அந்தப் பெண்ணின் உக்கிர பார்வையிலே மகியைப் பொசிக்கிவிடுவது போல் பார்க்க, மகிக்கு ஒன்றும் புரியவில்லை. காலையிலே எதற்கு இந்தப் பெண் தன்னை இப்படி முறைத்துப் பார்க்க வேண்டும் என்று மகி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்தப் பெண் மகியைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த அடுத்த வினாடி அவள் மகியை அடிக்க, மகிக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்து அந்தப் பெண்ணின் இரு கண்ணத்திலும் மாறி மாறி அடிக்க அந்தப் பெண்ணுக்கு மேலும் கோபம் வந்தது.
“ஏய் என்னைய அடிச்சுட்டல? உன்னை நான் சும்மா விட மாட்டேன்.” என்று கூறி திரும்ப அடிக்கப் போக, மகி அவள் கையைப் படித்து வளைத்து அவள் முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று,”இந்த வேலைலாம் என்கிட்ட வச்சுக்காத. முன்ன பின்ன உன்னை நான் பார்த்தது கூட இல்லை. பார்த்தவுடனே அடிச்சது நீ, உன்னைத் திரும்பி அடிச்சதும் கோபம் வேற வருதோ! எதுக்கு என்னை அடிச்ச?” மகி கேட்க, அந்தப் பெண் வலியில் துடிக்க,”ஏய் கையை விடு. வலிக்குது விடுனு சொல்றேன்ல.”
“முதல்ல எதற்கு என்னை அடித்தாய்? அதற்குப் பதில் சொல்லாமல் உன் கையை நான் விட மாட்டேன்.” என்று உறுதியாக மகி கூற,
“நீ என் காதலனுடன் சுற்றிக் கொண்டிருந்தால், அடிக்காம கொஞ்சிக்கிட்டு இருப்பாங்களா?” கோபத்துடனும் வலியிலும் அந்தப் பெண் சொல்ல, மகிக்கு ஒன்றும் புரியவில்லை.
“நீ யாரைச் சொல்ற?”
“ஆதி ஆதித்யா தான் என்னோட காதலன், வருங்காலக் கணவன்.” என்று அந்தப் பெண் கூற, மகி அவள் கையை விட்டாள்.
“ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசிட்டு இருக்க. ஆதி என்னோட நல்ல நண்பர் அவ்ளோ தான்.” மகி அவளுக்குப் புரியும்படி அமைதியாகக் கூற,
“நண்பரைத் தான் இப்படிக் கொஞ்சிட்டு ஊர் சுத்துவாங்களா?” நக்கலாக அந்தப் பெண் கூற,
“நான் கொஞ்சினதை நீ பார்த்தியா?”
“நான் பார்க்கலை ஆனால் அந்தக் கண்றாவியை பார்த்தேன்.”
“ம்ப்ச் புரியுற மாதிரி சொல்றியா? எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று மகி கூற, அந்தப் பெண் தன் அலைபேசியை எடுத்து சில புகைப்படத்தையும் வீடியோவையும் காட்டினாள்.
“இப்போ என்ன பதில் சொல்ல போற?”
“ஆமா நேத்து நாங்க மால் போனோம். அதற்கு என்ன இப்போ? இதுக்காக நான் ஆதிகூடப் பேசமால் எல்லாம் இருக்க மாட்டேன். இப்போ நான் ஆதிகூட ஜாகிங் போகனும். கொஞ்சம் இடத்தைக் காலி பண்றியா!” என்று மகி கூற, அந்தப் பெண் கோபத்துடன்,”ஏய் நீ எதுக்கு ஆதிகூட ஜாகிங் போற! அதலாம் போகக் கூடாது.”
“அதைச் சொல்ல நீ யார்?”
“நான் தான் சொன்னேன்ல நான் ஆதியோட காதலி.”
“காதலிதான மனைவி இல்லையே, அப்படியே மனைவியா இருந்தாலும் எனக்குக் கவலையில்லை.”
“அவ்ளோ திமிரா உனக்கு?”
“இப்போ உனக்கு என்ன பிரச்சனை? எதற்குக் காலைலயே வந்து இப்படிக் கத்திட்டு இருக்க?”
“நீ ஆதி கூடப் பேசக் கூடாது, ஆதியைப் பார்க்கக் கூடாது, ஆதிகூட வெளில எங்கயும் போக கூடாது.”
“நீ சொன்ன நான் கேட்டுடுவேனா? முதல்ல இந்த ரூமை விட்டு வெளில போ. அப்புறம் இங்க நடக்கிற எதற்கும் நான் பொறுப்பாக முடியாது.”
