Mayanginen ponmaanile – 19

பொன்மானிலே _BG-688812e4

அத்தியாயம் – 19

வம்சி விமானத்தில் தன் அருகே அமர்ந்திருந்த மிருதுளாவை பார்த்துக் கொண்டிருந்தான். தன் மனைவியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் அவன் மனம் நிறைந்து போனது. ‘பங்காரு, அப்படி என்ன ஆசைப்பட்டுட்டா? பெருசா பணம், சேலை, நகைநட்டுன்னு அவ எதுமே கேட்கலையே. அவளுக்கு நான் வேண்டும். குழந்தை வேண்டும். ஒரு சராசரி ஆசை தானே? பங்காரு கொஞ்சம் பொசெசிவ்’ அடுக்கடுக்காய் அவன் எண்ணம் இப்படி தான் ஓடியது.

‘பொசெசிவ்ன்னு சொல்ல முடியாது. நான் அக்கா… அக்கான்னு சொல்றது எப்படியோ பங்காருக்கு பிடிக்காமல் போய்டுச்சு’ அவன் முகத்தில் புன்னகை. விமானப்பயணம். இருவருக்கும் இது முதல் விமான பயணம் இல்லை. இந்தியாவிற்குள் இருவரும் பயணம் செய்திருக்கிறார்கள். மிருதுளா ஓரிருமுறை  பயணம் செய்திருக்கிறாள். வம்சி  தொழில் நிமித்தமாக பல முறை நம் நாட்டிற்குள் பயணம் செய்திருக்கிறான்.

இருவரும் வெளிநாட்டிற்கெல்லாம் சென்றதில்லை. இதுவே முதல் முறை. தன் மனைவியோடு பயணம் செய்வது அவனுக்கு ஆனந்தமாக இருந்தது.

அவள் அருகே சாய்ந்து அமர்ந்தான் வம்சி. அவள் அவன் பக்கம் திரும்பினாள்.

“தேங்க்ஸ்…”அவள் குரல் சற்று மென்மையாக ஒலித்தது. அவள் குரல் தேனாய் இனிக்க, அவள் சுவாசமும், அருகாமையும் அவனை வருட, “எதுக்காக பங்காரு?” அவன் புருவம் உயர்த்தி சிரித்தான். அவன் கண்களில் அன்பு வழிய, அவள் வெட்க புன்னகையோடு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் அவள் தோள் மீது கைபோட்டு, தன் மார்போடு சேர்த்துக் கொள்ள, அவள் சரேலென்று விலக துடித்தாள். “பங்காரு…” அவன் குரல் இப்பொழுது உரிமையோடு, கட்டளையாக ஒலிக்க, “எல்லாரும் இருக்காங்க.” அவள் குரல் கீனமாக வேண்டுதல் போல் ஒலிக்க, அவன் அவர்கள் நெருக்கத்தை கொஞ்சம் குறைத்து கொண்டு அவளை தன் அருகாமையில் நிறுத்திக்கொண்டான்.

இனிமையான ரகசிய பேச்சுகளோடு அவர்கள் சிங்கப்பூர் நோக்கி பறந்தார்கள்.

***

அதே நேரம், பத்மப்ரியா மருத்துவமனையில், “தம்பி கிட்ட பேச முடியலையா?” கவலை தோய்ந்த குரலில் கேட்டாள். “பத்மா பயப்படாத. ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. உனக்கு பிரஷர் அதிகமாகிருச்சு. நீ எதையோ நினைச்சி ரொம்ப கவலை பட்டிருக்க” உதய் கூற, “எனக்கு வேற என்ன கவலை. தம்பி இவ்வளவு தூரம் போறானே? இப்ப இதெல்லாம் அவசியமான்னு தான்? அவன் பத்திரமா திரும்பி வரணுமுன்னு யோசிச்சேன். என் பக்கத்தில இருந்திருக்கலாம். இப்ப எதுக்கு இவ்வளவு தூரம் போகணும். அவனும் அவன் பொண்டாட்டியும் நம்ம கண் முன்னாடியே இருந்தா போதாதா?” அவள் கோபத்தில் படபடத்தாள்.

