மகிஷவர்த்தினி 1

ஃப்ராங்ஃப்ரட்(Frankfurt) குத்துச்சண்டை பயிற்சி மையம்,

அரங்கம் முழுவதும் மயான அமைதி. அங்கு இருப்பவரின் கவனமும், பார்வையும் முன்னே இருந்த குத்துச்சண்டை வளையத்திலே இருந்தது. அந்த வளையத்தினுள் இருவர் இரு மூலையில் நின்றிருந்தனர்.

“ரெட் ஆர் யூ ரெடி?” நடுவர் கேட்க, சிவப்பு பனியன் அணிந்த நபர் தயார் என்று தலையாட்டினார்.

“ப்ளூ ஆர் யூ ரெடி?” நடுவர் கேட்க, நீல பனியன் அணிந்த நபர் தயார் என்று தலையாட்டினார்.

நடுவர் விசில் ஊத, முதல் சுற்று ஆரம்பம் ஆனது. எடுத்தவுடனே நீல பனியன் அணிந்த நபர் ஆக்ரோஷமாகத் தாக்க ஆரம்பிக்க, லாவகமாகச் சிவப்பு பனியன் அணிந்த நபர் அதைத் தடுத்தார். பின் சிவப்பு பனியன் அணிந்த நபர் நீல பனியன் அணிந்த நபரின் முகத்தில் குத்தினார். நீல பனியன் சற்று தடுமாற இதைப் பயன்படுத்திக் கொண்ட சிவப்பு பனியன் அவரின் தோள்பட்டையில் ஓங்கிக் குத்த, நீல பனியன் கீழே விழுந்துவிட்டார். நடுவர் ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தார். நீல பனியன் தட்டு தடுமாறி எழுந்திருக்க நேரம் முடிந்தது. சிவப்பு பனியன் அணிந்த நபர் முதல் சுற்றின் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் கை தட்டி ஷா ஷா என்று கரகோஷம் எழுப்பினர்.

“மியா உன்னோட பவர் என்னாச்சு. அவகிட்ட போய் அடிவாங்கிட்டு இருக்க. இது என்ன விதிமுறைப் படி நடக்கிற போட்டியா? இல்லைல உன் இஷ்டத்துக்கு அவளை நீ அடிக்கலாம். நீ எவ்ளோ பெரிய வீராங்கனை. போயும் போய் இவகிட்ட!” மியா என்று அழைக்கப்பட்டவளின் நண்பர்கள் அவளை ஏத்திவிட, மியாக்கு கோவம் வந்துவிட்டது.

வேகமாக எழுந்து அடுத்த சுற்றுக்குத் தயாராகி வந்தாள் மியா. இரண்டாவது சுற்று ஆரம்பமானது. இந்தச் சுற்றில் மியா இன்னும் ஆக்ரோஷத்துடன் அடிக்க, ஆசால்டாக இருந்த ஷா இந்தச் சுற்றைக் கோட்டைவிட, மியா வெற்றிபெற்றாள். மியா ஷா வைப் பார்த்து தன் நடுவிரலைக் காட்ட ஷாகு பயங்கரக் கோவம் வந்துவிட்டது. ஷா மியாவை தாக்கப் போக, அவளின் நண்பர்கள் அவளைப் பிடித்துக் கொண்டனர்,”ஷா அவ உன்னை டென்ஷனாக்க பார்க்குறா. நீ கூல்லா இரு. மூச்சை இழுத்து விடு. ஹன்னா பத்தி மட்டும் யோசி.” அவளை அமைதிப் படுத்த ஷா சற்று அமைதியாகி அடுத்த போட்டிக்குத் தயாராகி வந்தாள்.

இப்பொழுது போட்டி சூடு பிடித்தது. பார்வையாளர்களுக்கும் யார் வெற்றுப் பெறுவார்கள் என்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்றாவது சுற்றின் முதல் நிமிடம் ஷா கொஞ்சம் தடுமாறினாலும் இரண்டாவது நிமிடம் திருப்பித் தாக்க, அந்தச் சுற்றிலும் வெற்றியை ஈட்டீவிட்டாள் ஷா. மியாவைப் பார்த்து இப்பொழுது ஷா நக்கலாகச் சிரிக்க, மியாக்கு எப்படியாவது நான்காவது சுற்றை வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற வேகம் வந்தது.