“நீ ஆதிகூடப் பேச மாட்டேன்னு சொல்லு நான் போறேன்.” திரும்பத் திரும்ப அதையே சொல்ல மகிக்கு எரிச்சலாக இருந்தது. அவளை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆதி அங்கே வர, அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
“ஏய் மயூ இங்க என்ன பண்ற?” ஆதி கேட்க, அவனின் குரலில் திரும்பிய மயூரா வேகமாகச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.
“ஆதி இந்தப் பொண்ணு யார்?”
“மகி இவள் நான் காதலிக்கிற பொண்ணு மயூரா.” என்று வெக்கப்பட்டுகிட்டே கூற,
“சாரி டூ சே திஸ் ஆதி, நீ தப்பான நபரைத் தேர்ந்துவிட்ட.” என்று பீடிகையுடன் மகி கூற, ஆதிக்குப் புரியவில்லை.
“ஏய் வாயை மூடிட்டு இரு. ஆதி முதல்ல இவளை வெளில போகச் சொல். பார் எப்படிப் பேசிட்டு இருக்கானு. என்னை அடிச்சிட்டா தெரியுமா.” என்று மயூரா கூற, அதைக் கேட்ட ஆதிக்கு அதிர்ச்சி.
“என்ன மயூ சொல்ற? மகி உன்னை அடிச்சாளா?”
“ஆமா ஆதி. இங்க பார் என் இரண்டு கண்ணனும் எப்படிச் சிவந்துருக்குனு.” மயூ அவளுடைய கண்ணத்தைக் காட்ட, ஆதி அதைப் பார்த்து மகியிடம் திரும்பி,”எதற்கு மயூவை அடிச்ச மகி?”
“அவள் சொல்றதை மட்டும் கேட்டுட்டு எப்படி நீ என்னைக் கேள்வி கேட்கலாம்? நான் அவளை இப்போ தான் பார்க்கிறேன். இதற்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை. அப்படியிருக்கும் போது நான் இவளை அடிச்சேனா அதற்கு ஒரு காரணம் இருக்க. அதை ஏன் உன் காதலிகிட்டயே கேட்கக் கூடாது?” அழகாக அதை மயூவிராடம் மகி திருப்பி விட,
ஆதி சந்தேகத்துடன்,”அதானே எதற்கு மகி உன்னை அடிக்கப் போறா? நீ அப்படி என்ன பண்ணனு?”
“நான் ஒன்றும் பண்ணவில்லை ஆதி.” சன்னமான குரலில் மயூரா கூற, அதுவே அவள் பொய் சொல்கிறாள் என்பது புரிய, கொஞ்சம் கடுமையாக ஆதி அவளிடம்,”சொல்லு மயூ நீ என்ன பண்ண?” என்று கேட்க,
“அது நான் அடிச்சேன்.” என்று மெதுவாகத் திக்கித் திணறிக் கூற, ஆதி அவளை முறைத்துப் பார்த்து,”எதற்கு மகியை அடிச்ச நீ?”
“அது அது…” கூற முடியாமல் மயூரா தவிக்க, மகி உள்ளே நுழைந்து,”அதை நான் சொல்றேன் ஆதி, உன்னோட அருமை காதலிக்கு உன் மேல நம்பிக்கை இல்லை. அதான் என்னை உன் கூடப் பேசக் கூடாது, பார்க்கக் கூடாது, வெளில எங்கேயும் போகக் கூடாதுனு நிபந்தனை போடத் தான் வந்துருக்காங்க.” என்று மகி கூற, ஆதிக்குப் பயங்கரக் கோபம். மயூராவுக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.
“மயூரா மகி சொல்றது உண்மையா?” கோபமாக ஆதி கேட்க,
“அது மட்டுமில்லை முதல்ல என்னை அடிச்சதே உன்னோட அருமை காதலி தான். அதான் நானும் பளார் ஒன்னு விட்டேன்.” என்று மகி கூற, ஆதிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
“பதில் பேசு மயூரா. எதுக்கு மகியை அடிச்ச? மகி சொன்ன மாதிரி என்னைச் சந்தேகப்பட்டியா?”
“அய்யோ ஆதி நான் எதற்கு உன்னைச் சந்தேகப்படப் போறேன்?”
“அப்போ மகி ஏன் அப்படிச் சொன்னா?”