“பத்மா, நீ முதல்ல இப்படி டென்ஷன் ஆகாத. டென்ஷன் ஆனா, நம்ம குழந்தைக்கு தான் பாதிப்பு. நான் வம்சிக்கு ஃபோன் பண்ணிருக்கேன். அவன் அங்க போனதும் நமக்கு கூப்பிடுவான்” உதய் தன் மனைவியின் உடல்நிலையை மனதில் வைத்து நிதானமாக பேசினான். “அதெல்லாம் என்கிட்டே பேச வேண்டாம்” பத்மா கோபத்தில் பட்டென்று கூறினாள்.

“தம்பி கூப்பிட்டா, நீங்களும் எடுக்காதீங்க. அவன் பிளைட் கிளம்பறதுக்கு முன்னாடி எனக்கு கூப்பிட்டு பேசிருக்கணுமா இல்லையா? எப்பப்பாரு பொண்டாட்டி நினைப்பு தான் அவனுக்கு” இப்பொழுது பத்மப்ரியா குரலில் கொஞ்சம் பொறாமை எட்டி பார்த்தது. உதய் சிரித்து கொண்டான்.

உதய், தன் மனைவியின் மீதும், தன் குடும்பம் மேலும் பாசம் கொண்டவன். திருமணமான புதிதில் பதம்ப்ரியாவை ஆட்டி வைக்க எண்ணி, வம்சியிடம் செல்லுபடியாகாமல் எல்லா சராசரி கணவனை போல் தன் குணத்தை மாற்றிக் கொண்டவன். தன் தொழில், குடும்பம் இவற்றில் கொஞ்சம் சுயநலம் கொண்டவன். ஆனால், சராசரி குணங்களை கொண்ட நல்லவன் தான்!  அவன் தாயும் இவனை போலத்தான். இல்லை, இவன் தாயை போல் இவன் என்று தான் சொல்ல வேண்டுமோ?

 இப்பொழுது இருவரும் பத்மப்ரியாவை தாங்கத்தான் செய்கிறார்கள். இத்தனை வருடங்களில் அவள் அழகாக தன் குடும்பத்தை தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டாள் என்றும் சொல்லலாம். ஆனால், பத்மப்ரியாவின் பலம் அவன் தம்பி என்பதே அவள் நம்பிக்கை. அதை அறிந்தும், அவள் குடும்பத்தில் யாரும் அதை மாற்ற விரும்புவதில்லை. தம்பியால் இடைஞ்சல் என்றால் மாற்ற முயற்சி செய்திருப்பார்கள். அவனால் லாபம் இருக்கும் பொழுது பத்மப்ரியாவின் குடும்பமும் அதை அவர்களுக்கு சாதகமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

சில மணித்துளிகளில் வம்சியின் அழைப்பு வர, பத்மப்ரியாவின் இதயம் துடித்தது. உதய் எதுவும் பேசவில்லை, தன் மனைவியின் அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான். “நான் பேசலை” பத்மப்ரியா முறுக்கிக் கொண்டாள். ‘தம்பி பத்திரமா போயிருப்பானா?’ அவளுள் மெல்லிய பதட்டம் சூழத்தான் செய்தது.

அந்த அலைபேசி அழைப்பு முடிந்ததும், ‘நாங்கள் இருவரும் சிங்கப்பூர் வந்துவிட்டோம்’ என்ற  குறுஞ்செய்தி வர, பத்மப்ரியா முகத்தில் மலர்ச்சி. “நான் தம்பி கிட்ட இப்ப பேசலை. பேசினா அவனை திட்டிருவேன்” பத்மப்ரியா மெத்தையில் படுத்துகொண்டாள்.

