மது பிரியன் 10அ

மது பிரியன் 10A

அஞ்சனாவின் செயல்பாடுகள் அத்துமீறலாகத் தோன்றிட, அவளை மிகவும் பொறுமையோடு கண்டித்துப் பார்த்தான் விஜய்.  ஆனால் அவள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. 

ஆகையினால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளான விஜய்யின் பெரும்பான்மையான நேரங்களை, மது ஆக்ரமித்துக் கொள்ளத் துவங்கியிருந்தது.

பெற்றோரிடம் கூறினால், இப்படியொரு வாழ்க்கையை மகனுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததை எண்ணி, மிகவும் வருந்துவதோடு, மானம், மரியாதை இழந்ததாக எண்ணி, தவறான முடிவுகளை எடுத்துவிடுவர் எனப் பயந்தான் விஜய்.

தமக்கையிடம், “இந்தப் பக்கம் நீயும், மச்சானும் வந்திட்டுப் போகக்கூடாதா?” எனும் கேள்வியோடு நிறுத்திக் கொண்டான் விஜய்.

என்றுமே தன்னை அழைக்காதவன், அழைக்கிறானே என பாரியும் தனது கணவரோடு விஜய்யின் வீட்டிற்கு வர, வந்தவர்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள் அஞ்சனா. ஆகையினால், வாசலிலேயே மனைவியை விட்டுவிட்டு, “வெளிய எனக்கு வேலையிருக்கு.  முடிச்சிட்டு வரவரை இருந்து பேசிட்டு வா” என பாரியின் கணவன் அப்படியே கிளம்பியிருந்தார்.

விஜய், “வாங்க மச்சான்” என எவ்வளவோ கூறியும், வாசலோடு கிளம்பிவிட்டார் பாரியின் கணவர்.

“என்னம்மா நல்லாயிருக்கியா?” தன்னை மரியாதைக்காக வாருங்கள் என்று அழைக்காத அஞ்சனாவிடம், தம்பிக்காக, தானே முன்வந்து பேசியிருந்தார் பாரி.

“ம்ஹ்ம். பாத்தா எப்டித் தெரியுது” என வடிவேலு பாணியில், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கேட்டாள் அஞ்சனா.

இதை எதிர்பார்த்திராத பாரி, தம்பியிடம் தனிமையில், “ஏண்டா, அந்தப் புள்ளைக்கும் உனக்கும் எதாவது பிரச்சனையா?  ஏன் இப்டிப் பேசுது” வினவ

“அதுக்கு என்னோட வாழப் புடிக்கலையாம்.  அதுனால ஏறுக்கு மாறா பேசிகிட்டு, ரொம்பப் பண்ணுதுக்கா” அதற்குமேல் விஜய்யால், அஞ்சனாவைப் பற்றி விளக்கிக் கூற முடியாமல், அத்தோடு முடித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா தம்பி சொல்ற?  ஏன் கல்யாணத்தப்பல்லாம் நல்லாத்தானே இருந்தா.  திடீர்னு என்னாச்சாம்” பாரியும் விடாமல் தம்பியைக் கேட்க

இருவரின் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவளோ, சட்டென அங்கு வந்து, “யாரு சொன்னா, கல்யாணத்தப்ப நான் நல்லாயிருந்தேன்னு.  எப்ப உங்க வீட்ல இருந்து பாத்திட்டுப் போனீங்களோ, அன்னைக்கே எனக்கு சனியம் புடிச்சிருச்சு” என பாரியிடம் நேரடியாகவே பேசினாள் அஞ்சனா.

“ஏம்மா. குடும்பம்னா சின்னச் சின்ன சண்டை, சச்சரவுலாம் வரத்தான் செய்யும்.  அதுக்காக ஏன் இப்டிப் பேசுற” பாரி இதமாக தனது கேள்வியை அஞ்சனாவின் முன்வைத்தார்.

“குடும்பமா? எப்ப வாழ ஆரம்பிச்சோம்? குடும்பமாம்ல!” கிண்டல் தொனியில் பேசிவிட்டு, “வந்தவுடனேயேதான் உங்க தம்பிகிட்ட கூப்பிட்டு, உங்கூட வாழற எண்ணமெல்லாம் இல்லைன்னு, நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே” திண்ணக்கமாய் பேசினாள் அஞ்சனா.

