மகிஷவர்த்தினி 6

20211105_085322-97213867

விஷ்வேஷ்வரன் அவர்களின் தொழிலுக்காக மதுரை வந்திருந்தான். அங்கு இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீல் பேசுவதற்காக வந்திருந்தான்.

அந்த நிறுவனத்தின் அட்மினை சந்திக்க அன்று அவன் நேரம் வாங்கியிருந்தான். அதனால் அவன் காலையிலே ஃப்ளைட்டில் மதுரை வந்து சாப்பிட்டு அந்த நிறுவனத்துக்கு வந்தான். நேராக அவன் ரிசப்ஷனில் சென்று,”நான் இந்த நிறுவனத்தோட அட்மின்னை பார்க்கனும்.”

“அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கீங்களா சார்?”

“எஸ் நான் வாங்கியிருக்கிறேன்.”

“ஒரு நிமிஷம் சார்.” என்று அந்த ரிசப்ஷனிஸ்ட் கூறிவிட்டு யாருக்கோ அழைத்து விஷ்வா வந்ததைப் பற்றிக் கூறினாள். பேசி முடித்த பின் அவனை உள்ளே செல்லச் சொன்னாள். அவனும் அவளிடம் நன்றித் தெரிவித்து உள்ளே சென்றான்.

விஷ்வா அந்த அட்மினின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

“ஹலோ சார்.”

“ஹலோ விஷ்வா வாங்க.”

“தாங்க் யூ சார். எப்படி இருக்கீங்க?”

“யா ஐ ஆம் குட். அப்புறம் என்ன சாப்பிடுறீங்க விஷ்வா?”

“இல்லை சார் எதுவும் வேண்டாம். நான் அனுப்பின சாம்பிள் எப்படி இருந்தது? நீங்க டேஸ்ட் பண்ணீங்களா?”

“யா எனக்கு ரொம்ப பிடிச்சது. நான் வீட்டுக்குக் கூட கொண்டு போய் என் மனைவியிடம் கொடுத்தேன். ரொம்ப நல்லா இருந்ததா சொன்னாங்க. நான் மேனேஜ்னெட்ல பேசிட்டேன் விஷ்வா எல்லாருக்கும் உங்களோட டீ தூள் டேஸ்ட் பிடிச்சுருந்துச்சு. உங்களுடையதை வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.”

“ரொம்ப நன்றி சார். ஆனால் ஒரு சின்ன ஆப்லிகேஷன்.”

“என்னனு சொல்லுங்க விஷ்வா?”

“நீங்க சரினு சொன்ன விஷயம் கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். அப்படி எஸ்.கே.கம்பெனில இருந்து யாராவது ஃபோன் பண்ணி உங்களிடம் ஏன் எங்கள் டீ தூள் பிடிக்கவில்லை என்று கேட்டால் நாங்கள் வேறு ஒருவருடன் ஏற்கனவே டீல் போட்டோம் என்று சொல்லிவிடுங்கள். ஆனால் உங்களுக்கு டீ தூள் வந்துடும்.” விஷ்வா இவ்வாறு கூற, அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்றீங்க விஷ்வா? நாங்க ஏன் அப்படி சொல்லனும்? எனக்கு நீங்க சொல்றது எதுவும் புரியலை.”

“சார் நான் எஸ்.கே.கம்பெனி சார்பாகத் தான் வந்துருக்கேன். ஆனால் உங்களுக்கு டீ தூள் ஆர்.பி.வி.கம்பெனி மூலமா வரும்.”

“ஏன் அப்படினு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“சார் அதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் இதனால் உங்களுக்குக் கண்டிப்பாக எந்த பிரச்சனையும் வராது. அதற்கு நான் கேரண்டி தரேன் சார். என்னை நீங்கள் முழுதாக நம்பலாம்.”

“இது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம் விஷ்வா. இதனால எந்தப் பிரச்சனையும் வராதுனு நீங்க சொல்றனால நான் யோசிக்கிறேன். அதே மாதிரி இது நான் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. மேனேஜ்மென்ட்ல என்ன சொல்லுவாங்கனு தெரியலை விஷ்வா.”

