அத்தியாயம் – 2
இரவு மணி ஒன்றை தாண்டி, அறையில் இருள் கவ்வி இருந்தது.
‘ஏன் பங்காரு என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறா?’ வம்சி தன் கோபம் குறைய சற்று திரும்பி படுத்தான்.
வயிற்றில் கை வைத்தபடி அவள் முகத்தை சுருக்கி கொண்டு படுத்திருந்தாள். அவள் முகத்தில் கண்ணீர் கோடுகள். மெதுவாக அவள் அவன் முகத்தை தீண்டினான். அவள் உறக்கத்தில் இருந்தாள்.
ஆங்காங்கே இருந்த கண்ணீர் திவலைகளை துடைத்தான். அவன் தீண்டலில் அவள் திரும்பி படுத்தாள். அவள் திரும்பும் பொழுது, அவள் சேலை விலகி அவள் கணுக்கால் கொலுசொலி எழுப்பி அவன் கவனத்தை ஈர்த்தது.
அருகே இருந்த போர்வையை எடுத்து மென்மையாக அவளை மூடினான். அவன் மென்மையாக செய்தாலும், அவன் செய்கையில் அவள் திரும்பி படுக்க, அவன் முகத்தில் கனிவு.
தன் மனைவியை ஆழமாக பார்த்தான். சுண்டினால் இரத்தம் வருமளவுக்கு சிவந்த மேனி. ‘அழகிருந்தால் குணம் இருக்காதுன்னு சொல்லுவாங்க. இவள் அப்படி இல்லை. அழகும், குணமும் ஒரு சேர பெற்றவள். . என் கிட்ட பொதுவா பொறுமையா தான் போவா’ அவன் தன் மனைவியை மெச்சிக் கொண்டான்.
‘மிருதுளா பெயருக்கேற்ற மென்மை குணம் கொண்டவள்.’ அவன் தூங்கி கொண்டிருந்த தன் மனைவியின் தலை கோதினான்.
‘எல்லாம் நல்லவ… எனக்கு உயிரான அக்காவை மட்டும் இவளுக்கு பிடிக்காது.’ அவன் முகம் இந்த எண்ணப்போக்கில் இறுகியது.
அவள் தூக்கத்தில் திரும்ப, அவள் படுத்த விதம் அவள் இடையழகை எடுத்து காட்டியது. அவன் கண்களில் ஆசை மின்ன அவன் கைகள் அவனையும் மீறி அவள் இடையழகை ரசிக்க விழைந்தது.
அவன் கைகள் அவளை உரிமையோடு தீண்ட அவள் இடையை நெருங்கியது. கணவனின் செய்கை அறியாமல் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள் மிருதுளா. அவள் இடையை தீண்டுமுன் அவன் சிந்தையில் ஆயிரமாயிரம் எண்ண ஓட்டங்கள்.
அவன் விரல் நடுங்கியது. அவள் கொடி இடைக்கும் அவன் கைகளுக்கும் காற்று புகும் இடைவெளி. அந்த இடைவெளியில், தன் சகோதரியின் நினைவு வர சட்டென்று தன் கைகளை அவளிடமிருந்து விலக்கி தன் மார்போடு கட்டிக் கொண்டான். அவன் உணர்ச்சிகளும் அவன் கட்டுக்குள் வந்திருந்தது.
எதுவும் பேசாமல் அவன் படுக்க எத்தனிக்க, அவள் வயிற்றை பிடித்தபடி புரண்டு படுத்தாள்.
இப்பொழுது அவன் பொறுமை இழந்து அவள் கைகளை அகற்ற, அவள் வயிற்று பகுதி சுருக்கத்தோடு அவள் பசியை பரிதாபமாக எடுத்து கூறியது.
அவள் பசியை கணக்கிட்டபடி அவளை மென்மையாக தடவினான்.
‘நைட் சாப்பிடலை… அம்மா, அப்பா இன்னைக்கு ஊருக்கு போறாங்கன்னு அவசரவேளையில் காலைலயும் சரியா சாப்பிட்டிருக்க மாட்டா. அவங்க போன வருத்தத்தில் மதியானமும் சாப்பிடல போல’ அவன் தன் மனைவிக்காக நொந்து கொண்டான்.
‘பசிச்சா சாப்பிட வேண்டியது தானே? எனக்காக என்ன காத்திருப்பு வேண்டி கிடக்கு?’ அவளை நிந்தித்தபடி மடமடவென்று சமையலறை நோக்கி சென்றான்.
