மயங்கினேன் பொன்மானிலே -11

பொன்மானிலே _BG-b28c8239
மயங்கினேன் பொன்மானிலே

அத்தியாயம் – 11

மிருதுளா பல் துலக்கிவிட்டு முகத்தை கழுவி அந்த பிங்க் நிற துண்டை தன் கன்னத்திற்கு அண்டை கொடுத்து சோபாவின் கைப்பிடி ஓரத்தில் சாய்ந்து அமர்ந்தவாறே தீவிர சிந்தனையில் இருந்தாள்.

‘நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?’ அவள் முகத்தில் கவலையின் ரேகைகள்.

‘வம்சி தான் செய்தது தவறு என்று உணர்ந்து, எனக்கு விவாகரத்து கொடுப்பானா? என் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்குமா? என் பொறுமை அதுவரை தாங்குமா?’ கவலையை ஒதுக்கி தீவிரமாக சிந்தித்தாள் மிருதுளா.

அவளை சோர்வு ஆட்கொள்ள, ‘இல்லை, நான் சோர்வடைய கூடாது. இந்த நாட்டில் மட்டுமில்லை, பல நாடுகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் இது. பெண்களுக்கான மற்ற பிரச்சனைகள் வெளியே தெரிகிறது. ஆனால், குடும்ப பிரச்சனை வெளியே தெரிவதில்லை. அதற்காக நான் அடங்கி போக வேண்டுமா?’ அவள் மறுப்பாக தலை அசைத்துக் கொண்டாள்.

அவள் எண்ண ஓட்டத்தை தடை செய்பவன் போல், “பங்காரு…” அழைப்பினோடு அவள் அருகே வந்து அமர்ந்தான் வம்சி.

“ம்…” அவள் ஒற்றை வார்த்தையோடு, அவன் பக்கம் திரும்ப அவள் முகத்தில் வருத்தம் தெரிய, அவனுக்கும் அவளுக்கமான இடைவெளியை அவன் குறைத்துக் கொண்டான்.

அவள் சோபாவின் கைப்பிடியை ஒட்டி அமர்வது போல் இவர்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்தாள்.

அவள் அதிகரித்த இடைவெளியை அவன் மீண்டும் குறைக்க, மிருதுளா இன்னும் சோபாவின் கைப்பிடி அருகே செல்ல எத்தனிக்க, “இனி நீ சோபா கைப்பிடியை தாண்டி குதிக்க தான் செய்யணும் பங்காரு” அவன் அழுத்தமாக கூற ஆரம்பித்து புன்னகையோடு முடித்தான்.

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?” அவள் கடுகடுக்க, “நீ தான்…” என்றான் கண்சிமிட்டி.

அவன் பதிலுக்கு சிறிதும் அசராமல், “நானும் அதை தான் சொல்றேன். நானும் வரேன். உங்க அக்கா வீட்டுக்குன்னு.” அவள் கூற, “நான் சொன்ன நீ தானுக்கு… அர்த்தம் வேற…” என்றான் அவளை ரசனையாக பார்த்தபடி.

‘ம்…க்கும்… இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சலில்லை…’ அவள் முகத்தை திருப்பிக் கொள்ள,

“பங்காரு …” அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

“நீ இல்லாமல், பர்த்டே பார்ட்டிக்கு போக எனக்கு மனசு வரலை” அவன் கைகள் அவள் தாடையை பிடித்தபடி, அவன் குரல் குழைந்தது.

‘பீடிகையே பயங்கரமா இருக்கு. பூனைக்குட்டி வெளிய வரும்’ அவள் மௌனமாக பார்க்க, “ஆனால், அக்கா சொல்றது தான் சரி.” அவன் கூற, ‘அதானே பார்த்தேன்’, அவள் கண்கள் சுருங்கியது.

“யாராவது உன்னை ஹர்ட் பண்ற மாதிரி பேசிருவாங்களோன்னு அக்கா ரொம்ப பயப்படுறாங்க. எனக்கும் அது தான் சரின்னு தோணுது. உன்னை யாராவது காயப்படுத்தினால் என்னால் தாங்கவே முடியாது பங்காரு” அவன் குரல் உடைய எத்தனித்தது.

