மதி – 2

IMG_20210105_113451-9b75e947

காலங்கள் நகரும்
காட்சிகள் மாறும்
காயங்கள் ஆறும்
மருகாதே மதிமலரே!

இரண்டு நாட்களுக்கு முன்புவரை படிய வாரியிருந்த கேசம் இன்று பாதி அவிழ்ந்தும், மீதி முகத்தின் முன் கற்றையாய் விழுந்தும், எண்ணெய் தேய்க்காததால் பரட்டையாய் காற்றோடு உறவாடிக்கொண்டும் இருந்தது.

ஒளிவீசும் நிலவு முகம் இன்று அழுக்குப் படிந்து தன் பொலிவை இழந்திருந்தது.

ஓயாமல் ஓடும் அருவியைப் போல சலசலக்கும் அவள் இதழ்கள், மௌனத்தை ஆடையாய் ஏற்று அமைதியாக இருந்தது.

இதழ்கள் சிரிக்கும் முன் முந்திக்கொண்டு சிரிக்கும் கண்கள், தான் இதுகாலம்வரை சேர்த்து வைத்திருந்த சேமிப்பை மொத்தமாய் இழந்த வேதனையில் சிவந்து வறண்டிருந்தது… அதன் தடங்கள் மட்டுமே பிசுபிசுத்த கோடுகளாய் கன்னங்களில்!

எந்நேரமும் எதையாவது உள்வாங்கிக் கொண்டிருக்கும் அவள் உணவின் சேமிப்பிடம் இரண்டு நாட்களுக்கு முன் சாப்பிட்ட உணவு எனக்கு எம்மாத்திரம்? எனக்கு உணவளி, உணவளி என இவளிடம் கத்திக் கத்தி சுருங்கிவிட்டிருந்தது.

இவை எதுவும் கருத்தில் பதியாமல் சுவரின் ஒரு ஓரமாய் அழுக்கான நாற்றம் வீசும் தரையில் அநாதரவான தன் நிலையை வெளிப்படையாக காட்டுவதைப் போல உடலைக் குறுக்கிப் படுத்திருந்தாள் மதி… மதிமலர்.

இடம் சிறுவர் சீர்திருத்தமையம். நேற்று நீதிமன்றத்தின் மூலமாக ஐந்து நாட்கள் ரிமாண்ட் வைக்கப்பட்டு இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டாள்.

பதினேழு வயது கொலை செய்யும் வயதா? என பலர் நினைக்கலாம். ஆனால் அதைவிடக் குறைந்த வயதினர் கூட பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்று இங்குள்ளனர்.

பள்ளி செல்லும் வயதில் திருட்டு, கஞ்சா விற்றல் போன்ற இன்னும்பிற குற்றங்களில் ஈடுப்பட்டார்களோ அல்லது ஈடுபடுத்தப்பட்டார்களோ அது அவர்களது குற்றமா?

தேவை! இதுதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம்.

அது வயிற்று தேவையோ, உடல் தேவையோ, பணத் தேவையோ, அதிகாரத் தேவையோ எதுவோ ஒன்று. அனைத்து குற்றங்களுக்கும் பின்னால் இருக்கும் ஆகச்சிறந்த காரணம் இந்த தேவைதான்!

அளவுக்குமீறிய தேவைகளை குறைத்தால் நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சேர்ந்தவர்களுக்கும் நிம்மதியான வாழ்வு கிடைக்கப்பெறும் என்பதை நினைவில் கொண்டால் இத்தகைய குற்றங்கள் ஓரளவேனும் குறைக்கப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படி ஒருவனின் தேவை மதிமலரின் வாழ்வை அடியோடு புரட்டிபோட்டுவிட்டது.

எத்தனை சந்தோஷம்!

எத்தனை எத்தனை கனவுகள்!

விதி இவை அனைத்தையும் ஒரு நாள்… ஒரே நாளில் அழித்து அவளது வாழ்வை புரட்டி காரிருளில் தள்ளியதை கிரகித்துக் கொள்ள முயன்றும் முடியாமல் ஏதோவொரு சுழலுக்குள் சிக்கிக்கொண்ட சிறு கொடி போல தனக்குள் உழன்று கொண்டிருந்தாள் மதிமலர்

வருங்காலம் காரிருளில் மறைவாக நின்று ஆட்டம்காட்டி மிரட்டியது.

எறும்பு கடித்தால் கூட அதை துன்புறுத்துவது பாவம் என அலுங்காமல் அதை அப்புறப்படுத்தும் அவள், ஒரு உயிரை கொடூரமாக கொன்றதற்காக சிறிதும் வருத்தப்படவில்லை .

