பொன்மகள் வந்தாள்.6.🌹

பொன்மகள் வந்தாள்.6.🌹

PMV.6.

வாழ்க்கையை, அதன் போக்கை, அது தரும் திருப்பங்களை, சந்தோஷங்களை, துக்கங்களை, ஆச்சர்யங்களைத் தீர்மானிக்க முடிவதில்லை. இந்தத் தீர்மானிக்க முடியாத திருப்பங்கள் தான் வாழ்க்கையின் தன்மையே.

பரமபத ஆட்டத்தில் பகடை உருட்டுவதும், காய் நகர்த்துவதும் வேண்டுமானால் நாமாக இருக்கலாம். அது மட்டுமே நமது செய்கைக்கு உட்பட்டது. பகடையில் ஒன்று விழுமா ஆறு விழுமா என்பதும், ஏணியில் ஏறுவதும், பாம்பின் வாயில் அகப்படுவதும் தீர்மானிக்க முடியாத திருப்பங்கள். இத்தகைய திருப்பங்கள் இல்லையெனில் சுவாரஸ்யம் ஏது. 

திருப்பங்கள் ஒன்றும் அவன் வாழ்க்கையில் புதிதல்ல.‌ அவனும் அதற்கு எல்லாம் சளைத்தவனும் அல்ல. எத்தனையோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவன் தான். ஆனால் அவையெல்லாம் பொருளாதார ரீதியாக. இந்த மாதிரி சவால்கள் இல்லையெனில் வாழ்க்கை சலிப்புத் தட்டி விடும் என்பவன். ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக்கியவனுக்கு, இது முற்றிலும் ‌புதிது.

மனம் கவர்ந்தவளிடம் தன் ஆசையைக் கூற, அதற்கு அவளது வாய்மொழி‌ கூறிய மறுமொழி, இன்னும் மூளைக்குள் ரீங்காரமிட, அசையாமல் அமர்ந்திருந்தான். ஒருசேர உருவாவது தான் இடியும் மின்னலும். ஆனால் மின்னல் வெட்டிய பிறகுதான் இடியின் ஓசை நமக்குக் கேட்கிறது ஒளியின் வேகத்தைவிட‌ ஒலியின்‌ வேகம் குறைவு.(கொஞ்சூண்டு சயின்ஸ்). ஆனால் இவனுக்குள் முதலில் அவளது வார்த்தைகள் இடியாய் இறங்கி பிறகுதான் மூளைக்குள் மின்னல் வெட்டிச் சென்றது. 

எத்தகைய வார்த்தை அது. மிக எளிதாகச் சொல்லிவிட்டாள். அதன் தாத்பரியம் என்ன. நான் திருமணமானவள் என்பதா? அப்படி எனில் மாற்றான் மனைவி மீதா… எனும் நினைப்பிலேயிலேயே மனம்கூசிப் போயிற்று. 

முதன் முதலில் தன் மனதில் இடம்பிடித்தவள். தன் மனம் திறந்ததும் அவளிடம் தான். ஏதோ அன்று சிறுபிள்ளையிடம் விளையாட்டாகச் சொன்னது தான். அதன்பிறகு அதை நினைத்துப் பார்ப்பதற்கு கூட காலம் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. வாழ்க்கையில் தனக்கென ஒரு நிலையான அடையாளத்தை சொந்த பந்தங்கள் முன் உருவாக்க வேண்டும் என நடந்த பந்தயத்தில் தனது ஆசாபாசங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டான். ஆனால்  அதிர்ஷ்டவசமாக அவளை மீண்டும் இங்கேயே சந்திப்போம் என எண்ணிப்பார்த்ததில்லை. 

அவளை முதன்முதலில் சந்தித்து விட்டு வந்த இந்த ஐந்து வருடங்களில் இத்தகைய மாற்றமா? சட்டென புருவம் சுருக்கினான். ‘கிட்டத்தட்ட நாலு வருஷமா இங்க தான் இருக்கா. அதற்குள் எப்படி?’ என யோசித்தவன், முகம் துடைத்து எழுந்து கொண்டான்.

“பொம்மி!” அழைப்பு அவனுக்கே அந்நியமாகப் பட்டது. அந்த உணர்வே பிடிக்கவில்லை. எங்கோ உரிமை எட்டிப்போனதாய் எண்ணம் எட்டிக்காயாய்க் கசந்தது. எனினும் நடந்ததை அவனுக்கும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. 