“அதனால், அக்கா சொல்ற மாதிரி நீ வர வேண்டாம். நான் மட்டும் போய், அக்காவை பார்த்துட்டு சட்டுனு வந்திடுறேன். சரியா பங்காரு? நீ சரின்னு சொல்லாமல் நான் போக மாட்டேன்” அவன் இவளிடம் அனுமதி கேட்டு நின்றான்.

‘என்ன பத்தி உங்க அக்காவுக்கு என்ன கவலை?’ மிருதுளாவின் சினம் ஏறியது.

‘வேண்டாம் மிருதுளா, சண்டை போடாத… போட்ட அதை சாக்கா வச்சே விட்டுட்டு போயிடுவான். யோசி… யோசி…’ அவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

“அக்கா சொன்னதுக்காக என்னை கூட்டிட்டு போகலையா? இல்லை, என்னை யாராவது ஏதாவது சொல்லிடுவாங்கன்னு கூட்டிட்டு போகலையா?” அவள் அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

“இது என்ன கேள்வி பங்காரு? ரெண்டும் ஒன்னு தானே உன்னை யாராவது ஏதாவது சொல்லிடுவாங்கனு தானே அக்கா வரவேண்டாமுன்னு சொன்னாங்க?” அவன் கேட்க,

“என்னை யாரவது ஏதாவது சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. அப்படி சொல்லுவாங்கன்னு எனக்கு பயமில்லை. நீங்க என் பக்கத்தில் இருக்கும் பொழுது என்னை ஒரு வார்த்தை சொல்ல யாருக்கு தைரியம் வரும். நீங்க யாராவது என்னை ஏதாவது சொன்னால், நீங்க சும்மா விட்டிருவீங்களா?” அவள் அவன் முகம் பார்த்து கேள்வியாக நிறுத்தினாள்.

அவள் வாதிட்ட முறை அவனை கவர்ந்தது.

அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி, “கிளம்பு…” அவன் கண்களாலும் புன்னகையோடு சமிங்கை காட்ட, அவள் துள்ளி குதித்து கிளம்பினாள்.

பல நாட்களுக்கு பின் தன் மனையாளிடம் தெரிந்த புத்துணர்ச்சியில் அவன் மயங்கி போனான்.

‘என்னையா வேண்டாமுன்னு சொல்லறீங்க. இனி நான் இல்லாமல், உங்க வீட்டில் ஒண்ணுமே நடக்காது’ அவள் மடமடவென்று கிளம்பினாள் வம்சியின் தமக்கை வீட்டிற்கு.

சேலையின் ஓரத்தில் வெண்முத்துக்கள் பதித்த அடர்ந்த பச்சை நிற இலையின் நிறத்தில் டிசைனர் சேலை அணிந்திருந்தாள் மிருதுளா. அதற்கு ஏதுவாக அவள் காதில், முத்து ஜிமிக்கி. அந்த ஜிமிக்கி அவள் வேகத்திற்கு ஏற்ப வேகவேகமாக ஆடியது.

மெலிதாக முத்து நெக்லஸ். அதை மாட்ட முடியாமல் கண்ணாடி முன் நின்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு பின் கண்ணாடிக்கு எதிர்ப்பக்காமாக சற்று ஒதுங்கி நின்று, அவள் பின்னழகையும், முன்னழகையும் ஒரு சேர ரசித்து கொண்டிருந்தான் அவள் கணவன்.

அவள் நெக்லஸ் மாட்டுவதற்கு தடுமாறவும், அவன் முகத்தில் மென்னகை தோன்றியது.

அழுத்தமான காலடிகளோடு அவள் அருகே வந்தான், “பங்காரு…” என்ற அழைப்போடு!

அவள் சட்டென்று கைகளை முன்னே இறக்க, பின் பக்கத்திலிருந்து அவளை சுற்றி வளைத்து, அவளிடமிருந்து அந்த முத்து நெக்லஸை வாங்கினான்.

“என்கிட்டே மாட்ட சொல்லி கேட்ககூடாதா பங்காரு?” அவன் நெக்லஸை அவள் கழுத்தருகே கொண்டு அவள் செவியோரமாக கிசுகிசுத்தான்.

