பொன்மகள் வந்தாள்.20🌹

PMV.20

“லட்டூ… இப்படியே மாமன பாத்துட்டே இருந்தா எப்படி? கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் நம்மளத்தான் பாக்குறாங்க. நம்ம வீட்டுக்குப் போயிட்டு எவ்வளவு நேரம் வேணும்னாலும் மாமன சைட் அடிப்பியாம்.” குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைத்துவிட்டு, பிரமை நீங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கூறினான். 

அவனது கேலியில், சட்டென நிகழ்காலத்திற்கு வந்தவள், வேகமாகப் திரும்பி அத்தையைப் பார்க்க, பூரித்த முகமாக தனது செல்லப்பெண்ணின் திருமணத்தை, அண்ணியின் நினைவோடு கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார். இவள் பார்க்கவும், நீ யாரோ… நான் யாரோ… என்பது போல் தோளில் முகத்தை இடித்துக்கொண்டு, திருப்பிக் கொண்டார்.

சிதம்பரம் முகத்தில் மகிழ்ச்சி துள்ளல். பொம்மி பிறந்த பொழுதுகூட இவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான். இதே சந்தோஷத்தில் இன்னும் நூறு வருடங்கள் வாழ்வார் போல. அப்படி ஒரு தேஜஸ் மனுஷன் முகத்தில். 

பவானி சொந்தங்களுடன் வந்து பூவைத்து சென்றவுடன், இவளது திருமண வேலையும் துரிதமாக நடந்தது. ஏதோ ஒரு வேகத்தில் திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டாளே ஒழிய, நாட்கள் நெருங்க நெருங்க மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. மனம் வெறுமையாய் எதிலும் ஒட்டவில்லை. அத்தையும், அப்பாவும் சொன்னதைச் செய்தாள். 

திருமணம் திருச்சியில் எனக் கூறவும், “மாப்பிள்ளை பெங்களூர்னு தான சொன்னீங்க.” என்றாள்.

“மாப்பிள்ளை பெங்களூர் தான். ஆனா அவங்க சொந்தபந்தம் இருக்கறது திருச்சியில. அதனால கல்யாணம் கோயில்ல. இதுக்கு தான் எல்லா வெவரமும் தெரிஞ்சுக்கோனு சொன்னோம். நீ தான் கண்டுக்கல.” என முடித்துக் கொண்டார்.

காலையில் மணப்பெண் அலங்காரத்தோடு, கோவில் வரும் வரைக்குமே கூட, ஏதாவது நடந்து இந்த திருமணம் நிற்காதா என்றுதான் மனம் ஏங்கியது. ஆனால் அதன்பிறகு அப்பாவின் நிலை என நினைத்தவளுக்கு, “ச்சே, எவ்வளவு சுயநலமா இருக்கோம்.” என உறுத்த, நடப்பது நடக்கட்டும் என முடிவிற்கு  வந்துவிட்டாள். தாலி கட்டும் வரை யாரையும் கருத்தில் கொள்ளவில்லை. சக்தியின் குரல் கேட்டுதான், நிமிர்ந்தே பார்த்தாள். அதுவும் அவன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில்தான் பிடித்திருந்த சித்தபிரமை விலகியது. 

இந்த நொடி விழப்போகிறோம் எனும் நினைப்பில், பல்லைக் கடித்துக் கொண்டு கண்களை இறுகமூடி மலை உச்சியில் நின்றவளை, சட்டென இழுத்து, இறுக்கி அணைத்தால், அதுவும் அணைத்தவன், அவளது ஆசைக்குரியவனாக இருந்தால்… இறுகக்கட்டிக் கொண்டு கதறவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. மூச்சடைத்து கரகரவென கண்களில் கண்ணீர் வழிய தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். எதற்கு இந்தக் கண்ணீர் என காரணம் புரியவில்லை. இத்தனைநாள் தவிப்பும் கண்ணீராக வெளியேறியது. 

துக்கம் என்றால் தான் அழுகை வருமா? உச்சபட்ச சந்தோஷத்தின் வெளிப்பாடும் அழுகை தானே. 

