மனதோடு மனதாக – 7

th (14)

7

குளித்து விட்டு வந்திருந்த வெண்ணிலாவின் தலையைத் துவட்டிய சுபத்ரா, “நிலாக்குட்டி.. மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரி.. உன்னை நல்லாப் பார்த்துப்பார்.. நீ பயப்படாதே.. உங்க பெரியப்பா அவரைப் பத்தி நல்லா விசாரிச்சிட்டார்.. இப்போ எங்க மரியாதையே நீ தாண்டா..” கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவளின் தாடையை நிமிர்த்திச் சொல்லவும், வெண்ணிலா பொம்மை போன்று மண்டையை அசைக்க, அவளது கன்னத்தில் பூரணி முத்தமிட்டு சுபத்ராவைப் பார்க்க,

“இப்போ நீ தான்டா எங்க நம்பிக்கையே.. ஒருத்தி கெடுத்த நம்பிக்கையையும் மரியாதையும் நீ தான் எங்களுக்கு திருப்பித் தரணும்..” சுபத்ரா கண்ணீருடன் சொல்ல, வெண்ணிலா அவரது கையைப் பிடித்துக் கொண்டாள்..

“இல்ல பெரியம்மா நான் அழல.. நான் சமத்தா இருக்கேன்..” என்று சொன்னவளை, மனம் நிறைந்து பார்த்த பூரணி, விஷ்ணுப்ரியா கொண்டு வந்து கொடுத்த திருமணப் புடவைக்குத் தோதாக பெட்டியில் ஏதாவது ப்ளவுஸ் இருக்கிறதா என்று தேடத் துவங்கினார்..

அனைவரின் கண்களிலும் கண்ணீர் அதோ இதோ என்று துருத்திக் கொண்டிருந்தாலும், அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வெண்ணிலாவின் திருமணத்தை சிறப்பாக செய்ய முடிவெடுத்து, தங்களை அடக்கிக் கொண்டு அதை செயல்படுத்தவும் செய்தனர்..  

திருமணத்திற்காக எடுத்துக் கொண்டு வந்திருந்த பெட்டியைக் குடைந்துக் கொண்டிருந்த பூரணி, அதில் அந்த புடவைக்குத் தோதான கலரில் இருந்த ஒரு ப்ளவுசை வெளியில் எடுத்தவர், திகைத்துப் போனார்.

அந்த ப்ளவுஸ், விஷ்ணுப்ரியா கொண்டு வந்து கொடுத்த முஹுர்த்தப் புடவையினுடையது.. அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, வெண்ணிலாவின் அளவில் அந்த ப்ளவுஸ் தைக்கப்பட்டிருக்க, அதை எடுத்துக் கொண்டு அவளருகில் வந்த பூரணி,

“நிலாக்குட்டி. இந்த முஹுர்த்தப் புடவை ப்ளவுஸ் எப்படி உன்கிட்ட வந்தது? எப்படி இதை உன் சைஸ்ல தைச்சிருக்காங்க?” குழப்பமாகக் கேட்கவும்,

“தெரியலைம்மா.. கல்யாணத்துக்காக அக்கா ப்ளவுசும் என் ப்ளவுசும் தைச்சு வந்தது இல்லையா.. அப்போ அக்கா இதை என்கிட்டக் கொடுத்தா.. நீங்க எனக்கு என்ன புடவை எடுத்து இருக்கீங்கன்னு தெரியாதே.. ஒருவேளை இது தான் நீங்க எடுத்த புடவையோட ப்ளௌஸ் போலன்னு நினைச்சு நீங்க எடுத்து வச்ச பெட்டி உள்ள போட்டுட்டேன்..” வெண்ணிலாவின் பதிலில், சுபத்ரா கண்ணீருடன் அவளது தலையைத் தனது வயிற்றோடு அணைத்துக் கொண்டார்..    