 அவள் விலக எத்தனிக்க, அவன் இடது காலை அவள் செல்லும் வழியில் வைக்க, அவள் வேறு வழியின்றி கண்ணாடி முன்னே நின்று கொண்டாள்.

அவன் நெக்லஸை அணிவிக்கிறேன் பேர்வழி என்று அவன் விரல் தீண்டல்களும், இதழ் தீண்டல்களும் தொடர்ந்தன.

“நேரமாச்சு, உங்க அக்கா வீட்டுக்கு போகலாமா?” அவள் விலகல் தன்மையோடு கேட்க, அவன் அவளை இடையோடு அணைத்து அவன் தாடையை அவள் தோளில் பதித்து அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்து,

“பங்காரு…” அவன் காதலில் கசிந்துருகி அழைக்க, அவள் உடலில் மெல்லிய நடுக்கம்.

அவன் நின்ற நெருக்கத்தில், அவன் இதயத்துடிப்பை அவள் தேகம் உணர, அவன் ‘பங்காரு… பங்காரு…’ என்ற அழைப்பு அவள் செவிகளில் கேட்க, இரத்தமும் சதையும் உள்ள அவள் இளக ஆரம்பிக்க, அவள் வயிற்று பகுதியில் சுருக்கென்று வலி.

சட்டென்று அவள் உடல் இறுகியது.

அவள் அவனிடமிருந்து திமிறி விலக எத்தனிக்க, அவன் பிடி இறுகியது.

“எல்லாத்தையும் மறக்க கூடாதா பங்காரு? நீ, நான், என் அக்கா குடும்பமுன்னு சந்தோஷமா வாழ கூடாதா பங்காரு?” அவன் கேட்க,

‘இவன் மாறப் போவதே இல்லை. மாற்ற வேண்டியது என் கடமையும் இல்லை. விலகி செல்வது மட்டுமே என் வேலை’ என்ற எண்ணத்தோடு அவள் முகத்தில் ஓர் விரக்தி புன்னகை வந்தமர்ந்து.

“எல்லாரும் சந்தோஷமா வாழ, நாம இப்ப உங்க அக்கா வீட்டுக்கு போகணும்” என்றாள் அவள் கடுப்பாக.

“எஸ்… மை ஸ்வீட் பங்காரு” என்று அவள் கன்னம் தட்டி, அவளை அழைத்துச் சென்றான் வம்சி.

காரில் ஏறியதும், “அச்சச்சோ…” என்று தன் கண்களை விரித்தாள்.

“என்ன?” என்று அவன் கேட்க, “உங்க அக்காவுக்கு பணியாரம்?” அவள் அப்பாவியாக கண்களை விரிக்க, அவன் கையெடுத்து கும்பிட்டான்.

“உங்க அக்கா கேட்பாங்களே” அவள் கூற, “கேட்டா என் பொண்டாட்டிக்கு பணியாரம் செய்ய தெரியாதுன்னு சொல்லிக்குறேன்” அவன் கூற,

“எனக்கு பணியாரம் செய்ய தெரியாதா? அப்ப, நான் உங்களுக்கு கண்டிப்பா பணியாரம் செய்து தரணும்” என்று மிருதுளா இப்பொழுது கோபித்துக் கொண்டாள்.

“அம்மா, தாயே உனக்கு பணியாரம் செய்ய தெரியும். அதுக்காக உன் திறமை எல்லாம் இனி காட்ட வேண்டாம். நீ செய்த பணியாரத்தை நாம சாப்பிட்டு, நம்ம வீட்டில் வேலை செய்யறவங்களுக்கு கொடுத்து போதும் போதுமுன்னு ஆகிருச்சு.” அவன் நிறுத்த, அவள் சிரிப்பை அடக்கி கொண்டாள்.

