மகிஷவர்த்தினி 5

20211105_085322-dfd130bd

ஆதி தன் அறையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மயூராவின் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்கவில்லை. அப்பொழுது அங்கு வந்தாள் மகிஷா.

“என்ன ஆதி இன்னைக்கு நீ வேலைக்குப் போகலையா?”

“இல்லை மகி. கொஞ்சம் மூட் அப்செட் அதான் அப்பாவிடம் நான் வரவில்லைனு சொல்விட்டேன்.”

“என்ன ஆதி இன்னும் மயூரா பேசினதையே யோசித்திட்டு இருக்கிறாயா?”

“ஆமா மகி, அவள் முன்னாடிலாம் இப்படி இல்லை. எதையும் ஜாலியா எடுத்துக்கிற பொண்ணு. ஆனால் ஏனோ கொஞ்ச காலமா அவள் இப்படி நடந்துக்கிட்டு இருக்கா. இப்படித் தான் ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி எனக்குப் பி.ஏ.வா நான் ஒரு பொண்ணை வேலைக்குச் சேர்த்தேன். ஆனால் அந்தப் பொண்ணை மயூரா ரொம்ப காயப்படுத்திட்டா. அந்தப் பொண்ணும் எதுவும் சொல்லாமல் எனக்கு வேலையே வேண்டாம்னு போய்ட்டாள்.”

“என்ன சொல்ற ஆதி? இவ்ளோ சீரியஸாகப் போயிருக்கு நீ மயூராவிடம் பேசவில்லையா?”

“நான் கேட்டேன். அதற்கு மயூரா ஏதோ அந்தப் பொண்ணு எங்களோட கம்பெனில இருந்த முக்கியமான டாக்குமென்ட்ஸ எடுத்துட்டானு சொன்னாள். அப்போ நான் மயூராவை நம்பினேன். ஆனால் கொஞ்ச நாளுக்கு முன்னாடித் தான் அந்தப் பொண்ணை நான் மால்ல பார்த்தேன். அப்போ அந்தப் பொண்ணு சொன்னாள், மயூரா ஏதோ எங்களைச் சந்தேகப்பட்டுத் தான் இப்படிப் பண்ணியிருக்கானு. அது தெரிஞ்சதும் நான் மயூராகிட்ட கேட்கனும்னு நினைச்சேன். ஆனால் மயூரா ஊரில் இல்லை. இன்னைக்குத் தான் வந்தாள். வந்தவுடனே உன்கிட்ட சண்டை.”

“அப்போ மயூராகிட்ட தான் ஏதோ தப்பு இருக்கு ஆதி. இதை நீ இப்படியே விட்டால் நாளைக்கு உன்னுடைய வாழ்க்கை வீணாகப் போயிடும். யோசித்து முடிவு பண்ணு. நீ இப்போ பேசுனல மயூரா என்ன சொன்னா?”

“ம்ப்ச் எங்க? திரும்பவும் அதே மாதிரி தான் பேசுறா. சரி மகி நேத்து மயூராவோட ப்ரண்ட் யாராவது உன்னை மால்ல பார்த்தாங்களா?”

“ம் ஆமா ஆதி. உனக்கு எப்படித் தெரியும்?”

“மயூரா தான் சொன்னா. அது இருக்கட்டும். நீ ஏன் என்கிட்ட சொல்லலை அதைப் பத்தி?”

“என்னனு சொல்ல சொல்ற ஆதி? நான் அதை உன்கிட்ட சொல்லி தேவையில்லாமல் உனக்கும் மயூராவுக்கும் பிரச்சனை வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் பார் நான் சொல்லாமலே எல்லாமே தெரிஞ்சுடுச்சு.”