அதற்குமேல், தலையைக் கவிழ்ந்தபடி இருந்த விஜய் பதறி, “அக்கா. அதைப்பத்தி நான் இன்னொருவாட்டி நீ வரும்போது சொல்றேன்.  இப்ப இந்தப் பேச்சை விடுக்கா” மன்றாடும் குரலில் தமக்கையிடம் வேண்டி நின்றான்.

பாரிக்கு ஒன்றும் புரியவில்லை.  அவளை தம்பி வீட்டில் விட்டுவிட்டு, வெளியே சென்ற கணவர் வருவதற்குள், என்ன விசயம் என்பதை தம்பி மூலமாகவேனும் அறிந்து கொள்ள பிராயச்சித்தம் மேற்கொண்டார்.

ஆனால், விஜய்யிக்கு தலையிறக்கமாக உணர்ந்ததால், அவனால் அதைப்பற்றி அதற்குமேல் விரிவாகப் பேச முடியவில்லை.

தம்பிக்கும், அவனது மனைவிக்கும் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட பாரிக்கு, அஞ்சனாவின் எடுத்தெறிந்த பேச்சும், சட்டை செய்யாத தனமும், கோபத்தை உண்டு செய்ய, கணவன் வந்ததும், ஊருக்கு கிளம்பிவிட்டார்.

அதன்பின் அடிக்கடி தம்பியிடம் பேசி, விசயத்தை பாரி கேட்க முயல, விஜய்யால், தன் மனைவி வேறொரு நபரைக் காதலித்ததோடு, தற்போது அவனோடு பொது இடங்களுக்குச் சென்று ஊர் சுற்றி வருகிறாள் எனக் கூற முடியவில்லை.

அப்படிக் கூறுவதை, தனக்கு அசிங்கமாக, தனது குடும்ப மானம் போனதாக எண்ணி, தனக்குள் வைத்துக் குமுறிக் கொண்டிருந்தான் விஜய்.

இறுதியாக பேசிய பாரி, “அவளுக்கு உங்கூட வாழப் பிடிக்கலைன்னா, நம்ம ஊரு பஞ்சாயத்துல பேசி முடிவெடுத்து, அவளைத் தீத்து விட்ருவோம் விஜய்யி” என்றிட

“க்கா.  அது அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா, ரெண்டுபேரும் உசிரை விட்டுருவாங்களோன்னு பயமாறுக்குக்கா” என தனது தயக்கத்திற்கான காரணத்தை, பாரியிடம் பகிர்ந்து கொண்டான் விஜய்.

தம்பியின் வார்த்தையில் இருந்த உண்மை புலப்பட, பாரிக்கும் தயக்கம் வந்திருந்தது. நாள்கள் அதன்போக்கில் சென்று கொண்டிருக்க, அஞ்சனாவின் செயல்பாடுகளும் வெளியில் பட்டவர்த்தமாய் தெரியத் துவங்கியது.

அன்று வீட்டிற்கு வந்த விஜய், சற்று அதிகமாகவே குடித்திருந்தான்.  அத்தோடு, “அஞ்சனா…. இங்க வா முதல்ல” என வழக்கத்திற்கு மாறாக கத்தி அழைக்க

அசட்டையாகப் பார்த்தபடியே சத்தம் கேட்டு வாயிலுக்கு வந்த அஞ்சனா, “என்ன?” என்றாள்.

“இனி நீ இங்க இருக்கறதா இருந்தா ஒழுங்கா இரு.  இல்லைனா, இப்பவே உங்க அப்பா வீட்டுக்கு கிளம்பி போயிறு” விஜய்

“முடியாது.  நான் இங்கதான் இருப்பேன்” திட்டவட்டமாகக் கூறினாள் அஞ்சனா.

“நா கட்டுன தாலியோட, ஊரு முழுக்க வேற எந்தப் பயலோடயோ ஊர்வலம் வரது எனக்கு தெரியாதுனு நினைச்சியா?  எல்லாம் எனக்குத் தெரியும்.  முதல்ல ஒழுங்கா இங்க இருந்து கிளம்பிப் போயிறு.  இல்லையா, ஒழுக்கமா எனக்கு சோறாக்கிப் போட்டுட்டு, வீட்டுல அடக்கமா இருக்கப் பாரு” என தனது முடிவில் விஜய் உறுதியாக நின்றான்.

