மயங்கினேன் பொன்மானிலே – 13

பொன்மானிலே _BG-39d35389
மயங்கினேன் பொன்மானிலே

அத்தியாயம் – 13

மிருதுளா விருப்பட்டுட்டு வரவில்லை.  வீம்புக்கு என்று  தான் வந்தாள். ஆனால், இப்பொழுது அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை.

அனைவரும் சந்தோஷமாக சிரித்து சிரித்து குழந்தை பற்றி பேசுவது அவளுக்கு கடுப்பாக இருந்தது.

‘எனக்கு இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டும். இவர்களால் தானே நடக்காமல் போனது.’ என்ற கடுப்போடு, அவள் அங்கிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

அது சிந்துவின் அறை. அவள் அறை அத்தனை நேர்த்தியாக இல்லை.

‘என்ன பொண்ணு இவ? இப்படி குப்பை மாதிரி போட்டிருக்கா?’ என்ற எண்ணத்தோடு கண்களை சுழலவிட்டாள்.

அவள் மெத்தையில் அமர, அங்கு எதுவோ தட்டுப்பட, அவள் சரக்கென்று எழுந்தாள்.

அங்கு போர்வையே இருந்தது. போர்வையை தூக்கி பார்த்தாள் மிருதுளா. அங்கு ஓர் அலைபேசி இருக்க, ‘இதை ஏன் சிந்து இங்கு ஒளிச்சு வச்சிருக்கா?’ என்ற யோசனையோடு அதை கையிலெடுத்தாள் மிருதுளா.

அது ஓர் ஐஃபோன். லாக் ஆகி இருந்தது. ஆனால், பணி செய்யும்  நிலையில் இருக்க மடமடவென்று வெளியே வந்தாள்.

அங்கு சிந்து வேறொரு  ஐஃபோனை கையில் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருக்க, ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி மொபைல் உடைஞ்சிருச்சுனு சொன்னாலே… இவ எதுக்கு ரெண்டு ஃபோன் வச்சிருக்கா? அதுவும் ஐஃபோன்’ அவள் மீண்டும் சிந்துவின் அறைக்குள் செல்வதற்குள், சிந்து மிருதுளாவை பார்த்துவிட்டாள்.

சட்டென்று பதட்டத்தோடு, “அத்தை…” என்று அழைப்போடு உள்ளே சென்றவள், தன்  அலைபேசியை மறைத்துவிட்டாள்.

“எதுவும் வேணுமா அத்தை?” சிந்துஜா தன் பதட்டத்தை மறைத்து கேட்க, மிருதுளா சிந்துஜாவை கூர்மையாக பார்த்து மறுப்பாக தலை அசைத்தாள்.

“நீங்க ஏன் அத்தை இங்க உட்காந்திருக்கீங்க? வெளிய வாங்களேன்” சிந்துஜா தேனொழுக அழைக்க, “இல்லை, பரவாயில்லை. நான் இங்கயே இருக்கேன். எனக்கு தலை வலிக்குது” என்று மிருதுளா கூற, சிந்து யோசனையோடு அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல,

“சிந்து…” என்று அழைத்தாள் மிருதுளா.

“உன் பழைய மொபைல் உடைஞ்சிருச்சுனு சொல்லி தானே உங்க மாமா கிட்ட நீ புது மொபைல் வாங்கின?” மிருதுளா நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“ஆமா, அது பத்தி எல்லாம் நீங்க ஏன் கேட்கறீங்க. என் மாமா எனக்கு வாங்கி கொடுக்கறாங்க. உங்களுக்கு என்ன?” சிந்து படபடக்க, “நான் சாதாரணமா தானே கேட்டேன். நீ ஏன் சிந்து தப்பு பண்ண மாதிரி இவ்வளவு டென்ஷன் ஆகுற?” மிருதுளா இப்பொழுது சிந்துவின் அருகே வந்து கேட்டாள்.