“ஆமா மகி. மயூராவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே நாங்க ப்ரண்ட்ஸ். ஆனால் காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் தோணுச்சு ஏன் நானும் மயூராவும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுனு. நான் போய் மயூவிடம் சொன்னேன். அவள் உடனே சரினு சொல்லிட்டா. அப்போது எல்லாம் இப்படி இல்லை மகி அவள். தீடிர்னு ஏன் இப்படி மாறினானு சுத்தமா புரியலை.”

“நான் சொல்றது தப்பாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை உன் மேல் நம்பிக்கை இல்லையோ என்னமோ! யார் கண்டா நீ எங்க அவங்களை விட்டுவிட்டு போயிடுவியோனு அவங்களோட அப்பா அம்மாவைக் கூப்பிட்டு வந்து சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் குறிக்கக் கூடச் செய்யலாம்.”

“இல்லை மகி, மயூரா அப்படிப் பண்ண மாட்டாள். அவளுக்குத் தெரியும் என்னோட லட்சியம். அது நிறைவேறிய பிறகு தான் எங்கள் கல்யாணம். அதனால் அவள் அப்படிச் செய்ய மாட்டாள்.”

“உன்னுடைய நம்பிக்கை நிஜமாகனும்னு நான் கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிறேன். சரி அதை விடு ஆதி. நீங்க என்ன பிஸ்னஸ் பண்றீங்க? என்கிட்ட எதுவும் சொன்னது இல்லை நீ.”

“நாங்க ஊட்டில டீ எஸ்டேட் வச்சுருக்கோம் மகி. இங்க கஃபே மாதிரி நாங்களும் ஐந்து இடத்தில் டீ ஷாப் வச்சுருக்கோம். இங்க சந்துக்குச் சந்து இருக்கிற டீ கடை மாதிரி இல்லாமல். இங்க வெறும் டீ மட்டும் தான் கிடைக்கும். அதுவும் டிஃப்ரன்ட் டைப்ஸ்ல கிடைக்கும். அப்பறம் பிஸ்கட்ஸ் அண்ட் வருக்கி இருக்கும். அவ்ளோ தான். கொஞ்சம் ஹைடெக்கா பண்றோம். நீ இங்க வந்த அன்னைக்கு நான் இங்க இருக்கிற டைடல் பார்க்ல நான் போய்ப் பேசினேன். அவங்களுக்கு பிடிச்சு இருந்துச்சு. நம்ம கூடக் கான்ட்ரேக்ட் சைன் பண்ணிட்டாங்க. அதே மாதிரி சென்னைல இருக்கிற ஐ.டி. பார்க்ஸ் போய் விஷ்வா பேசிட்டு வந்தான். ஆனால் அவங்களுக்கு பிடிக்கலை போல. எங்க கூட டீல் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.”

“ஓ சூப்பர். அதான் உங்க வீட்டுல குடிக்கிற டீ மட்டும் சூப்பரா இருக்கா?”

“ஏய் உனக்குப் பிடிச்சுருக்கா? சூப்பர். அப்போ நீ ஜெர்மன் போகும் போது உனக்கு நான் நிறையக் கொடுத்து அனுப்பிறேன்.”

“கண்டிப்பாக, நானும் உன்னிடம் இருந்து வாங்காமல் போக மாட்டேன். சரி உன்னோட அண்ணன் எங்க? காலைல இருந்து ஆளை காணோம்?”

“அவன் மதுரைக்குப் போயிருக்கான் மகி. அங்க ஒருத்தரிடம் பேச போயிருக்கான். மோஸ்ட்லி அவர் நம்ம டீ தூள் வாங்க சம்மதிப்பார்னு நினைக்கிறேன்.”

“ஓ! நீங்க இப்போ தான் ஆரம்பிச்சீங்களா டீ தூள் பிஸ்னஸை?”

