மயங்கினேன் பொன்மானிலே – 15

பொன்மானிலே _BG-624b24c5
மயங்கினேன் பொன்மானிலே - அனாமிகா 10

அத்தியாயம் – 15

மிருதுளா தன் கோரிக்கையை வைக்க ஆரம்பித்தாள். வம்சி அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் அம்மா, அப்பான்னு யோசிச்சி விஷயத்தை சொல்லாமல் விட்டது தப்பு தான். உங்க அக்காவை கூப்பிடுங்க. என் அம்மா, அப்பாவை கூப்பிடுறேன். நாம எல்லாத்தையும் பேசி முடிச்சிப்போம். டைவர்ஸ் பத்தி எனக்கு தெரியலை. அதை அப்புறம் யோசிப்போம். ஆனால், எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்”  முடிவு செய்ய முடியமால் தவித்த அவள் இன்று கூற, அவன் அவளை வெறித்து பார்த்தான்.

“பங்காரு, அம்மா, அப்பா இல்லாத நான்…  நீ தான் என் வாழ்க்கை நினைக்குற எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை?” அவன் குரல் உடைந்தது.

அவன் குரல் உடைய அவளுக்கு எங்கோ வலித்தது. வர துடித்த கண்ணீரை அடக்கி கொண்டாள்.

“நான் குழந்தையை அழிச்சது இவ்வளவு தூரம் உன்னை பாதிக்குமுன்னு நினைக்கலை. குழந்தை வந்து வேண்டாமும்னு நிறைய பேர் அபார்ஷன் பண்ணி நான் கேள்வி பட்டிருக்கேன். அப்புறம், சரியா வரலைன்னு, அப்புறமா கொஞ்சம் நாள் கழிச்சி பெத்துக்கலாமுன்னு இப்படி நிறைய…” அவன் அவள் முன் நின்று பேசிக் கொண்டே போக,

“அந்த குழந்தையின் அம்மா சம்பந்தம் இல்லாம நடந்திருக்கா?” மிருதுளா கூர்மையாக கேட்டாள்.

“பங்காரு…” அவன் அவளை நெருங்க எத்தனித்து தவிப்போடு அழைக்க, “நான் கேட்ட கேள்விக்கு பதில்” அவள் உறுதியாக நின்றாள்.

“நான் உன்னை கேட்காமல் பண்ணது பெரிய தப்பு தான். நான் தான் மன்னிப்பு கேட்டேனே. இன்னைக்கு ஏன் இந்த திடீர் முடிவு.” அவன் கேட்க, “நானும் உங்களை சகிச்சிட்டு கொஞ்ச நாள் கூட இருந்து ஒரேடியா விவாகரத்து வாங்கிட்டு போகலாமுன்னு தான் நினைச்சேன்.  ஆனால், என்னால் முடியலை” அவள் கண்களில் கண்ணீர் மல்க கூறினாள்.

“பங்காரு…” அவன் அவளை நெருங்க, அவள் கதறினாள்.

“பங்காரு…” அவன் இப்பொழுது துடிக்க, அவளின் அழுகை அதிகமானது. காயப்படுத்தியவனே, அதற்கு மருந்தாகும் பொழுது அவளும் என்ன தான் செய்வாள்.

அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். “என்னை உனக்கு பிடிக்கலையா பங்காரு?” அவள் தலை முடியை பிடித்து, அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டே கேட்டான்.

அவளிடம் விம்மல் மட்டுமே! அவள் முகத்தை தன் மார்போடு பொதித்து கொண்டு, “என் இதயம் பங்காரு… பங்காருனு சொல்றது உனக்கு கேட்கலியா பங்காரு?” அவள் செவிகளை தன் மார்போடு சேர்த்துக்கொண்டு கேட்டான் வம்சி.

