மது பிரியன் 16

  மது பிரியன் 16

அன்றைய அஞ்சனா சஞ்சய்யுடனான காதல் மயக்கத்தில், விஜய்யோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்தாள்.  ஆனால் இன்றைய அவளின் ஆதரவற்ற நிலை, விஜய்யோடு இணைந்து வாழாதபோதும், அவனோடு ஒரே இடத்தில் வாழ விரும்பலாம் என மது தனது யூகமாகக் கூறியதை விஜய்யால் ஏற்க இயலவில்லை.

மது, “இன்னைக்கு நாந்தான் அவரு பொண்டாட்டினு வந்து நிக்கிறவ, நாளைக்கே, நானும் இங்க வந்து இருந்துக்கறேன்னு சொல்லிட்டா, அப்போ என்னோட நிலைமை” என்று கேட்டதை, விஜய் மதுராகிணியாக சித்தரித்துப் பேசுகிறாள் என்று நினைத்து அவள் கூறிய முந்தைய விசயங்களையும், அதுபோலவே எண்ணிவிட்டான்.

“அவளால அப்டிலாம் பேச முடியாது மது!” விஜய். 

விஜய்யைப் பொறுத்தவரை, அஞ்சனாவுடனான தனது திருமணம் முடிந்து காரைக்குடி வந்ததுமே, அவளது காதலைப் பற்றிக் கூறிவிட்டாள்.  ஆகையினால் அந்தத் திருமணத்தை முறையாகப் பதிவு செய்திருக்கவில்லை.

மேலும் விஜய், தனது பணிப் பதிவேட்டிலும் அவளது பெயரைப் பதிவு செய்யாமல் விட்டிருந்தான்.  அதன்பின் அஞ்சனா சென்றதும், இரு ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அத்திருமணத்தை ரத்து செய்திருந்தனர். அதனைக் கொண்டே மதுவிடம் அவ்வாறு துணிவோடு பேசினான்.

இதைப்பற்றித் தெரியாதவள், “அப்ப அவளுக்கு யாரு இம்புட்டு தைரியம் தந்தது?” மதுவும் வினவ

விஜய், ஆரம்பம் முதல் தான் அஞ்சனாவிடம் பேசி வந்ததைப் பற்றியோ, தனது பேச்சால்தான், அஞ்சனா இந்தளவிற்கு மாறி தன்னை நாடியிருக்கிறாள் என்பதோ தெரியாமல், மதுவிடம் சண்டைக்கு நின்றான்.

“அதை எங்கிட்ட வந்து கேட்டா?” என பொறுப்பு துறப்பான பதிலைக் கூறினான் விஜய்.

“வேற எதித்த வீட்டுக்காரங்கிட்டப் போயா, அவளைப் பத்தி நான் கேக்க முடியும்” சிடுசிடுப்போடு பேசியவள்,  “ஆனாவும் தெரியாம, அக்கன்னாவும் தெரியாம, உங்க ரெண்டு பேருக்கும் இடையிலே நின்னு, பேய் முழி, முழிச்சிட்டு இருக்கேன்” இயலாமையோடு பேசினாள் மது.

மதுவின் பேச்சிலும், அவளின் பண்பேற்றத்திலும் சட்டென சிரிப்பு எழுந்தாலும், அதேநேரம் சிறு வருத்தமும் உண்டானது விஜய்யிற்கு.  ஆனால் அதை வெளிக்காட்டாமல் பேசினான்.

“ரிலாக்ஸ் மது.  தேவையில்லாம மனசப் போட்டுக் குழப்பாத.  அவ சென்னையில இருந்து இங்க வந்திருக்கறது, அங்க ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணதாலதான். 

மத்தபடி வேற எந்த இண்டென்சனோடவும் அவ இங்க வரலை.  முதல்ல அதப் புரிஞ்சிக்கோ” என விஜய்யும், தன்னிடம் இதுவரை பேசிய அஞ்சனாவின் பேச்சின் வழி தானாக யூகித்ததை, மதுராகிணியிடம் விளக்க முயன்றான்.

அத்தோடு விடாமல் மதுவிடம், “நான்தான் பொண்டாட்டின்னா, நீ இப்ப யாருன்னு உங்கிட்ட கேட்டதாச் சொல்றதெல்லாம், நீயா பயத்துல சொல்ற மாதிரி இருக்கு மது. 