“நீ பாட்டுக்கும் காலி பண்ணுங்க, இல்லை மறுநாளும் பணியாரம் தான் சொல்லிட்ட. சாயங்காலம் திரும்பவும் வேலை செய்றவங்க கிட்ட நான் பணியாரம் கொடுக்க, அவங்களே வாங்க மறுத்துட்டாங்க. மீதி இருந்தா, மறுநாளும் சாப்பிடணுமேன்னு நானே காலி பண்ணி… சாப்பிட்டது செரிக்க மறுநாள் வழக்கத்தை விட கூட ஒரு கிலோமீட்டர் ஜாக்கிங் போனேன்” அவன் சோகமாக கூற, அவள் சிரித்தாள்.

“பங்காரு நல்லா சிரி. வேலை செய்யாமல் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் பண்றது ஒரு வகைன்னா, வேலை செய்து பொருட்களை நிறைய தயாரித்து கம்பெனியை நஷ்டத்தில் கொண்டு போய் விடுறது ஒரு வகையான தொழிலாளர்களின் போராட்டம். நீ இரண்டாவது வகைன்னு எனக்கு தெரியும் பங்காரு…” கேலி போல் ஆரம்பித்து, அவன் அவள் கண்களை பார்த்து ஆழமான குரலில் முடித்தான்.

‘உன்னை நான் அறிவேன்…’ என்று அவன் குரலும், பார்வையும் கூற, அவள் சட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொண்டு சாலையை பார்த்தாள்.

‘நீ பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? நான் பேசுவது உனக்கு கேட்குமே’ என்பது போல் அவன் தொடர்ந்து பேசினான்.

“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் பங்காரு. உனக்கு என் மேல இப்ப கோபம் இருக்கலாம். ஆனால், நான் தப்பு பண்ணலை. முகம் தெரியா குழந்தையை விட என் அன்பு பெருசுன்னு நீ ஒரு நாள் புரிஞ்சிப்ப. அப்புறம், நமக்கும் ஒரு குழந்தை வரும். நான் உன் நலதுக்கு தான் பண்ணேன்னு நீயே சொல்லுவ பங்காரு” அவன் பேசிக் கொண்டே போக,

“இப்படி பேசிக்கிட்டே தான் இருக்க போறீங்கன்னா, நாம வீட்டுக்குள்ள போகலாம்.” அவள் பட்டென்று அவன் பேசுவதை கேட்க பிடிக்காமல் கூற, அவன் தன் காரை பத்மப்ரியா வீட்டை நோக்கி செலுத்தினான்.

வம்சியோடு கம்பீரமாக பத்மப்ரியா வீட்டிற்குள் நுழைந்தாள் மிருதுளா.

பத்மப்ரியாவின் கண்களில் யோசனை பரவியது. ‘இவள் நடையே கொஞ்சம் மாறி இருக்கிறது. கல்யாணமான புதுசில் அமைதியா இருப்பா. இங்க வரவே பயப்படுவா. இன்னைக்கு வரக்கூடாதுன்னு சொல்லியும் வந்திருக்கா. அத்தை எதுவும் சொல்லுவாங்களோ? ‘ யோசனையோடு தன் தம்பியையும், தம்பி மனைவியையும் வரவேற்றாள் பத்மப்ரியா.

மிருதுளாவை பார்த்ததும் சிந்துஜாவின் கண்கள் அச்சத்தை வெளிப்படுத்தின.

‘ஐயோ… அத்தை வர மாட்டாங்கன்னு நினைச்சனே? வந்தால்… என் ரூமுக்கேல்லாம் போனா ரொம்ப கேள்வி கேட்பாங்களே. மாமா பத்தி கவலை இல்லை. நம்மளை ஒன்னும் கேட்க மாட்டாங்க. அத்தை நம்மளை எப்பவும் சந்தேக கண்ணோடு தான் பார்ப்பாங்க.’ சிந்துஜா பயத்தோடு தன் அறைக்குள் நுழைந்து கொண்டு தன் அறையில் அனைத்தையும் அவசர அவசரமாக சரி செய்தாள்.

பத்ம ப்ரியாவிற்காக அங்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்திருந்தது.

அங்கு பூக்களால் அடுக்கப்பட்டிருந்த கேக்கை பார்த்ததும், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மிருதுளாவின் எண்ணங்கள் பின்னோக்கி சென்றன.

***

அன்று வம்சியின் பிறந்தநாள்.

