மது பிரியன் 14

மது பிரியன் 14

          விஜய், தனது அலுவலகக் கடைநிலை ஊழியரைக் கொண்டு, தனது வீட்டின் பின்புற அறையில் வைக்கப்பட்டிருந்த, அஞ்சனாவின் பொருள்களை மூட்டைகளில் கட்டி எடுத்து வைக்கும்படி கூறியதை ஏதேச்சையாகக் கேட்டவள், கணவன் வீட்டிற்குள் வந்ததும், “இப்ப எதுக்கு அந்தப் பாத்திரத்தையெல்லாம் மூட்டையில கட்டச் சொல்றீங்க” என்று கேட்டாள் மது.

          “பொருளையெல்லாம் பாத்தியப்பட்டவங்கட்ட கொடுக்கறதுக்குத்தான் மது” என எந்தவித தயக்கமும் இன்றி பதில் மொழிந்தான் விஜய்.

          “யாருகிட்ட?” புரியாமல் கேட்டாள் மது.

          “அஞ்சனா இப்போ இங்கதான் வந்து வீடெடுத்து தங்கியிருக்கு.  அதனால, இதையெல்லாம் அது வீட்டுல தந்திறச் சொல்லிருச்சு” விஜய் உரைக்க

          “என்ன சொல்றீங்க?” திருமணப் புகைப்பட ஆல்பத்தில் பார்த்ததுமே, மதுவின் நெஞ்சில் பச்சை குத்தினாற்போல பதிந்த பெயரல்லவா அது.  பெயரைக் கேட்டதோடு, விசயம் அறிந்ததுமே அரண்டுபோய் கேட்டாள் மது.

“உண்மையத்தான் சொல்றேன் மது” என்றபடியே விஜய் நகர

          அவனோடு நடந்தபடியே, “ஏன், அவங்க இங்க வந்திட்டாங்க” மனம் முழுக்க திக்திக்கென இருக்க, கணவனிடம் பதைபதைப்போடு கேட்டாள் மது.

          “அங்க ஏனோ தோதுப்படலைன்னு இங்க வந்துருச்சு” என இயல்பாகக் கூறினான் விஜய்.

          “இது.. இது எல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்?” உள்ளமெங்கும் தாங்கவொண்ணா துயரத்தோடு, முகமெங்கும் அதிர்ச்சி அப்பியிருக்கக் கேட்டாள் மது.

          “அதுதான் சொல்லிச்சு” என்றவாறு, அவனது பணியின் நிமித்தமாக வெளியில் செல்லும் எண்ணத்தில் அங்கிருந்து அகன்றான் விஜய்.

வேகமாக கணவனது முன் வந்து மறித்து நின்றவள், கண்கள் கலங்க, “அப்ப, அவகிட்ட நீங்க பேசிட்டுத்தான் இருக்கீங்களா?” என பொலபொலவென கண்ணீரைச் சிந்தியவாறே, நின்றபடி கேட்டாள்.

“ஏய். இப்ப என்னாயிருச்சுனு கண்ணைக் கசக்கிட்டு வந்து, வழிய மறைச்சிட்டு நிக்கிற” என அதட்டியவன் “அவ பேசினா, நானும் பேசினேன்.  அதுக்குப்போயி நான் என்னமோ கொலைக் குத்தம் பண்ணின மாதிரி, மறைச்சி நின்னு, குறுக்கு விசாரணை பண்ற மாதிரி, கேள்வியெல்லாம் கேக்கற” மனைவியிடம் சற்று காட்டமாகவே பேச முனைந்தான் விஜய்.

“உங்களைப் போயி அநியாயத்துக்கு நம்பியிருந்த எந்தலையில இப்படி மண்ணை வாரிப் போட்டுட்டீங்களே!” என அதே இடத்தில் தலையைப் பிடித்தபடியே அமர்ந்து கதறத் துவங்கியிருந்தாள் மது.

மனைவியின் தீடீர் செயலில் என்ன செய்வதெனப் புரியாமல், ஒரு கணம் தயங்கி நின்றவன், கேட்ட அரவத்தில் அத்திசை நோக்கித் திரும்பினான்.