நான்காவது சுற்று ஆரம்பமாக, இப்போது இன்னும் போட்டி விருவிருப்பாக இருந்தது. ஒன்றரை நிமிடம் எதிர்த்துத் தாக்காமல் ஷா குத்து வாங்க, தமிழ் சினிமாவில் வரும் ஹீரோக்கள் போலப் பல அடிகள் முதலில் வாங்கிக் கடைசியில் தெம்பாக அடிப்பது போல ஷா விட்ட ஒரே குத்தில் சுருண்டு விழுந்தாள் மியா. நடுவர் ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தார். ஆனால் மியா எழுந்திருக்கவில்லை. அதனால் நாக் அவுட் முறையில் ஷா வெற்றி பெற்றதாக அறிவிக்க, அவளின் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் ஷாவை சுற்றிக் கொண்டனர்.

அப்பொழுது ஒலிபெருக்கியில்,”வாழ்த்துக்கள் ஷா வெற்றி பெற்றதற்கு.” தொகுப்பாளர் கூறினார்.

ஷா தன் தலைக்கவசம், வாய்க்கவசம், கையுறை என்று அனைத்தையும் கலட்டி தன் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு மியாவிடம் சென்று,”இதுக்கு தான் இந்த ஷாகிட்ட எந்த வம்பும் வச்சுக்க கூடாதுனு சொல்றது. எவ்ளோ தைரியம் இருந்த ஹன்னாவை அடிச்சுருப்பா. அதுக்கு இது தான் உனக்குச் சாம்பிள். இனிமேலாவது என் நண்பர்கள்கிட்ட வாலாட்டாம இரு. இல்லாட்டி சொல்லமாட்டேன் செஞ்சுடுவேன்.” என்று கூறிவிட்டுத் திரும்பியும் பார்க்காமல் தன் நண்பர்களுடன் வெளியே வந்துவிட்டாள். மியா போகும் ஷாவை கொலை வெறியுடன் முறைத்துப் பார்த்தாள்.

வெளியே வந்த நண்பர்களில் எல்சா,”ஷா ஷா சூப்பர். நீ கலக்கிட்ட. அந்த மியா முகத்தைப் பார்க்கனுமே ஹா ஹா.”

“ஆமா ஷா அவளால இப்போ நம்ம ஹன்னா மருத்துவமனையில இருக்கா. நீ அவளோட காலையாவது ஒடச்சுருக்கனும்.”

“இப்போ மட்டும் என்ன ஜூடித்? அவளோட கையை உடைச்சுட்டு தான் வரேன்.”

“என்ன சொல்ற நீ?”ஆச்சரியத்துடன் கேட்டான் பென்.

“ஆமா நான் அவ தோள்பட்டைல தான் நிறையக் குத்து விட்டேன். அதுவும் கடைசியா விட்ட குத்து ரொம்ப ஸ்ட்ராங்கா குடுத்தேன். அதான் அவளால எந்திரிக்க முடியலை. அவ கை இந்நேரம் உடஞ்சுருக்கும். கண்டிப்பா கட்டுப் போட்டே ஆகனும்.”

“உண்மையாவா! இதுக்கு தான் ஷா நீ வேணும்னு சொல்றது.” சந்தோஷத்துடன் கூறினான் ஜோனஸ்.

“பின்ன நம்ம ஹன்னா என்ன தப்பு பண்ணானு அவளை அவ அப்படி அடிச்சா? அதுக்கு திருப்பித் தராம நான் எப்படி இருக்கு முடியும்?”

“நம்ம க்ரூப்லயே ரொம்ப தைரியமான பொண்ணு ஷா தான்.”

