மது பிரியன் 19

மது பிரியன் 19

விஜய்யிக்கு, அஞ்சனாவைச் சந்தித்துப் பேசியது முதலே, எரிச்சலும் கோபமுமான மனநிலையோடு வீடு வந்து சேர்ந்திருந்தான்.  மது கூறியதை தான் நம்பாததும், தற்போது அஞ்சனா தன்னிடம் வந்து பேசிச் சென்றதை எண்ணி வருத்தமும் உண்டாகியிருந்தது விஜய்யிக்கு.

‘இவள்லாம் ஒரு ஆளுன்னு இவளைப்பத்தி மது சொன்னதை நம்பாம, முகத்தைத் தூக்கி வச்சிட்டு சுத்துனேன்.  என் டாலிய ரொம்பக் கஷ்டப்படுத்தி, இங்க இருக்க விடாமத் தொரத்திட்டேன்.’ எனத் தோன்றியது.

மனைவியோடு பேச நிறைய விசயங்கள் இருந்தது விஜய்யிக்கு.  அவள் வரும்வரை காத்திருக்கும் பொறுமை பறந்திருந்தது.  எவளோ ஒருத்திக்காக, மனைவியிடம் பாராமுகமாகத் திரிந்த தனது செயல் விஜய்யை வாட்டி, வருத்தியது.

மதுவிடம், இல்லாததைக் கூறி விரிசல் உண்டு செய்யும் அஞ்சனாவின் பேச்சைக் கேட்டது முதலே, தானும், அஞ்சனாவும் இணைந்து இருந்த சமயத்தில் நடந்த விசயங்கள் சில மதுவிற்குத் தெரிந்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொண்டவன், மதுவிடம் தாமதிக்காது பகிர எண்ணினான்.

இரவு முழுக்க உறங்காமல், கடந்து போன வசந்தமான நினைவுகளோடு நேரத்தை நெட்டித் தள்ளியிருந்தான் விஜய்.

மது வரும்போது வரட்டும் என்று இருக்காமல், தானே அங்கு சென்று மனைவியை அழைத்து வரலாம் எனும் முடிவுக்கு வந்திருந்தான் விஜய். 

மாலை நேரத்தில் சென்றால், இரவு அவர்களின் வீட்டில் தங்க நேரிடும் என்பதால், காலையில் சென்று கையோடு மதுவை அழைத்து வர முடிவு செய்துவிட்டு அன்று தங்கள் வீட்டிலேயே படுத்து உறங்க முயன்றான்.

படுக்கை, முன்னிலும் உறுத்தி, நரகவலி உண்டாக்கியதுபோல விஜய் உணர்ந்தான்.  நேரம் மிகவும் தாமதமாகச் செல்வதுபோல இருந்தது. புரண்டு, புரண்டு உறக்கம் நெருங்கவில்லை.

அதிகாலையில் குளித்து வெளியில் செல்வதுபோல கிளம்பி வந்தவனை நோக்கிய பாரி, “என்ன தம்பி, இத்தனை விரசா போகணும்னா, நேத்து நைட்டு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல.  டீத் தண்ணிய மட்டும் குடிச்சிட்டு பட்டினியாப் போறியே” என வருந்தினார்.

காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்னதாகவே, மதுவை அழைத்து வந்து வீட்டில் விட்டுச் செல்லும் எண்ணத்தில், விரைவாகவே காளையார்கோவில் நோக்கிக் கிளம்பியிருந்தான் விஜய்.

“சின்ன வேலைக்கா.  சீக்கிரம் முடிச்சிட்டா, வீட்டுக்கு வந்துட்டுப் போறேன்” என தமக்கையிடம் கூறிக்கொண்டு விஜய் விடைபெற்றிருந்தான்.

மதுவைப் போல, விஜய்யும் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தர எண்ணி, அவளிடம் விசயத்தைப் பகிராமல் அவளை அழைத்து வர எண்ணிப் பயணத்தை மேற்கொண்டிருந்தான்.

***

மதுவை பேருந்தில் ஏற்றிவிட்ட பிரேமா, சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரவும், விஜய் அவர்களின் வீட்டு வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது.