“ஆதி அது மட்டுமில்லை நாம நேத்து மால்கு போனோம்ல அதை இந்த மேடம் ஃபோட்டோ அண்ட் வீடியோ எடுத்துருக்காங்க. அதை என்கிட்டயே காட்டுறாங்க.” என்று மேலும் மகி கூற, ஆதிக்குப் பயங்கரக் கோபம்.
“நீ இப்படிப் பண்ணுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை மயூரா. எதற்காக இப்படிப் பண்ணுன? இதற்கு என்ன அர்த்தம் மயூரா? அப்போ நீ என்னை நம்பவே இல்லை அப்படித் தான?”
“அய்யோ இல்லை ஆதி அப்படியில்லை. ஏன் தோழி ஒருத்தி உன்னை இவ கூட பார்த்துட்டு ஃபோட்டோ எடுத்து அனுப்பினா. அதான் என்னனு கேட்க வந்தேன். வேற எதுவும் இல்லை.”
“அப்படியா? அப்போ எதற்கு மா என்னை ஆதிகூடப் பேசக் கூடாது பார்க்க கூடாதுனுலாம் சொன்ன?” என்று திரும்பவும் மகி கேட்க, மயூரா அவளை முறைத்துப் பார்க்க,
“அங்க என்ன பார்வை? கேட்ட கேள்விக்குப் பதில் வேண்டும் மயூரா. நீ என்னை நம்பலை அப்படித் தான?”
“அச்சோ இல்லை ஆதி. நான் சொல்றதைக் கேள். இவளைப் பார்த்தால் நல்ல பொண்ணு மாதிரி தெரியலை. பார் நம்ம இரண்டு பேருக்கும் நடுவுல சண்டை மூட்டி விடுறா. இவ என்னோட செயலை ட்விஸ்ட் பண்றா.”
“என்னது நான் ட்விஸ்ட் பண்றேனா? எனக்கு இது தேவை தான். ஆதி எனக்கு நல்ல ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி தானு மட்டும் தான கேட்டேன். நீ தான் எங்க வீட்டுல தங்குனு சொன்ன. உன் பேச்சை மதிச்சு நான் வந்து தங்குனதுக்கு ரொம்ப நல்ல மரியாதை கிடைச்சுருச்சு. விட்டால் நான் உங்க இரண்டு பேரையும் பிரிக்கத் தான் இந்தியாவுக்கே வந்துருக்கேன்னு சொன்னாலும் சொல்லுவா உன்னோட காதலி. ஏற்கனவே உங்க அப்பா என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார். எனக்கு எதற்கு வம்பு நான் முதல் வேலையா குளிச்சுட்டு இந்த வீட்டை விட்டு கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு தன்னுடைய உடமைகளை அடுக்க ஆரம்பிக்க, மயூராவின் முகத்தில் நிம்மதி தெரிய, ஆதி அவளை முறைத்துப் பார்த்து,”நீ இப்படி இருப்பனு நான் நினைக்கவே இல்லை. முதல்ல நீ உன் வீட்டுக்குப் போ ஆனால் அதற்கு முன்னாடி மகிகிட்ட சாரி கேள்.” ஆதி கூற, மயூராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ஆதி நான் இவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா?”
“ஆமா இப்போ நீ மகிகிட்ட சாரி கேட்காட்டி இனிமே என் கூடப் பேசவே பேசாத.” உறுதியாக ஆதி கூற, மனமுடைந்து போனாள் மயூரா.
“சாரி. நான் உன்னை அடிச்சுருக்க கூடாது.” என்று மயூரா மகியிடம் மன்னிப்பு கேட்க, மகி மனதுக்குள் சிரித்துக் கொண்டு,”இருக்கட்டும், நீங்க என்னை அடிச்சது கூட எனக்குப் பெரிசா படலை. நீங்க காதலிக்கிற ஆதியை நம்பாமல் இருக்கிறது தான் வருத்தமா இருக்கு. முதல்ல ஆதி மேல நம்பிக்கை வைங்க. எனக்குத் தெரிஞ்சு ஆதி உங்களுக்கு உண்மையா தான் இருக்கான். நீங்க தான் அவனை நம்பலை.” வேண்டும் என்றே மகி அவ்வாறு கூற, ஆதிக்கு ஒரு வேளை மகி சொல்வது போல் மயூரா தன்னை நம்பவில்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. மயூராவிற்கு மகியின் நோக்கம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் இப்பொழுது ஆதியிடம் எது பேசினாலும் தப்பாகப் போகும் என்று வாயை மூடிக் கொண்டு நின்றாள்.