“ஏய் எல்சா உனக்கு இப்போ ட்ரீட் வேணும். அதுக்காக ஷாகு ஐஸ் வச்சுட்டு இருக்க. சரியா.”ஜோனஸ் கிண்டலடிக்க,

“பாரு ஷா இவன் எப்படிப் பேசுறானு. நம்மலாம் அப்படியா பழகியிருக்கோம்.” எல்சா சிணுங்க,

“அட விடு ஜோ, அந்த மியாவுக்குத் திருப்பிக் குடுத்ததுல நான் சந்தோஷமா இருக்கேன். அதனால இந்தச் சந்தோஷத்தை நாம கொண்டாடியே ஆகனும். வாங்க க்ளப்கு போகலாம்.”

“ஷா உண்மையைத் தான் சொல்றியா. இப்போ மணியைப் பார்த்தீயா? உன்னோட பாடி கார்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான். நாம நாளைக்குப் போகலாம்.” மறுத்து பென் கூற,

“ஏய் அவன் ஒன்னும் பாடி கார்ட் இல்லை நம்ம ஷாவோட தம்பி.”

“ஏய் ஜூடித் என்ன உன்னோட டோன்னே சரியில்லை. அவன் ஷாக்கு மட்டும் தம்பியில்லை. நம்மளுக்கும் தான்.” ஜோனஸ் கூற,

“உங்க எல்லாருக்கும் தான் அவன் தம்பி. நான் அப்படிச் சொன்னது இல்லையே.”

“ஜூ என்கிட்ட நீ அடி வாங்க போற.” கோவத்துடன் ஜோன்ஸ் கூற,

“நான் அவனை லவ் பண்ணா உனக்கு என்னடா வந்துச்சு?”

“நீ அவனை எப்படி லவ் பண்ணலாம்? அவன் நம்மைவிட ஐந்து வயசு சின்னப் பையன்.”

“ஸோ, எனக்கு அதலாம் பிரச்சனையே இல்லை. ப்ரணவ்கு ஓகேனா எனக்கு டபுள் ஓகே.”

“ப்ச் ஏய் சொன்னா புரியாதா உனக்கு? எதுக்கு இப்படிப் பண்ற நீ?”

“நீ பண்றது தான் சரியில்லை. நான் யாரை லவ் பண்ணா உனக்கு என்ன வந்துச்சு?”

“பிகாஸ் ஐ லவ் யூ.” ஜோனஸ் கூற, ஜூடித் சந்தோஷத்துடன் அவனைக் கட்டிக் கொண்டு,”இதைச் சொல்ல உனக்கு இத்தனை நாளா?” என்று கேட்க, அவனும் அவளைக் கட்டிப் பிடித்து இதழில் முத்தம் கொடுத்தான்.

நண்பர்கள் அனைவரும் ஹோ என்று கத்தி ஆர்ப்பரித்தனர்.

“மியா கை உடஞ்சதுக்கு அப்புறம் நம்ம க்ரூப்ல இன்னொரு லவ் ஜோடி உருவானதுக்குக் கண்டிப்பா கொண்டாடியே ஆகனும். எதுவும் சொல்லாம வாங்க க்ளப்புக்கு போகலாம்.”

“எல்சா நீ இப்போ குடிக்கனும். அதுக்கு உனக்கு ஒன்னுக்கு இரண்டு ரீசன் கிடைச்சுருச்சா. வா போகலாம் உன் ஆசையை எதுக்கு கெடுக்கனும்.”பென்னும் கிண்டலடிக்க, சந்தோஷமாக எல்லாரும் பக்கத்தில் உள்ள நைட் க்ளப்பிற்கு சென்றனர்.

ஷா தவிர அனைவரும் தங்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்தனர்.

“ஷா நீ நாங்க பண்ற எல்லாமே பண்ற, ஆனால் குடிக்கச் சொன்னா மட்டும் குடிக்க மாட்டீங்கற. ஏன் அப்படி?”