‘இவனை விட்டு விலகவும் முடியாமல், இவனோடு வாழவும் முடியாமல் நான் தவிக்கிறேனே. ‘அவன் கண்களிலும் நீர் வழிந்தது. அவன் கண்ணீர் அவள் தோள்களை தொட்டு சென்றது.

“பழசை மறந்திடலாம் பங்காரு. புதுசா ஒரு வாழ்க்கையை வாழுந்து பார்க்கலாமே?” அவன் குரல் கெஞ்சியது. அவளிடம் மௌனம்.

“நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது பங்காரு.” அவன் அவள் தலையை தூக்க அவள் அவன் முகம் பார்த்தாள். அவள் விழிகளில் சோகம். அவன் விழிகளில் ஏக்கம்.

“பங்காரு… நீ நம்பினாலும் சரி… நம்பலைனாலும் சரி… நீ தான் எனக்கு உலகம். நான் உன்னை வேறா நினைச்சதே இல்லை” அவன் கூற,

“உன்னால் நான் இல்லாமல் இருக்க முடியுமா?” அவன் அவளிடம் பரிதவிப்போடு கேட்டான். அவள் பதில் பேசவில்லை

“உன்னால் முடியும் பங்காரு. உனக்கு தான் அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்களே. நான் தானே அநாதை போல இந்த வீட்டில் இருக்கனும்” அவன் வருத்தத்தோடு கூற, “அநாதை மாதிரி ஏன் இருக்கணும். உங்க அக்கா வீட்டுக்கு போக வேண்டியது தானே?” அவள் வெடுக்கென்று கேட்டாள்.

“அக்கா வீடு என் வீடாகுமா?” அவன் விரக்தியாக கேட்க, “அக்கா குழந்தை உங்க குழந்தையாகும் பொழுது வீடு ஆகாதா?” அவள் சுருக்கென்று கேட்டாள்.

“அந்த விஷயத்தை விடக்கூடாதா?” அவன் சலிப்போடு கேட்டான்.

“விட முடியலை. எனக்கு உங்களை பார்க்கும் பொழுதெல்லாம் அது தான் நியாபகம் வருது. அப்புறம் உங்க அக்கா முகம் நியாபகம் வருது. எனக்கு உங்களை பார்க்க பிடிக்கலை. பேச பிடிக்கலை.” அவள் கூற, அவன் உறைந்து நின்றான்.

“உங்க முகத்தில் முழிக்கும் பொழுதெல்லாம் எனக்கு எரிச்சலா வருது…” அவள் ஆங்காரமாக கூற, அவன் கண்களில் கண்ணீரோடு அவள் முன் அமர்ந்தான்.

தன்னவனை காயப்படுத்திவிட்டு அதை தாங்க முடியாமல் அவள் தரையில் அமர்ந்து ‘ஓ…’ என்று கதறினாள்.

“என்னால் முடியலையே… ஐய்யோ…. என்னால் முடியலையே…” அவள் தலையில் அடித்துக் கொண்டு அழ, “பங்காரு…” அவன் அவள் கைகளை பற்றினான்.

“நான் என்ன செய்யறேன்?” அவள் வம்சியிடம் வினவ, அவன் அவளை புரியாமல் பார்த்தான்.

“நான் தோத்துட்டேன்… தோத்துட்டேன்…” அவள்  உதட்டை பிதுக்கி கைகளை விரித்து அப்பாவியாக கூறினாள்.

“ஏன் பங்காரு இப்படி எல்லாம் பேசுற?” அவன் அவள் விழி நீரை துடைத்து அவள் முகத்தை கைகளில் ஏந்தி கேட்டான்.