தம்பதியரிடையே சாதாரணப் பேச்சு என அவரது பணியில் அதுவரை கவனமாக இருந்த பஞ்சவர்ணம், மதுராவின் கதறல் கேட்டு, எட்டிப் பார்க்க, அவரைப் பார்த்த விஜய்யிக்கு அவமான உணர்வு.

மதுராவின் திடீர் செயலில் அவளுக்குள் நேர்ந்த உணர்வு போராட்டத்தை உணறாத விஜய், ‘இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்டி அழுகிறாள்’ என்பது புரியாத மனநிலையோடு, தன்னைக் குற்றவாளியாக்கிப் பேசும் மனைவியின் தொனியில் வெகுண்டு போனவன், மதுவைத் தரவரவென பிடித்து இழுத்தபடியே தங்களின் அறைக்குள் அவளைஅழைத்துச் சென்றான் விஜய்.

எதுவும் சரியாகப் புரியாமல் இருவரின் செயலைப் பார்த்திருந்த பஞ்சவர்ணம், இருவரும் அறைக்குள் செல்வதைப் பார்த்ததும், ‘புருசன் பொண்டாட்டி சண்டைக்குள்ள போனா, நமக்குத்தான் அசிங்கம்’ என நினைத்தபடியே, மீண்டும் தனது பணியினைக் கவனிக்க அடுக்களைப் பகுதிக்குள் சென்றுவிட்டார்.

அறைக்குள் வந்த மதுராகிணி விடாது அழ, “எதுக்கு மது தேவையில்லாம வாயிக்கு வந்ததைப் பேசிட்டு, எல்லாரும் பாக்கற மாதிரிக் கத்தி அழுது ஆர்ப்பாட்டம் பண்ற?” விஜய் கோபமாகக் கேட்டான்.

“வேணானு உங்களை விட்டுட்டுப் போனவகூட, இப்ப என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு. இது எவ்ளோ நாளா எனக்குத் தெரியாம நடக்குது?” என கணவனிடம் இரைந்தாள்.

“பேசத்தான செஞ்சேன்.  அதுல என்ன மது உனக்குப் பிரச்சனை?” புரியாமல் சாதாரணமாகவே கேட்டான் விஜய்.

“என்ன பிரச்சனையா?  எல்லாமே பிரச்சனைதான்.  முன்னாடி மாதிரி எங்கூட பேச நேரமில்லை.  வெளிய கூட்டிட்டுப் போகத் தோணலை.  பொண்டாட்டி புருசன்னு பேருக்குத்தான் ஒரு வீட்டுக்குள்ள இருந்தோம்.  நானா நெருங்கி வந்தாலும், ஒதுங்கி ஒதுங்கிப் போனீங்க. 

அதெல்லாம் ஏன்னு நினைக்கிறீங்க.  எல்லாம் அவ சகவாசம் கிடைச்சதாலதான்” என கணவனிடம் கூறிவிட்டு, “இப்பத்தான இவரு ஏன் என்னைக் கண்டுக்காம தெரிஞ்சாருன்னு புரியுது” என மது தனது தலையில் மடார், மடாரென அடித்துக் கொண்டு அழுதாள்.

மனைவியின் பேச்சில் அப்படியெல்லாம் தான் நடந்து கொண்டோமோ எனும்படியாக யோசித்தவனுக்கு, சமீபத்தில் நடந்த எதுவும் நினைவிடுக்கில் இல்லை. 

மதுவின் செயலைக் கண்டு பதறியவன், அவளின் கைகளைப் பிடித்துத் தடுத்து, “ஏய்!  அதுக்கும், இதுக்கும் என்னடீ சம்பந்தம்?” விஜய்யிக்கு மதுவின் அழுகை சங்கடமாகத் தோன்றினாலும், தான் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க, இவள் ஏன் தன்னைக் குறையாகச் சொல்லிவிட்டு, அவளாக இப்படி அழுகிறாள் என அவளின் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டி, அவள் வாய்மொழியாகவே அறிந்து கொள்ள எண்ணி மதுவிடம் கேட்டான்.

