மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 6

கதிரவன் பூமியை கை தொட்டு எழுப்பிய காலை வேளையில், தியா அழகாய் குளித்து முடித்து ஈரம் சொட்டும் தன் தலை மூடியை கையில் கோதியபடி தோட்டத்தில் நின்று நேற்று விஷ்வா சொன்னதை திரும்ப திரும்ப எடுத்துப் போட்டு மனக்கண்ணில் ரீவைன் செய்து பார்க்க, அதற்கு அவள் மூளை ‘வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பேயில்ல’ என்று பதில் சொல்ல, “நா விஷ்வா கூட பேசுனா இந்த அங்கிரி போர்ட்டுக்கு என்ன வந்துது…?? அது ஏன் விஷ்வாவை முறைக்கணும்.?? எப்டி யோசிச்சாலும் லிங்க் ஆகமாட்டிங்கே, ஒருவேள விஷ்வா சொல்ற மாதிரி இருந்தால், நம்ம இங்க வந்த வேளை ரொம்ப ஈசியா முடிஞ்சிடும்… ஆனா, அப்டி நடந்த இந்த விஷ்வா, பைத்தியம் புடிச்ச கொரங்குக்கு தோள் கொட்டுன மாதிரி குதிப்பானே. அத சமாளிக்கணும். இங்க இந்த தாத்தா சிங்கத்து கூட வேற‌ மல்லுகட்டி, அவர் கண்ணுலையும், வாயிலயும் மண்ணை தூவனும். அது யானைக்கு கோவணம் கட்ற மாதிரி பெரிய டாஸ்க் ஆச்சே…!! அய்யோ ஒன்னு புரியலயே. மண்ட காயுதே., பேசாம நம்மளே போய் ஒன் வெட்டு டூ துண்டுன்னு அகரன் கிட்ட கேட்ருவோமா?? ஒருவேளை… அது இல்ல… நீங்க தப்ப புரிஞ்சுன்டேல், நேக்கு அப்டி ஒரு எண்ணமே இல்லன்னு சேது பட ஹீரோயின் மாதிரி சொல்லிட்ட, நமக்கு ஷேம்ம போய்டுமே… ம்ம்ம்ம்ம்!! என்ன ஆனாலும் நம்ம கெத்த மட்டும் விட்ற கூடாது தியா” என்று தனக்கு தானே சொன்னவள், “அப்றம் எப்டி இந்த அகரன் மனசுல இருக்குறத கண்டு புடிக்கிறது??” என்று தன் ஈரக் கூந்தலை விரால் கொண்டு கோதியபடியே யோசிக்க, அவள் தலை முடியை துவட்டியது ஒரு கை… தியா யார் அது என்று திரும்பிப் பார்க்க.. 

 

“ஏன்டாம்மா தலைக்கு குளிச்ச, முடிய சரியா காயவைக்குறது இல்ல. பாரு எவ்ளோ ஈரமா இருக்கு” என்றபடி அகிலா பாட்டி தன் புடவை முந்தானையில் பேத்தியின் ஈரக் கூந்தலை துடைத்துக் கொண்டிருக்க, “இல்ல பாட்டி, இப்ப தான் குளிச்சிட்டு வரேன். துவட்ட தான் துண்டு எடுத்தேன், ஏதோ யோசனையில அப்டியே உக்காந்துட்டேன்” என்றவள் முகத்தில் விழுந்த முடியை காதோரமாக கொஞ்சமாக எடுத்து தலையின் மத்தியில் கட்டியா பாட்டி, “இவ்ளோ காலையில அப்டி என்ன யோசனை என் புள்ளைக்கு” என்று அவள் முன் அமர்ந்த பாட்டியின் தோளில் தலை சாய்த்த தியா, அகரன் பற்றி சொல்ல விரும்பாமல், “அது ஒன்னு இல்ல பாட்டி, உன்ற‌ வூட்டுக்காரர் அந்த ஓல்ட் சிங்கம் பத்தி தான் யோச்சிட்டு இருந்தேன். அவருக்கு என்னை புடிக்கல போல பாட்டி, எப்ப பாரு முறச்சிட்டும், திட்டிட்டும் இருக்காரு” என்று சொல்ல…

 

பாட்டி மெதுவாக தன் சுருங்கி கன்னத்தை வளைத்து சிரித்தவர், “கொஞ்சம் எழுந்து என் கூட வாம்மா” என்றவர் தியாவை அவர் அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த பீரோவில் மறைத்து வைத்திருந்த அழகிய மரத்தில் செய்த பெட்டியை தியா கையில் கொடுத்தவர். 