“நான் ஏன் டென்ஷன் ஆகணும்? அதெல்லாம் இல்லையே” சாதாரணமாக கூறுவது போல் சிந்து தன் உடல் பாவனையை மாற்றிக் கொண்டாள்.

 “பொய் சொல்லாம உண்மையை சொல்லு. உன் பழைய மொபைல் நல்லா தானே இருக்கு?” மிருதுளா இப்பொழுது அழுத்தமாக கேட்டாள்.

“எங்க வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க. மாமாவுக்கு கல்யாணம் ஆகி அத்தை வந்துட்டா, மாமா எனக்கு வாங்கி தர்றது அத்தைக்கு பிடிக்காதுன்னு. அவங்க எல்லாரும் சொல்றது உண்மை தான். மாமாவுக்கு உங்களை விட என்னை தான் ரொம்ப பிடிக்கும். அது தான் மாமா நான் கேட்டதும் எனக்கு வாங்கி கொடுக்கறாங்க. உங்களுக்கு வாங்கி தரலைனு நினைக்குறேன். அது தான் நீங்க எப்பப்பாரு என் கிட்ட வந்து தேவை இல்லாத கேள்வி எல்லாம்…” சிந்து பேசி முடிக்குமுன்,

“நான் உன்னை கேட்டால், நீ என்னை சொல்லுவியா…. ஓங்கி ஒன்னு விட்டா தெரியும்” மிருதுளா, தன் கையை உயர்த்தி சிந்துவை மிரட்டினாள்.

“என்னை அடிப்பீங்களா? எங்க என்னை அடிச்சி பாருங்க. எங்க பாட்டி, அப்பா, அம்மா யாரும் உங்களை சும்மா விட மாட்டங்க. அதை விட, என் வம்சி மாமா உங்களை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளிய அனுப்புவாங்க” சிந்து மிருதுளாவை மிரட்ட, அவள் கன்னத்தில் ‘பளார்…’ என்று அறைந்திருந்தாள் மிருதுளா.

தன் கன்னத்தை பிடித்து கொண்டு அதிர்ச்சியாக நின்றாள் சிந்துஜா.

“செய்றது தப்பு. உங்க வீட்டில் எல்லாம் முட்டாளா இருந்தா, நானும் முட்டாளுனு நினைச்சியா? வயசுக்கு ஏத்த மாதிரி பேசாம, என்ன பேச்சு பேசிட்டு இருக்க? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. நீ ஏதோ தப்பு பண்றேன்னு எனக்கு தெரியும். என்ன தப்பு?” அவள் கேட்க,

“இருங்க மாமாவை கூட்டிகிட்டு வரேன்” சிந்துஜா கண்களை கசக்க, “கூட்டிட்டு வாடி உன் மாமாவை. உன் மாமாவுக்கு விழ வேண்டியது தான் உனக்கு விழுந்திருக்கு. நீ என்ன பண்றேன்னு நான்  கண்டுபிடிக்கறேன்.” கூறிவிட்டு அவள் வெளியே சென்று விட்டாள்.

மிருதுளா, அதன்பின் யாரிடமும் பேசவில்லை. நடப்பது நடக்கட்டும். நான் இவர்களை பார்த்துக் கொள்கிறேன் என்ற ரீதியில் இருந்தாள்.

சிந்துஜாவாலும், வம்சியிடம் பேச முடியவில்லை. அவன் வேலையாக இருந்தான்.

விழா முடிந்து அனைவரும் அவர்கள் வீட்டுக்கு கிளம்ப, பத்மப்ரியா குடும்பமும், வம்சி மிருதுளா மட்டுமே இருந்தனர்.

“ஏய் மிருதுளா…” கோபமாக வந்தார் சிந்துஜாவின் பாட்டி.

“என்ன தைரியம் இருந்தா என் பேத்தியை அடிச்சிருப்ப. நாங்களே அவளை அடித்ததில்லை” அவர் மிருதுளாவை கையொங்க, அவர் கைகளை பிடித்திருந்தாள் மிருதுளா.

