மனதோடு மனதாக – 2

wedding-4387182_1920-a7ac9ba5

மனதோடு மனதாக – 2

2     

“ஜீவிதாக்கா.. மெஹந்தி சூப்பரா இருக்கு.. இருந்தாலும் அந்த மாப்பிள்ளை பொண்ணு போல இருந்த அந்த மெஹந்தி டிசைன் போட்டு இருக்கலாம்.. அது செமையா இருந்தது தெரியுமா?” என்று சொல்லிக் கொண்டே, ஜீவிதாவின் தாயார் சுபத்ரா, எடுத்து வைக்கும் புடவைகளையும், நகைகளையும் வெண்ணிலா பார்த்துக் கொண்டிருந்தாள்..

“அம்மா.. எனக்கு இன்னும் ரெண்டு தோசை வேணும்.. சட்னி இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கும்மா.. இனிமே எப்போ உன் கையாள இப்படி சாப்பிடப் போறேன்னு தெரியலையே..” கண்களில் கண்ணீர் தளும்ப சொன்னவளின் கன்னத்தை வருடி,

“அப்படி எல்லாம் சொல்லாம சாப்பிடு.. எப்படியும் மாப்பிள்ளை உன்னை இங்க கூட்டிட்டு வராமையா இருக்கப் போறாரு..” என்றபடி, கையில் மருதாணி போட்டுக் கொண்டிருக்கும் தனது மகளை ரசித்துக் கொண்டே, சுபத்ரா ஆசையாக ஊட்டி விட்டுக் கொண்டிருக்க,            

“பெரியம்மா.. இந்த சிகப்புல பச்சை பார்டர் போட்ட புடவை ரொம்ப அழகா இருக்கு.. அதுல இந்த டிசைன் சூப்பர் போங்க..” முகத்தில் ரசனைச் சொட்ட, மணமேடைக்குச் செல்லும்பொழுது உடுத்துவதற்காக எடுத்திருந்த புடவையை தன் மீது வைத்து பார்த்துக் கொண்டே வெண்ணிலா சொல்ல,

“உன்னோட கல்யாணத்துக்கும் பெரியம்மா இதே போலவே வாங்கித் தரேன்.. சரியா..” என்று ஆசையுடன் அவளது தலையை வருடியவர், 

“நீயும் அவளைப் போலவே கை முழுசும் அழகா மருதாணி போட்டுக்கோ.. உனக்கும் தோசை ஊட்டி விடறேன்.. இங்கப் பாரு.. அந்தப் புடவை தான் உனக்கு கல்யாணத்துக்கு எடுத்திருக்கேன்.. பிடிச்சிருக்கா பாரு.. ப்ளவுஸ் கூட அதுல தச்சு இருக்கு..” என்று தனது தங்கை மகளிடம் அவர் சொல்ல, வெண்ணிலா அதை ஆசையாக வருடிக் கொடுத்தாள்..

“ரொம்ப அழகா இருக்குப் பெரியம்மா.. அதே போல சிவப்புல பச்சை கலர்.. செம செம..” சிறு குழந்தை போல அவள் சொல்லவும்,

“இதுக்கு தேவையான செட் நகை, வளையல் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்டா தங்கம்.. அழகா புடவையைக் கட்டி போட்டுக்கோ.. என் செல்லம் இந்தப் புடவையில ரொம்ப அழகா இளவரசி போல இருப்பா.. உன்னைப் பார்த்து எல்லாரும் சொக்கிப் போகப் போறாங்க..” வெண்ணிலாவின் தாய் பூரணி சொல்லவும், ஜீவிதா சிரிக்கத் துவங்கினாள்..