“கண்ணம்மா.. இது தான் விதின்னு சொல்றது.. இந்தப் புடவை உன்னை தான் சேரனும்ன்னு இதை நெய்யும் போதே ஆண்டவன் எழுதிட்டான்.. அது தான் அவளோட வேற எந்தப் புடவையோட ப்ளுவுசும் மாறாம இந்த கூரைப் புடவையோட ப்ளவுஸ் மாறி இருக்கு.. அழகா உனக்காக தச்சு வந்திருக்கு.. நீ ரெடி ஆகு.. நாங்களும் தயாராகறோம்.. அப்பறம் பெரியப்பா சத்தம் போடுவார்..” தனது கண்களைத் துடைத்துக் கொண்ட சுபத்ரா, 

“புடவையைக் கட்டி விட்ட அப்பறம், அவங்க கொண்டு வந்த நகையை போட்டு விடுங்க.. நல்லா அழகா எல்லாம் செய்து விடுங்க.. என் பொண்ணு ஜொலிக்கணும்..” என்றவர், அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, ஒரு பெருமூச்சுடன் தயாராகி வந்தார்..

பூரணி தனது மகளைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்க, “நீ ரெடி ஆகிவா பூரணி.. கண்ணைத் துடைச்சிக்கோ.. வேற எந்த எண்ணமும் இப்போ வேண்டாம்.. நம்ம நிலாக் குட்டி போற இடத்துல நல்லா வாழணும்.. அவளோட வாழ்க்கை சீரும் சிறப்புமா நல்லபடியா இருக்கணும்.. போ.. போய் ரெடி ஆகி வா..” என்ற சுபத்ரா, வெண்ணிலாவிற்கு துணையாக இருக்க, பதுமையென தயாரானவளைக் கண் நிறைந்துப் பார்த்தார்..

“என்ன சுபத்ரா.. நிலாக் குட்டி ரெடியா இருக்காளா?” என்று கேட்டுக் கொண்டே பார்த்திபன் வர, தலையலங்காரம், முக அலங்காரங்கள் முடிந்து, புடவையைக் கட்ட அழகு நிலையப் பெண் தயாராகிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்தவர், அவளது தலையை மென்மையாக வருடி, அடைத்த தொண்டையைச் சரி செய்துக் கொண்டு,   

“சுபத்ரா எந்தக் குறையும் இல்லாம இவளுக்கு எல்லாம் செய்யணும் புரியுதா? அவளுக்கு இப்போ இருக்கற நகையை போட்டு விடு.. அப்பறம் வேற புதுசா வாங்கி மறுவீட்டு விருந்துக்கு வரும்போது நிறைவா கொடுக்கலாம்.. நான் போய் வந்தவங்களை எல்லாம் பார்க்கறேன்.. மணி நாலேகால் ஆகுது.. சீக்கிரம் ரெடி பண்ணுங்க. அஞ்சு மணிக்கு முஹுர்த்தம்.” என்ற பார்த்திபன், ‘திலீபா..’ என்று அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல, சுபத்ரா அவளது தலையைத் தடவிக் கொடுத்து, தனது கழுத்தில் இருந்த சங்கிலியை அவளது கழுத்தில் போட்டு விட, வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் தளும்பியது..

புடவையைக் கட்டிக் கொண்டிருந்த அழகு நிலையப் பெண், அவளது கண்ணீரை ஒற்றி எடுத்து, “வெண்ணிலா.. ப்ளீஸ்.. இப்போ அழுதீங்கன்னா மேக்கப் எல்லாம் கலஞ்சு போயிரும்.. மை எல்லாம் வெளிய வந்திரும்.. அப்பறம் போட்டோல நல்லாவே இருக்காது..” என்று சொல்லவும், அவளது கன்னத்தைத் தாங்கிய சுபத்ரா,

“நிலாக் குட்டி.. இப்படி நீ அழுதுக்கிட்டே போனா வந்து இருக்கறவங்க எல்லாம் தப்பா நினைச்சுக்கப் போறாங்கடா செல்லம்.. திடீர்ன்னு இப்படி நடக்கறது உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்.. ஆனா.. இது உன்னோட வாழ்க்கை தொடங்கற நேரம்.. கண் கலங்காம இருடாம்மா.. நீ சந்தோஷமா இருந்தா தானே இந்த அம்மாங்களுக்கும் சந்தோசம்?” கண்ணீருடன் கேட்கவும்,

“இல்ல பெரியம்மா.. நான் அழல.. நீங்க அழாதீங்க..” என்று சொன்னவள், அழகு நிலையப் பெண் உடுத்தும் புடவையை உடுத்திக் கொண்டாள்..      

