பொன்மகள் வந்தாள்.3.
புதிதாக வளர்ந்து வரும் நகர்ப்பகுதியில் இருந்தது அந்த வீடு. இரண்டு படுக்கையறைகளுடன் கூடிய மினி வில்லா. இங்கு வந்து ஒருவருடம் தான் ஆகிறது. படிப்பு முடியும் வரை கல்லூரிக்கு அருகிலேயே வீடு பார்த்து குடியிருந்தனர். கிராமத்து தோட்ட வீட்டோடு இணைத்து இதைப்பார்த்தால் நெல் காய வைக்கும் களமே இதைவிடப் பலமடங்கு இருக்கும் என நினைத்துக் கொண்டாள். தோட்டமே வீடாக இருந்தவளுக்கு, மனதை இலகுவாக்கவென அமைக்கப்பெற்ற வீட்டின் முன்புற சிறுதோட்டம் மட்டுமே. வாரவிடுமுறை கிழமைகளில் முழுநேரமும் செலவிடுவது இங்குதான். ஊரில் வேலியில் பார்த்த செடிகள் கூட, மண்தொட்டிக்குள் இடம்பிடித்து குரோட்டன்ஸ் எனும் பெயரில் விலை போவதை இங்குதான் பார்த்தாள். (அட… தொட்டாச்சிணுங்கி செடி, உன்னிசெடி எல்லாம் கூட நர்சரில தொட்டில இருக்குங்க.)
ஏதாவதொரு வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு. இல்லையெனில் பழைய நினைவுகளில் மூளை செல்லரித்து விடுமோ என்ற பயம் உள்ளுக்குள். எப்படியும் வீட்டிற்கு வருவதற்குள் இருட்டிவிடும் என்பதால் தெரு முக்கில் வந்து நிற்கும் தந்தையை சிறிது நாட்களாகத் தான் வரவேண்டாமெனக் கூறியிருக்கிறாள்.
“நானென்ன நடந்தா வர்றே. வண்டியில தானே போயிட்டு வர்றே. நீங்க எதுக்குப்பா சிரமப்படுறீங்க.” எனக் கூறிவிட்டாள்.
இருந்தாலும் வாசலில் பார்த்துக் கொண்டுதான் நிற்பார். இன்று வாசலில் தந்தையின் தலை தென்படவில்லை. உள்ளே வந்தவள், வண்டியை போர்டிகோ ஓரத்தில் நிறுத்தினாள்.
இருள் கவிழ்ந்திருந்ததால், செடிகள் தெரியவில்லை எனினும், சாதிமல்லியும், முல்லையும் தனது மலர்ச்சியை, ‘ நாங்க இருக்கோம்.’ என வாசனை பரப்பி உணர்த்த, இதமாய் இழுத்து நாசி நிறைத்தாள். வாசனை மூளையெங்கும் பரவி, தலைபாரம் குறைத்தது. வாசலில் செருப்பைக் கழட்டும் பொழுதே, உள்ளே அத்தையின் குரல் கேட்டது.
‘இது எதிர்பார்த்தது தான்.’ என நினைத்துக் கொண்டாள்.
எப்படியும் வரவைத்திருப்பார்கள் எனத் தெரியும். செருப்போடு சேர்த்து மனசஞ்சலத்தையும் சேர்த்தே உதறினாள்.
“அத்தைய்ய்ய்….” உள்ளே வந்தவள் சந்தோஷமாகவே பின்னாலிருந்து, அமர்ந்திருந்த அத்தையின் கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
“அடியேய்… எங்கழுத்து போச்சு. என்னையக் கொன்னுட்டாஆஆ…” என அத்தை செல்லமாய்க் கத்த,
“என்னடா இன்னும் தஞ்சாவூர் அட்டென்டன்ஸ் போடலியேனு நினச்சேன். இதோ வந்தாச்சு. உனக்கு நூறு ஆயுசு அத்தே.”
“காடு வா வாங்குது. வீடு போ போங்குது. இதுல நூறு வயசு வாழ்ந்து என்ன பண்ணப் போறே?”
“ஏன் அத்தே… இன்னும் பாக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு…”
“பாத்தவரைக்கும் போதும்டி ம்மா. இதுவே போதும் போதும்னு ஆகிப்போச்சு.” முகம் சலிப்பைக் காட்ட,
“சரி… சரி… தஞ்சாவூர்ல இருந்து மருமகளுக்கு என்ன கொண்டு வந்த.” பேச்சை மாற்றினாள்.
