மது பிரியன் 18(அ)

மது பிரியன் 18(அ)

மனைவி தனக்காக எதையும் யோசிக்கவில்லை எனும் நிராதரவான உணர்வோடு, அழைப்பைத் துண்டித்துவிட்டு, வீட்டிற்குச் செல்லத் திரும்பிய விஜய், அங்கு தன்னோடு பணிபுரியும் சக அலுவலரைச் சந்திக்க நேர்ந்தது.

திரையரங்கு அருகில் நின்றபடி பேசிக்கொண்டிருந்த விஜய், அதனைக் கவனிக்கவில்லை.  ஆனால் எதிர்கொண்டவரோ, “என்ன சார், இந்தப் பக்கம்? படம் பாக்க வந்தீங்களா?” விஜய்யிடம் அலுவலர் வினவ,

அதுவரை சுற்றத்தை கவனிக்காமல் இருந்தவன், அப்போதுதான் தான் நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் பார்வையை செலுத்தினான் விஜய். அவன் பெரும்பாலும் திரையரங்கு பக்கமே சென்றது இல்லை.

தனது அலுவலகப் பணி, அதனைவிட்டால் வீடு, சில நேரங்களில் தனக்கென ஒதுக்கப்பட்ட வேறு பணிகளில் கவனம் என்பது மட்டுமே விஜய்யிக்கு.  அதனால் அந்த இடத்தில் திரையரங்கு இருப்பதுவே அன்றுதான் அவனது மனதிற்குள் வந்தது.

“இல்லை சார்.  இந்த வழியா வீட்டுக்கு போயிட்டுருக்கும்போது, ஒரு போன்.  அதான் பேசிட்டு இருந்தேன்.  வச்சிட்டு, கிளம்ப நினைச்சப்போதான் உங்களைப் பாத்தேன்” விஜய் விளக்கம் கொடுக்க,

“நான் படம் பாக்கத்தான் வந்தேன்.  வாங்களேன் சார்.  ரெண்டு பேருமாப் போகலாம்” என அவர் அழைக்க

தயங்கியவன், வீட்டிற்குச் சென்றாலும் தமக்கை  பாரியோடு சிறுது நேரம் பேசிவிட்டு, அதன்பின் வெறுமையாக இருக்க வேண்டியது நினைவில் வர, திரைப்படத்திற்குச் செல்லும் முடிவுக்கு வந்தான்.

“என்ன படம் சார்?” விஜய் கேட்க, அவரும் அதைப்பற்றிப் பகிர்ந்ததோடு,

“வீட்டுல புள்ளைங்க, பொண்டாட்டினு, ரிமோட்டை ஆளாளுக்கு மாத்தி எடுத்து வச்சிட்டு, அதுக பண்ற அழும்பு தாங்க முடியலை சார்.  அதான் இப்டி வெளிய கிளம்பி வந்திரது” என தான் இங்கு வந்தமைக்கான காரணத்தை விஜய் கேளாமலேயே பகிர்ந்தார்.

அப்படியா என்பதுபோல சிரித்தவன், “சரி சார், வாங்க போகலாம்” என ஆமோதித்ததோடு, அவரோடு தியேட்டருக்குள் நுழைந்துவிட்டான் விஜய்.

***

மது பிரேமாவிடம், அடுத்தநாள் தான் கிளம்புவது பற்றிப் பேச, “முகமே சரியில்லை.  ஆளும் முன்னக் காட்டிலும் ஓன்னு ஓஞ்சு திரியற.  என்னான்னு கேட்டாலும் வாயத் திறக்கவே மாட்டீங்கற. 

உடம்புக்கு எதுவும் முடியலையான்னு கேட்டாலும், நல்லாயிருக்கேங்கற.  வந்து மூனு நாளுகூட முழுசா இருக்கலை.  அவரு வந்து கூப்பிட்டுப் போகட்டும்னாலும், வெந்நிய காலுல ஊத்தின மாதிரி துடிச்சிக்கிட்டு, ஊருக்குப் போயே ஆகணுங்கற. எனக்குத்தான் பதறுது.” பிரேமா மதுவைப் பார்த்தவாறு கூறனார்.