“எல்சா நான் என்ன தான் ஜெர்மனில வளர்ந்தாலும் தமிழ் கலாச்சாரத்துல தான் அம்மா என்னை வளர்த்தாங்க. தமிழ்நாடுல ஆண்கள் குடிக்கிறதே பாவம். அப்புறம் எப்படிப் பெண்கள் குடிப்பாங்க? ம்ஹூம் அதுக்கு சான்ஸே இல்லை. ஏன் என்னோட டாட் கூட ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டார்.”

“ம் அதான் தெரியுமே. அதனால தான் எந்தப் பார்ட்டியும் உங்க வீட்டுல நாம கொண்டாடினது கிடையாது.” சோகத்துடன் பென் கூறினான்.

“ஆமா. ஷாவோட அம்மா எவ்ளோ ஸ்வீட்டோ அதே அளவு அவங்க ரொம்ப கோவப்படுவாங்க ட்ரிங்க்ஸை பார்த்தா.”

“அது என்னவோ உண்மை தான் எல்சா.” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்களைத் தேடி ப்ரணவ் அங்கு வந்தான்.

“ஷா உன்னோட பாடி கார்ட்.” பென் கூற, ஷா அவனைப் பார்த்து வரேன் என்று சைகை செய்ய, ப்ரணவ் வெளியே சென்றுவிட்டான்.

“கரெக்ட்டா பதினொரு மணிக்கு எங்க இருந்தாலும் வந்துடுறான்.” எரிச்சலுடன் ஜோனஸ் கூறினான்.

“ஆமா, ஷா தான் பத்து மணியாகிடுச்சுனா ப்ரணவ்கு மெசேஜ் பண்ணிடுறால. அதான் கரெக்ட்டா வந்துடுறான்.” எல்சா கூறினாள்.

“ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான் ஷா. உங்க அம்மா இப்படி உன்னைச் சின்னப் பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ணக் கூடாது.” இது ஜூடித்.

“கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவளைச் சும்மா ஏத்திவிடாதீங்க.” பென் கோவமாகக் கூற,

“பென் நாங்க உண்மையைத் தான் சொன்னோம்.”

“ஜூ சொல்றது கரெக்ட் தான். ஏன் நம்ம பேரனட்ஸ் யாராவது இப்படிப் பண்றாங்களா?” என்று ஜோனஸ் ஜூடித்கு ஒத்துப் பாட, ஷாகு அதற்கு மேல் அங்கு உட்கார முடியவில்லை. வேகமாக அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள்.

“ப்ச் அவங்க தான் இப்படிப் பேசுறாங்கனா நீயும் ஏன் ஜோனஸ் இப்படிப் பேசுற? நம்ம கலாச்சாரம் வேற இந்தியர்களோடது வேற, அவங்க இப்பவும் ஜாய்ன்ட் ஃபேமிலியா தான் இருக்காங்க. அதைத் தப்பு சொல்ல நமக்கு எந்த ரைட்ஸும் இல்லை. தன் குழந்தைக்கு அறுபது வயசானாலும் தப்பு செஞ்சா அம்மா கேட்கத் தான் செய்வாங்க. பார் இப்போ ஷா கோவமா போறா.” கடுமையாக பென் கூற, மற்றவர்களுக்கும் தாங்கள் கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று தோன்றியது.

—–

“ப்ச் அம்மா சொன்னா நீயும் ஏன் இப்படிப் பண்ற ப்ரணவ்?”

“அக்கா என்ன பேசுற நீ? அம்மா உனக்காகத் தான சொல்றாங்க.”

“அப்படி என்ன எனக்காகச் சொல்றாங்க?”

“உனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது? ஒரு ஸேஃப்டிகாக தான் நான் வரேன். இதுல என்ன தப்பிருக்கு?”

“அதுக்கு தான் பாக்சிங் கத்துக்கிட்டேனே! அது போதாதா? நீ வந்தே ஆகனுமா?”

“நீ அதை அம்மாகிட்ட தான் கேட்கனும். சரி அதை விடு. அப்படி உனக்கு அம்மா பண்றது தப்புனா எதுக்கு எனக்கு நீ பத்து மணி ஆனால் மெசேஜ் பண்ற?”

