மகிஷவர்த்தினி 2

20211105_085322-513d3573

மருத்துவமனையில் கண் விழித்த நந்தினியின் கண்கள் அலைபாய, அதைப் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரணவ் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு,”அம்மா” அவனின் குரல் கேட்டு உள்ளே வந்த ராகவேந்திரன்,”ப்ரணவ் போய் டாக்டரை கூட்டிக் கொண்டு வா.” அவனை அனுப்பி வைத்தவர் நந்தினியிடம் வந்து,”நந்து எதைப் பத்தியும் நீ கவலைப்படாத. எனக்கு நீ முக்கியம்.”

“ராகவ் உண்மையிலே மகி அந்த ஆளைத் தேடி இந்தியா போய்விட்டாளா?”

“நந்து இப்போ நீ கவலைப்படக் கூடாது. எந்த டென்ஷனும் எடுத்துக்கொள்ளக் கூடாதென டாக்டர் சொல்லியிருக்கிறார். நீ தூங்கு.”

“ராகவ் நான் என்ன அவ்ளோ கொடுமை படுத்துகிறேனா? நான் செய்தது எல்லாம் அவள் நல்லதுக்கு தான். ஆனால் அதைப் புரிந்துக் கொள்ளாமல் அவள் ஏன் அப்படி பேசுனா? அந்த ஆளை அவள் பார்த்தது கூட கிடையாது. அவள் கண்ணில் எதுவும் படக் கூடாதெனத் தான் நான் எல்லாவற்றையும் எரித்தேன். அப்படியே எதாவது அவளு பார்த்திருந்தாலும் அவனை எங்கே போய் இவள் தேடுவாள்? அவள் இந்தியா போறேனு சொன்னதே எனக்கு அதிர்ச்சி. இதில் அந்த ஆளை வேற பார்க்கப் போறேன்னு சொல்றா! இல்லை நான் கேட்கிறேன் இவள் போனதும் வா மா என் அருமை மகளேனு கூப்பிட்டுப் பாராட்டிச் சீராட்டா போறானா? முதல்ல அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதே தெரியாது. ப்ச் இப்போ அவள் அங்க போய் என்ன பண்ணுவா?” நந்தினி அவர் பேசாமல் புலம்பிக் கொண்டிருக்க, ப்ரணவ் மருத்துவர் உடன் உள்ளே நுழைந்தான்.

“டாக்டர் அவ கண் திறந்ததில் இருந்து புலம்பிக்கொண்டே இருக்கா. கொஞ்சம் பாருங்கள்.”

“நீங்க கவலைப்படாதீங்க. அதலாம் ஒன்றுமில்லை. அவங்க கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருக்காங்க. இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்.” மருத்துவர், ராகவேந்திரனுக்கு தைரியம் கூறி, நந்தினி தூங்க ஊசி போட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

“அப்பா அம்மாவுக்கு ஒன்றுமாகுதுல?”

“ப்ரணவ் நீ பயப்படாத. அம்மாவுக்கு எதுவுமில்லை. நீ வீட்டுக்குப் போ. நான் அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு நாளைக்கு வரேன் வீட்டுக்கு.”

“இல்லை அப்பா நானும் இங்கேயே இருக்கேன்.”

“ப்ரணவ் நீ காலேஜ் போகனும். அப்பா சொல்றதை நீயாவது கேள்.” சிறிது கண்டிப்புடன் ராகவ் கூற,

“சரிப்பா நான் வீட்டுக்குப் போறேன்.”

ப்ரணவ் சென்றவுடன் ராகவேந்திரன் நந்தினி பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.

“நந்து அந்த ஆளுடைய புகைப்படத்தை மகி நம்முடைய அறையிலிருந்து தான் எடுத்திருக்கா. நீ எல்லாத்தையும் எரிக்கலை. ஏனா நான் நீ எரிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். அந்தப் புகைப்படத்தை அவ கண்ணுல படுற மாதிரி வைத்ததே நான் தான். அவ இந்தியா போகனும் அந்த ஆளை பார்க்கனும். அதற்குத் தான் நான் அப்படிச் செய்தேன்.” குரூரமாக தனக்குள் பேசிக்கொண்டார் ராகவேந்திரன்.