புடவை உடுத்தியப் பிறகு, அந்தப் புடவைக்கு தோதான நகைகளை அணிந்ததும் அவளைப் பார்த்த சுபத்ரா, “ஹையோ என்னோட நிலாக் குட்டி அப்படியே தேவதை போல இருக்கா.. அவ்வளவு அழகா இருக்கடா என் செல்லக் குட்டி..” என்று கன்னத்தை வழித்து நெட்டி முறித்து, மீண்டும் தனது அட்டிகையைப் போட,

“எதுக்குக்கா இப்போ உங்க கழுத்துல இருக்கறது எல்லாம் கழட்டிப் போடறீங்க? கொஞ்சம் பேசாம இருங்க.. நான் அவளுக்கு சேர்த்து வச்ச நகை எல்லாம் இருக்கு.. அது போதும்..” பூரணி தடுக்கத் தடுக்க, இரண்டு சங்கிலியைப் போட்டு விட்டு,

“என் பொண்ணுக்கு நான் கொடுக்கறேன்.. நீ உன் பொண்ணுக்கு கொடு..” என்று பூரணியிடம் சொன்னவர்,

“இப்போ அவளை சீக்கிரம் ரெடி பண்ணுங்க.” என்று கூறி, அவளையேப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்..

புடவையை உடுத்தி வெண்ணிலா தயாராகி அமர்ந்திருக்க, அவளைப் பார்க்க வந்த விஷ்ணுப்ரியா, அழகிய ஓவியமாக இருந்தவளைப் பார்த்து மனம் நிறைந்துப் போனாள்..

“சூப்பர் வெண்ணிலா.. ரொம்ப அழகா இருக்க..” அவளிடம் சொன்னவள்,

“ஆமா.. இந்த ப்ளவுஸ் எப்படி வெண்ணிலாவுக்கு சரியா இருக்கு? ஜீவிதாவுக்கு தைச்ச ப்ளவுசை அட்ஜஸ்ட் பண்ணி போட்டு இருக்கீங்களா?” என்று கேட்க, இல்லை என்று தொண்டையடைக்க தலையசைத்த பூரணி, ப்ளவுஸ் மாற்றி தைத்து வந்திருந்த கதையைச் சொல்லவும், அவளது கண்களும் கலங்க, வெண்ணிலாவின் கன்னத்தைத் தட்டி,  

“நான் ஆரி ரெடி ஆகிட்டானான்னு பார்க்கறேன்..” என்றுபடி வெளியில் செல்ல, அந்த நேரம் வெண்ணிலாவின் தாய் மாமன் மாலையை எடுத்துக் கொண்டு உள்ளே வரவும், அந்த மாலையைப் பார்த்த வெண்ணிலாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.  

“நம்ம குட்டி பொண்ணு வெண்ணிலாவா இது? கல்யாணம்ன்ன உடனே பெரிய பொண்ணு மாதிரி தெரியறா..” என்றபடி அவளது கன்னத்தைத் தட்டி, மாலையை அவளுக்கு அணிவிக்க, அதையே திலீபனின் பார்வை பிரதிபலித்தது..

முன்தினம் வரை தன்னுடைய பூனைக் குட்டி போல இருந்த குட்டிப் பெண், பெரிய மனுஷியாக திலீபனுக்குத் தெரிய, “மை டியர் லிட்டில் சிஸ்டர்..” என்றபடி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், தனது செல்லை எடுத்து,

“வா பூனைக் குட்டி.. நாம போட்டோ எடுத்துக்கலாம்..” என்று அவளை அணைத்தபடியே அவளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டான்.

“கொஞ்சம் சிரியேன்.. அப்பறம் போட்டோ எல்லாம் பூனைக்குட்டிக்கு பதிலா குரங்கு குட்டி தான் இருக்கும்.. கொஞ்ச நாள் கழிச்சு வந்து ஏன் இப்படி அசிங்கமா போட்டோ எடுத்தன்னு என்னை திட்டுவ.. இதுக்கு சப்போர்ட்டுக்கு மாமா வேற வருவார்.. உங்களை யாரு சமாளிக்கிறது?” கேலி செய்துக் கொண்டே போட்டோவை எடுத்தவன், அவளைத் தள்ளி நிறுத்தி,

“இப்படி நில்லு.. அப்படி நில்லு.. அந்தப் பக்கம் பாரு.. இப்படி கை வை..” என்ற திலீபன் அவளை விதம் விதமாக படம் பிடித்துக் கொண்டிருக்க,

“டேய் இங்க என்ன பண்ணிட்டு இருக்க? அங்க அய்யர் நேரமாகுதுன்னு சொல்லிட்டு இருக்கார்.. போய் மாமாவை கூட்டிக்கிட்டு வா.. நேரமாகுது..” பரபரவென்று வந்த பார்த்திபன் சொல்லவும்,

“சரிப்பா.. நான் வரேன்..” என்ற திலீப், ஆர்யனின் அறையை நோக்கிச் சென்றான்..