“வேற வழியில்லை. இல்லாட்டி யார் அம்மா பேசுறது எல்லாம் உட்கார்ந்து கேட்டுட்டு இருப்பா? எனக்கு அந்த அளவு பொறுமை இல்லை.”

“அக்கா எப்போல இருந்து நீ இப்படி மாறின? முன்னாடிலாம் நீ இப்படிக் கிடையாதே!” ப்ரணவின் கேள்விக்கு ஷாவிடம் பதில் இல்லை. அமைதியாக இருந்தாள்.

“இந்தக் கேள்விக்கு மட்டும் நீ எப்புவம் பதில் சொல்ல மாட்டீங்கிற அக்கா. எனக்கு என்னமோ ஸ்ரீ போனதுல இருந்து தான் இப்படி இருக்கனு தோணு…” ப்ரணவ் முடிக்கக் கூட இல்லை,”வண்டியை நிப்பாட்டு ப்ரணவ்.” ஷா கத்த, ப்ரணவ் அதிர்ந்து காரை நிப்பாட்ட, ஷா இறங்கி அவள் பேசாமால் நடக்க ஆரம்பத்திவிட்டாள். அப்பொழுது தான் ப்ரணவ்கு ஸ்ரீ பத்தி பேச்சை எடுத்திருக்கக் கூடாது என்று தோன்ற, வேகமாகச் சென்று ஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு,”அக்கா சாரி. இனிமே அவங்களை பத்தி பேசமாட்டேன். ப்ளீஸ் நீ வா கார்லயே போகலாம்.” ஷா எதுவும் கூறாமல் அவள் நடக்க, ப்ரணவ் முழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

சிறிது தூரம் தான் அவர்கள் வீடு. ஷா நடந்தே அவர்கள் வீடு வர, ஷா மற்றும் ப்ரணவின் அம்மா நந்தினி அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் ஷாக்கு இன்னும் கோவம் வர,

“ஏன் நடந்து வர நீ?” நந்தினி ஷாவை கேட்க, எதுவும் பேசாமல் அவரைக் கடந்து உள்ளே சென்றாள்.

“என்னாச்சு ப்ரணவ்? அவ ஏன் கோவமா போறா? அவ நடந்து வரா நீ கார்ல வர?”

“ஸ்ரீ பத்தி பேசிட்டேன் மா. ரொம்ப கோவமா இருக்கா.” என்று ப்ரணவ் கூற,

“ப்ச் இன்னும அவ அந்த நினைப்புல தான் இருக்காளா?” கோவமாக நந்தினி கேட்க,

“அம்மா அக்கா ஏற்கனவே கோவமா இருக்கா. ப்ளீஸ் நீங்களும் பேசி அவளை இன்னும் கோவப்படுத்திறாதீங்க.”

“எல்லாம் என் நேரம். எல்லார் வீட்டுலயும் அம்மா சொல்றது தான் கேட்பாங்க. நம்ம வீட்டுல பார் பிள்ளைங்க சொல்றதை கேட்க வேண்டி இருக்கு.” நந்தினி புலம்ப, ப்ரணவ் அவரைச் சமாதானப்படுத்த இருவரும் உள்ளே சென்றனர்.

வீட்டுக்குள் வந்த ஷா நேராகத் தன் அறைக்குச் சென்றிருந்தாள்.

நந்தினி கீழே இருந்தே,”மகி வா வந்து சாப்பிட்டு போ.” என்று கூப்பிட, ஷா எதுவும் கூறாமல் இருந்தாள்.

“மகி உன்ன தான் கூப்பிடுறேன். காதுல விழலையா?” கோவத்துடன் நந்தினி குரலை உயர்த்திப் பேச, தூங்கச் சென்ற ராகவேந்திரன் வெளியே வந்துவிட்டார்.

“என்னாச்சு நந்து? ஏன் கத்துற?”

“எல்லாம் உங்க பொண்ணால தான். பாருங்க கேட்கக் கேட்கப் பதில் பேசாமா இருக்கிறதை.”

