டார் என சிலர் வந்திருக்க, சற்று நேரத்தில் பவானியும், விஷ்ணுவும் வந்தனர். அவர்களை வரவேற்று அமர வைத்து உபசரித்தனர் அத்தையும், சிதம்பரமும்.

“பத்திரிக்கை அடிச்சுட்டு பொண்ணு பாக்க வந்தது நாமலாத்தான் இருக்கும்.” என்றான் விஷ்ணு பவானியிடம் குனிந்து.

“என்ன பண்றது… உங்க மச்சினன் அப்படி முடிவு பண்ணியிருக்கான்.” என்றாள் பவானி.

“ஏன்? அது என்னடி உங்க மச்சினன். உன் தொம்பி இல்லியோ?”

“என் தம்பிக்கு இந்த தகிடுதத்தம் எல்லாம் வராது. எல்லாம் சகவாச தோஷம்.”

“ஏஞ்சொல்ல மாட்ட. கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேனு சொன்ன உன்னைய வச்சே காய் நகத்துறான். இதுல சகவாச தோஷமாம். அக்காவுக்கும் தம்பிக்கும் ஒன்னுமே தெரியாது பாரு. நல்லதுக்கே காலமில்லடி.” என இவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, பொம்மியை மில்லில் வேலை பார்க்கும் பெண்ணிடம் அழைத்துவருமாரு அத்தை கூறினார்.

மாப்பிள்ளை வீட்டார் தனி, இவர்கள் தனி என நினைத்துக் கொண்டாள். பெண்கள் அனைவரும் ஜமுக்காளம் விரித்து கீழே அமர்ந்திருந்தனர். அவர்கள் வந்திருந்தது பவானியின் சார்பாக பெண்ணிற்கு பூ வைக்கும் வைபவத்திற்கு. 

பவானியைப் பார்த்து, “வாங்க க்கா.” என வரவேற்றவள், விஷ்ணுவையும் வரவேற்றாள். 

“அத்தே, இவங்களுக்கு காஃபி எடுத்துட்டு வர்றே.” என்று உள்ளே செல்ல, 

“என்னாடி, அக்கானு கூப்புட்டு மொறையவே மாத்துது. நீயும் உன் தம்பி மாதிரி அக்கானு கூப்பிடாதேனு சொல்ல வேண்டியதுதானே?” என விஷ்ணு கூற,

“கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?” என கடிந்து கொண்டிருக்க, அரிசிமில்லில் வேலை பார்க்கும் பெண்ணோடு சேர்ந்து காஃபியை எடுத்து வந்தவள், அனைவருக்கும் கொடுத்தாள். அவளது கவனம் சக்தி கூறியது போல் எதிலும் பதியவில்லை. 

“நீ உள்ள போ பொம்மு. நாங்க பேசிக்கிறோம்.” என அத்தையும், அப்பாவும் கூறிவிட உள்ளே தனது அறைக்கு சென்றுவிட்டாள். 

உள்ளே வந்தவுடன் தான் கவனித்தாள். தன் கைகள் படபடப்பில் நடுங்கிக் கொண்டிருப்பதை. அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது. அவன் இனி நமக்கு சொந்தமில்லை. தானும் அவனுக்கு சொந்தமாக முடியாது என்ற நினைப்பைத் தவிர வேறு எதுவும் மனதில் ஓடவில்லை. கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. 

“பொம்மி.” அறை வாசலில் பவானியின் குரல் கேட்டு எழுந்து வந்தாள்.

“வாங்க க்கா.” என்ற அழைப்பில் குரல் கம்மியது. தொண்டையை செருமிக் கொண்டு, “பிரித்வி எப்படி இருக்கான்.” என நலம் விசாரித்தாள்.

