மது…மதி! – 14

mathu...mathi!_Coverpic-614ff0d8

முன்கதைச் சுருக்கம்:

                  மதுமதி மீது சுமத்தப்பட்டிருந்த பழியை துடைத்து அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தான் கெளதம் ஸ்ரீநிவாசன். அதே நேரம், அவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து கொண்டிருந்த தேவராஜின் வீட்டிற்கு அவன் மனைவி சரண்யா வந்திருந்தாள்.

மது…மதி! – 14

சரண்யா, தன் கணவன் தேவராஜ் பணிக்கு சென்றதும், அவள் ஒவ்வொரு அலமாரியாக தேட ஆரம்பிக்க, அவள் அலைபேசி ஒலித்தது.

             “என்ன என் அன்பு மனைவி எதையோ தேடுற மாதிரி இருக்கு?” என்றான் தேவராஜ் அலைபேசி வழியாக. சரண்யா திடுக்கிட்டு விழிக்க, “முழிக்காத” என்று அவன் அழுத்தமாக கூறி, பெருங்குரலில் சிரித்தான்.

“இவ்வளவு நாள் இல்லாம, நீ இப்ப பாசமா வரும் பொழுதே எனக்கு தெரியாதா? நீ என்னை வேவு பார்க்க தான் வந்திருக்கன்னு” அவன் குரலில் கோபமிருக்க, சரண்யா மெத்தையின் மீது அசட்டையாக அமர்ந்தாள்.

“நீ முட்டாள்தனமா ஏதாவது பண்ணுவேன்னு தெரியும். ஆனால், உன் ஃபிரெண்ட் கிரிமினல் ஆச்சே. அவன் என்ன திட்டத்தில் உன்னை அனுப்பினான்னு தெரியலை. கண்டு பிடிக்கறேன்.” அவன் கூற, சரண்யாவுக்கு அதே கேள்வி மனதில் ஓடியது.

“என்ன யோசிக்கிற? உன்னால் எதுவும் பண்ண முடியாது. இப்ப நீ ஹவுஸ் அரெஸ்ட். அப்படியே நீ ஏதாவது யார் கிட்டயாவது பேசினாலும், எனக்கு தெரிஞ்சிடும்” என்று கூறி தன் அலைபேசி பேச்சை துண்டித்தான்.

***

கௌதமின் வீட்டை நோக்கி, கௌதமும் மதுமதியும் பயணித்து கொண்டிருக்க, அவர்கள் எண்ணமும் பின்னோக்கி சென்றது.

அவர்கள் திருமணமான புதிதில்,

  கௌதமின் உடல்நிலை அத்தனை மோசம் இல்லை. மோசம் என்று கூட சொல்லத் தேவை இல்லை. பிடிமானமின்றி நடக்க முடியவில்லை அவ்வளவு தான். வீட்டிற்குள் சில தூரத்திற்கு எளிதாக ஒரு பிடிமானத்தோடு நடந்து கொள்கிறான்.

     அவன் பெரும்பாலும், மதுமதியின் உதவியை விரும்புவதில்லை. ஆனால், மதுமதி கௌதமை தனியாகவிடுவதில்லை. புதுமண தம்பதியின் அன்யோன்யம், அவர்களுக்கு இடையில் அழகாக இனிய கானமாக இசைத்து கொண்டிருந்தது.

           தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், திருமணம் முடிந்த கையோடு பல வழக்குகளில்  தன்னை ஈடுபடுத்தி கொண்டான். மதுமதி, அவன் வீட்டிற்கு தன்னை பழக்கப் படுத்திக்கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.

    மதுமதியின் மீது கௌதமின் வீட்டில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும், அவள் செய்கை, அவள் கௌதமை  கவனிக்கும் விதம், அதை விட முக்கியமாக விபத்திற்கு பின் இறுகியிருந்த கௌதமின் முகத்தில்  அடிக்கடி தோன்றும் புன்னகை, மதுமதியின் மீது அவர்கள் வீட்டில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருந்தது.

அன்று, கெளதம் மருத்துவமனைக்கு கிளம்ப, மதுமதியும் அவனுடன் கிளம்பி கொண்டிருந்தாள்.