மதுவை தங்கள் வீட்டில் விட்டுச்செல்லும் எண்ணமே இல்லாமல், தயங்கிய விஜய்யைக் கண்டவராயிற்றே.  ஆகையினால் அவன் மீது பிரேமாவிற்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

பிரேமாவைப் பொறுத்தவரை, ‘மது எவ்ளோ கஷ்டப்பட்டாளோ, அதுக்கெல்லாம் சேத்து, அவளுக்கு நல்ல மாப்பிள்ளையைக் கொடுத்திருக்க ஆண்டவா.  இந்தப் புள்ளைக்கு எந்தக் குறையும் வராம, ரெண்டு பேரும் தீர்க்க ஆயுசோட, எல்லா வளத்தோட இருக்கணும்’ என்பதாக மட்டும்தான் இருந்தது.

வந்ததும் மதுவின் புறத்தோற்றத்தைக் கவனித்து, “எதுவும் விசேசமா?” எனக் கேட்க, “அப்புடிலாம் ஒன்னுமில்லைத்தை” என்றிருந்தாள். ஆகையினால், மதுவின் இந்த மெலிவிற்கான காரணம் தெரியாமல்தான் பிரேமா இத்தனை புலம்பு மதுவிடம் புலம்பியிருந்தார்.

“அத்தை நான் என்ன சின்னப் புள்ளையா?  இன்னும் என்னை நினைச்சு இவ்ளோ பயப்படறீங்க?” மது பேச்சுக்கு பிரேமாவிடம் அப்படிப் பேசினாலும், இதுவரை தனியாக சென்றிராத காரணத்தால், உள்ளுக்குள் லேசான உதறல் மதுவுக்கும் இருந்தது.

“உன் வீட்டுக்காரரை அலைய விடக்கூடாதுன்னு, நீயே தனியாப் போயிக்கிறேங்கறீயா மது? இல்லைன்னா நான் உன்னை வந்து விட்டுட்டு வரவா?” பிரேமா மதுவை முதலில் கிண்டலாகவும், அதன்பின் அக்கறையோடும் கேட்டார்.

“இல்லைத்தை” என்றவள், “உங்களுக்கு எதுக்கு அலைச்சல்.  நானே போயிட்டு, உங்களுக்கு போன் போடறேத்தை” விஜய் பேசியபோது நடந்த அவனது அதிருப்தியான செயலைப் பற்றியோ, அதனால் தனது கணவனுக்கு இன்ப அதிர்ச்சி தரும் முயற்சியில் தான் இறங்கியதையோ, கூறாமல் சிரித்து மழுப்பியிருந்தாள் மது.

அடுத்த நாள் கண்டிப்பாக கிளம்பிவிடும் முயற்சியில், தனது பொருள்களை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள் மது.  மதுவிற்குமே ஏதோ இனம் புரியாத சந்தோசம் மனம் முழுக்க வியாபித்தது.

‘எத்தனை குத்து குத்துனாலும், குத்தை வாங்கிட்டு எதுவுமே வாங்கலைங்கற மாதிரி, இந்த மனுசம் பின்னாடி போற மனசை என்ன செய்யறது’ என அறிவு சிந்தித்தாலும், மனம் முழுவதும் இன்பமாக உணர்ந்தாள் மது.

***

இடைவெளிவரை மிகவும் பொறுமையாக அமர்ந்து படம் பார்த்தவனுக்கு, அத்தனை எளிதில் அதனோடு இன்னும் ஒன்ற முடியாமல் அமர்ந்திருந்தான் விஜய்.

விஜய்யைப் பொறுத்தவரையில், பள்ளியில் அழைத்துச் சென்று திரையரங்கில் காட்டிய படங்களைத் தவிர வேறு எந்தப் படத்திற்கும் இவனாகச் சென்று இதுவரை பார்த்ததில்லை.

படிப்பைத் தவிர, பணி.  அது கிட்டியபின் வேறு எந்த சிந்தனையில்லாதவன்.  அஞ்சனா என்பவளைத் திருமணம் செய்து, ஏமாற்றங்களும், வஞ்சமும், காயமும், இழப்பும் ஒரு சமயம் மதுவின் பக்கமாகத் திசை திருப்பி அதில் ஆழ்ந்து போயிருந்தான்.