“சார் நீங்க அங்களாம் எதற்குச் சொல்றீங்க? இது ஒன்னும் நிரந்தரம் இல்லை சார். ஒரு மூணு மாசம் அவ்ளோ தான். அதற்குப் பிறகு நீங்க கவலைப்பட வேண்டாம். கொஞ்சம் எனக்காகச் சார். அது மட்டுமல்ல சார் உங்களுடைய நண்பர்கிட்டயும் இதையே தான் சொன்னேன். அவர் முதல்ல உங்களை மாதிரி தயங்கினார். ஆனால் அப்புறம் சரினு சொல்லிட்டார். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்களுக்கு உறுதி தரேன் சார் இதனால் எந்தப் பிரச்சனையும் வராது சார்.”

“உங்களை எனக்கு அறிமுகப் படுத்தியது என்னுடைய நண்பன் தான். அவனே சரினு சொல்லிருக்கானா எனக்குக் கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க.”

“கண்டிப்பாகச் சார். உங்களை நம்பித் தான் நான் இந்த விஷயத்தைச் சொன்னேன். நீங்க என்னை ஏமாற்ற மாட்டீங்கனு நம்புறேன் சார்.”

“உங்களுடைய பெர்சனல்ல தலையிட நான் ஆள் கிடையாது. ஆனால் கண்டிப்பாக என்னால எந்தப் பிரச்சனையும் வராது. நீங்கள் என்னை நம்பலாம்.” என்று அவரும் கூற, விஷ்வா நிம்மதியுடன் அவரிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றான்.

விஷ்வா அங்கிருந்து நேராக விமான நிலையம் சென்றான். கோவை செல்லும் விமானம் வர இன்னும் நேரம் இருப்பதால் அங்கிருந்த வெயிட்டிங் ஏரியாவில் சென்று அமர்ந்தான்.

“மிஸ்டர் சம்பத் உன்னையும் உன் அருமை பையன் ஆதித்தியாவையும் நான் நிம்மதியாக வாழ விட மாட்டேன். அதற்கு என்னலாம் பண்ணனுமோ எல்லாம் பண்ணுவேன்.” என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டு அவனது அலைபேசி எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். சிறிது நேரத்தில் கோவை விமானமும் வர, அதில் ஏறி கோவை வந்து சேர்ந்தான் விஷ்வா.

விமான நிலையத்திலிருந்து அவன் வீட்டுக்கு வந்த நேரம் மாலை நான்கு மணி. வீடே அமைதியாக இருக்க, அவன் நேராக சம்பத் அறைக்குச் சென்றான். அங்கு துர்கா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

“துர்கா மா சித்தப்பா எங்க?”

“அவர் இன்னும் வீட்டுக்கு வரலை விஷ்வா.” அவரது குரலில் ஏதோ வருத்தம் இருப்பது போல இருக்க, விஷ்வா அவரைப் பார்த்து,”என்னாச்சு துர்கா மா?”

“ம்ச் நான் என்ன சொல்லுவேன். காலைல நீ மதுரை போனதும் நிறைய விஷயங்கள் நடந்துருச்சு.” என்று கூறி காலையில் நடந்து அனைத்து விஷயத்தையும் கூறினார். விஷ்வா மனதிற்குள் பயங்கர மகிழ்ச்சி. ஆனால் அதை வெளிக்காட்டமல்,”அச்சோ என்ன சொல்றீங்க? இவ்ளோ நடந்துருக்கா? ஏன் என்கிட்ட எதுவும் சொல்லலை நீங்க?”

“நீ தான் மதுரை போயிருந்த. அதான் என்னால உனக்குச் சொல்ல முடியலை. இப்போ என்ன பண்றதுனு எனக்குச் சுத்தமா புரியலை விஷ்வா.”

“துர்கா மா, நீங்க கவலைப்படாதீங்க நம்ம ஆதித்யாவுக்கு நல்லதே நடக்கும். ஆதி இப்போ எப்படி இருக்கான்?”