விஜய்யைக் கண்டதுமே, மது அவசரப்பட்டுக் கிளம்பியது நினைவில் வர, வந்ததும் உடனே அதைக்கூறி, மனதை வருத்த வேண்டாம் என எண்ணியவர், “வாங்க தம்பி, நல்லாயிருக்கீங்களா?  வீட்டுல எல்லாரும் சௌக்கியம்தான?” என நலம் விசாரித்ததோடு,

“வாங்க வீட்டுக்குள்ள” என அழைக்க, அதேநேரம் வெளியில் அலுவலகம் செல்லக் கிளம்பி வந்த, பிரேமாவின் கணவரும், “அடடே வாங்க தம்பி” என இன்முகமாக வரவேற்றார்.

வரவேற்பை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குள் சென்றவனிடம், “இப்பதான் மதுவை பஸ்ஸுல ஏத்திவிட்டுட்டு, கொஞ்சம் காய்கறிய வாங்கிக்கிட்டு வந்தேன்.  இந்நேரம்” என ஹாலில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தவர்,

“காரைக்குடியில போயி இறங்கியிருப்பா.  அவகிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னேன்.  உங்களுக்கு பேசச் சொல்லி.   சரி நீங்களாவது அவகிட்ட பேசியிருக்கலாம்.  ரெண்டுபேரும் இப்டி இருந்தா என்ன செய்யறது!” சிரித்தபடியே தர்மசங்கடத்தோடு கூறியவர்,

விஜய்யை உபசரிக்க எண்ணி நீரைத் தர பருகினான். பிரேமா, விஜய்யிடம் காலை உணவு உண்ணக் கூற, மறுத்துக் கிளம்பினான். கிளம்பியவனைக் கட்டாயப்படுத்தி, தேநீரைத் தந்திட, அருந்திவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினான் விஜய்.

***

          ஒருவருக்கொருவர் இன்ப அதிர்ச்சி தர எண்ணிக் கிளம்பியவர்கள், எதிர்பாரா நிகழ்வால் ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பை நீட்டித்து, வெறுமையோடிருந்தனர்.

பேருந்தில் ஏறி அமர்ந்த மது, சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அலைபேசியில் சத்தம் எழ அதனை எடுத்தாள்.

அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். பேட்டரி ‘லோ’ என்பதைக் காட்ட, அப்போதுதான் சார்ஜ் போடாதது மதுவின் நினைவிற்கு வந்தது.  டேட்டாவை அணைத்தவள், அலைபேசி சார்ஜ் இல்லாமல் அணைவதற்குள் வீட்டிற்கு சென்றுவிடலாம் என மனதைத் தேற்றியவாறு, பேருந்தில் அமர்ந்திருந்தாள்.

          தான் செல்லும் நோக்கத்திற்காக, இரண்டு நாள்கள் ஒத்தாசையின் நிமித்தம் மருத்துவமனையில் தங்கியிருக்க நேரிடும் என்பதை உணர்ந்தபடியே வந்த இரு கண்களுக்குச் சொந்தமான அந்த நபர், மதுவைக் கண்டதும், தனக்குப் பதிலாக மதுவை அவ்விடத்தில் நியமிக்க முடிவெடுத்து, தாமதிக்காமல் மதுவை நெருங்கியது.

          அதே நேரம் தனதருகே நெருங்கி நின்றவரை, யோசனையோடு திரும்பிப் பார்க்க, அங்கு சௌந்திரத்தின் மூத்த மகள் நின்றிருந்தாள்.

          திரும்பிப் பார்த்த மதுவிற்கோ ஆச்சர்யம் தாளவில்லை.  பழையதையோ, தன்னை ஒதுக்கி, ஒதுங்கியவர்கள் என நினைக்காமல், “கீர்த்தி எப்டி இருக்க?  உன் புள்ளைங்க எல்லாம் எங்க? அத்தை, மாமால்லாம் நல்லாயிருக்காங்களா?” என வந்தவளை நகரச் செய்தபடியே, அவள் வந்த திசையில், அவளின் பிள்ளைகளைத் தேடினாள் மது.

          மூன்று நபர்கள் இருக்கும் இருக்கையில் இருவர் மட்டுமே அமர்ந்திருக்க, மதுவின் அருகில் அமர்ந்த கீர்த்தி, நல விசாரிப்புகளைத் தொடர்ந்திருந்தாள்.

