பொன்மகள் வந்தாள்.9.🌹

PMV.9.

வாழ்தல் என்பதும் ஒரு கலை… வாழத்தெரிந்தவனுக்கு. தெரியாதவனுக்கு வெறும் காற்றை மூக்கின் வழியாக உள்ளிழுத்து வெளியேற்றும் தினப்படி வேலைகளில் அதுவும் ஒன்று. மூச்சு விடுதல் மட்டுமே வாழ்தல் என்பதாகிவிடாது. ஆசை, கோபதாபம், விருப்பு, வெறுப்பு இவைகளோடு வாழ்பவன் தானே மனிதன். சிரிக்கத் தெரிந்த மிருகம் மட்டுமல்ல, காதல் செய்யத் தெரிந்த ஒரே மிருகமும் மனிதன் மட்டுமே. மிருகங்களோடு மிருகமாக இருந்த மனிதனை மிருகங்களின் தலைவனாக்கியது, சிந்திக்கும் மூளை மட்டும் அல்ல… அதில் காதலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாடோடிக் கூட்டத்தை குடும்பம் எனும் கட்டுக்குள் பரிணமிக்க வைத்தது காதல். அப்ப… மற்ற உயிரினங்கள் காதலிக்கவில்லையா எனக் கேட்டால், அது அவைகளுக்கு சந்ததி உருவாக்கம் மட்டுமே. குட்டி போட்டு விட்டாலோ, அல்லது குஞ்சு பொறித்து விட்டாலோ நீ யாரோ நான் யாரோ தான். அடுத்த சீசனுக்கு தான் கூடல். அதுவும் யாருடனோ?

மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்தியதும், மனிதனை நாகரீக வளர்ச்சிக்கு உந்தித் தள்ளியதும் காதல். பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் மயக்க வேண்டிய அவசியம் இல்லை என வைத்துக் கொள்வோம். ஒரே நாளில் அத்தனை வியாபாரமும் நொடித்துப் போகும். அத்தனை விளம்பரங்களின் சாராம்சம் என்ன? எதிர்பாலினத்தை மயக்குவது மட்டுமே.‌ உலகில் தோன்றிய ஓரறிவு உயிரி முதல் ஆறறிவு மனிதன் வரை காமம் பொது. ஆனால் மனிதன் மட்டும் தான் இவற்றிலிருந்து சற்று வேறுபடுகிறான்.  

காதலின் வெளிப்பாடு காமம். அன்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது. தம்பதியரிடையே பிணைப்பை வலுப்படுத்துவது. ஆனால் ஒருபோதும் காமத்தின் வெளிப்பாடாக காதல் அமையாது. காமத்திற்கு இரண்டு உடல்கள் மட்டுமே போதும். செயற்கையாய் சிரித்து, செயற்கையாய் கூடி, இயந்திரமாய் இயங்கிவிட்டு… உணர்வுகளை ஒட்டிய மணலாய் உதறிவிட்டுச் சென்றுவிடும். 

அடுப்படியில் மாவுப் பிசைந்து கொண்டிருந்தவளை பின்னாலிருந்து இடையோடு சேர்த்து அணைத்திருந்தான் விஷ்ணு.

“என்ன… சின்னவீட்டோட ஊர்சுத்திட்டு வந்தாச்சா?”

“ம்ம்ம்… அதெல்லாம் பேஷா சுத்தியாச்சு.” என்றான்.

“இன்னைக்கி எங்க?”

“மணப்பாறை டி. ப்ரித்வி தூங்கிட்டானா?” தலையிலிருந்த மல்லியில் முகம் புதைத்து இழுத்து மூச்சு விட்டு வாசம் பிடித்தவாறே கேட்டான் விஷ்ணு.

“ம்ம்ம்… தூங்கிட்டான். முதல்ல போயி குளிங்க. வெளியே இருந்து வந்ததோட கட்டிப்புடுச்சுக்கிட்டு.”

“குளிங்கன்னா எப்படிக் குளிக்கிறது. யாரு முதுகு தேச்சுவிடுவா?”

