மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 13

காலைச் சூரியன் தன் கதிர் கொண்டு பூமியை தொட்டிருக்க. இரவு வெகுநேரம் தூக்கம் வராமல் தவித்து, விடியும் பொழுது தான் தன்னை மறந்து கண்ணயர்ந்த தியா, ஜன்னல் திரைச்சீலை காற்றில் விலகி பறந்து கொண்டிருக்க, அந்த இடைவெளியில் உள்ளே புகுந்த சூரியா வெளிச்சம் அவள் கண்ணில் முள்ளாய் குத்த, மெதுவாக கண்விழித்தாள். அறையில் முழுவதும் வெளிச்சம் சூழ, எழுந்து சென்று திரைச்சீலை முழுதும் விலக்கி அக்கினி குழம்பாக கொதித்துக் கொண்டிருந்த சூரியனை பார்த்தவள் மனதில் மட்டும் ஏனோ இருள் மண்டிக்கிடந்தது. இன்று மாலை அவள் அகரனுக்கு நிச்சயதார்த்தம். அவள் இருக்கவேண்டிய இடத்தில் அவள் தங்கை இருக்கப்போகிறாள். இதுவரை அவளிடம் இருந்த கனவிலும், எண்ணத்திலும் அவனை நினைக்கும் உரிமை இன்றோடு முடியப் போகிறது. அடுத்தவள் கணவனை நினைவில் சுமப்பது கூட அவன் மனைவிக்கு, தன் தங்கைக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தவள். கடைசியாக அகரனை பார்த்தது முதல் அதன் பின் அவனுடன் அவள் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்து பார்த்தவள் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவளின் அகரன் நினைவுகளையும் அவள் மனதில் இருந்து வழித்துக்கொண்டு கீழே வடிந்தது. தன் மனதை கஷ்டப்பட்டு ஒரு நிலைக்கு கொண்டு வந்தவள், கதவு தட்டும் ஓசை கேட்டு கதவை திறந்து‌ பார்க்க. மஞ்சள் பூசிய முகத்தில் மென் சிரிப்போடு அகிலா பாட்டி நின்றிருந்தார்.

“தியாம்மா இப்ப தான் எழுந்திய?” என்று கேட்டபடி உள்ளே வந்தவர். “கொஞ்சம் சீக்கிரம் குளிச்சு இந்த பாவாடை, தாவணிய கட்டிட்டு வாடா. வெளிய போகணும்” என்று பெரிய சரிகை போட்ட பட்டு பாவாடை, தாவணியை தியா கையில் கொடுக்க. தியா பாட்டியை புரியாமல் பார்த்தவள். “இவ்ளோ காலையில எங்க பாட்டி போகணும்? அதுவும் வீட்டுல எங்கேஜ்மென்ட் பங்க்ஷன் வச்சிட்டு வெளிய போகணுன்னு சொல்லிறீங்க” என்றவள் குரல் கம்மிவிட, பாட்டி அவள் தலையை அன்பாக வருடியவர். “நம்ம பக்கத்து ஊர் கோயிலுக்கு போகணும் ம்மா. நீ நல்லாபடி இங்க திரும்பி வந்த, அந்த கோயில் சாமிக்கு பூச பண்ணி, அன்னதானம் பண்றத வேண்டி இருந்தேன். அதுக்கு தான்டா இப்ப நம்ம கோயிலுக்கு போறோம். இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு உன் தாத்தா தான் இன்னைக்கே வேண்டுதலை செஞ்சிட சொன்னாரு‌.‌‌.. நீ கெளம்புமா. நம்ம போய்ட்டு மதியத்துக்குள்ள வந்திடலாம்” என்றவர் தியாவை குளியலறைக்குள் கொண்டு விட்டு செல்ல. தியா குளித்து முடித்து தயாராகி கீழே வர. அங்கு பெரிய இரண்டு கார்களில் இவளுக்காக பாட்டியோடு காத்திருந்தனர் வீட்டு பெண்கள் அனைவரும், அரும்பு, சரண்யாவை தவிர. தியா அனைவரையும் பார்த்து இதழ் விரித்து சிரித்தவள். காரில் ஏறிக்கொள்ள. கார் அடுத்த ஒரு மணிநேரத்தில் கோயில் வாசலில் நின்றது.