பூரணி கேள்வியாகப் பார்க்க, வெண்ணிலா அவளைப் பார்த்து முகத்தைச் சுருக்க, “ஹஹ்ஹா.. சித்தி.. அவளுக்கு புடவையை நீங்க தான் கட்டி விடனும்.. இல்ல அதை மூட்டை போல சுத்திட்டு வருவா.. இருக்கற கல்யாண வேலையில நீங்க அதையும் சேர்த்து செய்யணும்.. பேசாம ஒரு பாவாடை சட்டையை வாங்கி இருக்கலாம் இல்ல.. எதுக்கு அவளுக்கு இவ்வளவு செலவு செய்து வாங்கணும்? அதும் என்னைப் போலவே?” வெண்ணிலாவைப் பார்த்துக் கொண்டே கேட்க,

“போக்கா.. நான் ஒண்ணும் பாவாடைச் சட்டை போடற அளவுக்கு சின்னக் குழந்தை இல்ல.. நான் இப்போ காலேஜ் படிக்கறேன்.. எனக்கு நல்லாவே புடவை கட்டத் தெரியும்.. அன்னைக்கு அந்த புடவையில ப்ளீட்சே எடுக்க முடியல.. அதனால அப்படி இருந்தது.. நான் புடவையை அழகா கட்டிப்பேன்.. நீயே இப்போ தானே புடவை கட்டக் கத்துக்கிட்ட? நீ ஒண்ணும் என்னைச் சொல்ல வேண்டாம்..” வெண்ணிலாவின் கேள்விக்கு, அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவள்,

“நல்லா வாய் கிழிய பேசு.. ஆனா.. செயல் ஒண்ணும் இல்ல..” நக்கலாகச் சொல்லவும்,

“நான் என்ன செயல்ல காட்டல? நான் நல்லா தான் படிக்கறேன்.. கிளாஸ்ல எல்லாம் நல்ல பேர் தான் வாங்கறேன்.. நான் தான் கிளாஸ் டாப்பர் தெரியுமா?” ரோஷமாக அவள் கேட்க,

“படிக்கிறதைப் பத்தி நான் சொல்லல.. வீட்டு வேலைகளை சொல்றேன்.. சித்தி வேலைக்கு போனாலும் உனக்கு எல்லாமே செஞ்சி வச்சிட்டு போறா மாதிரி இருக்கு.. கூட மாட எழுந்து அவங்களுக்கு உதவி செய்யலாம் இல்ல.. சாயந்திரம் நீ வந்து சாப்பிடற ஸ்நாக்ஸ் வரை எல்லாம் ரெடி செய்யணும். லஞ்ச் டப்பா கூட தேய்க்க மாட்ட.. துவைச்ச துணிய மடிச்சு கூட வைக்க மாட்ட.. சமையல் செய்யலைனாலும் இது போல சின்னச் சின்னதா செய்யலாம்ல.. அதெல்லாம் கத்துக்கோடி.. அதைத் தான் நான் சொல்றேன்.. சித்தி பாவம்ல.. உனக்காக கஷ்டப்படற போது நீ கொஞ்சம் கூட எந்த ஒரு ஹெல்பும் இல்லாம இருக்க.. உனக்கே இது ஓவரா இல்ல..” என்ற ஜீவிதா, வெண்ணிலா முகத்தைச் சுருக்கவும், தனது காலில் போடப் பட்டுக் கொண்டிருக்கும் மருதாணியில் பார்வையைப் பதித்தாள்..

“எல்லாம் நான் போகப் போக கத்துப்பேன்..” என்று அவள் சொல்லவும்,

“இதையே தான் ஒரு வருஷமா சொல்ற..” என்றவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்ப, அந்த பேச்சை விடுத்து, வெண்ணிலா இப்பொழுது நகைகளை பார்வையிடத் துவங்கினாள்.. அவளுக்கு விவரம் தெரிந்து நடக்கும் முதல் திருமணம்.. அதுவும் சுபத்ரா அனைத்தையும் தனது மகளுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி இருப்பதைப் பார்த்தவளுக்கு புதிதாகவும், வியப்பாகவும் இருந்தது.. ஜீவிதாவிற்கு வாங்கி இருந்த தாலிக் கொடியை எடுத்து தனது கழுத்தின் அருகே வைத்துப் பார்த்தவள்,