திரும்பி நடந்தவள் நிதானித்தாளே ஒழிய திரும்பவில்லை. பார்க்கும் தைரியம் பாவைக்கு இல்லை எனச் சொல்லலாம். 

“எப்ப கல்யாணம் ஆச்சு? அப்ப ஏன் இன்னும் உன்னைப் பெத்தவங்களோட‌ இருக்க? ஒருவேளை…” என நிறுத்தினான். அதைக் கேட்கவும் மனம் நடுங்கியது. 

திரும்பியவள் முகம் பார்த்தாள். “ஒருவேளை ன்னா?” என்றவாறே அவளும் யோசனையாகப் பார்க்க, அவனது பார்வை அவளது கூந்தல் மல்லிச்சரத்தில் பதிய,

“விதவையான்னு கேக்குறீங்களா?” என்றாள்… அவனது குழப்பம் அறிந்து. அவனது எண்ணமும் அதுதான். திருமணம் முடிந்த சிலநாட்களில் ஒருவேளை கணவனை இழந்திருப்பாளோ என்ற‌ எண்ணம். வேறுமாதிரி எல்லாம் நினைத்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை. 

“நம்ம சமூகத்துல சக்களத்தி, விதவை, வாழாவெட்டி, வ்… வேசி, இதுக்கெல்லாம் எப்படி ஆண்பால் இன்னும் உருவாக்கலியோ அதே மாதிரி வாழாவெட்டிக்கும், டிவோர்ஸ் ஆன பொண்ணுகளுக்கும் இன்னும் எந்த அடையாளமும் உருவாக்கல சார். எப்பவும் போல‌ பூ பொட்டெல்லாம் வச்சுக்கலாம்… நித்யசுமங்கலியா.”

“அப்படினா?” கொஞ்சம் நெருடலாகத்தான் கேட்டான்… விபரீதமாக எதுவும் நடந்திருக்கக் கூடாது என்ற வேண்டுதலுடன்.

இன்னும் அவனுக்கு இதெல்லாம் பொய்யாக இருக்கக் கூடாதா என்ற எண்ணமே… எதையும் நேரடியாகக் கேட்கத் தயக்கம் தடைவிதித்தது.

“அப்படின்னா சார்… இதோ நாம சேல்ஸ் பண்ற ஃப்ரிட்ஜ், டீ.வி, வாஷிங்மெஷின் இதுல எல்லாம் ‘ஓகே, டெஸ்ட்டடு.’ அப்படின்னு ஒரு சீல் குத்தியிருக்கு பாத்தீங்களா? அதே மாதிரி என்னையும் ஒருத்தன் டெஸ்ட் பண்ணி… நான் குடும்பம் நடத்த லாயக்கில்லாதவன்னு ‘ரிஜக்டட் பீஸ்னு’ சீல் குத்திட்டான். அதோட அத்தும் விட்டுட்டான்.”

“…….”

ஏதோ… இன்று செவ்வாய்க்கிழமைனா, நாளைக்கு புதன்கிழமை தானே… என்பது போல் சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கீழே சென்றுவிட்டாள். இவனுக்குதான்  சற்று நேரம் பிடித்தது. இத்தகைய பதிலை எதிர்பாராததின் தாக்கம் இன்னும் அவன் முகத்தில். அதெப்படி வாழ்ந்து பார்த்து அத்து விடுவதா. புரியவில்லை அவனுக்கு. சில விஷயங்கள் மூளைக்குப் புரிந்தாலும் அதன் அர்த்தம் தரும் தாக்கத்தில் மனம் புரிந்து கொள்ள அடம்பிடிக்கும். புரியாதது போலவே நடித்து நம்மை ஏமாற்றும். நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மனோதைரியம் வராது. 

“இந்தா… ஓனரே இங்க தான்‌ இருக்காப்ல.” என வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்க அவனும் தொழிலில் கவனத்தைத் திருப்பினான்.

கருப்பட்டியை மேலே அழைத்தவன், வாடிக்கையாளர்களை கவனிக்கச் சொல்லிவிட்டு, பில்லிங் செக்ஷனுக்குச் சென்றான். 