ஏற்கனவே தாத்தா அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்க, கண்ணும் மனதும் நிறையும் படி பூஜை நிறைவு பெற, அன்னதானத்தை தியா ஆரம்பித்து வைக்க, பொதுமக்களுடன் தியா மற்றும்‌ அனைத்து பெண்களும் அன்னதானம் உணவை உண்டு முடித்து, மறுபடியும் இறைவனை வணங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் வீடு திரும்பும் போது மணி இரண்டை தொட்டிருக்க, வீட்டில் நிச்சயதார்த்த வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

திரவியம் தாத்தா, ” கொஞ்ச நேரம் போய் எல்லாரும்

ரெஸ்ட் எடுத்திட்டு, நிச்சையத்துக்கு தயாராகுங்க. நேரமா எல்லாரும் வந்திடணும்” என்று அனைவரையும் விரட்டியவர். தியா அருகில் வந்து, அவள் கையில் ஆகாய வண்ண நிறத்தில், தங்கசரிகை போட்ட பட்டு புடவையையும், சில நகைகளையும் தந்தவர். “சாயந்திரம் இதை போட்டுட்டு வா… டைம்கு வந்திடணும்” என்று அதிகாரமாக சொல்லிவிட்டு செல்ல. தியா அமைதியாக தன் அறைக்கு சென்றாள்.

மாலை நான்கு மணிபோல் கையில் பூவுடன் தியா அறைக்குள் நுழைந்த பாட்டியும், மகாவும், “இந்த அரும்பு பண்ற அழும்பு தங்கல அத்தம்மா. இன்னும் மூனு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு இன்னும் புடவை கூட கட்ட தெரியல அவளுக்கு‌… இவளயெல்லாம் வச்சிட்டு நா என்ன தான் பண்றது?” என்று மகா புலம்ப… “அந்த சில்வண்ட சொல்லி என்னடி புன்னியம். எல்லாம் பெத்தவ உன்னை சொல்லணும். செக்கு ஒலக்க மாதிரி வளந்திருக்கவளுக்கு புடவ கட்ட கூட சொல்லிதராத உன்னை தான்டி சொல்லணும்” என்று மருமகளை செல்லமாக திட்ட. “என்னை குறை சொல்லாட்டி உங்களுக்கு அந்த நாளே தள்ளாதே” என்று சிரித்துக்கொண்டே தியாவை பார்த்த மகா, “என்ன தியா? நீ இன்னும் ரெடியாகலயா? டைமாகுதுமா…” என்றவர் அவள் முகம் பார்க்க, அவள் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. “அய்யோ தியா… என்னடா ஆச்சு? ஏன் கண்ணு கலங்கியிக்கு?” என்று சித்தியும், பாட்டியும் பதற… தியா மெல்ல தலைநிமிர்ந்து அவர்களை பார்த்தவள். தயங்கி தயங்கி, “எனக்கு புடவ கட்ட தெரியாது சித்தி” என்று சின்ன குரலில் சொல்ல… மகா, பாட்டி இருவருக்கும் விழிகள் நனைந்துவிட்டது. 

“அதுக்கு ஏன்டா இப்ப நீ அழற? புடவ தானா… தோ ஐஞ்சு நிமிஷத்துல சித்தி அழகா கோயில் சிலை மாதிரி சூப்பரா கட்டிவிடுறேன். யூ டோண்ட் வாறிடா மை டியர் மகளே” என்றவர் அடுத்த ஐந்து நிமிடத்தில் கச்சிதமாக தியாவுக்கு அந்த பட்டு புடவையை கட்டி முடிதிருக்க. பாட்டி ஒரு நிமிடம் தியாவை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவர். “ஒரு நிமிஷம் மகா நா தோ வந்துடுறேன்” என்று வேகமாக சென்றவர். கையில் ஒரு பெட்டியுடன் திரும்பி வந்தவர். அதை திறக்க அதில் கொஞ்சம் பழைய டிசைன் நகைகள் சிலது இருந்தது. அதை மகாவிடம் கொடுத்து தியாவுக்கு போட்டு விடச் சொல்ல…