“ம் ஆமா, ஆரம்பிச்சு ஒரு பத்து வருஷம் தான் இருக்கும். விஷ்வா தான் உள்ளூர்ல மட்டும் டீ தூள் விற்றால் பத்தாது. உலகம் முழுவதும் நம்ம டீ தூள் விற்பனை ஆகனும் அப்படினு அவன் தான் நிறைய முயற்சி எடுத்து இப்போ தமிழ்நாட்டை மோஸ்ட்லி கவர் பண்ணிட்டான். சிலர் வாங்குறாங்க, சிலர் வேண்டாம்னு சொல்றாங்க.”

“ஓ சூப்பர் சூப்பர். ஏன் உன்னோட அண்ணன் மட்டும் இப்படி இருக்கான்? எதற்கு என்கிட்ட மட்டும் இப்படி எரிஞ்சு விழுகுறான்? இல்லை அவன் குணமே இப்படி தானா?”

“விஷ்வா முதல்ல இப்படி இல்லை. ஒரு ஐந்தாறு வருஷமா தான் இப்படி இருக்கான். என்னாச்சுனு தெரியலை.”

“ஓ நீங்க எதுவும் கேட்கலையா?”

“நாங்க கேட்டோம். ஆனால் அவன் எதுவும் சொல்லலை. அப்புறம் இன்னொரு விஷயம் அவன் என்னோட கூடப் பிறந்த அண்ணன் கிடையாது.” என்று ஆதி சொல்ல, அதைக் கேட்ட மகிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சொல்ற ஆதி? அப்போ விஷ்வேஷ்வரன் யார்?”

“அவன் என்னுடைய சித்தப்பா பையன். விஷ்வாவுக்கு ஒரு ஐந்து வயசு இருக்கும் போதே என்னுடைய சித்தபாவும் சித்தியும் ஒரு கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அந்த ஆக்சிடென்ட்ல விஷ்வா மட்டும் தான் பிழைத்தான். அப்புறம் அப்பா இங்க கூப்பிட்டு வந்துட்டார். அப்போல இருந்து எங்ககூடத் தான் இருக்கான்.”

“அவருக்கு இது தெரியுமா?”

“ம் தெரியும். அப்போ தாத்தா இருந்தார். அவர் விஷ்வாவிடம் சொல்லிட்டார்.”

“ஓ ப்ச் ரொம்பப் பாவம். இது தெரியாமல் நான் வேற அவரிடம் ஏட்டிக்குப்போட்டியா பேசிருக்கேன்.”

“ம்ப்ச் அதை விடு மகி. அவனிடம் நீ அப்படிப் பேசலைனாலும் அவன் உன்னிடம் அப்படித் தான் பிஹேவ் பண்ணுவான்.”

“ஏன் அப்படி?”

“ஏனா நீ என் ப்ரண்ட். அவனுக்கு என் ப்ரண்ட்ஸ் யாரையும் பிடிக்காது. அதனால அவன் இப்படித் தான் பிஹேவ் பண்ணுவான்.”

“ஏன் உன் ப்ரண்ட்ஸ்னா அவனுக்குப் பிடிக்கலை?”

“அது அவனிடம் தான் கேட்கனும்.”

“சரி இன்னைக்கு வரட்டும் கேட்டுடுவோம்.” என்று மகி தீர்மானமாகக் கூற, ஆதி ஏதோ கூற வருவதற்குள் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்து,”தம்பி உங்களை ஐயா கீழே கூப்பிடுறார்.” என்று கூறினார்.

“அப்பா எதற்கு என்னைக் கூப்பிடுறார்? சரி மகி வா நாம கீழ போகலாம்.” என்று ஆதி கூற, மகியும் அவனுடன் கீழே சென்றாள்.

கீழே மயூரா தன் தந்தை மற்றும் தாயுடன் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நமட்டுச் சிரிப்புடன் ஆதியைப் பார்த்து,”ஆதி அனேகமாக நான் சொன்ன மாதிரி கல்யாணம் பத்தி பேசத் தான் வந்துருக்காங்கனு நினைக்கிறேன்.”

“கண்டிப்பாக இருக்காது மகி. அவங்க நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. அது மாதிரி தான் இப்பவும் வந்துருக்காங்க. நீயாகக் கற்பனை பண்ணாத.”