முகம் பார்த்து நேருக்கு நேராகப் பேசிவிட்டதாலோ என்னவோ இன்று தரைதளம் வந்துவிட்டாள். அவள் இயல்பாக இருந்தாள். இவன்‌ தான் தவித்துப் போனான். 

இன்னும் பல விஷயங்கள் அவனைக் குழப்பியது. அவன் சந்தித்ததே அவளைப் பள்ளி மாணவியாகத்தான். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகத் திருச்சியில் தான் அவள் கூறியது போல், பெற்றொருடன் இருக்கிறாள். எப்பொழுது திருமணம் நடந்தது. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. 

இரவு வீட்டிற்கு வந்தவனும் அமைதியாகவே இருந்தான். 

மனதின் புயல் கரைகடக்க முடியாமல் அவனை மௌனியாக்கியது. கைகள் சாப்பாட்டுத் தட்டில் அலைந்தபடியே சாப்பிட்டு முடித்தான். சாப்பிடும்வரைப் பொறுமையாக இருந்த காவேரியால் அதற்குமேல் முடியவில்லை. மகனின்‌ முகமும் சுரத்தையின்றி இருக்க…

“என்னடா சக்தி… ஏதாவது பிரச்சினையா?” மகனின் தலையைத் தடவிக் கேட்க,

“ஏம்மா… இப்படிக் கேக்குறீங்க? அப்படி எதுவும் இல்லியே.” சட்டென இயல்புக்கு வந்தான்.

“அப்புறம் ஏன்டா அமைதியா இருக்க? லொடலொடன்னு ஏதாவது பேசிக்கிட்டே சாப்பிடுவே.”

“இத்தனைநாளா… பேசிக்கிட்டே சாப்பிட்டாலாவது உங்க சமையல சாப்பிட முடியுமான்னு ட்ரை பண்ணிப் பாத்தே. முடியாதுன்னு தெரிஞ்சுது. அப்பறமும் ஏன் பேசி வேற எனர்ஜி வேஸ்ட் பண்ணிக்கிட்டு.”

“பேசுடா மகனே பேசு. எவ வந்து உனக்கு வக்கனையா வடிச்சுப் போடுறான்னு நானும் பாக்க தானே போறேன்.”

“ம்ம்ம்… அதுக்குதாம்மா இந்த மௌன விரதம். மௌனவிரதம் இருந்தா மனசுக்குப் பிடிச்ச பொண்ணு கிடைக்குமாம். அதையும் பேசியே கலைச்சு விட்டுட்டீங்க. எங்க பொண்ணு கெடச்சு… எனக்கு அவ வடிச்சுப் போட்டு… எங்க அம்மா கைப்பக்குவம் வரலைனு கொறை சொல்லி… பொண்டாட்டி கையால அடிவாங்குற பாக்கியம் உங்க மகனுக்கு இல்ல போலம்மா.” மகன் அலுத்துக் கொள்ள,

“என் மகன் பொண்டாட்டி கையால அடிவாங்க ஆசைப்பட்டா நானும் கூட விரதம் இருக்கேன்டா. அதைவிட வேறென்ன வேணும். எனக்கு என்‌மகன் சந்தோஷம் தான் முக்கியம்.” வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டே காவேரியும் கூற,

“யம்மோவ்… என்ன ஒரு வில்லத்தனம். அவ்ளோ சீன்லாம் இங்க இல்ல.”

மகனைப் பற்றித் தெரியாதா என்ன? வியாபாரத்தில் எத்தனை பிரச்சினை எனினும் வீட்டிற்குள் கொண்டுவராதவன். இது வேறு ஏதோ, எனத் தோன்றாமல் இல்லை. 

“சக்தி… மனசுக்குப் புடிச்ச பொண்ணுன்னா நம்ம கடையில வேலை பாக்குற பொம்மி மாதிரி இருந்தா போதுமாடா?” மெதுவாக நூல்விட்டு ஆழம் பார்த்தார்.

சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்தவனுக்குப் புரையேறி கண்களில் கண்ணீர் வந்தது. கண்களில் ஆச்சர்யம் தேக்கி, அம்மாவின் முகம் பார்க்க, 

“தாயறியாத சூல் உலகத்துல இல்லடா சக்தி. பூஜைக்கு வந்தப்ப உன்‌முகத்துல இருந்த சந்தோஷத்தையும் பாத்தே. உன் கண்ணு போன போக்கையும் பாத்தேன்.”