மகிஷவர்த்தினி, ஜெர்மனி ஃப்ராங்க்ஃபர்ட் நகரத்தில் வாழும் இருபத்தி ஐந்து வயது இந்தியப் பெண். பெரும்பாலான இந்தியர்களைப் போலவே ஷாவும் டஸ்கி வண்ணம் கொண்டவள் அதே சமயம் பார்ப்பவரை அவளின் அழகில் ஈர்த்துவிடுவாள். ஒல்லியும் அல்லாது குண்டும் அல்லாது தனது உயரத்துக்கு ஏற்ற எடையோடு இருப்பாள். முதுநிலை வணிக நிர்வாகம் படித்திருக்கிறாள். தன் நண்பர்களுடன் ஃப்ராங்க்ஃபர்ட் நகரத்தில் இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறாள். அவள் இந்தியா வருவது தன் தந்தையைப் பார்ப்பதற்கு அல்ல. அவளின் இந்தியா வருகையே வேறு ஒரு காரணத்திற்காக.
இப்போது சென்னை விமான நிலையத்தில் கோவை விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

இருபது வருடங்கள் முன், ஃப்ராங்க்ஃபர்ட் நகரத்தில், ஒரு வீட்டின் முன் இரண்டு வாண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தது.

“கிஷூ நீ தான் அவுட்.”

“ஸ்ரீ என்ன கிஷூ கூப்பிடாதா. என் பேர் மகிஷா.” மழலையில் கோவப்பட,

“நான் உன்னை கிஷூ தான் கூப்பிடுவேன்.”

“அப்போ பேசாத போ.” ஸ்ரீயிடம் டூ விட்டு கோவமாக மகிஷா வீட்டினுள் செல்ல, ஸ்ரீ மகிஷா பின்னாடியே குடு குடுவென ஓடியது.

“மா கொஞ்சம் இந்த லக்கேஜ் பார்த்துக்குறீயா. நான் பாத்ரூம் போய்விட்டு வந்துடுறேன்.” ஒரு பெண்மணி மகிஷாவிடம் கேட்க, கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்து,”ப்ச் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு? உங்க லக்கேஜ் பார்த்துக்க தான் நான் ஜெர்மனில இருந்து வந்தேனா?” கோவமாக அவரைப் பார்த்து வார்த்தைகளைக் கடிந்து துப்ப அந்த பெண்மணிக்குச் சங்கடமாகிப் போனது.

“மண்ணிச்சுக்கோ மா.” அவர் மேல் தப்பு இருப்பது போல் மெதுவாகக் கூறி அங்கிருந்து சென்று விட்டார். இதை ஒரு ஜோடி கண்கள் வெறுப்புடன் நோக்கியது.

அந்த பெண்மணி சென்றவுடன், சுற்றியிருந்தவர்கள் மகிஷாவை ஒரு மாதிரி பார்க்க, சிலரோ அவளைத் திட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றனர். இதையெல்லாம் பார்த்த மகிஷா,”ஸ்ரீ உன்னால தான் எல்லாமே. நீ என்னோட வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாம். நீ என்னை விட்டு போன இந்த ஐந்து வருஷத்தில் நான் மொத்தமா மாறிட்டேன். எவன் எவளிடமோ பேச்சு வாங்க வேண்டியதா இருக்கு. இதுக்கு எல்லாம் காரணம் நீ மட்டும் தான்.” கோவமாக தனக்குள்ளே பேசிவிட்டு கோவை விமானம் வந்ததற்கான அறிவிப்பு வர, விமானத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் கோவை வந்திறங்கிய விமானத்திலிருந்து மகிஷா இறங்கி வந்தாள். தன்னுடைய லக்கேஜ் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வர, ஆதித்யா கையாட்ட இவளும் சிரித்துக் கொண்டே கையாட்டினாள் அவனைப் பார்த்து.