“ஏன்… உங்க சின்னவீட்டையே கையோட கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே. முதுகுத் தேச்சுவிடறதுக்கு.” சப்பாத்தி மாவைக் கிண்ணத்தில் தூக்கி அடித்துப் பிசைந்தவாறே கேட்டவளை,

“திரும்ப திரும்ப அதையே சொல்லாதடி. எனக்கே ஒரு மாதிரியா இருக்கு.” என்றவாறு பின் கழுத்தில் கடித்து வைக்க,

“ஷ்ஷ்ஆஆஆ… நாப்பதை நெருங்கும் போது நாய்க்குணம்கறது சரியாத்தான் இருக்கு. எப்பப் பாத்தாலும் வேம்பையர் மாதிரி கடிச்சுக்கிட்டு.” 

“நீயே சொல்லிட்ட நாய்க்குணம்னு. அப்ப கடிக்காம என்ன பண்ணுவேன் சொல்லு.”

“எங்களுக்கும் நாப்பது வயசாகும்… ஞாபகம் வச்சுக்கோங்க…”

“இப்ப நீ மாமனைக் கவனி. நாப்பது வயசுல மாமன் உன்னைக் கவனிக்கிறே.”

“ஏன்… இப்ப உங்களைக் கவனிக்காம யாரைக் கவனிக்கிறாங்களாம்?”

“மகன் வந்தபின்னாடி நான் எங்கேடி கண்ணுக்குத் தெரியறே… வரவர என்னைக் கண்டுக்கறதே இல்ல. கவனிக்கிறதுனா நீ நினைக்கிற மாதிரி இல்லடி. இதுல சின்னவீட்டோட ஊர் சுத்தறேன்னு பொல்லாப்பு வேற. நாப்பது வயசு நேரங்காலம் பாக்காதுங்கறதுக்கு தான்டி நாய்க்குணம்னு சொல்லி இருக்காங்க. நாசுக்கா சொல்லி வச்சா… வேற எதெதுக்கோ கனெக்ட் பண்ணிக்கிட்டு.”

“ஆமா… இதெல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க பாருங்க. முதல்ல சின்னவீட்டை செட்பண்ணிக்கிட்டு, அப்புறமா என்னையப் பொண்ணு கேட்ட ஆளுதானே நீங்க…” 

மனையாளின் வார்த்தைகளைக் கேட்டவன் வெடிச்சிரிப்பு சிரித்தான்.

“பவானி… உனக்கே இது ஓவராத் தெரியல? சின்னவீட்ட புடிச்சதால தான்டி உன்னையவே பொண்ணு கேட்டேன். முறைப்படி பாத்தா நீதான் எனக்குச் சின்னவீடு.”

“ச்ச்சீ… பேச்சைப்பாரு… வெக்கமில்லாம.” என அவளது தோளில் தாவாய் பதித்திருந்தவன் தலையில் தட்டினாள்.

“ஏன்டி… எங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சுப் பேசினது நீ. இதுல எனக்கு வெக்கம் வேணும்கற?”

“ஆமா… நிதமும் டியூட்டி முடிச்சு வரும்போது ஒரு எட்டுப் போயி அவனைப் பாக்கலைனா உங்களுக்குத் தூக்கம் வராதே. என்னைக்கூட்டிட்டு வெளிய போனதைவிட அவனைக் கூட்டிட்டு ஊர் சுத்தினதுதான் அதிகம். இப்ப எங்க போயிருக்கு… கடைக்கா, இல்ல வீட்டுக்கா?”

“ரெண்டுக்கும் இல்ல. மணப்பாறையிலிருந்து நெல்லு லோடு வரும். அதனால மில்லுக்குப் போயிருக்கான்.”

“இப்படியே ரைஸ்மில்லு, கடைன்னு கட்டிக்கிட்டு அழட்டும். முதல்ல உங்க ரெண்டு போரோட கனெக்ஷனைக் கட்பண்ணனும். அப்பதான் அவன் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பான்.”

“சத்தமாப் பேசாதேடி. வெளியே இருந்து எவனாவது கேட்டா எங்களைய வேற மாதிரி நினைக்கப் போறானுக. நிம்மதியா ஆம்பளையும் ஆம்பளையும் கூட வெளிய சுத்தமுடியல. கலிகாலத்துலயும் கேடுகெட்ட கலிகாலமாப் போச்சுடா சாமி.”

அவன் புலம்பலைக் கேட்ட பவானி வாய்விட்டு சிரித்தாள்.

“யாராவது வந்து கேட்டா, ஆமா… அப்படித்தான்னு நானே சொல்லுவே.”

“உனக்கு வாய் கூடிப்போச்சுடி. சாப்பிட என்ன ரெடி பண்ணியிருக்க?”