“பாட்டி தாத்தா ஏற்கனவே புடவையோட நகையும் தந்திருக்காரு. இதுவேற எதுக்கு பாட்டி!? நீங்க இத அரும்புகிட்ட குடுங்க, அவ தானா கல்யாணம் பொண்ணு, எனக்கு எதுக்கு இவ்ளோ நகை” என்று மறுக்க. மகாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள். “அரும்புக்கு ஏற்கனவே தாத்தா நெறய நகை வாங்கியிருக்காரு, அதோட இது நியாயமா உனக்கு சேரவேண்டியதும்மா. இதுல உங்க அப்பன் வேலை கெடச்சு முதல் சம்பளத்தில் எனக்கு வாங்கித் தந்த செயின் இருக்கு, அதோட உங்க அம்மா தேன்மொழியோட அம்மா. உன்னோட பாட்டி சாகும்போது, நீங்க திரும்பி இங்க வந்த உங்க அம்மாகிட்ட குடுக்க சொல்லி தந்திட்டு போன நகைங்களும் இதுல இருக்கு. இது உன்னோடதும்மா. இத நீ போட்டுக்கிட்ட உன்னோட அப்பா, அம்மாவே உன் கூட இருக்க மாதிரிம்மா” என்று பாட்டி சொல்ல, தியா மெல்ல அவள் தந்தை பாட்டிக்கு வாங்கித் தந்த செயினை கையில் எடுத்தவள் கண்கள் இப்போதே அழுதுவிடுவேன் என்ற நிறையில் இருக்க. “திரவி இன்னும் நீ ரெடியாகலயா?” என்று கீழே இருந்து தாத்தா போட்ட சத்தத்தில் கண்ணீர் காணாமல் போய்விட, “தோ தாத்தா வந்துட்டேன்” என்றவள் தலையில் மகா பூவை வைத்து நகைகளை போட்டு விட… அழகாய் தயாரானால் தியா.

கல்யாணத்தை வெகு சிறப்பாக செய்ய முடிவுசெய்து, நிச்சயதார்த்தத்தை வீட்டோடு மிகவும் நெருங்கிய சொந்தங்களை வைத்து முடித்துவிட ஏற்பாடு செய்திருந்தார் திரவியம் தாத்தா. வீட்டில் இருந்தவர்கள், மற்றும் சூர்யாவின் குடும்பம் இன்னும் சில சொந்தங்கள் மட்டும் அந்த பெரிய ஹாலில் கூடி இருக்க, மடியில் இருந்த தன் அறையில் இருந்து வெளியே வந்த தியா எதிரில் முகம் முழுவதும் சிரிப்புடன் வந்து நின்றனர் அரும்பு மற்றும் சரண்யா இருவரும். தியா கட்டி இருந்து புடவை போலவே அதே நிறத்தில் அதே டிசைனில் அரும்பு, சரண்யா இருவரும் உடுத்தியிருக்க, தியா திரும்பி பாட்டியை பார்க்க… “உன் தாத்தா தான் மூனு பேருக்கும் ஒரு மாதிரி எடுக்க சொன்னாரு” என்றவர். “சீக்கிரம் வாங்க, கீழ போலாம்” என்றவர் மகாவுக்கு கண்காட்டி விட்டு செல்ல… தியா ஒரு மாதிரி குழம்பிய நிலையிலேயே படியிறங்கி கீழே வர, அங்கு ஹாலில் சொந்தங்கள் சுற்றி அமர்ந்திருக்க, தாத்தா அருகில் பட்டு, வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தனர் அகரன், நிலவன் மற்றும் அருள். 