அங்கிருந்த பிரட்டை எடுத்தான். வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், வெள்ளரிக்காய் என்று அனைத்தையும் மடமடவென்று வெட்டினான். இரண்டு பிரட்க்கு இடையில் காய்கறியோடு கொஞ்சம் மிளகு தூள், சால்டட் சீஸ் வைத்து சண்ட்விச் டோஸ்டரில் வைத்தான்.
‘ரொம்ப பசி போல. அது தான் என்கிட்டே கோபமா பேசிட்டா’ தன் மனைவிக்கு தன்னிடமே வக்காலத்து வாங்கி கொண்டான்.
அவள் எண்ணத்திற்கு இடையில் பாலை காய்ச்சி, கொஞ்சம் பாதம்பொடி கலந்து அவளுக்கு அளவான இனிப்பு தான் பிடிக்கும் என்று கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து அதையும் தயார் செய்தான்.
கையில் பாலோடும், ஒரு தட்டில் சூடான சீஸ் வெஜ் சண்ட்விச்சோடும் அவர்கள் அறைக்குள் நுழைந்தான் வம்சி.
“பங்காரு …” அவன் அழைப்பில் அவள் பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.
“ஏய்! ரிலாக்ஸ்” அவன் கூற, அவள் தூக்கம் முழுதாக பறந்து போனது.
“சாப்பிடு” அவன் இன்முகமாக தட்டை நீட்ட, தூங்குமுன் நடந்த சண்டை முழுதும் அவளுக்கு நினைவு வர, “எனக்கு வேண்டாம்” அவள் படுத்து கொள்ள எத்தனிக்க, கையிலிருந்த பொருளை அருகே வைத்துவிட்டு, அவளை அழுத்தமாக பிடித்தான்.
அவன் பிடித்ததில், அவளுக்கு வலிக்க அவள் கைகளை வளைத்தாள்.
“சாப்பிடுன்னு சொல்றேனில்லை? சாப்பிடாம இருக்க வேண்டியது. அப்புறம் கோபத்தில் என் கிட்ட சண்டை போட வேண்டியது” அவள் முறுக்கி கொண்டதில் அவனுக்கு மீண்டும் கோபமேறியது.
“அப்ப நான் சண்டை போடாம இருக்கத்தான் இதெல்லாம் கொடுக்கறீங்களா?” அவள் அப்பாவியாக கேட்க, அவன் புன்னகையோடு அவள் முன்னே அமர்ந்து கொண்டான்.
“சாப்பிடு பங்காரு. நீ பசியால் புரண்டு புரண்டு படுத்த. உனக்காக நானே செஞ்சி கொண்டு வந்தேன்.” அவன் அவள் முன் தட்டை நீட்ட, சூடான சண்ட்விச் மணமாகவும் இருக்க மடமடவென்று அதை சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் பசி கொஞ்சம் அடங்கியதும், “உங்களுக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா?” கேள்வியாக கேட்டுக்கொண்டே மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவன் இதுவே தன்னை விளக்க நேரம் என்பது போல் பேச ஆரம்பித்தான்.
“நான் பிறந்தது என்னவோ தென்தமிழகத்தில் தான். எனக்கும் அக்காவுக்கும் கிட்டத்தட்ட பத்து வயதுக்கு மேல வித்தியாசம். நான் சின்னதா இருக்கும் பொழுதே அம்மா, அப்பா தவறிட்டாங்க” அவன் கூற, ‘இதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிந்த விஷயம் தானே? இதை ஏன் இப்ப சொல்றாங்க?’ என்பது போல் பார்த்தாள்.
“அக்கா தான் என்னை வளர்த்தாங்க. சொந்தக்காரங்க எல்லாம் அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க. அத்தான் ஊரு இங்க ஆந்திரா பார்டர். அக்கா, என்னை அங்க தனியா விடாம இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. நான் இங்க தான் பாவா, பங்காரு, தள்ளி , செல்லின்னு கேட்டே வளர்ந்தேன்.” பாவா என்னும் சொல்லும் பொழுது மட்டும், அவன் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று.
“என்னை வளர்த்தது அக்கா தான். என்னை படிக்க வச்சது அக்கா தான். அப்புறம்…” அவள் சாப்பிட்டு முடித்திருக்கவே அவன் நிறுத்திவிட்டான்.
பாலை எடுத்து அவளிடம் நீட்டினான். “சாரி…” என்றான் பொத்தம் பொதுவாக.