மணாட்டியின் விழிநீரின் அர்த்தம் புரிந்தவன், அவளது கரங்களை அழுத்திக் கொடுத்தே அக்னி வலம்வந்தான், அவளது ஆர்ப்பரிக்கும் உள்ளத்தின் உவகை புரிந்தவன்.

முக்கியமான சொந்தங்களோடு கோவிலில் திருமணம். சாப்பாடு, வரவேற்பு எல்லாம் மண்டபத்தில். 

மண்டபம் வந்த பிறகுதான், வாசலில் மணமக்களின் பெயர்களைப் பார்த்தாள் பொம்மி. மணமகன் சக்திமாறன், மணமகள் நாச்சியார் (எ)பொம்மி என இருந்தது. பத்திரிக்கையில் நாச்சியார் என்கிற பெயரை பார்த்துதான் தன்னவன் பெயரோடு இன்னொருத்தி பெயரா என தாங்கமுடியாமல் அழுதாள். இப்பொழுது அதை நினைத்தால் சிரிப்பு வந்தது அவளுக்கு. 

இது அவர்களது குலதெய்வப் பெயர். குழந்தைகளுக்கு முதலில் குலதெய்வப் பெயரை வைத்துவிட்டுதானே, இஷ்டப்பெயர் வைப்பது வழக்கம். அதையேதான் அழைப்பிதழில் அச்சிட்டிருந்தான். குழப்ப மனநிலையில் கவனிக்கவில்லை அவள். 

உறவுகள், கடை ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் என மண்டபம் நிரம்பி வழிந்தது.‌ எப்பொழுதும் ஊழியர்களிடம் எளிமையாக நடந்து கொள்பவனின் உண்மையான உயரம் என்னவென்று புரிந்தது. இப்படிப்பட்டவனின் தனக்கான மெனக்கெடலைக் கண்டவளுக்கு, உள்ளுக்குள் பெருமிதம் தலைதூக்கியது. 

பெண்ணை முன்னிருத்தி நாட்டை வெல்லும் இளவரசனாகத் தெறிந்தான் அவளது மாறன். அந்த இளவரசியாக கர்வம்… நெஞ்சம்முழுதும். கொண்டவனைக் கொண்டு, கொண்டவளுக்குள்  தானாக தலைதூக்குவது.

பட்டுவேட்டி சட்டையில், மாலையும் கழுத்துமாக, கனகம்பீரமாக தன்னருகே நின்று கொண்டிருந்தவன் மீது ஓரப்பார்வை வீசாமல் இருக்க முடியவில்லை அவளால். கடைஊழியர்கள் ஃபோட்டோ எடுக்க மேடையேற, அவர்கள் கேலிகிண்டலில் விடியல் வானமாய் சிவந்துவிட்டாள். 

விஷ்ணுவும், பவானியும் வந்தவர்களை வரவேற்க, காவேரி கடை ஊழியர்கள் உதவியோடு விருந்தைக் கவனித்தார். 

” நாங்க பாத்துக்கறோம் ம்மா.” என கேட்டரிங் ஆட்கள் கூறினாலும்,

“நாம முன்னாடி நின்னு கவனிக்கிறமாதிரி வராதுப்பா.” என கூறிவிட்டார். 

இன்று பந்தியில் ஆட்கள் அமர்கிறார்களோ இல்லையோ வரிசையாக இலைகளைப்போட்டு, உணவுவகைகளை பரப்பிவிட்டு சென்று விடுகின்றனர். எது வேண்டும் வேண்டாம் என விசாரித்துப் பரிமாறும் பழக்கமெல்லாம் மலையேறிவிட்டது. இதில் பாதிப்பண்டங்கள் வீணாவது தான் மிச்சம்.

இப்படி நடவாமலிருக்க காவேரியே முன்நின்று கவனித்துக் கொண்டார். 