“……”

“எல்லாரும்  வேணும்னா‌ நீ கொடுத்த‌ கிஃப்ட் ‌பாக்ஸ்லயும், ஸ்வீட் பாக்ஸ்லயும் கவனம் வச்சிருக்கலாம். ஆனா எவ்வளவு தான் வளந்தாலும் கூட்டத்துல பையன் இல்லைனா பெத்தவ கண்ணு தேடும்டா.”

அனைவரும் கிஃப்ட் பாக்ஸூம் ஸ்வீட் பாக்ஸும் வாங்குவதில் ஆர்வமாயிருக்க, காவேரி மகனைத் தேடினார். இன்று ஏதோ மகன்‌ முகத்தில் தனி சந்தோஷம் தெரிந்தது. அதை ஊன்றிக் கவனித்தவருக்கு, அவன் கண்போன திசையும் தெரிந்தது. அத்திசையில் இருந்தவளும் கருத்தில் பட்டாள்.

சற்று நேரங்கழித்து மகனைக்காணாமல் தேட, பொம்மியின் பின்னால் அவனும்‌ வருவது தெரிந்தது. எதுவாக இருந்தாலும், ‘மகனே சொல்லுவான்.’ என நினைத்துக் கொண்டார். அதையே இன்று கேட்க, மகன் என்னவென்று சொல்வான். தானொரு இலவு காத்த கிளியென்றா சொல்ல முடியும்?

“ம்மா… அத்து விடுறதுன்னா என்னம்மா?” என்றான் திடீரென.

“ஏன்டா நல்ல வார்த்தை பேசும் போது இப்படிக் கேக்குற?”

“சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.”

“கல்யாணத்தைப் பத்தி பேசுடான்னா, கழட்டி விடுறதைப் பத்தி பேசுறான்.”

“அப்படினா?”

“கிராமத்து ஸ்டைல் டிவோர்ஸ் டா.

ஊர்ப்பக்கமெல்லாம், கோர்ட்டு கேஸுன்னு அதிகம் போக மாட்டாங்கடா. பஞ்சாயத்துல பேசி முடிப்பாங்க. அது மாதிரி தான் கல்யாணம்‌ ஆனவங்களுக்கு ஒத்துவரலைனா, பஞ்சாயத்துப் பேசி விவாகரத்துப் பண்றதுக்குப் பேரு, அத்து விடுறது இல்லைனா தீர்த்துவிடுறதுன்னு சொல்லுவாங்கடா.”

“இன்னுமா அப்படி எல்லாம் நடக்குது?”

“ஆமாடா‌! எழுதி வாங்கிருவாங்க ரெண்டு பேத்துக்கிட்டயும். ஆமா நீ எதுக்கு இதுல இவ்ளோ ஆர்வமா இருக்க?” 

“எல்லாம் ஒரு ஜெனரல் க்னாலேஜ் தாம்மா.”

“ஏன்டா… எதெதுல பொது அறிவை வளக்கறதுன்னு வெவஸ்தை இல்லையா டா?” என்றவரிடம்,

“நான் மில்லுக்குக் கிளம்பறேன்மா.” என சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

           ************************

நன்கு மூழ்கி முக்குளித்தான். எனினும் மனதின் வெப்பம் குறைந்தபாடில்லை. கிட்டத்தட்ட காலை எழுந்திலிருந்து கிணற்றுக்குள் தான் இருக்கிறான். இவ்வளவு நேரமாக நீந்தியும் கையும் காலும் ஓயவில்லை. எந்த சிந்தனையுமில்லாமல் உள்ளே முக்குளிப்பதும், மேலே வருவதும்,‌ நீந்துவதும் என மாற்றி மாற்றி தனைமறந்து அனிச்சை செயலாய்‌ செய்து கொண்டிருக்கிறான். இரவு‌முழுக்க தூங்காததும், இவ்வளவு நேரமாகத் தண்ணீரில் இருந்ததும் என இரண்டுமாகச் சேர்ந்து கண்களைக் கோவைப்பழமெனச் சிவப்பாக்கியிருந்தது. தகதகவென எரிச்சல் வேறு.‌ ஆனால் அதுவெல்லாம் சுரணை இல்லை போலும். அவள்‌ கூறிய வார்த்தைகளே கண்ணில் விழுந்த மணல் போல மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இரவு அரிசிமில்லுக்கு வந்தவனுக்கு, அவள் பேசியதே மனமெங்கும் வியாபித்திருக்க, மற்ற‌பேச்சு எங்கிருந்து வரும்.