“இந்தா… புளியும், கிளிமூக்கு மாங்காயும் குத்தகைக்காரன் கொடுத்தான். எடுத்துட்டு வந்திருக்கே.” என்றார்.
கால்நீட்டி அமர்ந்து கொண்டு ஒரு பிளாஸ்டிக் வாளியில்… கொண்டு வந்த புளியை, உப்பு ஒரு அடுக்கு, புளி ஒரு அடுக்கு எனப் போட்டு அழுத்தி வைத்துக் கொண்டிருந்தார். மொத்தமாக புளி இருப்பு வைக்கும் பொழுது கல்உப்பு கலந்து வைத்தால் பூச்சி விழாமல் இருக்கும். உப்பு, புளி. மிளகாய் மூன்றுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. புளியில் பூச்சிவிழுகாம இருக்க உப்பு போட்டு வைக்கணும். உப்பு நீர்த்துப் போகாம இருக்க அதுல வரமிளகாயப் போட்டு வைக்கணும். இப்படித்தான் பல பண்டங்கள் ஃப்ரிட்ஜ் இல்லாமலே அந்தக்காலத்துல பாதுகாத்தாங்க.
“அதை நீயே தான ஊறுகா போட்டுத் தின்னுட்டுப் போ. இருக்கிறது மூனு பேரு. அதுக்கு ஒரு மூட்டைப் புளியக் கொண்டு வந்திருக்க.” புளியை அடுக்கிக் கொண்டிருந்த அத்தையிடம் முகம் திருப்பினாள். வருடா வருடம் இவர்களது நிலக்குத்தகைக்காரர் கொடுப்பது தான். சிதம்பரத்தின் உடன் பிறப்புகள் வீட்டுத்தேவைக்குப் போக மீதியைத்தான் கொஞ்சமே இங்கு கொண்டு வந்திருக்கிறார்.
“என் மருமகளுக்கு என்ன புடிக்கும்னு தெரியாதா? ஏதோ சொல்லுவியே… ராசாக்குல்லாவா… அது இருக்கு. முகங்கழுவிட்டு வந்து எடுத்துக்க.”
“அத்தைன்னா அத்தை தான்.” கன்னம் கிள்ளிக் கொஞ்ச,
“அப்பறம்… அத்தைனா பெரியாத்தான்னா சொல்லுவாங்க.”
“இந்த லொள்ளுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.”
“வேற எதுலடி கொறையா இருக்கு?”
“மாமா போனப்பின்னாடி எல்லாமே அதிகமாகியிருக்கு.”
“ம்ம்கூம்… அந்த மனுஷ போனதுக்கப்புறம் ஒரு நாய் கூட மதிக்க மாட்டேங்குதுடி.” அத்தை அலுத்துக் கொள்ள,
“நம்ம வாய்முகூர்த்தம் அப்படி. பொறந்த வீடா இருந்தாலும், புகுந்த வீடா இருந்தாலும் நம்ம கொடிதான் பறக்கணும்னா எப்படி? எல்லாரும் எங்க அம்மா மாதிரியே வாயில்லாப் பூச்சியா இருப்பாங்களா?” சிரிக்காமல் அத்தையைப் பரிகாசம் செய்ய,
“ஏன்டி, நானென்னம்மோ உங்க அம்மாவ… நாத்தனார் கொடுமை பண்ணுன மாதிரி சொல்ற?”
“இல்லையா பின்ன?”
“எங்க… இதை உங்க அம்மாவ சொல்லச் சொல்லு பாக்கலாம்?”
“சொல்லு… நீதான் தைரியமான ஆளாச்சே… சொல்லிப்பாருன்னு வடிவேலு ரேஞ்சுல கேட்டா எப்படி எங்கம்மா வாயத்தொறப்பாங்க? பாவம் எங்க அம்மா.” என அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு தாயின் தாவாய்ப் பிடித்துக் கொஞ்ச… மகளின் செய்கையைப் பார்த்து பெற்றவர்கள் வாய்விட்டு சிரிக்க,
“அடிப்பாவி.” என்று கன்னத்தில் கைவைத்தார் அத்தை.
அத்தையும் மருமகளும் சேர்ந்து விட்டால் கேலிக்குப் பஞ்சமிருக்காது. அத்தையின் செல்ல மருமகளாயிற்றே.