கரையெங்கே என தெரியாமல் மதுவின் மயக்கத்தில் தத்தளித்தவனை, சுற்றம் சேர்ந்து மீளும் வழி தேடிக் கொடுத்திட மீண்டவன், சமீபமாக மதுராகிணி எனும் சித்தினியை மட்டுமே சிந்தையில் இருத்தியிருந்தான்.

‘இது எப்ப முடியும்னு தெரியலையே’ என்பதாக விஜய்யின் எண்ணம் இருக்க, இடைவேளை வந்திருந்தது. இருவருமாக வெளியில் எழுந்து வர, அந்நேரம் விஜய்யிக்கு அழைப்பும் வந்தது.

காலையில்தான் அலுவலகம் பக்கம் சென்றபோது, தன்னைக் கேள்வி கேட்டு, துரத்தியடித்த செல்லத்திடமிருந்த அழைப்பு வந்தது. ‘இப்ப எதுக்கு கால் பண்றான்’ என எண்ணியபடியே எடுத்து என்னவென்று கேட்டான் விஜய்.

காவலர் விடுப்பில் சென்றிருந்தமையால், இன்று அலுவலக உதவியாளரான செல்லத்தை காவலுக்கு நியமித்திருந்தனர். அலுவலக விசயமாக அழைக்கிறான் என அழைப்பை ஏற்றவனுக்கு, எதிர்பாரா அதிர்ச்சி காத்திருந்தது.

“சார், இங்க உங்களைத்தேடி யாரோ ஒருத்தங்க வந்திருக்காங்க.  ஆனா அவங்களை எங்கோ பாத்த மாதிரி இருக்கு.  ஆனா எங்கனு தெரியலை. 

நீங்க யாருனு கேட்டா, உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்கனு மட்டுந்தான் சொல்றாங்க.  பேரு ஏதோ சொன்னாங்க” என்றுவிட்டு, திரும்பி வந்த நபரிடமே கேட்டு, “அஞ்சனாவாம் சார்” என்றவன்,

“உங்க வீட்டுக்குப் போனப்பவும் உங்களை அங்க பாக்க முடியலையாம்.  அதான் ஆபீஸுகு வந்தாங்களாம்.  நான் இன்னைக்கு ஞாயித்துக் கிழமை லீவுன்னால யாரும் வரலைனு சொன்னேன்.  இந்தப் பக்கம் வந்தவங்க, என்ன கிழமைன்னு யோசிக்காம வந்துட்டாங்களாம்.

          என்ன சார் சொல்ல? உங்க வீட்டுக்கே வரச் சொல்லவா சார். இப்ப அவங்கட்ட பேசிறீங்களா சார்” விஜய்யின் பதிலுக்காக எதிர்முனையில் காத்திருந்தான் செல்லம்.

பதறி அலைபேசியில் அஞ்சனாவிடம் பேச மறுத்திருந்தான் விஜய். ஆரம்பத்தில் விஜய்யின் எண்ணிற்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்து போனவள், விஜய்யைக் காண நேரில் வீட்டிற்கு வந்தாள். 

அப்போதும் காணமுடியவில்லை என்பதைக்காட்டிலும், மதுவோடு சில மனக் கசப்போடு வெளியேறியவள், அக்கம்பக்கம் தெரிந்த மதுவின் ஆதரவாளர்களை எண்ணி அங்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை.

நிதானமாக யோசித்து, அதன்பின்னும் விஜய்யிக்கு அன்றே அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படாமல் போகவே, தற்போது முயற்சிக்காமல், அலைபேசியை நம்பாமல் அலுவலகத்திற்கு நேரில் வந்திருந்தாள் அஞ்சனா.

அஞ்சனா வந்ததை செல்லம் மூலம் விஜய் அறிந்ததுமே, ‘இவ ஏன் என்னைக்குமில்லாத திருநாளா ஆபிஸுக்கு போயிருக்கா’ என அஞ்சனாவின்மீது எரிச்சலாக வந்தது.

திருமணமாகி வந்து பிரச்சனைகளில் உழன்றபோது சிலநாள் வீட்டுப் பக்கமே செல்லாமல் விஜய் இருந்தபோதுகூட, அலுவலகத்திற்கு தன்னைத் தேடி வராதவள், இன்று எதற்காக வந்தாள் என அஞ்சனாமீது கோபமாக வந்தது விஜய்யிக்கு.