பாலை மடமடவென்று குடித்தாள் மிருதுளா. ‘இவங்க அக்கா புராணத்தை கேட்க நான் சாப்பிடாமலே இருந்திருக்கலாம்’ அவள் சமையலறை நோக்கி செல்ல, மேலும் விளக்கம் கொடுக்க அவனுக்கும் விருப்பம் இல்லாமல் போக, அவன் படுத்துவிட்டான்.
அவன் உணவு கொடுத்ததில் மட்டுப்பட்டிருந்த அவள் கோபம் அவனின் அக்கா என்ற பேச்சில் மீண்டும் உச்சாணி கொம்பில் ஏறி அமர்ந்து கொண்டது. எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில்.
மிருதுளா வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். ‘படிச்சிட்டு சும்மா இருக்கேன். ஏதாவது வேலைக்கு போகணும்’ அவள் எண்ணம் இப்படித்தான் ஓட ஆரம்பித்தது.
‘வீட்டு சண்டையாவது குறையும்’ அவள் எண்ணிக்கொண்டிருக்க, அங்கு வந்தான் வம்சி.
அவன் அலைபேசியில் ஊரில் இருக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லிக் கொண்டிருந்தான். சிலருக்கு அவனால் இயன்ற உதவியை செய்து தருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.
‘ஊருக்கெல்லாம் நல்லவர் தான்’ அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
“பங்காருக்கு இன்னும் கோபமா?” அவள் முன் அமர்ந்து சீட்டியடித்தபடி கேட்டான் வம்சி.
“அதெல்லாம் இல்லை” அவள் பதில் வெடுக்கென்றே வந்தது.
அவன் அவள் முன் வந்து நின்றான். அவள் கன்னத்தை மென்மையாக தடவி கொடுத்தான். அவள் விலகி கொண்டாள்.
“பங்காரு…” அவன் அழைக்க, “நீங்க எதுமே கூப்பிடாம இருந்தா ரொம்ப நல்லாருக்கும்” அவள் தள்ளி நின்று கொண்டாள்.
“நீ என்னை பாவான்னு கூப்பிடு” அவன் அவள் முன் நின்று அவள் கன்னத்தை பற்றி அழுத்தமாக கூற, அவளிடம் மௌனம்.
‘அழுத்தக்காரி…’ அவன் எண்ணவோட்டம் கணக்கிட்டு கொண்டது.
“எங்கையாவது வெளியூருக்கு போவோமா?” அவன் கேட்க, அவள் கண்களில் ஆயிரம் மின்னல்.
‘ஹனிமூனா?’ கேட்க துடித்த நாக்கை அடக்கி கொண்டாள் மிருதுளா.
‘இதை கேட்க உள்ளதும் போச்சுன்னு ஆகிட கூடாது. இந்த ஊரில் இருந்து வெளியே போனால் போதும். கொஞ்சம் நாளைக்கு நானும்… நானும்… பாவாவும்…’ அவன் அழைக்க சொல்லும் அழைப்பை மனதோடு அழைத்துக் கொண்டாள் அவள்.
“எங்க போறோம்?” கண்களில் ஆசை மின்ன அவன் அருகே வந்து அமர்ந்தாள் மிருதுளா.
“மூணார் போலாமா?” அவன் கேட்க, “ம்… நான் பார்த்ததில்லை ” அவள் சந்தோஷமாக தலை அசைத்தாள்.
‘ஒரு மூன்று நாட்களாவது, நானு இவங்களும் தனியா இருக்கனும். யாரின் குறுக்கீடும் இல்லாமல். நிறைய பேசணும்’ அவள் கற்பனை கோட்டை மடமடவென்று வளர, ‘வெளிய போனா இவ மாறும் வாய்ப்பு இருக்கு’ அவன் எண்ணிக்கொண்டான்.
இவர்கள் இருவரும் எங்கே செல்லலாம் எப்படி செல்லலாம் என்று திட்டமிட, “மாமா…” என்ற அழைப்போடு அங்கு வந்தாள் பதின்பருவத்து சிறுமி.
மிருதுளாவின் கண்கள் மிரண்டது.
“அடடே வா சிந்து. தனியாவா வந்த? அக்கா எங்க?” அவன் கேட்க, “தனியா வரலை மாமா. அம்மா தான் விட்டுட்டு போனாங்க. அம்மாவும், அப்பாவும் எங்கையோ வெளிய போறாங்க” கூறிக்கொண்டே அமர, மிருதுளா அவன் அக்கா மகளை யோசனையாக பார்த்தாள்.
“என்ன பார்த்திட்டு இருக்கீங்க? அவர்கள் முன் இருந்த மடிக்கணினியை பார்த்து அவள் கேட்க, மூணார் போகலாமுன்னு யோசிச்சோம் அது தான் பார்த்திட்டு இருக்கோம் சிந்து” என்று கூறினான் வம்சி.