 

“இத திறந்து உள்ள என்ன இருக்குன்னு பாரு தியாம்மா” என்க…

 

தியா அந்த பெட்டியை திறந்து பார்க்க அதில் பிளாக் அண்ட் ஒயிட் ஃபோட்டோவில் குண்டு குண்டு கண்களோடு கொழு கொழுவென்று இருந்த ஒரு குழந்தையின் புகைப்படம் இருக்க, தியா அதை எடுத்து பார்த்தவள்… “பாட்டி இந்த ஃபோட்டோ” என்று இழுக்க

 

“உன்னோட படம் தான்டா… உனக்கு மூனு வயசு இருக்கும் போது எடுத்து” என்று சொல்ல தியா ஆச்சரியமாக அந்த படத்தை பார்த்தவள்…

 

” இது உங்க கிட்ட எப்டி பாட்டி?” என்று கேட்க…

 

“உங்கப்பன் கல்யாணம் ஆகி உங்க தாத்தா கிட்ட சண்ட போட்டுட்டு போனது தான், அதுக்கு அப்பறம் இந்த வீட்டுக்கு திரும்பி வர்ல டா… நீ பொறந்தது கூட ரொம்ப நாள் கழிச்சு தான் எங்களுக்கு தெரிஞ்சிது. அப்பவே உன்னை வந்து பாக்கணும்னு எங்க எல்லாருக்கு ஆச தான். ஆனா அந்த கெழவன் தன் கௌரவம், மண்ணாங்கட்டின்னு எங்களை விடவே இல்ல… கல்யாணம், விஷேசம் நடக்குற இடத்துல, எங்கயாது மறஞ்சு மறஞ்சு உன்னை பாப்பேன்… அப்டியே உன்னை தூக்கி இடுப்புல வச்சு கொஞ்சணும் போல இருக்கும், எங்க…!! எனக்கு அந்த கொடுப்பினை இல்லாம போச்சு. ஒரு நாள் நானும், அகரனும் கோயிலுக்கு போயிருக்கும் போது உங்க அம்மா தேனு, யாருக்கும் தெரியாம எங்களை பாக்க வந்தாள்… அப்ப அவ குடுத்த ஃபோட்டோ தான் இது. நாங்க இன்னும் கொஞ்ச நாள்ல கனடா போறோம், நேர்ல தான் எங்க பொண்ணை பார்க்க மாமா வரல, ஃபோட்டோலயாது இவளை பார்த்து இவ தாத்தாவை, இவ நல்ல இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ண சொல்லுங்கனு சொல்லி உன் ஃபோட்டேவை என் கையில கொடுத்த. அதை உங்க தாத்தா கிட்ட நாங்க குடுத்தோம். அந்த மனுஷன் அவங்களுக்கும் நமக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லான்னு ஆகிடுச்சே அப்றம் எவ்ளோ தைரியம் இருந்த நீ அந்த தேன்மொழி கிட்ட பேசியிருப்பேன்னு ஒரு கத்து கத்திட்டு உன் ஃபோட்டேவை தூக்கிப் போட்டுட்டாரு, அப்ப என்னால ஒன்னு சொல்ல முடியல, பேசாம இருந்துட்டேன்.‌ இப்ப கொஞ்ச வருஷம் முன் வீட்டுக்கு வெள்ளையாடிக்க வீட்டை ஒழிக்கும் போது அவரோட இந்த பொட்டியில இந்த ஃபோட்டோ இருக்குறதை நானும் அகரனும் பாத்தோம். அப்ப தான் இந்த மனுஷன் இத்தனை வருஷமா உன் ஃபோட்டேவை பாத்திரமா எங்களுக்கு தெரியாம மறைச்சு வச்சிருக்க விஷயமே எங்களுக்கு தெரிஞ்சிது. சரியான களவாணி கெழவன்” என்று பாட்டி சிரிக்க, தியா மெதுவாக அந்த பழைய ஃபோட்டேவை தன் விரால் கொண்டு தடவி பார்க்க அவளையும் அறியாமல் அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அந்த மரப்பெட்டியில் பட்டு தெறித்தது.