வந்திருந்த உறவினர்களிடம் பிருந்தா பேசிக் கொண்டிருக்க, சிலர் பெண் மாறியதைப் பற்றி கேட்டதற்கும், புன்னகையுடன் ஆம் என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு நகர்ந்து விட, திருமணத்திற்கு முன் ஜீவிதா காணாமல் போனது பற்றிய எந்த சலசலப்பும் வெகுவாக எழாமல் போனது.

ஆர்யன் தயாரானதும், அவனை நிறைவாய் பார்த்த சேகர், “என் மாப்பிள்ளை ராஜா தாண்டா.. உங்க அம்மா பார்த்தா கண்ணுல தண்ணி வந்திரும்..” அவனை ரசித்துக் கொண்டே, அவனது கழுத்தில் மாலை சூட்டி, அவனது தலையில் தலைப்பாகையைச் சூடி, அவனை மேலிருந்து கீழாக பார்த்து ரசித்து,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆரி.. இப்போ தான் மாப்பிள்ளை கலை வந்திருக்கு.. மனசுக்கு பிடிச்ச பொண்ணோட நிறைவா சந்தோஷமா வாழணும்..” என்று வாழ்த்தவும், ஆர்யன் சேகரை திகைப்புடன் பார்க்க,

“மாப்பிள்ளை.. உன்னை நானும் நேத்திக்கு மண்டபம் வந்ததுல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன்.. உன்னை எனக்குத் தெரியாதா?” சேகர் கேலி செய்யவும், ஆர்யன் அவனைப் பார்த்து விழிக்க,

அவனது தோளைத் தட்டியவன், “இப்படியே ஈன்னு இளிச்சுட்டு போய் மேடையில உட்காராதே.. மத்தவங்க எல்லாம் தப்பா எடுத்துக்கப் போறாங்க? அதோ அங்க உன் மச்சான் வரான். மேடைக்குப் போகலாம்.. உங்க வாழ்க்கை நல்லபடியா சந்தோஷமா இருக்கணும்ன்னு நல்லா சாமியை வேண்டிக்கிட்டு எல்லாமே செய்.. நீ அவளை நல்லா பார்த்துப்ப.. உன் அன்பால அவளையும் உன்னை விரும்ப வைப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும்..” என்ற சேகர், அவனது தோளைத் தட்டிக் கொடுக்க, தயாராகி அமர்ந்திருந்த ஆர்யனைப் பார்த்த திலீபனுக்கும் மனம் நிறைவாய் இருந்தது..

மேடையில் வந்து அமர்ந்த ஆர்யனைப் பார்த்த பார்த்திபனுக்கு என்ன இருந்தாலும் ஜீவிதா செய்த செயலை நினைத்து மனதில் வருத்தம் எழுந்தது.. இப்படி தனது மனதைப் பற்றி கொஞ்சம் கூட தங்களிடம் வெளிப்படுத்தாமல், தங்களை அனைவரின் முன்பும் தலைகுனிய வைத்து விட்டாளே என்ற எண்ணம் நெஞ்சத்தில் எழ, துக்கத்திலும் கோபத்திலும் குமைந்துக் கொண்டு வந்தது..   

வந்திருந்தவர்களை வரவேற்று இன்முகம் மாறாமல் உபசரித்தவர், ஆர்யன் மேடைக்கு வரவும், அடுத்த கட்ட நிகழ்வுகளுக்குத் தன்னை தயார் செய்துக் கொண்டு, ஒரு பெருமூச்சுடன் அமைதியாக மேடையின் அருகில் சென்றார்.. வந்திருக்கும் தங்கள் பக்கத்து உறவினர்கள், பெண் மாறியதற்காக கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள அந்த நேரத்தில் துணிவின்றி, மேடையில் நின்றிருந்த சேகரிடம் பேசுவது போல அவர் அருகில் நின்றுக் கொள்ள, அவரது நிலை உணர்ந்த சேகரும் அவருக்கு ஆறுதலாக பேச்சு கொடுத்துக் கொண்டு நின்றான்..

