மது பிரியன் 20(ஈற்றியல் பதிவு)

மது பிரியன் 20(ஈற்றியல் பதிவு)

           காவல்துறையிடம் சென்று விசயத்தைக் கூறி, புகார் செய்ய முனைய, புகாரை எடுக்குமுன், முன் விசாரணை நடந்தது. விஜய்யின் நியாயமான கவலையை கேட்டறிந்து கொண்டவர்கள், புகாரை எடுத்துக் கொண்டது.

காவல்துறை, மதுவின் கையில் இருந்த அலைபேசி எண்ணையும் எழுதி வாங்கிக் கொண்டு, அப்போதே தொடர்பு கொள்ள, அழைப்பு சென்றது.

          மதுவின் ஹேண்ட் பேகினுள் அலைபேசி இருக்க, அந்நேரத்தில் மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வந்திருந்தனர். சௌந்திரத்திற்கு உதவிக்கு மது நின்றமையால், அழைப்பின் சத்தம் கேட்டும், அதனை ஏற்க முடியவில்லை அவளால்.

          “ரிங்க் போகுது.  ஆனா எடுக்க மாட்டுறாங்க” காவல்

          “என்ன சார் சொல்றீங்க. காலையில இருந்தே சுவிட்ச் ஆஃப்னு வந்துது” விஜய் தன்மையோடு கேட்டான்.

“இன்னும் பத்து நிமிசம் கழிச்சி ட்ரை பண்ணுவோம்.  அப்பவும் எடுக்கலைனா, சிக்னல் ட்ரேக் பண்ணச் சொல்லலாம்” காவல்

மதுவின் புகைப்படம், காவல்துறை கேட்ட இதர விசயங்களை எழுதித் தந்துவிட்டு, அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினான் விஜய். அனைத்தும் முடித்துக்கொண்டு, மதுவின் எண்ணுக்கு மீண்டும் அழைக்க, இம்முறை எதிரில் எடுக்கப்பட்டது.

மதுவிற்கு முதல் முறை அழைப்பு வந்ததுமே, உடலெங்கும் பயம் தொற்றிக் கொண்டது.  பிரேமா அத்தையோ, இல்லை கணவனோ யார் என்று தெரியவில்லையே என்பதாக இருந்தது மதுவின் எண்ணம். தான் சௌந்திரத்தின் உதவிக்கு நின்றமையால், அவளின் மாமாவை அழைத்து விசயத்தைக் கூறினாள்.

மது, “மாமா, என்னோட ஹேண்ட் பேக்கை எடுத்து கால் அட்டெண்ட் பண்ணுங்களேன்” என்றிட

அவர் மெதுவாகச் சென்று, அலைபேசியினை தேடி எடுத்து, அழைப்பை ஏற்குமுன் அது கட்டாகியிருந்தது.  “யாரு மாமா?” என அவரிடம் மது கேட்க,

“ஏதோ புது நம்பரா இருக்குமா? என்றார்.

அத்தோடு மதுவிற்கும் சற்று ஆசுவாசமான உணர்வு.  ஆனாலும், அது யார் புதிய எண்ணிலிருந்து தனக்கு அழைப்பது என்றும் மதுவிற்கு தோன்றியது. 

இனியும் தாமதிக்காமல், மருத்துவர்கள் வெளியில் சென்றதும், பிரேமா அத்தைக்கும், கணவனுக்கும் அழைத்து, தான் சௌந்திரத்தின் உதவிக்கு மருத்துவமனையில் இருக்கும் விசயத்தைக் கூறிவிட நினைத்தாள் மது.

மருத்துவர்கள் செல்லவும், அடுத்து அழைப்பு வரவும், சௌந்திரத்தின் கணவரே அழைப்பை ஏற்றுப் பேசத் துவங்கினார்.

“யாரு?” சௌந்திரத்தின் கணவர்.

“மதுராகிணிங்கறது!”

“அது சரி.  நீங்க யாரு பேசுறது?” என மீண்டும் சௌந்திரத்தின் கணவர், எதிர் கேள்வி கேட்க

“மதுராகிணி இருந்தா, அவங்கட்ட போனைக் குடுங்க” காவல்துறை அதிகாரத் தொனியில் பேச

எதிர்முனையில் இருப்பது காவல்துறை என்பதை அறியாதவரோ, “யாருங்க நீங்க.  இவ்ளோ அதிகாரமா எங்கிட்டயே பேசுறீங்க.  வீட்டுப் புள்ளைகிட்ட குடுக்கணும்னா, நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க” என கட்டளையான குரலில் பேசினார்.

“நாங்க போலீஸ்.  அவங்கட்ட ஒரு விசாரணை.  அதுக்குத்தான்!” காவல்துறை

கேட்டதும் தேகம் சில்லிட, பதறிப்போனவர், “இந்தாம்மா உனக்குத்தான்” என மதுவிடம் நீட்டியதோடு, என்பதைவிட, அலைபேசியை மதுவின் கையில் திணித்திருந்தார்.

எதிர்முனையில் யார் என்பதைக் கூறாமலேயே, வாங்கிப் பேசத் துவங்கிய மதுவிடம் ஆராய்ச்சிப் பார்வையை செலுத்தத் துவங்கியிருந்தார் சௌந்திரத்தின் கணவர்.

“ம்.  நான் மதுராகிணிதான். ஆமா.  ம்.. இல்லை.  காலையில. இல்லையில்லை.” என மது மெல்லிய குரலில் பதில் பேச

“எங்கம்மா இருக்க இப்ப நீ” காவல்

மதுராகிணி, தான் மருத்துவனையில் இருப்பதைக் கூற, உண்மையில் விஜய் கூறிய புகார், மதுவின் பேச்சால் ஊர்ஜிதம் செய்யப்பட்டது காவல்துறையால்.

அதன்பின், அவள் இருக்கும் மருத்துவமனை மற்றும், அறை எண் போன்ற விசயங்களை, அவளிடம் முழுமையாகக் கேட்டு வாங்கியவர், “போறதை வீட்டுல சொல்லிட்டுப் போகணும்னே தெரியாத சின்னப் புள்ளையாம்மா நீ. 

ஏதோ அவசரத்துலனாலும், நிதானமா யோசிச்சு நடக்கணும்மா. இனிமேலாவது இந்த மாதிரி பொறுப்பில்லாம பண்ணாதம்மா” என மதுவிடம் பேசிவிட்டு வைத்திருந்தார்.

மதுவிடம், தான் காவல்துறை அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியவர், மதுவின் செயலைக் கண்டித்ததோடு, அவளுக்கு தக்க அறிவுரையும் கூறிவிட்டு, விசயத்தை மதுவின் வீட்டாரிடமும் பகிர்ந்து கொண்டார்.

பிறகு எதிரில் இருந்தவர்களிடம், மருத்துவமனையில் மது இருப்பதையும், அறை எண் பற்றிய விவரங்களையும் கூறிவிட்டு, “ஹாஸ்பிடல்ல இருக்கறதால, அங்கேயே போயிப் பாத்துக்கங்க” என அனுப்பி வைத்திருந்தார்.

அனைத்தையும் முடித்துக்கொண்டு, பாரியின் கணவர் மற்றும் பிரேமாவின் கணவரோடு விஜய் மருத்துவமனைக்கு விரைந்தான்.

மூவருக்கும், மதுவிற்குதான் உடல்நலனில் ஏதோ பிரச்சனை என எண்ணிக்கொண்டு மன உளைச்சலோடு வர, அங்கு வந்தபிறகுதான் உண்மை விசயம்  பிடிபட்டது.

மதுவிற்கு கணவனைக் கண்டதும், அவளை அறியாமலேயே ஏதோ நிம்மதி. மதுவிற்கு ஒன்றுமில்லை, அவளின் அத்தைக்குத்தான் பிரச்சனை என அறிந்த விஜய்யிக்கு அப்போதுதான் இயல்பாக மூச்சு வந்தது.

“காலையில இருந்து போன் சுவிட்ச் ஆஃனு வந்தது.  என்னவோ ஏதோனு பதறி ஊரு முழுக்கத் தேடினோம்.” என விசயத்தை சௌந்திரத்திடமும், அவரின் கணவரிடமும் கூற, எந்த ரியாக்சனும் இன்றி, தேமே என கேட்டுக்கொண்டு இருந்தவர்கள்,

மதுவை நோக்கி, “ஏம்மா, என்னைப் பாக்க வரேன்னு சொல்லாம வந்திட்டியாக்கும்.  சரி.  சரி” என்றுவிட்டு,

விஜய்யைப் பார்த்து, “எனக்கு உடம்புக்கு முடியலை.  அதனால நான் வீட்டுக்குப் போறவரை ஒத்தாசைக்கு மது இங்கேயே இருக்கட்டும்” என சௌந்திரம் அதிகாரமாகப் பேச, அப்படியே மதுவை அங்கு விட்டுச்செல்லும் எண்ணமில்லை விஜய்யிக்கு.

மது திருமணம் முடிந்து வந்தது முதலே நடந்த விசயங்களைக் கொண்டு சௌந்திரம் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஓரளவு எடை போட்டிருந்தவன், சட்டென ஒரு முடிவுக்கு வந்திருந்தான் விஜய்.

மூன்று ஆண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதோடு, சௌந்திரத்தைப் பார்க்க, மதுவோ யாருக்கும் பேச முடியாமல் மௌனியாக நின்றிருந்தாள்.

விஜய், பெரியவர்கள் ஏதும் பேசக்கூடும் என இருவரையும் பார்த்தவன், அவர்கள் அமைதியாக இருப்பதைக் கண்டு, தானே பேசும் முடிவுக்கு வந்திருந்தான்.

விஜய், “அவளுக்கு இப்போ ஒடம்புக்கு முடியலை.  அதனாலதான், பஸ்ல வரும்போது மயக்கம் ஏதும் வந்து விழுந்திட்டாளோன்னு பயந்துபோயி இன்னைக்கு முழுசும் வலைவீசித் தேடினோம். 

எங்க தேடியும் அவ இருக்கற இடம் தெரியாததால, போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி, அவ இருக்கற இடத்தை இப்பத்தான் போலீஸ் சொன்னாங்க.

எங்களை முன்னாடிப் போகச் சொல்லிட்டு, போலீஸ் இங்க வர்றதாச் சொன்னாங்க.”

இறுதியாக விஜய் போலீஸ் வருவதாகக் கூறியது எல்லாம் தாமாகவேதான்.

அதுவர வாயைத் திறவாமல் இருந்த சௌந்திரத்தின் கணவர், விஜய்யின் பேச்சைக் கேட்டு, “ஆமா, எங்கிட்ட போலீஸ்தான் பேசினாங்க” என்றிட

“இதுக்குப் போயி எதுக்கு போலீஸ் அது இதுன்னு.  அவ எங்க போகப் போறா.  இங்க என்னைப் பாத்துக்கிறணும்னுதான உரிமையா வந்திருக்கா” என விஜய்யிடம் கூறிவிட்டு,

அதற்குமேல் மதுவை நிறுத்தி வைக்கும் முயற்சியில் எதுவும் கூறாமல், “மது உனக்கு இங்க வரணும்னா, வீட்டுல சொல்லிட்டு நாளைக்கு வந்திரு” என மறைமுகமாக, இனி வருவதற்கான வழிமுறையை மதுவிடம் கூறினார் சௌந்திரம்.

“சரி அத்தை.  இப்ப நான் இவங்ககூட கிளம்பறேன்” என தன்னுடைய பொருள்களை சட்டென எடுத்துக் கொண்டு, புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் மாணாக்கர்கள் பெற்றோரைக் கண்டதும், ஆசிரியரைப் புறந்தள்ளி வேகநடையிட்டு, பெற்றோரின் பின்னே செல்வதுபோல, கணவனின் பின்னே சென்று நின்றிருந்தாள் மது.

மதுவின் செயலைக் கவனித்த விஜய்யிக்கு, மது அவளாகவே விருப்பப்பட்டு இங்கு வந்ததுபோலில்லை.  யாரோ அவளை இங்கு வற்புறுத்தி அழைத்து வந்ததுபோல இருந்ததும், புரிந்தது.

சௌந்திரம் மற்றும் அவளின் கணவரிடமும் விடைபெற்று, மதுவை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தனர்.

மதுவிடம் ஒரு வார்த்தைகூட விஜய் பேசவில்லை.  மற்றவர்கள் இருவரும் மாறி மாறி மதுவிற்கு, அறிவுரை கூறியபடி வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்கு சென்றதும், பிரேமா மதுவை பிடிபிடியென கத்தித் தீர்த்திருந்தார்.

“உனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சு.  இன்னும் அவளுக்கு எதுக்குப் பயந்துபோயி இப்டி இருந்திருக்க.  ஏன் அவளுக்கு புள்ளை, குட்டி எதுவும் இல்லைனு, உன்னை வந்து பாக்கச் சொன்னாளா?” உச்ச தொனியில் பிரேமா பேச

“இல்லை அத்தை நானாத்தான் பாத்திட்டு, வீட்டுக்கு வந்திரலாம்னு போனேன்” மது கண்ணில் நீரோடு பகிர 

“அவளுகளுக்குத்தான நகையும், சீரும் குடுத்தா.  உனக்கு சோறு போட்டதுக்கு, நீ மாடா அவளுக்கு உழைச்சிருக்க.  நீ அவளுக்கு கடனாளின்னு இன்னும் நினைக்காதன்னு உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது.

உங்க அப்பா, அம்மாவோட சம்பாத்தியம், நகை, இடம், பொருள் எல்லாத்தையும் அவதான் இன்னமும் அனுபவிக்கிறா.  உனக்குன்னு ஒன்னும் தர அவளுக்கு மனசில்ல.  அதனால, அவதான் உங்கிட்ட கடனா இருக்கா.

போனமா, என்னத்தை நல்லாயிருக்கீங்களானு ஒரு வார்த்தை கேட்டதோட, கிளம்பி வந்தமான்னு இல்லாம, காலையில எட்டரை ஒன்பது மணிக்கு அங்க போனவ, நைட் எட்டரை வரை, எந்தத் தகவலும் சொல்லாம இருந்திருக்க.

இது உனக்கே சரின்னு தோணியிருக்கு.  அப்படித்தான?  எங்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேங்கறது உனக்கு நினைப்பில்லை.  உம் மாப்பிள்ளை வந்து என் வீட்டு வாசல்ல நிக்கும்போது,  நான் உன்னை ஏத்திவிட்டுட்டோமேன்னு வருத்தத்துல, அவரை ஃபேஸ் பண்ண முடியாம நின்னேன்.

போனுல சார்ஜ் இல்லை சரி.  சார்ஜ் போட்டதும் பேசியிருக்கலாம்ல.  எங்களைக் காட்டிலும், அவளுக்கு பணிவிடை செய்யறதுதான் உன்னோட ஜென்ம சாபல்யம்னு, அதுல மட்டுமே குறியா இருந்தா, எப்டிச் சொல்லத் தோணும்.” என மதுவிடம் கேட்டவர், விடாமல் தொடர்ந்தார் பிரேமா.

“இங்க நாங்க எல்லாம் பதறி, ஊரு முழுக்கத் தேடி, எங்கையும் புள்ளையக் காணோமேன்னு கடைசியில போலீஸ்கு போயி… இதெல்லாம் தேவைதானா… சொல்லு.

எல்லாத்தையும் ஒரு வழியாக்கிட்ட. போன உசிரு இப்பத்தான் திரும்பி வந்தாப்புல இருக்கு.” தன் நெஞ்சைத் தடவிக் கொடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியபடியே பேசினார் பிரேமா.

மற்றவர்கள் இடையுறாமல் அமைதியாக மதுவையே பார்த்திருந்தனர்.  மது தனது செயலை எண்ணி வருத்தத்தோடு, தலை குனிந்தபடியே மௌனமாக இருந்தாள்.

“இனிமேலும் இப்டியெல்லாம் இருக்காத.  ஒரு இடத்தில கட்டிக் குடுத்தாச்சு.  அன்னைக்கு கல்யாணம் முடிஞ்சதும், உன் அத்தைக்காரி என்னத்தைப் பொறுப்பா பண்ணிட்டுப்போனானு மறந்துட்டபோல.  நான் மறக்கலை எதையும்.

உன் மாப்பிள்ளை வீட்டுல சரினு சொன்னா, இனி போயி அவளைப் பாரு.  இல்லையா, வீட்டுல பேசாம இரு. அதவிட்டுட்டு, வளத்த பாசம்னு, அங்க போயி சேவகம் பண்ணேன்னு தெரிஞ்சது, இனி உம்முகத்துலயே முழிக்க மாட்டேன்.

உனக்கு நாளைக்கே எதாவது விசேசம்னா, அந்த சௌந்திரம்தான் வந்து முன்ன நின்னு எல்லாம் செய்யப் போறாளா?  இல்லை தெரியாமதான் கேக்கறேன்.

கை நிறைய காசு பணம்னு இருக்கறவதானே உங்கத்தை.  வேணுனா, காசுக்கு ஆள் வச்சிப் பாத்துக்கட்டும்.  இன்னும் போயி அவளுக்கு சேவகம் பண்ண நினைச்ச, நானே உன்னைத் தொலைச்சிருவேன், பாத்துக்கோ.

ஆளு ஓன்னு இருக்கியேன்னு அத்தனை கேள்வி கேட்டேன்.  வாயத் திறக்கவே இல்லை.  முதல்ல உன் உடம்பைத் தேத்தற வேலையப் பாரு.  அத்தைக்காரிக்கு நீ போயி ஒன்னும் பண்ண வேணாம்.

அவளுக்கு அவங்க மாப்பிள்ளையும், பெத்த மக்க ரெண்டு பேரு இருக்காளுகள்ல.  அவளுக பாத்துக்குவாளுங்க.  இல்லை பாக்கலைன்னா, அவ விதிப்படி என்ன நடக்குதோ, நடந்திட்டுப் போகட்டும்.

கல்யாணம் பண்ணி, யாரோ மூனாவது மனுச கணக்கா அம்போனு விட்டுட்டுப் போனவளை, இப்டிப் போயி நீ பாக்கலைன்னா ஒன்னும் தப்பில்லை.” என மனதில் தோன்றிய அனைத்தையும் கொட்டிவிட்டு,

விஜய்யிடம், “தம்பி, அவளுக்கு வெளிப் பழக்கம் எதுவும் தெரியாது.  வீட்டுக்குள்ளயே பன்னெண்டு வருசம் இருந்துட்டா.  சொல்லிக் குடுத்து வளக்கவும், பழக்க வழக்கம் என்னாங்கறதை தெரிஞ்சிக்கவும் அவளுக்கு எந்த வாய்ப்புமில்லை.

பெத்தவ இருந்திருந்தா, இதையெல்லாம் சொல்லிக் குடுத்திருந்திருப்பா.  அதனால இன்னும் பொறுப்பா நடந்திட்டு இருந்திருப்பாளா இருக்கும்.  சில நடைமுறைச் சிரமங்களை அவளுக்கு எடுத்துச் சொல்லுங்க.  புரிஞ்சிப்பா.

இனிமே இப்டி நடக்காம பாத்துப்பா.  நடந்த பிரச்சனைக்கு நானும் ஒருவிதத்துல காரணமாயிட்டேன்.  என்னை நம்பி கொண்டு வந்து விட்டீங்க.  அவ கிளம்பிறேன்னு சொன்னாலும், நான் அவளை நீங்க வரும்வரை விட்ருக்கக்கூடாது.  சாரி தம்பி” என்றவர்,

விஜய் பிரேமாவின் வருத்தத்தைப் போக்கும் விதமாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு, பாரியிடமும், அவரின் கணவரிடமும், நடந்த சிரமங்களுக்கு மன்னிப்புக் கோரியதோடு, விடைபெற்றுக் கொண்டார்.

அனைவரும் தங்கியிருந்துவிட்டு, மறுநாள் கிளம்புமாறு கூறியும், அந்நேரத்தில் பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என காரணம் கூறியதோடு, கணவரோடு காளையார்கோவிலுக்கு கிளம்பிவிட்டார் பிரேமா.

***

ஆளாளுக்கு அறிவுரைகள் கூற, அனைத்தையும் வாயைத் திறவாமல், மறுப்புக் கூறாமல் கேட்டுக் கொண்டவளுக்கு, கணவன் என்ன செய்யப் போகிறானோ என்கிற பயம் உள்ளுக்குள் உறைந்திருந்தது.

அதனை எண்ணியவளுக்கு பசியிருந்தும் உணவு இறங்கவில்லை.  ஆனாலும் உண்டதாக பெயர் செய்துவிட்டு, அடுக்களையில் கிடந்தவற்றை ஒழுங்கபடுத்த பஞ்சவர்ணத்திற்கு உதவச் செல்ல,

பாரி, “நீ ரொம்ப டயர்டா தெரியற.  போ.  போயிப் படு” என மதுவை அங்கிருந்து அனுப்பியிருந்தார்.

கணவன் உறங்கியபின் அறைக்குள் சென்று உறங்கலாம் என எண்ணி, தாமதித்தவளை பாரியும் விரட்ட, வேறு வழியின்றி அறைக்குள் நுழைந்தாள்.

***

பாரியின் கணவரோடு பேசிக் கொண்டிருந்தவன், மனைவி அறைக்குள் செல்வதைக் கண்காணித்தபடியே ஹாலில் அமர்ந்திருந்தான் விஜய்.

பொதுவான விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தவர்களை, பாரி வந்து விரட்ட, “ரொம்ப நாளாச்சு. மாப்பிள்ளைகூட பேசி.  செத்த நேரம் பேசிட்டு இருப்போம்னு உக்காந்தா, ஏண்டி விரட்டுற” புரியாமல் புழுங்கினார் பாரியின் கணவர்.

“நாளைக்கு ரெண்டு பேரும் பகல்ல உக்காந்து பேசுங்க. இன்னைக்கு ரெண்டு பேருக்குமே நல்ல அலைச்சல்.  போங்க.  போயிப் படுங்க” என விரட்டிவிட்டு, அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு பாரி படுக்கைக்குப் போனார்.

***