“ஏன் பெரியம்மா இவ்வளவு பெரிசா தான் தாலிக் கொடி வாங்கணுமா என்ன?” என்று கேட்டு விட்டு, சுபத்ரா பதில் சொல்வதற்குள்,

“அம்மா.. எனக்கும் இதே போலவே வாங்கித் தருவீங்களா?” என்று கேட்கவும், அவளது கையில் இருந்த தாலிக் கொடியை வாங்கி பத்திரமாக அந்தப் பெட்டியில் வைத்த பூரணி,

“உனக்கு கல்யாணம் ஆகும்போது வாங்கித் தரேன்.. இப்போ இதை எல்லாம் தொட்டு விளையாடாதே.. எங்கயாவது ஏதாவது போட்டுட்டா நாளைக்கு கல்யாண நேரத்துல கஷ்டம்.. எல்லாமே உனக்கு விளையாட்டு தான்.. கொஞ்சம் பேசாம இரு வெண்ணிலா..” அவளது தலையில் தட்டி அதட்ட, தலையை தடவிக் கொண்டே

“பாருங்க பெரியம்மா..” என்று அவரிடம் சரண் புக,

“பூரணி குழந்தையைத் திட்டாதே.. அவ ஆசையா எல்லாத்தையும் பார்க்கறதே அவ்வளவு அழகா இருக்கு.. அவ கண்ணும் முகமும் பேசறது இருக்குப் பாரு.. அதுவே போதும்.. எந்த ராஜகுமாரன் அவளுக்காகப் பிறந்து இருக்கானோ?” என்றபடி அவளுக்கும் தோசையை வாயில் கொடுத்தவர்,

“குழந்தைக்கும் கையில பெருசா மெஹந்தி போட்டு விடுங்க.. அவளுக்கு அழகா இருக்கும்.. காலுலையும் போட்டு விடுங்க..” என்று அந்த பியூட்டி பார்லர் பெண்மணியிடம் சொல்ல, பூரணி திட்டியதை மறந்து, அவள் குதூகலத்துடன் தனது மொபைலில் கேம் விளையாடத் துவங்கினாள்..

அவளைப் பார்த்த சுபத்ரா, ஜீவிதாவைப் பார்த்து, “அவ அப்பா இல்லாத சின்னக் குழந்தை ஜீவி.. அவளை ரொம்ப எதுவும் சொல்லாதே.. இப்போ நீ எல்லாம் செய்யறா மாதிரி அவளுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகும்பொழுது எல்லாம் கத்துப்பா.. அவளை எதுவும் சொல்லாதே..” மெல்லிய குரலில் சொல்ல,

“அம்மா.. இப்படி குழந்தை குழந்தைன்னு தான் அவ சித்திக்கு கொஞ்சம் கூட ஹெல்ப் பண்ணவே மாட்டேங்கிறா.. சித்தி அவ்வளவு தூரம் வேலைக்கும் போயிட்டு, வீட்டு வேலை எல்லாம் செய்யறது எவ்வளவு கஷ்டம்.. இவளுக்காக அவங்க அவ்வளவு கஷ்டப்படறாங்க.. இவ என்னடான்னா.. கொஞ்சம் கூட எதுவுமே புரிஞ்சிக்காம என்னவோ சின்னக் குழந்தை போல பீகேவ் செய்யறா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு? என்னவோ ரொம்ப செல்லம் கொடுத்து அவளை குட்டிச் சுவர் ஆக்கப் போறீங்க.. உங்களை எல்லாம் நல்லா ஏமாத்த போறா பாருங்க..” என்று அவளை முறைத்துக் கொண்டே சொன்னவள்,

“என்னவோ அவ எந்த கவலையும் இல்லாம குறும்பு பண்ணிட்டு திரியறா.. அதை நீங்க ரசிக்க வேற செய்யறீங்க?” என்று சொல்லிவிட்டு, தனது கையில் போடப்படும் மருதாணியை வெறிக்க, வெண்ணிலாவோ எந்தக் கவலையும் இன்றி, மொபைலில் விளையாடிக் கொண்டிருந்தாள்..