ஆம், அவளேதான் தன்கையால் கொன்றாள்.

அவனுக்கு இதைவிட கொடுமையான மரணத்தை அளித்திருக்க வேண்டும் என இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறாள்.

அப்படி அவனைக் கொல்லும் அளவுக்கு என்ன நடந்தது?

***

அதிக சுட்டித்தனம், கொஞ்சம் தைரியம், தேவையானவற்றிற்கு பிடிவாதம் போன்ற குணங்களுடன், அமைதியான சுடர்வீசும் தீபத்தை போன்ற அழகு முகம் இதுதான் மதிமலர்.

தாயில்லை அவளுக்கு. தந்தை பஞ்சாபிகேசன், அக்கா வான்மதி இதுதான் அவளது குடும்பம். தந்தை தனியார் நிறுவனமொன்றில் மேலாளராக பணியாற்ற, அக்கா பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி.

மதிமலர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்தான் தேர்வு முடிவுகள் வெளியாகின.

அதில் அதிகபட்ச மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தாள். டாக்டருக்கு படிக்க வேண்டுமென்பது அவளது சிறுவயது முதலான கனவு.

அதை அடையவேண்டி இரவு பகலாக படித்து, அதற்கான மதிப்பெண்களும் பெற்றிருக்க, முன்பே எழுதியிருந்த நீட் தேர்விலும் நன்றாக எழுதியிருந்ததால் அதிலும் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் அளவுகடந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

யார் கண் பட்டதோ! அன்று இரவே அவளது மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான அன்று இவளது மதிப்பெண்களைப் பாராட்டி பள்ளி நிர்வாகம் இவளை கௌரவித்திருந்தது. சக மாணவிகளுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாடிவிட்டு அவள் வீடுவர மதியமானது.

ஆர்ப்பாட்டமாக வீட்டிற்கு வந்தவள், “பெரியவளே… ஹேய் பெரியவளே இங்க வா” என சத்தம் போட்டவாறே வீட்டினுள் நுழைய அமைதியான வீடே அவளை வரவேற்றது.

தந்தை அலுவலகம் சென்றிருப்பார் என தெரியும். ஆனால் தமக்கை?

‘எங்க போனா? வீடு திறந்திருக்கு அப்ப வெளில போயிருக்க மாட்டா…’ என மனதோடு நினைத்தவாறு இரண்டு பெட்ரூம், ஒரு ஹால், சமையலறை என அளவாக இருக்கும் சிறிய வீட்டில் அவர்களது அறைக்குள் நுழைந்தாள்.

அங்கும் தமக்கை இல்லாதிருக்கவும் ‘ப்ச்… எங்கதான் போனா இவ!”‘ என சலித்தவாறு திரும்ப நினைக்கையில் ஒரு மென்கரம் அவள் கண்களை மூடியது.

ஏற்கனவே தன் அக்காவின் மேல் கடுப்பில் இருந்தவள் இப்போது கண்கள் திடீரென மூடப்படவும் பயந்து கத்த ஆரம்பிக்க, அதற்குள் அவள் வாய்க்குள் ஏதோ திணிக்கப்பட்டது.

அதில் மேலும் கடுப்பானவள், ஏதேதோ உளறிக் கொட்டியவாறு திரும்ப அங்கே சிரிப்புடன் நின்றிருந்தாள் அக்கா வான்மதி.

“வாழ்த்துகள் பட்டாசே… எப்படியோ நினைச்சத சாதிச்சுட்ட” என வான்மதி வாழ்த்துடன் ஆர்ப்பாட்டமாய் தங்கையை அணைத்துக்கொள்ள, மற்றவை அனைத்தும் மறந்து போக தானும் அவளைக் கட்டிக்கொண்டு வட்டமடித்தாள் மதிமலர்.

வான்மதி, அக்கா என்றாலும் அம்மா போலதான் இவளுக்கு.

மதிமலர், வான்மதியின் கைபிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமர்த்தியவள் வாயில் திணிக்கப்பட்ட லட்டை ருசித்தவாறே, மூத்தவளின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு,

“நானே உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். உனக்கு அதுக்குள்ள எப்படி தெரிஞ்சுது வானு…” என சிணுங்கலாக கேட்க,

“போடி இவளே, நீ சொல்றவரை வெய்ட் பண்ண முடியுமா? நான் இதுலயே பாத்துட்டனே!” என தன் போனைக் காட்டியவாறு,வான்மதி வாஞ்சையாய் தங்கையின் தலையைவருடிக் கொடுத்தாள்.