“கொஞ்ச நாளில் ஒரு மைனர் சர்ஜரி இருக்குமுன்னு நினைக்குறேன். அப்புறம் எல்லாம் சரியாகிரும்.” அவன் நம்பிக்கையுடன் பேச, மதுமதி இன்முகமாக தலை அசைத்து கொண்டாள்.

இருவரும் மருத்துமனைக்கு செல்ல, அங்கு அவன் தோழனையும், அவன் மனைவியையும் சந்தித்தனர். அவர்களிடம் சில முகமன் பேச்சுகளோடு விடை பெற்றனர். அதன் பின் அவர்கள் சந்திக்கும் மருத்துவருக்காக காத்திருந்தனர்.

“உங்க ஃபிரெண்டு எதுக்கு வந்திருக்காங்க?” என்று மதுமதி, தன் கணவனிடம் வினவ, அவன் தன் மனைவியை யோசனையாக பார்த்தான்.

“சொல்ல வேண்டாமுன்னா சொல்லாதீங்க.” அவள் தலை அசைக்க, “உன் கிட்ட மறைக்க என்ன இருக்கு.” அவன் முகத்தில் மென்னகை .

“அவங்க ரொம்ப வருஷமா குழந்தைக்காக வெய்ட் பண்றாங்க” அவன் கூற, “இங்க அந்த டாக்டர்ஸும் இருக்காங்களா?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

“இந்த மாதிரி பெரிய ஹாஸ்ப்பிட்டல்ல, எல்லாரும் இருப்பாங்க.” அவன் அவளுக்கு எடுத்துரைக்க, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

ஆனால், எதுவும் கேட்காமல் மௌனித்து கொண்டாள். மீண்டும் சில நொடிகளில் அவனை யோசனையாக பார்த்தாள். 

“இப்படி பார்த்தா எப்படி? என்ன கேட்கணும்னு நினைக்குறியோ அதை கேட்டுற வேண்டியது தானே?” அவன் நமட்டு சிரிப்போடு கேட்டான்.

“கேட்டிருவேன். ஆனால், நீங்க தப்பா நினைக்க கூடாதுனு தான்” அவள் இழுக்க, “அதெல்லாம் நினைக்க மாட்டேன் கேளு. டாக்டர் வர்ற வரைக்கும், நமக்கும் பொழுது சுவாரசியமா கழியும்.” அவன் கண்சிமிட்டி சிரித்தான்.

“உங்களுக்கு நான் என்ன பொழுதுபோக்கா?” தான் கேட்க நினைத்ததை கேட்க விரும்பாமல், பேச்சை திசை திருப்பினாள் மதுமதி.

“இப்படி சுத்தி வளைக்காம, கேட்க வந்ததை கேளு.” அவன் ஒரே பிடியாக கூறினான்.

“இல்லை, உங்களுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. எப்படியும் ஒரு மாசத்தில் எல்லாம் சரியாகிரும். நீங்க உங்க ஃபிரென்ட் எல்லாரும் பெரிய பணக்காரங்க. உங்க சொந்தகாரங்க கூட பயங்கர வசதி படைச்சவங்க. ஒரு மாசத்தில், எல்லாம் சரி செய்துகிட்டு, கல்யாணம் பண்ணிருக்கலாமே?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

அவன் முகத்தில் மெல்லிய கோபம். “உன்னை ஏன் கல்யாணம் செய்து கஷ்டப்படுத்துறேன்னு கேட்க வரியா?” அவன் சிடுசிடுப்பாக கேட்டான்.

“ஐயையோ… அப்படி கேட்கலீங்க. எதுக்கு என்னை மாதிரி வசதி இல்லாத பெண்ணை கல்யாணம் செய்து கஷ்டப்படணும்? ” அவள் பேச, “நான் சொன்னேனா? கஷ்டப்படுறேன்னு நான் சொன்னேனா? உன்னை கல்யாணம் செய்திட்டு கஷ்டப்படுறேன்னு நான் சொன்னேனா?” அவன் குரலில் அழுத்தம் கூடி இருந்தது.

“அப்படி நீங்க சொல்லலை. உங்க வசதியில் நீங்க…” அவள் பேச முடியமால், அவன் கோபத்தில் மிரண்டு தடுமாற, தன் மனைவியின் பரிதவிப்பில் அவன் முகத்தில் மெல்லிய இளக்கம்.