காலையில் ஆர்வமாக முழித்திருந்தாள் மிருதுளா.

அவன் நெற்றியில் இதழ் பதித்து, “ஹாப்பி பர்த்டே” அவள் கூற, அவன் அவளை சுற்றி வளைத்து தன் மார்போடு சேர்த்துக்கொண்டு, “தேங்க்ஸ் பங்காரு…” என்றான்.

அவன் மார்பில் அவள் வாகாக சாய்ந்து படுக்க, அவன் அவள் முகத்தை நிமிர்த்தி, “பெருசா எந்த கிஃப்ட்டும் கிடையாதா பங்காரு?” அவன் கேட்க,

அவள் அவன் மீது இன்னும் உரிமையாய் சாய்ந்து கொண்டு முகம் நிமிர்த்தி அவனை பார்த்தாள்.

“என்ன பங்காரு இப்படி பார்க்குற?” அவன் கேட்க, “நிறைய இருக்கு. ஒன்னொன்னா தான் வெளிய வரும்.” அவள் கூறிக்கொண்டே படக்கென்று எழ, அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே சரிந்து விழுந்தாள்.

“ஒன்னொன்னா மெதுவா வரட்டும். எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால், இப்போதைக்கு நீ கொடுத்தது பத்தாது.” அவன் பிடி இறுக, “குளிச்சிட்டு வாங்க” அவள் கண்டிப்போடு கூற, அவன் விலகி சென்றான்.

அவனுக்கு அவள் சட்டையை பரிசளிக்க, அதை அணிந்து கொண்டவன், காலையில் விட்டதை வசூலித்துக் கொண்டு தான் விலகினான்.

‘அக்கா… அக்கா…’ என்று அவன் சொன்னாலும், அவன் காட்டும் அன்பில் அவள் நெகிழ்ந்து நின்றாள்

அவள் அவன் முன் “ஹாப்பி பர்த்டே…” என்று கேக்கை நீட்ட, “பங்காரு, நீயா செய்த?” அவன் கண்களை ஆச்சரியத்தில் விரித்தான்.

வெள்ளை நிறத்தில் ஹார்ட் வடிவ கேக். அதில் இரண்டு சிவப்பு ரோஜாக்கள்.

‘நம் இருவர் இதயமும் ஒன்று. அந்த சிவப்பு ரோஜாக்களில் ஒன்று அவன் அவளுக்கு ஊட்ட வேண்டும். மற்றொன்றை அவள் அவனுக்கு ஊட்ட வேண்டும்.’ என்ற கற்பனையோடு அவள் செய்திருந்த அந்த கேக்கை அவன் ரசித்து பார்க்க, அவள் முகத்தில் பெருமிதம்.

“ரொம்ப நல்லா பண்ணிருக்க பங்காரு” அவன் கூற, அவள் முகத்தில் வெட்க புன்னகை.

“கட் பண்ணுவோமா?” அவள் கேட்க, “அக்கா, சிந்து, மாமா எல்லாரும் வரட்டும். அக்கா என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வந்துருவாங்க” அவன் கூற,

“ஓ…” என்றாள் அவள் மெதுவாக

“என்ன?” அவன் வினவ, அவள் எதுவும் பேசவில்லை.

சில மணித்துளிகளில் அவன் அக்கா குடும்பம் வந்து இறங்கியது.

“கேக் கட்டிங்…” என்று சிந்து மாமாவோடு நின்று விட, பத்மப்ரியா மறுபக்கம் நின்று கொண்டாள்.

மிருதுளா சற்று ஒதுங்கி நின்று, அவர்களையும் தான் செய்த கேக்கையும் பரிதாபமாக பார்த்தாள்.

வம்சி அந்த கேக்கை வெட்ட, “மாமா, முதல் துண்டு உங்க அக்காவுக்கு கொடுக்க கூடாது. எனக்கு தான்” என்று சிந்து கூற, “சிந்து, என் தம்பி எனக்கு தான் கொடுப்பான்.” என்று பத்மப்ரியா சாவல் விட்டாள்.

‘இங்கு நான் யார்?’ என்று நடக்கும் காட்சியை பார்க்கும் எண்ணமில்லாமல் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் மிருதுளா.