“ஓகே விடு டென்ஷன் ஆகாத.” மகி கூற, ஆதியும் மகியும் கீழே வந்தனர். மயூராவின் தாயும் தந்தையும் மகியை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஆதியைப் பார்த்துச் சிரித்தனர். அவன் அங்கிருந்த இருக்கையில் அமர, அவனுக்குப் பக்கத்தில் மகி அமர, அவளை மயூராவின் மொத்த குடும்பமும் முறைத்துப் பார்த்தனர். அவர்களை அலட்சியமாகப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

“அப்புறம் ஆதி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. வீட்டுக்குக் கூட வரலை நீ?” மயூராவின் தந்தை வெங்கடேஷ் கேட்க,

“அது ஒன்னுமில்லை அங்கிள் கொஞ்சம் வேலை இருந்தது. அப்புறம் மயூவும் வீட்டுல இல்லை. அதான் அங்கிள்.”

“ஓ அப்போ மயூ இருந்தா தான் வீட்டுக்கு வருவ அப்படித் தான?”

“அச்சோ அங்கிள் அப்படி எல்லாம் இல்லை. நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.”

“நானும் சும்மா தான் உன்னைக் கிண்டல் பண்ணேன் ஆதி.”

“அப்புறம் வெங்கடேஷ், ஆதியும் வந்துட்டான். ஏதோ முக்கியமான விஷயம் பேசனும், ஆதி வந்ததும் சொல்றேன்னு சொன்ன. இப்போ சொல்லு.”

“வேற எதைப் பத்தி நான் பேசப் போறேன் சம்பத்? எல்லாம் நம்ம ஆதி மயூ கல்யாணம் பத்தி தான்.” என்று வெங்கடேஷ் கூற, ஆதி அதிர்ச்சியாகப் பார்க்க, மகிக்குச் சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதை முகத்தில் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“ரொம்பச் சந்தோஷம் வெங்கி. நானே அதைப் பத்தி பேசனும்னு நினைச்சேன். மயூராவும் ஆதியும் தான் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னாங்க. ஆனால் நாம நேரம் தாழ்த்தாமல் கல்யாணத்தைச் சீக்கிரம் வச்சுக்கலாம்னு தோணுது.” என்று சம்பத் கூற அனைவருக்கும் சந்தோஷம். மயூரா மகியைப் பார்த்து வெற்றிப் புன்னகை வீச, மகி பதிலுக்கு அவளை நக்கலாகப் பார்த்தாள். மயூராவிற்கு அற்கான அர்த்தம் புரியவில்லை. ஆனால் ஆதி பேசிய வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்து கொண்டாள்.

“அங்கிள், அப்பா நான் ஏற்கனவே சொன்னது தான். எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்.” ஆதி கூற, அனைவரும் அதிர்ந்தனர்.

“ஆதி என்ன பேசுற நீ? எப்படி இருந்தாலும் நீ மயூராவைத் தான் கல்யாணம் பண்ணிக்க போற, அது இப்போ நடந்தா என்ன உனக்கு?” சம்பத் கோபமாகக் கேட்க,

“அப்பா எனக்கு நம்ம பிஸ்னெஸ்ல நிறையச் சாதிக்கணும். அது உங்களுக்கே தெரியும். அப்புறம் ஏன் இந்தப் பேச்சு?” ஆதங்கத்துடன் ஆதி கேட்க,

“ஆதி பிஸ்னெஸ்ஸ நீ எப்போ வேணாலும் சாதிக்கலாம். ஆனால் வயசு ஏறுனா திரும்ப வராது. நாங்க சொல்ற பேச்சைக் கேள்.”