கடைசிப் பந்தியில் அனைவரும்   குடும்பத்தோடு அமர்ந்து உணவு முடித்து வீட்டிற்கு கிளம்பினர்.‌

       *************************

“மாப்ளே… இதுவரைக்கும் கும்பலோட இருந்த. இப்ப தனியா சிக்கப்போற. ஏதாவது சேதாரம்னா நூத்தியெட்டுக்கு ஃபோன் பண்ணிருடா. நேரங்கெட்ட நேரத்துல எனக்கு ஃபோன் பண்ணிறாத. உங்க அக்கா, என்னக் கிழிச்சு தோரணம் கட்டிருவா.” என புதுமாப்பிள்ளையை மாமன் கேலி பேச,

“அதெல்லாம் கவலப்படாதீங்க மாமா. ஓவரா போற மாதிரி தெரிஞ்சா, பட்டுனு உங்க மெத்தட ஃபாலோ பண்ணிறுவேன் மாமா.” என்றான் சக்தியும்.

“அதென்னடா மாப்ள… என்னோட மெத்தடு?” என்க,

“அதான் மாமா அது.” என்றான் கண்சிமிட்டி.

“டேய் மாப்ளே…. என்னடா அது?” என கவுண்டமணி பாணியில் ஆர்வமாகக் கேட்க,

“டமால்னு கால்ல விழுகறது தான் மாமா.” எனக் கூறிவிட்டு சிரித்தான்.

“பொண்டாட்டி காலப்புடிச்சவன், காலத்துக்கும் எந்திரிச்சதா சரித்திரம் பூகோளம் எதுவுமே இல்லடா மாப்ள. ஜாக்கிரத.” என எச்சரித்தான் மச்சானை, மாமன்காரன்.

“அனுபவசாலிக வார்த்தையை நான் எப்பவும் மறக்குறதே இல்ல மாமா.” என்றான் மச்சானும் சிரித்துக்கொண்டே.

“மறந்துறாத மாப்ளே. நாளைக்கி நீயும் இத நம்ம சந்ததிக்கும் சொல்லணும்ல.” என இவர்கள், மாமா… மாப்ளே… என்கிற ரீதியில்  பேசிக்கொண்டிருக்க, சக்தியின் அறைக்குள்ளிருந்து பவானி வெளியே வந்தாள். இவ்வறைக்கு வீட்டினுள் இருந்தும் மேலே வரமுடியும். வெளிப்பக்கமாக மாடிப்படி ஏறியும் வரலாம்.

“இங்க என்ன பண்றீங்க?” என கணவனை கேட்க,

“பொண்டாட்டி கால்ல விழுகறதப்பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம் பவானி.” என்க,

“உங்களுக்கு கொஞ்சங்கூட…” என அவள் இழுக்க,

“நீ கேக்க வந்ததெல்லாம் எடைக்குப் போட்டு பலவருஷம் ஆச்சு.” என்று முடித்தான்.  

“நீங்க வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு இருக்கு.” என்ற மனைவியின் வழக்கமான மிரட்டலில்,

“இதையே தான்டி அடிக்கடி சொல்ற. ஆனா வீடு போறதுக்குள்ள மறந்துர்ற. மாமனுக்கு என்ன வச்சிருக்கேனு சொல்லவே மாட்டேங்குற.” என்றான்.

“நீங்க மொதல்ல கீழ வாங்க. மானத்தை வாங்காதீங்க.” என அழைத்துக்கொண்டு கீழே இறங்கிவிட்டாள்.

“ஆல் த பெஸ்ட் ரா மாப்ளே.” எனக் கூறிவிட்டு கிளம்பியவனிடம்,

“எதுக்கு மாமா?” என்றான் சிரித்துக் கொண்டே.

“இப்படி ஒன்னுமே தெரியாதவனாட்டம் கேளுங்கடா. வாயிருக்க மாட்டாம நானும் ஏதாவது  சொல்லப்போக, உங்க அக்கா வந்து, அதுக்கும் என் சகவாச தோஷம்னு சொல்லட்டும்.”

“இப்பவும் நீங்க ஒன்னுமே சொல்லலியே மாமா.” என்றான்.