“அவ என்ன பண்ணான்னு கேளுங்க” மிருதுளா நிதானமாக, அழுத்தமாக கூறினாள்.

“மிருதுளா…” பத்மப்ரியாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

“ஏய்…” பத்மப்ரியா அவளை அறைய முற்பட, வம்சி குறுக்கே வந்துவிட்டான்.

பத்மப்ரியாவின் கைகள் வம்சியின் கன்னத்தை பதம் பார்த்தது.

வம்சியை அறைந்ததும், “தம்பி…” என்று அவள் பதற,

“அவள் என் மனைவி அக்கா” அவன் குரல் சற்று அழுத்தமாக ஒலித்தது.

“அவ சிந்துவை அடிச்சிருக்கா தம்பி” பத்மப்ரியா கூற, “நீங்க என்கிட்டே தானே சொல்லிருக்கணும்? மிருதுளாவை அடிக்கிற உரிமையை நான் உங்களுக்கு கொடுக்கலையே?” அவன் அமைதியாக என்றாலும் நிதானமாக கேட்டான்.

‘இது என்ன ஆச்சரியம்?’ என்று மிருதுளா, தன் கணவனை விழி உயர்த்தி பார்த்தாள்.

“நீ மாறிட்ட தம்பி… நம்ம சிந்துவை அவ அடிச்சிருக்கா? நீயும், நானும் நம்ம சிந்துவை அடிப்போமா?” பத்மப்ரியா கண்ணீர் உகுத்தாள்.

“சிந்து தப்பு பண்ணிருக்கா… …” என்று மிருதுளா கூற, “நீ என் பெண்ணை பத்தி சொல்ல வேண்டாம். என் பெண்ணை பத்தி எனக்கு தெரியும்” பத்மப்ரியா கோபமாக கூறினாள்.

“தப்பா பேசினா…” மிருதுளா ஏறி பேச, “மிருதுளா…” அவன் அழுத்தமாக அழைத்து தன் கண்களால் அவளை அடக்கினான்.

“உன் பொண்டாட்டி பேசிக்கிட்டே போறா? நீ அமைதியா வேடிக்கை பார்க்குற?” என்று வம்சியிடம் ஆரம்பித்த பத்மப்ரியா,

“அமைதியா இருக்கிற மாதிரி இருந்துகிட்டு, என் தம்பியை கைக்குள்ள போட்டுக்கிட்டே இல்லை?” பத்மப்ரியா மிருதுளாவை பார்த்து கேட்டாள்.

“அக்கா…” அவன் குரல் கலக்கத்தோடு அழைக்க, “இல்லை தம்பி… நீ இங்க வந்து நம்ம கடையை கவனிச்சிக்கிட்டாலும், நம்ம வியாபாரத்தை பார்த்துக்கிட்டாலும் உன் பேச்சு முழுக்க எப்பப்பாரு பங்காரு… பங்காரு தான்…”  பத்மப்ரியா கூற, வம்சி தர்மசங்கடமாக விழித்தான்.

“நான் தப்பா சொல்லலை தம்பி. நீ சந்தோஷமா இருந்தா எனக்கு சந்தோசம் தான். ஆனால், எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கில்ல?” பத்மப்ரியா கேள்வியாக நிறுத்த, அவள் கணவர், மாமியார் மற்றும் சிந்துஜா அனைவரும் அக்கா தம்பியை மெளனமாக பார்த்து கொண்டிருந்தனர்.

“அதுவும் உன் பொண்டாடிக்கு உடம்பு சரி இல்லாமல் போனதில் இருந்து நீ கடை பக்கம் வர்றதே இல்லை. நானும் தான் பிள்ளை உண்டாக்கிருக்கேன். உன் மாமா என்ன என் கூடவேவா இருக்கார்?” பத்மப்ரியா கேட்க, அங்கு மௌனம்.

“உன் பொண்டாட்டிக்கு பிள்ளை கூட தங்கலை. ஆனால், நீ அவ முந்தானையை பிடிச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்க” பத்மப்ரியா கூற, “அண்ணீ…” மிருதுளாவின் குரல் கோபமாக ஒலித்தது.

