மது பிரியன் 10ஆ

மது பிரியன் 10B

மதுராகிணி ஊருக்கெல்லாம் சென்றுவிட்டு, காரைக்குடி வந்தது முதலே நேரம் விரைவாகச் செல்வதாகத் தோன்றியது.  அதற்கான காரணமும் அவளுக்கு விளங்காமல் இல்லை.

கணவனது தேடல், அத்தோடு எந்த பிக்கல், பிடுங்கல் இன்றி நாள்கள் சென்றது வேறு அவளுக்கு நிறைவான சந்தோசத்தையும், நிம்மதியான உணர்வையும் கொடுத்திருந்தது.

வேலை வேலை என்று எப்போதும், பணியின் பின்னே தெரிந்தவன், தற்போது மதுவின் எதிர்பார்ப்பிற்கிணங்க, மாலையில் விரைவாகத் திரும்பியதோடு, மனைவியை வெளியே அழைத்துச் சென்று வந்தான் விஜய்.

வேண்டிய பொருள்களை இருவருமாக இணைந்து சென்று வாங்கி வருவதை வழக்கமாக்கியிருந்தாள் மது.  இருவருக்குமே நாள்கள் இனிமையாகத் தோன்றியது.

பஞ்சவர்ணத்திற்குமே, இருவரின் மாற்றம் கண்டு, பாரியிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.  ஆரம்பத்தில் இதுபோல இல்லாமல், ஆளுக்கொரு திசையில் இருந்தவர்களின் மாற்றம் அனைவராலும் கவனிக்கப்பட்டது.

திருமணமாகி வந்த சில மாதங்கள், வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தவர்கள், தற்போது தம்பதியர் சகிதமாக வெளியே செல்ல, பொருள்கள் வாங்கி வர என இருந்ததைக் கண்ணுற்ற, அருகே இருந்தவர்களுக்கு, விஜய்யை எண்ணி, சந்தோசப்பட்டனர்.

முந்தைய வாழ்க்கையை நேரில் கண்டவர்கள் என்பதால், விஜய்யின் வாழ்வு சீரானதைக் கண்கூடாகக் கண்டது முதலே, அருகருகே இருந்த வீடுகளில் உள்ளவர்கள்கூட, அவ்வப்போது மதுவிடம் வந்து அன்பாகப் பேச்சுக் கொடுத்தனர்.  மதுவும், அனைவரோடும் இணக்கமாக பேசிக் கொண்டாள்.

பெரியவர்களிடமிருந்து, “இந்த மாசம் எதுவும் விசேசமா?” என்கிற கேள்வி எழ, அதனைத் தெரிந்து கொள்ள வேண்டி, மருத்துவரை அணுக எண்ணி, அனைவரும் ஆலோசனை கூறினர்.

கணவனிடம் அதைப்பற்றி பேசிட, “குழந்தை வரும்போது வரட்டும் மது.  ஆனா உனக்கு டாக்டர்கிட்ட போகணும்னா, கண்டிப்பாப் போயிட்டு வரலாம்” என்றிருந்தான் விஜய்.

தனது எண்ணத்தை அறிந்து கொண்டு, அதற்காக மருத்துவரிடம் அழைத்து வந்த கணவனை மனதோடு மெச்சியபடி அவனோடு கிளம்பியிருந்தாள் மது.

இருவருமாக மருத்துவரை சந்திக்க, அங்கு சில கேள்விகளோடு, “ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி இன்னும் ஒரு வருசம் முடியலைல.  அதனால ஒன் இயர் வெயிட் பண்ணிப் பாப்போம்.  அதுக்குள்ள பேபி வந்துட்டா ஓக்கே.  இல்லைனா அடுத்து செக் பண்ணிக்கலாம்” என்று கூறி அனுப்பி வைத்திருந்தார் மருத்துவர்.

வசீகரன்தான், தற்போது தனித்து விடப்பட்டிருந்தான்.  பெரும்பாலும், மனைவியை வாரத்தில் இரண்டு தினமேனும் வெளியில் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கியிருந்தான் விஜய்.  ஆகையினால், மது இல்லாததால் வசீகரனுக்குத்தான் பழையபடி பொழுது போகாத உணர்வு தோன்றத் துவங்கியிருந்தது.

மது வீட்டில் இருக்கும் நேரங்களில் வசீகரனைக் கவனித்துக் கொண்டாலும், அவர்கள் வெளியில் கிளம்பும்போது, “வசீ நீயும் எங்களோட வா” என அழைத்தாலும், வசி மறுத்துவிடுவான்.  எல்லாம் அவனது தாய் பாரியின் பயிற்சி.