“சொல்லித் தெரிவதில்லடா மாப்ள… இதெல்லாம்.” என்றான். 

“என்னாங்க…” கீழிருந்து பவானியின் குரல். 

“நாங்க கெளம்புறோம்டா. காலையில வர்றோம்.” என மாடிப்படி வழியாக கீழிறங்கினான் விஷ்ணு.

அவனது வீட்டின் மொட்டைமாடி. அதன் ஒருபுறம் அவனது படுக்கையறை. வசதி மீண்டபிறகு இடம்வாங்கி தங்களுக்கென அமைத்துக் கொண்ட குருவிக்கூடு. என்ன… கொஞ்சம் பெரிய, நவீனரக குருவிக்கூடு. கீழே இரண்டு படுக்கையறை, சமையலறை, ஹால் மற்றும் பார்க்கிங் வசதியுடனும், மேலே தனக்கெனத் தனியாக தனது ரசனைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொண்ட படுக்கையறை என டியூப்ளக்ஸ் வீடு. 

அங்குதான் தம்பி மனைவியை உள்ளிருந்து படிவழியாக மேலே அழைத்துவந்து விட்டுட்டு வெளியே வந்தாள் பவானி. 

எந்த ஏற்பாடும் இல்லாமல் அறை இயல்பாக இருக்கட்டும் என அம்மாவிடம் கூறிவிட, அதற்கு பரிசாக அக்காவின் முறைப்பையும் பெற்றுக் கொண்டான்.

அறையில் விட்டுவிட்டு பவானி வெளியே சென்றதும் பொம்மி அறையில் பார்வையை ஓட்டினாள். கடையில் இருந்த அறை போலவே மிகவும் நேர்த்தியாக இருந்தது. இதெல்லாம் நமக்கு சுட்டுப் போட்டாலும் வராதே என நினைத்துக் கொண்டாள். 

மத்தியில் பெரியபடுக்கை, இடப்புறம் கார்னர் ஷோஃபா ஒன்று திண்டோடு மூலையில் இருந்தது. வலப்புறம் கண்ணாடியுடன் கூடிய வார்ட்ரோப். அதை ஒட்டி குளியலறை. ஒரு மூலையில் விளக்கோடு கூடிய மேஜை ஒன்று. கீழிருந்து படியேறி உள்ளே வரும் இடத்தில் சிட்அவுட்.

அறையின் சுவற்றில் ஆங்காங்கே ஆலிலை கண்ணன்,  ஊஞ்சலாடும் ராதாகிருஷ்ணன் என ரசனையான சில தஞ்சை ஓவியங்கள் அலங்கரித்தன. அறைக்கு வெளியே வெட்டவெளியாக மொட்டைமாடி. அதில் ஸ்டான்டோடு கூடிய நீள ஊஞ்சல் ஒன்று. ஊஞ்சலில் படரவிடப்பட்ட மல்லிக்கொடி. அன்றலர்ந்த மல்லியின் மணம் காற்றில் ஏகமாகப் பரவியிருந்தது. அதை பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள். வெளிக்காற்று முகத்தில் இதமாக உரசிச்சென்றது. வளர்பிறை நிலாவெளிச்சம் மெலிதாக பரவியிருந்தது.

சக்தியும் அவள் வெளிவருவாள் என்றுதான், கைகளைக் கட்டிக் கொண்டு, மாடி கைபிடிச் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவன், அவளையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்தவள் விழிகள் ரசனையாக சட்டென விரிந்தது.  இதுவரை ப்ளாக் பேன்ட், வெள்ளை சட்டை தவிர வேறு அணிந்து பார்த்ததில்லை. இன்று ஷார்ட்ஸும், ஸ்லீவ்லெஸ் பனியனுமாக நின்று கொண்டிருந்தான். மேலே வந்து அப்பொழுதுதான் குளித்துவிட்டு மாற்றியிருப்பான் போல. மெலிதாக சோப்பின் வாசம் காற்றில் கலந்திருந்தது. மூட்டை தூக்கியே முருக்கேறிய புஜங்களும், உரமெறிய தோள்களும். சலசலத்த காற்றிற்கு இயைந்து ஆடிய கேசமும் என நிலாவெளிச்சத்தில் மூச்சுவிடும், செதுக்கிய சிற்பமாய் நின்றிருந்தான்.  