“நான் உன் புருஷனை சொல்லலை. என் தம்பியை சொல்றேன்” பத்மப்ரியா கூற, மிருதுளா தன் கணவனை யோசனையாக பார்த்தாள்.

‘இந்த குழந்தை பிரச்சனைக்கு அப்புறம் இவங்க என் கூடவே தான் இருக்காங்களோ?’ மிருதுளா மௌனித்துக் கொண்டாள்.

“நம்ம வியாபாரத்தை பார்த்துக்க தானே உன்னை அது சம்பந்தமான படிப்பெல்லாம் படிக்க வச்சோம்” என்று பத்மப்ரியாவின் மாமியார் கூற,

“அக்கா… தப்பெல்லாம் எங்க மேல தான். நீ இப்ப இருக்கிற நிலைமையில் பதட்டப்பட கூடாது. சிந்துவை அடிச்சிருக்க கூடாது. நான் மன்னிப்பு கேட்குறேன்” வம்சி கையெடுத்து கும்பிட,

“நான் தப்பு பண்ணலைங்க. நான் அவளை ஏன் அடிச்சேன்னா?” மிருதுளா பேச ஆரம்பிக்க அவளை இடைமறித்தார் பத்மப்ரியாவின் மாமியார்.

“வயிற்றில் உண்டான பிள்ளையை கூட உன்னால் ஒழுங்கா பார்க்க முடியலை. புள்ளையை இழந்திட்டு வந்து நிக்குற. நீயெல்லாம் பிள்ளை வளர்ப்பை பத்தி பேசுற. அதை பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு?” என்று பத்மப்ரியாவின் மாமியார் கேட்க,

“அத்தை, குழந்தை ஏன் கலந்ததுனு உங்களுக்கு தெரியுமா?” வம்சி பேச ஆரம்பிக்க, ‘இவர்கள் அனைவரும் வம்சி எனக்கு ஆதரவு என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வம்சி இந்த விஷயத்தை சொன்னால், இவர்கள் எல்லாரும் வம்சியை தூக்கி வைத்துக்கொண்டு என்னை பார்த்து கொக்கரிப்பார்கள்.’ என்ற எண்ணம் ஓட மிருதுளா அவன் கைகளை பிடித்து கொண்டாள்.

உரிமையான, தன் பங்காருவின் தீண்டலில் அவன் நிதானம் கொண்டான். அவள் முகத்தை இருபக்கமும் அசைக்க, வம்சி மௌனித்துக் கொண்டான்.

பத்மப்ரியா, தன் தம்பி தன்னை விட்டு விலகியதாவே முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டாள். ஆனால், அவள் கணவன் உதய் வம்சியை யோசனையாக பார்த்தான்.

“போதும்… பேச்சை நிறுத்துங்க. இப்ப தான் வம்சி பொறுமையா இருக்கான். உங்களுக்கு பழைய வம்சியை தெரியுமுன்னு நினைக்குறேன். அக்காவுக்காக, அக்கா குடும்பத்தில் சண்டை வரக்கூடாதுன்னு நான் பொறுமையா போறேன். அதுக்காக, உங்க பாட்டுக்கு நான் ஆட மாட்டேன்னு உங்களுக்கு தெரியும்.” அவன் ஒற்றை விரல் உயர்த்தி எச்சரித்தான்.

“மாமா, உங்களுக்கு பழைய வம்சியை தெரியுமுன்னு நினைக்குறேன். நான் யார் சட்டையை பிடிக்கவும் தயங்க மாட்டேன். யார் கன்னத்தை பதம் பார்க்கவும் தயங்க மாட்டேன். பாசத்துக்கு மட்டும் தான் கட்டுப்படுவான் இந்த வம்சி. உங்க அம்மாவை அமைதியா இருக்க சொல்லுங்க” வம்சி தன் மாமாவை மிரட்டினான்.