“ஆமா, நான் தோத்துட்டேன். உங்க அக்கா ஒரு நாள் சொன்னாங்களே, உம் பொண்டாட்டி உன்னை கையில் வச்சிக்க நினைக்குறான்னு என்னமோ சொன்னாங்களே… அன்னைக்கு கூட என்ன இப்படி சொல்லிட்டாங்கனு நான் வருத்தப்பட்டேன். ஆனால், நான் அதை செய்யலை… அங்க நான் தோத்து போய்ட்டேன்.” அவள் கோபமாக கூற,

“பங்காரு, நான் நீ சொல்றதை தான் கேட்குறேன் பங்காரு” அவன் அவளை சமாதானம் செய்ய, “நான் சொல்றதை கேட்கறவங்களா இருந்தா…” அவள் கண்களை விரித்து பேச ஆரம்பிக்க, “பழைய விஷயம் வேண்டாமே பங்காரு” அவன் குரல் கெஞ்சியது.

“சரி அதை விடுங்க… உங்களை பாவான்னு கூப்பிட்டு கடுப்பேத்த நினைச்சேன்… முடிஞ்சிதா?” அவள் கேட்க, அவன் பேசவில்லை.

“நான் உங்க கூட வாழ வரலை.உங்க கிட்ட சண்டை போட்டு, கடுப்பேத்தி விவாகரத்து வாங்கணுமுன்னு நினச்சேன். அதுவாவது நடந்துச்சா? இப்ப கூட அம்மாவை கூப்பிடுங்க, அப்பாவை கூப்பிடுங்க, அக்காவை கூப்பிடுங்க விஷயத்தை சொல்லலாமுன்னு சொன்னேன். இதுவும் நடக்காது. உங்களை கடுப்பேத்த நினைச்சி நான் தான் காயப்பட்டு நிக்குறேன்” அவள் கூற, அவன் அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டான்.

“எனக்கு உன்னை பிடிக்கும் பங்காரு.” அவன் கூற, “உனக்கும் என்னை பிடிக்கும். நமக்குள்ள தப்பு நடந்திருக்கலாம். அதை நாம சரி செய்ய முடியாதா? நம்ம அன்பு எல்லாத்தையும் சரி செய்யாதா?” அவன் கண்களில் ஏக்கத்தோடு கேட்டான்.

“அன்பு… பிடிக்கும் இந்த வார்த்தை எல்லாம் தான் என்னை சாவடிக்குது. நான் உங்களுக்காக வருத்தப்படும் பொழுது அறிவு என்னை எச்சரிக்க தான் செய்யுது. இந்த வம்சிக்காக இறங்காத, இவன் ஒரு கொலை கார பாவின்னு. ஆனால், இந்த மனசு உங்களுக்காக வருந்துதே. அப்பத்தான் எனக்கு கேவலமா இருக்கு. உங்களுக்காக வருத்தப்படும் பொழுது நெஞ்சு வெடிச்சு சாக மாட்டோமான்னு தோணுது.” அவள் கண்ணீரோடு கூற, அவன் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

‘என் பங்காரு… என் பங்காரு என்னை விட்டு எங்கோ சென்றுவிட்டாள்…’ அவனுக்கு புரிய ஆரம்பித்தது.

“நான் ஒரு தைரியமில்லாத கோழை. உங்களை தூக்கி போட்டு போகவும் துப்பில்லை. இந்த சமுதாயத்தை நினைச்சி பயப்படுறேன். எங்க அம்மா, அப்பாவை யோசிக்குறேன். ஊரை கூட்டி கட்டின தாலிக்கு இவ்வளவு சக்தியா எனக்கு நீங்க இந்த தாலியை கட்டும் பொழுது கூட தெரியலை. “அவள் அவன் கட்டிய தாலியை தூக்கி காட்டி வெறுப்பாக கூறினாள்.

“ஆனால், அதை அத்துக்கிட்ட போகணும்னு நினைக்கும் பொழுது தெரியுது. வாழ்வும் முடியாமல்… போகவும் முடியாமல் நான் தோத்துட்டேன்…” அவள் பேச,

“என் அன்பு உனக்கு தோல்வியா பங்காரு?” அவன் அவள் முகம் பார்த்து கேட்டான்.