“மாமா, எனக்கும் லீவு தான். நாம போகலாம் மாமா” சிந்துஜா கூற, மிருதுளா அவர்கள் இருவரையும் பரிதாபமாக பார்த்தாள்.
‘இவங்க அக்கா ஒரு பிரச்சனைன்னா, இவ இரண்டாவது பிரச்சனை. பகல் முழுக்க மாமா மாமான்னு இவ இங்கையே இருப்பா. இல்லைனா, தம்பி, தம்பின்னு இவ அம்மா இவங்களை கூட்டி வச்சிப்பாங்க. அப்புறம் நான் எதுக்கு?’ அவள் அவர்களை கோபமாக பார்க்க,
“கண்டிப்பா போலாம். உங்க அம்மா கிட்டையும் கேட்போம். எல்லாரும் சேர்ந்தே போவோம்” அவன் கூற, ‘மிருதுளா… நல்லவேளை ஹனிமூனான்னு கேட்டு நீ அசிங்கப்படலை’ தன்னை தானே சோகத்திலும் மெச்சிக் கொண்டாள்.
அதன் பின் வம்சியின் பொழுது அவன் அக்கா மகளோடு சென்றுவிட்டது.
“சிந்துவுக்கு இது பிடிக்கும். சிந்துவுக்கு அது பிடிக்கும்.” என்று அவன் சொல்லுக்கு இணங்க ஓட ஆரம்பித்தாள் மிருதுளா.
சற்று நேரத்துக்கெல்லாம், அவன் தமக்கையிடமிருந்து அழைப்பு வந்தது.
“சிந்துவை கூட்டிட்டு வீட்டுக்கு வந்திட்டு போ வம்சி” என்று அவன் தமக்கையின் குரலில் அவன் தமக்கை வீட்டை நோக்கி ஓடினான்.
“ஊரு பிரச்சனை பார்க்க போவாங்க. இல்லை பிசினெஸ் விஷயமா போவாங்க, இல்லைனா அக்கா வீட்டுக்கு போய்டுவாங்க. அப்படியே வீட்டில் இருந்தாலும் இந்த பொண்ணு சிந்துஜா வந்திருவா. சின்ன பொண்ணு தான். என் கிட்ட நல்லா பழகுறா. ஆனால்… எல்லாரும் தள்ளி இருக்கும் பொழுது நல்லாருக்கும். இடைஞ்சலா இருக்கிறது தானே கடுப்பா இருக்கு” தனியே சத்தமாக புலம்பினாள் மிருதுளா.
“அம்மா… கூப்பிட்டிங்களா?” என்று வேலை செய்யும் பெண்மணி அவள் முன் நிற்க, ‘ஓ… சத்தமா புலம்ப ஆரம்பிச்சிட்டேனா? இந்த வீட்டில் தொடர்ந்து இருந்தால் எனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்’ எண்ணியபடி,
“அதெல்லாம் கூப்பிடலை. நீங்க உங்க வேலையை பாருங்க” கூறிவிட்டு அவள் முன் இருந்த மடிக்கணியை பார்க்க ஆரம்பித்தாள் மிருதுளா.
மடிக்கணினியை பார்த்த அவள் அதிர்ந்து போனாள். ‘ப்ரொவ்சிங் ஹிஸ்டரி’ அழிக்க பட்டிருந்தது. அதாவது இதற்கு முன் அந்த மடிக்கணியை உபயோகப்படுத்தியவர்கள் என்ன பார்த்தார்கள் என்று அடுத்தவர்கள் பார்க்க முடியாது.
‘இது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், இதை ஏன் செய்ய வேண்டும்? நான் தானே இந்த லேப்டாப்பை யூஸ் பண்ண போறேன்? வம்சி இதை எதுக்காக பண்ணனும்? ஒருவேளை சிந்து பண்ணிருப்பாளோ?’ மிருதுளாவின் மூளை வேகவேகமாக வேலை பார்த்தது.
‘சிந்து எய்த் படிக்கறா. இதெல்லாம் அவளுக்கும் தெரியும். அவ என்ன பார்த்திருப்பா நம்ம கிட்ட மறைக்குற அளவுக்கு? இல்லை இதை செய்தது வம்சியா?’ மிருதுளா சிந்தனையில் ஆழ்ந்தாள்.