“இந்தா… சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சுக்கிட்டு இருக்கே. குளிச்சுட்டு வாங்க. அதுக்குள்ள சூடா போட்டு வைக்கிறேன்.” பிசைந்த மாவு காய்ந்து போகாமலிருக்க அதன் மீது எண்ணெய் தடவிக்கொண்டே கூற,

“ஏன்டீ… நிதமும் வரட்டி மாதிரி சப்பாத்தியப் போட்டு மனுஷனைக் கொல்ற. இட்லி, தோசைன்னு ஊத்த வேண்டியது தானே?”

“உடம்பையும் ஃபிட்டா வச்சுக்கணும் மாமா. இப்பவே தொப்பை தெரியுது.”

“சப்பாத்திக்கும் தொப்பைக்கும் என்னடி சம்பந்தம். ஆ… ஊ…ன்னா எல்லாரும் இதையே சொல்றீங்க. எதைத் தின்னுட்டு சும்மா உக்காந்தாலும் தொப்பை போடும்டி. ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல சென்ட்ரல் கவர்மென்ட் வேலை வாங்குன என்கிட்டு ஃபிட்னஸ் பத்திப் பேசுறியா? தொப்பை விழாம இருக்க என்ன வொர்க் அவுட் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.”

“என்ன… இருக்கிக் கட்டிக்கணுமா?” எனக் கேட்டு நக்கல் செய்ய,

“இந்தக் கடிய ரொம்ப தடவை கேட்டாச்சு. ஆனா நீ சொன்னதுல கடைசியாச் சொன்னதைத்தான் செய்யணும்.”

“எனக்கும் சொல்லுங்க நானும் ட்ரை பண்றே.”

“அது ரெண்டு பேரும் சேந்து தான் பண்ணனும். டூ இன் ஒன். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.”

“அப்படி என்னது அது?” என்று திரும்பி நின்று அவனைப் பார்த்துக் கேட்டவளை,

“நீ சொன்னதுதான்டி… இறுக்கிக் கட்டிக்கறது. கிட்ட வா சொல்றேன்.” என அருகே இழுத்து காதில் கூற,

“அய்யோ…‌ ச்ச்சீ… விவஸ்த்தை கெட்ட‌ மாமா. கர்மம்… கர்மம்… என் காதே தீஞ்சு போச்சு…” என தலையில் அடித்துக் கொண்டாள்.

“அதுதான் டி நாப்பது வயசு… நீ சொன்ன நாய்க்குணம். வா…சத்தம் கேட்டு நம்ம தவப்புதல்வன் எந்திரிச்சு வந்துறப் போறான். வளர்ந்த பின்னாடியும் உன் முந்தானையப் புடிச்சே சுத்திக்கிட்டுத் திரியறான்.” என குளியலறைக்குத் தள்ளிக் கொண்டு போனான் விஷ்ணு. 

“ஏன்… நீங்க மட்டும் கல்யாணத்துக்குப் பின்னாடியும் உங்க அம்மா முந்தானையப் புடிச்சு சுத்தலையா?” உள்ளே இழுத்துக் கொண்டு வந்தவனிடம், முறுக்கிக் கொண்டு கேட்க,

“நீ முந்தானையக் கொடுத்துருந்தா, ஏன் எங்க அம்மா முந்தானையப் புடிச்சு சுத்தப் போறே. கல்யாணமாகி ஒரு‌மாசமா நெருங்க விட்டியாடி? கிட்ட வந்தாலே ஏதோ ரேப் பண்ண வந்தவனைப் பாத்து பயந்த மாதிரி நீயும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, என்னையும் பயமுறுத்தி என்ன ஆட்டம் காட்டினே?”

“ஐயே… போங்க மாமா… இன்னும் அதையே சொல்லிக் காட்டுங்க.” இப்பொழுதும் அந்தநாள் நினைவில்  நாணப்பூ பூத்தவளை, நேரம் கடத்தாமல்  ஆவலோடு கொய்தான் கணவன்.

“ஆரம்பத்துல தான் நான் பயந்தேன். அதுக்குப் பின்னாடி, எல்லாம் முடிஞ்சு… ஒருவாரமா மந்திருச்சு விட்ட கோழியாட்டமே சுத்தி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கினது யாராம்?” எனக் கேட்டு, கட்டிக்கொண்டவனைக் கேலி செய்ய,

“என்னையவா மந்திருச்சு விட்ட கோழின்னு சொல்ற. இன்னைக்கி உன்ன சிக்கன் சிக்ஸ்டிஃபை போடல…” என்றவாறு குளியலறைக் கதவை இழுத்துச் சாத்தினான்.