பிள்ளையார் பூஜையுடன் திருமணச் சடங்குகள் துவங்கி நடக்க, ‘பொண்ணைக் கூட்டிட்டு வாங்க’ என்று அய்யர் சொல்லவும், ஆர்யனின் மனதினில் ஒரு சிறு தடுமாற்றம்.. வெண்ணிலா இந்த திடீர் திருமணத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள், அவளது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணம் எழ, அவனது கண்கள் அவனது அனுமதியின்றியே, அவள் வரும் திசையை நோக்கித் திரும்பியது..

பூரணி அந்த அறையின் வாயிலிலேயே நின்றுக் கொள்ள, சுபத்ரா அவளை அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார். அழகிய பதுமையென தலைகுனிந்து அன்ன நடையிட்டு நடந்து வந்தவளைப் பார்த்தவனின் மனது துள்ளிக் குதித்தது..

அவனது பார்வை அவளை நோக்கித் திரும்பவும், அதைக் கண்டுக் கொண்டு, “என்னடா பொண்ணைப் பிடிச்சு இருக்கா?” என்று விஷ்ணுப்ரியா கேட்க, அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அய்யர் சொல்லும் மந்திரங்களை கவனமாக சொல்லத் துவங்கினான்..

வெண்ணிலா அவன் அருகில் அமரவும், அய்யர் சொல்வதை செய்வது போல அவளது முகத்தைப் பார்த்தான். அவளது முகம் அமைதியாக இருக்கவும், அது மட்டுமே இப்பொழுது போதுமானதாக இருக்க, அய்யர் சொல்லும் பூஜைகளை அவளுடன் சேர்ந்துச் செய்தான்..

அங்கு கூடி இருந்த பார்த்திபன், சுபத்ராவின் உறவினர்கள் சிலர், திகைப்புடன் பெண் மாறியதைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்ள, நாதஸ்வர சத்தத்தையும் மீறி, அங்கு சலசலப்புச் சத்தம் கேட்டது.. அவர்களுக்கு பதில் சொல்லும் நிலைமையில் நில்லாமல், சுபத்ரா, பார்த்திபன் இருவரும் வலியுறுத்தி பூரணி மறுக்க மறுக்க மேடைக்கு அருகில் நிற்க வைத்துவிட்டு, வெண்ணிலாவின் அருகில் இருவரும் நின்றனர்..

அய்யரின் காதில் பார்த்திபன் எதுவோ சொல்லவும், “முஹுர்த்தத்துக்கு நேரமாச்சு.. சீக்கிரம் மாங்கல்யத்தை எல்லார்கிட்டையும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க.. தம்பி நீ எல்லாருக்கும் பூ கொடுத்துட்டு வா.. ரொம்ப நேரம் பண்ணாதீங்க.. மணியாச்சு..” என்று சொல்லவும், அனைவரின் ஆசிர்வாததிற்காக விஷ்ணுப்ரியா திருமாங்கல்யத்தை தட்டில் வைத்து எடுத்துச் சென்று, யாரிடமும் பேசாமல், சிலர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லாமல், ஒரு புன்னகையில் சமாளித்து விரைவாக மேடைக்கு வர, அதே போலவே திலீபனும் அவளுடனேயே வேகமாக பூவைக் கொடுத்துவிட்டு, மேடைக்கு வந்து சேர்ந்தான்..

தங்கத்தால் ஆன தாலிக் கொடியில், கோர்த்திருந்த மஞ்சள் கயிறை,   அய்யர் ஆர்யனின் கையில் தர, அதை வாங்கிக் கொண்டவனின் மனதினில் ஒரு இனிமை.. ஜீவிதாவை திருமணம் செய்துக் கொள்ள இருந்த தயக்கத்தில் கடுகளவு கூட இப்பொழுது இல்லாமல், மனதினில் மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருக்க, வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்தான்.