அவ, ஏற்கனவே என்னை வேணானு சொல்லிட்டுத்தான், வேற ஒருத்தங்கூடப் போனா.  அவ இங்க இருந்த வரையிலுமே, ஒரு பொண்டாட்டியா எனக்கு எதுவுமே செஞ்சதுமில்லை.  அந்த எண்ணத்தில நடந்திட்டதும் இல்லை. 

அப்டி இருக்கும்போது, இப்ப வந்து உங்கிட்ட அப்டிலாம் பேசணும்னு அவளுக்கு என்ன வந்திச்சு.  நீ தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்கிறதுமில்லாம, என்னையும் சேத்துக் குழப்பற” என்றான் விஜய்.

அதற்குமேலும் பேச்சு நீள, அதனை வளர்க்க பிரியமில்லாமல், மது தன்னிடம் கூற வந்தது அனைத்தையும் கூறி முடித்ததை அவளிடமே உறுதி செய்யும் விதமாக, “அவ்ளோதானா, இல்லை…” என இழுத்தான்.

விஜய்யின் முகத்தொனி முன்பைப்போல அல்லாமல், முற்றிலும் மாறிக் காணப்பட்டது.  அதில் அத்தனை சலிப்புத் தெரிய, “இன்னும் எதாவது எங்கிட்டச் சொல்லணுமா!” என விஜய் மதுவிடம் கேட்ட விதமே, மதுவிற்கு கணவன் தன் பேச்சை நம்பவில்லை என்பதனை பளிச்சென உணரச் செய்திருந்தது.

கணவனை வைத்த கண் வாங்காமல் பார்த்த மதுவின் முகம் சிறுத்துப் போனது.  விஜய்யின் பிடியும் தளர்ந்தது.  மதுவும் ஏதோ உணர்ந்து விஜய்யிடமிருந்து விலகி நின்றாள். 

பேதை மனமோ, கணவனது பேச்சில் விளைந்த அதிர்ச்சியை வெளியில் காட்டாமல் உள்ளுக்குள் அலற, “என்னங்க…” பரிதவிப்போடு விஜய்யை நோக்கிக் கேட்டாள்.

மௌனத்தை குத்தகை எடுத்திருந்தவன், அமைதி காக்க, கணவனது அமைதியில் சொல்லொணாத் துயர் தொண்டையை அடைக்க, “நான் சொன்னதை நீங்க நம்பாத மாதிரி இழுக்கறீங்க!” கமறிய குரலில் விஜய்யிடம் கேட்டாள்.

“நீ அவகூட பேச வேணானு சொன்னதைக் கேட்டு, அவ நம்பரை பிளாக் பண்ணிதான் வச்சிருக்கேன், மது.” என்றான் விஜய்.

“அப்ப, நான் சொன்னதுக்காகத்தான் பேசலையா?” மது கண்களில் பரிதவிப்போடு வினவினாள். உண்மையில் கணவன் தனது பேச்சைக் கேட்டு, அஞ்சனாவைத் தவிர்த்திருக்கிறான் என்ற செய்தி மதுவிற்கு பேரானந்தத்தைக் கொடுத்தாலும், தற்போதைய நிலை அந்த ஆனந்தத்தை அனுபவிக்கவிடாமல் தடுத்தது.

“தேவையில்லாத பிரச்சனை எதுக்குனுதான் பிளாக் பண்ணேன்.” மனைவி சொல்லித்தான் இதைச் செய்தோம் என்று அவளிடமே ஒப்புக் கொள்ள, ஏதோ ஒன்று விஜய்யைத் தடுத்ததோ!

“அப்ப நான் சொல்லலைனா, இன்னும் அவகூடப் பேசிட்டுத்தான் இருந்திருப்பீங்க.  அப்படித்தான?” மதுவும் விடாமல் கேட்டாள்.

“திரும்பத் திரும்ப அதையேன் கேக்கற மது” சலிப்பாகக் கேட்டவன், “அவ வந்துட்டுப் போனான்னு நீ சொல்றதை நம்பறேன்.  போதுமா!” என்றான் விஜய்.

‘இது என்ன பேச்சு’ என கதறிய உள்ளத்தை வெளிக் காட்டாமல், “அப்ப, நானாத்தான் இதையெல்லாம் சொன்னேன்னு சொல்றீங்களா?” என முன்பைக் காட்டிலும் விலகி நின்றபடிக் கேட்டாள். 