          “நீ மட்டுந்தான் வர்றியா கீர்த்தி” என்ற மது, “ஆமா நீ முன்ன திருச்சியிலதான இருந்த.  இப்ப எங்க இருந்து வர்ற” என்றிட

          “இப்ப, அவருக்கு டிரான்ஃபர்ல பரமக்குடி வந்திட்டோம். அதனால, எங்க மாமியா வீட்டோடதான் இருக்கேன்” கீர்த்தி

          “அப்டியா” மது

          “ஆமா.  அம்மாவுக்கு முடியலைன்னு ஹாஸ்பிடல்ல சேத்திருக்கறதா, அப்பா போன் போட்டு உடனே கிளம்பி வரச் சொன்னாரு.  புள்ளைகளைக் கூட்டிட்டு வந்தா, அம்மாவைக் கவனிக்க முடியாதுன்னு, எங்க மாமியாருகிட்டயே புள்ளைகளை விட்டுட்டு வந்துட்டேன்” கீர்த்தி

          “அத்தைக்கு என்ன செய்யிது” படபடப்பாய் கேட்டாள் மது.

          “நைட்டு ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்து பெட்ல உக்காறேனு தவறி கீழ விழுந்ததுல, தொடை எலும்பு முறிஞ்சிருச்சு. ஆபரேசன் பண்ண, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க மது” கீர்த்தியும் தாயின் நிலையை எண்ணி சோகமாக உரைத்தாள்.

          எப்படி விழுந்தார், என்ன நடந்தது என அடுத்தடுத்து கதைகள் பேசியபடியே இருவரும் வர, காரைக்குடி பேருந்து நிலையம் வந்திருந்தது.

          மதுவிற்கு, சௌத்திரத்தைப் பற்றி இத்தனை விசயங்கள் கேட்டபின், தன்னைப்போல வீட்டிற்குச் செல்ல மனமில்லை. தன்னை ஆளாக்கியவர்.  ஆயிரம் குறைகள் அவரிடம் இருந்தாலும், தனக்கு விசயம் தெரிந்தும் காணாததுபோலச் செல்வதற்கு மனமில்லாமல், கீர்த்தியோடு மருத்துமனைக்குச் செல்ல முடிவெடுத்துவிட்டாள் மது.

          மதுவின் அலைபேசியும் சார்ஜ் இல்லாமல் அணைந்ததை மது அறியவில்லை என்பதைவிட, அதைப்பற்றிய சிந்தனை எழாவண்ணம், சௌந்திரத்தின் உடல்நலம், மதுவின் மனதில் அசிரத்தையான உணர்வை விதைத்திருந்தது.  

அதேநேரம், விஜய் மதுவிற்கு அழைக்க, அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வர, ‘போன்ல சார்ஜ் இல்லையா, இல்லை இவ ஆன் பண்ணாமயே வச்சிருக்காளானு தெரியலையே’ என யோசித்தவன், நேராக காரைக்குடியில் உள்ள தங்கள் வீட்டிற்கு வண்டியைச் செலுத்தினான் விஜய்.

***

          மருத்துவனைக்கு சென்றவளை, வீட்டில் இருக்கும்போது கட்டளையிட்டதுபோல, ஆளாளுக்கு ஒரு வேலை கூற, மதுவும் மறுக்காமல், பணிகளைச் செய்தாள்.

          கீர்த்தியும், பேருந்தில் அவளைச் சந்தித்தது பற்றிக் கூறியதோடு, தான் மிகவும் திறமையாக அவளை இங்கு அழைத்து வந்ததாக, தாயின் காதில் கிசுகிசுத்தாள்.

          “அதானே பாத்தேன்.  இவளுக்கு எப்டித் தெரிஞ்சதுன்னு இவ்ளோநேரம் மண்டையப் போட்டு உடைச்சிட்டுருந்தேன்” என்றார் சௌந்திரம்.

          சௌந்திரத்திற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருந்தது.  தனித்து அவரால் எழுந்து அவரின் பணிகளைச் செய்ய முடியாததால், கணவன் மூலம் மகளை கண்டிப்பாக உதவிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

          முந்தைய தினம் வரை, இளையவள் உடனிருந்து தாயிக்கு உதவிவிட்டு, கீர்த்தி இன்று வருவதாக இருப்பதால், காலையில்தான் விடைபெற்றுச் சென்றிருந்தாள்.