கண்ணெடுக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன்னவளைப் பார்த்தவன், ”நம்ம வீட்டுக்குப் போயிட்டு சைட் அடிக்கலாம்னு பெர்மிஷன் கொடுத்தா… அதுக்காக இப்படியா, பாக்குறது.” என சிரித்தவாறே கேட்க, சட்டென்று பார்வையை வேறுபுறம் மாற்றிக் கொண்டாள். 

“என்னைய சைட்டடிக்கிற ஏகபோக உரிமை உனக்குமட்டும் தான்னு, கழுத்துல மூனு முடிச்சு போட்டு பாத்தியம் பண்ணி கொடுத்திருக்கே.” என்க,

“என்னயக் கல்யாணம் பண்ணி ரொம்பக் கஷ்டப்படபோறீங்க.” என்றாள் அவன் பக்கமாகத் திரும்பாமலே வரண்ட குரலில்.

“முதல் வாழ்த்து, என் லட்டூ வாயால… அருமையா இருக்கு.” என கூறிவிட்டு சிரிக்க, சரேலெனத் திரும்பிய அவள் முகம் சட்டென கூம்பியது.

“ஹேய்ய்… நான் விளையாட்டாதான் சொன்னேன்.” என்றான்.

“ஆனா, நான் உண்மையைத்தான் சொன்னேன். ஏற்கனவே கல்யாணம் ஆனவகூட வாழ்றது ஈஸின்னு நினச்சீங்களா?” என்க,

“இதுல என்ன கஷ்டம்.” என்றான் அவனும்.

“பச்சையா சொல்லணும்னா, இது ஏற்கனவே ஒருத்தன் தொட்டதுதான, பாத்ததுதானன்னு தோணும்.” என்றாள் தலை குனிந்தவாறே நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமல்.

இதையே தானே, தாயும் தன் மகனிடம் கூறினார். என்ன கொஞ்சம் நாசூக்காக கூறினார் காவேரி. 

தனது விருப்பத்தை மகன், தாயிடம் தெரிவிக்க, பெரிதாக ஆட்சேபிக்கவில்லை காவேரி. ஆனால், “ஆம்பளை எத்தனை பேருகிட்ட போனாலும் தனக்கு வர்றவ மட்டும் பத்தினியா தனக்கே சொந்தமா இருக்கணும்னு நினைக்கிறது தான் சக்தி, ஆண்களோட குணம். உன்னால சகிச்சுக்க முடியும்னா இதுல நான் சொல்றதுக்கு ஒன்னுமே இல்ல.” என்றார் பட்டுத் தெறித்தார்போல். பெண்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரிதான் யோசிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். இதற்கு மறுமொழி வார்த்தைகளில் சொல்லி புரியவைக்க முடியாது‌ என நினைத்துக் கொண்டான்.

“லட்டூ…” என்ற மென்மையான அழைப்பைக் கேட்டு குனிந்திருந்தவள் நிமிர்ந்தாள். இருகைகளைவிரித்து வாவென தலையாட்டி அழைக்க, தாவிவந்து காலைக்கட்டிக் கொள்ளும் குழந்தையென ஓடிச்சென்று கைகளுக்குள் அடங்கிக் கொண்டாள் தவிப்போடு. எத்தனை நாள் ஏக்கம்  இது. அழகாய் அடங்கிக் கொண்டாள் ஆடவன் கைவளைக்குள்.

“ஏன் மாறன்? எனக்கு… எங்க, எப்ப, எப்படிப் பேசன்னு கூடத் தெரியாது. கோபம் வந்தா கண்ணு மண்ணு தெரியாம வரும். தேள்கொடுக்கா கொட்டுவேன்.”

“தெரியுமே… அன்னைக்கே பாத்தேனே… ஈனவெங்காயமெல்லாம் வந்துச்சே.” என அவள் அம்மா இறந்த அன்று பேசியதை நினைவுகூறி சிரித்தான். 