“ஆதி நான் அப்புறம் வரேன். ப்ளீஸ் என்னைத் தப்பாக எடுத்துக்காத.” என்று கூறிவிட்டு அவள் பேசாமல் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். மகிஷா தன் உடைமைகளை அடுக்குவதை நிறுத்தவில்லை. அதைப் பார்த்த ஆதி அவளிடம் வந்து,”மகி ப்ளீஸ் அதான் மயூரா உன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டாள். அப்புறமென்ன? ப்ளீஸ் நீ என்னை நம்பி வந்துருக்க, இப்போ நீ போறது நல்லா இல்லை. எனக்காக ப்ளீஸ் போகாத. இனிமே யாரும் உன்னை ஒரு வார்த்தை தப்பா பேசாமல் நான் பார்த்துக்கிறேன்.” என்று ஆதி கேட்க,
“ஆதி எதற்கு இத்தனை சாரி. விடு நானும் ஏதோ கோபத்துல சொல்லிட்டேன். நான் எங்கயும் போகலை சரியா. ஆனால் ஒன்னு மட்டும் சொல்றேன். எதற்கும் நீ மயூரா விஷயத்துல யோசிச்சுக்கோ. பொசசிவ்வா இருக்கிறது நேட்சுரல் ஆனால் சந்தேகம் வரது உங்க உறவுக்கு நல்லது இல்லை. இதற்கு அப்புறம் உன்னுடைய விருப்பம்.” என்று கூறிவிட்டுப் பாத்ரூம் சென்றுவிட்டாள்.
மகியின் வார்த்தைகள் ஆதியின் மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தான் மயூராவை காதலித்தது தப்போ என்று எண்ணும் அளவுக்கு யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.
மகி பேசியதை ஆதி மட்டும் கேட்கவில்லை வெளியே அந்த வழியாக வந்த விஷ்வேஷும் கேட்டுவிட்டான். உதட்டில் மர்ம புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
வீட்டுக்கு வந்த மயூரா அழுது கொண்டே இருக்க, அங்கு வந்த அவளின் தாய் கிரிஜா,”மயூ இப்போ தான் ஊர்ல இருந்தே வந்த? அதற்குள் என்னாச்சுனு நீ இப்படி அழுதுட்டு இருக்க?” என்று கேட்க,மயூரா நடந்தவற்றைக் கூற, கிரிஜாவிற்கு நன்கு புரிந்தது.
“உன்னை யார் அந்தப் பொண்ணுகிட்ட பேச சொன்னது? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? பார் இப்போ ஆதி கண்ல நீ தப்பானவளா தெரியுற.”
“அம்மா அவ இப்படிப் பண்ணுவானு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. இப்போ ஆதி என் மேல கோபமா இருக்கான். நான் என்ன பண்ணுறது?”
“மயூ முதல்ல ஆதிகிட்ட போய்ப் பேசு. அப்புறம் எதனாலும் முடிவு பண்ணலாம் சரியா.” என்று கிரிஜா கூற, மயூரா உடனே ஆதிக்கு அழைத்தாள். ஆனால் அவன் எடுக்கவே இல்லை. உடனே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“ஆதி ஐ ஆம் சாரி. ப்ளீஸ் நாம மீட் பண்ணலாம். நான் உனக்கு விளக்கம் கொடுக்கிறேன்.” என்று மயூரா அனுப்ப, ஆதி அதைப் பார்த்துவிட்டு வெறும் உம் என்று மட்டும் அனுப்பினான். அதுவே போதும் என்று அவனைப் பார்க்கக் கிளம்பினாள் மயூரா.
ஆதியும் அவளைப் பார்க்கக் கிளம்ப, அங்கு வந்த மகி அவன் வெளியே கிளம்புவதைப் பார்த்து,”என்ன ஆதி வெளில கிளம்பிட்டியா? ஆஃபிஸ் போறியா?”
“இல்லை மகி, மயூரா என்னைப் பார்க்கனும்னு சொன்னா. ஆதான் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு கிளம்புறேன்.”
“சரி ஆதி போய்ட்டு வா. ஆனாலும் நீ கிரேட் ஆதி அந்த மயூரா உன்னைச் சந்தேகப்பட்டதை மறந்து நீ அவளைப் பார்க்க போற, இப்படித் தான் இருக்கனும். ஆனால் உன்னுடைய உண்மையான காதலுக்கு முன்னால் அவங்களுடையது ரொம்ப கம்மி தான். நீ அதை எல்லாம் பெரிசா எடுத்துக்காம இப்போ போய்ப் பார்க்க போற உண்மையிலே சூப்பர் ஆதி. சரி நீ போய்ட்டு வா.” என்று அவனைப் புகழ்வதாக அவனது மனதை நன்றாகக் குழப்பி விட்டுவிட்டு அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
ஆதியும் மயூராவும் எப்பொழுதும் வெளியே சந்திக்கும் இடம் மெயின் ஏரியாவிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு கஃபேயில் தான்.
