மது பிரியன் 12(அ)

மது பிரியன் 12(அ)

விஜய்யின் தந்தை பூரணசந்திரன், வீட்டிற்கு வந்ததும் தடுமாறி விழுந்தவர்தான்.  அத்தோடு இறைவனடியை அடைந்திருந்தார்.  அவருக்குள் அத்தனை ஆதங்கம்.

தனது ஒற்றை மகனுக்கு இப்படி ஒரு இடத்தில் பெண்ணெடுத்தது, அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று கருதியதால்தானே!  ஆனால், அதுவே இன்று மகனது எதிர்காலத்தை கேள்விக்குறியாக நிற்க வைத்ததோடு, மதுவின் கோரப்பிடியில் சிக்கி நின்ற மகனைக் காணும்போது அவரால் அதை இலகுவாகக் கடக்க முடியவில்லை.

துயரமும், துக்கமும், துளைத்தெடுத்திட, உணர்வுக் குவியலாய் உள்ளமெங்கும் அழுத்தி, மனபாரத்தை நிரந்தமாய் உருவாக்கி, அவரின் இதயத்தின் இயக்கத்தை மாரடைப்பு எனும் பெயரால் நிறுத்தியிருந்தது.

இதுபோல அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்பதற்காகவே, தனக்குள் வைத்து புழுங்கி, புத்தியை சீர் தூக்க இயலாமல், மதுவிற்கு அடிமையாகியிருந்தவன், தந்தையின் இழப்பில், தாங்கவொண்ணாத் துயரோடு சித்தம் பிரண்டவன்போல, வெறித்த பார்வையோடும், யாருடனும் பேசாமல், ஒரே இடத்தில் பேதலித்த நிலையில் இருந்தான் விஜய்.

பெற்றோரை நினைத்தே, ஆரம்பத்திலேயே தனக்குத் தோன்றிய ஒரு நல்ல முடிவை எடுக்கத் தயங்கியவன், எப்படியானாலும் இதுதான் நிலையென்பது அன்றே தெரிந்திருந்தால், அஞ்சனா கூறியதுமே பெரியவர்களைக் கொண்டு பேசி நல்ல முடிவினை எடுத்திருக்கலாம்.

இத்தனை அசிங்கமும், ஆதங்கமும் இன்றி, வாழ்வினை அதன்போக்கில் வாழ்ந்திருந்திருக்கலாமோ என எண்ணும்போது, நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ள இயலாமல் தடுமாறினான் விஜய்.

அஞ்சனா, குடும்பமானம் காப்பாள் எனக் கருதியதும், எடுத்தோம் கவிழ்த்தோம் என அவளின் விசயத்தில் முடிவு எடுத்து, ஒரு பெண்ணிற்கு களங்கத்தை விளைவித்தல் இலாகாது என எண்ணியது எத்தனை தவறு என மனம் உறுத்தியது.

அவள் தவறியது தெரிந்தும், சட்டென நல்லதொரு முடிவெடுக்காமல், தனக்குள் குழம்பித் தாமதித்த தனது அறிவீனத்தால், எத்தனை பேச்சுகளையும், ஏச்சுகளையும் ஏற்று, அதிலிருந்து தலைநிமிர இயலாமல் உள்ளோம் என எண்ணி, தன்மீதே ஆத்திரம் வந்தது விஜய்யிக்கு.

படிப்பதும், சம்பாதிப்பதும், மனைவிக்கு ஆதரவாகவும், உற்ற துணையாகவும் இருப்பது மட்டுமே ஒரு ஆணுக்கு அழகல்ல!  வாழ்க்கைப் பாடத்தை சரிவரப் புரிந்துகொள்ளாமல், என்ன படித்து, தான் இனி என்ன செய்ய என தன்னையே இதுவரை நடந்த அனைத்திற்கும் காரணமாக்கியவன், துவண்டுபோய் பிறரின் முன்னால் வரவே அசிங்கமாக உணர்ந்தான் விஜய்.