“உங்கூடயா” என முகம் கோணக் கேட்டவள், “அதெல்லாம் ஒத்து வராது. யாருக்காகவும் என்னால அப்டி என்னோட வாழ்க்கைய வீணாக்க முடியாது” தனது முடிவில் பிடிவாதமாக இருந்தாள் அஞ்சனா. 

“அப்ப, நீ என்னைவிட்டு வேற வாழ்க்கையத் தேடித்தான் போவேன்னு நின்னா, உன்னை டிவோர்ஸ் பண்றதா இருந்தாலும், அதுக்கு டைம் குடு.  நான் யாராவது சிவில் லாயர்ஸ் பாத்து என்ன செய்யலாம்னு கேக்கறேன்” என பேசு முடிக்குமுன் இடைபுகுந்தவள்,

“நீ டிவோர்ஸ் பண்ணறவரையெல்லாம் என்னால இங்க இருக்க முடியாது.  சீக்கிரமாவே சஞ்சய் என்னைக் கூப்பிட்டுக்குவார்” திட்டவட்டமாகவும், திமிராகவும் விஜய்யிடம் பதில் கூறினாள் அஞ்சனா.

“இப்ப நீ செய்யப்போற வேலைக்கு ரெண்டு குடும்ப மானமும் நடுத்தெருவுக்கு போயிரும் அஞ்சனா.  அதனால கொஞ்சம் பொறுமையா இரு.  இப்பக் காட்டற அவசரத்தை, நீ கல்யாணத்துக்கு முன்னாடியே காட்டியிருந்தா, இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதுல்ல” அஞ்சனாவிடம் அப்போதும் பொறுமையாக விஜய் கேட்க

“உங்களுக்கா தெரிஞ்சிருக்கணும்.  நமக்கு இவ ஏத்தவளான்னு கொஞ்சம்கூட யோசிக்காம, நீங்கதான் தப்பு பண்ணிட்டீங்க” என விஜய் மீது பழிபோட்டாள் அஞ்சனா.

“யாரு நானா?” ஒன்றும் புரியாமல் கேட்டான் விஜய்.

“வேற யாரு? திண்ணக்கமாகக் கேட்டாள் அஞ்சனா.

“என்னம்மா சொல்ல வர்ற.  வீடு தேடு வந்து, என் பொண்ணைக் கட்டிக்கங்கனு கேட்டது உங்க அப்பாதான்.  அப்டியிருக்க, எங்களைக் குறை சொல்ற?” புரியாதவனாய் வினவினான் விஜய்.

“அவரு கேட்டா? உங்களுக்கும், உங்க வீட்டு ஆளுங்களுக்கும் எங்க போச்சு புத்தி?” யோசிக்காமல் பேசினாள் அஞ்சனா.

“அஞ்சனா. வார்த்தைய அளந்து பேசு” சட்டென எழுந்த கோவத்தில், கத்தியிருந்தான் விஜய்.

“என்ன இப்பத் தப்பா பேசிட்டேன்.  உள்ளதைத்தான சொன்னேன்” மிகவும் அசட்டையாகப் பதில் கூறினாள் அஞ்சனா.

“எது உண்மை?  நீ பண்ணது தெரிஞ்சும், எதுவும் தெரியாத எந்தலையில உங்க வீட்டு ஆளுங்க ஏமாத்திக் கட்டி வச்சது உனக்குத் தெரியலை.  ஆனா நானும் எங்க குடும்பமும் உங்களை புத்தியில்லாம வந்து கல்யாணம் பண்ணிட்டோம்னு, எங்களையே குறையாப் பேசுற? உன்னையெல்லாம் ஒரு பொண்ணுன்னு மதிச்சுக் கல்யாணம் பண்ண முன்வந்த என்னைச் சொல்லணும்” விஜய்யும் தனது வரம்பிலிருந்து வெளிவந்து பேசத் துவங்கினான்.