அதை அனுபவித்தவாறே பள்ளியில் நடந்த அனைத்தையும் கூறி,

உடன் தந்தைக்கும் அலைபேசியில் அழைத்து மதிப்பெண் பற்றி கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள, அவரும் மகிழ்ந்தவர் தான் மாலை வருவதாக கூறி வைத்தார்.

அங்கே அவர் அலுவலகத்தில் அனைவருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்து, ஒரே கொண்டாட்டம்தான் அவருக்கும்.

பஞ்சாபிகேசன், கண்ணாடி அணிந்த விழிகளும், முன்வழுக்கையும், சிறுதொப்பையும் அவரது அடையாளங்கள்.

அவரது வாழ்க்கையே அவரின் இரு மகள்கள்தான். உறவுகள் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் குணமறிந்து இவர்களின் எல்லைக்குள் வர அவர்களை அனுமதிப்பதில்லை.

வான்மதி அமைதியானவள். பொறுமைசாலி. தங்கைக்காக எதையும் விட்டுக்கொடுத்து செல்பவள். இன்னும் ஒரு வருடம் சென்றால் அவள் குணத்திற்கு தகுந்த நல்ல இடமாக பார்த்து திருமணத்தை முடித்துவிட்டலாம்.

அடுத்து சிறியவள்தான், அவள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பது தெரியும்.

இதோ மதிப்பெண்களும் பெற்றுவிட்டாள். இனி மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என எதிர்காலத்தைப்பற்றி அவர்மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

நடுத்தர மக்களின் கனவுகள் அவ்வளவு ஒன்றும் பெரியதில்லை. ஆனால் அதை அடைவதும் சுலபமில்லை.

மக்களைப் பெற்று அவர்களை படிக்கவைத்து கரையேற்றுவதற்குள் தத்தி, தாவி, தவித்து, துடித்து என படாதபாடுபட்டு முன்னேறினாலும் இவை அத்தனைக்கும் கீழே விழுந்துவிடாமல் நிற்பதே பெரும் சாதனையாக இருக்கும்.

இதில் நிதானமான வாழ்க்கையை யோசித்து பார்ப்பது என்பதே இயலாது. ஓட்டம் ஓட்டம் இடைவிடாத ஓட்டம் மட்டுமே!

இதில் பஞ்சாபிகேசனும் விதிவிலக்கல்லவே!

மாலை தந்தை வந்ததும் முன்பே, அவர்கள் முடிவு செய்தபடி மதிமலர் அதிக மதிப்பெண்கள் பெற்றதை கொண்டாடுவதற்காக ரெஸ்டாரண்ட் சென்றனர். அவர்கள் ஆற அமர உண்டுமுடித்து மேலும் கடைகளுக்கும் சென்று வீட்டிற்கு கிளம்ப மணி பத்தானது.

அதன் பிறகு…

அதன் பிறகு நடந்ததை அழிக்க இயலுமா? காலத்தை முன்சென்று மாற்ற இயலுமா?

முடியாதே! இனி இப்படிதான். பழகித்தான் ஆகவேண்டும்.

நினைக்கும்போதே இன்னும் நான் வற்றவில்லை என மளுக்கென கண்ணீர் வழிந்து மூக்கின் மேல் ஏறியிறங்கி அடுத்த கன்னத்தின் வழியாக தரையை அடைந்தது.

வேதனையுடன் கண்களை மூடி விம்மி வெடித்து வந்த அழுகையை அடக்கும் போது மெல்லிய சத்தம் இவள் காதுகளை அடைந்தது.

சட்டென உடல் தூக்கிபோட கவனத்தை கம்பிகளுக்கு வெளியில் வைத்தாள். இது இந்த இரண்டு நாட்களாக நடப்பதுதான். நிழலுக்கும் பயப்பட தொடங்கியிருந்தாள் மதிமலர்.

இவள் இருந்த சிறை அறையின்முன் நிழலாட சொருகிய கண்களை நிலைப்படுத்தி பார்க்க முயன்றாள். ஆனால் கால்வாசிதான் கண்களை திறக்க முடிந்தது.

இந்த இரண்டு நாட்களாக ஒரு நிமிடம் கூட உறங்கவில்லை அவள்.

பசி, நெஞ்சை பிளக்கும் துக்கம், அதோடு எந்நேரம் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் தூங்க இயலாமல் அரைமயக்கநிலையில்தான் அவள் இருந்தது.

இப்போது மெல்லியதாக பேச்சு சத்தம் கேட்டது.

“என்ன கேஸ் இது?”

“மர்டர் கேஸ் மேடம். அஞ்சு நாள் ரிமாண்ட்”

“ஓ…அந்த கெஸ்ட் ஹவுஸ் கேஸா?”