“ஹாய் ஆதி. நீ இங்க வருவனு நான் எதிர்பார்க்கவே இல்லை.”

“எங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்த பொண்ணை நான் எப்படி தனியா வர வைக்கிறது. அது தப்பு. அதான் நானே வந்துவிட்டேன்.”

“எப்படி உங்க வீட்டு முகவரி மட்டும் வைத்துக் கொண்டு வரதுனு யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல நேரம் நீயே வந்துவிட்டாய்.”

“சரி வா போகலாம்.” மகிஷாவின் லக்கேஜை வாங்கிக் கொண்டு நடந்தான் ஆதித்யா. அவனது வண்டியின் பின்னாடி மகிஷாவின் லக்கேஜை வைத்துவிட்டு முன் சீட் கதவைத் திறந்து விட்டான் ஆதித்யா. மகிஷாவும் சிரித்துக் கொண்டே உட்கார்ந்தாள். ஆதித்யா வண்டியை ஓட்ட, வண்டி காந்திபுரம் நோக்கிச் சென்றது.

அந்த அழகிய வீட்டின் முன் வந்து ஆதித்யா ஹார்ன் அடிக்க காவலாளி வேகமாகக் கதவைத் திறந்தார். உள்ளே செல்ல செல்ல அந்த வீட்டின் அமைப்பு மகிஷாவை கவர்ந்தது. நடுவே வாகனங்கள் செல்வதற்குப் பாதை அமைத்து இருபுறமும் பச்சை பசேலென மரங்களும் வண்ண வண்ண செடிகளும் கண்களுக்குக் குளுமையாகக் காட்சியளித்தது. வீட்டின் முன்பு வந்து வண்டியை நிப்பாட்டிய ஆதித்யா, மகிஷாவிற்கு வண்டி கதவைத் திறந்துவிட்டான்.

“வாங்க மகாராணி. இந்த அடியேனுடைய மாளிகைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.”

“அச்சோ ஆதி சும்மா இரு.”

மகிஷாவின் லக்கேஜை எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு ஆதித்யா உள்ளே நுழைந்தான்.

வீட்டின் முகப்பு கூடத்தில் சாய்விருக்கையில் கால் மேல் கால் போட்டு நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவர் சம்பத் குமார்.

“டேட் இவ தான் நான் சொன்ன ஜெர்மன் ப்ரண்ட் மகிஷவர்த்தினி. ஜெர்மனில இருந்து வந்திருக்கா.”

“ஹலோ அங்கிள்.”

“ஹலோ, எத்தனை நாள் வேணாலும் நீ நம்ம வீட்டுல தங்கிக்கலாம். இது உன் வீடுனு நினைச்சுக்கோ சரியா மா.”

“கண்டிப்பா அங்கிள். நான் இங்க வந்தது கூட அதற்குத் தான்.” மகிஷா ஒரு மாதிரி குரலில் கூற, சம்பத் அவளை சந்தேகமாக பார்க்க,”என்ன மா சொன்ன?”

“என் வீடு மாதிரி நினைச்சுக்கோனு சொன்னீங்கள அங்கிள். அதைத் தான் நானும் சொல்றேன் அங்கிள்.”

“ஓ சரி மா.” சந்தேகத்துடனே அவர் கூற, அவரது திருமதி துர்கா அவருக்கு காஃபி கொண்டு வந்து தந்தார்.

“மகி இவங்க என்னோட அம்மா. அப்புறம் அம்மா இவ மகிஷா நான் சொன்ன ஜெர்மனி ப்ரண்ட்.”

“வா மா. ஆதி சொன்னான் அவனோட ஜெர்மன் ப்ரண்ட் இந்தியா சுத்தி பார்க்க வருவானு. நான் கூட ஏதோ வெள்ளைக்காரியைத் தான் கூட்டிக் கொண்டு வருவான்னு பார்த்தேன். ஆனால் நீ இந்தியப் பெண் தான் போல.”