“இவ்ளோ எங்கிட்ட பேசுறவ, உங்க அப்பா, அண்ணங்கிட்டயே ஒத்தக் கால்ல நின்னு, அப்பவே என்னைக் கட்ட முடியாதுனு சாதிச்சிருந்தா நீ நல்லவன்னு சொல்லலாம்.  அதவிட்டுட்டு, உன்னை சக மனுசியா மதிச்சு, உனக்கு இது சரி வருமா, இது வராதான்னு ஒவ்வொன்னையும் யோசிச்சு, யோசிச்சு, வந்த அன்னைக்கிலிருந்து உன்னோட ஒப்பினியையும் கேட்டுச் செய்யற என்னைப் பாத்தா உனக்கு கேலியாத்தான் தெரியும்.” தனது செயல்களை எண்ணி, அவனுக்கே வருத்தம் தோன்றியிருந்தது, அஞ்சனாவின் பேச்சால்.

அத்தோடு விடாமல், “உலகம்னா என்னன்னே தெரியாம இருந்துகிட்டு, எல்லாந் தெரிஞ்ச மாதிரி என்ன ஆட்டம் ஆடி வர்ற!  ஆம்பளை அவனுக்கென்ன! உனக்குத்தான் ஒரு பொண்ணுங்கற நினைப்பே இல்லாம இருக்கியே!” புரியாதவளை எண்ணி, தலைப்பாடாக அடித்துக் கொண்டு கூறினான்.

“வேறொருத்தன் பொண்டாட்டினு தெரிஞ்சும் உன்னைக் கூட்டிகிட்டுச் சுத்துறான்னா, நிச்சயமா அவன் நல்ல பொறப்பாவே இருக்க மாட்டான்.

இப்பவும் சொல்றேன் கேட்டுக்க.  இத்தோடயாது ஒழுங்கா இருந்தா உனக்கு நல்லது.  இல்லைனா, உன்னை சீரழிக்கறதோடு, நம்ம ரெண்டு குடும்ப மானத்தையும் வாங்கிட்டுத்தான் அவன் போவான்.

ஆனா, உன்னைக் கட்டி, ஒழுங்கா வச்சில்லாம் வாழ மாட்டான்.  கிடைக்கிற வரை அந்தக் கேப்மாரிப் பைய உன்னை நல்லா யூஸ் பண்ணிட்டு, விட்டெரிஞ்சிட்டுப் போயிருவான். இதுக்குமேல உந்தலையெழுத்தை என்னால மாத்த முடியாது” என அங்கிருந்து அகன்றிருந்தான் விஜய்.

அப்போதும், ‘என்னோட சஞ்சய் எப்படினு எனக்குத் தெரியும்.  பெருசா எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்ல வந்துட்டான் காட்டான்’ என்பதாகவே அகன்றவனை, அசூசையாகப் பார்த்திருந்தாள் அஞ்சனா.

அடுத்து வந்த நாள்களில், மிகவும் அரங்கத்தனமாக விஜய்யிடம் நடந்து கொள்ளத் துவங்கினாள் அஞ்சனா. பேச்சில் மரியாதை குறைந்ததுமே, விஜய்யிக்கு மிகவும் தலைகுனிவாய் உணரத் துவங்கினான்.

சிவில் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்க எண்ணி, தனது வேலைகளுக்கு இடையில் அலைந்தான்.  ஆனால், அஞ்சனாவின் வீட்டுப் பெரியவர்களிடம் விசயத்தைக் கூற வேண்டுமே என்கிற எண்ணம் தோன்ற, எப்படிப் பேச என்று புரியாமல் அன்று இரவு, அஞ்சனாவிடம் இதைப்பற்றிப் பேச எண்ணினான்.

“எங்க வீட்டு ஆளுங்ககிட்ட இந்த விசயத்தைப் போயிச் சொன்னா, என்னோட சாவுக்கு நீதான் காரணம்னு எழுதிவச்சிட்டு, செத்துப் போயிருவேன்” என மிரட்டினாள் அஞ்சனா.

“ஏய் உனக்கு என்னைப் பாத்தா தொக்காத் தெரியுதா?  நீ பண்ற விசயத்தை நீதான உங்க வீட்ல சொல்லணும்.  இப்டி என்னை மிரட்டுனா நான் பயந்திருவேன்னு நினைச்சியா?” விஜய் கேட்க

“எனக்கு புடிச்சமாதிரி, என்னோட சஞ்சய்யோட வாழ நான் எந்தளவுக்கும் போவேன்” திமிராகக் கூறினாள் அஞ்சனா.