“அதான் சொல்றேன். எனக்காக இவ்ளோ மெனக்கெட்டுறுக்கீங்களே? ஏன் மாறன்?” கண்கள் நீர்பூக்க, தன்னை நிமிர்ந்து பார்த்துக் கேட்டவளை…

“இதுக்காகத்தான்.” என்றான் தன்னைக் கட்டிக்கொண்டு நின்றவளிடம்.

“என்ன?” என்பதுபோல அவள் புருவம் சுருக்க, 

“எந்த ஆம்பளை கிட்டயும், ஏன்… உங்க அப்பாகிட்டயே சாதாரணமாக்கூட, நெருங்க முடியாதுன்னு சொன்னவ, உங்க அம்மா இறந்த அன்னைக்கி, என் கைக்குள்ள அடங்கிதானே உன்னோட ஆதங்கத்தை எல்லாம் கொட்டின. அப்படி இருக்கும் போது, உன்ன எப்படி இன்னொருத்தனுக்கு விட்டுக்கொடுத்து தவிக்க விடுவேன்சொல்லு?” என அவளை மென்மையாக அணைத்து கேட்டவனின் நெஞ்சில், தலைவைத்துக் கொண்டாள். மெலிதாக முதுகு குலுங்கியது. ஆதரவாக தடவிக் கொடுத்தான்… அவளது பரிதவிப்பு புரிந்தவனாக.

“ஆனா… இதுக்காக மெனக்கெடவெல்லாம் இல்ல.” என்றான் கேலிபோல். 

“எனக்கே தெரியாம, பத்திரிக்கை முதல்கொண்டு யோசிச்சிருக்கீங்களே? மெனக்கெடாமயா?” என்றாள் முகத்தை எடுக்காமலே. 

“நம்ம கடையில பொருள் வாங்கவர்ற பொண்ணுகள கவனிச்சிருக்கே.” என்க, 

‘என்ன…’ என்பது போல் அன்னாந்து, கண்கள் குறுக்கிப் பார்த்தாள். கோபம் சிறிது விரவியிருந்தது பார்வையில். சிரித்துக் கொண்டான் தனக்குள்.

“பிடிச்சிருக்குனு ஒரு பொருள பாத்துவச்சுட்டு சுத்திட்டே இருப்பாங்க. இன்னொருத்தவங்க வந்து, அதை செலக்ட் பண்ணிட்டீங்களா? இல்லைனா நான் எடுத்துக்கவானு கேட்டதும் தான், இல்லயில்ல நான் செலக்ட் பண்ணிட்டேனு உடனே பில்போட வருவாங்க. அதுமாதிரி தான் நீயும். இன்னொருத்திக்கு சொந்தமாகிருவேன்னு நினச்சே எதிலையும் உன் கவனம் போகல.” என்றவரிடம்,

“நிஜம் தான். பத்திரிக்கையில இருந்த பேருகூட மண்டையில ஏறல பாருங்களே.” என்றாள், கண்ணீர்க் கோலம் போட்ட, கண்கள் சிரிக்க.

“அப்பறம்… சின்னப்பிள்ளை கிட்ட சொல்ற மாதிரி செய்யாதேன்னு சொன்னா செஞ்ச. ஃபோட்டோ பாருன்னா பாக்க மாட்டேன்ன. மாப்பிள்ளை விவரம் தெரிஞ்சுக்கோனா வேண்டாம்னு முரண்டு பண்ணின… சின்ன ட்ரிக் தான் யூஸ்பண்ணினே. பெருசா எல்லாம் மெனக்கெடல.” என விளையாட்டாக சொன்னாலும், அவனது திட்டம் புரிந்து சிரிப்பு வந்தது. கூடவே சிறு கோபமும்.

“ஹலோ… நாங்க ஒன்னும், இன்னும் நீங்க நாலு வருஷத்துக்கு முன்னாடி பாத்த சின்னபுள்ள‌ இல்லியாக்கும். எல்லாம் தெரியும்.” தன்னை விவரம் புரியாதவளாகக் கூறியதில், வீம்பு கொண்டு எல்லாம் தெரியும் என்றாள் கெத்தாக.