“அவனுக்கென்ன, மாமனுக்குக் கல்யாணம்னு இவன் தான் ரொம்ப அலப்பரை பண்றான். அத்தை வரப்போறாங்கனு ஐயாவுக்கு ஒரே குஷி.” என சிரித்தவாறே பவானி கூற,

“ஓ…” என்றதோடு நிறுத்திக் கொண்டாள். உவப்பில்லா சங்கதி, உப்பில்லா கஞ்சியாக ருசிக்கவில்லை அவளுக்கு.  

“திரும்பு பொம்மி. நீயும் கல்யாணப் பொண்ணு தான. பூ வாங்கிட்டு வந்தோம்.” எனக் கூறியவள், திரும்பாமலே நின்ற, பொம்மியை தோள் பற்றி திருப்பி, பூவை தலையில் வைத்து விட்டாள். பையிலிருந்து, புதுப்புடவை ஒன்றை எடுத்தவள், தட்டில் வைத்து அதன் மீது வெற்றிலை, பழம் மற்றும் பத்திரிக்கையயும் வைத்து அவளுக்குக் கொடுக்க, எடுத்துக் கொண்டாள், தனது திருமணப்பத்திரிக்கையை மணப்பெண். 

“நீங்களும் தேதிய முடிவு பண்ணிட்டு சொல்லுங்க பொம்மி.” என்றவள் வெளியெறிவிட்டாள்.

கைகள் நடுங்க, மெதுவாக பத்திரிக்கையை விரித்தாள். விரித்தவள் கண்ணில் வேறெதுவும் படவில்லை. சக்திமாறன்… அவளவன் பெயர் மட்டும் பெரிய எழுத்துக்களில் தெரிய, அவனது பெயருக்கு அருகில் இருந்த பெயரில் கண்கள் பதிய, கண்ணீர் கண்களை மறைத்தது. பட்டென மூடிவிட்டாள். 

ஓ…வென்று கத்த வேண்டும் போல் இருந்தது. இந்தக் கல்யாணம் வேண்டாம். என் மாறன் எனக்கு வேண்டும் என கேட்க மனது துடித்தது. 

நெஞ்சுக்குள்ள

ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க

எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

ஒரு வாய் எறங்கலையே

உள்நாக்கு நனையலையே

ஏழெட்டு நாளா

எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி

ஏதும் சொல்ல முடியலையே

ரப்பர் வளவிக்கெல்லாம்

சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம

முடிஞ்சிருக்கேன்!- இங்க

எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

என உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தவளை, பவானியின் குரல் கலைத்தது.

“பொம்மி.” குரல் கேட்டு அவசரமாகக் கண்களை துடைத்துக் கொண்டு திரும்பினாள். பவானி நின்று கொண்டிருந்தாள். “பேக்க வச்சுட்டுப் போய்ட்டே.” என்றவள் அவள் முகத்தைப் பார்க்க, கண்களும், மூக்கின் நுனியும் சிவந்து, உதடுகள் துடித்துக் கொண்டிருக்க, கீழுதட்டை உள்புறமாக அழுந்தக் கடித்திருந்தாள்.  

அவளைப் பார்க்க பவானிக்கே ஒரு மாதிரியாகப் போய்விட்டது. பத்திரிக்கையில் இருப்பது உன் பெயர் தான் என கூறவேண்டும் போல், பாவமாக இருந்தது. 

இருந்தாலும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள், தம்பியின் வருங்கால மனைவிக்கு பூ வைத்துவிட்டு.

அவள் கவனம் அங்கு இருந்திருந்தால் ஏன் மாப்பிள்ளை வரவில்லை எனக் கேட்டிருப்பாள். அவள் இருந்த மனநிலைக்கு சக்தியே மாப்பிள்ளையாக வந்து அமர்ந்திருந்தாலும் கண்டிருப்பாளா என்பது சந்தேகம் தான். எல்லாம் அவன் கணித்தபடிதான் நடந்தது. தனக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் முடிவாகி விட்டது எனத் தெரிந்தாலே அவள் எதையும் சிந்திக்கமாட்டாள் எனத் தெரியும். அவள் போக்கிலே போகவிட்டான், அவளது மாறன்.