சொர்ணம் பேச்சுதான் கரடுமுரடாக இருக்குமே தவிர, குணம் பெயருக்கேற்ற மாதிரி தங்கம் தான். மூன்று மகன்கள் குடும்பத்தையும் ஒன்றாக கட்டியிழுத்துக் கொண்டு வருவதற்கு இந்தக் கடினத்தன்மை தேவைப்பட்டது அவருக்கு.
இல்லையெனில் தலையாரி இல்லாத ஊருக்குத் தலைக்குத்தலை நாட்டாமை எனும் கணக்கில், குடும்பத்தில் ஆளாளுக்கு நாட்டாமை பண்ண ஆரம்பித்து விடுவார்கள். ஒருவர் பொறுப்பில் குடும்பம் இயங்கும் பொழுது சற்றேனும் சர்வாதிகாரம் காட்டினால் தான் கட்டுக்கோப்பாக குடும்பத்தை கொண்டு செலுத்த முடியும். கணவரின் இறப்பிற்குப் பிறகுதான், மகன்களிடம் பொறுப்பை பகிர்ந்து அளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
தனது நாத்தனாரைப் பற்றி பொம்மியின் அன்னைக்கும் தெரியும்.
வெகு நாட்களாகக் குழந்தை இல்லை என சிதம்பரத்தின் தாயார் மகனுக்கு மறுமணத்திற்கு ஏற்பாடு செய்ய, அந்தக் காலத்திலேயே அண்ணன் மனைவிக்கு ஆதரவாக தனது அம்மாவையே எதிர்த்து நின்றவர்.
“நீ தான் வதவதன்னு ஏழெட்டுப் பெத்துப் போட்டிருக்கியே. ஒரு அண்ணனுக்குப் பிள்ளை இல்லைனா குடியா முழுகிப் போச்சு.” என அம்மாவை எதிர்த்துக் கேள்வி கேட்க,
“நானும் அதைத்தான் டி சொல்றே. நம்ம வம்சம் நிறைஞ்ச வம்சம். நம்ம வம்ச வித்துமேல கொறை இருக்காது. வெள்ளத்தோலப் பாத்து மயங்கி குலம் கோத்திரம் பாக்காம கட்டிட்டு வந்துட்டான். எல்லாம் அவமேலதான் கொறை இருக்கும். அதனாலதான் உங்க அண்ணன ரெண்டாங் கல்யாணம் பண்ணச் சொல்றே.”
எத்தனை வருடங்கள் கழிந்தாலும், மகன் வேற்று இனத்துப் பெண்ணை தன் பேச்சைக் கேட்காமல் கல்யாணம் செய்து கொண்டானே என்ற ஆதங்கம் அந்தத் தாய்க்கு. சிதம்பரம் வேற்று வம்சாவழியைச் சேர்ந்த கௌரியை விரும்பி திருமணம் செய்து கொண்டார். வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் போக, அதைக் காரணம் காட்டியே தினமும் பேசித்தீர்க்கிறார். கௌரியோ புருஷன் தயவு இருக்கும் பொழுது நமக்கென்ன கவலை என்று, மாமியார் எது பேசினாலும் அமைதியாகப் போய்விடுவார். சொர்ணம் தான் அண்ணிக்காக, தனது அன்னையிடம் வக்காலத்து வாங்கி, சண்டை போடுவார். ஏனோ அண்ணியின் அமைதியான அழகு முகத்தின் வசீகரம், அண்ணனைப் போலவே நாத்தனாரையும் மயக்கியிருந்தது.
“பொறக்கற பிள்ள எப்ப வேணும்னாலும் பொறக்கும். இன்னொரு கல்யாணம்பண்ணி அதுக்கும் பிள்ளை இல்லைனா, மறுபடியும் ஒரு கல்யாணம் பண்ணுவியா? வயசான காலத்துல கம்முனு இரும்மா.” என அம்மாவையே வாயடைக்க, சொர்ணம் கூறிய வாய்முகூர்த்தமோ என்னவோ, நாற்பத்தியைந்து வயதிற்கு மேல், இனிமேல் தழையாது என எண்ணிய தரிசு நிலத்திலும், துளி நீர்ப்பட்டு துளிர் விட்டது.
வயதாகி விட்டது… அதனால் தீட்டு வரவில்லை என கௌரி எண்ணிக் கொண்டிருக்க, சில மாதங்களில் வயிறு வேறு கதை சொல்லிற்று.