“அவன் அவனுடைய ரூம்ல தான் இருக்கான். அந்த மகிஷா பொண்ணு தான் அவன்கூட இருக்கா.” என்று அவர் கூறியதும் ஆதியைப் பார்க்க அவனது அறைக்கு வந்தான். ஆனால் உள்ளே பேச்சுக் குரல் கேட்க, அப்படியே அங்கேயே நின்று என்ன பேசுகிறார்கள் என்று அமைதியாகக் கேட்டான்.

“ஆதி இன்னும் நீ இப்படியே எவ்ளோ நேரம் உட்கார்ந்திருக்கப் போற!”

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மகி. நான் கொஞ்சம் கூட இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. மயூரா வேண்டாம்னு சொல்லும் போது எனக்குப் பெரிய விஷயமா தெரியலை. ஆனால் இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏதோ தப்பு பண்ண மாதிரி இருக்கு.”

“சாரி ஆதி. இது எல்லாம் என்னால தான் நடந்தது. அன்னைக்கு மயூரா இங்க வந்தப் போதே நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் கோபமா பேசிட்டேன். இதுல அவளை அடிக்க வேற செஞ்சுட்டேன். நான் அப்படி செஞ்சுருக்க கூடாது. நான் போய் பேசுறேன் ஆதி. கண்டிப்பாக மயூரா புரிஞ்சுப்பாங்க. நீ கவலைப்படாத என்னால வந்த பிரச்சனையை நானே சரி பண்றேன்.” என்று மகி கூற,

ஆதிக்கு இரண்டு மனதாக இருந்தது. ஒரு மனது அவளைப் போய் பேசு என்று சொன்னது. இன்னொரு மனதோ மயூரா தன்னைச் சந்தேகப்பட்டாள் அதனால் வேண்டாம் என்று சொன்னது. அவனது குழப்ப முகத்தைப் பார்த்து மகிஷாவுக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,”ஆதி உன்னுடைய மனநிலை எனக்குப் புரியுது. இப்போ நீ குழப்பமா இருக்க. நீ எதைப் பத்தியும் யோசிக்காத நான் போய் கண்டிப்பா பேசுறேன் மயூராவிடம்.” உறுதியாக மகிஷா கூற, ஆதிக்கு நிம்மதியாக இருந்தது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஷ்வாவுக்கு மகிஷா மீது கோபமாக வந்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

விஷ்வாவை அங்குப் பார்த்த ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“வா விஷ்வா.”

“துர்கா மா எல்லாம் சொன்னாங்க. நீ கவலைப்படாத ஆதி. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். நீ வருத்தப்படாத.” விஷ்வா கூறியதைக் கேட்ட ஆதிக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

“ரொம்ப தாங்க்ஸ் விஷ்வா. நீ இப்படி பேசுனது எனக்குச் சந்தோஷமா இருக்கு.” ஆதிச் சொல்ல, அவனைப் பார்த்து சிறிதாக சிரித்துவிட்டு, மகிஷாவை முறைத்து விட்டு அங்கிருந்து தனது அறைக்குச் சென்றான். மகிக்கு ஒன்றுமே புரியவில்லை எதற்கு விஷ்வா முறைத்துக் கொண்டு போகிறான் என்று. அவள் அதை ஆராயாமல் மயூராவிடம் என்ன பேச வேண்டும் என்று மனதில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“சரி ஆதி, நீ கவலையை விடு. நான் பார்த்துக்கிறேன். மயூரா கண்டிப்பாக வந்து உன்னிடம் பேசுவா சரியா.” என்று நம்பிக்கையாகக் கூறிவிட்டு மகிஷா அங்கிருந்து வெளியே வந்நாள். நேரே அவளது அறைக்குச் சென்றாள். அவளது வேலட்டை எடுத்துக் கொண்டு மயூராவைப் பார்க்க அவளது வீட்டிற்குச் சென்றாள்.