மில்லுக்குவர லாரியில் லோடு ஏற்றிக் கொண்டிருந்தனர்.‌ சட்டையைக் கழற்றியவன் தானும் மூட்டைகளைத் தூக்க ஆரம்பித்துவிட்டான். ஆள் பற்றாக்குறை‌ எனில் எப்பொழுதும் செய்வது தான். இன்று ஏனோ மனதின் கனத்தை இறக்கி‌வைக்க முடியாமல் முதுகில் பாரம் ஏற்றத் தொடங்கினான்.

“அண்ணே, நாங்க பாத்துக்கிறோம். ஆளுக இருக்காங்க.” என்று கூற,

“பரவாயில்லடா, சீக்கிரம் லோடை அனுப்புவோம்.” என பணியாளிடம்  பதிலுறைத்தான்.

லாரியைக் கிளப்பி விட்டு, உள்ளே வந்தான். காலையில் ஊறவைத்த நெல் கலன்களில் இருக்க, வால்வைத் திறந்துவிட்டு, பாயிலருக்கு மாற்றினான். ஆட்டோமேடிக் சிஸ்டமில் டெம்ப்ரேச்சரை செட் செய்தான். நெல்வகைக்குத் தகுந்த மாதிரி வெப்பநிலை. முன்பு போல் ஊறவைக்க ஒருநாள், அவிக்க ஒருநாள், காயவைக்க இரண்டு நாள்கள், அதன்பின் அரவை, பிறகு கல், கருக்கா நீக்குதல் என நீண்ட செய்முறைகளாக இல்லாமல் இன்று எல்லாமே மாடர்ன் ரைஸ்மில் என்ற பெயரில் ஆட்டோமேட்டிக் சிஸ்டமாக பட்டனைத் தட்டினால் அனைத்தும் நடந்தேறி விடுகிறது. மூட்டைகளை ஏற்றி இறக்கத்தான் ஆட்கள் தேவைப்பட்டனர். 

அடுத்து அலுவலக அறைக்குள் வந்தவன் கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். பகல் முழுதும் அங்காடியில் இருப்பதால் இரவு தான் மில்லு கணக்குகளைப் பார்ப்பது. 

இன்னும் வரவேண்டிய பற்றுக் கணக்குகளைத் தனியே குறித்துக் கொண்டிருந்தான். கஸ்டமர்களைத் தக்க வைக்க, பற்று வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. நிலுவையில் உள்ள வரவுகளுக்கு மறுநாள் ஃபோனில் தொடர்பு கொள்ள வேண்மென குறித்துக் கொண்டான். 

பாராமல் கெட்டது பயிர். கேளாமல் கெட்டது கடன்… என வழக்கு உள்ளது. என்னதான் நம்பிக்கையான வாடிக்கையாளர்களே ஆனாலும் அவ்வப்பொழுது நினைவுபடுத்த வேண்டியுள்ளது. 

வெளியே வந்தான். தவிடு  கருக்காஅரிசி எல்லாம் குவிந்து கிடக்க,

“ஏன்டா குமார்… இன்னும் இதெல்லாம் அனுப்பாம இருக்கே?” என்றான்.

“நாளைக்கி கோழிப்பண்ணைக்கி அனுப்பிர்றேன்ணே.”

“அப்படியே பழைய பாக்கியையும் கேட்டுப் பார்றா. தர்ற மாதிரி தெரிஞ்சா அடுத்த லோடு அனுப்பு. இல்லைனா இதோட கணக்கை முடிச்சுக்க சொல்லிர்றா.”

“சரி ண்ணே.” 