“அப்பா முடியாது. எனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டமில்லை. அதான் எனக்கு முன்னாடி விஷ்வா இருக்கான்ல அவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணுங்க. அப்புறம் எங்க கல்யாணம் நடக்கட்டும்.” தீர்மானமாக ஆதி கூற, மகிஷா இப்பொழுது மயூராவை நோக்கி வெற்றிப் புன்னகை சிந்த, மயூராவுக்குக் கோபம் வந்தது. கட்டுப்படுத்தி அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

“ம்ப்ச் ஆதி, எங்களுக்கு என்ன ஆசை இல்லையா? அவனைப் பத்தி நாங்க ஏதாவது பேசினாலே கத்துறான். அவனைப் பார்த்துக்க அவனுக்குத் தெரியும்னு சொல்றான். எங்க பையனா இருந்திருந்தால் அடிச்சு கூட நாங்க கேட்க வச்சுருப்போம். ஆனால் அவன் எங்க பையன் இல்லையே. அவனும் எங்களை அம்மா அப்பாவா பார்க்கலையே!”

“சம்பத் இப்போ எதற்குத் தேவையில்லாத பேச்சு. ஆதி இப்போ நீ முடிவா என்ன சொல்ற?” என்று வெங்கடேஷ் கேட்க,

“அங்கிள் நான் சொன்னது சொன்னது தான். எங்களுக்குக் கொஞ்ச நாள் ஆகட்டும். அப்படி உங்களுக்கு அவ்ளோ அவசரம்னா நீங்க மயூராவுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சுக்கோங்க.” என்று ஆதி கூற, கேட்ட அனைவருக்கும் பயங்கரக் கோபம் வந்தது.

“என்ன ஆதி அப்படிப் பண்ண மாட்டோம்னு நினைக்கிறாயா? நான் நெனச்சா என் பொண்ணுக்கு உன்னை விட வசதியான மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்க முடியும். என் பொண்ணு உன் மேல ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காத் தான் நான் அமைதியாகப் பேசிட்டு இருக்கேன்.” வெங்கடேஷ் கோபமாகக் கூற,

“வெங்கி கொஞ்சம் அமைதியா இரு. நான் பேசுறேன். ஆதி நீ இப்படிப் பண்றது தப்பு. எப்படி உன்னால மயூராவை வேற யாருக்காவது கல்யாண பண்ணி வைக்கச் சொல்லலாம்?”

“அப்பா அவங்க பேசினதுக்குத் தான் நான் பதில் சொன்னேன். இத்தனை நாள் அமைதியா இருந்தாங்கள? இப்போ மட்டும் என்ன? கொஞ்சம் நாள் தான அவங்களை வெயிட் பண்ணச் சொன்னேன். அப்புறமும் புரிஞ்சுக்காம பேசுனா எப்படி?”

“யார் புரிஞ்சுகாம பேசுறோம்? இங்க யாரும் சின்னப் பிள்ளைங்க இல்லை. நீ ஏன் இப்படிப் பேசுறனு எனக்குப் புரியாமலா இருக்கு. வேற ஒருத்தி வந்ததும் என் பொண்ணு மயூரா உனக்குக் கசக்குதா?” வெங்கடேஷ் டக்கென மகியைப் பத்தி பேச, ஆதிக்குக் கோபம் வந்துவிட்டது.

“அங்கிள் உங்களுக்கு என்னைப் பத்தி பேச எல்லாம் ரைட்ஸும் இருக்கு. ஆனால் எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட என்னோட கெஸ்ட்ட தப்பா பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை. தேவையில்லாமல் இப்போ எதற்கு மகியை இதுல இழுக்குறீங்க?”

“யார் இழுத்தா? நீ அவக்கூட சேர்ந்து என் பொண்ணை ஏமாத்த பார்க்கிற. அதற்கு ஒரு பொழுதும் நான் விடமாட்டேன்.”

“யார் யாரை ஏமாத்த பார்க்கிறா? தேவையில்லாமல் பேசாதீங்க அங்கிள்.”