“அது தான் வம்சி கிட்ட இருந்து மெசேஜ் வந்திருச்சில்லை? நீ உடம்பை அலட்டிக்காம படு. உன் தம்பி ஐந்து நாளில் வந்திருவான்” உதய் கூற, பத்மப்ரியா படுத்துக் கொண்டாள். 

***

வம்சி தன் அலைபேசியை பார்த்தபடி யோசனையாக நின்று கொண்டிருந்தான்.

‘அக்கா, மெசேஜ் பார்த்திருக்காங்க. ஆனால், ஃபோன் எடுக்கலை. பெரிய பிரச்சனை எதுவுமில்லை. ஆனால்…’ அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“என்ன ஆச்சு?” அவன் முன் சிரித்த முகமாக நின்றாள் மிருதுளா.

‘ஒண்ணுமில்லை’ அவன் தன் முகத்தை இருபக்கமும் அசைக்க, “உங்க அக்கா ஃபோன் எடுக்கலையா?” அவள் கண்கள் சுருங்கியது.

“…” அவனிடம் பதில் இல்லாமல் போக, ‘நாம இப்படி வந்ததையே  அவங்களால் ஏத்துக்க முடிஞ்சிருக்காது’ மிருதுளா அவனை கூர்மையாக பார்த்தாள். அவன் தன் தமக்கையின் எண்ணத்தை ஒதுக்கி சிரிக்க, “பாஸ், உங்க அக்காவே உங்களுக்கு தனிமை கொடுக்கணும் நினைச்சாலும் நீங்க விட மாட்டீங்க போல?” அவள் வம்பிழுத்து சிரிக்க, அவன் அவளை கைகளில் அலேக்காக தூக்கினான்.

“ஐயோ… என்ன பண்றீங்க?” அவள் அவன் தோளில் கைகளை வாகாக கோர்த்து கொண்டு சிணுங்க, “தனிமையை பயன்படுத்தலாம்னு யோசிக்கிறேன் பங்காரு” அவன் குரல் அவளிடம் ரகசியம் பேசியது.

“ஏன் இத்தனை நாள் உங்களுக்கு இந்த தனிமை கிடைக்கலையா?” அவன் அவள் கைப்பிடியில் மிக வாகாக சாய்ந்து கொண்டு அவள் இதழ்கள் அவன் முகத்தை உரச, கேள்வியை கேட்டாள். “ஏன் பங்காரு? எப்பவும் முடிஞ்சதையே தான் பேசுவியா?” அவளை மெத்தையில் இறக்கிவிட்டு, அவள் அருகே அவன் அமர, அவள் கண்கள் மெத்தையை அளவிட்டது.

“இந்த மெத்தை ரொம்ப நல்லாருக்குல்ல? நம்ம வீட்டுக்கு இந்த மாதிரி ஒன்னு வாங்குவோமா?” அவள் கேட்க, “உனக்கு இது தான் இப்ப தோணுதா?” அவன் அவள் முன் அமர்ந்தபடி கேட்க, அவள் முகத்தில் நமட்டு புன்னகை வந்தமர்ந்தது. அவள் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். தன் கைகளை அவள் கழுத்தில் மாலையாக கோர்த்து, “இந்த ரூமை கிளீன் பண்ணனும்… மெத்தை கவர் மாத்தணும்… இப்படி…” அவள் இழுக்க, “ஆமா, அப்படியே நீயும் நானும் ஒவ்வொரு ரூமா போய் ரூம் சர்வீஸ் பண்ணுவோம்” வம்சி கடுப்பாக கூறினான். “கரெக்ட்… அது தான் நானும் நினச்சேன்” அவள் அவன் கன்னத்தை பிடித்து இழுத்து செல்லம் கொஞ்சி கூற, அவன் அவளை முறைத்து பார்த்தான்.