விஜய் மீது அதிக அக்கறை கொண்டதுபோல அவனை நாடி வருவோர் அனைவரும், அவனது வாய்மொழியாக நடந்ததை கேட்டறிந்து கொண்டு, அவன் முன், வருத்தமாக மொழிந்து, வாயிக்கு வந்தபடி அஞ்சனாவை வைது, வெளியேறினாலும், வெளியில் சென்றதும், அப்படியே மாற்றிப் பேசினார்கள்.

அதாவது விஜய்யை, அவனது உணர்வுகளைக் கொன்று போடும் வகையில், தாங்களாக யூகிக்கும் விசயங்களைப் பேசி, இவன்மேல் என்ன தவறோ என்பதுபோல தங்களுக்குள் உரையாடி உண்மையைச் சாகடித்தனர்.

“இவங்கிட்ட என்ன குறையோ?  அது பெத்தவளுக்கும், வளத்தவளுக்குந்தான தெரியும்.  சும்மா ஒருத்தி எப்படி இவனை வேணானு சொல்லிட்டு, வேற ஒருத்தனோட போவா?” என்பதுபோல் அவன் காதுபடவே பேசியது, தலையிறக்கமாக உணர்ந்தவனுக்கு, அதிகமான மன உளைச்சல்.

தன்னை ஆண்மையற்றவன், எனக் கூறாமல் கூறிய பிறரின் வார்த்தையில், செத்துப் பிழைத்தான் விஜய்.  ஒரு ஆண், அவனை எத்தனை கீழிறக்கமாகப் பிறர் பேசினாலும் எளிதாகக் கடந்து விடுவான். 

ஆனால், தான் ஒரு ஆணே இல்லை என்று பிறர் சொன்னால், நிச்சயமாக அதுபோன்றதொரு வார்த்தையை, அவனால் இலகுவாகக் கடந்திட இயலாது.  அதேநிலையில்தான் தற்போது விஜய் இருந்தான்.

அந்த வேதனையை ஏற்றுக் கொள்ள இயலாத மனம், குடிக்கு அடிமையாகி, நித்தமும் நினைவு தவறிய நிலையில் இருக்க, தொடர்ச்சியாக மதுவை நாடினான்.

“யாரும் சொல்றதைக் காதுல வாங்காத.  உன்னைப் பத்தி ஊரு ஆயிரம் பேசினாலும், எங்களுக்கு நீ எப்படினு தெரியும்டா.  வெளிய வா” என பாரி அழைத்தாலும், தயங்கினான் விஜய்.

“மாப்பிள்ளை, இன்னும் எத்தனை நாளுக்கு, இப்படியே வீட்டுக்குள்ள குடிச்சி, குடிச்சுட்டு வந்து அடைஞ்சு கிடப்ப.  ஒழுங்கா சாப்பிடாம, எந்த நேரமும் தண்ணியடிச்சா, உடம்பு என்னாத்துக்கு ஆகும்” என பாரியின் கணவர் வந்து அழைத்தபோது, அந்நேரத்திலும் அவருக்கு மரியாதை குடுக்க எண்ணி எழுந்தவன், தடுமாறி தரையில் தொப்பென விழுந்திருந்தான் விஜய்.

“மஞ்சிருங்க ம்முத்தான்” கீழே விழுந்த நிலையிலும் தன்னிடம், மன்னிப்புக் கேட்டவனைக் கண்ட பாரியின் கணவருக்கு, மனதே விட்டிருந்தது.

‘எப்படி வாழ்ந்தவன், எப்படி இருந்தவன்,  இன்று இதுபோல ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறானே’ என வெதும்பியவர், விஜய்யை அவனது பத்து வயதிலிருந்தே பார்த்திருந்ததால், மகனாகவே எண்ணி இதுவரை அவனுக்காக பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்.