“அதுதான் சொல்றேன்.  இப்பக் காட்டற இந்தப் பிடிவாதத்தை, கல்யாணத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்ல” விஜய் கேட்டான்.

வார்த்தைகள் தடித்து, ஒருவருக்கொருவர் சேற்றை வாரியிறைத்துக் கொண்டிருந்தனர்.  அக்கம் பக்கமிருந்தவர்களுக்கும் விசயம் தெரியத் துவங்கியிருந்தது.

பெரியவர்கள் சிலர் விஜய்யிடம் வந்து, “தம்பி இது நல்ல குடும்பங்க வாழற இடம்.  இதுல இப்டி புருசன் நீ நல்லா இருக்க, அந்தப் பொண்ணைப் பாக்க வாரா வாரம் எவனோ நீ இல்லாத நேரத்தில வீட்டுக்கு வரான்.

ரெண்டு பேருமா  வெளியே போறாங்க.  இதை அப்டியே விட்டா, இந்தத் தெருவில இருக்கற புள்ளைக கெட்டுப் போயிராதா.  நீயும், அக்கா தங்கச்சிகூட பிறந்தவன்தானா.  யோசிச்சு ஒரு நல்ல முடிவா, சீக்கிரமா எடு” வரிசையாக ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு, விஜய்யிடம் மாற்றி மாற்றி, ஒரே விசயத்தைப் பற்றியே பேசிட, நொந்து போனான்.

அதற்குமேல் அவனால் நடப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், ஒதுங்கிச் செல்லவும் முடியாமல், வீட்டிற்கு வருவதையே தவிர்த்துவிட்டான் விஜய்.

அலுவலகத்திற்குச் செல்வதும் குறைந்திருந்தது.  முழு நேரமும் பாரில் பொழுது போனது.  உணவை மறந்து, அதற்கு பதிலாக மதுவைத் தேடி, மனதில் உள்ளதை, மேலும் சில விசயங்களை அதில் மறக்க முயன்றான்.

இதற்கிடையே பாரி அழைத்து தம்பிக்கு பேச நினைக்க, யாரின் அழைப்பையும் ஏற்கும் நிலையில் விஜய் இல்லை.

அஞ்சனாவின் வீட்டாரும், விழாக்களின் போது சீர் செய்வதற்குமே, விஜய்யின் கிராமத்து வீட்டில் கொண்டு போய் செய்தனர்.  விஜய், அஞ்சனா இருவரையும் அங்கு அழைக்க, விஜய் தனது பணியினைக் காரணமாக்கி, அங்கு செல்வதைத் தவிர்த்தான்.

அஞ்சனாவின் வீட்டார், அவ்வப்போது அழைத்து பேசினாலும், “என்ன மாப்பிள்ளை பாத்துக் கட்டி வச்சீங்க.  எப்பப் பாத்தாலும் குடிச்சிட்டு வந்து உயிரை வாங்குறான்” என அஞ்சனா விஜய்யைக் குறை கூற

அதனை உண்மையென நம்பிய அவளின் தாய், கணவரிடம் கூற, “உம் மக சொல்றதை, ஓடற தண்ணியில விடு.  இதுவரை அந்தப் பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.  எல்லாம் விசாரிச்சுத்தான் கட்டி வச்சிருக்கு” உறுதியாகக் கூறினார் உலகநாதன்.

“அப்ப ஏன் அப்டிச் சொல்றா?” என யோசித்தபடியே கணவனிடம் கேட்டார் அஞ்சனாவின் தாய்.

“ஏதோ நாடகம் ஆடுறா?  இப்டியே பண்ணிட்டு நம்ம மானத்தையெல்லாம் கப்பல்ல ஏத்திறாமடீ.  அப்டி எதாவது பண்ணான்னு தெரிஞ்சுது, உன்னையும், அவளையும் ஒரே கொள்ளில உயிரோட எரிச்சிருவேன்” என உலகநாதன் மிரட்ட

“அப்டிலாம் பண்ண மாட்டாங்க.  புத்திமதியெல்லாம் சொல்லித்தான விட்ருக்கோம்” என மகளுக்கு ஏற்றுக்கொண்டு பேசினார் அஞ்சனாவின் தாய்.