“நான் எல்லாம் தேவையோட தான் பேசுறேன்.(ஆதியிடம் கூறிவிட்டு, மகியிடம் திரும்பி) ஏய் முதல்ல நீ இந்த வீட்டை விட்டு வெளியே போ. வெக்கமா இல்லை இப்படி ஒரு ஆம்பளை பையன் வீட்டுல வந்து தங்கிட்டு இருக்க. இதுலயே நல்லா தெரியுது உன்னுடைய கேரக்டர் எப்படினு. நல்லா வளர்த்துருக்காங்க வீட்டுல, அசிங்கம் சை.”

“நீங்க யார் என்னோட கேரக்டர் பத்தி பேச? நான் எங்க இருக்கனும் இருக்கக் கூடாதுனு நீங்க சொல்லக் கூடாது. முதல்ல ஒரு பொண்ணுகிட்ட எப்படிப் பேசுறது உங்க வீட்டுல சொல்லி கொடுத்து வளர்க்கலையா உங்களை!! முதல்ல நீங்க ஒழுங்கானு பாருங்க. அப்புறம் மத்தவங்களைப் பத்தி பேசலாம். உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் ஆதி மேல நம்பிக்கை இல்லை. அதை மறைக்க என் மேல பழி போடுறீங்களா?” என்று மகி திருப்பி அவரிடம் கேட்க, அவருக்கு என்ன பதிலடி கொடுப்பது என்று தெரியவில்லை.

அவரை யோசிக்க விடாமல் மகி சம்பதிடம் திரும்பி,”அங்கிள் அவர் உங்க பையனை சந்தேகப்படுறார். உங்களோட வளர்ப்பை சந்தேகப்படுறார். சரி அவர் சொல்ற மாதிரி நான் கெட்டவளாவே இருந்துட்டு போறேன். உங்க பையன் மேல அவரும் அவர் பொண்ணும் நம்பிக்கை வச்சுருக்கனும்ல. அவங்க பேசுறதைக் கேட்டு நியாயமா நீங்க கோபப்பட்டிருக்கனும். ஒரு வேளை உங்களுக்கும் உங்க பையன் மேல சந்தேகமோ!!” அவரையும் இழுத்து வைத்துப் பேச, அவருக்குமே வெங்கடேஷ் ஆதியை அப்படிப் பேசியது சுருக்கென்று தான் இருந்தது.

“அப்பா நீங்க சொல்லுங்க உங்களுக்கும் என் மேல நம்பிக்கை இல்லையா?” வேதனையுடன் ஆதி கேட்க,

“அய்யோ ஆதி அப்படி எல்லாம் இல்லை. நான் உன்னை நம்புறேன்.” என்று ஆதியிடம் கூறிவிட்டு வெங்கடேஷிடம் திரும்பி,”வெங்கடேஷ் உனக்கு மறந்துப் போச்சா? உன் பொண்ணால தான் ஆதிக்கு காலேஜ்ல பிரச்சனை வந்துச்சு. அப்போ அவன் மயூராவை விட்டுவிட்டு போனானா? இல்லையே!! இந்தப் பொண்ணு மட்டும் தான் ஆதி வாழ்க்கைல வந்தாளா? ஏன் இதற்கு முன்னாடி யாரும் அவன் லைஃபல வரலையா? இப்போ மட்டும் உனக்கு எப்படி என் பையன் மேல நம்பிக்கை வராம போயிருக்கும்?”

“சம்பத் என்ன நீயும் இப்படிப் பேசுற? அந்தப் பொண்ணு உன்னை எனக்கு எதிரா திருப்பி விடப் பார்க்கிறா. நீயும் இப்படிப் பேசிட்டு இருக்க?”