 தியா, அரும்பு, சரண்யா மூவரையும் பாட்டி தன் அருகில் அமர்த்திக்கொள்ள… தியா அங்கு நடக்கும் எதிலும் மனம் செல்லாமல், இரும்பாய் இறுகி இருக்க, தாத்தா தியாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவர். “என்னோட பேத்தீங்க திரவியாவை அகரனுக்கும், அரும்பை நிலவனுக்கும், சரண்யாவை அருளுகும் கல்யாணம் செஞ்சு கொடுக்க முடிவு பண்ணி இன்னைக்கு அவங்க கல்யாணத்தை பெத்தவங்க சம்மதத்தோட நிச்சயம் பண்றோம்” என்று தன் கம்பீர குரலில் சொல்லி முடிக்க, அதுவரை எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், தாத்தா சொன்னதைக் கேட்டு. தன் காதுகளையே நம்பாமல் அதிர்ந்து போய் தாத்தாவை பார்க்க, அவர் தியாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவர். “செந்தில் நீ தாம்பூல தட்டை எடுத்து உன் அக்கா, மாமா கையில கொடு” என்று சொல்ல, தியா “அய்யோ தாத்தா ஒரு நிமிஷம், நா… நானும் அகரனும்… அப்ப அரும்பு…? அவ பாவமில்ல?” என்று கோர்வையாக பேசமுடியாமல் தத்துபித்தென்னு உளறி கொட்ட, அரும்பு பட்டென எழுந்தவள். “தாத்தா ஒரு நிமிஷம் நா அக்காகிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடுறேன்” என்றவள் தியா கையை பிடித்து இழுத்தவள். “எழுந்து வா என் கூட” என்று அவளை இழுத்து கொண்டு தன் அறைக்கு சென்றவள். “இப்ப உனக்கு என்னக்கா பிரச்சனை? எதுக்கு அங்க தத்துபித்துன்னு ஒளர்ர?” என்ற அரும்புவை குழப்பமாக பார்த்த தியா, “ஏய்… லூசாடி நீ?? அங்க என்ன நடக்குதுன்னு புரிஞ்ச தான் பேசுறியா?? அங்க எனக்கும் நீ காதலிச்சவனுக்கும் நிச்சயம் பண்றாங்கடி… உனக்கு காதுல விழுகலய?” என்று கத்த

“ஹலோ அக்கா… எனக்கு காதெல்லாம் நல்லா தான் கேக்குது. நா சரியா தான் எல்லாத்தையும் கேட்டேன். நா காதலிச்சவன் கூட, என்னை காதலிச்சவன் கூட தான் என் கல்யாணம் நடக்கப்போகுது. நீதான் எதுவும் புரியாம குழம்பிட்டு இருக்க” என்றவளை அதிர்ந்து பார்த்த தியா, “ஏய் நீ என்னடி சொல்ற? அப்ப நீ அகரனை லவ் பண்ணலயா? அப்ப எதுக்குடி அன்னைக்கு உங்க கல்யாணம் பத்தி தாத்தா சொன்ன அன்னைக்கு என்னை அப்டி திட்னா? ஏன்டி என் மாமாவை ஏமாத்தினனு சாமி வந்த மாதிரி ஆடுன? அதுக்கு என்னடி அர்த்தம்?”