அவன் தலையில் முட்டி, “பின்ன, நீங்க சிங்கப்பூரை சுத்தி காட்டாம, இந்த ரூமுக்குள் இருந்தா நான் என்ன சொல்றது?” அவள் உதட்டை பிதுக்க, அவன் அவள் இதழுக்கு பரிசு கொடுத்து புன்னகையோடு விலகினான்.  “கிளம்பு… கிளம்பு…” அவர்கள் அதன்பின் சிங்கப்பூரை சுற்றி பார்க்க கிளம்பினார்கள்.

மறுநாள் செல்ல வேண்டிய இடத்திற்கு தேவையானவற்றை தெரிந்து கொள்ள, இருவரும் வெளியே நடக்க ஆரம்பித்தனர்.

அவன் அவளை இடையோடு சேர்த்து நடக்க, பல நாட்கள் கழித்து அவளும் அனைத்தையும் மறந்து அவனோடு நடந்தாள்.

“என்ன இது நம்ம ஊரு மாதிரியே இருக்கு?” அவள் ஆச்சரியப்பட, “பங்காரு, அதுக்கு தான் இந்த இடம் பெயர் லிட்டில் இந்தியா. நம்ம ஊரு மாதிரியே இருக்கும். இதே மாதிரி இங்க சைனா டவுணும் இருக்கு” அவன் கூற, “ம்…” அவள் அவனை பெருமையாக பார்த்தாள்.

“ஒரு இடத்துக்கு வரதுக்கு முன்னாடி எல்லாமே படிச்சிருவோம். அதுவும் என் பங்காருவை கூட்டிட்டு வரணுமுன்னா எவ்வளவு ரெடியா வந்திருப்பேன்” அவன் சட்டை காலரை உயர்த்திக்கொள்ள, “ரொம்பத்தான்… போன தடவை உங்க அக்கா பொண்ணுகிட்ட இப்படி தான் எல்லாம் சொன்னீங்க மூணார் பத்தி” அவள் மூக்கை சுருக்க, அவன் அவள் முன் நின்று அவளை முறைத்து பார்த்தான்.

அவள் உதட்டை மடித்து அவனை சீண்ட, “என்னை நக்கல் பண்ற?” அவன் அவள் காதை செல்லமாக திருகினான்.

“உங்களை நக்கல் பண்ணமா, நான் யாரை பண்றது?” அவள் அவனிடமிருந்து லாவகமாக விலகி, தன் உடலை அசைத்துக் கேட்டாள்.

இனிமையான கதைகள் பேசி, அவர்கள் இரவு அழகாக நகர்ந்தது.

மறுநாள் காலை.

 தன் தமக்கையிடம் பேச முயற்சி செய்தான். உதய் எடுத்து பேசிவிட்டு வைத்துவிட்டான். ‘அக்காவுக்கு என் மேல் எதுவும் கோபமோ?’ அவனுள் மெல்லிய குடைச்சல். ஆனால், அவன் வெளிக்காட்டவில்லை. வம்சி, மிருதுளா இருவரும் காலையிலேயே கிளம்பி சென்றனர். மிருதுளா, தன் கண்களை விரித்தபடி சாலையை ஆச்சரியமாக பார்த்தபடி நடந்தாள்.

“பயங்கர சுத்தமா இருக்குல்ல?” அவள் கேட்க, “சுத்தத்துக்கு பெயர் போன நாடும்மா” அவன் அவளுக்கு விளக்கினான். “ஓ…” அவள் கண்களை விரிக்க, “நானும் புத்தகத்தில் படிச்சிருக்கேன். நேரில் பார்க்க ரொம்ப நல்லாருக்கு” அவனும் அவளுக்கு ஒத்து ஊதினான். “பங்காரு…” அவன் அழைக்க, அவள் அவன் முகம் பார்த்தாள்.