“ஆமா மேடம்”

“ம்… சாப்ட்டாளா”

“இல்ல மேடம் ரெண்டுநாளா பச்ச தண்ணிகூட குடிக்கல, பிடிவாதமா இருக்கா என்ன பேசினாலும் அப்படியே படுத்திருக்கா…”

“என்ன கோகிலா இது! இத சொல்லவா நீங்க இங்க இருக்கீங்க… சாப்பிடாம இருந்து இவளுக்கு எதாவது ஆச்சுன்னா நீங்க நான் எல்லோரும் கை கட்டி பதில் சொல்லனும். முதல்ல செல்ல ஓபன் பண்ணுங்க, எழுப்புங்க அவள” காரநெடி வீசியது அந்த அதிகார குரலில்.

இத்தனை உரையாடலும் மதிமலரின் காதுகளில் கிசுகிசுக்கத்தான் செய்கிறது. ஆம்! கிசுகிசுக்கத்தான் செய்தது. அவள் உணர்வுகள்தான் மங்கிக்கொண்டிருந்தனவே!

அவளும் எதிர்வினையாற்றத்தான் நினைக்கிறாள். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை!

ஒரு கரம் அவளை வன்மையாக தூக்குவதை உணரமுடிந்தது. அவ்வளவுதான், அதன்பிறகு நடந்தது எதுவும் தெரியாத அளவிற்கு மூர்ச்சையாகியிருந்தாள் மதிமலர்.

அவள் மீண்டும் கண்விழிக்கையில் இருட்டிவிட்டிருந்தது. கிட்டத்தட்ட அரை நாளாக மயக்கத்தில் இருந்திருக்கிறாள்.

விழித்தவுடன் என்ன அறை இது என மெதுவாக கண்களை சுழற்ற, மருத்துவ உபகரணங்கள் சில அது என்ன இடம் என காட்டிக்கொடுத்தன.

ஆம், சிறையின் உள் இருக்கும் மருத்துவ அறையில்தான் மதிக்கு சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்க, கை நரம்பு வழியாக திரவம் உட்புகுந்து கொண்டிருந்தது.

எழுந்தரிக்க நினைக்க அவளால் உடலை அசைக்கக்கூட முடியவில்லை.

ஆயாசமாக கண்களை மூடிக்கொண்டாள்.

“என்ன உண்ணாவிரதமா? ” என்ற நக்கல் குரலில் சிரமப்பட்டு கண்களைத் திறந்த மதி எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தாள். காக்கிஉடையில் முகத்தில் அலட்சியம் மற்றும் திமிர் சரிவிகிதத்தில் கலந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த முகத்தை மதிமலர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் அவள் கண்கள் மூடிக்கொண்டது.

“ஏய்…ஏய்…” என அழைத்துப்பார்த்த பெண்அதிகாரி அங்கு இருந்த காவலாளியிடம், “நீலா இவள பாரு…” என மற்றவளை முடுக்கினாள்.

“இதோ மேடம்…” என்றவர் அவளை பரிசோதித்து, “மயங்கிட்டா மேடம்…” என்றார்.

அவள் மீண்டும் மயக்கத்திற்கு சென்றுவிட்டாள் என அறிந்ததும், “ச்சே… சரியான தலைவலிங்க” என நெற்றியைத் தேய்த்தவாறு வாய்விட்டு புலம்பியவள் நீலாவைப் பார்த்து, “சரி நீ இவள பாத்துக்கோ… என்னோட அனுமதி இல்லாம இவள யாரும் மீட் பண்ணக்கூடாது புரியுதா” என கட்டளையிட்டவாறு அவ்விடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.

அவ்விடத்தைவிட்டு வந்தாலும் ஏதோ யோசித்துக்கொண்டே தனதறைக்கு வந்தவள் கண்டது, காவலாளிப் பெண்ணிடம் தொட்டுத்தடவி பேசிக்கொண்டிருந்த சங்கரைதான்.

அப்பெண்ணோ அவனை தடுக்க இயலா நிலையில் பல்லைக்கடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அதைக்கண்டு இவள் தீப்பார்வை பார்க்க, இந்நேரத்தில் இவளை எதிர்பார்க்காத அவன் அக்காவலாளியை விட்டுவிட்டு பம்மியவாறே இடத்தை காலிசெய்துவிட்டான்.

அவன் சென்றபின் அவனிடமிருந்து விடுபட்ட அந்த பெண் காவலாளி இவளுக்கு நன்றியை கண்களில் காட்டியவாறு அங்கேயே நின்றுகொண்டிருக்க, அவரை நோக்கியும் முறைப்பை செலுத்தியவள், “உன்கிட்ட கை இல்ல! இழுத்து ஒன்னு விடறத விட்டு சகிச்சிட்டு நிக்கற…” என உறுமினாள்.