“நந்து அவளே டையர்டா வந்திருப்பா. நீ விடு. காலைல பேசிக்கலாம்.”

“அவ மேட்ச் ஆடிட்டு வந்துருக்கா போல, முகம் காயமா இருந்துச்சு. வேற எங்கலாம் அடிப் பட்டுச்சோ தெரியலை. அப்புறம் அவ சாப்பிடவே இல்லை.”

“சாப்பிட்டுத் தான் வந்திருப்பா. அவ மேட்ச் போறது என்ன புதுசா? காயத்துக்கு அவ மருந்து போட்டுப்பா. நீ போனா அதுக்கும் கத்த தான் செய்வா. நீ வந்து தூங்கு வா. ப்ரணவ் உன் ரூம்கு போ.”

ப்ரணவ் அவன் அறைக்குச் செல்ல மேலே போக, எதிரே ஷா ஒரு பேக்குடன் கீழே வந்தாள்.

“எங்கடி போற?”

“நான் எங்கேயோ போறேன். உங்களுக்கு என்ன வந்துச்சு?”

“எனக்கு என்ன வந்துச்சா? நான் உன் அம்மா.”

“அம்மானா அதுக்கு என்ன இப்போ? அம்மானு ஒரே காரணத்துக்காக என்னை ரூல் பண்ணலாம்னு நினைக்காதீங்க. எனக்கு இருபத்து ஐந்து வயசாகிடுச்சு. ஆனால் நீங்க என்ன அஞ்சு வயசு குழந்தை மாதிரி ட்ரீட் பண்றீங்க. இந்த உலகத்துல பிறந்த எல்லாப் பொண்ணுங்களும் ஒரு நாள் அம்மா ஆவார்கள். நீங்க மட்டும் ஸ்பெஷல் கிடையாது. ஏதோ அதிசயமா நீங்க மட்டும் அம்மா மாதிரி பேசாதீங்க.”

“என்ன பேச்சு பேசுற நீ? அம்மானாலே ஸ்பெஷல் தான். நீ சொன்ன மாதிரி எல்லாரும் அம்மா ஆவார்கள் சரி. அம்மாக்குனு சில கடமைகள் இருக்கு. உங்களை இந்த உலகத்துக்குக் கொண்டு வரது மட்டுமில்லை அம்மாவோட வேலை, தன் பிள்ளைங்களை ஒழுக்கமா இருக்கவும் சொல்லனும்.”

“இப்போ நான் என்ன ஒழுக்கம் கெட்டு பண்ணேன்.”

“இதோ இப்படி எதிர்த்து பேசுறதே ஒழுக்கமில்லா செயல் தான்.”

“நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றது எதிர்த்துப் பேசுறதா?”

“பதில் சொல்றது எதிர்த்துப் பேசுறது கிடையாது. ஆனால் இப்படி ஏட்டிக்குப்போட்டியா பேசுறல அதைத் தான் சொல்றேன்.”

“உங்ககிட்ட பேச என்னால முடியாது. அதான் நான் பேசாமா போனேன். நீங்க தான் இப்போ என்னை இழுத்துச் சண்டை போடுறீங்க. போய்ப் பாருங்க என் ஃப்ரண்ட்ஸ்லாம் எவ்ளோ ஃப்ரீயா இருக்காங்கனு. ஆனால் நான் இன்னும் நீங்க சொல்றதை தான் செஞ்சுட்டு இருக்கேன். அதுக்கே இவ்ளோ பேச்சு வாங்குறேன்.”

“அதுல இப்போ என்ன தப்பு? உன் ஃப்ரண்ட்ஸ் தனியா இருக்காங்கனா அது அவங்க வளர்ந்த கல்ச்சர். ஆனால் நாம அப்படிக் கிடையாது. போய் இந்தியால பார் இன்னும் கூட்டுக் குடும்பமா தான் வாழ்றாங்க.”