அவன் கண்ணோரம் சுருங்கியது. “பேசி முடி” அவன் தலை அசைக்க, “நான் மேல பேச மாட்டேன். நீங்க திட்டுவீங்க” அவள் முகம் திருப்பி கொண்டு செல்லமாக கோபித்து கொண்டாள்.

மருத்துவமனையில் அத்தனை கூட்டம் இல்லை. இருந்த சிலரும், அவர்கள் மருத்துவ கோப்புகளில் ஆழ்ந்து இருந்தனர்.

“எல்லாம் சரி செய்துட்டு, கல்யாணம் செய்யாம… அவசரஅவசரமா ஏன் உன்னை கல்யாணம் செய்தேன்னு தெரியணுமா? அதுவும் என் வட்டாரத்தில் என் பிரச்சனையை காரணம் காட்டியே?” அவன் புருவம் உயர்ந்தது.

அவன் கண்கள் சொல்லாத ஒன்றை சொல்லியது. ‘கொஞ்ச நேரத்துக்கு முன்ன என் கிட்ட கோபப்பட்டவங்களா இவுங்க?’ அவள் நொடிப்பொழுதில் தடுமாற, “எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. நீ தான் பயங்கர புத்திசாலி ஆச்சே. கண்டுபிடி.” அவன் அவளை ஆழமாக பார்த்து ரசனையோடு கூறினான்.

அதற்குள் மருத்துவரின் அழைப்பு வர, இருவரும் அவரை சந்திக்க உள்ளே சென்றனர்.

“ஹெல்த் நல்லாருக்கு சீக்கிரம் சர்ஜெரி வச்சிக்கலாம். வழக்கம் போல் நீங்க  நடக்க ஆரம்பிக்கலாம்.” மருத்துவர் கூற, இருவரும் சந்தோஷமாக வெளியே வந்தனர்.

 

கௌதமின் நண்பர்கள் அவன் உடல் நலத்தை விசாரித்தனர். அவர்கள் வீட்டில் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

 சந்தோஷத்தை தாண்டி, அவள் முகத்தில் ஒரு கேள்வி இருக்க, அவன் என்னவென்று வினவினான்.

“குடிக்குற பழக்கம் இருக்கிறதால தான் உங்க ஃபிரெண்டுக்கு குழந்தை விஷயத்தில் பிரச்சனை வந்திருக்குமோ?”  கேட்கலாமா வேண்டாமா என்று பல சந்தேகங்கள் இருந்திருந்தாலும், அவள் கேட்டுவிட்டாள்.

“லூசா நீ?” அவன் கோபம் விர்ரென்று ஏறியது. “அது சோசியல் ட்ரிங்கிங்” அவன் கூற, “குடி…எல்லாம் குடி தானே? இங்கிலீஷில் சொன்னா எல்லாம் மாறிடுமா?” அவள் கேட்க, அவனின் சினம் ஏறியது. அவன் அதன் பின் அவளிடம் பேசவில்லை.

அவளும் பேசவில்லை.

‘சோஸியல் ட்ரிங்கிங்! இது ஒரு சாதாரண விஷயம். இதுக்கு எதுக்கு மதுமதி இவ்வளவு கோபப்படுறா?’ கெளதம் தூக்கம் வராமல் திரும்பி படுத்தான்.

அவள் மேல் கோபமும், வருத்தமும் ஒரு சேர வந்தாலும் புதுமனைவியின் ஒதுக்கத்தில் அவன் மனம் இன்னும் வருந்தியது.

மதுமதி, சிந்தனை வயப்பட்டிருந்தாள்.

‘குடி. எத்தனை மோசமான சொல்?’ அவள் சிந்தை அதையே சுற்றி வந்தது.

‘வேற எதுக்கும் கோபப்படமாட்டாங்க. குடியை பத்தி பேசினா மட்டும் இவ்வளவு கோபம் வருது?’ அவள் கண்கள் கலங்கியது.

‘குடிகாரங்களே இப்படி தானோ?’ மதுமதி அவன் பக்கம் திரும்பி படுக்காமல், எதிர்பக்கமாக இருந்த சுவரை பார்த்தபடி படுத்திருந்தாள்.

அதே நேரம், கெளதம் அவளை பார்க்காமல், ‘சோஸியல் ட்ரிங்கிங் பண்ற என்னை பார்த்து குடிகாரன் லெவலுக்கு பேசுறா. இவளுக்கு எப்படி புரிய வைக்க?’ அவன் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான்.