சிதம்பரம் மற்றும் கௌரி இருவருக்கும் தர்ம சங்கடமாகப் போக, அந்த வயதிலும் கிழவிக்குக் கொண்டாட்டம் தான். தன் மகன் வயிற்று வாரிசைப் பார்க்கப்போகும் சந்தொஷம் அவருக்கு.
ஏற்கனவே சிலமுறை கரு தங்கி, சரியான வளர்ச்சி இல்லாமல் கருச்சிதைவு ஆனதின் விளைவாக பலவீனமான உடல்நிலையில் இருந்த அண்ணன் மனைவியை ஆதரவாக பார்த்துக் கொண்டவர் சொர்ணம். இந்த வயதிற்கு மேல் பிறந்த வீட்டிற்கு, பேரு காலத்திற்கு செல்ல மனமில்லை அவருக்கு. ஏனெனில் அங்கே அண்ணன் மகள்கள், மருமகள்களும் இருக்க, அவர்களுக்கு இணையாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்க சங்கோஜப்பட்டார். பெண்களுக்கு தாயோடு பிறந்த வீட்டுசொந்தம் போச்சு, என்ற வழமை உண்டு ஊர்ப்பக்கம். என்னதான் சகோதரர்கள் இருந்தாலும், பிறந்த வீட்டு விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு தான். அடுப்படியில் சட்டிமுட்டி உருட்டும் சத்தம் கேக்கும் முன் கிளம்பிவிடுவது மரியாதை என்பது உலக வழமை.
பிறந்த வீடு செல்ல மருகிக் கொண்டு சங்கோஜப்பட்டு நின்றவரை,
“நீ எங்கேயும் போக வேண்டாம் அண்ணி. அங்க என்ன… உங்க அம்மாவா இருக்கு… உனக்குப் பேருகாலம் பாக்க? என்ன வேணும்னாலும் நான் செய்றே. எங்க அண்ணனுக்கு அத்திப்பூத்தாப்புல அம்பது வயசுல புள்ள வந்திருக்கு. அதை எப்படி காபந்து பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” என்று கூறியவர் நாத்தனாரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
உடல் பலவீனத்தால் எட்டாம் மாதமே உதிரப்போக்கு ஏற்பட, கருப்பைக்கு குழந்தையின் எடையைக் தாங்கும் சக்தி இல்லையென, உடனே சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தனர். எவ்வித அசூயையும் இன்றி அண்ணியைக் கவனித்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட ஒருமாத காலம் மருத்துவமனை வாசத்திற்குப்பிறகே வீடு வந்தனர். குறைமாதத்தில் எடை குறைவாகப் பிறந்த குழந்தையை முழுமையாகக் கவனித்து வளர்த்தது அத்தை தான்.
அதென்னமோ தவமிருந்து கிடைத்த வரமாகப் பிறந்ததாலோ என்னவோ தேவலோக குழந்தை போல்தான் இருந்தாள் பொம்மியும். பன்னீர் ரோஜா வண்ணத்தில் கைகால் முளைத்த ரோஜாவாக, அனைவரையும் கொள்ளை கொண்டாள்.
தனது அம்மாவைப் போலவே நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென, அன்னையின் பெயரான பொம்மாத்தாள் எனும் பெயரையே பொம்மி என குழந்தைக்குச் சூட்டினார் சிதம்பரம். மகன் வயிற்றுப் பேத்தியைப் பார்த்து விட்டுத்தான் தொண்ணூறு வயதிற்குமேல் கிழவி சிவலோகபதவி அடைந்தார்.
“வெள்ளந்தி மனுஷி.” அத்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் பொம்மிக்கு மனதில் தோன்றுவது.
அதனால் தான் அத்தையும் மருமகளும் ஒருவருக்கொருவர் வாயாடிக் கொண்டிருப்பதை அமைதியாக சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தனர் இருவரும்.
தனது நாத்தானாரைப் பற்றி தெரியாதா என்ன?
“ஏன் அத்தை… புளி, மாங்கா எல்லாம் தூக்கிட்டு பஸ்லயா வந்தே?”
“இல்ல பண்டு. பெரிய மாமன் தான் கார்ல வந்து விட்டுட்டுப் போனான். இன்னைக்கு என்னமோ ஆத்தா மேல கரிசனம் வந்திருச்சு போல.”