“ரோஜா பூ எங்களுக்கு…” என்று அம்மாவும், பெண்ணும் ஆளுக்கு ஒரு ரோஜாவை எடுக்க, மிருதுளா இதயமே நொறுங்கி போனது.

நொறுங்கி போயிருந்த கேக்கை மன வலியோடு பார்த்தாள் அவள்.

தன் கணவனுக்கு கொடுக்க, தன் கணவனிடம் ஆசை ஆசையாக பெற்றுக் கொள்ள  ஆசை ஆசையாக அவள் செய்த ரோஜா பூ அவர்கள் தட்டில்  இதழ் இதழாக சிதறி கிடக்க, சிதறி போன தன் ஆசையை வருத்தத்தோடு பார்த்தாள் மிருதுளா.

‘மிருதுளா, இங்க வா…’ அவன் தட்டில் கேக் எடுக்க சொல்லி இப்பொழுது வம்சி அவளை கண்களால் அருகில் அழைக்க, ‘மிச்சமிருக்க கேக்கை நான் சாப்பிடணுமா?’ அவளுள் கோபம் கனன்றது.

‘எல்லாரும் வந்துட்டா நான் தள்ளி தான் நிற்கணும். இப்ப மட்டும் நான் எதுக்கு?’ “எனக்கு வேலை இருக்கு” என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவர்கள் சென்றதும், “ஏன் பங்காரு, நான் கூப்பிட்டு வரவே இல்லை?” அவன் ஏக்கமாக கேட்டான்.

“நான் உங்களுக்காக பார்த்து பார்த்து பண்ண கேக். அதை எனக்கு முதலில் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா? எனக்கு ஊட்டி விடணுமுன்னு தோணலையா?” அவள் கேட்க,

“கேக் ஒரு பிரச்சனையா பங்காரு? உனக்குன்னு புதுசா மொத்தமா வாங்கி தருவேன்” அவன் அவளை தன் பக்கம் இழுக்க,

“என்னை பார்த்து கேக் கேட்டு அலையுற தீனி பண்டாரம் மாதிரி இருக்கா?” அவள் சிடுசிடுக்க, “அப்ப என்ன பிரச்சனை பங்காரு?” அவன் புரியமால் கேட்டான்.

‘எப்பொழுது யாருக்கு கொடுத்தால் என்ன? நீ என் மனைவி இல்லை என்று ஆகிவிடுமா?’ என்பதே அவன் வாதமாக இருந்தது. அவள் அன்று அவனுக்கு விளக்க முயன்று தோற்றே போனாள்.

***

“பங்காரு” அவன் அழைப்பில் அவள் நனவுலகத்திற்கு வந்தாள்.

அங்கு, அவன் அக்காவின் குடும்பம் கேக் முன்னே நிற்க, “நீங்க உங்க அக்கா பக்கத்துல போகலையா?” அன்றைய நிகழ்வின் எண்ணத்தோடு கேட்டாள் மிருதுளா.

அவள் கண்கள் காட்டிய பாவனையில், அவன் புரிந்து கொண்டான் அவள் எண்ணப் போக்கை.

“பங்காரு…” அவன் மென்மையாக அழைக்க, “உங்க அக்கா, கேக் கட் பண்ணிட்டு, முதல் துண்டை அவங்க ஹஸ்பண்டுக்கு கொடுக்காம, சிந்துக்கு கொடுக்காம உங்களுக்கு கொடுப்பாங்களா?” அவள் கேட்க,

“என்ன பங்காரு, இது சின்ன பிள்ளைத்தனமா?” அவன் அவளை கண்டித்தான்.

“இது சின்ன பிள்ளைத்தனம் இல்லை. சின்ன விதத்தில் அவங்க காட்டுற முக்கியத்துவம். எது யார் குடும்பமுன்னு கூர்ந்து பார்த்தா புரியும்” அவள் கூற,

“உனக்கு அறிவே இல்லையா?” அவன் கடுப்பாக கேட்டான்.