அவனது கையில் திருமாங்கல்யம் தரப்படவும், சுபத்ரா குனிந்து அவளது காதில் எதுவோ சொல்லவும், கரம் குவித்தபடி, ஆர்யன் சூடப் போகும் மாங்கல்யத்தை சூடுவதற்காக தலை குனிய, அவளைப் பார்த்துக் கொண்டே, அவளது கழுத்தின் அருகே எடுத்துச் சென்றவன், முதல் இரண்டு முடிச்சைப் போட, விஷ்ணுப்ரியா மகிழ்ச்சியுடன் மீதம் இருந்த முடிச்சைப் போட்டு, சுபத்ராவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அனைவரின் ஆசிர்வாதங்களைத் தாங்கிய பூக்களும் அட்சதைகளும் இருவரின் மீதும் விழ, திலீபன் தனது தங்கையின் தலையை மகிழ்ச்சியுடன் வருடி, “ஹாப்பி மேரீட் லைஃப் மாமா..” என்று ஆர்யனிடம் வாழ்த்தவும், ஆர்யன் அவனைப் பார்த்து புன்னகைக்க, தனது கையில் இருந்த பூக்களை இருவரின் மீதும் தூவி, சேகர் அவனைக் கட்டிக் கொண்டான்..

பிருந்தா வெண்ணிலாவின் கன்னத்தைத் தொட்டு முத்தமிட்டு, “நல்லா இருங்க ராஜாத்தி..” அவளை வாழ்த்தி, கண்கள் கலங்க தனது மகனை ரசித்துப் பார்க்க, சுபத்ரா அவளது கன்னத்தில் முத்தமிட, பார்த்திபன் அவளது தலையை மென்மையாக வருடி,  பூக்களைத் தூவினர்..

வெண்ணிலா கண்கள் கலங்க கீழே நின்றுக் கொண்டிருந்த பூரணியைப் பார்க்க, அவளைப் பார்த்து புன்னகைத்து, அழக் கூடாது என்று தலையசைக்க, இருவரையும் பார்த்த சுபத்ரா கண்கலங்கினார்..

“ஆரி.. இதை வெண்ணிலா கழுத்துல போடு.. இந்த மோதிரத்தையும் போடுடா..” என்றபடி சேகரும் விஷ்ணுப்ரியாவும் ஒரு செயினையும், மோதிரத்தையும் தர, ஆர்யன் அதைப் பார்த்து சேகரைக் கேள்வியாகப் பார்க்க,

“உனக்கு வாங்கினது போல அதே டிசைன்ல ஜோடியா வாங்கினோம்டா.. நல்லா இருக்கா?” சேகர் கேட்கவும், ‘நல்லா இருக்கு..’ என்பது போல கண் காட்டியவன், வெண்ணிலாவின் கழுத்தில் அணிவித்து,

“கையைக் காட்டு” என்று சொல்லவும், தனது மருதாணியிட்டு சிவந்திருந்த கையை அவள் காட்ட, அதில் இருந்த இதய வடிவிலான டிசைனைப் பார்த்தவன்,

“மருதாணி அழகா இருக்கு..” என்றபடி, அவளது கையைப் மெல்லப் பிடித்து திருப்பி, விரலை பிடித்து மோதிரத்தை அணிவித்தவன், சேகரைப் பார்க்க, சேகர் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்..

“இந்தாங்க.. இந்த கோவில் பிரசாதத்தை நீங்களும் வச்சிக்கிட்டு அவங்க நெத்தியில வச்சி விடுங்க..” திருமணத்தை முன்னிட்டு பார்த்திபனின் வேண்டுகோளின் படி, குலதெய்வ கோவிலில் பூஜை செய்து, அவரது உறவினர் கொண்டு வந்திருந்த பிரசாதத்தை அவர் அய்யரிடம் தர, அதை ஆர்யனிடம் நீட்டி அய்யர் வெண்ணிலாவிற்கு வைத்து விடச் கூறினார்..

சுபத்ரா வெண்ணிலாவின் கழுத்தில் புது மஞ்சள் தாலியுடன் மின்னிக் கொண்டிருந்த அந்த தாலிக்கொடியைப் பார்த்து  மெல்லிய புன்னகை பூத்தது.. அன்று அவள் கழுத்தின் அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்தவர், பூரணியைப் பார்த்தார்..

திருமணக் கோலத்தில், கழுத்தில் மஞ்சள் கயிறு மின்ன, பட்டுப்புடவையில் அழகிய மங்கையாக அமர்ந்திருந்த தனது ஒற்றை மகளை பூரணி ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சுபத்ராவிற்கு அவரது மனநிலை புரிந்தது..