தவிடு கோழித்தீவனத்திற்கும், எண்ணெய் ஆட்டும் செக்கிற்கும் அனுப்பப்படும்.‌ அரிசியிலிருந்து பிரியும் கருக்கா எனப்படும் கருப்பு அரிசி கோழித்தீவனம், மாட்டுத் தீவனம் உற்பத்திக்குப் பயன்படும். “அரிசிமில்லைப் பொறுத்தவரை தவிட்டுல இருந்து கருக்கா அரிசி வரைக்கும்  எல்லாமே காசுதான். எதுவுமே கழிவுனு வீணாகாது தம்பி.” ஐந்து வருடங்களுக்கு முன் வியாபாரம் பேசும் பொழுது பொம்மியின் தாத்தா என நினைத்துக் கொண்டிருந்த அவளின் தந்தை கூறியதுதான் சக்தியிடம்.

நெல்லை மட்டும் அறுவடை காலத்தில் மலிவாகக் கிடைக்கும் போது மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால் போதும். அதற்குத் தகுந்த இடவசதி வேண்டும். நமது பெயரை(ப்ராண்ட்) மக்கள் மனதில் பதிய‌வைக்க வேண்டும். 

சக்தியும் அதில் தான்‌தீவிரமாக இருக்கிறான். எஸ்.எம். பிராண்ட், இப்பொழுதுதான் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. இனிமேல் தான்‌ இதை விரிவாக்கவும், விரிவாக்கியதைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவன் மெனக்கெட வேண்டும். அதில் எல்லாம் அவனுக்கு சுணக்கம் இல்லை.

இதைப் பற்றியெல்லாம் யோசித்தவனுக்கு, பொம்மியின் நினைவும் வந்தது. அரிசி ஆலை என்றாலே அவள்‌ நினைவு இல்லாமல் எப்படி?

“டேய் மாப்ளே!” கிணற்றுத் திட்டில் அமர்ந்து கொண்டு நீர் அலைகளோடு எண்ண அலைகளை ஓட்டிப்பார்க்க ஆரம்பித்தவனை மாமனின் குரல், கலைத்தது.

மேலே பார்க்க, விஷ்ணு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன்… மேலே ஏறி வந்தான். 

தைமாதம் மற்றும் அறுவடை காலங்களில் நெல் கொள்முதல் செய்ய மாமனும் மச்சானும் கிளம்பி விடுவார்கள். புது நெல் தான் விலை மலிவாகக் கிடைக்கும். பழைய நெல் விலை அதிகம். எனவே தான் அறுவடையின் போதே புது நெல்லை வாங்கி வைத்துக் கொள்வான். இன்றும் அதற்காகத்தான் இருவரும் கிளம்பி விட்டனர்.

அப்பொழுது கைபேசி அழைக்க, கருப்பட்டிதான்‌ அழைத்திருந்தான். தலையைத் துவட்டிக் கொண்டே அழைப்பை ஏற்க,

“அண்ணே கிளம்பிட்டீங்களா?”

“இனிமேல் தான்டா. இப்ப தான்டா மாமா‌ வந்திருக்காரு.”

“உங்க ஆளுக்கு, இன்னைக்கி நீங்க வரமாட்டீங்கனு தெரியாதா ண்ணே?”

அவன் கேட்டதை எப்படி எடுத்துக் கொள்வது. எந்த உரிமையை அவள் மீது காட்ட‍முடியும். இப்போதைக்கி முதலாளி என்பதைத் தவிர வேறெந்த உரிமையும் காட்ட முடியாது.

 ‘அவ்வளவுதானா?’ என்றது‌ மனசாட்சி.

“ஏன்டா அப்படிக் கேக்குற?”

“வந்ததிலிருந்து ரெண்டு மூனு தடவை கேட்டாங்க. ஏன் இன்னும் ‌வரலைனு. நானும் தெரியலைனு சொல்லிட்டே. கண்ணு அடிக்கடி வாசல் பக்கமே போகுது‌ண்ணே.”

“அட நீ வேற. இதைப் போய் கேட்டா, முதலாளி இன்னும் வரலையேங்குற, அக்கறையில தான் பாத்தேன்னு சொல்லுவாடா. நீ ஃபோனை வை.” என அழைப்பைத் துண்டித்தான்.

“மாமா… சாப்பிட்டீங்களா?” என வந்தவனை விசாரிக்க,

“சாப்டாச்சு சக்தி. உனக்கும் அக்கா குடுத்து விட்டிருக்கா. வந்து சாப்பிடு.”‌ என அழைக்க,

உடை மாற்றிக் கொண்டு வருவதாகச் சென்றான்.