சுபத்ரா–பார்த்திபன் தம்பதியரின் மூத்த மகள் ஜீவிதா.. அவருடைய இளைய மகன் திலீபன்.. பார்த்திபன் சொந்தத் தொழில் வைத்து சிறப்பாக நடத்திக் கொண்டு வர, அவர்களது செல்வத்திற்கு குறைவில்லாமல் இருந்தது.. ஜீவிதா பார்ப்பவர்களின் கண்களில் மெச்சுதல் தெரியும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக உடையுடுத்தி, அலங்கரித்துக் கொள்பவள். தான் அழகு என்ற கர்வமும் உண்டு.. தன்னுடைய நிறம், ஸ்டைல் மற்றும் அவள் அணியும் உடைகளை அனைவரும் பாராட்ட வேண்டும் என்பது அவளது எண்ணம்.. சுபத்ரா தன்னை மட்டுமே கொஞ்ச வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் உள்ளவள்.

சுபத்ராவோ, திலீபனோ வெண்ணிலாவைக் கொஞ்சினாலோ, புகழ்ந்தாலோ, உடனேயே வெண்ணிலாவை மட்டம் தட்டிவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.. அவளும் அப்படி ஒன்றும் சுபத்ராவிற்கு உதவியது கிடையாது.. திருமணம் நிச்சயம் ஆன பிறகு, சுபத்ராவின் நச்சரிப்பில், வீட்டு வேலைகள் சிலவற்றை மட்டுமே கற்றுக் கொண்டு தான் அவள் வெண்ணிலாவிற்கு இந்த அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறாள்..  

பூரணி, சுபத்ராவின் தங்கை.. வெண்ணிலா பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்த நிலையில், கைக் குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்த பூரணிக்கு, தனது கணவன், காலையில் அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருக்கும்பொழுது, கட்டுப்பாடின்றி வந்த ஒரு பஸ் இடித்து, அந்த இடத்திலேயே இறந்த செய்தி அதிர்ச்சியளித்தது.. அதை விட அடுத்த இடியாக, அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வரக் கூடாது என்று பூரணியின் புகுந்த வீட்டினர் சொல்லிவிட, பூரணியின் பெற்றவர்கள் தடுமாறிப் போயினர்..

தனது கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட, வெண்ணிலாவை ராசி இல்லாத குழந்தை என்று கூறி அதை எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்று அவர்கள் சொல்லி விட, தனது கணவருக்காக பூரணி இறுதிச் சடங்கிற்கு மட்டும் சென்று விட்டு வந்தார்.. அதே போலவே தனது கணவரின் கம்பனியில் இருந்து அவர்கள் கொடுத்த தொகைகள் மொத்தத்தையும் அவர்களே எடுத்துக் கொண்டு, பூரணிக்கு தர மறுக்க, அது தனக்கு வேண்டாம் என்று உதாசீனப்படுத்தி விட்டு வந்தவர், தனது படிப்பிற்குத் தகுந்து தனக்கு ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, முயன்று வங்கித் தேர்வுகள் எழுதி, வெற்றிக் கண்டு, அந்த வேலையில் மேலும் மேலும் உயர்ந்து, இன்று ஓரளவிற்கு வெண்ணிலாவை நல்ல நிலையில், தந்தை இல்லாத குறை தெரியாத அளவிற்கு வளர்க்கவும் செய்தார்..

சுபத்ராவிற்கு வெண்ணிலா என்றால் மிகுந்த பிரியம்.. பூரணி வேலைக்குச் செல்லும் நேரங்களில் குழந்தையை பார்த்துக் கொள்ள, டேகேரை பூரணி தேட, சுபத்ரா தான் பூரணிக்கு உதவிக்கரம் நீட்டினார்.. வெண்ணிலாவை தான் பார்த்துக் கொள்வதாக கூறியவர், பூரணியின் வீட்டை தனது வீட்டின் பின் பக்கம் இருந்த வீட்டிடிற்கே மாற்றி, இன்றளவும் பூரணிக்கு உறுதுணையாக இருக்கிறார்..