விஷ்ணு, காவேரிக்கு சித்தி மகன். ஒன்றுவிட்ட தம்பிமுறை. கொஞ்சம் நொடித்துப் போன குடும்பம் தான். தந்தையும் இல்லை. அதனால் தான் தந்தையில்லாமல் அந்த வயதில் பொறுப்புகளை சுமந்த சக்தியை மிகவும் பிடித்துப் போனது விஷ்ணுவிற்கு. பொருளாதார உதவி செய்ய முடியவில்லை எனினும், தக்க சமயத்தில் ஆறுதல் கூறி உறுதுணையாக இருந்தான். பவானிமீது ஒருதலையாக ஆசை இருந்தது விஷ்ணுவிற்கும். அவனது தகுதி அதற்குத் தடையாக இருந்தது. அன்றைய சூழ்நிலைக்கு வேண்டுமானால் காவேரியின் குடும்பம் வசதி குறைந்து இருக்கலாம். ஆனால்… அவர்கள் முன்பிருந்த வசதியை எண்ணி பெண்கேட்கத் தயங்கினான் விஷ்ணு. அப்பொழுது அவனுக்கு வேலையும் இல்லை. வேலைக்கான குரூப் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தான். ஸ்பொர்ட்ஸ் கோட்டாவில் இரயில்வேயில் வேலை கிடைத்தது. காவேரியும் பவானிக்கு மாப்பிள்ளை தேட… அன்னையிடம் விஷ்ணுவை நினைவூட்டியது சக்தி தான். 

பவானிக்கும் மறுக்கும் காரணம் இல்லை. ஆனால் தன் தம்பியைப் பிடித்ததால் தான் தன்னைக் கல்யாணம் செய்ய சம்மதித்தார் என்ற எண்ணம் மட்டும் எப்பொழுதும் உண்டு. அதைச் சொல்லிக்காட்டியே மாமனையும் மச்சானையும் வம்பிழுப்பாள். விஷ்ணு, எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழக் கற்றவன். பவானியும் அவன் போக்கில் இயைந்து கொண்டவள். 

ஒருசேரக் குளித்து வெளியே வர, நைட்டியை மாற்றிவிட்டு, அடுப்படிக்கு வந்தாள். சப்பாத்தியைத் தேய்க்க ஆரம்பிக்க, விஷ்ணுவும் உடை மாற்றிக் கொண்டு ‌வந்தான். சூடாக கல்லில் போட்டு எடுக்க, டைனிங் ஹாலில் இருந்த சேரை இழுத்து அடுக்களையில் போட்டு சாப்பிட ஆரம்பித்தான். 

“பவானி… அன்னைக்கு கேட்டியே… அந்தப் பொண்ணு யாருன்னு.” சப்பாத்தியைப் பிய்த்து வாயில் வைத்துக் கொண்டே கேட்க,

“யாரு… நம்ம கடையில வேலை பாக்குற பொம்மியா?”

“ஆமா… அந்தப்புள்ள தஞ்சாவூரு தான். நானும் சக்தியும் அவங்க மில்லுக்கு ஒருதடவை போயிருக்கோம்.”

“அப்படினா… இங்க என்ன பண்றாங்க?”

“அதான் தெரியல. ஆனா‌ அப்பவே உன் தம்பி அந்தப் புள்ளய சைட் அடிச்சான்.”

“வயசுப் பையன் அப்புடி இப்புடி பாத்திருப்பான்.”

“ஆனா இப்பவும் பாக்குறான்னு தோணுது.”

“எதை வச்சு சொல்றீங்க?”

“அந்தப்புள்ளைய பில்லிங் செக்ஷனுக்குப் போடப் போறானாம். நெல்லு லோடு வந்திருச்சுல்ல. இனி மில்லுலையும் ஆள் இருக்கணும். அதனால ஸ்டோர்ல நம்பிக்கையான ஆளா உக்கார வைக்கணும்னு சொன்னான்.”

“இதைப்பத்தி அம்மாகிட்டப் பேசினானா?”

“நானும் இதைப்பத்திக் கேட்டேன். சொல்லிக்கலாம் மாமா… அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கனு சொன்னான்.”