          மதுவை திருமணம் செய்து கொடுத்ததோடு, அவளைப் பற்றியோ, அவளின் வாழ்வைப் பற்றியோ எந்தக் கவலையுமின்றி, ஒதுங்கிச் சென்றதை மறந்துவிட்டு, அவளின் வீட்டு நினைவே வராதபடிக்கு, சௌந்திரத்திற்கும், அடுத்தடுத்து அவரைக் காண வந்தவர்களை உபசரிப்பது என வேலைகள் தொடர்ந்து இருந்தது.

          மதுவிற்கு, வீட்டிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், தான் பிரேமா அத்தையின் வீட்டில் இருப்பதாக கணவன் வீட்டார் நினைத்துக் கொண்டிருப்பார்கள். 

ஆகையினால், வந்த இடத்தில் தன்னாலான உதவிகளைச் சௌந்திரத்திற்குச் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் உத்தேசத்தில் இருந்தாள் மது.

மதியத்திற்குமேல் சௌந்திரத்திற்கு உணவு உண்ண உதவி செய்துவிட்டு, அமர்ந்தபோது அலைபேசி அணைந்திருப்பதைக் கண்டு, அதற்கு சார்ஜ் இட்டிருந்தாள் மது.

சௌந்திரத்திற்குச் செய்வது தனது கடமை எனும் எண்ணத்தில் செய்தாள் மது.  கீர்த்தி இரண்டு நாள்கள் மருத்துவனையின் தங்கும் எண்ணத்தில் வந்தவள், மதுவைப் பார்த்ததும், தாயிடம் தனிமையில்,

“இவளை நீங்க டிஸ்சார்ஜ் ஆகறவரை தொணைக்கு வச்சிக்கங்கம்மா. எம்புள்ளைகளை வச்சிக்கிட்டு, எம்மாமியார் என்ன செய்யறாங்களோ தெரியலை.  நான் அப்ப கிளம்பவா” என தாயின் பதிலுக்குக்கூட காத்திராமல், அன்று மாலை மூன்று மணியளவில் தனது ஊரை நோக்கிக் கிளம்பிவிட்டாள் கீர்த்தி.

அங்குமிங்கும் வெளி வேலை பார்ப்பதுபோல இருந்த கீர்த்தி, ஊருக்குக் கிளம்பியது மதுவிற்கு தெரியாமலேயே போயிருந்தது.

சௌந்திரத்திற்குமே, மதுவின் குடும்பநிலைபற்றியோ, அவள் இங்கிருந்தால், அவளின் குடும்பத்தார் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியோ, அறிந்து கொள்ள முயலவில்லை. அதைப்பற்றி யோசிக்கும் நிலையில் சௌந்திரத்தின் உடல்நிலையும் இல்லை.

சௌந்திரத்திற்கு உடல்நிலை தேறினாலும், ‘அவளுக்கு நான் வருசக்கணக்கா பாத்திருக்கேன்.  ரெண்டு நாளோ, நாலு நாளோ, இல்லை எனக்குச் சரியாகறவரை இருந்து, எனக்குத் பாத்தா இவ குறைஞ்சா போயிருவா’ என்பதான மனநிலைதான் செளந்திரத்திற்கு.

சௌந்திரத்தின் கணவருமே, மனைவியின் மனநிலையில்தான் தற்போது இருந்தார். அதற்குக் காரணம் இருந்தது.  பணம் எத்தனை கொடுத்தாலும், சில வேலைகளைச் செய்ய ஆள்கள் கிடைக்கவில்லை.  அதனால், முகம் சுழிக்காமல் வந்தது முதல் பணிவிடைகள் ஆற்றும் மதுவைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சோடு தம்பதியர் இருந்தனர்.

சௌந்திரம் பயன்படுத்திய ஆடைகள் அனைத்தும்,  அப்படியே கிடக்க, அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, மருத்துவனை லாண்டரியில் போட எடுத்து வைத்தாள் மது.

அதனைப் பார்த்த சௌந்திரத்தின் கணவர், “இங்க லாண்டரியில போட வேணாம்மா.  வீட்டுல எடுத்துட்டுப் போயி துவைச்சிக்கலாம்.  இங்க ஆஸ்பத்திரி லாண்டரியில காசு கூடக் கேக்குறானுங்க” என்றுவிட்டார்.