“உனக்கு மாமானுகள கொறை சொல்லலைனா தூக்கம் வராது. எப்படித்தான் வச்சு சமாளிக்கறாங்களோ? ஆமா… உனக்கு எத்தனை தடவை சொல்றது பண்டுனு கூப்பிடாதேனு.” மருமகள் முகம் சுழித்து செல்லக் கோபம் காட்ட,
“எனக்கு அப்படியே பழகிப்போச்சுடி…” என பொம்மியின் தாவாய்பிடித்துக் கொஞ்சியவர்,
“எனக்கு எப்பவும் நீ பண்டு தான். நான் அப்படித்தா கூப்பிடுவே. இப்ப என்னங்கற?” என உரிமைக்கோபம் அத்தை காட்டினார்.
குறைபிரசவத்தில் எடை குறைவாகப் பிறந்தவளை, அன்னையும், அத்தையும் கவனித்த கவனிப்பில், பொசுபொசுவென பஞ்சுமிட்டாயாய்க் குழந்தை ஊட்டம் பெற்றது. அவர்கள் அரிசிமில்லில், தமிழ்நாட்டுப் புழுங்கல் அரிசி மொத்த வியாபாரம் பேச வந்திருந்த ஆந்திராக்காரர் ஒருவர், பொன்மஞ்சள் வண்ணத்தில் கைகால் ஆட்டி அப்பொழுதுதான் முகம் பார்த்து சிரிக்க ஆரம்பித்திருந்த பொம்மியைப் பார்த்து,
“மீ பாப்பா மாவடிப்பண்டு (மாம்பழம்) லாக சக்ககா உந்தி.” எனக் கூறிச் செல்ல,
அத்தைக்கு அப்பொழுதிருந்து பண்டு வாகிப்போனாள் பொம்மி.
“உன்னையத் திருத்த முடியாது. நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வர்றே.”
அவள் உள்ளே செல்ல, சொர்ணம் அண்ணன், அண்ணி முகத்தைப் பார்த்தார்.
“அவ பாட்டுக்கு இருக்கா. நீங்க தான் தேவையில்லாம மனசப் போட்டு குழப்பிக்கறீங்க.” என்க,
“புள்ள நேத்தெல்லாம் ஒரு மாதிரியா இருந்துச்சு சொர்ணம். வேலைக்குப் போகல. அதான் உனக்கு ஃபோன் போட்டேன்.” என்றார் ஆற்றமாட்டாமல் தங்கையிடம் அண்ணன்.
“அவ ஒன்னும் நம்ம கைக்குள்ளயே வளர்ந்த, ஒன்னுந் தெரியாத பொம்மி இல்ல. அவளை ஏதாவது சொல்லி, மறுபடியும் நத்தையா சுருள வச்சுறாதிங்க.” சற்றுக் கண்டிப்பாகவே கூறினார்.
“அதுக்குன்னு இப்படியே எத்தனை நாளைக்கு அண்ணி. இப்ப எல்லாம் எனக்கும் உடம்பு ரொம்பப் படுத்துது. கண்ணமூடுறதுக்குள்ள இவளுக்கு ஒரு வழியப் பண்ணிட்டோம்னா நிம்மதியாப் போவேன்.”
“மொதல்ல இப்படிப் பேசறது நிறுத்து அண்ணி. அவ முன்னாடி இப்படிக் கண்டதையும் பேசி, அவளை மறுபடியும் குழந்தையாக்கிறாதீங்க. இப்ப தான் நாலு பேரு முகம் பார்த்துப் பேசுறா. அதையும் கெடுத்துறாத.” என இருவரையும் கடிந்து கொண்டிருந்தார் சொர்ணம்.
உள்ளே வந்தவள் இழுத்து மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். இப்படி ஏதாவது இவர்கள் செய்து விடுவார்கள் என்றுதான் வேலைக்கு கிளம்பி விட்டாள். வேலையை விட்டு விடலாம் என்றாலும், மறுக்கப் போவதில்லை தான். உன் விருப்பம் என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க விருப்பமில்லை என்பதைக் காட்டிலும், ஏனோ மனம் அவனைப் பார்த்துக் கொண்டு மட்டுமாவது இருக்கலாமே என ஏங்கியது.