“எப்பவும் மாதிரி சேலை, சுடிதார்னு இல்லாம இன்னைக்கு மாடர்ன் டிரஸ் போட்டிருக்க” அவன் கூற, “நல்லா இல்லையா?” அவள் தலை சரித்து கேட்க, “டாப்ஸ் அண்ட் ஷார்ட்ஸ், தூக்கி போட்டு பறந்துகிட்டு இருக்கிற உன் ஹேர்ஸ்டைல், பெரிய வளையம் மாதிரி உன் தோடு எல்லாம் ரொம்ப நல்லாருக்கு பங்காரு.” அவன் ஒவ்வொன்றையும் கவனித்ததிலும் அதை சிலாகித்ததிலும் அவள் முகத்தில் வெட்க புன்னகை.

“ரொம்ப அழகா இருக்க பங்காரு” அவள் அங்கவடிவங்களை ரசித்த படி அவன் கூற, “ரோட்டை பாருங்க… ரோட்டை பாருங்க” அவள் மனம் அவன் வருணனையை ரசித்தாலும், அவள் பெண்மை அவளை நாணம் கொள்ள செய்ய அவள் அவனை மிரட்டினாள்.

“ரோட்டை மட்டும் பார்க்கவா, அங்க இருந்து இங்க வரைக்கும் வந்திருக்கோம்?” அவன்  கண்சிமிட்டினான்.

சாலையில் அத்தனை வாகனங்கள் இல்லாமல் இருக்க அவனிடம் வெட்கம் கொண்டு சட்டென்று அதை கடக்க முயன்றாள் மிருதுளா.

“ஒய்… உங்க ஊரு ரோடுன்னு நினைச்சியா?” அவன் கைகளை அழுத்தமாக பிடித்தான்.

“ஜீப்ரா கிராஸிங் இருக்கிற இடத்தில தான் கிராஸ் பண்ணனும். இந்த சிக்னலை…” அவன் பேசிக்கொண்டே அவளை கைவளையத்திற்குள் நிறுத்தி கொண்டான். அதன் பின் அவளை அவன் கிஞ்சித்தும் நகர விடவில்லை. அவளை அருகே வைத்துக்கொள்ள அவனுக்கு சாக்கு. அவன் அருகாமையை அவளும் ரசித்து நின்றாள்.

“டிரைவர் இல்லாத ட்ரெயின்…” அவள் கண்களை விரிக்க, “இது மோனோ ரயில்… கேப்டன் இல்லாத மோனோ ரயில்…” சின்னதாக இருந்த தானியங்கி ரயிலை பற்றி பேசிக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.

“உங்க அக்கா பேசலையா?” அவள் கேட்க, அவன் மேலும் கீழும் தலையசைத்தான்.

“எதுவும் பிரச்சனையா?” இப்பொழுது மிருதுளாவின் புருவம் வளைந்தது.

“பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. அப்பப்ப ஆன்லைன் காட்டுது.” அவன் முகத்தில் வருத்தம் இருக்க, “உங்க மேல எதுவும் கோபமா?” அவள் இப்பொழுது அவன் முகத்தை தன் பக்கம் திருப்பினாள்.

“என் மேல அக்காவுக்கு என்ன கோபம் வரப்போகுது? ஏதாவது வேலையா இருக்கும்” அவன் புன்னகைத்தான்.

‘ஒருவேளை, நாம கடைசியா வந்த மொபைல் அழைப்பை சொல்லவில்லையே? அதில் எதுவும் பிரச்சனை இருக்குமோ?’ அவள் இதயம் படபடக்க, அவள் தன் கண்களை சிமிட்டினாள்.