“எல்லாம்னா…” எனக்கேட்டு நிறுத்த,

“எனக்கு எதுல விவரம் பத்தாதுன்னு சொன்னாங்கனு தோணிச்சோ, அதெல்லாம் தான்.” என்றாள்.

“இப்ப தான் என் லட்டுக்குட்டி ஃபர்ஸ்ட்நைட் மோடுக்கே ட்யூன் ஆகுறா… வா… வா…” எனக் கேலி செய்ய, அப்பொழுதுதான் அவனைக் கட்டிக்கொண்டிருப்பது உரைக்க, மெதுவாக கைகளை விடுவித்தாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. மீண்டும் அவளது கைகளை எடுத்து தனது கழுத்தைச்சுற்றி போட்டுக் கொண்டு, இடையோடு கட்டிக் கொண்டான் . 

“எப்படி தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லவே இல்ல.” எனக் கண்சிமிட்டிக் கேட்க,

“எல்லாம் கூகுள் ஆண்டவர் கிட்ட தான்‌ கத்துக்கிட்டே. அப்ப தான் ஒன்னு  தெரிஞ்சுது.” என்றாள்.

“பார்றா… அப்பவும் என் பொண்டாட்டிக்கு ஒன்னுதான் தெரிஞ்சிருக்கு.” என்றான்.

“எல்லா விவரமும் தெரிஞ்ச பொண்டாடட்டிய சமாளிக்கறது புருஷனுக்கு ரொம்ப கஷ்டமாம். நமக்கு எப்படி?” என்றாள் மிதப்பாக. 

அம்மாவின் இடுப்பில் அமர்ந்துகொண்டு, விழமாட்டேம் என துள்ளும் குழந்தையின் துள்ளல் தெரிந்தது அவளது பேச்சில். 

“நமக்கு அந்த பிரச்சினை எல்லாம் இல்ல. பேசிக்கலி, நான் இந்த விஷயத்துல கொஞ்சம் சோம்பேறி. இல்லைனா முப்பது வயசாகியும் கன்னிப்பையனா இருப்பேனா. அதனால ஃபீமேல் இஸ் ஆல்வேஸ் மேலன்னு, ஐயா ஹாயா….” என இழுக்க, புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான். 

“புரியல ல்ல.” என, குரலில்  குறும்பு கூத்தாட கேட்டவனிடம், தலையாட்டி இல்லை என்றாள். 

“ஹையோ… என் செல்ல பொண்டாட்டீ… இப்பவும், உனக்கு எதுவும் தெரியாதுன்னா, எனக்கு எல்லாம் தெரியும்னு வீம்பு புடிக்கிற சின்னபுள்ள தான்டீ நீ.” என அவளது தலையைப் பிடித்து செல்லமாக ஆட்டினான். 

“என்னைய சின்னபிள்ளைனு சொல்லாதீங்க.” என மூக்கைச்சுருக்கி கூற…

“சரி… சரி… நீ வளந்துட்டதான். உனக்கு எல்லாம் தெரியும். நான் நம்புற. நீ படிச்சு தெரிஞ்சுகிட்ட தியரியா, இல்ல நான் நடத்தபோற பிராக்டிகல் கிளாஸானு நடக்கும் போது பாத்துக்கலாம். இப்ப போய் தூங்கலாம். ஒரே அலுப்பா இருக்கு.” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். 

வாவென்று கைநீட்டி அழைக்க சிறுபிள்ளையென எந்த உணர்வும் இன்றி, ஓடிவந்து கைக்குள் அடங்கியவள், இன்னும் சிறுபிள்ளையாகத்தான் தெரிந்தாள், அவனுக்கு.  அவளிடம் தனக்காக இவ்வளவு செய்தவனுக்காக, தானும் ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற துடிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. மணாட்டியின் கண்களில் மையல் தெரியவில்லை மணாளனுக்கு.