“மாத்துத் துணி வேணாமா.  எப்ப வீட்டுக்குப் போயி எப்ப தொவைச்சு எடுத்துட்டு வர” என சௌந்திரம் கணவரிடம் தனது தேவைக்கு மாற்று உடை இல்லை என்பதை உரைக்க

“அவசியத்துக்குன்னு ரெண்டு செட் மட்டும் நானே தொவைச்சுப் போடறேன் அத்தை” என மது, அவளாகவே இரண்டு செட் உடைகளை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தாள்.

மதுவிற்கு, இதனைக் காட்டிலும் அதிக பணிகள் செய்து பழக்கமிருந்ததால், அவள் தம்பதியர் பேசியதையோ, வேறு எதையும் பொருட்படுத்தாது, செயல்பட்டாள்.

மாலை நெருங்கிக் கொண்டிருக்க, அலைபேசியை அப்போதுதான் ஆன் செய்தாள் மது.  கணவன் அலுவலகத்தில் இருந்து வந்து தன்னை அழைத்துச் செல்வது என்பது இந்நேரத்தில் இயலாது என்பதால், தனித்து ஆட்டோ வைத்து வீட்டிற்குச் செல்லும் முடிவில் இருந்தாள் மது.

ஓரளவு அங்குள்ள அனைத்து பணிகளையும் முடித்துக் கொண்டு, சௌந்திரத்திடமும், அவள் கணவரிடமும் விசயத்தைக் கூறிவிட்டு கிளம்ப எத்தனிக்க, “தனியா அவளாலே எதுவும் செய்துக்க முடியலை.  எனக்கும் அவளைத் தூக்கி உதவி செய்ய முடியலை.  நீ வந்ததுனால கீர்த்தியும், ஊருக்குச் போயிருச்சு.  இப்ப நீயும் போயிட்டா, அவளை யாரு பாத்துப்பா” என நேரடியாகவே சௌந்திரத்தின் கணவர், குற்றவாளியைப்போல மதுவை நிற்க வைத்துக் கேட்டிருந்தார்.

எப்போதும், அவர்களின் கேள்விக்கு பதில் கூறிப் பழக்கப்பட்டிராதவள், அடுத்து தான் என்ன செய்ய என யோசிக்க முடியாமல், கணவனிடம் இதைப்பற்றிக் கூறவும் இயலாமல், அப்படியே நின்றிருந்தாள் மது.

அவர்களால்தான், தான் இன்று ஒரு குடும்ப வாழ்க்கையில் இருக்கிறோம் என்பது உண்மையாக இருந்தாலும், தற்போது திருமணம் முடிந்து வேறொருவரின் வீட்டில் இருக்கும் தன்னை, இப்படி நிறுத்தி வைப்பது அத்தனை சரியான முறையல்ல என்பது மதுவிற்குத் தோன்றியது.

ஆனால் அதை அவர்களிடம் பேசும் அளவிற்கு மதுவிற்கு தைரியமில்லை.

தனக்கென்ன வந்தது என்று சௌந்திரம் தன்னை திருமணம் முடிந்த கையோடு விஜய்யின் வீட்டில் விட்டுச் சென்றதுபோல, மதுவிற்கு சௌந்திரத்தை மருத்துவமனையில் விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

பிரேமாவிற்குகூட தான் காரைக்குடி வந்ததும் பேசுவதாகக் கூறியதும் அப்போது நினைவில் வர, இதுவரை அவருக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டோமே, அவர்கள் எப்படி பதறுகிறார்களோ என எண்ணித் தவித்துப் போயிருந்தாள் மது.

பிரேமாவிற்கு அழைக்க எண்ணி அலைபேசியை எடுத்த மதுவிற்கு, சௌந்திரத்திற்கு உதவி செய்ய வந்ததே, இத்தனை தாமதத்திற்கு காரணம் என்பதை அறிந்தால், பிரேமா கேட்டுக்கொண்டு சிவனே என இருக்க மாட்டார் என்பதும் நினைவில் வர, தர்மசங்கடமான நிலையில் அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.