“ஆமா ஆன்டி. அப்பா அம்மா இரண்டு பேரும் இந்தியர்கள். வேலை விஷயமா ஜெர்மன் போனாங்க. அப்படியே அங்கேயே செட்டிலாகியாச்சு ஆன்டி.”

“ஓ நல்லது மா. அப்பா அம்மா என்ன பண்றாங்க?”

“இரண்டு பேரும் ஜெர்மனியில் புகழ் பெற்ற கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்கள்.”

“பரவாயில்லையே. சரி மா பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா மா?”

“ம் இருந்தது ஆன்ட்டி.”

“சரி மா. டேய் ஆதி நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். அறை தயாராக இருக்கு. நீ கூட்டிட்டு போய் காட்டு.”

“ம் சரி மா. வா மகிஷா.” ஆதி மகிஷாவை அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் சென்றவுடன் சம்பத் துர்காவிடம்,”துர்கா அந்த பொண்ணை பார்த்தா சரியா தெரியலை.நீ கொஞ்சம் பார்த்துக்கோ. முன்னாடி மாதிரி எந்தப் பிரச்சனையும் நடக்கக் கூடாது சரியா.”

“எனக்கு அப்படி தெரியலை. இருந்தாலும் நீங்க கவலைப்படாதீங்க. கண்டிப்பா எதுவும் தப்பா இந்த தடவை நடக்காது. நான் பார்த்துக்கிறேன்.” சம்பத் துர்கா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து சென்றார்.

மகிஷாவிற்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தனர் மகிஷாவும் ஆதித்யாவும். “ஆதி உங்க அப்பாக்கு நான் வந்தது பிடிக்கவில்லையா?” முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“ஏன் அப்படி கேட்கிற மகிஷா?”

“தெரியலை ஆனால் எனக்கு அப்படி தான் தோணுது. நான் வந்தது பிடிக்கலைனா வெளிப்படையாக சொல்லிவிடு ஆதித்யா. நான் தப்பா எடுத்துக்கொள்ள மாட்டேன்.”

“அட அப்படி எல்லாம் கிடையாது மகிஷா. நீயாக கற்பனை பண்ணி அப்படிப் பேசாதே சரியா. இங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான். அப்பாவுக்கு வேற ஏதாவது வேலை பற்றிய கவலை இருந்திருக்கும். அதான் பேசியிருக்க மாட்டாங்க. போகப் போக நல்லா பேசுவார்.”

“இல்லை ஆதி நீ கவனிக்கவில்லை ஆனால் நான் கவனித்தேன். உங்க அப்பாவுக்கு நான் இங்க வந்தது பிடிக்கவில்லை. உங்க அம்மா என்கிட்ட நல்லா பேசுனாங்க. ஆனால் உங்க அப்பா, சரி விடு ஆதி உன்னுடைய அப்பா எனக்கும் அப்பா தான். நீ சொன்ன மாதிரி போகப் போக எல்லாம் சரியாகும்.” பெருந்தன்மையாக மகிஷா கூற, ஆதித்யாவுக்குச் சிறிதாகக் குற்றவுணர்ச்சியாக இருந்தது.

அவனது முகத்தைப் பார்த்த மகிஷா அவனைச் சமாதானப்படுத்துவது போல,”அட ஆதி நீ கவலைப்படாத. அங்கிள் என்னைப் பத்தி முழுசா புரிந்துகொண்டதுக்கு அப்புறம் கண்டிப்பா அவர் நல்லா பேசுவார். நீ ஃப்ரீயா விடு.”

“மகிஷா உண்மையிலே நீ க்ரேட். நான் கண்டிப்பா அப்பாவிடம் பேசுகிறேன்.”