வெண்ணிலாவின் மீது அவருக்கு தந்தையில்லாத பெண் என்று தனிப் பாசம் உண்டு.. தனது தந்தையைப் பற்றி இது வரையிலும் ஒரு வார்த்தைக் கூடக் கேட்காமல், பூரணிக்கு எந்த வித டென்ஷனையும் கொடுக்காமல் வெண்ணிலா இருக்கவுமே அவருக்கு மேலும் அவள் மீது பிரியம் அதிகரித்தது..

வெண்ணிலா என்றுமே தனது அழகிலோ, உடையிலோ மிகுந்த கவனம் எடுக்காமல் போனாலும், அவளது குறும்பு மின்னும் கண்களும், எப்பொழுதுமே இருக்கும் அவளது சிரித்த முகமுமே அனைவரையும் அவளிடம் கட்டிப் போடும்.. அவள் செய்யும் குறும்புகளை சுபத்ரா சுட்டிக் காட்டாமல், ரசிப்பதும், படிப்பில் படு சுட்டியான வெண்ணிலாவைக் காட்டி, ஜீவிதாவைத் திட்டுவதிலும், அவளுக்கு வெண்ணிலாவின் மேல் சிறு பொறாமை உணர்வை ஏற்படுத்தி இருந்தது.. அதை பெரியவள் என்கிற போர்வையில், வெண்ணிலாவை மட்டம் தட்டிக் காட்டுவதில் அவளுக்கு ஒரு திருப்தி..

மொபைலில் விளையாடிக் கொண்டிருந்த வெண்ணிலாவைப் பார்த்த சுபத்ரா, “நிலா குட்டி.. அக்காவுக்கு மெஹந்தி போட்டு முடிச்சாச்சு பாரு.. நீ ஆடாம கையைக் காட்டு.. உனக்கு அழகா போட்டுக்கோ.. அப்படியே நாளைக்கு அம்மாவை அழகா உனக்கு பின்னி விடச் சொல்றேன்.. அழகா மேக்கப் போட்டுக்கோ.. என் நிலாக் குட்டி தேவதையா இருப்பா..” என்று சொல்லவும்,

“சரி பெரியம்மா..” என்று சந்தோஷமாகச் சொன்னவள், அந்தப் பெண்மணி கொண்டு வந்த புத்தகத்தில் இருந்த ஒரு டிசைனை எடுத்து,

“அக்கா.. இது நல்லா இருக்கா பாரு.. இதுல இந்த ஹார்ட் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு.” அருகில் இருந்த ஜீவிதாவிடம் அவள் ஆலோசனைக் கேட்கவும்,

“ஹே.. இந்த டிசைன் அழகா இருக்குப் பாரு நிலா. அதைப் போட்டுக்கோ.. மிக்கி மவுஸ் எல்லாம் இருக்குப் பாரு.. உனக்கு அது சரியா இருக்கும்…”  என்று ஒரு டிசைனைக் காட்ட,

“இல்லைக்கா.. எனக்கு ஹார்ட் டிசைன் தான் வேணும்.. இதைத் தான் நான் போட்டுப்பேன்… இது என் கை.. சோ எனக்கு பிடிச்சது தான் போட்டுப்பேன்.. நான் என்ன ஸ்கூல் போற பாப்பாவா மிக்கி மவுஸ் போட்டுக்க? மாமா வீட்டு ஆளுங்க என் கையைப் பார்த்தா சிரிக்க மாட்டாங்க? உனக்கு டேஸ்ட்டே இல்ல..” என்றவள்,

“இதையே எனக்கு போடுங்க..” என்று ஒரு டிசைனைக் காட்டவும், அவர் போடத் துவங்க, அதை சந்தோஷத்துடன் பார்த்தவள்,

“அம்மா.. இது நல்லா இருக்கு இல்ல..” என்று தனது அன்னையிடம் கேட்கவும், தலையசைத்த பூரணியோ அவளை நிறைவாய் பார்த்துவிட்டு சுபத்ராவிற்கு உதவத் துவங்கினார்..