செல்லம் இதற்குமுன், அஞ்சனாவை சஞ்சய்யுடன் பார்த்து, தன்னிடம் வந்து கூறிய சந்தர்ப்பங்கள், தற்போது விஜய்யின் நினைவுக்கு வந்தது. 

‘இப்போ அவளை செல்லத்துக்கு அடையாளம் தெரியலைபோல.  ஆனா எங்கையோ பாத்தமாதிரி இருக்குங்கறான்’ என எண்ணினாலும், ‘இவ எதுக்கு ஆபிசுக்கு என்னைப் பாக்க வரணும். 

என்னைப் பாத்து என்ன செய்யப் போறா? அன்னைக்கும் வீட்டுக்கு வந்து, வீணான பிரச்சனைய இழுத்து விட்டுட்டுப்போனா.  இன்னைக்கு போதாக்குறைக்கு, ஆபீஸ்ஸுக்கே வந்து என்னை அசிங்கப்படுத்தறா’ என விஜய்யின் மனதில் ஓடியது.

அஞ்சனாவின் வருகை, அவன் உணராமலேயே அசிங்கமாகத் தோன்றியது விஜய்யிக்கு.  ஏன் அப்படித் தோன்றுகிறது என்பதைப் பற்றி அவனால் அப்போது யோசிக்க முடியவில்லை.

அஞ்சனா காரைக்குடி வந்தது முதலே அலைபேசியின் வழியே மட்டும் பேசியதோடு சரி.  அவளைக் காணும் எண்ணம் விஜய்யிக்கு இன்றுவரை வரவில்லை.  ஆனால், இன்று வேறு வழியில்லாமல் நேரில் சந்திக்க முடிவெடுத்திருந்தான் விஜய்.

நெருடலாக உணர்ந்த தருணம் அது.  ஆனால், இதுவரை அவளுக்காக இரங்கிய மனம், ஏனோ அதிருப்தியாக உணர்ந்தது.

அதற்காக அஞ்சனாவை வீட்டிற்கு வரச்சொல்லி பேசவும் முடியாது. அதில் விஜய்யிக்குமே உடன்பாடு இல்லை.  ஆனாலும் எதற்காக தன்னைத் தேடி வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் வந்தாள் என்பதை கட்டாயம் விஜய் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

இதனை இப்படியே விட்டால், இவளாகவே எதையேனும் இழுத்துவிடக்கூடுமோ என்கிற விழிப்பும் ஆழ்மனதில் தற்போது தோன்றியிருந்தது.

மதுவின் வார்த்தைகள் வேறு மனதில் வர, ‘இதை வளர விடாம, இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டணும்’ தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தான் விஜய்.

ரெஸ்டாரண்ட் எதுவும் அந்தப் பகுதியில் இல்லாதது நினைவில் வர, அஞ்சனாவை அருகே இருக்கும் ஒரு பார்க்கின் பெயரைக் கூறி, அங்கு வந்து காத்திருக்கும்படி செல்லத்திடம் பகிருமாறு கூறியவன், “நானே அங்க வந்து இன்னும் அரைமணி நேரத்துல பாக்கறேன்னு சொல்லிரு” என வைத்தான்.

தனது அலுவலக நண்பரிடம், ‘என்னைப் பாக்க சொந்தக்காரங்க ஒருத்தங்க ஆபிஸ்ல வயிட் பண்றாங்களாம் சார்.  நான் அப்டியே கிளம்பறேன்’ என விசயத்தைக் கூறிவிட்டு பார்க்கை நோக்கிக் கிளம்பினான் விஜய்.

விஜய்யைப் பொறுத்தவரையில், அவனால் இதற்குமேல் பொறுமையாக இந்தப் படத்தைப் பார்க்க முடியாது, அத்தோடு அஞ்சனா ஏன் தன்னைப் பார்க்க வேண்டும் என இத்தனை தூரம் மெனக்கெடுகிறாள் என்கிற கேள்விக்கு, இன்றே நேரில் பதிலைத் தெரிந்து கொள்வதோடு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடும் எண்ணத்தில் விஜய் பார்க்கை நோக்கிக் கிளம்பிவிட்டான்.

***