“அவனுக்கு ஆசை இருந்தா சொல்ல வேண்டியது தானே?”

“எனக்கு ஒன்னு புரியல பவானி. தஞ்சாவூர்ல ஓரளவுக்குப் பெரிய குடும்பம் அவங்களது. அதைவிட்டு இங்க ஏன் வந்தாங்க?”

“ஏன்… என் தம்பி மட்டும் என்னவாம். இப்பவும் திருச்சியில அவன் பேரைச் சொன்னா நாலு பேருக்குத் தெரியற அளவுக்கு வளந்திருக்கான்.”

“உடனே சண்டைக்கு ரெடியாகாதே. சக்தியை நான் கொறச்சு சொல்லல. சொத்து சுகத்தை விட்டுட்டு இங்க ஏன் வந்து இருக்காங்கன்னு யோசனையா இருக்கு?”

“எவ்வளவு பெரிய ஆளுகளா இருந்தா என்ன மாமா? பொண்ணு வச்சிருந்தா கட்டிக் கொடுக்கணும் தானே. என் தம்பியும் இப்ப ஒன்னும் கொறஞ்சு போயிறல. அந்தப் பிள்ளைக்கு கல்யாணம் பாத்தாங்கனா, நாமளும் கேட்டுப் பாப்போம். இப்ப யாரு‌ மாமா விவசாயத்த நம்பி இருக்கா? அதுல என்ன பெருசா வந்துறப்போகுது. உழுதவன் கணக்கு உழக்கு கூட காணாது.”

“அதுவும் சரித்தான்.” என்றவன் தட்டை சிங்கில் போட்டுவிட்டு‌ கை கழுவினான்.

               **********************

கேட் திறக்கும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தார் காவேரி. பவானி வண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே வருவது தெரிந்தது.

“ம்மா…” குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்த மகளை,

“வா பவானி. புள்ள ஸ்கூலுக்குப் போய்ட்டானா? என வரவேற்றார் காவேரி.

“அவனை ஸ்கூல்ல விட்டுட்டுத் தாம்மா வர்றே. என்ன பண்றீங்க?”

“மதியத்துக்கு சமைக்கணும். ரெடி பண்ணலாம்னு அடுப்படிக்குப் போனே. நீ வந்துட்ட.”

“சோறு மட்டும் வடிம்மா. மாசிக்கருவாடு போட்டு குழம்பு வச்சே. சக்திக்குப் புடிக்குமேனு எடுத்துட்டு வந்திருக்கே.”

“அப்ப… வேல மிச்சம். ரசம் வச்சு தொட்டுக்க மட்டும் ஏதாவது செஞ்சா போதும்.”

“இப்படி அலுத்துக்கறதுக்கு, சீக்கிரம் அவன கல்யாணம் முடிக்கச் சொல்ல வேண்டியது தானேம்மா?” மின்விசிறியை சுழலவிட்டு ஷோபாவில் அமர்ந்தவாறே கேட்க,

“நானென்னெமோ தாலி கட்டப்போறவன கையப் புடிச்சு இழுத்த மாதிரி சொல்ற. நானும் எப்ப எப்பனுதான் இருக்கே. அவன் தான் புடிகொடுக்க மாட்டேங்குறானே?”

“புடி கிடச்சுருக்கும்மா. அந்த பொம்மி புள்ளயப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” பட்டென கேட்டாள். மனதில் உள்ளதை ஒழித்துப் பேசத் தெரியாது பவானிக்கு. சரியென்று பட்டதைப் பட்டெனப் பேசிவிடுவாள்.

தன்னிடம் கேட்ட மகளைக் கூர்ந்து பார்த்தார். ஏதாவது இவளுக்குத் தெரிந்திருக்குமோ… என யோசனையாக, முதல் நாள் கணவன் தன்னிடம் கூறியதைத் தாயிடம் கூறினாள்.

“நம்பிக்கையான ஆளுன்னு கல்லாவுல உக்கார வைக்கப் போறானாம். உங்ககிட்ட கேட்டானா?”

முக்கியமான விஷயம் என்றால் தாயிடம் கூறாமல் செய்ய மாட்டான். இவளிடம் இல்லை எனக் கூறமுடியாது. என்ன தான் மகளென்றாலும், மகனை விட்டுக் கொடுக்கவும் முடியாது. அப்படி ஒன்றும் அவன் விபரம் புரியாதவன் இல்லை. மற்றவர்கள் சொல்லி தெரிந்து கொள்ளும் அளவிற்கு சிறுபிள்ளையும் இல்லை. அப்பனுக்கே பாடம் சொன்ன தகப்பன்சாமி‌ மாதிரி.‌

“என்னம்மா யோசனை பண்றீங்க?”