ஆகையினால், உடனே தனக்குத் தெரிந்த மருத்துவர்களை அணுகி, “குடியில இருந்து எம்மாப்பிள்ளைய மீக்கணும்.  எதாவது மருந்து, மாத்திரை இருந்தா, குடுங்களேன்” எனக் கேட்க, “பேஷண்டை அழைச்சிட்டு வாங்க.  பாத்திட்டுத்தான் என்ன செய்யலாம்னு டிசைட் பண்ண முடியும்” என மருத்துவர்கள் அனுப்பியிருந்தனர்.

விஜய்யை அத்தனை எளிதில் வெளியில் அழைத்துச் செல்ல முடியவில்லை.  உணவை மறந்து முழுநேரமும் குடிக்கு அடிமையாகிப் போயிருந்தவனை, தன்மையாக அழைத்துப் பார்த்தார் பாரியின் கணவர்.

“வழேன் மத்தான்” என எழ முயற்சித்தவனுக்கு, உடனே எழ முடியவில்லை.  ஆனால் எதிரே தனக்காக அக்காவின் மாப்பிள்ளை காத்திருக்கிறார் என்பதையறிந்து,

“வொக்காந்துழுங்க. சத்தைய மாத்திட்டு வழேன்” என நா குழற, தடுமாற்றத்தோடு எழுந்தவனுக்கு, நின்று அவனது உடையை மாற்ற முடியாத அளவிற்கு மாறியிருந்தான் விஜய்.

மரியாதை காரணமாக ஒத்துழைக்க நினைத்தாலும், அவனால் முடியவில்லை.  ஆனால் குடிக்க வேண்டும் என்கிற வெறி வந்ததும், அவனாகவே எழுந்து வெளியில் சென்று, மதுவை அருந்திவிட்டுத் திரும்புவதையும் கண்டு, வலுக்கட்டாயமாக, சிலரின் உதவோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

உணவில்லாமல் அதிக குடியினால், மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், ஆங்கில மருத்துவத்தை உண்ணப் பரிந்துரைத்தனர்.

ஆனால் வீட்டில் உள்ள பெண்கள், “காரைக்குடியில ஒரு இடத்தில மருந்து குடுக்கறாங்க.  அங்க போனா, ஒரே நாளுல மூனு வேளை மருந்தோட, சரியாகிரும்” என்றதும், அந்த மருந்துகளை உட்கொள்ளமல், விஜய்யை அழைத்து வந்து காரைக்குடியில் மஞ்சள் காமாலை சரியாவதற்கான மருந்தை உட்கொள்ளச் செய்தார்கள்.

“இந்த மருந்து சாப்பிட்டதோட, இனி தண்ணியத் தொடக்கூடாது.  ரொம்ப மசாலா பொருள், சூட்டை உருவாக்கற, சிக்கன், முட்டை இதுபோல ஆகாரத்தை அறவே நிறுத்திரணும். அப்பத்தான் சீக்கிரமாச் சரியாகும்” என்றுகூறி அனுப்பியிருந்தார் அங்கிருந்த வைத்தியர்.

காரைக்குடி வீட்டிலேயே பாரி தனது தம்பிக்காக வந்து தங்கியிருந்து, பத்திய உணவு செய்து தந்து, விஜய்யை பக்குவமாக கவனித்துக் கொண்டார்.  அத்தோடு அவனது உடல்நிலையில் சற்று  தேறி, பழையபடி வேலைக்குச் செல்லத் துவங்கினான்.

மூன்று மாதங்கள், ஒழுங்காக இருந்தவன், அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றதும், மீண்டும் மதுவை அருந்தத் துவங்க, அவனது மேலதிகாரியாக இருந்தவரே, விஜய்யை அழைத்துப் பேசினார்.