 

 “இது மட்டும் இல்ல தியாம்மா, இப்ப உன்னை பார்த்தாலே மூஞ்ச திருப்பிட்டு போறானே அகரன். அன்னைக்கு உங்கம்மா கையில குட்டி பாப்பாவ இருந்த உன்னை ஆசைய முதல்ல கையில வாங்கினதே அவன் தான்… பாட்டி இந்த பாப்பா கண்ணு குண்டு குண்டுன்னு எவ்ளோ அழக இருக்கு, இந்த பாப்பாவை நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு போயி நம்ளே வச்சிக்கலாம்னு சொன்னான் டா அவன். அந்த சின்ன வயசுலயே உன்ன பார்த்த முதல் தடவையிலயே அவனுக்கு உன்னை அவ்ளோ புடிச்சு போச்சு, உன்னை என் கையில கூட குடுக்கல. அவனே இடுப்புல வைச்சிட்டு கோயில் முழுக்க சுத்துனான். கெளம்பும் போது உன்னை உங்க அம்மாகிட்ட தராம, பாட்டி பாப்பாவை நம்ளே வச்சுக்கலாம்னு எவ்ளோ அழுதான் தெரியுமா தியா? அவனுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்மா. ஆனா, அதை காட்டிக்க மாட்டான். உங்கப்பா செஞ்சிக்கிட்ட கல்யாணத்தால உங்க தாத்தா இந்த ஊர் முன்னாடி தலை குனிஞ்சு நிக்க வேண்டியத போச்சு, அதை பார்த்த அகரனுக்கு உங்கப்பா மேல ரொம்ப கோவம். அந்த கோவம் தான் உன்மேல திரும்பி இருக்கு, மத்தபடி அவனுக்கு உன்னை புடிக்கும் டா. அரும்பு, சரண்யா, தாமரை மேல அவனுக்கு எவ்ளோ பாசம் இருக்கோ அதே அளவு அவனுக்கு உன்னையும் புடிக்கும்” என்று பாட்டி சொல்ல, தியா மெதுவாக தலையாட்டியவள், பாட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

 

தன் அறையில் உட்கார்ந்திருந்த தியாவின் எண்ணம் முழுவதும் அகரனை பற்றியே இருந்தது. தாத்தா மற்றவர் பார்க்கும் போது தன் மீது கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், அவருக்கு அவள் மேல் அன்பும், பாசமும் அதிகமாகவே இருக்கிறது என்று அவள் அந்த வீட்டிற்கு வந்த அடுத்த நாளே அவள் கண்டு கொண்டாள்.. அவர் தன் கெத்தை விடாமல் இவளிடம் வம்பிழுத்து வாய்கொடுக்க, இவளும் பதிலுக்கு பதில் பேசி அவரை கிண்டல் அடிப்பாள். அதுவும் இவள் கிண்டல் கேளியை அவர் ரசிக்கிறார் என்று தெரிந்தே வேண்டுமென்றே அவர் வாயை பிடுங்கி வம்பிழுத்து சேட்டைகள் செய்வாள். அதனால் பாட்டி, தாத்தா பற்றி சொன்னது அவளுக்கு அவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கவில்லை.. ஆனால், அகரனை பற்றி அவள் அறிந்துகொண்ட செய்தி அவளை அப்படியே புரட்டி போட்டது… முதல் முதலில் ஹாஸ்பிடலில் அவன் தன்னை பார்த்தபோது தன் கண்களையே இமைக்காமல் உற்று பார்த்தது அவள் நினைவுக்கு வர, இப்போதும் தியாவை நேருக்கு நேர் பார்க்கும் போது ஒரு நிமிடமாவது அவள் கண்களை பார்த்து ரசிக்கும் அகரனின் பார்வைக்கான அர்த்தம் இப்போது தியாவிற்கு நன்றாக புரிந்தது, அகரனை பற்றியே யோசித்தவள் புத்தியில் சட்டென் ஏதோ தோன்ற, “ஓ மை காட்,” என்று கத்தியபடி எழுந்தவள், “இத எப்டி நா யோசிக்காம விட்டேன்? உடனே இத கண்டு புடிக்கணும்” என்று தன் அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தவள் வீடு முழுவதும் சுற்றி வர, யாரை தேடி வீடு முழுவதும் அலைந்தாளோ, அவன் மீதே மோதி கீழே விழப்போனாவளை பிடித்து நிறுத்தினான் அகரன்.