நாகரீகமாக மாறன் விருப்பத்தை சொல்லி இருக்கிறான். மறுத்து விட்டு, மீண்டும் அவனருகில் வேலை செய்வது என்னவோ போல் இருக்கிறது தான். எத்தனை நாளைக்கு இது போல் முகம் பார்க்க சங்கோஜப்பட்டு ஒரே இடத்தில் வேலை பார்ப்பது. மனம் யோசனையில் இருந்தாலும்,
“மாறா…” ஒருமுறை வாய்விட்டு சொல்லிப் பார்த்தாள். மனமெங்கும் தித்திப்பு மழை. கிட்டாது எனினும் அனுபவித்தாள். இது எனக்கே எனக்கான தனிப்பட்ட உணர்வு. மனதிற்குப் பிடித்தவனை ரசிப்பதும், அவனை நினைத்து சிலிர்ப்பதும் தவறில்லையே. காலத்திற்கும் இதுமட்டும் போதும். வேறெதுவும் தேவையில்லை, என்றது மங்கையின் மனது.
ஆனால் இவ்விருப்பம் எவ்வகையில் சேர்த்தி. காதலா? இல்லை… என யோசிக்கும் பொழுதே, ‘ச்ச்சே.” என மனசாட்சி இடித்துரைத்தது.
“ஒரு நாலஞ்சு வருஷம் எனக்காக காத்திருப்பாயா? லட்டு மாதிரி இருக்க… விட்டுட்டுப் போகவே மனசில்ல… நீயும் சின்னப் பிள்ளையா வேற இருக்க?” ஆசையாக அவள் முகம் பார்த்துக் கண்கள் மின்னக் கூறியவனின் ஆசை முகம் இன்றும் நினைவுப் படுகையில் படிமமாய்.
நினைவு அலைகள் மனதில் மோதிச்செல்ல,
‘ஏன் மாறன்… அன்னைக்கே என்னையக் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல.’ என்னவோ அவன் அழைத்தவுடன் அன்றே இவளும் உடன்போயிருப்பாள் போல், இன்று ஆதங்கப்பட்டாள். நினைவலைகளில் அலைக்கழிந்தது நெஞ்சம். அப்பொழுதுதான் பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தாள். அவன் கூறியதன் அர்த்தம் கூட முழுதாகப் பதியவில்லை… தோற்றம் குமரியாகத் தோன்றினாலும், இன்னும் குழந்தைப் பருவத்தை விட்டு வெளிவராமல் இருந்தாள் அன்று. அர்த்தம் புரிந்த பொழுது காலம் வேறு கணக்கு எழுதிவிட்டது. அதுவும் விடையில்லா விடுகதையாக.
இறந்த காலத்தில் நடவாத ஒன்றிற்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் நடக்கவே சாத்தியமில்லாத ஒன்றிற்காகவும் நிகழ்காலத்தில் மனம் ஏங்கியது.
அவனது விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தாலும், மனம் ஏங்கியது என்னவோ அவன் அருகாமைக்குத் தான். கண்களை அழுந்த மூடித் திறந்தவள்,
‘ஆசைப் படுறதுக்கும் கொஞ்சமாச்சும் தகுதி வேணும். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது.’ என எண்ணியவள் குளியலறைக்குள் சென்று, சிறு குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு நைட்டியை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். குளியல் உடலுக்கு மட்டுமல்ல. எண்ணவோட்டத்திற்கும் சேர்த்து முழுக்குப் போட்டாள்.
“ம்மா… இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உடன்பிறப்பப் பாத்ததும், பறக்கிறது, நடக்கிறது, நீந்தறது எல்லாம் வீட்டுக்கு வந்திருக்குமே?”
“எங்க அண்ணே எனக்கு எடுத்துப் போடுறாரு. உனக்கேன்டி பொறாமை.” அத்தையும் மருமகளும் மீண்டும் தொடர,
“அத்தே! வயசு உங்களுக்கெல்லாம் ரிவர்ஸ்ல போகுதோ? எங்களுக்கே சில அய்ட்டமெல்லாம் ஒத்துக்க மாட்டேங்குது.”
“இதெல்லாம் அந்தக்காலத்துக் கட்டை. கல்லத் தின்னாலும் செரிக்கும்.”
“அப்ப கல்லையே திங்க வேண்டியதுதான. எதுக்கு கறியத் திங்கற?”
“எங்க அண்ணே வாங்கிக் கொடுத்தா கல்லா இருந்தாக்கூட திம்பேன். உனக்கென்ன டி?”