“குடிங்கறது எப்பவுமே, எந்த ஒரு விசயத்தைவிட்டு நாம வெளிவரதுக்கும் சரியான தீர்வா இருக்காது.  பிரச்சனையை ஃபேஸ் பண்ணற துணிச்சல் இல்லாம, ஓடி ஒளிஞ்சிக்க நினைக்கறவன் பண்றதையே நீயும் பண்ணலாமா?

உங்க குடும்பத்துல, எதிர்பாராம நடந்த நிகழ்வால நீங்க பட்ட அவமானங்களைவிட, இன்னும் அதிகமான அவமானங்களையும், அசிங்கத்தையும் வாரிக் குடுக்கறதோடு, தன்மானத்தை அடகு வைக்கிற வேலையையும், இந்தக் குடி உனக்கு இனாமாக் குடுக்கும்.

மனுசனா வாழணும்னா, நிச்சயமா இந்தக் குடிய நீ இனி தொடவே கூடாது.  இல்லை இப்படித்தான் இனி வாழப் போறேன்னா, உன்னோட விருப்பம். 

இங்க உனக்கு கீழ வேலைப்பாக்கறவன்லாம் இனி உன்னை மதிக்க மாட்டான்.  அது உனக்குப் புரியாத அளவுக்கு, உன்னோட மூளைய இந்தக் குடி மழுங்கடிச்சிரும்.

உனக்கு இன்னும் இதில இருந்து மீளணும்னு வைராக்கியம் வரலை, ஆனா இதுல இருந்து மீள நினைச்சேன்னா, மீளரதுக்குன்னே சில ஊருகள்ல அதுக்கான பிரத்தியேக மையங்கள் செயல்படுது. 

அதுல போயி கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தா, எல்லாம் உன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வந்துரும்” என்றிட

அவரிடமே, அதற்கான ஏற்பாடுகளை தனக்குச் செய்து தரும்படி கேட்டான் விஜய்.  அவரும், விஜய்யை ஆரம்ப முதலே அறிந்திருந்தமையால், மதுரையில் உள்ள மதுவின் பிடியிலிருந்து மீள்வதற்கான மையத்தின் எண்ணை பிறர்மூலம் வாங்கித் தந்திருந்தார்.

ஒரு மாதம் அம்மையத்தில் சென்று தங்கியிருந்தவன், ஆரம்பத்தில் அதிக தடுமாற்றமாக உணர்ந்தான்.  மிகவும் கடுமையான பயிற்சி முறைகள். கடினமாக இருந்தபோதும் வைராக்கியத்தோடு அங்கு தங்கியிருந்தான் விஜய்.

இதுவரை தனக்கிருந்த மரியாதை எப்படிப்பட்டது என்பதும், தான் ஒரு குடிகாரன் எனும் நிலையில் இங்கு வந்திருப்பதால், பயிற்சியாளர்கள் தன்னைப் போன்றோரை நடத்தும் முறைமைகளைக் காணும்போதே, எதுவும் இல்லாத வெறுமையான உடலோடு பொது இடத்தில் பலர் சூழ நின்றால் ஏற்படும் அசிங்கமான உணர்வைப் பெற்றான் விஜய்.

பொறுமையோடும், நிதானமாகவும் அந்த நாள்களைக் கடந்தான்.  பதினைந்து நாள்களிலேயே நல்ல முன்னேற்றத்தை விஜய்யால் உணர முடிந்தது.

அடுத்து வெளியில் வந்ததும், புதுப்பிறவி எடுத்தாற்போல, பழையபடி செயல்படத் துவங்கியிருந்தான் விஜய்.  இவை அனைத்தும் முடிந்து, பழையபடி அவனது வேலைகளைப் பார்க்க, அஞ்சனா சென்றபின் ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்திருந்தது.

அதுமுதலே, விஜய்யை தனித்து விடாமல், பாரி தனது இளைய மகன்களை இங்கு படிக்க அனுப்பியதோடு, பஞ்சவர்ணத்தை சமையலுக்கு அமர்த்தியிருந்தார்.

õõõõõ