‘ஒரு தடவை குடிச்சா என்ன? ஏழு தடவை குடிச்சா என்ன? கொஞ்சமா குடிச்சா என்ன? நிறைய குடிச்சா என்ன? குடி குடிதானே? இதை இவுங்களுக்கு எப்படி புரிய வைக்க?’ அவளும் தூக்கம் வரமால் புரண்டு படுத்தாள்.

ஒருவரை ஒருவர் புரிய வைப்பது வாழ்வில் அத்தனை எளிதா என்ன? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அவர்கள் விழிகள் தூக்கத்தை தழுவி கொண்டது.

மறுநாள் காலையில்.

‘நான் சாரி சொல்லிட வேண்டியது தான். நான் தான் மதுமதிக்கு பொறுமையா சொல்லிப்புரிய வைக்கணும். நான் நேத்து  கோபப்பட்டிருக்க கூடாது.’ தன் மனைவியின் மீது கொண்டுள்ள அன்பில் இவ்வாறாக சிந்தித்து கொண்டு எழும்பினான் கெளதம்.

“குட் மார்னிங்” அவன் முன் சற்று நேரத்தில் சிரித்தமுகமாக காபி கோப்பையை நீட்டினாள் அவன் மனைவி.

“தேங்க்ஸ்” அவள் புன்முறுவல் அவனைத் தொற்றி கொண்டது.

அவர்கள் புன்னகையோடு, அவர்கள் கைகளும் தீண்டலை பரிமாறிக் கொண்டது.

அவன் தீண்டல் அவன் அன்பை கூற, அவள் முகம் வெட்க சிவப்பை ஏந்திக்கொண்டு, இன்னும் பெரிதாக புன்னகைத்தது.

“சாரி. நான் நேத்து ரொம்ப பேசிட்டேன்னோ?” அவள் இதழ்கள் மேலும் வார்த்தைகள் வராமல் தடுமாற, அவன் தன் ஆள்காட்டி விரலை அவள் அதரங்கள் மீது வைத்து மறுப்பாக தலை அசைத்தான்.

“நானும் நிறைய பேசினேன். நானும் சாரி சொல்லனுமா?” அவன் கேட்க, அவள் அவன் வாயை மூடி மறுப்பாக தலை அசைத்தாள்.

அவள் கைகளில் அவன் இதழ் பதித்து, “நமக்குள்ள சாரி எல்லாம் வேண்டாம். எதுவா இருந்தாலும் பேசி சரி செய்துக்கலாம்” அவன் கூற, அவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

‘எதுவும் சரியாகவில்லை.’ அவள் அறிவு அபாய மணியடிக்க, ‘எதுவும் சரியாகவில்லை.’ அவன் அறிவும் எச்சரிக்கை மணி அடித்தது.

அவர்கள் சிந்தை வெவ்வேறு திசையில் பயணித்தாலும், அவர்கள் மனம் ஒரு சேர பயணிக்க விரும்பியது.

அவர்களுக்கு இடையே இருக்கும் அசாதாரண சூழ்நிலையை சரி செய்ய, அவன் அவர்கள் திருமண வரவேற்பு பேச்சை எடுத்தான்.

“நம்ம திருமண வரவேற்புக்கு எல்லா பெரிய புள்ளிகளும் வருவாங்க. நாம நல்ல டிரஸ் செலக்ட் பண்ணனும். நீ ட்ரேஸ்க்கு செட் ஆகுற மாதிரி டைமேன்ட்ஸ், பிளாட்டினம், எமரால்ட்ஸ் இப்படி எந்த செட் வேணும்ன்னாலும் வாங்கிக்கோ” அவன் ஆர்வமாக பேசினான்.

“அது தான் சீக்கிரம் ஆபரேஷன் பண்ணிடலாமுன்னு சொன்னாங்களே, முதலில் உங்க ஆபரேஷனை முடிச்சிட்டு அப்புறம் ரிசெப்ஷனை வச்சிப்போமா?” அவள் கேட்க, அவன் மறுப்பாக தலை அசைத்து கண்சிமிட்டி சிரித்தான்.

அவன் கூறிய காரணத்தில் அவள் முகத்தில் வெட்க புன்னகை வந்தமர்ந்து.

மது… மதி! வருவாள்…