“அவ, இங்க, இந்த வீட்டுலதான் எங்கூட தங்கியிருந்தா மது. சேந்து ரெண்டு பேரும் வாழலைன்னாலும், ஓரளவு அவளைப்பத்தி எனக்கும் தெரியும்” நம்பிக்கையோடு அஞ்சனாவைப் பற்றிப் பகிர்ந்தவனை பார்த்தவளுக்கு, ஆத்திரமாக வந்தது.

எந்த மனைவிக்குமே, பிற பெண்களைப் பற்றி தன்னவன் தனக்கு அவளைப் பற்றி நன்கு தெரியும் என்று கூறுவதை விரும்புவது ஒன்றும் உலக மரபல்லவே!

“அவளைப் பத்தி அப்டி என்ன உங்களுக்குத் தெரியும்னு, எங்கிட்டயும் சொல்லுங்களேன்” என கணவனிடம் உறுதியாக, ஆனால் கெஞ்சலோடு கேட்டு நின்றாள் மதுரா.

“அது எதுக்கு உனக்கு.  அவளுக்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் இனி இல்லை. அதனால, இதையே போட்டு மனசைக் குழப்பாம, சந்தோசமா எப்போவும்போல உன்னோட வேலைகளைப் பாரு மது” என்றுவிட்டு, இனி இதைப் பற்றிய பேச்சு வேண்டாம் எனும் விதமாக நகர்ந்தவனைக் கண்டு, இயலாமையும், தனது பேச்சை நம்பாமல் தட்டிக் கழிப்பவனை எங்ஙனம் நம்ப வைப்பது எனும் வழி தெரியாமலும், எப்படியேனும் இதை கணவனிடம் நிரூபித்தே ஆகவேண்டும் எனும் வெறியும் உண்டாக, ஆங்காரமான பேச்சால் கணவனைத் தடுத்து நிறுத்தியிருந்தாள் மது.

“எப்டியெப்படி?” என்று அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்த மது, “உங்களுக்கு அவளைப்பத்தி எல்லாம் தெரியும்.  எனக்கு அவளையும் தெரியாது.  அவளைப்பத்தியும் ஒன்னும் தெரியலை. 

அதுனால இப்ப நான் சொன்ன எல்லாம் நானா இட்டுக்கட்டிப் பேசினதுனு, நடந்ததை எல்லாம் மறந்துட்டு, எப்போவும்போல நான் இருக்கணும்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டுப் போனா, நேத்து நடந்த எல்லாம் இல்லைனு ஆகிருமா? 

இல்லை, அவதான் இதுக்கு மேல வந்து எந்தக் குடைச்சலையும் எனக்குக் குடுக்க மாட்டானு எந்தத் தைரியத்துல எங்கிட்ட இப்படிச் சொல்றீங்க?

நீங்க என்னன்னா அவளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கற மாதிரிப் பேசுறீங்க.  வந்தவ என்னன்னா, நாந்தான் உரிமைக்காரி.  நீ இங்க ஒன்னுமில்லைனு இறக்கிப் பேசுறா.  ரெண்டு பேருக்கும் இடையில நான் மத்தளம் மாதிரி மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.

இப்ப எல்லாத்தையும் எங்கிட்டச் சொல்லிட்டு, மறுவேலையப் போயிப் பாருங்க” என கணவனிடம் மல்லுக்கட்டும் குரலில் கேட்டாள் மது.

மதுவின் இந்தக் குரலை இதுவரை கேட்டிறாதவன், அவளைக் கூர்ந்து நோக்கியபடி, “மது, இப்ப என்னதான் உன் பிரச்சனை?” மனைவியை ஆதரவாக அணைத்துப் பேசும் விதமாக அருகே வந்தான்.

அருகே வந்தவனிடமிருந்து விலகிய மது, “நான் சொன்ன எதுவும் பொய்யில்லைனா, அதுக்கு உங்களோட பதில் என்னவா இருக்கும்னு மட்டும் சொல்லிட்டுப் போங்க” திடமாய் உரைத்தாள்.