“இந்த பாசமலர், கிழக்குச் சீமை பாசமெல்லாம் பாத்து புல்லரிக்குது போ.”
“அந்தப் படமே எங்களப் பாத்துதான்டி எடுத்தாங்க.”
“ஆமாமா… சொன்னாங்க… சொன்னாங்க…”
“என்னடி சொன்னாங்க?”
“ம்ம்ம்… சொரக்காயில உப்பில்லைனு சொன்னாங்க.”
அத்தை வந்தால் மட்டும் தான் இவள் இப்படி வாயாடுவது.
பெற்றவர்களிடம் கொஞ்சம் சகஜமாகப் பேசினாலே போதும்… அவர்கள், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்ப பொம்மு?” என பழைய பல்லவியை ஆரம்பித்து விடுவார்கள். அதற்குப் பயந்தே பேச்சைக் குறைத்துக் கொண்டாள். சாப்பாடெல்லாம் எடுத்து தயாராக வைக்கப்பட்டிருக்க,
அத்தைக்கும், அப்பா அம்மாவிற்கும் பரிமாறியவள் தனக்கும் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
“பண்டு… வேல பாக்குற இடம் எப்படி? எந்தப் பிரச்சினையும் இல்லைல?”
“ஏன் அத்தை இந்த திடீர் சந்தேகம். ஒரு வருஷமா அங்க தானே போறேன். அப்பாவுக்கும் கடை ஓனரைத் தெரியும்.”
“இல்லடி, முன்னபின்ன தெரியாத இடத்துல வந்து இருக்கீங்க. அதான் ஆளுக எல்லாம் எப்படி பழகுறாங்கனு கேட்டே.”
“காலங்காலமாக வாழ்ந்த சொந்த ஊர்லயே, முன்ன பின்ன நல்லா தெரிஞ்சவங்க பழகினதை விட இங்க எல்லோரும் நல்லா பழகுறாங்க.”
“என்ன பண்றது. நாம ஒன்னு நினைச்சோம். பிள்ளையார் புடிக்கப் போய் கொரங்கா போச்சு. எல்லாம் நம்ம தலையெழுத்து.”
“அத்தே… அதைப் பத்தி பேசாதேனு எத்தனை தடவை சொல்றது?”
“நானும் பேசக்கூடாதுனுதான் நினைக்கிறே. மனசு கேக்க மாட்டேங்குது.”
என்னதான் இவ்வளவு நேரம் அண்ணன் அண்ணியிடம் இது பற்றி பேசக்கூடாதென வாதாடினாலும், அவருக்கும் மருமகள் நிலை பார்த்து மனம் கேட்கவில்லை. ஆற்றமாட்டாமல் கேட்டுவிட்டார்.
“இங்க பாரு… நீ வந்திருக்கேனு தான், உங்க அண்ணே கறி, மீனுன்னு எடுத்துட்டு வந்திருக்காரு. இல்லைனா வெறும் சாம்பாரும், புளிக் கொழம்பும் தான். என்னைய நிம்மதியா சாப்பிட விடுறியா?”
இப்படியே பேசவிட்டால் அது எங்கு கொண்டு போய்விடும் என்று தெரியும். பிறகு ஒருவரும் சாப்பிடாமல் அத்தனையும் குப்பைக்குத் தான் போகும்.
“ஏய் பொம்மு? கூசாமப் பொய் சொல்ற. உனக்கு கவுச்சி இல்லாம சோறு இறங்காதுன்னு ஒன்னுவிட்டு ஒரு நாள் கவிச்சி தான செய்றே.” அன்னை அங்கலாய்க்க,
“ம்மா… அதெல்லாம் கறிக்கொழம்பா. இத்தனை நாளா சாம்பார்னுல சாப்பிட்டுட்டு இருந்தே. அதெப்படி… இன்னைக்கு மட்டும் கறிக்கொழம்பு மாதிரி இருக்கு. கொழம்பு எங்க அத்தை வச்சதா?”
“ஏஞ்சொல்ல மாட்ட? இத்தனைநாளா வக்கணையாத் திங்கும் போது தெரியலியா? யார் வச்சதுனு?”
“ஏன்… எங்க அப்பா கூட வச்சுருக்கலாம். நீ தான் வயசாச்சுனு அடிக்கடிப் படுத்துக்கற. எங்க அப்பாதான் எல்லா வேலையும் பாக்குறாரு.”