***

          வீட்டிற்கு வந்தவன் மது வீட்டில் இல்லையென்றதும், மீண்டும் மீண்டும் அலைபேசியில் மதுவைத் தொடர்பு கொள்ள முயன்றான்.  வேலைக்குச் செல்லும் எண்ணமே இல்லாமல், பிரேமாவிற்கு அழைத்து, பேருந்து விபரம் கேட்டறிந்து கொண்டான்.

          விஜய் விசயத்தைக் கூறியதும் பதறிப்போன பிரேமா, “என்ன தம்பி.  இன்னும் அவ வீட்டுக்கு வரலையா?  பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, ஆட்டோ புடிச்சிப் போயிக்குவேன்னு சொன்னாளே!”

          “இதோ என்னானு பாக்கறேன்.  வர வழியில எந்த பஸ்ஸும் பிரேக் டவுன் இல்லை.  காரைக்குடியில இறங்காம, தூங்கிட்டாளோ என்னவோ” என பிரேமாவிடம் பேசினாலும், மனம் முழுக்க வாதனை விஜய்யிக்கு.

பாரிக்கும் விசயம் தெரிய வர, “நேத்து எங்கிட்ட பேசும்போது இன்னைக்கு வரேன்னு சொன்னா.  ஆனா இவ்ளோ சீக்கிரமா கிளம்பி வந்தவ, இன்னும் வீட்டுக்கு வராம எங்க போயிருப்பா?” என தம்பியிடமே கேட்டார்.

“இங்க அவளுக்கு யாரையும் தெரியாது.  அதனால எங்கயும் போயிருக்க வாய்ப்பில்லை” தடுமாற்றமின்றி, துணிவோடு பதிலுரைத்தான் விஜய்.

தமக்கையிடம் பேசினாலும், விஜய்யுக்கு அஞ்சனா மீது முழுமையாக சந்தேகம் வந்திருந்தது.  தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அலுவலக பணியாளர் மூலமாகப் பார்த்துத் தந்திருந்த வீட்டில்தான் தற்போது வசிக்கிறாள் அஞ்சனா. 

அதனால், அஞ்சனா வசிக்குமிடம் தெரிந்தாலும், தனியாக அவளைக் காணச் செல்வது அத்தனை உசிதமல்ல எனத் தோன்ற, உடன் யாரை அழைத்துச் செல்லலாம் என யோசித்தான்.

தான் தனியாகச் சென்றால், எதையேனும் பழி  சொல்லி, அவளின் ஆதாயத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிவாள் என்பதால் தனியாகச் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தான் விஜய்.  

உடன் வேறு யாரையும் அழைத்துச் செல்லலாம் என நினைத்தவனுக்கு, யோசித்த நபர்களனைவரும் ஆண்களாகவே இருந்ததால், அதற்கும் எதாவது குதர்க்கமாக யோசித்து அஞ்சனா செய்யக்கூடும் என நினைத்து, அதையும் தவிர்த்தான்.

பெண்களுக்கு சட்டமும், காவலும் மிகத் துணையாக இருப்பதால், ஆண்கள் நான்கையும் யோசித்துச் செயல்படுதல் நலம் என்பதை, அஞ்சனாவின் பிரிதலின்போது, அவள் தனக்கு உண்டாக்கிய தர்மசங்கடாமான பிரச்சனைகளின் வழியே உணர்ந்து கொண்டிருந்தான் விஜய்.  அதனால்தான் அதிகம் யோசித்தான்.

முந்தைய நாள் அவளிடம் பேசியபிறகு, இன்னும் அதிக விழிப்போடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டிருந்தான்.

இறுதியாக அவளின் அண்ணனுக்கு அழைத்துப் பேசும் முடிவுக்கு வந்தவன், முதலில் அஞ்சனாவிற்கு அழைத்தான்.

“ஹலோ, என்னங்க.  அதுக்குள்ள நீங்க எனக்கு கூப்பிடுவீங்கனு நினைக்கலைங்க” எனச் சந்தோசத்தில் மிளிற்றினாள் அஞ்சனா.

“மதுவை எங்க ஒளிச்சி வச்சிருக்க?” விஜய்.

“எ..ன்ன சொல்றீங்க,  அவளை நான் எங்க பாத்தேன் ஒளிச்சி வைக்க?” அஞ்சனா.