இன்றும் அவன் இரவில் தாமதமாகத்தான் வந்தான். இன்று வேறு பிரச்சனைகள் மிருதுளாவின் தலையில் ஓடி கொண்டிருந்ததால், அவன் வந்த நேரத்தை ஒதுக்கிவிட்டு அவன் பின்னே சென்றாள்.
“ஏன் லேட்டா வந்தேன்னு சண்டை போட போறியா? வேலை…” அவன் பேச ஆரம்பிக்க, “நீங்க நம்ம லேப்டாப் பிரௌசிங் ஹிஸ்டரி டெலீட் பண்ணீங்களா?” கேள்வியாக அவன் முன் நின்றாள்.
“லூசா நீ? நான் ஏன் அதை பண்ண போறேன். உன் கிட்ட மறைச்சு பண்றதுக்கு எனக்கு எதுவும் இல்லை” அவள் கேள்வியின் கோணம் பிடிக்காமல், அவன் எரிந்து விழுந்தான்.
“அப்ப, சிந்து பண்ணிருப்பாளா? ஏன் பண்னினா?” அவள் அடுத்த கேள்வியோடு யோசனையாக நகர,
“ஏய்… உன் மனசில் நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?” அவன் கோபம் கொள்ள, அவன் கோபத்தின் காரணம் புரியாமல் அவள் அவனை பார்த்தாள்.
“ஒன்னு எங்க அக்காவை குறை சொல்லணும். இல்லை, அக்கா பொண்ணை குறை சொல்லணும். என்ன ஜென்மம் நீ எல்லாம்? ஒரு சின்ன பொண்ணை கூட உனக்கு எதிரியா தான் பார்ப்பியா?” அவன் எகிறினான்.
“இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க? நான் என்னன்னு சாதரணமா தானே கேட்டேன்.” அவள் கேட்க,
“தினமும் ராத்தரி நேரம் கழித்து நீ பிரச்சனை பண்ற” அவன் குற்றம் சாட்ட, “நீங்க அப்ப தானே வீட்டுக்கு வரீங்க. ம்… இல்லை, உங்க அக்கா அப்படி தான் உங்களை வர விடுறாங்க” அவள் குதர்க்கமாகவே முடித்தாள்.
“லூசு… லூசு… நான் அக்கா கிட்ட எங்க கூட மூணார் வாரீங்களான்னு கேட்டேன். என்ன சொன்னாங்க தெரியுமா? சின்ன சிறுசுக நீங்க தனியா போயிட்டு வாங்க. நாங்க எதுக்குன்னு சொன்னாங்க.” அவன் கூற்றில் அவளிடம் உண்மையில் ஆச்சரியம்.
“சிந்து ஆசைப்படுவா அவளை மட்டும் கூட்டிட்டு போய்ட்டு வாங்கன்னு சொன்னங்க தெரியுமா?” அவன் பெருமையாக கூற, அவள் அவனை அளவிடும் விதமாக பார்த்தாள்.
“எங்க அக்கா நல்ல மனசு உனக்கு புரியுதா. நாம தனியா போகணும். என்ஜாய் பண்ணனும்னு சொல்றாங்க” அவன் பேசிக்கொண்டே போக, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.
‘புது மணத்தம்பதிகள் முதல் முதலாக செல்லும் சுற்றுலா. ஹனிமூன் எல்லாம் இல்லை.’ தன் மனதை தேத்தி கொண்டாள் மிருதுளா.
‘இருந்தாலும் எங்களோடு அவர்கள் மகளை அனுப்புவார்களா?’ அவளுக்கு தலையே சுற்றியது.
‘இதை வம்சி வேற பெருமையா நியாயம் மாதிரி பேசுறான். இவன் என்ன லூசா, இல்லை அவர்களை தவறாக நினைக்கும் நான் லூசா? எனக்கு எல்லாமே தப்பாவே தெரியுதே’ அவள் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்.
“நல்லா யோசி. அப்பத்தான் உனக்கு எல்லாம் புரியும். நீ தனியாவே பிறந்து வளர்ந்ததால் உனக்கு பாசம் பத்தி ஒண்ணுமே தெரியலை” அவன் சிடுசிடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான்.
‘நான் ஒற்றையாய் பிறந்து வளர்ந்ததால், என்னால் இவர்கள் பாசத்தை புரிந்து கொள்ள முடியவில்லையா? அவங்க சரி, நான் தான் தப்பா? ஹனிமூனுக்கு அக்கா மகளை கூட்டிகிட்டு போகும் விசித்திரம் எல்லார் குடும்பத்திலும் நடக்குமா?’ யோசித்தபடி அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள் மிருதுளா.
மயங்கும்…