‘இவன் பொன்முட்டையிடும் வாத்து. நம் கையில் இருக்கும் வரை தான் நமக்கு லாபம்.’ என்று எண்ணிய உதய்,

“வம்சி…” உதய் பேச ஆரம்பிக்க,

“உங்க அம்மாவையும் எனக்கு தெரியும். உங்களையும் எனக்கு தெரியும். ஆரம்ப காலத்தில் நீங்க பண்ண வேலையும் எனக்கு தெரியும். என் அக்காவுக்காக நான் உங்களை தூக்கி போட்டு மிதிச்சதும் உங்களுக்கு தெரியும். நீங்க மாறிட்டிங்க. உங்க அம்மா மாறிட்டாங்க, உங்களுக்கு பெரிய பொண்ணு இருக்கானு நான் அமைதியா போய்கிட்டு இருக்கேன்.” வம்சி ஒற்றை விரல் உயர்த்தி மிரட்ட, அங்கு மௌனம்.

“ஆரம்ப காலத்தில் என் அக்காவை வைத்து என்கிட்டே காட்டின ஆட்டத்தை இப்ப, என் பொண்டாட்டி வைத்து என் கிட்ட காட்டலாமுன்னு நினைசீங்க, அப்புறம் நடக்கிறதே வேற… உங்க வீட்டு ஆளுங்க என் மனைவியை பேச உரிமை கிடையாது ” வம்சி அழுத்தமாக கூறினான்.

சண்டையை பார்த்து சிந்து பயந்துவிட்டாள். ‘என்னை அடிச்சா, மாமா அத்தையை வீட்டை விட்டு வெளிய அனுப்பமாட்டாங்களா? அது தான் இந்த அத்தைக்கு இவ்வளவு கொழுப்பு’ என்று சிந்து கடுப்பாக மிருதுளாவை பார்த்தாள்

“சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த வம்சியையே உங்களால் சமாளிக்க முடியலை. இப்ப என் கிட்ட ஆட்டம் காட்டலாமுன்னு நினைக்காதீங்க” வம்சி கர்ஜித்தான்.

‘இவன் கோபம் பொல்லாதது. இவனை அடக்கும் ஒரே ஆயுதம் இவன் அக்கா. ஆனால், இப்பொழுது இவன் மனைவியும் அதில் அடக்கம் போல. இவனை எதிர்த்தால், இது எங்கு வேண்டுமென்றாலும் முடியலாம்’ சுதாரித்து கொண்டான் உதய்.

“வம்சி, இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி கோபப்படுற? ஏதோ சிந்துனதும், எல்லாரும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டாங்க. உன் மனைவியை யாராவது ஏதாவது சொல்லுவாங்களா?” உதய் நிதானமாக பேச,

“அப்ப, எனக்கு சிந்து மேல பாசம் இல்லைன்னு சொல்லறீங்களா மாமா?” வம்சி அழுத்தமாக கேட்டான்.

திருமணமான புதிதில், அவன் அக்காவுக்கு என்றவுடன் சீறிக்கொண்டு வரும் வம்சி உதயின் கண்முன் தோன்றினான்.

பத்மப்ரியாவின் மாமியார் வாய் அடைத்துக் கொண்டது. ‘அக்கா… அக்கானு அலைவான், கல்யாணமே வேண்டாமுன்னு சொன்னான். இப்ப என்ன இவன் பொண்டாட்டிக்கு இப்படி எல்லாம் வக்காலத்து வாங்குறான்.’

மிருதுளாவே அதிசயித்து நிற்கும் பொழுது, மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம். அவரும் வாயடைத்தே நின்றார்.

அதை விட முக்கியமான காரணம், தன் மகனை விட இந்த வம்சி கெட்டிக்காரன். அவன் வந்த பின் தான் அவர்கள் வியாபாரம் அவன் வழிநடத்துதலில் திறமையாக போய் கொண்டிருக்கிறது. தேவை இல்லாமல், அவனை பகைத்து கொள்ள கூடாது என்று அறிந்தவர் ஆயிற்றே.