“இருக்கு.  சம்பந்தம் இல்லாமலா, இப்டி ஒட்டாமத் தெரிஞ்சிருக்கீங்க.  அது தெரியாம நாந்தான், லூசு கணக்கா என்னவோ, ஏதோன்னு புலம்பிகிட்டே இருந்திருக்கேன்” என தாரை, தாரையாக கண்ணீர் வடித்தாள் மது.

“மது, நீ நினைக்கிற மாதிரி தப்பா எதுவும் எங்களுக்குள்ள இல்லைடீ.  என்னை நம்பு.  நீயா எதாவது நினைச்சு, உன்னைக் குழப்பிட்டு, என்னையும் சங்கடப்படுத்தாத” என இரைஞ்சினான் விஜய்.

“நீங்க அவகிட்டப் போயி பேசுனதே தப்புன்னு, நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.  இதுல, உங்களை தப்பா நான் நினைக்கிறேன்னு, அதை இல்லைனு வந்து சொல்றீங்களே.  உண்மையிலேயே நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்கனு புரியுதா? புரியலையா?” என்று விஜய்யிடம் கத்தினாள் மது.

சற்று நேரம் அமைதியாக மதுவையே பார்த்தபடி நின்றவன், ஓய்ந்த தோற்றத்தில் அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான் விஜய்.

அவனையே சற்றுநேரம் இமைக்காமல் பார்த்திருந்தவள், அருகே சென்று, “இப்பவாவது சொல்லுங்க.  எவ்வளவு நாளா இது நடக்குது?” மது வினவ,

“அய்யோ.  நான் எந்தப் தப்பும் பண்ணலைடீ.  முதல்ல நீ என்னை நம்பு” என மனைவியிடம் மன்றாடும் குரலில் வேண்டினான் விஜய்.

“நம்பறேன்.  ஆனா அவகூட எப்போ இருந்து பேசுறீங்க” என மீண்டும் கேட்டாள் மது.  அதுவரை நடந்தவற்றைக் கூறாமல் இருந்தவன், அதன்பின் கூறத் துவங்கினான்.

வெளியூரில் இருந்து வந்த பெண் தன்னைச் சந்திக்க முயன்றது, அதன்பின் நடந்த விசயங்களைக் கூறியவன், அஞ்சனாவோடு எதற்காக ஆரம்பத்தில் பேசத் துவங்கினான் என்பதையும் மனைவியிடம் மறைக்காமல் கூறினான் விஜய்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள், “அசிங்கமாவே இல்லையா அவகூடப் பேசுறதுக்கு?” மது கேட்டாள்.

“தப்புப் பண்ணிட்டுப் போனவளே எங்கிட்ட வந்து பேசும்போது, எந்தத் தப்பும் பண்ணாத எனக்கென்னடீ அசிங்கம்?” என்று மனைவியிடம் கேட்டான் விஜய்.

“அவளால சந்தி சிரிச்சுப் போச்சுன்னு, உங்க அக்காதான் எங்கிட்டச் சொன்னாங்க.  அப்டியிருக்கும்போது, உங்களுக்கு எப்டி சாதாரணமா அவகிட்டப் பேசத் தோணுச்சு” என விடாமல் கேட்டாள் மது.

“இங்க பாரு” என்றவன், மது தனது பேச்சைக் கவனிக்கத் துவங்க, தான் அவளிடம் எதனால் அடுத்தடுத்துப் பேசினேன் என்பதை மனைவியிடம் சுருக்கமாக விஜய் கூறிட, அனைத்தையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டாள் மது.

விஜய் கூறி முடித்து அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டவள், “கட்டுன உங்களை வேணானு சொல்லிட்டு, வேற ஒருத்தனோட வாழப் போறேன்னு போனவ, இப்ப இங்க யாருகூட வந்திருக்கா?” மது கூர்மையாக வினவ      

“தனியாதான்.  ஏன் கேக்கற” விஜய் எதையும் பெரிதுபடுத்தாமல், சாதாரணத் தொனியில் கூறினான்.