தாயும், அவளின் அப்பத்தாவும் திருமணம் முடிந்த ஏழெட்டு மாதங்களில் நான்கு முறை மகளைக் காண வந்து சென்றிருந்தனர்.  அப்போதெல்லாம், விஜய்யிடம் உண்மையாக இருப்பதுபோலவே நாடகமாடி, வந்தவர்களை வரவேற்று அனுப்பியிருந்தாள் அஞ்சனா.

அப்படியே ஒன்பது மாதங்கள் கடந்திருந்தது.  ஒரு நாள் வீட்டிற்கு வந்த விஜய், வீட்டில் வைத்தே, சஞ்சய்யுடன் இருந்த அஞ்சனாவைப் பார்த்துவிட, உள்ளம் கொதித்துவிட்டான்.

“யாரு வீட்டுல வந்து, யாரு பொண்டாட்டியோட கொட்டமடிக்கிற நாயே” என குடிபோதையில் என்ன செய்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், தன்னைக் கண்டதும் வீட்டை விட்டு வெளியேறிய சஞ்சய்யை, நையப்புடைத்து விட்டான்.

விவசாய வேலைகள் செய்து உரமேறிய உடம்பு விஜய்யிக்கு.  என்னதான் மதுவின் பிடியில் மயங்கியிருந்தாலும், அவனது கோபத்தின் காரணமாக, எழுந்த தீவிர உணர்வால், கையில் கிடைத்தவனின் மீது இதுவரை இருந்த வன்மத்தைக் குரூரமாகவே காட்டினான்.

சஞ்சய் உண்மையில் அந்நேரத்தில் விஜய்யின் வரவை எதிர்பார்க்கவில்லை என்பதைவிட, விஜய் இத்தனை மூர்க்கமாக தன்னைத் தாக்குவான் என்பதை அறவே நினைக்கவில்லை.

சஞ்சய்யை விஜய் அடிப்பதைப் பார்த்த அஞ்சனா, போதையில் இருந்த விஜய்யை பிடித்து இழுக்க, அவளுக்கும் நான்கு அறை விட்டிருந்தான் விஜய்.

விஜய் விட்ட அறையில் கீழே விழுந்து கிடந்தவள், ஆவேசமாக எழுந்து, “ஒனக்கு என்னை அடிக்கறது என்ன உரிமையிருக்குடா” என விஜய்யை நேருக்கு நேர் அடிக்கும் எண்ணத்தோடு கையை நீட்ட, கண்மண் தெரியாத கோபத்தில் இருந்த விஜய், மேலும் அடி வெளுத்துவிட்டான்.

இருவரையும், சராமாரியாக அடித்துத் துவைத்திட, சஞ்சய் விஜய்யிடம் அடி வாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறி ஓடத் துவங்கியிருந்தான்.  இதனைக் கண்ட அஞ்சனா, “என்ன தைரியம் இருந்தா, என்னோட சஞ்சய்யை இப்டி அடிப்ப” என வெறிகொண்டு மேலும் விஜய்யைத் தாக்க முயல, எதிரில் இருப்பது பெண் என்பதையே மறந்து போனவன், அதுவரை காத்திருந்த பொறுமையை விடுத்து, மீண்டும் அடித்துத் துவைத்தான்.

அலறிக் கொண்டே விஜய்யிடம் இருந்து அகன்றவள், “என்னைக் கொல்ல வரானே.  உதவி செய்ய யாருமே இல்லையா?” எனக் கத்த, யாரும் அவளின் உதவிக்கு முன்வரவில்லை.

அருகே இருந்தவர்களுக்கு, நடப்பு புரிய இடையில் யாரும் வந்து விலக்காமல், கண்டும் காணாமல் அங்கிருந்து அகன்றனர்.  அனைவரது மனதிலும், ‘இத்தோட ஒழிஞ்சு போகட்டும் அவ’ என்பதாகவே இருந்தது.  அதேபோல, அவளும் அதன்பின் அங்கிருக்காமல், சஞ்சய்யைத் தேடி கிளம்பிவிட்டாள்.

õõõõõ