“அந்தப் பொண்ணு ஒன்னும் என்னை உனக்கு எதிரா திருப்பி விடலை. உன்னோட பேச்சு எதுவும் எனக்குச் சரியா படலை. அந்தப் பொண்ணு மேல நீ தப்புச் சொல்றது என் பையனை நீ சந்தேகப் படுற மாதிரி தான் இருக்கு. இனிமே இதுல பேச ஒன்னுமில்லை. எப்ப நீ என் பையனை சந்தேகப்பட்டயோ இதற்கு மேல் நமக்குள்ள பேச எதுவுமே இல்லை. நீ போகலாம்.” என்று தீர்மானமாகச் சம்பத் கூற,

“நீ இதற்குக் கண்டிப்பா வருத்தப்படுவ சம்பத். அப்போ நீ என்கிட்ட தான் வரனும். நீ வரும் போது நான் பேசிக்கிறேன். வாங்க போகலாம்.” என்று வெங்கடேஷ் மயூராவையும் கிரிஜாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து போய்விட்டார்.

மகி சந்தோஷத்துடன் அவளது அறைக்குச் செல்ல, ஆதியோ ஒரு மாதிரியான உணர்வுடன் அங்கிருந்து சென்றான். அவர்கள் சென்றவுடன் துர்கா சம்பதிடம்,”என்னங்க நீங்களும் இப்படி அவசரப்பட்டுப் பேசிட்டீங்க?”

“வேற எப்படிப் பேச சொல்ற? ஆதி முகத்தைப் பார்த்தல? எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லையானு அந்தப் பொண்ணு கேட்கிறா! ஆமா எனக்கு நம்பிக்கை இல்லைனு சொன்னால் நம்ம பையனால அதைத் தாங்கிக்கவே முடியாது. அப்புறம் அவன் நமக்குக் கிடையாது. அதற்காக என் பையன் மேல எனக்கு நம்பிக்கை இல்லைனு நான் சொல்லலை. அவனை நம்ம முழுசா நம்புறேன்.”

“சரிங்க கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாமே?”

“இது பொறுமையா பேசுற விஷயம் இல்லை துர்கா. எனக்கு என் பையன் ஆதி தான் முதல்ல. அதற்குப் பிறகு தான் எல்லாமே. அப்படியே ஆதி அவனுக்கு மயூரா வேண்டாம் இதோ நம்ம வீட்டுக்கு வந்த அந்தப் பொண்ணு தான் வேணும்னு சொன்னாலும் நான் அவனுக்காக அந்தப் பொண்ணை நம்ம மருமகளா ஏத்துப்பேன். எனக்கு என் பையன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்.”

“அப்புறம் ஏங்க நீங்க அந்தப் பொண்ணு மேல ஒரு கண் வைக்கச் சொன்னீங்க?”

“ஆமா நான் சொன்னேன் தான். எனக்கு அந்தப் பொண்ணு மேல நம்பிக்கை இல்லாம நான் அப்படிச் சொல்லலை. ஏற்கனவே நம்ம பையனுக்கு ஒரு பிரச்சனை வந்தது. அது மாதிரி வரக் கூடாதுனு ஜாக்கிரதையாக இருக்கத் தான் அப்படிச் சொன்னேன்.”

“என்னமோ சொல்லுறீங்க. எல்லாம் நல்லபடியா நடந்தால் சரிங்க. எனக்கும் ஆதி வாழ்க்கை நல்லா இருந்தா போதுங்க. அவனோட சந்தஷோம் தான் என்னோடதும்.” துர்கா கூறிவிட்டு உள்ளே சென்றார். சம்பதும் அவரது கம்பெனிக்கு சென்றுவிட, மகி இதையெல்லாம் மேலிருந்து கேட்டவள் கொடூரமாக,”உங்களோட மொத்த சந்தோஷமும் ஆதி தான்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் வந்துட்டேன்ல இனிமே அவன் வாழ்க்கைல சந்தோஷமாகவே இருக்க மாட்டான். நீங்க இரண்டு பேரும் அதைப் பார்த்து கதறி அழுக தான் போறீங்க. நான் அதைப் பார்த்து ரசிக்கத் தான் போறேன்.” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்.

-வருவாள்.