“முக்கியமான விஷயம்னா சொல்லி இருப்பான் பவானி. மில்லுல இருந்து நேரா கடைக்குப் போறதா ஃபோன் பண்ணினான். மதியம் வந்து எதுவும் சொல்லுவானா இருக்கும்.”

“அப்ப… உங்ககிட்ட சொல்லல? இதையே சொல்லலைனா. பொண்ணப்பத்தி எப்படி சொல்லப் போறான்.”

“அப்படி ஒன்னும் மறைக்கிறவன் இல்லடி. ஏதாவது காரணம் இருக்கும். பிடிச்சிருந்தா பட்டுனு வந்து சொல்லிருவான்.”

“ஆமா… நீங்க தான் மெச்சிக்கணும். தனக்கு வேணுங்கறதை எப்பம்மா அவனா சொல்லி இருக்கான்? எதுவா இருந்தாலும் மனசுக்குள்ளேயே வச்சுப்பான். நாமலா பாத்துத் தெரிஞ்சுகிட்டாதான் உண்டு. அப்பா போனதுல இருந்து அவனைப் பாக்குறோம். நமக்கு என்ன வேணும்னு தான் யோசிப்பான். அவனுக்குனு யோசிக்க மாட்டான்.”

“…….”

“மாமா சொன்னாங்கம்மா. தஞ்சாவூர்ல பெரிய குடும்பமாம். நம்ம சக்திக்கு அந்தப் பொண்ணு மேல நோக்கம் இருந்தா கேட்டுப் பாத்துருவோம்மா. அவன் ஆசைதான் முக்கியம். சின்ன வயசுல இருந்து எதையும் அனுபவிக்கல.” 

இருந்தும் காவேரிக்கு வேறு வகையான யோசனை. மகன் ஒன்றும் ஒழித்துப் பேசுபவன் இல்லை. ஆசையிருந்தால் இந்நேரம் சொல்லி இருப்பான். அன்று கேட்டதற்கும் பேச்சை மாற்றிவிட்டான். 

அவன் யோசிப்பதே அவளது விருப்பத்திற்காகத் தான் என்பது இவர்களுக்கு எங்கே தெரிகிறது.

“நம்ம ரெண்டு பேரும் பேசி என்னாகப் போகுது. அவன் வரட்டும்… கேக்கலாம். உனக்கு காஃபி போடவா?” என மகளிடம் கேட்க,

“நீங்க இருங்க… ரெண்டு பேருக்கும் நான் போட்டு எடுத்துட்டு வர்றே.” என பவானி அடுக்களை சென்றாள்.

இன்று தம்பியின் ஆசை தான் முக்கியம் எனக் கூறுபவள், உண்மை தெரிந்து… நாளையும் இதே வார்த்தையைக் கூறுவாளா என்பது சந்தேகமே. 

“ம்மா… சமையல் பண்ணி எடுத்துட்டு கடைக்குப் போகவா?”

அவளுக்கு ஒரு ஆர்வம். தம்பி மனதில் என்னவென்று உடனே தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள்.

“எதுக்கு…” என காவேரி இழுக்க,

“இந்த கருப்பட்டி பயலக் கேட்டா ஏதாவது தெரியும் மா.”

“ஏன்… உனக்கு வேண்டாத வேலை?”

“எது… என் தம்பி கல்யாணம் எனக்கு வேண்டாத வேலையா?”

“அது இல்ல… அடுத்தவங்கள நோட்டம் விடுறது வேண்டாத வேலை.”

“எனக்கு அவன் தானே மாப்பிள்ளை பாத்தான். அவனுக்கு நான் தான் பாப்பேன்.”

“நல்லா பாரு… வேண்டாங்கல. ஆனா அவசரப்பட வேண்டாம். அவனா வந்து சொல்லட்டும்.” 

இதுதான் அனுபவம். அவளது வயது எதை ஒன்றையும் உடனே தெரிந்து கொள்ள வேண்டும் எனப் பரபரத்து. காவேரியின் அனுபவம் எதையும் ஆறப்போட்டு செய்ய வேண்டுமென யோசித்தது.