மௌனமாக மதுராவையே பார்த்தவன், “எம்மேல உனக்கு நம்பிக்கை இருக்கா, இல்லையா?” விஜய் கேட்க,

“அது எல்லாம் நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்ற விதத்துலதான் வரும்” என உரைத்தவள், “இப்ப நீங்க பேச்சை மாத்தாம, சரியான பதிலைச் சொல்லுங்க” என்று விடாமல் கேட்டாள் மது.

“விடு மது அந்தப் பேச்சை!” விஜய் கடுமையாகவே கூறினான்.

“ஏன் விடணும்?” மது

“என்னதான் பண்ணச் சொல்ற இப்ப” கத்தினான் விஜய்.

“நான் சொன்னது எல்லாம் பொய்யாவே இருந்துட்டுப் போகுது.  ஆனா அப்டி ஒரு விசயம் நடந்தா, அதுக்கு உங்களோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு மட்டும் சொல்லுங்க” மது பிடிவாதமாகவே கேட்டாள்.

“மது, காலையிலேயே ஏன் இப்படி என்னை டென்சன் பண்ற?” விஜய், மதுவின் இந்த பரிமாணத்தை எதிர்பாராததால், அவனது நிலையில் இருந்தவாறே, மதுவிடம் கடுமையாகவே கேட்டான்.

“எதுங்க டென்சன்!  யாரு முதல்ல இருந்து டென்சன் பண்றா?  பண்றதெல்லாம் கமுக்கமா நீங்க பண்ணிட்டு, அவளை நல்லா தைரியமா உள்ள வந்து பேசிட்டுப் போற அளவுக்கு வளத்து விட்டுட்டு, நான் உங்களை டென்சன் பண்றேன்னா, இது கடவுளுக்கே அடுக்காதுங்க” மதுவும் விடாது கணவனின்மீது பழிபோட்டுப் பேசினாள்.

“நான் என்னடீ அவக்கிட்டப் போயி கமுக்கமா பேசினேன், வளத்து விட்டேன், தைரியும் குடுத்தேன்னு, வாயிக்கு வந்ததைச் சொல்லிட்டு இருக்க?” விஜய்யும் மதுவின் பேச்சில் எழுந்த, அதீத கோபத்தில் யோசிக்காமல் பேசினான்.

கணவனது பேச்சில் மதுவிற்குமே வருத்தம் எழ, அவளும் இதுநாள்வரை மனதிற்குள் குடைந்த விசயங்களை பட்டெனப் போட்டு உடைத்திருந்தாள்.

“ஆபீஸ்ல இருந்து யாரு பேசினாலும், உக்காந்த இடத்தில இருந்தே எப்பவும் பேசுறவரு, எங்க இருந்து வந்த, திடீர் ஞானோதயத்தில எந்திரிச்சிப் போயி, அங்க ஒதுங்கி, இங்க ஒதுங்கி நின்னு பேசுனீங்க? சொல்லுங்க…  அந்த மாதிரிப் பேச வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு உங்களுக்கு. 

டவர் இல்லாமப் போயிருச்சுன்னோ, வேற எதாவதோ சாக்குச் சொல்லாம உண்மைய மட்டுஞ் சொல்லுங்க” என கட்டளையாக கூறியவள், விஜய்யை சாமான்யத்தில் விடவில்லை. 

“திடீர்னு அப்படி யாருக்கிட்ட, என்ன ரகசியத்தை ஒரு பொண்டாட்டி நான் பக்கத்தில இருக்கும்போது, எனக்குத் தெரியக்கூடாதுன்னு எழுந்திருச்சுப் போயி முணுமுணுனு பேசுனீங்கன்னு முதல்ல, உங்க மனசாட்சியக் கேட்டுப் பாருங்க. 

அப்புறம் மத்த கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றேன்” என்று கூறிவிட்டு மது அவர்களின் அறையைவிட்டு வெளியே செல்ல எத்தனித்தாள்.

“ஆவிய வாங்குறதுக்குன்னே வருவீகளாடீ.  மனுசனை நிம்மதியாவே இருக்க விடமாட்டாளுங்கபோல” என்றபடி தலையை தனது இருகைகளாலும் பிடித்தபடியே, அங்கிருந்த நாற்காலியில் சென்றமர்ந்தவன்,

“கடைசியிலே, எம்மேலேயே பழியச் சொல்லிட்டுப் போறீயேடீ” என்றவன் வெறிபிடித்தாற்போல, “எல்லாப் பொம்பிளைகளுக்கும் என்னையப் பாத்தா எப்புடிடீ தெரியுது.  ஈனாவானானு எதுவும் என் நெத்தியில எழுதி இருக்காடீ” என வெளியே அறையை விட்டு செல்பவளை நோக்கிக் கேட்டான் விஜய்.