மயூரா அவளது வீட்டில் சோகமே உருவமாக அமர்ந்திருந்தாள். மகிஷாவிற்கு அதைப் பார்க்க அவ்ளோ சந்தோஷமாக இருந்தது. ஆனால் முகத்தில் எதுவும் காட்டாமல் அவள் உள்ளே நுழைந்தாள்.

“மயூரா.” என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்தாள் மகிஷா. அவளை அங்குப் பார்த்ததும் மயூராவுக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. ஆக்ரோஷத்துடன் எழுந்து வந்து அவளது தோள்பட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு,”இப்போ உனக்குச் சந்தோஷமா? அப்படி என்ன சாதிச்ச நீ என்னையும் ஆதியையும் பிரிச்சு?”

“இங்கப் பார் மயூரா நீங்கப் பிரிய நான் காரணம் இல்லை. உன்னுடைய சந்தேகப் புத்தி தான் காரணம். எத்தனைப் பொண்ணு ஆதியோட வாழ்க்கைல வந்தாலும் அவன் உன்னை ஏமாத்த மாட்டான்னு நீ நம்பிருக்கனும். ஆனால் நீ நம்பலை. அதனால் தான் இவ்ளோ பிரச்சனையும். இப்போவும் புரிஞ்சுக்காம பேசுற நீ!! ஆனால் அங்க ஆதி உன்னையே நினைச்சுட்டு உட்கார்ந்திருக்கான். ஆதி உன் இடத்துல இருந்து நீ ஆதி இடத்தில் இருந்திருந்தால் கண்டிப்பா ஆதி உன்னைச் சந்தேகப்பட்டிருக்க மாட்டான். சரி விடு அவன் உன்னை உண்மையா காதலிச்சான். ஆனால் நீ? ம்ச் அது எதற்கு எனக்கு. நான் இங்க வந்ததே என்னால தான் பிரச்சனை வந்தது. அதனால நான் என்ன செய்தால் நீ பழையபடி இருப்பனு சொன்னைனா நான் செய்யத் தயாராக இருக்கேன். எனக்கு ஆதி சந்தோஷம் தான் முக்கியம்.”

“அப்போ எனக்கு ஆதியோட சந்தோஷம் முக்கியமில்லைனு சொல்றியா? உனக்கு ஆதி மேல இருக்கிற அக்கறை எனக்கு இல்லைனு சொல்றியா?”

“இங்கப் பார் மயூரா நான் உன் கூட சண்டை போட வரலை. உனக்கு வேணா ஆதி எப்படி போனாலும் பரவாலை ஆனால் எனக்கு அப்படி இல்லை. அவன் என்கூட கொஞ்ச காலம் பழகியிருந்தாலும் அவன் என்னோட ப்ரண்ட்.(இந்த வார்த்தையை அவள் கஷ்டப்பட்டுக் கூற, மயூரா அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.) அவனுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.”

“அது என்ன ப்ரண்ட்னு சொல்லும் போது உன் வாய் துடிக்குது? அப்போ ஆதி உனக்கு வெறும் ப்ரண்ட் மட்டுமில்லை ஆம் ஐ கரெக்ட்?” நக்கலாக மயூரா கேட்க,

“நான் ஆதி அங்க சோகத்துல இருக்கான்னு சொல்றேன். ஆனால் நீ அதைப் பத்திக் கவலைப் படாமல் எனக்கும் ஆதிக்கும் நடுவில் என்ன இருக்குனு தான் இப்பவும் யோசிக்கிற. ஆனால் நான் அப்படி இல்லை, சரி என்னைப் பத்தி எதற்கு இப்போ பேசனும். அப்புறம் இன்னொன்னு மயூரா இப்போ ஆதி எனக்கு ப்ரண்டா இல்லையாங்கிறது பிரச்சனை இல்லை. நீயும் ஆதியும் பழையபடி சந்தோஷமாக இருக்க வேண்டும். அது மட்டும் தான் எனக்கு வேண்டும்.”

“அது நீ இருக்கிற வரை நடக்காது. நீ இங்க இருந்து போனாலே எல்லாம் நல்லபடியாக நடக்கும்.”