“ஒன்னு நல்லாப் புரிஞ்சிக்கங்க.  எந்த ஒரு ஆதரவில்லாத பொண்ணுகிட்டயும், ஒரு ஆம்பிளை தேவையில்லாமப் போயி, சாப்பிட்டியா, நல்லாயிருக்கியானு,  ஆதரவா பேசினாலே, புருசன் அப்டிங்கற ஜோலி அத்தோட காலிதான்” என்று மது கூறியதும்

“ச்சீய்.  அப்டியெல்லாம் அவ கிடையாது” என்றான்.

ஆனால் மது தொடர்ந்தாள்.  “நீங்க அதைத்தான் இப்ப செஞ்சு வச்சிருக்கீங்க.  அதான் அவ அங்க காலி பண்ணிட்டு, இங்க வந்திருக்கா.  இன்னும் அவளைப் பத்தித் தெரியாம இருந்தா, இன்னும் அசிங்கம் நமக்குத்தான்” என தனது எண்ணத்தை என்பதைவிட, அஞ்சனாவின் எண்ணத்தை அறிந்தவளாக திடமாக மது உரைக்க

“ச்சீய், அவளை எனக்கு முன்னாடியே தெரியும் மது.  அவ அப்போவே எங்கிட்ட இருந்து தனது காதலுக்காக விலகிப் போனவ, அவளைப் பத்தி உனக்குத் தெரியலை” என்று கூறினான் விஜய்.

“இப்பவும் சொல்றேன்.  உங்களுக்கு ஒன்னுமே புரியாம இருக்கீங்க.  அப்போ அந்தாளை நினைச்சிட்டு, உங்களை வேணானு ஒதுக்கிட்டா.  அவளுக்கு வேணுங்கற ஆதரவைத் தர அப்ப ஒருத்தன், எப்படிப்பட்டவன்னு தெரியாம, ஆனா இருந்தான். 

ஆனா இப்போ அவ நிலைமையே வேற.  எந்த ஆதரவும் இல்லாம, முடியாம வேற இருக்கானு சொல்றீங்க. அதனால, எதாவது சப்போர்ட் இருந்தா, அதைப் பிடிச்சிக்கத்தான் அந்த மாதிரியிருக்கறவங்களுக்குத் தோணும்.

இது புரியாம, நீங்க வேற, எதுனா ஏங்கிட்ட கேளு.  அப்டி, இப்டினு நம்பிக்கை வார்த்தைய வேற அள்ளி விட்டுருக்கீங்க.  அதான் சொல்றேன்.  இத்தோட நீங்க ஒதுங்கீட்டாத்தான், நமக்கு நல்லது. 

இல்லைனா, நம்மளோட எதிர்காலத்தைக் குழிதோண்டி நாமளே அதுல குதிக்கறதுக்குச் சமங்க.  நடந்தது நடந்து போச்சு.  இனி இந்தப் பொருளையெல்லாம் வேற ஆளைவிட்டு அவகிட்ட ஒப்படைச்சிட்டு, நீங்க உண்டு உங்க வேலையுண்டுனு ஒதுங்கி இருக்கணும். 

அவளே கூப்பிட்டாலும் பேசாதீங்க.  மீறி அவகூட பேசுனீங்கன்னா, நல்லாருக்காது பாத்துக்கங்க.  இன்னொருவாட்டி அசிங்கப்படாம இருக்கணும்னா நான் சொல்றதைக் கேளுங்க” என்றாள் கணவனிடம்.

“உனக்குப் புடிக்கலைனா சரி விடு. அப்படியே பண்ணிருவோம்.  அதுக்குப்போயி தேவையில்லாம எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகற” என மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுத்து, அத்தனை பெரிதாக எதுவும் நடக்கவில்லை எனும்படியாக மனைவியை ஆசுவாசப்படுத்த முனைந்தபடி கேட்டான் விஜய்.

“எனக்குப் புடிக்குது புடிக்கலைங்கறதுக்காக நான் சொல்லலைங்க.  இதுபோல ஏமாத்திட்டுப் போனவங்களுக்கு, நியாயம் தர்மம்னா என்னானே தெரியாது.  அதனாலதான் நான் இவ்ளோதூரம் எடுத்துச் சொல்லிட்டுருக்கேன்” என்றாள் மது.