“நாம இந்தியர்களா இருக்கலாம். ஆனால் இது இந்தியா கிடையாது இது ஜெர்மனி. ஊரோடு ஒத்து வாழ்னு கேள்விப் பட்டது இல்லையா?”

“ஊரோடு ஒத்து வாழ் பழமொழிலாம் சரி. அன்னம் எப்படிப் பாலில் இருந்த தண்ணீரை விடுத்துத் தனக்குத் தேவையான பாலை மட்டும் எடுத்துக்குதோ நம்மலும் எது நமக்குச் சரியோ அதை மட்டும் தான் எடுத்துக்கனும். இருக்க எல்லாத்தையும் எடுத்துக்க கூடாது.”

“இப்போ உங்க பிரச்சனை என்ன? எதுக்கு இந்த ராத்திரி நேரத்துல சண்டை போடுறீங்க?”

“ராத்திரி நேரம்னு இப்போ தான் தெரியுதா? ஏன் நீ வெளில போகும் போது தெரியலையா!”

“ப்ச் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. சும்மா பேசிகிட்டு.

“என்னது சும்மா பேசுறேனா? பார்த்தீங்களா எப்படிப் பேசுறானு?”

“இப்போ எதுக்கு அவரை இழுக்குறீங்க? நாம இரண்டு பேரும் தான பேசிட்டு இருக்கோம்.”

“ஏன் அவர் உன் அப்பா. அவரைக் கூப்பிட்டாம யாரை நான் கூப்பிடுவேன். அப்படி கூப்பிடுறதுல உனக்கு என்ன பிரச்சனை.?”

“பிரச்சனை தான். ஏனா அவர் என்னைப் பெத்த அப்பா ஒன்னுமில்லையே.” என்று மகி கூற, கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. நந்தினி வேகமாகச் சென்று அவளை ஓங்கி அறைந்தார். ஷா அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க,

“நந்து என்ன பண்ற நீ?” ராகவ் பதறி கேட்க,

“என்னையவே அடிச்சுட்டீங்கள நீங்க. இதுக்கு மேல நான் இங்க இருக்க மாட்டேன்.”

“போடி. நீ வெளில போய்க் கஷ்டப்பட்டா தான் உனக்கு என் அருமை புரியும்.”

“நான் எதுக்கு கஷ்டப்படப் போறேன்? என்னைப் பெத்த அப்பாகிட்ட தான் போகப் போறேன்.” என்று ஷா கூற, மேலும் அதிர்ச்சி அவர்களுக்கு.

“அக்கா என்ன சொல்ற நீ?” என்று ப்ரணவ் கேட்க, ஷா முறைத்த முறைப்பில் அமைதியாகி விட்டான். நந்தினி அப்படியே அதிர்ச்சியில் மயங்கிவிட்டார். ஷா அதைப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் ராகவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள். ராகவ் எதுவும் பேசவில்லை. ப்ரணவ் தான் பயந்துவிட்டான் அம்மா மயக்கத்துக்குச் சென்றதைப் பார்த்து.

“ப்ரணவ் அம்மாக்கு ஒன்னுமில்லை. நீ போய்க் கார் எடு. நாம ஹாஸ்பிட்டல் போகலாம்.”

“டாட் அக்கா ஏன் இப்படிப் பண்றா? அம்மா மயக்கமாகிட்டாங்க. கண்டுக்காமா அவள் பேசாமா போறா! அவளுக்கு அம்மா மேல பாசமே இல்லையா?” ப்ரணவ் வருத்தப்பட

“அவளைப் பத்தி பேச எதுவுமில்லை ப்ரணவ். நமக்கு இப்போ அம்மா தான் முக்கியம். நீ முதல்ல போய்க் கார் எடு.” ராகவ் கூற, ப்ரணவ் வேகமாகப் போய்க் கார் எடுத்தான். ராகவ் நந்தினியைத் தூக்கிக் கொண்டு காரில் படுக்க வைக்க, ப்ரணவ் மருத்துவமனை நோக்கி காரை விட்டான்.

நந்தினிக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, ஷாவோ இந்தியா நோக்கி விமானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

வருவாள்.