“ஏய்.  ஒழுங்கா உண்மையச் சொல்லீரு.  இல்லைனா என்ன நடக்கும்னே தெரியாது” விஜய்

“ஒருவேளை இப்டி இருக்குமோ?” நக்கலாக வினவினாள் அஞ்சனா.

“என்ன சொல்ல வர்ற? எதுனாலும் தெளிவாச் சொல்லு” விஜய்

“நீங்க அதுக்குச் சரி வரமாட்டீங்கனு யாருகூடயும் போயிட்டாளோ?” அஞ்சனா கூற, விஜய்யிக்கு கண்மண் தெரியாத கோபம் வந்திருந்தது.

வாக்குவாதங்கள் தொடர்ந்ததே அன்றி, அஞ்சனா தான் காணாதவளைப் பற்றிய எந்தச் செய்தியையும் விஜய்யிடம் கூற முடியாமல் மறுக்க, அஞ்சனாவின் பேச்சை நம்பாதவன், அழைப்பைத் துண்டித்ததோடு, அவளின் அண்ணனுக்கு அழைத்து, அஞ்சனா காரைக்குடியில் தங்கியிருக்கும் விசயத்தை முகவரியுடன் கூறியிருந்தான்.

ஆத்திரக்காரன் புத்திமட்டாகச் செயல்பட்டிருந்தான்.   மதுவைக் கண்டிருந்தால் கண்டிப்பாக, அஞ்சனா எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருந்தாலும் அவளைக் காட்டிக் கொடுத்திருக்க மாட்டான் விஜய்.

ஆனால் மது எங்கு சென்றாள், என்ன ஆனாள் என்பது தெரியாததால், அஞ்சனா மீது எழுந்த சந்தேகம் காரணமாக, முந்திய நாள் அவளின் பேச்சின் வழியே உண்டான சில மனக் குழப்பத்தால், அஞ்சனா பற்றிய துப்பு  விஜய் மூலமாக அவளின் குடும்பத்தார்க்கு தெரிய வந்திருந்தது.

பாரி மூலம், மதுவைக் காணவில்லை என்பது தெரியவந்ததும், அவளின் கணவர், சிலரை அழைத்துக் கொண்டு மாலையில் காரைக்குடிக்கு வந்திருந்தார்.

விஜய்யிடம் தீர விசாரித்தபின், அடுத்து என்ன செய்யலாம் என்கிற யோசனைக்கு வந்தவர்கள், விஜய்யிடம், “பேசாம கம்ப்ளைண்ட் குடுத்து வச்சிட்டு, நாமளும் தேடிப் பாக்கலாம்” எனும் முடிவுக்கு வந்திருந்தனர்.

விஜய், பிரேமாவின் ஒத்துழைப்போடு, மது வந்த பேருந்தின் நடத்துனரை, அன்று மாலையில் திருச்சியில் இருந்து திரும்பியபோது சந்தித்துப் பேசினான்.

மதுவின் புகைப்படத்தைக் காட்டிக் கேட்க, “ஆமா, காளையார்கோவில்ல அவங்க மட்டுந்தான் ஏறுனாங்க.  அவங்க ஏறி கொஞ்ச நேரத்தில, ஏற்கனவே பஸ்ல வந்த ஒருத்தவங்க அவங்கூடப் பேசினாங்க. 

ரெண்டு பேரும் பேசிட்டே வந்து காரைக்குடியில இறங்கி ஒன்னாத்தான் போனாங்க. ஏன் சார்?  எதாவது பிரச்சனையா?” நடத்துனர் வினவ, சமாளித்தவனுக்கு, அது யார் என்பது தெரியாமல் திண்டாடினான்.

பிரேமாவும் காரைக்குடிக்கு கிளம்பி வந்திருந்தார். விஜய் கூறிய விசயத்தை கேட்டறிந்து கொண்டார்.  பொறுமையோடு கேட்டறிந்து கொண்டவர், “வேற யாரும் சொந்தக்காரங்க மதுவைப் பாக்கனு இங்க வீட்டுக்கு வந்திருக்காங்களா?” என்றார்.

“இல்லை” என விஜய் பதிலளிக்க, அதற்குமேல் திக்கு தெரியாமல், காவல்துறையின் உதவியை நாடினர்.

***