“ம்ம்ம் என்ன அர்த்தம்?! நீயும் அந்த வீணாபோன நிலவனும் தான் லவ் பண்றீங்கன்னு நா தப்ப புரிஞ்சிக்கிட்டேன்னு அர்த்தம். அதான் என் மாமாவை நீ ஏமாத்திட்டனு உன்னை திட்டுனேன்.” என்றவள் “அன்னைக்கு ஒரு நாள் நீயும், நிலவனும் மாடியில் பேசியதை அரைகுறையாக கேட்டு, நிலவன் உன்னை லவ் பண்ணுதுனு நா தப்பா நெனச்சிட்டேன். சின்ன வயசுல இருந்து நிலவன்னா எனக்கு உயிரு. அது எனக்கு இல்லாம போனாலும் அது விரும்புனா உன்னோட நல்லா இருக்கணும்னு தான் நா நெனச்சேன். அதான் அன்னைக்கு உன்னை திட்டுனேன். அப்றம் தான் தெரிஞ்சிது அந்த பிசாசும் என்னை தான் விரும்புதுனு” என்றவள் அழகாய் அசடு வழிய தியாவுக்கு ஒரு பக்கம் குழப்பமாகவும் மறுபக்கம் நிம்மதியாகவும் இருந்தது. தீடிரென ஏதோ ஞாபகம் வந்த தியா, “ஆமா நீ நிலவன் என்னை லவ் பண்றத நெனைச்சு என்னை திட்டுன சரி, ஆனா, எதுக்குடி என்னை திட்டுன…? எனக்கு புரியலயே?? என்னை திட்ட ஒரு காரணமும் இல்லயே?” என்றவள் முகத்தில் தெரிந்த குழப்பம் அரும்புக்கு தெரிவாக புரிய… “இங்க பாரு தியாக்கா. இங்க நா உன்னை திட்டுன காரணம் மட்டும் இல்ல, இங்க நெறய விஷயம் உனக்கு புரியல, அதுல முதல் விஷயம் அன்னைக்கு தாத்தா அகரன்‌ மாமாக்கு கல்யாணம்னு சொன்னது உண்மைதான் ஆனா, கல்யாண பொண்ணு நா இல்ல. நீதான்…!” என்று பெரிய குண்டை தூக்கிப்போட தியா அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். “ஆமாக்கா உண்மை தான். நீயும் அகரன் மாமாவும் விரும்புறீங்கன்னு தெரிஞ்ச தான் தாத்தா உங்க கல்யாணத்தை முடிவு செய்தாங்க… கனடா இருந்து பெரியப்பா, பெரியம்மா வந்ததும் முறைப்படி பேசி முடிவு செய்யலாம்னு இருக்கும்போது தான் அந்த வீணாபோன விஷ்வா வந்து ஆட்டதை கலச்சிட்டான். எங்க உன்னை பிரிச்சு பெரியப்பாக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து தான் தாத்தா உன்னை திரும்ப போகச் சொன்னாரு… நீ அன்னைக்கு ஏர்போர்ட்ல அகரன் மாமாவை உனக்கு குடுத்துவைக்கல, நீ அவரை நல்லா பாத்துக்கோன்னு சொன்னப்ப தான் எனக்கே புரிஞ்சிது. நீ எனக்கும் அகரன் மாமாக்கும் கல்யாணம்னு தப்ப புரிஞ்சிட்டு, எங்க நீ இங்க இருந்த என்னோட கல்யாணத்துக்கு பிரச்சனை வருமோ, அதனால தாத்தாக்கு எதும் ஆகிடுமோன்னு பயந்து இங்கிருந்து போய்ட்டா க்கா. நா காதலிக்கிறவரை நீ விரும்பலக்கா. அகரன் மாமா மனசு பூர நீதான் இருக்க” என்றவள் கம்மிய குரலில், “அக்கா இங்க… இங்க..‌. எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சு போச்சுக்கா. நா எல்லார் கிட்டயும் சொல்லிடேன்க்கா ” என்று தலை குனிந்தபடி அரும்பு தயங்கி தயங்கி சொல்ல… தியா புரியாமல் தங்கையை பார்த்தவள். “என்ன உண்மை, எத நீ சொன்ன?” என்று சாதாரணமாக கேட்டவள் பின் அவளின் வாழ்க்கையின் உண்மை நினைவு வர, “ஏய் என்னடி உண்மை…? எதை சொல்லி தொலச்ச? உனக்கு எப்டி தெரியும்? ஏன் சொன்னா?” என்று அரும்பு தோளைபிடித்து உலுக்க… 

“நா தான் சொன்னேன் தியா” என்று வந்த அவளுக்கு மிகவும் நெருக்கமான அந்த குரலில் திகைத்த தியா திரும்பி பார்க்க… அங்கு மொத்த குடும்பமும் கண்கலங்கி நிற்க… சூர்யா அருகில் நின்றிந்தாள் ஜெசி.