மயூரா ஆதிக்காகக் காத்திட்டிருக்க, மெதுவாக அங்கு வந்தான் ஆதி. அவனைப் பார்த்து மயூரா சிரிக்க, ஆதி எதுவும் கூறாமல் வந்து உட்கார்ந்தான்.
“எதற்கு வரச் சொன்ன?” பட்டும் படாமல் ஆதி கேட்க,
“ஆதி ஏன் இப்படிப் பேசுற? நான் பண்ணது தப்பு தான். ஆனால் சத்தியமா சொல்றேன் அந்த மகி சொன்ன மாதிரி நான் உன்னைச் சந்தேகப்படலை.”
“அப்புறம் நீ எதற்கு அப்படிப் பேசுன?”
“உனக்கு என்னைப் பத்தி தெரியும்ல? நான் உன் மேல ரொம்ப பாசம் வச்சுருக்கேன் ஆதி. எங்கே அந்த மகி உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுருவானோனு பயம் வந்துருச்சு. அதான் ஆதி.”
“புரிஞ்சு தான் பேசுறியா? நீ இப்படிச் சொல்றதுக்கு அர்த்தமே என்னைச் சந்தேகப்படுறனு தான்.”
“அய்யோ ஆதி அப்படி இல்லை, நான் உன்னைச் சந்தேகப்படலை, அந்தப் பொண்ணுகிட்ட என்னோட தோழி போய் நீ என்னுடைய காதலன்னு சொல்லி பார்த்துப் பழகச் சொல்லிருக்கா அதற்கு அந்த மகி என்னோட தோழியைத் திட்டிட்டா தெரியுமா. அதனால் தான் நான் இன்னைக்கு கோபத்துல அடிச்சுட்டேன்.” என்று மயூரா கூற,
“நீ பேசுனதே தப்புனு சொல்றேன் இதுல உன் ப்ரண்ட் வேற போய்ப் பேசிருக்கா? நீ என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? எப்போல இருந்து இப்படி மாறுன? மகி சொன்னது உண்மை தான் உனக்கு என் மேல லவ்வே இல்லை. அப்படி இருந்திருந்தா கண்டிப்பா நீ மகியும் நானும் பேசறதையோ பழகுறதையோ தப்பா நினைச்சுருக்க மாட்ட. உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பிஹேவியரை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு மேல பேச எதுவுமில்லை. நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு ஆதி அங்கிருந்து செல்ல, மயூராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மயூரா அங்கிருந்து கிளம்பி தன் வீட்டுக்கு வந்தாள். அவளது வீடு ஆதியின் வீட்டுக்கு எதிர் வீடு தான். அவள் வருவதைப் பார்த்து மகி வெளியே வர, அவனை முறைத்துப் பார்த்து அங்கிருந்து நகரப் போக,
“என்ன மயூரா உன்னோட சொல் எதுவும் எடுபடலை போல ஆதிகிட்ட?” நக்கலாக மகி கேட்க,
“உனக்கு எப்படித் தெரியும்?”
“ஏனா நான் அந்த அளவுக்கு ஆதியை ப்ரைன் வாஷ் பண்ணி வைச்சுருக்கேன். நான் சொல்றதை மட்டும் தான் ஆதி இப்போ கேட்பான். நீ சொல்றதைலாம் நம்பவும் மாட்டான் கேட்கவும் மாட்டான். அந்த அளவுக்கு அவனை நான் மாற்றி வைத்திருக்கிறேன். நல்ல வேளை உங்களுக்குக் கல்யாணமாகலை, ஆகியிருந்தா அவ்ளோ தான், என் பேச்சை அவன் கேட்ருக்க மாட்டான். ம் என்ன பண்றது உங்களுக்குக் கல்யாணமாகது எனக்குச் சாதமாகிடுத்து.” என்று கூறிவிட்டு மகி விசிலடித்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட, மயூராவுக்கு அப்பொழுது தோன்றியது ஆதியைக் கூடிய விரைவில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று. வேகமாக உள்ளே சென்றாள் தன் தந்தையைப் பார்த்து விவரத்தைக் கூற. ஆனால் பாவம் மயூராவுக்குத் தெரியாது மகி தங்களைக் கடைசிவரை சேர விடப் போவதில்லை என்று.
-வருவாள்.