அப்படி வெளியில் சென்ற அன்றைய தினத்தில், மதுவிற்கு தன்னை யாரோ பார்க்கும் உணர்வு.  தங்களை யாரோ பின்தொடரும் உணர்வு.  அதனால், சுற்றிலும் பார்வையைச் செலுத்தியபடியே வந்தாள் மது.

“என்ன மது.  நான் கேட்டது காதுல விழலையா? இல்லை யோசனையா?” விஜய்

பார்வையால் அலசியபடிய வந்தவள் கணவனது கேள்வியில், “யாரோ நம்மைப் பாக்கற மாதிரியே தோணுச்சுங்க.  அதான் சுத்தியும் பாத்தேன்.  ஆனா தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படலை” என்றாள் மது.

வீட்டிற்கு வரும்வரை இருவரும் இதேபோலப் பேசியபடி, வீட்டை அடைந்திருந்தனர்.  வீட்டிற்குள் வந்ததுமே பஞ்சவர்ணம், “தம்பியத் தேடி யாரோ ஒருத்தங்க வந்தாங்க.  அவங்க பேரைக் கேட்டா, சொல்லாமப் போயிட்டாங்க” என்றிட

மதுவிற்கு, ‘அவங்கதான் ஒரு வேளை நம்மைத் தேடி கடைத் தெருப் பக்கமா வந்திருப்பாங்களோ’ எனத் தோன்றிட, கணவனைப் பார்த்து மனதில் தோன்றியதை அப்படியே கூறினாள்.

அலவலகத்தில் இருந்தெல்லாம் யாரும் தன்னைத் தேடி வீடுவரை வர வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த விஜய், “இந்த ஊருல அப்டி எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லையே” என்றான்.

அன்று அதன்பின் எங்கும் செல்லாது, வீட்டிலேயேதான் இருந்தான் விஜய்.  ஆனால் அதன்பின் யாரும் வீட்டிற்கு வரவில்லை.  வழமையான வீட்டு வேலைகளை மது கவனிக்க, வசீகரனும், விஜய்யும் தொலைக்காட்சியில் ஐக்கியமாகியிருந்தனர்.

அப்போது, கோவை சரளா நடித்த நகைச்சுவைக் காட்சி ஒன்று ஒளிபரப்பாக, சினேகிதனை, சினேகிதனை என்றபடி தலையெல்லாம் பரட்டையாக, கிழிந்த ஆடையோடு இருந்த காட்சியைப் பார்த்த வசீ, “அத்தை, இந்த மாதிரித்தான் இருந்தாங்க, மாமாவக் கேட்டு வந்தவங்க” என மதுவிடம் கூற,

அதுவரை வேறு வேலையைக் கவனித்தபடி இருந்தவள், ஓடி வந்து தொலைக்காட்சியைப் பார்த்தாள்.  பார்த்தவளுக்கு புரியாததால், “இது போலயா?” என தொலைக்காட்சியில் இருந்து கணவனிடம் சென்ற பார்வை, மீண்டும் தொலைக்காட்சியில் நிலைபெற்றிருக்க, “நல்லா ஞாபகத்துல இருக்கா.  இல்லை சும்மா சொல்றியா?” என்று வசீயை வினவினாள் மது.

தன் கணவனைத்தேடி வேறு யாரும் வந்திருந்தார்கள் என்று கூறியிருந்தால்கூட நம்பியிருப்பாள் மது.  ஆனால், படத்தில் வந்தவள் பிச்சைக்காரி வேடமிட்ட கோவை சரளா என்பதால், அவளால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அதற்கு வசீ, “வேணுன்னா நீங்க பஞ்சக்க்காகிட்டயே கேட்டுப் பாருங்க” என்றான். பஞ்சு சிறியவர், பெரியவர் அனைவருக்குமே அக்காதான்.

அதற்குள் அங்கு தனது பேச்சி வர, வந்த பஞ்சவர்ணமும், சற்று நேரம் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, “நல்லா வாழ்ந்த பொண்ணு மாதிரித்தான் தெரிஞ்சிது.  ஆனா இப்ப, இப்டித்தான் அழுக்கா, ஏனோ தானோன்னு உடுப்பு ஒன்னு உடுத்தியிருந்தது” அவரும் ஆமோதிக்க

“அவருக்கு இங்க யாரையும் தெரியாதுங்கறார்.  நீங்க ரெண்டு பேரும் அவரைக் கேட்டு வந்தாங்கன்னு வேற சொல்றீங்க” மது டிபிக்கல் பொண்டாட்டியாக கேள்விகளை முன்வைத்தாள்.