கணவனது பேச்சில் தாமதித்தவள், அமைதியாக மீண்டும் அறைக்குள் வந்து கதவை அடைத்துவிட்டு, “நெத்தியில எதுவும் எழுதல.  எல்லாம் உங்க நடையில, பேச்சுல, மத்த விசயங்கள்லதான் தெளிவாத் தெரிஞ்சுதே.  அதைப் பாத்துட்டுத்தான் ஏதோ சரியில்லைன்னு , இந்த மாறுபாடு தெரிஞ்சதுல இருந்தே உங்களைச் சுத்திச் சுத்தி வந்து, விடாமக் கேட்டேன்! 

எங்க பிடி குடுத்தீங்க! நல்லா சமாளிச்சீங்க.  அதுமே எனக்குத் தெரியத்தான் செஞ்சுது.  ஆனா, இப்டி ஒரு வேட்டு வரும்னு அப்போ எனக்குத் தெரியலையே” எனப் புலம்பலாய் கூறியவள்,

“யாரோ போனைப் போட்டுட்டு, நான் அதை எடுத்ததும், எங்கிட்டப் பேசாம வைக்கிறான்னும் வந்து உங்கட்ட கேட்டேன்.  அப்பவும் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு, கம்பி சுத்துற கதையெல்லாம் வகையாச் சொல்லி என்னைச் சமாளிச்சது யாரு?

எல்லாம் நீங்கதான் சாமி!  ஏன் உண்மையச் சொல்லலை எங்கிட்ட!  அப்ப உங்களுக்கே ஏதோ சுருக்குன்னு மனசுல தச்சிருக்கு!  அதான் எங்கிட்ட ஆபீஸ்ல இருந்து அவுக, இவுகன்னு கதையக் கட்டி விட்டீங்க!  அப்புறம் நான் வந்து டென்சன் பண்றேனாம்முல.. டென்சன்” மது விடாது பேசியதில், சற்று இளைப்பாற எண்ணி அமைதியாக,

“என்னதான்டி உனக்கு வேணும்” சோர்ந்து போய் கேட்டான் விஜய்.

“நீங்க கொஞ்ச நாளாவே சரியில்லை.  உங்க பேச்சு வார்த்தை, நடவடிக்கை, போனுல பேசுறது, இப்டி இன்னும் நான் சொல்லிக்கிட்டே போவேன். 

அதுலாம் ஏன் எனக்குத் தெரியாம அவகிட்டப் பேசணும்னு நினைச்சுப் பண்ணீங்க.  அப்ப உங்க மனசுலயும் ஏதோ இருந்திருக்கு.  ஆனா, இப்ப நான் கேட்டா, என்னையக் குழப்பிவிட்டு, நீங்களும், அவளும் நல்லவுகளாகப் பாக்குறீங்க.

உண்மையிலேயே அவகூட வாழணும்னு நினப்பிருந்தா, நேரடியாச் சொல்லிருங்க.  அதவிட்டுட்டு, வந்தவ இதப் பேசுனா, இப்டிப் பேசுனானு நான் சொன்னதைக் கேட்டுட்டு, என்னை நக்கலா பாக்கறீங்க. அவ்ளோதானானு எகத்தாளமா ஒரு கேள்வி வேற.

என் பேச்சை நீங்க நம்புங்க.  நம்பாதீங்க.  அது உங்க விருப்பம்.  ஆனா, ஆசை காட்டி மோசம் பண்ணாம, டபுள் கேம் ஆடி என்னை ஏமாத்த நினைக்காம, எங்கிட்ட உண்மையச் சொல்லிட்டா, போக்கத்தவனாலும், எங்கேயாவது மானத்தோட போயி பொழச்சிக்குவேன். 

ஆனா, மான, ரோசமில்லாதவ இல்ல நான். இதையெல்லாம் பாத்தும் பாக்காம என்னால வாழ முடியாது. அதனால வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு விசயத்தைப் பட்டுனு பேசிருங்க.