 

“ஏய்! நீ கீழ பாத்தே நடங்க மாட்டீயா? எப்ப பாரு எங்கயாது விழுந்துட்டே இருக்க” என்று சத்தம் போட அகரனை நிமிர்ந்து பார்த்த தியா, “ம்ம்ம் வேண்டுதல், ஒரு நாளைக்கு ஒரு தடவையாது கீழ விழுகனும், நீங்க வந்து புடிக்கணும்னு!! ஏதோ கால் ஸ்லீப் ஆகிடுச்சு, அதுக்கு போய் கத்திட்டு, போவீங்கள!!… சும்மா பேசிட்டு” என்று தியாவும் பதிலுக்கு பதில் பேசா,. அகரன் அவளையே பார்த்தவனுக்கு இன்று தியாவின் பேசில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது, இதுவரை தியா அவன் முன்பு இப்படி இயல்பாக பேசியது இல்லை. ஒரு திமிரோடு, அவன் முகத்தை பார்த்து எதிர்த்து பேசும் தியா இன்று அவன் முன் இல்லை என்று அவனுக்கு புரிய, அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்து நகர…

 

“ஒரு நிமிஷம்” என்ற தியாவின் குரலில் நின்ற அவன் திரும்பி பார்க்க, “என் ஃபரண்டுக்கு ஃபோன் பண்ணனும், இம்பார்ட்டன்ட் மேட்டர், என் ஃபோன்ல சுத்தமா சார்ஜ் இல்ல. ப்ளீஸ் உங்க ஃபோன் கொஞ்சம் வேணும்” என்று கேட்க… 

 

அகரன், “எந்த ஃபரண்டு, நேந்து கடையில உன்னை தொட்டு தொட்டு பேசினானே அவனா?” என்று முறைக்க, தியா உடனே இல்லை என்று தவையை ஆட்டியவள், “இதுவேற ஃப்ரண்ட், பெண்ணு ஃபரண்ட் தான்” என்க அகரன் அவளை மீண்டும் முறைத்து விட்டு ஃபோனை அவள் கையில் தந்தவன். நா கீழ இருக்கேன், பேசிட்டு ஃபோனை கீழ கொண்டுவந்து குடு” என்று சொல்லிவிட்டு செல்ல, “பாஸ்வேர்டு” என்று மீண்டும் அவள் குரல் கேட்க திரும்பி பார்த்தவன், அவள் கையில் இருந்த தன் ஃபோனை வாங்கி ஃபிங்கர் பிரிண்ட் வைத்து அன்லாக் செய்து அவள் கையில் தர, பாஸ்வேர்டு என்று தியா கேட்கும்போது அகரன் முகம் ஒரு நிமிடம் மலர்ந்ததை தியா கவனித்து விட்டாள்.