அவளது கேள்வியில் இவளை நோக்கி அடிபட்ட பார்வை செலுத்திய அந்த பெண், “அதைவிட எனக்குன்னு குடும்பம், குழந்தை இருக்கே மேடம்… இவன பகைச்சிட்டு அது மூலமா வர விளைவுகள என்னால தாங்க முடியாது மேடம். மஞ்சுக்கு நடந்தத மறந்துட்டீங்களா?” என இயலாமையில் கண்களில் நீர் மல்க பல்லைக்கடித்துக்கொண்டு கூற, அதில் இவளும் அமைதியானவள், “ம்ப்ச்… சரி விடு. போலீஸையே ஜாக்கிரதையா இருன்னு சொல்ற அளவுக்கு இங்க நிலைமை இருக்கு இதுல நாம நாலு பேருக்கு பாதுகாப்பு குடுக்கறோம்… ” என ஒருமாதிரி குரலில் சொன்னவள் அந்த பெண்ணை, “போ” என தலையசைக்க அவரும் சென்றுவிட்டார்.

அவர் செல்வதையே பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

யாழினி சந்திரசேகர் இந்த சிறையின் ஜெயிலர். ஒல்லியான உடல்வாகுடன் சற்று உயரமும் அதிகமென்பதால் காக்கிச்சட்டையில் அத்தனை பாந்தமாக பொருந்துவாள்.

மெல்லிய உடல்வாகென்றாலும் தினசரி செய்யும் உடற்பயிற்சியின் விளைவால் அவள் உடலின் பலம் ஆண்களுக்கு சற்றும் குறைந்ததல்ல.

அதனால்தானோ என்னவோ சங்கர் இவளிடம் சற்று தள்ளியே நின்றுகொள்வது.

சங்கரும் அந்த சிறையில் இவளுக்கு கீழ் இருக்கும் ஜெயிலர். அவன் தாய்மாமன் அரசியல்வாதி எனவே சற்று அரசியல் பலம் இருப்பதால் இங்கிருக்கும் பல பெண்களிடம் (அதில் கைதிகளும் அடக்கம்) தன் மன்மத பக்கத்தை காட்டியிருக்கிறான்.

அதில் பாதிக்கப்டடவர்களில் ஒருத்திதான் மஞ்சு. அவளும் இந்த ஜெயிலின் வார்டன்களில் ஒருத்தி. இப்போது சஸ்பென்ஷனில் இருப்பவள். இதற்கு காரணம் சங்கர்தான்.

யாழினிக்கு இவை தெரிந்தாலும் அவளால் அவனுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை.

கடவுளே ஆனாலும் கூட நினைத்த நேரத்தில் ஒன்றும் செய்ய இயலாதே! அதற்கான நேரம் கூடி வரவேண்டும்.

யாழினியும் அவனது அட்டூழியங்களுக்கு எதாவது செய்தே ஆகவேண்டும் என அப்படி ஒரு நேரத்திற்காக காத்திருக்கிறாள்.

இதை யோசித்துக்கொண்டிருக்கும்போது யாழினியின் அலைபேசி அதிரத்தொடங்கியது.
அதில் வந்த பெயரைப் பார்த்ததும் போலீஸ் மிடுக்கு மறைந்து கண்களில் ஒருகணம் மின்னல் தோன்றிமறைய சிறு புன்னகையுடன் பேசலானாள்.

“என்ன போன்லாம் பண்ற”

முகத்தில் ஒருவித யோசனையுடன், “ஓ… அவகிட்ட இப்ப பேச முடியாது. அவ மயக்கமாகி ட்ரீட்மெண்ட்ல இருக்கா” என பதில் கூறினாள்.

“இல்ல, ரெண்டு நாளா தண்ணிகூட குடிக்கலபோல…” என தயக்கத்துடன் வந்தது அவள் குரல்.

“அப்படியா!” என வியந்தவள், “நான் பாத்துக்கறேன்… என்னை மீறி ஒன்னும் நடக்காது.” என வாக்களித்தாள்.

….

“ம் சரி . அப்பறம்…”

பீங்…

அலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது.

ஒருவித வெறுமையுடன் அலைபேசியைப் பார்த்தவள் அடுத்த கணம் ‘இவன் அப்படித்தான் என தெரிந்ததுதானே! பிறகேன் இந்த வருத்தம்’ என மனதை தேற்றிக்கொண்டு பணி நேரம் முடிந்ததால் வீட்டிற்கு கிளம்பினாள்.