“கேக் கட் பண்றதை வைத்து யார் முக்கியம் யார் முக்கியம் இல்லைனு சொல்ற அளவுக்கு நான் முட்டாள் இல்லை. ஆனால், சின்ன சின்ன விஷயமும் வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய கத்து கொடுக்குமுன்னு நான் சொல்றேன்.” அவள் கூற, அவன் பதில் பேசவில்லை.

“அவங்க குடும்பம் வேற. அங்க நிக்கறாங்களே, அது தான் அவங்க குடும்பம். அவங்க குடும்பத்திற்காக நீங்க உங்க குழந்தையை அழிசீங்களே அதை தான் நான் முட்டாள் தனமுன்னு சொல்றேன்.” அவள் கூற, அவன் பற்களை நறநறத்தான்.

“கேக் துண்டு கூட, உங்க அக்கா உங்களுக்கு முதலில் தரமாட்டாங்க. ஆனால், நீங்க குழந்தையையே…” அவள் பேச,

“நான் போனால், அக்கா எனக்கு தான் கொடுப்பா. ஆனால், மாமா வருத்தப்படுவாங்க” அவன் கூற,

“அப்ப, அன்னைக்கு நான் வருத்துப்பட்டிருப்பேனே… அன்னைக்கு ஒன்னும் புரியாத மாதிரி முழு கேக் வாங்கி தரேன்னு சொன்னீங்க. உங்க அக்கா ஹஸ்பண்டுக்கு முழு கேக் வாங்கி கொடுப்போம்” மிருதுளாவின் குரலில் பிடிவாதம்.

“கேக் விஷயத்தில் கூட உங்க அக்கா வீடு வருத்தப்பட கூடாது. ஆனால், பிள்ளை விஷயத்தில் கூட எனக்கு வருத்தம் வராது. நீங்க பண்ணது தான் சரி. அப்படித்தானே?” அவள் கேட்க,

“பங்காரு… நீ பிரச்சனை பண்ண தான் வந்தியா?” அவன் குரல் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக ஒலித்தாலும், கோபம் மிதமிஞ்சி இருந்தது.

பத்மப்ரியா கேக் வெட்ட எத்தனிக்க, “அண்ணி, உங்க தம்பி இல்லாம கேக் கட் பண்ண போறீங்களே? உங்க பக்கத்தில் உங்க தம்பி இருக்க வேண்டாமா?” அவள் இவனிடம் பேசி பயனில்லை என்று பத்மப்ரியாவிடம் கூற,

“தம்பி இல்லாமலா, வா… வா…. வா தம்பி…” என்று அழைத்து, வம்சியை அவள் அருகே நிறுத்திக் கொண்டாள் பத்மப்ரியா. இல்லை, வம்சியை அருகே நிறுத்தும் சூழ்நிலையை மிருதுளா உருவாக்கினாள் என்றும் சொல்லலாம்.

‘உங்க அக்கா உங்களுக்கு முதல் துண்டை கொடுக்கிறாங்களான்னு பார்ப்போம்’ என்று மிருதுளாவின் கண்கள் சவால் விட, ‘அக்கா கொடுப்பாங்க. ஆனால், மாமா என்ன நினைப்பாங்க? மாமாவை விட, அக்கா எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா நினைச்சிட்டா?’ அவள் பேசிய விதத்தில் அவனுள் மெல்லிய குழப்பம்.

வம்சி மிருதுளாவை யோசனையாக பார்த்தான்.

‘ஒரு சின்ன கேக் துண்டில் இத்தனை விஷயம் இருக்கிறதா?’ அவன் மிருதுளாவை யோசனையாக பார்த்தான்.

மிருதுளாவின் கண்கள் வம்சியை விடுத்து, பத்மப்ரியாவிடம் இருந்தது.

பத்மப்ரியா அந்த கேக்கை வெட்ட, ‘அட, வெட்டப்பட்ட்ட நம் மீது இத்தனை உரிமை போராட்டம் இருக்கிறதா? என்னால் கூட வாழ்க்கை பாடம் புகட்ட முடியுமா?’ என்று அந்த கேக் ‘நான் யாருக்கு?’ என்பது போல் இப்பொழுது சுற்றி நின்றவர்களை யோசனையாக பார்த்தது.

மயங்கும்…