தன் தொழிலையும் பார்த்துக்கொண்டு, இவர்களுக்கும் கணக்கு வழக்கு பார்த்து உதவி செய்து கொண்டிருக்கிறான். இடம் கிடைக்கும் பட்சத்தில் விளையாடி பார்க்க எண்ணினார்களே ஒழிய, அவனை பகைத்து கொள்ள விரும்பவுமில்லை. தைரியமும் இல்லை.

“என் குடும்பத்தை எனக்காக பகைச்சிகிட்ட, இப்ப உன் மனைவிக்காக பகைச்சிக்கிறேல்ல?” பத்மப்ரியா  அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி சற்று பொறாமை தொனிக்கும் குரலில் கேட்டாள்.

“என் அக்கா குடும்பத்தை நான் பகைச்சிப்பேனா? என் அக்கா இல்லாமல் என்னால் தான் வாழ முடியுமா?” அவன் தன் தமக்கை முன் மண்டியிட்டு பரிதாபமாக கேட்டான்.

“அக்கா, உனக்கும் இதே வீட்டில் பிரச்சனை வந்திருக்கு. அப்பவும், நான் தான் கேட்டேன். இன்னைக்கு என் மனைவிக்கு பிரச்சனைனா நான் தானே அக்கா கேட்கணும்? நீ என்னை அப்படி தானே வளர்ந்திருக்க? நான் உன் வளர்ப்பு இல்லையா?” வம்சி கேட்க, பத்மப்ரியாவின் கண்களில் கண்ணீர்.

ஊரே வெடித்து ஒழிந்தாலும், நாங்கள் பாசம் பாராட்டுவோம் என்று அவர்கள் பாசம் பாராட்டினார்.

“எனக்கு என் அக்கா முக்கியம். நான் யாருக்காகவும் என் அக்காவை விட்டு கொடுக்க மாட்டேன். அதே மாதிரி என் மனைவியும், அவள் மரியாதையும் எனக்கு முக்கியம் தானே அக்கா?” அவன் கேள்வியாக நிறுத்த, பத்மப்ரியா ஆமோதிப்பாக தலை அசைத்தார்.

‘இப்படி எல்லாம் ஒரே நாளில் மாறினால், என் பிஞ்சு இதயம் தாங்குமா?’ என்பது போல் நின்று கொண்டிருந்தாள் மிருதுளா.

“அக்கா, உங்க மேல தப்பே இல்லை. தப்பெல்லாம் எங்க மேல தான்.” அவன் கூற, ‘மிருதுளா மேல…’ என்று சொல்ல கூட அவன் விரும்பவில்லை என்பதை அனைவருமே கவனித்தனர்.

“நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் அக்கா. இப்ப கிளம்புறோம்.” அவன் கூறி கொண்டு, தன் மனைவியின் கையை பிடித்து விடுவிடுவென்று வெளியே கிளம்பினான்.

வம்சி எதுவும் பேசாமல் காரை அவன் வீட்டை நோக்கி செலுத்தினான்.

 ‘வம்சி கொஞ்சம் நல்லவன் தானோ?’ என்ற யோசனையோடு அவர்கள் வீட்டுக்கு வந்தாள் மிருதுளா.

வீட்டிற்கு வந்தும் வம்சி எதுவும் பேசவில்லை. அவள் உடை மாற்றி சோபாவில் அமர, அவள் அருகே அமர்ந்து, அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து, “என் மேல கோபம்னா என்னை அடிச்சிருக்கலாமே பங்காரு. ஏன் பங்காரு, அந்த சின்ன பொண்ணை அடித்த?” அவன் வருத்தத்தோடு கேட்டான்.

அவன் கேட்ட கேள்வியில், ‘இதுக்கு  இவன் என்னை அங்கு வைத்தே அடித்திருக்கலாம். நான் அங்கு செத்து தொலைந்திருக்கலாம்’ என்ற எண்ணத்தோடு அவனை அருவருப்பாக பார்த்தாள் மிருதுளா.

மயங்கும்…