“ஆதி நீ அப்படி எல்லாம் எதுவும் செய்துடாதா. அப்புறம் அங்கிள் என்னைத் தப்பா நினைப்பார். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இரு. அங்கிளே என்னிடம் வந்து பேசுவார்.”

“சரி மகிஷா. நான் எதுவும் சொல்லலை. ஆனால் அப்பா கண்டிப்பா உன்னிடம் நல்லா பேசுவார். அதைப் பற்றி எதுவும் யோசிக்காத. நீ டையர்டா இருப்ப அதனால கொஞ்ச ரெஸ்ட் எடு. நான் உன்னை டிஃபன் ரெடியானதும் கூப்பிடுறேன்.”

“இல்லை ஆதி. நான் தூங்கலாம் மாட்டேன். குளித்துவிட்டு நானே கீழே வரேன்.”

“சரி மகிஷா. அப்போ நான் உனக்காகக் கீழே காத்துட்டு இருக்கேன்.” ஆதித்யா மகிஷாவிடம் கூறிவிட்டு கீழே சென்றான். மகிஷா கதவைச் சாத்திவிட்டுக் குளிக்கச் சென்றாள்.

சிறிது நேரத்தில் மகிஷா கீழே வர, சம்பத், துர்கா மற்றும் ஆதித்யா டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர். மகிஷாவை பார்த்த சம்பத் முகத்தில் கண்டனம் இருந்தது. அவள் A லைன் எனப்படும் ஆடை வகையில் கையில்லாத முட்டிவரை உள்ள ஆடையை அணிந்து வந்திருந்தாள்.

“வா மா சாப்பிடலாம்.”

“வரேன் ஆன்டி.” மகிஷா ஆதித்யா பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அதைப் பார்த்த சம்பத்துக்கு ஒரு மாதிரி இருந்தது. ஏதோ எச்சரிக்க உணர்வு தோன்றியது.

“புது வீடுனு கூச்சப்படாமா நல்லா சாப்பிடு மா.”

“கண்டிப்பா ஆன்டி. சாப்பாடு விஷயத்தில் கண்டிப்பா நான் கூச்சப்பட மாட்டேன். அதுவும் இந்தியன் ஃபுட்க்கு நான் அடிமை.”

“நீ கவலையே படாதே மா. நீ இங்க இருக்கிற வரை உனக்கு வாய்க்கு ருசியா சமைத்துக் கொடுக்க சொல்றேன்.”

“சமைக்க ஆள் இருக்கா ஆன்டி?”

“ஆமா மா.”

“சூப்பர் ஆன்டி. ஆதி சாப்பிட்டு வெளியில் போகலாம்.” கட்டளையாக அவள் குரல் வர, சம்பத் அதைக் கேட்டு முகத்தைச் சுழித்து,”ஆதிக்கு வேலை இருக்கா இல்லையானு கேட்காமா நீ பேசாமா ஆர்டர் போடுற மாதிரி பேசுனா எப்படி மா. சாயந்தரம் வேணும்னா போங்க.” நாசூக்காக சம்பத் கூற, மகிஷா பார் உங்க அப்பாவை என்று ஆதித்யாவிடம் கண் ஜாடை காட்ட, ஆதிக்கே ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. கண்ணாலே அவன் மன்னிப்பை வேண்ட,

“சரி அங்கிள். ஆதி நீ வேலை முடிஞ்சதும் சொல்லு நாம போகலாம்.” மகிஷா கூற, ஆதித்யாவும் சாப்பிட்டு விட்டு,”மகி அப்பாவுக்கு நான் ரொம்ப செல்லம். நீ உரிமையாகச் சொன்னது அவருக்கு ஆர்டர் மாதிரி தெரிந்திருக்கு. பெரிசா எடுத்துக்காத மகி.”

“புரியுது ஆதி. அவருடைய உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் உனக்கு வேலை இருக்கானு கேட்காமல் பேசினது தப்பு தான். அதனால் நீ கவலைப்படாமல் உன் வேலையை முடித்துவிட்டு வா அப்புறமா நாம வெளில போகலாம்.”