எப்டினாலும் என்னால வாழ முடியும்.  சுத்தி விட்டு வேடிக்கை காட்டாம, நேரடியா எதையும் சொல்லுங்க.  என்னை நானே எப்டியாவது தேத்திட்டு, என் விதிய நொந்துகிட்டு, எம்போக்குல போயிக்கிறேன்.” என மதுவும் விடாமல், மனதில் உள்ளதை  அழுகையோடு தெளிவாகக் கூறினாள்.

மதுவின் வார்த்தைகளைக் கேட்கக், கேட்க விஜய்யிக்குள் எரிமலை.  ஏதோ உள்ளுணர்வின் தூண்டுதலால், தான் செய்த விசயங்களை குறிப்புகளாக எடுத்துக் கூறும் மதுவின் பேச்சை அவனால் சட்டென ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. 

ஆனால் அவனுக்குள் இருக்கும் நியாய மனம், ‘அவ சொல்றதெல்லாம் உண்மைதானே’ என அவனுக்கெதிராகவே கொடிபிடித்து, அவனைக் கேலி செய்திட, அமைதியாக அமர்ந்துவிட்டான் விஜய்.

அனைத்திற்கும் மேலாக, இறுதியாக மது பேசியதை அவனால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.  அதற்குமேல், அவளைச் சமாதானம் செய்யவும் முடியாத மனதோடு அங்கிருந்து அகன்றிருந்தான்.

காலையிலேயே துவங்கிய வித்தியாசமான சுப்ரபாதம், இருவரையும் எதிரெதிர் திசையில் அது முதலே பயணிக்கச் செய்திருந்தது. அதன்பின் மது, விஜய்யிக்கு வேண்டிய, காலை ஆகாரத்தை பரிமாறினாலும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

வசீகரன், இருவரின் வித்தியாசமான மௌனத்தை கவனித்திருந்தான்.  அறைக்குள் பேசியது, வெளியில் கேட்கவில்லை.  ஆனாலும், இருவருக்கிடையே ஏதோ சரியில்லை என்பதை இருவரின் செயல்பாடுகள் கூறாதபோதும், தெளிவாக எடுத்துரைத்தது.

பஞ்சவர்ணத்திற்குமே, முந்தைய தினத்தின் மாலைப் பொழுது முதலே மனம் திக்திக்கென அடித்துக் கொண்டது.

விஜய்யிக்கு அலுவலகத்திற்கு சென்றும் மனம், மதுவின் பேச்சிலும், தனது செயலிலும், அஞ்சனாவைப் பற்றியும் சுற்றி வந்தது.

மது நியாயம் கேட்டுப் பேசியதில், தனது தவறுகள் புரிந்தாலும், அதை மனைவியிடம் ஒத்துக் கொள்ள மனம் சண்டித்தனம் செய்தது விஜய்யிக்கு. அதற்கு அவனாகவே சில நியாயங்களை கற்பித்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும், நேரில் இருந்து பார்த்ததுபோல எப்படி தனது பேச்சு முறைமைகளை மது கூறினாள் என்பது புரியாத புதிராகவே விஜய்யிக்கு இருந்தது.

பெண்ணைப் பற்றி மற்றொரு பெண் எளிதில் அறிந்து கொள்வாள் என்பதைவிட, நடந்த நிகழ்வுகளைக் கொண்டு, அஞ்சனாவின் தற்போதைய மனநிலையை மது கணித்திருக்கிறாள் என்பதை விஜய்யால் அத்தனை எளிதில் யூகிக்க இயலவில்லை.  மதுவின் யூகம் ஏறத்தாழ அஞ்சானாவின் எதிர்பார்ப்புதான் என்பது விஜய்யிற்கு தெரிந்திருக்கவில்லை. 

அனைத்தையும், மதுவின் பயமாகவும், அதீத கற்பனையாகவும் யோசித்ததோடு, மதுவின் கேள்விகளில் இருந்த நியாயம் புரிபட, இரண்டுக்குமிடையே அல்லாடினான்.

மது கேட்டால் பதில் என்றளவில் விஜய்யும் நடந்து கொண்டான். அதற்குமேல் விஜய் பேசினாலும் மது விலகியே இருந்தாள்.  விஜய் எதேச்சையாக நெருங்கினாலும் அவனைத் தவிர்த்து ஒதுங்கினாள் மது.