“சரி நான் இங்கிருந்து கிளம்பிடுறேன். நாளைக்கே வேற பொண்ணு கூட ஆதி பேசினால் நீ சந்தேகப்படாத. பாவம் ஆதி இன்னொரு தடவை அந்த மாதிரி கஷ்டத்தை அவனால் அனுபவிக்க முடியாது.”

“ரொம்ப தான் அவன் மேல அக்கறையா இருக்க!! அப்படி என்ன எங்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு?”

“மயூரா திரும்பவும் சொல்றேன் ஆதி மாதிரி ஒருத்தன் கிடைக்க நீ கொடுத்து வச்சுருக்கனும். உனக்கு ஆதியோட அருமை புரியலை. உன்னோட இடத்துல நான் இருந்திருந்தால் நான் ஆதியை அப்படி பார்த்திருப்பேன். நீ ரொம்ப தப்பு பண்ற. சரி அதையெல்லாம் விடு. நான் இங்கிருந்து கிளம்பிடுறேன். நீ ஆதியோட சந்தோஷமாக இரு.” என்று சொல்லிவிட்டு திரும்ப, அங்கு ஆதியைக் கண்ட மகிஷா அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, மயூராவிற்கு அவனைப் பார்த்ததில் சந்தோஷம். வேகமாக ஓடிச் சென்று அவனைக் கட்டிப்பிடிக்க, அவளை அவனிடமிருந்து பிரித்து அவளைப் பார்த்து முறைத்தான். மயூராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“ஆதி…” என்று அவள் ஏதோ பேச வர, ஆதி அவன் கையைக் காட்டி அவளை நிறுத்தச் சொல்லிவிட்டு மகிஷாவிடம் சென்று,”மகி நீ இங்கிருந்து போய் தான் அவள் என்னுடைய காதலை புரிஞ்சுக்கனும்னா அப்படிப்பட்ட காதலே எனக்கு வேண்டாம். நீ சொன்ன மாதிரி அவளை நான் ரொம்ப நேசித்தேன். அதான் எனக்குக் கஷ்டமா இருக்கு. ஆனால் அவள் நான் சோகமாக இருக்கேன், அவளை விட்டுட்டு இருக்கிறது கஷ்டமா இருக்குனு நீ சொல்லியும் அவள் உனக்கும் எனக்கும் நடுவில் என்ன இருக்குனு கேட்டு இருக்கா. அவளோட பாசம் அவ்ளோ தான். நீ இனிமே எனக்காக யாரிடமும் கெஞ்ச வேண்டாம். வா போகலாம்.” என்று அவள் கையைப் பிடித்து அங்கிருந்த நகர, மகிஷா மயூராவை வெற்றிப் பார்வை ஒன்று பார்த்தாள். அப்பொழுது தான் மயூராவிற்கு எல்லாமே புரிந்தது. மகிஷா தன்னிடம் ஆதிக்காக பேச வருவது போல் வந்து தன்னை உசுப்பேத்தி ஆதியை தன்னிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிக்க இந்த மாதிரி செய்துள்ளாள் என்பது

“ஆதி அவள் உன்னை ஏமாத்துறா! உன்னை இங்கக் கூடிட்டு வந்து என் வாயை கிண்டி இப்படி பேச வச்சுட்டா ஆதி. நான் சொல்றதை நம்பு. இவள் ஏதோ பெரிய திட்டத்தோட தான் இங்க வந்துருக்கா.”

“வாயை மூடு! நான் இங்க வந்ததே மகிக்கு தெரியாது. உன்னைப் பார்க்கத் தான் நான் வந்தேன். மகி என்கிட்ட உன்கிட்ட வந்து பேசுறேன்னு சொன்னா ஆனால் இப்படி உடனே வந்துப் பேசுவானு நான் எதிர்பார்க்கலை. நான் எதார்த்தமா தான் இங்க வந்தேன். அதுவும் நல்லதா போச்சு. உனக்கு என் மேல் பஞ்சமில்லைனு நல்லா புரிஞ்சுக்கிட்டேன். இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத. நீ யாரோ நான் யாரோ.” என்று கோபமாக ஆதி கூற, மயூரா அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தாள்.