அந்தத் திருமண மண்டபமே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.. சுபத்ரா மற்றும் பார்த்திபனின் உறவினர்கள் அந்த மண்டபத்தில் நிறைந்து வழிய, மணப்பெண்ணிற்கு செய்யப்படும் நலங்கு நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தது.. அவர்களது மாமன்மார்களும், அத்தைமார்களும் சீர்களை கொண்டு வைக்க, வெண்ணிலா அனைத்தையும் புதியதாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

அழகிய பட்டுப்பாவாடை தாவணியில், தனது நீள கூந்தலைப் பின்னலிட்டு, பூச்சூடி, சுபத்ரா சொன்னதன் பெயரில் அழகு நிலையைப் பெண் அவளுக்கும் அலங்காரம் செய்திருக்க, ஜீவிதாவின் அருகில் நின்றுக் கொண்டு, அந்த வைபவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நிலா குட்டி.. மாமா வரும்போது நீ தான் ஆரத்தி தட்டு எடுக்கணும் கண்ணம்மா. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க எல்லாம் வந்திருவாங்க.. மாமாக்கிட்ட எவ்வளவு வேணுமோ அவ்வளவு கேட்டு தட்டுல வாங்கு என்ன? இப்போவே மாமாக்கிட்ட வாங்கினா தான் உண்டு..” சுபத்ரா கேலி செய்யவும்,

“என்ன கேட்கறது பெரியம்மா? காசா?” புரியாமல் வெண்ணிலா கேட்க,

“காசு கேளு.. இல்ல மோதிரம் கேளு.. எது வேணா கேளு.. கல்யாண மண்டபத்துக்கு உள்ள விடணும்ன்னா நீ கேட்கறதை தந்தா தான்னு சொல்லிடு.. என்ன? கொடுக்காம மாமா எப்படி உள்ள வருவார்? கொடுக்கலைன்னா அக்காவை காட்ட மாட்டேன்னு சொல்லிடு..” சுபத்ரா சொல்லவும்,

“ஏன்ம்மா.. இவக்கிட்ட போய் இதைச் சொல்றீங்க? அவ மாமா கிட்ட போய் எனக்கு நாலு காட்பரிஸ் சாக்லேட் வேணும்ன்னு கேட்பா.. மாமா ஈசியா அவளை ஏமாத்திட்டு உள்ள வந்திருவார்..” என்று திலீபன் கேலி செய்ய, வெண்ணிலா அவனைப் பார்த்து விழிகளை விரித்தாள்..

“ஹே அண்ணா.. இப்போ தான் நீ சூப்பர் ஐடியா தந்திருக்க.. அந்த காசை எல்லாம் வச்சிக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்? காட்பரிஸ்னா நிம்மதியா சாப்பிடவாவது செய்யலாம்ல.. மாமாகிட்ட பெரிய டப்பாவா கேட்கறேன்..” விழிகளை விரித்தவளின் தலையைத் தட்டியவன்,

“லூசு.. லூசு.. தங்கக் காசு வேணும்ன்னு கேளு.. நாளைக்கு உன் கல்யாணத்துக்கு நகை வாங்கலாம்ல..” என்ற திலீபன் அவளது தலையைப் பிடித்து கலைக்க,

“டேய்.. அண்ணா.. என் தலையைக் கலைக்காதே.. உங்க சித்தி அப்பறம் என்னைத் தான் இதைக் கூட ஒழுங்கா வச்சுக்க மாட்டியான்னு திட்டுவாங்க..” என்றவளைப் பார்த்த திலீபன், அவளது தோளில் கைப் போட்டு தன்னுடன் இழுத்துக் கொண்டு,

“என் செல்ல பூனைக் குட்டி.. பேசாம நில்லு.. நானே உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்.. இப்போ மாமா வந்தா.. அவர்கிட்ட பெருசா ஏதாவது கேட்டு வாங்கு.. அதுல உனக்கும் எனக்கும் சேர்.. என்ன? டீலா?” என்று கேட்டு, அவளிடம் விரலை நீட்ட, அவனது விரலில் விரல் தட்டி,

“டீல்..” என்று வெண்ணிலா தலையசைக்க, திலீபன் அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டான்..   