 

“தியா அவசர அவசரமாக ஃபோன் கேலரியை ஓபன் செய்து, ஒரு ஒரு ஃபோட்டோவாக பார்க்க, அவள் கடைசியாக பார்த்த படத்தில் அவள் கண்கள் நிலைத்து நின்றது… 

 

துணியெடுக்க போன அன்று அகரனுக்கு கையில் அடிபட்டிருக்கும் சமயம் நிலவனுக்கு ஃபோன் போட்டு தரச்சொல்லி அகரன் தன் ஃபோனை தியாவிடம் தந்தான், தற்செயலாக அவள் விரால் பட்டு கேலரி ஓபனாகி விட அப்போது அதில் ஒரு குழந்தையின் ஃபோட்டோவை பார்த்த தியா, அது அகரனின் படமாக இருக்கும் என்று நினைத்து சாதாரணமாக இருந்து விட்டாள். இன்று பாட்டி காட்டிய‌ படம் தன்னுடையது என்று தெரிந்த பிறகு அவளுக்கு சந்தேகம் வந்து அகரன் ஃபோனில் பார்க்க, அது தாத்தாவின் மரப்பெட்டியில் அவள் பார்த்த அவளின் சின்ன வயது புகைப்படமே தான். தியா உடனே அந்த படம் அந்த ஃபோனில் எடுக்கப்பட்ட நாளை பார்க்க அது மூன்று வருடங்களுக்கு முந்தைய தேதியை காட்டியது, “அப்டின்னா பாட்டி சொன்ன மாதிரி வீட்டை க்ளீன் பண்ணும் போது கெடச்ச என்னோட ஃபோட்டோவை இவரு ஃபோன்ல ஸ்னப் எடுத்து வச்சிருக்காரு, அப்டின்னா அவருக்கு என்னை இப்பவும் புடிக்குது தான்” என்று மகிழ்ந்தவள். ஃபோனை மீண்டும் நோண்டி பார்க்க, அதில் ஒரு போல்டர் முழுவதும் தியா அங்கு வந்த நாளில் இருந்து இன்று காலை அவள் குளித்த ஈர முடியுடன் தோட்டத்தில் நின்றிருந்த வரை அனைத்தும் அழகிய ஃபோட்டோவாக பதிவாகி இருந்தது. அனைத்தையும் பார்த்த தியாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது, அது அகரனுக்கு தன்னை பிடிக்கும், அவன் தன்னை வெறுக்கவில்லை என்று… ஆனால், அதற்கு மேல அகரனுக்கு தன் மீது எதுவும் எண்ணம் இருக்குமா? இல்லை இது வெறும் சின்ன வயது பாசம் தானா என்று அவள் குழம்பி இருக்க… ஃபோன் லாக்காகி விட்டது. “ச்சே இந்த நேரம் பார்த்து ஃபோன் லாக்க்கிடுச்சே” என்று புலம்பிவள் சட்டென ஏதோ தோன்ற, பாஸ்வேர்டாக தன் பெயரை போட்டுப் பார்க்க, ஃபோன் ஓபனாகவில்லை, “ம்ஹும் அதெப்படி அவரு நம்ம பேரை பாஸ்வேர்டா வைப்பாரு, ஆனாலும் உனக்கு ரொம்ப தான் பேராசை தியா” என்று தன் தலையில் கொட்டிக் கொண்டவள், அகரன் பெயரில் ஆரம்பித்து வீட்டில் உள்ள அனைவர் பெயரையும் போட்டு பார்க்க, ம்ம்ஹும் எதுவும் வொர்க் ஆகவில்லை, கடைசியாக அவன் அவளை அழைக்கும் தீரா என்ற பெயருக்கும் ஃபோன் ஓபனாகாமல் அவளுக்கு போக்கு காட்ட, சோர்ந்து போனவள், “அய்யோ” என்று கத்தியேவிட்டாள்… “ஒகே தியா ரிலாகஸ், ரிலாகஸ், லாஸ்ட் டிரை இதுவும் ஓபன் ஆகாட்டி உனக்கும் பெப்பே, உன் ஆசைக்கும் பெப்பே தான்” என்றவள் கடைசியாக டிரை செய்ய ஃபோன் ஓபன் ஆனது… தியாவின் கலங்கி இருந்த கண்ணில் மகிழ்ச்சி வெள்ளம் கண்ணீராக வழிய, “திரவியா அகரன்” என்று‌ அந்த பாஸ்வேர்டை தன் தேனூறும் இதழ்களில் முனுமுனுத்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!