“உண்மையத்தான் அத்தை சொல்றோம்.  அவங்க வந்து, இது விஜயரூபன் வீடுதானேன்னு கேட்டாங்க.  ஆமான்னு சொன்னதும், அவரப் பாக்கணும்னு சொன்னாங்க.  அவரு வெளியே போயிக்காருன்னு பஞ்சக்கா சொன்னதுமே, அப்டியே நடக்க ஆரம்பிச்சிட்டாங்க.  உங்க பேரேன்னனு நானும், பஞ்சக்காவும் கேக்க, காதிலயே வாங்காம அப்டியே நடந்து போயிட்டாங்க” வசீ கூறினான்.

விஜய்யிக்கும் புரியவில்லை, மதுவிற்கும் வந்தது யாரென்று குழப்பம்.

இரவு உணவிற்குப்பின் படுக்கைக்கு, ஏதோ யோசனையோடு உள்ளே வந்தவள் கணவனைப் பார்த்து, “யாரா இருக்குங்க அது?” மது

சற்று நேரம் மௌனம் சாதித்தவன், மனைவியின் கேள்வி புரிய, “அடுத்து வரும்போது பாத்தா தெரிஞ்சிறப் போகுது.  இதுக்காக உன் மண்டையில எதுக்கு டென்சன் ஏத்திட்டுத் திரியற?” விஜய் மனைவியிடம் எந்த குறுகுறுப்போ, மனச்சஞ்சலமோ இன்றி பதில் கூறினான்.

“யாராயிருப்பாங்கன்னு தெரிஞ்சிட்டாத்தான் எனக்குத் தூக்கமே வரும்.  இல்லைனா அதை நினைச்சிட்டே தூங்கமாட்டேன்” என்றபடியே கணவனது அருகே வந்து படுத்தாள் மது.

படுத்தவளை, தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டவன், “அப்போ விடிய விடிய படு ஜாலின்னு சொல்லு” விஜய் குதூகலமாகக் கூற

கணவனது பேச்சின் திசை புரிய, “அப்ப இத்தனை நாள் ஜாலியா இல்லையா?” மது கேட்டாள்.

“அது நீ தூங்கி வழிஞ்சிட்டு இருப்ப, உன்னைப் பாக்கவே பாவமா இருக்குமா.  அதனால தொந்திரவு பண்ணாம ஒதுங்கிப் போயிருவேன்.  இன்னைக்கு நீதான் தூங்க மாட்டேன்னு சொன்ன.  அதான் படு ஜாலின்னேன்” விஜய் விளக்க

“இதுலாம் சும்மா.  என்னதான் நான் தூங்கி வழிஞ்சாலும், உங்க தேவைய முடிச்சிட்டுத்தான என்னை விடுவீங்க” மது தர்க்கம் செய்ய

“அது ஒரு சின்ன ரவுண்டுதான மதுக்குட்டி.  இன்னிக்கு விடிய, விடிய” என்று விஜய் தாபத்தோடு, மோகனமாய்ச் சிரிக்க

“அம்மாடி, இப்பவே எனக்குக் கண்ணைக் கட்டுதே” மது பயந்த மாதிரிக் கூறி, விஜய்யிடமிருந்து நகர முயல, இழுத்தணைத்தவன் தன்னவளின் உதடுகளை தனது உதடுகளால் மென்மையாகப் பூட்டிட்டிருந்தான் விஜய்.

பூட்டிய உதடுகளிலிருந்து எழுந்த உணர்வுகள், உடல் முழுவதும் பரவி, சீராகப் பாய்ந்திட, வேறு எந்த சிந்தனையும் இன்றி, ஒருவருக்கொருவர் இணைந்து, இல்லற சங்கீதத்தின் நாணை ஒவ்வொன்றாக மீட்டிக் களித்தனர்.

மற்ற விசயங்கள் அனைத்தும், இருவரது மனதை விட்டு, வெகுதூரம் சென்றிருக்க, இருவரும் சுகித்திருந்த தருணங்களில், தேடி வந்தவரின் எண்ணம் மட்டும் விஜய்யை தவிர வேறு எந்த சிந்தனையும் இன்றியிருந்தது.

õõõõõ