“பங்காரு, நோ ஃபீலிங்ஸ். நாம, கார்டன்ஸ் பை தி பெ, கிளவுட் ஃபாரஸ்ட், ஃபிளவர் டோம் போறோம். அங்க இருக்கிற அழகை ரசிக்கிறோம். அந்த இடம் பூ, செடின்னு அவ்வளவு அழகா இருக்குமாம். எல்லாரும் சொல்லிருக்காங்க. அப்புறம் லேசர் ஷோ. வண்ண வண்ண வெளிச்சத்தில் அந்த இடம் பார்க்கவே ரொம்ப பிரம்மாண்டமா இருக்குமாம்” அவன் கூற, அவளும் தலை அசைத்து கேட்டுக்கொண்டாள்.

அவன் விவரித்ததிற்கு சிறிதும் குறை இல்லாமல்  கார்ட்னஸ் பை தி பெ மிக அழகாக காட்சியளித்தது.

கார்டன்ஸ் பை தி பெ! உயரமாய் வடிவாய் இருந்த மரத்தை கண்டு அவள் வாயை பிளக்க, “பங்காரு…” என்ற அழைப்பில் அவள் இதழ் வடிவை அவன் ரசித்தான்.

கிளவுட் ஃபாரஸ்ட்! அழகான வடிவத்தில் அமைத்திருந்த இடத்தில் வானமும் இயற்கை அழகும் கொள்ளைகொள்ள, அவள் கண்களை விரித்து அதில் மயங்க, “பங்காரு…” என்ற அழைப்பில் அவள் விழியின் அசைவில் அவன் வீழ்ந்தான்.

லேசர் லைட் ஷோ! வண்ணவண்ண நிறத்தில் அந்த இடமே மின்ன, தேனிலவு தம்பதிகளாய் அவர்கள் காதல் அங்கு மின்னியது.

மெர்லயன்! சிங்கப்பூரின் அடையாளமாக நின்ற சிங்கத்தின் கம்பீரத்திக்கு தன் கணவனின் கம்பீரம் சிறிதும் குறைவில்லை என்று அவள் கண்கள் அவளை ஆசையாக தழுவியது.பல நாட்கள் கழித்து அவள் கண்களில் தெரிந்த காதலை அவன் கண்டுகொண்டான். அவன் முகத்தில் பெருமிதம் வந்தமர்ந்து. 

அவன் ஒற்றை புருவம் உயர்த்த, அவள் வேகமாக நடந்து வந்து அவன் மீது உரிமையாக சாய்ந்து கொண்டு அவனை அணைத்துக்கொள்ள, அவன் தன்னவளை தாங்கி கொண்டான்.

“பங்காரு…” அவன் அவள் முகம் உயர்த்தி, ஒரு செல்ஃபி எடுக்க, அவள் மனமாற்றம் அதில் அழகாக படமாக்கியது.

அவர்கள் மட்டுமே தனிமையில் ரசிக்க கூடிய பல புகைப்படங்கள் அவர்கள் அலைபேசிக்குள் புகுந்து கொண்டது. அத்தோடு, “பங்காரு” என்ற அழைப்பும்.

இருவரும் அவர்கள் தங்கி இருந்த நல்ல மனதோடு திரும்பினர். அறையின் வாசல் வரை சென்ற மிருதுளா “இதற்கு மேல் என்னால் நடக்க முடியவில்லை” சுவரில் சாய்ந்து நிற்க, “பங்காரு…” அவன் அவளை கைகளில் தூக்கினான்.

“ம்… இறக்கி விடுங்க” அவள் அவன் மார்பில் குத்த, “பங்காரு, ப்ளீஸ்…” அவன் குரல் கொஞ்சியது. அவள் அவனை கழுத்தோடு அணைத்துக்கொண்டாள். அவன் கன்னங்கள் அவளிடம் ஏதேதோ எதிர்பார்க்க, அவள் இதழ்கள் அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.