“சரிவா.. நாம அப்படியே போய் ஒரு ரவுண்ட் டிபன் சாப்பிட்டு வரலாம்.. இங்க இவங்க செய்யறதை நாம என்ன நின்னு வேடிக்கைப் பார்க்கறது? எனக்கு போர் அடிக்குது..” என்று அவளைத் தன்னுடன் இழுத்துக் கொண்டு சென்றவன், டிஃபனை அவளுடன் அமர்ந்து ஒரு பிடி பிடித்துவிட்டு வர, நலங்கு முடிந்து ஜீவிதா தனது அறைக்கு வந்தவள், செல்போனில் எதுவோ பார்த்துக் கொண்டிருக்க, அவளது கண்கள் கலங்கி இருந்தது..

திலீபனுடன் அமர்ந்து வெண்ணிலா எதுவோ வளவளத்துக் கொண்டிருக்க,

“வெண்ணிலா.. போய் அக்கா கூடவே இரு.. எங்கயும் போகக் கூடாது என்ன?” என்ற சுபத்ராவிடம், சரி என்று தலையசைத்துவிட்டு, தனது மொபைலுடன் ஜீவிதாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.    

“பெரிம்மா.. அப்போ மாமா வந்தா ஆரத்தி எடுக்கணும்ன்னு சொன்னீங்க?” என்று கேள்வி கேட்க,

“மாமா வந்தா நான் உன்னை கூப்பிடறேன்.. நீ வா.. இப்போ இங்கயே பேசாம அக்கா கூட உட்காரு..” அங்கு வந்த பூரணி சொல்லிவிட்டு, அவளது முகத்தைத் துடைத்து விட்டு, அவளைப் பார்த்து புன்னகைக்க,          

“என்னம்மா?” வெண்ணிலா புரியாமல் கேட்க, பூரணி மறுப்பாக தலையசைத்துவிட்டு, சுபத்ராவுடன் வெளியில் செல்ல, உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கிக் கொண்டவள், தனது மொபைலில் மூழ்கினாள்..       

ஜீவிதா கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருக்க, மொபைலில் விளையாடிக் கொண்டே நிமிர்ந்துப் பார்த்தவள்,

“என்னக்கா என்ன ஆச்சு? ஏன் அழற?” வெண்ணிலா கேட்கவும்,

“ஒண்ணும் இல்ல.. நீ உன் வேலையைப் பார்க்கறியா? சும்மா நொய்யி நொய்யின்னுக்கிட்டு..” எரிந்து விழுந்த ஜீவிதா தனது கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“ஏன் ஜீவிக்கா.. எங்களை எல்லாம் விட்டுட்டு போறதுனால உனக்கு அழுகை வருதா? நாங்களும் இங்க பக்கத்துல தானே இருக்கோம்.. அடிக்கடி நீ வந்து பார்க்கலாம்க்கா.. மாமா கண்டிப்பா நம்ம வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு வருவார்.. இதுக்கு எல்லாம் அழலாமா?” வெண்ணிலா அவளை சமாதானப்படுத்த விழைய,

“பேசாம வாயை வச்சிக்கிட்டு சும்மா இருன்னு சொன்னேன்.. இல்ல பேசாம இருக்க முடியாதுன்னா இந்த ரூமை விட்டு வெளிய போயிரு.. போய் உங்க பெரியம்மாவை கொஞ்சிக்கிட்டு இரு..” ஜீவிதா எரிந்து விழவும், அவளது முகத்தைப் பார்த்த வெண்ணிலா, அமைதியாக தனது செல்லில் மூழ்கினாள்..  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!