“ஆதி எதுவா இருந்தாலும் யோசிச்சு செய். மயூரா ஏதோ என் மேல உள்ள கோபத்துல அப்படி பண்ணிட்டா. இதைப் பெரிய விஷயமா எடுத்துக்காத. அவளுக்கும் உன் மேல பாசம் நிறைய இருக்கு.”

“ஏய் நீ எதுவும் பேசாத. எல்லாம் உன்னால தான். நல்லா ப்ளான் பண்ணி எங்களை பிரிச்சுட்டு இப்போ ஆதி முன்னாடி நல்லவளாட்டம் வேஷம் போடுறியா?”

“வாயை மூடு மயூரா. இனிமே ஒரு வார்த்தை மகி பத்தி பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன். உன்னைப் போய் நான் காதலிச்சேன் பார்த்தியா என்னை சொல்லனும். என் புத்தியை சொல்லனும். சை உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. இவகிட்ட எதுவும் நீ பேச வேண்டாம். நாம போகலாம்.” என்று கையோடு அவளை அழைத்துக் கொண்டு போனான் ஆதி. மகி மயூராவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கையை ஆட்டி டாட்டா காட்டி விட்டு சந்தோஷமாக அங்கிருந்து சென்றாள்.

ஆதி கோபமாக அவனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

“ஆதி விடு. ஏன் இவ்ளோ டென்ஷன்?”

“என்ன பேசுற மகி நீ? என்னால தாங்கிக்கவே முடியலை. இது தான் அவளோட கேரக்டரா? நான் தான் ஏமாந்துட்டேன்னா?”

“ஆதி நீ இப்போ எதைப் பத்தியும் யோசிக்காத. இங்கப் பார் கீதாச்சாரத்தில் சொன்னது இது தான்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
இதை நீ உள்வாங்கிக்கோ ஆதி. எல்லாமே நல்லதே நடக்கும். நீ இப்போ தூங்கு மைன்ட் கொஞ்சம் ஃப்ரஷ் ஆகும். மயூராவும் யோசிப்பா, அவளுடைய தப்பு புரியும். கண்டிப்பா உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்கத் தான் போறா.”

“ம்ச் அப்படியே அவள் வந்தாலும் அவள் எனக்கு வேண்டாம். நான் இதில் இப்போ தெளிவாக இருக்கேன். நீ எனக்கா இன்னொரு தடவைப் போய் அவகிட்ட எதுவும் பேச வேண்டாம்.”

“சரி ஆதி நான் போய் பேசலை. நீ இப்போ ரெஸ்ட் எடு.” என்று அங்கிருந்து தனது அறைக்குச் சென்றாள் மகிஷா.

அவளது அறைக்கு வந்தவள் மகிழ்ச்சியாக அவளது பெட்டில் படுத்து,”ஹப்பாடா எங்க இந்த ஆதியும் மயூராவும் சேர்ந்துவாங்களோனு நினைச்சேன். நல்ல வேளை அது நடக்கலை. இது தான் சரியான நேரம் நாம உள்ள புகுந்து ஆட வேண்டிய எல்லா ஆடத்தையும் ஆடிடனும். இனி மயூராவும் ஆதியும் சேரவேக் கூடாது.” என்று தனக்குத் தானே வாய்விட்டுப் பேசிக் கொண்டாள். அப்பொழுது அவளது அறைக் கதவு தட்டப்பட மகிஷா சென்று கதவைத் திறந்தாள். எதிரில் இருந்த நபரைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்ன சார் ரூம் மாறி வந்துட்டீங்களா?”

“அதலாம் இல்லை கரெக்ட்டா தான் வந்தேன். உன்கிட்ட கொஞ்சம் பேசனும்னு உள்ள போய் பேசலாமா?” என்று கேட்டுக் கொண்டே வந்தது விஷ்வேஷ்வரன் தான்.