“எனக்கென்னமோ நீ நினைக்கற அளவுக்கு அவ வொர்த் இல்லைனு தோணுது” என்ற கணவனை முறைத்தவள்,

 “இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவ இருக்கற திசைப் பக்கங்கூடப் போகாதீங்க.  அதுதான் நமக்கு நல்லது” மதுவிற்கு ஏனோ, திருமணமான தினத்தன்று வந்த கனவு நினைவில் வந்து நையாண்டி செய்வதுபோல இருக்க, அந்த நினைப்பு வந்ததும், கணவனிடம் தீர்க்கமாக உரைத்தாள்.

விஜய்யைப் பொறுத்தவரை, மனைவி அதீத கற்பனையில், மிகவும் பயந்து போயிருக்கிறாள் என்பதாகவே எண்ணினான்.  ஆனால், மனைவியின் வார்த்தையில் வந்த, ‘முன்பைக் காட்டிலும் அதிகமாக அசிங்கப்பட வைத்து விடுவாள்’ என்கிற வார்த்தையில், அஞ்சனாவிடம் மேற்கொண்டு பேசத் தயங்கினான் என்பதைக் காட்டிலும், அதன்பின் முற்றிலும் தவிர்த்திருந்தான் விஜய்.

மதுவிற்கு அதன்பின் நிம்மதி காணாமல் போயிருந்தது.  கணவன் இனி பேசமாட்டேன் என்று கூறிவிட்டான்தான்.  ஆனால் அவனை நேரில் சந்தித்து அஞ்சனா பேசினால், இப்படி எண்ணிய மனம் தவியாகக் தவித்தது.

அஞ்சனாவும், ஒரு வாரம் விஜய்யிற்கு அழைத்துப் பேச முயன்று அவனைத் தொடர்பு கொள்ளாமல் போனதும், அலுவலகத்திற்குச் செல்ல எண்ணி, அதன்பின் வீட்டிற்கு நேரிலேயே வந்திருந்தாள்.

அஞ்சனா விஜய்யின் வீட்டு வாயிலுக்கு வந்து, அழைப்பு மணியை அழுத்தினாள்.  பஞ்சவர்ணம் சென்று வெளியில் பார்க்க,“வீட்டுல யாரும் இல்லையா?” என்றபடி கேட்க,

பஞ்சவர்ணம் “யாரு வேணும்” விசாரிக்க, “நான் விஜயரூபனோட வயிஃப்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அஞ்சனாவைக் கண்டு திகிலோடு பார்த்தபடியே, அதற்குமேல் எதுவும் பேசாமல் வெளியில் நின்றவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே உள்ளே வந்து மதுவிடம், “தம்பியத் தேடி யாரோ வந்திருக்காங்க மதும்மா” என்றிருந்தார் பஞ்சவர்ணம்.

யோசனையோடு, “யாரது” என வெளியில் வந்த மது, வாயிலில் நின்றவளைக் கண்டதும், நிற்பது யாரென்று புரிந்திட, பேச முடியாமல் நா உலர்ந்து போனது. பூமி நழுவிய உணர்வு மதுவிற்கு.

பஞ்சவர்ணமும், நடப்பதைக் கவனித்தபடியே மதுவிற்கு சற்று இடைவெளிவிட்டு பின்னே நின்றிருந்தார்.

சட்டென உண்டான அதிர்ச்சியில், தலை சுற்றுவது போலிருந்ததையும், பேச ஒத்துழைக்காத நாவையும் சமாளித்தபடியே, மனதில், ‘இவ எதுக்கு இப்ப இங்க வந்திருக்கா’ என விரும்பத்தகாத எண்ணம் எழுந்ததை முகம் வெளிப்படுத்த, அதை மறைக்க விரும்பாமல், “யாரு நீங்க?  உங்களுக்கு என்ன வேணும்?” என்று ஒட்டுதல் இல்லாமையினால் எழுந்த சிடுசிடுப்பான வார்த்தையில் அஞ்சனாவை நோக்கி கேட்டாள் மது.

அஞ்சனா என்ன பதில் கூறினாள்?

***