அதற்குள் விஷ்ணுவும்‌ பக்கதில் இருந்த வாழைமரத்திலிருந்து, இலை அறுத்து வர, கொண்டு வந்திருந்த இட்லியையும்,‌ சட்னியையும் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

“டேய் மாப்ளே! ரொம்ப‌ நாளா‌ கேக்கணும்னு நினைச்சேன். யார்றா அந்தப் புள்ள. எங்கேயோ பாத்த மாதிரி ‌இருக்கு.‌ ஆனா ஞாபகம் வரமாட்டேங்குது.”

“யாரை மாமா கேக்குறீங்க?” 

“பொம்மி டா. நல்லா பாத்த ஞாபகம்‌ இருக்கு. எங்கேனு தெரியல.”

“ஒருநாள் இல்லைனா ஒருநாள் தர்மத்தின் தலைவன் ரஜினி மாதிரி வேட்டி கட்டாமப் போகப் போறீங்க. ஊரே பாத்து சிரிக்கப் போகுது.” என‌க் கூறிச் சிரிக்க,

“நான் ஏன் வேட்டி காட்டுறேன்.‌ யூனிஃபார்ம் தானே போட்டுப்போறே.”

“அப்ப, ஸ்டேஷன்ல சிவப்புக் கொடிக்குப் பதிலா பச்சைக் கொடியைக் காட்டப்‌ போறீங்க. ட்ரெயின் நிக்காமப் போகப்போகுது.”

“மாப்ளே ட்யூட்டில எல்லாம் ஐயாவை அடிச்சுக்க முடியாது. மற்ற‌விஷயங்கள்ல‌ தான்‌ கொஞ்சம் ஞாபகம் மறதி. அதுவும் இந்த ஆளுகள‌ அடையாளம்‌ வைக்கிறதும்,‌ தேதியை நினப்பு‌ வைக்கிறதும்தான் தடுமாறும். அதெப்படி கல்யாண‌நாள்‌ மட்டும்‌ கரெக்டா மறக்குமோ தெரியலடா?”

“அக்காவை மறக்காம இருந்தா சரி.”

“அதெப்படி மறக்கும்… மறக்காம இருக்கணும்னு தானே வெளிய கிளம்பும்‌ போதே தலையில கொட்டி அனுப்புறா.”

மாமன்‌ கூறியதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான்.

“மாமா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதே‌மாதிரி அரிசி கொள்முதல் பண்ண தஞ்சாவூர் பக்கம் போனோமே அதாவது ஞாபகம் இருக்கா?”

“ஆமா…”

“தஞ்சாவூர்ப் பக்கத்துல ஒரு ரைஸ்மில்லுக்குப் போனோமே. கௌரி ரைஸ் மில்.”

“ஆமா…”

“அங்க தான் இந்த பொம்மியப் பாத்தோம்.”

“ஆமா…”

“நானென்ன வில்லுப்பாட்டுக் கதையா சொல்றே. கோரஸ் கோஷ்டி மாதிரி ஆமா போடுறீங்க.” 

விஷ்ணுவும் நன்கு யோசித்து, “அட! ஆமா! நீ கூட எங்களைய அண்ணேன்னு கூப்பிடாதேன்னு சொன்னீயே?”

“என்னைய அண்ணேனு கூப்பிடாதேனு சொன்னே… உங்களை இல்ல.”

“இப்ப ஞாபகம் வந்திருச்சுடா. சின்னப்புள்ளையா இருந்துதா. அதான் நெனப்புக்கு வரல…”

“இல்லைனா மட்டும்?”

“டேய்! அன்னைக்கே அண்ணேனு கூப்பிடாதேன்னு சொன்னே. இப்பவும் வர்ற‌ பொண்ணையெல்லாம். தட்டிக் கழிக்கிற. என்னடா சங்கதி?”

“அதெல்லாம் ஒரு சங்கதியும் இல்ல. நேரமாச்சு கிளம்புங்க… போலாம்.” அத்தோடு பேச்சை வெட்டினான் சக்தி.

“கத்திரிக்கா முத்தினா கடைத் தெருவுக்கு வரப்போகுது. பாத்து டா அப்புறம் நீ முத்தின கத்திரிக்காயா ஆகிறப்போற.”

 

ஐந்து வருடங்களுக்கு முன்…

error: Content is protected !!