தனது நிலையைக் கருதி, வெண்ணிலாவின் அருகில் செல்லாமல்,  மேடையின் அருகே நின்றுக் கொண்டு கண்கள் கலங்க, தனது மகளை ரசித்துக் கொண்டிருந்த தனது தங்கையின் அருகே சென்றவர், அவரைக் கட்டிக் கொண்டு, கன்னத்தைத் தட்டிக் கொடுக்க, அந்த செய்கையே அவருக்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது..            

அய்யர் கொடுத்த பிரசாதத்தைத் தனது நெற்றியில் வைத்துக் கொண்டு அவளைப் பார்க்க, “அவங்க நெத்தியில இந்த குங்குமத்தை வைங்க..” அய்யர் ஆர்யனிடம் மீண்டும் சொல்லவும், அவர் நீட்டிய குங்குமத்தை எடுத்துக் கொண்டு, அவளது நெற்றி வகிட்டில் பொட்டிடுவதற்காக, அவளது தோளைச் சுற்றி கையை எடுத்துச் சென்றவன், அவளது உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.. அவளது நடுக்கம் புரிந்தார் போல, ஒரு கையால் அவளது தோளைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் அவளது நெற்றியில் குங்குமமிட, அவனது செயலில் திகைத்து அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவன், அவளது தோளை மெல்ல அழுத்தி விடுவித்து நேராக அமர, அவளது மனதின் நடுக்கம் குறைவதாய்..

‘ரெண்டு பேரும் எழுந்து, அக்னியை மூணு தடவ சுத்தி வந்து அம்மி மேல நின்னு மெட்டிய போடுங்கோ’ அய்யர் அடுத்ததைச் சொல்லவும், இருவரும் எழுந்துக் கொள்ள,

“நிலாக்குட்டி.. கையைத் தா..” என்ற பார்த்திபன் அவளது கையை எடுத்து, ஆர்யனின் கையில் வைக்க, ஆர்யன் அவளது கையைப் பிடித்துக் கொள்ளவும், அதில் தட்டிக் கொடுத்து,

“இப்படி கையை விடாம எப்பவுமே பிடிச்சிட்டு சுத்தணும் மாப்பிள்ளை..” என்று சொல்லவும், அவரைப் பார்த்த ஆர்யன், அவர் சொல்ல வருவது புரிந்து,

“சரிங்க மாமா..” என்று பதில் சொல்லவும், அவனை அணைத்துக் விடுவித்து,

“போங்க.. மாப்பிள்ளை.. சுத்திட்டு வாங்க” என்ற பார்த்திபனைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவன், வெண்ணிலாவின் கையைப் பிடித்துக் கொண்டே மூன்று முறை அக்னியை வளம் வந்தவன், அவளை அம்மியின் அருகே கூட்டிச் செல்ல,

“நிலாக்குட்டி காலை எடுத்து அம்மி மேல வைடா..” சுபத்ரா சொல்லவும், ஆர்யனைப் பார்த்தவள், தயக்கத்துடன் தனது காலை எடுத்து அம்மியின் மீது வைக்க, அவனது கையில் கொடுக்கப்பட்ட மெட்டியை, அவளது பாதத்தின் விரல்ளைப் பிடித்து, மெல்ல மாட்டியவன், நிமிர்ந்து அவளைப் பார்த்தான்..

இன்னமும் குனிந்த தலை நிமிராமல், அவன் போடும் மெட்டியையே  அவள் பார்த்துக் கொண்டிருக்க, பார்த்திபன், சுபத்ரா இருவரின்  முகத்தையும் பார்த்த சேகருக்கு மனதில் வலி எழுந்தது.. வெளியில் சிரித்துக் கொண்டே இருப்பது போல இருந்தாலும், பார்த்திபன், சுபத்ரா, பூரணியின் கண்கள் அடிக்கடி கசிந்ததையும், அது வெளி வருவதற்கு முன் அவர்கள் துடைத்துக் கொள்வதையும் பார்த்த சேகர், நிலைமையைத் தனது கையில் எடுத்துக் கொண்டார்..

“எல்லார்கிட்டயும் ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க.. மொய் வைக்க வரவங்க ஏதாவது கேட்டா நீ சமாளிச்சிக்கோ ஆரி.. என்ன புரியுதா?” சேகர் கேட்கவும்,

“சரி மாமா.. பார்த்துக்கறேன்..” ஆர்யனின் பதிலில், வெண்ணிலா அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..

அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவன், அவளது விரலைப் பிடித்து மெல்ல அழுத்தி, “யாராவது ஏதாவது கேட்டா நீ எதுவுமே பேச வேண்டாம்.. நான் பார்த்துக்கறேன் என்ன?” ஆர்யன் சொல்லவும், வெண்ணிலா மெல்ல தலையசைத்தாள்.. வெண்ணிலாவின் அருகில் திலீபன் நின்றுக் கொள்ள, ஆர்யனின் அருகில் சேகர் நின்றுக் கொண்டான்..

திருமணம் முடிந்ததும், பார்த்திபனும், சுபத்ராவும் அதற்கு மேல் தங்களைச் சமாளிக்க முடியாமல், அறைக்குள் நுழைந்துக் கொள்ள, சிலர் அறைக்கே வந்து அவர்களை துக்கம் விசாரித்து விட்டுச் சென்றனர்.. மேடையில் இருந்த ஆர்யனிடமோ, வெண்ணிலாவிடமோ யாரும் எதுவும் கேட்க முடியாதபடி, சேகர் பார்த்துக்கொள்ள, பரிசை வாங்கிக் கொண்டு, ஆசிர்வாதம் வாங்கி, போட்டோவிற்கு போஸ் தருவதோடு அந்த கட்டம் அவர்களுக்கு அமைதியாகக் கழிந்தது..        

“சீக்கிரம் டிபன் சாப்பிட போகலாம்.. நேரமாகுது.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் அடுத்து ரிசப்ஷன்க்கு ரெடி ஆக முடியும்.. அங்க டிபன் ரெடியா இருக்காம்..” சேகர் சொல்லவும், அவரைப் பார்த்த ஆர்யன், வெண்ணிலாவைப் பார்க்க, வெண்ணிலா தனது விரலைப் பிரித்துக் கோர்த்துக் கொண்டு நின்றிருந்தாள்..

“என்ன பேசாம நின்னுட்டு இருக்க? வெண்ணிலாவைக் கூட்டிக்கிட்டு சாப்பிட போ ஆரி.. திலீபா நீயும் என்ன நின்னுட்டு இருக்க? எல்லாரையும் சாப்பிட போகச் சொல்லு.. நேரமாகுது பாரு..” என்று சேகர் விரட்டவும்,

“கையில குச்சி ஒண்ணு தான் இல்ல மாமா.. மத்தபடி நல்லா ட்ராபிக் போலீஸ் வேலை பார்க்கறீங்க.. பேசாம ஊருல மில்லை விட்டுட்டு நீங்க போலீஸ் ஆகி இருக்கலாம்..” ஆர்யன் சொல்லவும், வெண்ணிலா அதைக் கேட்டு சேகரைப் பார்த்து கலுக்கென்று சிரிக்க, அவளைப் பார்த்தவன், 

“சாப்பிடப் போகலாமா? பசிக்குது..” வெண்ணிலாவிடம் கேட்கவும், அவள் திலீபனைப் பார்க்க,

“வாங்க போகலாம்.. அடுத்து நீங்க ரிசப்ஷன்க்கு ரெடி ஆகணும்ல..” என்று அவர்களை உண்ண அழைத்துச் சென்றான்.. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பெயருக்கு உணவை உண்டு முடிக்கவும், வெண்ணிலா திலீபனைப் பார்த்து,

“அண்ணா.. ரூமுக்கு போகலாமா? ரொம்ப நேரமா அம்மா பெரியம்மா எல்லாம் காணும்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று கேட்கவும், திலீபன் சங்கடமாக ஆர்யனைப் பார்த்துவிட்டு, அவளது கையைப் பிடித்து அழுத்தியவன்,

“மாமாக்கிட்ட போகவான்னு கேட்டுட்டு வா நிலா.. இனிமே இதெல்லாம் பழகிக்கோ என்ன?” ரகசியம் போலச் சொல்லவும், வெண்ணிலா தயக்கமாக ஆர்யனைப் பார்க்க,

அவளது நிலையைப் புரிந்தவன் போல, “போ வெண்ணிலா.. அம்மா கூடவும் பெரியம்மா கூடவும் இரு..” என்று சொல்லவும், திலீபனின் கையைப் பிடித்துக் கொண்டவள், வேகமாக அறைக்குச் செல்ல, போகும் அவளையே ஆர்யன் பார்த்துக் கொண்டு நின்றான்..