மேலும், மதுவின் சில வினாக்களுக்கு , தான் அஞ்சனா கேட்டுக்கொண்டதாலும், அவளின்மீது இறக்கப்பட்டுச் செய்ததாகவும், குடும்பத்தில் வீண் மனச்சச்சரவு வேண்டாம் என்கிற எண்ணத்தில் அஞ்சனாவுடனான பேச்சை மதுவிடம் மறைத்தாகவும், ஒரு முடிவிற்கு அவனாகவே வந்திருந்தான் விஜய்.

தானாக இதுவரை அஞ்சனாவிடம் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை என்பதும், அவளைத் தேடியோ, அவளுக்காக என மெனக்கெட்டோ, தனது வீட்டில் கிடந்த பொருள்களை அவளின் வீட்டில் கொண்டு போய் சேர்த்ததுவரை தான் சிறு துரும்பையும் அசைக்கவில்லை. 

அவள் கேட்டதற்கிணங்க, அதற்காக வேறு நபர் மூலமாகவே அவளின் பொருள்களை சேர்ப்பித்திருந்தான். ஆகையினால், தான் எந்த விதத்திலும், மதுவின் கணவனாக தவறவில்லை எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு குற்றமற்ற மனநிலையில் இருந்தான் விஜய்.

அப்படிப்பட்ட தன்னையே எத்தனை கேள்வி மது சந்தேகத்தோடு கேட்கிறாள் என்கிற மனக்குறையும், அத்தோடு தன் மீதான நம்பிக்கையில்லாமல் பேசிய மதுவின் பேச்சினால், உண்டான கோபத்தின் காரணமாக பழையவாறு அவளிடம் முகம் கொடுத்துப் பேச முனையாமல், அவனுண்டு, அவனது வேலையுண்டு என்றிருந்தான் விஜய்.

‘இவளுக்காகனு நான் பாத்துப் பாத்து, எல்லாம் செய்ய என்னையவே இத்தனை தூரம் போட்டுப் பாக்குறா.  என்ன நான் செஞ்சாலும் இவ நம்பப்போறது இல்லை.  எதுக்காக நான் அப்டி இருக்கணும்.  யாருக்காக இதையெல்லாம் செஞ்சோனோ இது எல்லாமே வீண்தான்.  அதனால, நான் எதுவும் இனி செய்யாம, என் போக்குல இருக்கேன்’ எனும் பிடிவாதம் காரணமாக வீம்பாகவே விஜய்யும் நடந்து கொண்டான்.

அஞ்சனாவிடம், அதற்குமேலும் பேச்சை வளர்க்க எண்ணாது, அவளின் அழைப்பை இடைநிறுத்தம் செய்திருந்தவனுக்கு, மதுவின் அஞ்சனா பற்றிய பேச்சை உண்மை என்று கருதாமையால், அதை பழைய நிலைக்கு பேசினால் தனக்கு அழைப்பு வரும்படி மாற்றியிருந்தான்.

வசீகரன் தன் தாயோடு பேசும்போது, அவர் துருவித் துருவிக் கேட்டதும், தனக்குத் தோன்றியதை மேலோட்டமாகப் பகிர்ந்து கொண்டிருந்தான். அடுத்து பஞ்சவர்ணத்திடம் கேட்க, அஞ்சனா வந்த தினத்தன்று நடந்ததையும்,  அதன்பின் இருவரின் ஒட்டாத தன்மையையும் பாரியிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆட்பட்ட மதுரா, கணவன் இரட்டைத் தன்மையில் இருப்பதாக எண்ணி, தனக்குள் குமைந்து போனாள்.

தனது அத்தை  சௌந்திரத்திடம் இதைப்பற்றிப் பேசவோ, ஒரு மாற்றம் வேண்டி அவரின் வீட்டிற்குச் செல்லவோ இயலாது என்பதால், அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தாள்.  இறுதியாக பிரேமாவிடம் பேசுவதாக முடிவெடுத்தாள்.

பிரேமாவிடம் பொதுவான நல்ன் விசாரிப்பிற்குப்பின், “அத்தை, அங்க வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமா” என்றிட

பிரேமாவும், “தாராளமா வாடா.  மாப்பிள்ளையும் நீயும் எப்ப கிளம்புறீங்கன்னு சொல்லு”

என்ன பதில் கூறினாள் மது?

***