“ஸோ ஸ்வீட் மகிஷா. இனிமே அப்பா உன்னை எதுவும் சொல்லாமல் நான் பார்த்திகிறேன்.” ஆதித்யா சிறு அதிருப்தியுடனே வெளியே சென்றான். மகிஷாவும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.

மதிய நேரம், மகிஷா காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு, மரங்களின் நிழலில் போடப் பட்டிருந்த மரப் பலகையில் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, விமான நிலையத்தில் வெறுப்புடன் மகிஷாவை பார்த்த அதே நபர் அந்த வீட்டினுள் நுழைந்தார். அந்த நபரைப் பார்த்த துர்கா,”அட விஷ்வா வா பா. நீ வர இராத்திரி ஆகுமென்று ஆதி சொன்னான்.”

“வேலை முடிந்தது துர்காமா அதான் சீக்கிரமே வந்துவிட்டேன்.”

“ஆதி ஓட ப்ரண்ட் மகிஷா வந்துருக்கா பா. வெளில தான் இருந்தாள். நீ பார்த்தீயா?”

“நான் யரையும் பார்க்கவில்லை துர்காமா. அப்புறம் ஆதி தான் நேத்தே சொல்லிவிட்டானே. அது எப்படி துர்கா மா ஃபேஸ் புக்ல பார்த்துப் பழகி வாட்ஸப்ல பேசின ஒரு பையன் வீட்டில் அந்த பொண்ணு எப்படித் தங்க ஒத்துக்கிட்டா? அந்தப் பெண்ணுடைய அம்மா அப்பாக் கூடவா எதுவும் கேட்கலை? ஆச்சரியமாக இருக்கு அதே சமயம் வேடிக்கையாகவும் இருக்கு.” நக்கலாக விஷ்வா கூற,

“டேய் அப்போ ஆதியை நீ கெட்டவன்னு சொல்றியா?” ஆதங்கத்துடன் கேட்ட துர்காவிடம்,”துர்கா மா நான் பொதுவா தான் கேட்டேன். சரி அதை விடுங்க இதற்குப் பதில் சொல்லுங்க, அந்தப் பொண்ணை பத்தி நமக்கு எதாவது தெரியுமா? எந்த நம்பிக்கையில் நாம தங்க வைக்கிறது?” துர்கா பதில் பேச வாய் எடுத்தவர் மகிஷா உள்ளே நுழைவதைப் பார்த்து விஷ்வாவிடம் கண்ணால் அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு,”வா மா மகிஷா. இது என் பெரிய பையன் விஷ்வேஷ்வரன்.” என்று அறிமுகப் படுத்த, ஸ்நேக பாவத்துடன் மகிஷா அவனைப் பார்த்துத் தலையாட்ட விஷ்வேஷ்வரனோ இவளா என்று வெறுப்புடன் பார்த்துவிட்டு நாகரிகம் கருதி அவனும் தலையாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

“அது ஒன்னுமில்லை அவன் ஆதிக்கு அப்படியே நேரெதிர். சீக்கிரம் யாரோடவும் பேசமாட்டான். நீ எதுவும் தப்பா எடுத்துக்காத மா.” துர்கா சமாளிக்க அவ்வாறு கூற,

மகிஷாவும் தோளைக் குலுக்கிவிட்டு,”பரவால ஆன்டி எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே. நான் தப்பா எடுத்துக்கவில்லை ஆன்டி.” கூறிவிட்டு அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

ஆனால் துர்காவுக்கு விஷ்வா சொன்னது சரியெனத் தோன்ற, மகிஷாவை கண்காணிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் இவர்கள் நினைப்பதற்கு எல்லாம் அப்பாற்பட்டவள் மகிஷவர்த்தினி என்றும் அவளது ஆட்டத்தை அவள் ஏற்கனவே ஆட ஆரம்பித்து விட்டாள் என்றும் இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

-தொடரும்.