“என்ன ஒரு அதிசயம். என்னைப் பார்க்க நீங்க என் ரூம்க்கு வந்துருக்கீங்க அதுவும் கையில் டீயுடன்? என்ன விஷயம் விஷ்வேஷ்வரன் சார்?”

“உனக்குத் தான் எடுத்துட்டு வந்தேன்.” என்று கூறி மகிஷாவிடம் தருவது போல் சிறிதை அவளின் ஆடை மேல் கொட்ட,”அச்சோ சாரி மகிஷா.”

“என்ன சார் டீயை என் மேல் கொட்டத் தான் என் ரூம்க்கு வந்தீங்களா?”

“அதனால் எனக்கு எந்தப் பலனுமில்லை. தேவையில்லாமல் வீணாகக் கற்பனை பண்ணிக்காத. சரி போய் தொடச்சுட்டு வா. நான் இங்க இருக்கேன்.” என்று விஷ்வா கூற, அவனைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்து விட்டு அங்கிருந்து பாத்ரூமிற்குள் நுழைந்தாள். அவள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் விஷ்வா மகிஷாவின் வேலட்டை எடுத்து அதற்குள் வைத்திருந்த அவனது இன்னொரு அலைபேசியை வெளியே எடுத்துவிட்டு திரும்பவும் அதே இடத்தில் வேலட்டை வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.

மகிஷா ஆதியிடம் தான் சென்று மயூராவிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறியதைக் கேட்ட விஷ்வாவுக்கு கோபமாக இருந்தது. அவள் என்ன பேசப் போகிறாள் என்று தெரிந்து கொள்ள அவனிடம் இருந்த இன்னொரு அலைபேசியை மகிஷா அறைக்கு வருவதற்கு முன் சென்று அந்த அலைபேசியிலிருந்து அவனது இன்னொரு அலைபேசிக்கு கால் செய்து விட்டு அவளது வேலட்டில் வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மகிஷா அவனைப் பார்த்து,”அப்புறம் சொல்லுங்க சார் எதற்கு என்னைப் பார்க்க வந்தீங்க?”

“ஒரு சாரி அண்ட் தாங்கஸ் சொல்ல தான் வந்தேன்.”

“சாரி அண்ட தாங்கஸா? எதற்கு?”

“டோண்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. அதை நான் மறந்து உன்னைப் பார்த்ததும் நான் தப்பா புரிஞ்சு உன்கூடவும் சண்டை போட்டேன் அதற்குத் தான் சாரி. அப்புறம் தாங்க்ஸ் வந்து நீ ஆதிகூட பேசினதை நான் கேட்டேன். என் தம்பிக்காக நீ மயூராகிட்ட பேசினதுக்கு.”

“அடடா உங்களுக்கு ஆதி மேல கூட அக்கறை இருக்கு போல?”

“கண்டிப்பாக, எனக்கு அவன்கிட்ட சில மனஸ்தாபங்கள் இருக்கிறது உண்மை தான் அதற்காக அவன் என்னுடைய எதிரி இல்லை.”

“ஓ ஓகே. நானும் சாரி அன்னைக்கு உங்க கூட சண்டை போட்டதுக்கு.”

“இருக்கட்டும் பரவாலை மகிஷா. அப்போ நான் வரேன். இதைச் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.” என்று கூறிவிட்டு மகியின் அறையிலிருந்து வெளியே வந்தான்.

விஷ்வா அவனது அறைக்குச் சென்று,”உஃப், எவ்ளோ பொய் சொல்ல வேண்டியதா இருக்கு. இந்த மகிஷா எதற்கு ஆதியையும் மயூராவையும் பிரிக்க நினைக்கிற? ஒரு வேளை இவள் ஆதியைக் காதலிக்கிறாளா? அப்படி இருந்தால் கண்டிப்பாக அதை நடத்த நான் விட மாட்டேன். ஆதி நான் இருக்கிற வரை உனக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடக்க நான் விட மாட்டேன்.” என்று தனக்குத் தானே சூளுரைத்துக் கொண்டான்.

-வருவாள்.