“பங்காரு…” அவன் குரலில் கிறக்கம். அவள் முகத்தில் மயக்கம். “பங்காரு…”அவன் குரலில் ஏக்கம். அவள் முகத்தில் வெட்கம். அவன் எதுவும் பேசவில்லை. “பங்காரு…” என்ற அழைப்பு மட்டுந்தான். “ம்…” அவன் கைகளில் துவண்ட அவள், அவன் அழைப்பில் துவண்டு போனாள். “பங்காரு… நான் உன்கிட்ட எதையோ கேட்க நினைக்குறேன்” கையிலிருந்த மனைவியிடம் அவன் கண்கள் யாசிக்க, “நீங்க எதுவுமே கேட்கலையே” அவள் இதழ்கள் அவனிடம் சிக்காமல் விலகி நின்றாலும், அவள் கண்கள் அவன் காதலில் சிக்குண்டு அபிநயம் ஆட, “பங்காரு…” என்ற அழைப்பே அந்த அறையில் நிறைந்து நின்றது.

அவன் அழைப்பின் வீரியமும், அவன் காதலின் வீரியமும் தாங்காமல், அவன் கைகளில் அவனுள் அவள் புதைந்து போக எத்தனிக்க, அலைபேசி ஒலித்தது. அவன் சட்டையிலிருந்து அவள் அலைபேசியை எடுக்க, “சைலென்ட்ல போடு பங்காரு” அவன் கூற, அவள் அலைபேசியை சைலென்ட்டிற்கு மாற்றினாள்.

“யாரு?முக்கியமான கால் இல்லைனா கட் பண்ணிடு பங்காரு” அவன் அசட்டையாக கூறினான். அலைபேசி அழைப்பு நின்றிருந்தது. சிந்து இரண்டு நாள் சம்பவத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தாள். பத்மப்ரியா மருத்துவமனை சென்றது முதல், வீடு திரும்பியது வரை. மிருதுளா அனைத்தையும் நொடிப்பொழுதில் படித்துவிட்டாள்.

“முக்கியமான விஷயமா பங்காரு? முக்கியம் இல்லைனா அப்புறம் பேசிக்கலாம்” வம்சி இயல்பாக பேசினான். ‘நான் அன்னைக்கு கால் வந்ததை சொல்லலை. அங்கு ஆரம்பித்திருக்கிறது’ மிருதுளா சட்டென்று கணித்துக் கொண்டாள். ‘இப்ப சொன்னா சண்டை தான். எப்ப சொன்னாலும் சண்டை தான்.’ அவள் அவனை பார்த்தாள்.

‘கண்முன்னே காதல் கொண்ட கணவன். ஆனால், தமக்கை என்ற சொல்லுக்கு முன் இவன் யார்?’ அவள் அவனை ஆழமாக பார்த்தாள். ‘இப்ப விஷயம் தெரிந்தால், இந்த நொடி கூட எனக்கு சொந்தம் கிடையாது’ ஆசை கொண்ட அவள் மனம், சற்று ஏக்கமாக அவனை பார்த்தது. “என்னாச்சு பங்காரு? முக்கியமான அழைப்பா?” அவன் கேட்க, அவள் முகத்தில் விரக்தி புன்னகை.

‘ஒண்ணுமில்லை. முக்கியம் இல்லைனு சொன்னால் என்ன? அது தான் எல்லாம் சரியாகிருச்சே. இந்த நொடிகள் கூட வம்சி எனக்கானவர் இல்லையா?’ காதல் மனைவியாய் அவள் எண்ணம் ஒரு பக்கம் உரிமை கொண்டாட, ‘எத்தனை நாள் நான் இப்படி உரிமை போராட்டம் நடத்துவது’ குழந்தையை பறிகொடுத்த தாயாய் அவள் மனம் ஒரு பக்கம் தவிக்க, அவள் இருதலைக்கொள்ளி எறும்பானாள்.

வம்சியின் விழிகளோ, அவள் பதிலுக்காக காத்து நின்றன.

மிருதுளா யார் என்று சொல்வாளா? சொன்னால், வம்சி எப்படி எதிர்கொள்வான்?

மயங்கும்…