“ஆமா… நாங்க வயசாச்சுனு படுத்துக்கறோம். இவங்க அப்பா மட்டும் அப்படியே மார்க்கண்டயராக்கும்.” நொடித்துக் கொண்ட அம்மாவின் உடல் நிலையும் தெரியும். தந்தையோடு சேர்ந்து வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்பவளுக்குத் தெரியாதா அன்னையின் உடல்நிலை. ஏற்கனவே கொஞ்சம் பலவீனமான உடம்பு, தனது பிறப்பிற்குப் பின் மேலும் துவண்டு விட்டதை அறியாதவளா என்ன?
“ஆமா, எங்க அப்பாவுக்கு என்றும் பதினாறு தான். எழுபதுக்கு மேல வயசாச்சுனு யாராவது சொல்ல முடியுமா?” கேட்டுவிட்டு சிரித்தவளை, மூவரும் ஆசையாகப் பார்த்தனர். துடைத்த கண்ணாடியென பளிச்சென்ற முகம். பார்த்தவுடன் கன்னம் கிள்ளி கொஞ்சத்தோன்றும் கிளிப்பிள்ளையென விகல்பமில்லா அழகு. இன்னும் கொஞ்சம் வெள்ளந்தித் தனத்தை அவள் முகம் தாங்கியுள்ளது… பெற்றவர்களுக்காக பூசிக் கொள்ளும் அரிதாரம் அது… அவர்களைப் பார்த்ததும் பழைய பொம்மியாய் சற்று செல்லம் கொஞ்சுவாள். அதுவும் அத்தையைப் பார்த்து விட்டால் இன்னும் சலுகை மிஞ்சும். அங்கு கிராமத்தில் இருந்தவரை, வாரம் ஒருமுறை வரும் அத்தையின் வருகை திருச்சிக்கு வந்த இந்த நான்கு வருடத்தில் மாதம் ஒருமுறை என மாறிப் போயிற்று. அவருக்கும் அலைச்சல் முடியவில்லை.
********
இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது முழுநிலவிற்கு. அதனால் நிலவொளி பால் போல் தகித்துக் கொண்டிருக்க, கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு வான்பார்த்தவன் உள்ளமும், உடலும் தகித்தது தன்னவள் நினைவில்.
இரவு உணவை முடித்துவிட்டு, அன்னையிடம் சொல்லிக் கொண்டு தனது ஜாவாவில் ராஜகுமாரனாய் பவனி வந்து விட்டான் சக்திமாறன். திருச்சியை ஒட்டிய காவேரிக்கரைக்கருகில் தான் தாய்க்கு சீதனமாகக் கொடுத்த மஞ்சக்காணி நிலம்.
மஞ்சக்காணி என்பது பெண்களுக்கு சீதனமாகக் கொடுக்கப்படும் நிலம். காவேரியின் தந்தை மறைவிற்குப்பின், பாகம் பிரித்ததில், பொண்ணுகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சினை செய்வார்கள் என்று எண்ணியதாலோ என்னவோ, பெரிய மனதுபண்ணி, அவருக்கும் ஒரு சிறு பங்கு வழங்கப்பட்டது.
சக்தி, “அதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்கம்மா!” எனக் கூற,
“நான் அந்தவீட்டுல பொறந்த பொண்ணுங்கறதுக்கான அடையாளம் தான்டா அந்த நிலம். முறையாப் பாத்தா இன்னும் நிறைய வந்திருக்கணும். எனக்கு அதெல்லாம் வேண்டாம். அடையாளத்துக்கு இது மட்டும் போதும்.” எனக் கூறிவிட்டார். அம்மாவின் ஆசைக்கு, சக்தியாலும் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை.
அங்கு தான் அரிசி ஆலை போட்டிருக்கிறான். எஸ்.எம். மாடர்ன்ரைஸ் மில்.
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
முன்டாசுக்கவிஞனின் பாடல் தான் நினைவிற்கு வந்தது, வான் பார்த்து படுத்துக்கொண்டு, நிலவில் மங்கை முகம் தேடியவனுக்கு.
இன்னும் அவனுக்குக் குழப்பம் தான், அவள் மறுத்ததில். அதெப்படி கண் பொய் சொல்லுமா என்ன? அதில் எனக்கான வேட்கை தெரிகிறதே.
பொய் அவளது பார்வையிலா? அல்லது எனது கணிப்பிலா?
கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை
ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை…