மது பிரியன் 9ஆ

மது பிரியன் 9B

மனைவி மதுவின் பிரியனாக இருந்தவன், மதுராகிணியின் மீது பித்தாக மாறத் துவங்கியிருந்தான்.  எதற்கெடுத்தாலும், “மது. மது. மது”

மது எனும் நாமம் உச்சரித்தே, தனது மகிழ்ச்சியை மனதோடு கொண்டாடித் தீர்த்தான். எந்த மனைவிக்குமே, கணவனது அன்பு புத்துணர்வையும், புதுப்பொலிவையும் தரக்கூடியதே.

மதுராகிணிக்குமே மிகவும் சந்தோசமாக நாள்கள் சென்றது.  வீட்டிலிருக்கும் நேரம் முழுவதும், கணவன் தன்னைச் சுற்றிச் சுற்றி வருவதையெண்ணி அகமகிழ்ந்து போயிருந்தாள்.

பிரேமா அத்தையின் வீட்டிலிருந்து கிளம்பும்போது துவங்கிய சந்தோசம், இன்றுவரை நீடித்து நிலைபெற்றிருந்தது.  பிரேமாவின் வீட்டிற்கு சென்று வந்தபின், தங்களின் ஊருக்கு மனைவியை அழைத்துச் சென்று வந்தான்.

மாமியாரிடம் மது நடந்துகொண்டதைக் கண்டு, விஜய் மட்டுமல்ல, அவனது தாயாரும் சிலாகித்தார்.  அதனை மகளிடமும் கூறத் தவறவில்லை.

“பாரி.  இப்பத்தான் எம்மனசுக்குள்ள சந்தோசம் நிரம்பிக்கிடக்கு புள்ள.  எல்லாம் உந்தம்பி பொண்டாட்டியோட அனுசரிப்பு, சிட்டாப் பறந்து வேலை செய்யிறதுன்னு.  அதப் பாத்ததுல இருந்து நெஞ்சு முழுக்க அத்தனை நிம்மதி.  நல்ல புள்ளைடீ” எனத் தாயார் கூறியதைக் கேட்ட பாரி, “அவனைப் பாத்துக்க இப்படி ஒரு குணவதி இருந்தது தெரியாம, இத்தனை வருசத்தை வீணடிச்சிட்டோமே ஆத்தா” பாரி சென்ற நாள்களைப் பற்றி வருத்தத்தோடு கூறினார்.

“அந்த ஆண்டவன் நம்ம வேண்டுதலைக் கேட்டு கண்ணைத் திறந்துட்டாரு பாரி.  இனி போனதைப்பத்தி நினைச்சு வருத்தப்படாம, கிடைச்சதை வச்சி, சந்தோசமா இருந்துக்கத்தான் பாக்கணும்” விஜய்யின் தாய்.

மருமகளிடம், “சீக்கிரமே ஒரு பேரனையோ, பேத்தியையோ கண்ணுல காட்டுத்தா.  அவனையும் நல்லா பாத்துக்கோ.  நீயும் நல்லா சாப்பிடு.  கல்யாணத்தப்ப இருந்ததைவிட மெலிஞ்சு திரியற” என மாமியார் கூறக் கேட்டவள்,

“சரித்தை” எனும் ஒற்றை ஆமோதிப்பான வார்த்தையில், இசக்கிக்கு பிடித்த மருமகளாகியிருந்தாள்.

விஜய்யிக்குமே, மதுராவின் அமைதியான நடவடிக்கைகளில், அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பாங்கில், அவ்வப்போது தன்னை செவ்வதனத்தோடு, நாணமாகப் பார்க்கும் பார்வையில், உணர்வோடு ஊடுவிப் போயிருந்தாள்.

கிராமத்தில், விஜய் மனைவியோடு வந்த செய்தி அறிந்தது முதலே, சுற்றியிருந்த அனைத்து உறவினர்களும் மதுராவைப் பார்க்க வந்து சென்றனர்.

வந்தவர்கள் அனைவரையும், நகைமுகையோடு வரவேற்றவளை அனைவருக்குமே பிடித்திருந்தது.  “கல்யாணம் முடிச்சுப் போயி மாசங்கடந்த பின்னதான் ஊருக்கு வரணும்னு தோணுச்சாக்கும்” வந்தவர்களில் பெரும்பாலோனோர் கேட்ட கேள்வி இதுதான்.

மதுவும் சளைக்காது, “அவங்களுக்கு லீவு கிடைச்சாத்தான் இங்க கூட்டிட்டு வரமுடியும்னு சொல்லிட்டாங்க” பதவிசாய் மொழிந்தவளை, “நல்ல சாடிக்கு ஏத்த மூடியாத்தான் அமஞ்சிருக்க தாயி” என நெட்டிமுறித்து, கண்ணுறு கழித்தனர் வயதானவர்கள்.

“விசேசம் எதுவுமா?” எனக்கேட்டு மதுவை தர்மசங்கடத்திற்குள்ளாக்கினர்.

வந்தவர்கள் சென்றபின், வாடிய வதனத்தோடு ஏதோ யோசனையாக இருந்தவளை, அறைக்குள் இருந்தவன், சட்டென தனது கரங்களுக்குள் கைதாக்கிக் கொண்டு, தங்களின் அறைக்குள் செல்ல, “என்னங்க. இந்த நேரத்தில, இப்டித் தூக்கிட்டு” செல்லமாகக் கோபித்துக் கொண்டவளின், இதழில் இதமாய் தனது முரட்டு இதழை ஒற்றி ஒப்பனை செய்தான்.

கணவனது ஒப்பனையில், வதனமெங்கும் பளிச்சென மிளிர்ந்தது. “என்னடீ யோசனை” மூக்கோடு, மூக்கை உரசியவாறு கேட்டான் விஜய்.

“இல்ல.  நான்தான உங்களோட கோவாப்ரேட் பண்ணாம டிலே பண்ணிட்டேன்.  கல்யாணம் பண்ணதோட எல்லாம் நமக்குள்ள சரியா வந்திருந்தா, இன்னேரம் எதாவது நல்லது நடந்திருக்கும்ல.  அதை நினைச்சதும் என்னாலதான இப்டியாயிருச்சுன்னு கஷ்டமாப் போச்சு” மதுரா மெதுவாக கணவனிடம் தனது வாடிய வதனத்திற்காக காரணத்தைக் கூறினாள்.

“போனதைப் பத்தி யோசிக்காத மது.  இன்னும் நமக்கு வயசாகல.  இப்பத்தான லைஃப் ட்ராவல் ஆரம்பிச்சோம்.  போகப்போக எல்லாம் சரியாகிட்டே வரும்.  அதுக்குலாம் வொரி பண்ணக்கூடாது” தனது தலையால் மதுவின் தலையில் செல்லமாக இடித்தபடியே கூறினான் விஜய்.

தலையை ஆட்டி ஆமோதித்தவளை, மார்போடு மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தவன், மனைவியோடு படுக்கையில் சாய, “ஏங்க.  இது காரைக்குடி இல்ல.  அத்தை, இல்லைனா இன்னும் வீட்டுக்கு திடீர்னு ஆளுங்க வந்துட்டே இருக்காங்க.  இந்த நேரத்தில இப்டி பண்ணா எப்டி” கொஞ்சலான குரலில் கணவனிடம் கூறியபடி, திமிறிக்கொண்டு வெளிவர முயன்றாள்.

மனைவியை தனது அணைப்பிலிருந்து வெளிவர முடியாதபடி தனக்குள் அடைகாத்திருந்தவன், “யாரும் இங்கிதமில்லாம ரூமுக்குள்ள வந்து நம்மைத் தேட மாட்டாங்க மது.  கொஞ்ச நேரத்தில உன்னை விட்ருவேன்.  அதுவரை மச்சான் சொல்றதைக் கேப்பீயாம்” என இதழ் கொண்டு, அவளை பூசை செய்யத் துவங்கினான்.

அவனது தேடல், அவளுக்குள் பல சந்தோசங்களை வாரியிறைத்தாலும், நேரம் கருதியும், பெரியவர்களைப் பற்றி யோசித்தபடி இருந்தவள், அவனது உணர்வோடு ஒத்துழையாமல் ஒதுங்கித் தனித்திருந்தாள்,

மனைவி இன்னும் தன்னோடு இழையாமல் ஏதோ நினைவில் இருக்கக் கண்டவன், “எல்லாரும் விசேசம்னு கேக்கறாங்கன்னு வருத்தப்பட்டா ஆச்சா.  அதுக்கு நாமலும் டெடிகேட்டடா வேலை பாக்க வேணாமா மது.  அதான் இப்பவே வேலைய ஆரம்பிச்சேன்” எனக் கூறியவனின், இதழ்களை. வெட்கத்தோடு தன் இதழ்கொண்டு மூடினாள் மது.

மதுவின் துவக்கத்தை, தனதாக்கிக் கொண்டவனின் இதழ் பூசையை, ஏற்றுக்கொண்டு, அமைதியாக அவனுக்கு இசைந்தாள் மது.

தடையாய் இருந்த ஆடையை அகற்றிட எண்ணித் தொட்டவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டவள், தலையை மறுத்தசைத்து, “அதெல்லாம் இப்ப வேணாம்” காதில் கிசுகிசுக்க, “ப்போ, நீ என்னை ஏமாத்துற” என மதுவிடமிருந்து சட்டென்று விலகியவனை, மீண்டும் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டவள்,

“கொன்னுறுவேன்.  பாதியில இப்டி டெம்ப்ட் பண்ணி விட்டுட்டுப் போனா, நான் கிறுக்காகிச் சுத்தவா.  ஒழுங்கா அடுத்த வேலைய சத்தமில்லாமப் பாக்கணும்” எனக் கத்தாமலேயே காதுக்குள் தனக்கு மிரட்டல் விடுத்தவளை, புன்னகையோடு இறுக அணைத்துக் கொண்டான்.

கலவியின் இனிமை இருவருக்குமேதான்.  சில நேரங்களில், ஆவேசமாக அனைத்து, தனது பொங்கி நிற்கும் ஆவேசம் தணிந்ததும், உறவாடியவளின் நிலையை ஒதுக்கிவிட்டு, ஒதுங்குபவன் என்றுமே அவளின் நேசத்திற்கு உரியவனல்ல.

உற்றவளின் உணர்வைப் புரிந்துகொண்டு, அவளும் உச்சநிலையை அடைய உய்பவனே உண்மையில், அவளால் கொண்டாடப்படுகிறான்.

நிறைவான தாம்பத்தியத்தைப் பெற்றவள் மட்டுமே, குடும்பத்தை குறைவின்றிப் பேணுகிறாள்.  குழந்தைகளை பதவிசாய், பக்குவத்தோடு வளர்க்கிறாள். வீட்டை கோவிலாக பராமரிக்கிறாள்.  உறவினர் முன் தன்னவனை ஒருபடி மேலே உயர்த்தி வாழச் செய்கிறாள்.

குலம் காப்பவளின் குணம் மாறாமல் இருக்க, கொண்டவன் துணை அவசியம் என்பதை புரியாதவன், சம்சாரசாகரத்தின் நெருஞ்சி முள்ளாய் மாறிப் போவான்.

சண்டைகளும், சச்சரவுகளுமே அதன் சாட்சியாக மாறிப் போகிறது. சந்தேகம் அதன் இணைப்பாக சேர்ந்து போகிறது.  குடும்பப் பராமரிப்பு கேள்விக் குறியாகிறது.

“எப்டிக் கோவம் வருது” என்றவனது வாயில் கைவைத்து, பேசாதே என செயல் மூலம் காட்டியவள், கணவனது கரங்களுக்குள் அடைக்கலமானாள். யாசித்தவளுக்கு யாசகம் அளிக்க எண்ணி, தன்னை அவளிடம் இழக்கத் துவங்கினான்.   

இருவரும் இணைந்து பயணித்து, சம்சாரசாகரத்தை, தங்களுக்குள் சங்கீதமாக மீட்டி, அதன் எழுச்சியில், உச்சம் தொட்டு, களைத்திருந்தனர்.

சட்டென அகன்று, குளித்துவிட்டு வேறு உடையணிந்து வந்து நின்றவளை படுக்கையில் படுத்தபடியே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் விஜய்.

நெற்றியில் குங்குமம் இட்டபடி நின்றிருந்தவளை, பின்னோடு சென்று தன் மார்போடு அணைத்துக் கொண்டவன், “ரொம்பக் கஷ்டப்படுத்தறேனா?” எனக் கேட்டான்.

இல்லையென தலையசைத்து மறுத்தவள், “இது கஷ்டம் கிடையாது.  கடமை” என்றபடி கணவனை நோக்கித் திரும்பியவள், அவனது மூக்கை தனது கைகளால் திருகினாள்.

“ஷ்… ஏண்டி இப்டித் திருகற?  ரொம்ப வலிக்குது” மனைவியிடமிருந்து, மூக்கைக் காப்பாற்றப் போராடி, அவளிடமிருந்து தலையை அண்ணாந்து பாத்தபடியே கேட்டான்.

“மூக்கு ரொம்ப புடைப்பா இருக்கறதாலதான அடிக்கடி, கஷ்டமா, கஷ்டமானு வந்து கேக்கறீங்க.  அதுதான் திருகிவிட்டா இனிக் கேக்க மாட்டிங்கன்னு இப்டி பண்ணியே மூக்சை சிறுசாக்கறதா யோசிச்சிருக்கேன்” என்றபடியே அறையை விட்டு வெளியேறினாள்.

பெண்களுக்கு சில சங்கடங்கள்.  அது ஆண்களுக்குப் புரியாது.  சொல்லும்வரை தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.  அதேநிலையில்தான் தற்போது மதுவும் இருந்தாள்.

மதுவின் வயதொத்தவர்கள் கிண்டல் செய்யலாம்.  ஆனால் பெரியவர்கள் பகல் பொழுதிலா என்று கேட்டால், அப்போது என்ன பதில் சொல்வது எனத் தயக்கம் அவளுள் எழுந்தது.

தனது குளியலை எவ்வாறு எடுத்துக் கொண்டு பேசுவார்களோ என்று  தயங்கியபடியே அடுக்களைக்குள் செல்ல, இசக்கியம்மாளைத் தவிர அங்கு யாருமில்லை. சற்று நிம்மதியாக இருந்தது.

நிமிர்ந்து, உள்ளே நுழைந்தவளை நோக்கிய இசக்கியம்மாள் சற்றும் முகத்தோரணையை மாற்றாமல், “நீராரத் தண்ணி இருக்கு.  அத எடுத்துக் குடிச்சிட்டு வேலையப் பாரு” என்றிட

“இல்லை.  வேணாம் அத்தை” மறுத்தாள் மது.

“கூடிக் களைச்சு வந்தவளுக்கு, கோப்பை நிறைய்ய பாலையும், பருப்பையும், பழத்தையும் என்னேரத்திலயும் உடனே குடுக்க முடியாதுல்ல.  அதுக்குத்தான் நீராரத் தண்ணியக் குடிச்சு, உன்னை ஆசுவாசப்படுத்தச் சொன்னேன்” என்றுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க வெளியேறிவிட்டார்.

தர்மசங்கடமான உணர்வு மதுவிற்கு.  அதன்பின் அங்கிருந்த நீராகாரத்தை எடுத்துப் பருகியவள், சற்றே கூடிய ஆற்றலோடு தனது பணியைக் கவனிக்கத் துவங்கினாள்.

இதையெதையும் அறியாதவன், சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பிவிட்டான்.  அதைக்கண்ட இசக்கியம்மாள், “விசய்யி” என்று மகனை அழைக்க

“என்னம்மா.  வெளிய எதுவும் வாங்கிட்டு வரணுமா?” என தாயின் அருகே வந்து விஜய் கேட்டான்.

“போயி, கால், கை, முகம் கழுவிட்டு வெளியே போ.  இல்லையா குளிச்சிட்டுப் போப்பா” பட்டெனக் கூறிவிட்டு, மருமகளிடம் சென்றார்.

“சரிம்மா” என்றவன் வீட்டினுள் சென்றிருக்க, மருமகளிடம் சென்றவர், “பையலுகளுக்கு சில நடைமுறைச் சிக்கல் எதுவும் தெரியாது. அதுக காட்டு மரங்கணக்காத்தான் வளர நினைக்குங்க” என சிரித்துக் கொண்டவர்,

“தெரியாதவனுக்கு, வீட்டுப் பொம்பிளைகதான் எடுத்துச் சொல்லணும்.  உனக்கும் எடுத்துச் சொல்ல சொந்தம் சுருத்துன்னு யாரும் இல்லை.  அதான் மாமியா நானே வந்து உங்கிட்டச் சொல்லும்படி ஆகிருச்சு” என்றவர்

“சேந்து இருந்தா, உடம்புல உள்ள சீவன் குறைஞ்சு போயி, உயிர் வத்திக் கிடக்கும். அதுவும் பகல்லன்னா ராவைக் காட்டிலும், அம்பது மடங்கு ஆவி(ஜீவன்) குறைஞ்சு போயிருக்கும். முடிஞ்ச மட்டுக்கும், பகல்ல வேணானு வச்சிரணும். 

அப்பத்தான் தெம்பா கடைசிவரை காலந்தள்ள முடியும்.  பகல்ல, கல்யாணம் முடிஞ்ச புதுசுல, ஏதோ ஒரு வேகத்துல நடந்துச்சின்னா, வெளியே போற ஆம்பளையை அப்டியே போக விட்றக் கூடாது.  உடம்புல ஜீவன் இல்லாத நேரத்தில எதுவும் உள்ளே வந்து நுழைய நினைக்கும்” என்று இசக்கி கூறியதும், பயந்துபோய் பார்த்தாள் மது. 

மருமகளின் பார்வையை உணர்ந்து கொண்டவர், “பேயி, பிசாசு, ஆவின்னு அத்தனையும், அந்தி, சந்தி, உச்சியிலதான் உக்கிரமா இருக்குங்க. சகதி, அகழி இந்த மாதிரி இடத்தில போறது, வயசுப் புள்ளைகளுக்கும் சரி, இந்த மாதிரி நடந்த உடனே தண்ணி படாம போறதும், அத்தனை பாதுகாப்பில்லை.  அதுக்காகத்தான், அதைச் சரிக்கட்ட குளிச்சிட்டோ, இல்லை தண்ணியில கைகால் முகம் கழுவிட்டோ வெளிய போகவிடணும்” என மருமகளிடம் விலாவாரியாகக் கூறியவர்,

“அவங்க அப்பா இருந்திருந்தா இதையெல்லாம் அவங்கிட்ட சொல்லியிருப்பாக.  அவரு இல்லாததால, நான் வந்து சொல்ற மாதிரியிருக்கு” என வருத்தமாகக் கூறிவிட்டு அகன்றார்.

மகன் இழந்ததாக எண்ணியிருந்த வாழ்வு அவனுக்கு கிட்டியதை எண்ணி, மகிழ்ந்து போன அத்தாய், கடவுளிடம், “இறைவா, சீக்கிரத்துல புழு, பூச்சி உண்டாகி எனக்கு பேரப்புள்ளைக கிடைக்கணும்.  எம்புள்ளையும் அவளும் எந்தக் குறையுமில்லாம நல்லாருக்கணும்” எனும் வேண்டுதலை வைத்திருந்தார்.

ஆனால் எதிர்பாரா திருப்பமாக, முடிவு பெறாத பிரச்சனைகள் மீண்டும் எழும் என யாருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை.

õõõõõ