“ஆமாம், தோல்வி தான். நீங்க என் மேல அன்பு வைக்கலைனா, நான் போய்கிட்டே இருப்பேன். ஆனால், நீங்க காட்டுற பாசம் என்னை அப்பப்ப குழப்பிவிட்டுடுது. நீங்க வருத்தப்படும் பொழுது என் மனசு வலிக்குது. உங்களை கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்லணும்னு என் கைகள் பரபரக்குது.” அவளிடம் ஒரு விம்மல்.

அவள் வார்த்தைகள் அவனுக்கு இனிக்க, அவள் விம்மல் அவனை துடிதுடிக்க செய்தது.

“உங்களை நான் தான் காயப்படுத்துறேன். நீங்க உடைந்து உட்காரும் பொழுது, ஒண்ணுமில்லை நான் இருக்கேன்ன்னு உங்களை என் மடியில் சாய்த்து ஆறுதல் சொல்லணும்னு என் மனசு துடிக்குது. நான் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும், நீங்க பங்காருன்னு சொல்லும் பொழுது இளக கூடாதுனு நினைச்சாலும், நான் உருகி நிக்குறேனே…” அவள் அன்பை வெளிப்படுத்திய விதத்தில் அவன் உருகி நின்றான்.

வலியோடு அவள் வெளிப்படுத்திய அன்பில் அவன் கரைந்து போனான். ‘இந்த உலகத்தில் என்னால் முடிந்த அளவு நான் அனைத்தையும் உனக்காக தள்ளி வைப்பேன்’ அவள் வலியில் அவள் அன்பில் அவன் உள்ளம் உறுதி எடுத்துக்கொண்டது. அவன் அவளுக்காக நின்றான். அவள் கணவனாக மட்டுமே நின்றான்.

“பங்காரு….” அவள் அவளை அணைத்து, முகமெங்கும் இதழ் பதித்து, அவள் விழிகளை காதலோடு பார்த்தான்.

அவன் கைகள் அவள் முகத்தை பாசத்தோடு வருடியது. அவன் பெருவிரல், அவள் இருகன்னத்து நீரையும் துடைத்தது.

“பங்காரு… நான் உன்னை பார்த்துப்பேன் பங்காரு. எல்லாத்தையும் சரி செய்யறேன் பங்காரு. என் அன்பும் காதலும் நிஜம் பங்காரு… உன் அன்பு தான் எனக்கு எல்லாம் பங்காரு. நான் என் அன்பை உன்கிட்ட சரியா கட்டினேன்னானு எனக்கு தெரியலை பங்காரு. ஆனால்…. இனி செய்வேன். உன் அன்பு… உன் அன்பு… உன் காதல் நிஜம் பங்காரு. அது எனக்கு வேணும்.” அவன் அவளை தன் தோள் மீது சாய்த்துக்கொண்டு கூற,

அவனிடமிருந்து திமிறி விலகி, ” என் அன்பு நிஜம். ஆனால், ஆனால், இந்த அன்புக்கு நீங்க தகுதியனவாரா?” அவள் கேட்க, அவன் சிரித்துக்கொண்டான்.

“நீங்க அக்கா, பங்காருனு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி மாதிரி இருக்கீங்க. உங்க கூட சேர்ந்து நானும் உங்களை மாதிரி ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி மாதிரி ஆகிட்டேன் பாருங்க. நான் என்னனு எனக்கே தெரியலை.” அவள் பேச, “நாம குழந்தை பெத்துப்போமா பங்காரு?” இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க எண்ணி அவன் நேரடியாக கேட்டான்.

‘இவன் வேண்டாம் என்றால் வேண்டாம். வேண்டும் என்றால் வேண்டுமா?’ அவள் கோபம் கனன்று அவனை கடுப்பாக பார்த்தாள்.

பாவம் வம்சி அறியவில்லை. இது அவன் வாழ்வின் அடுத்த கட்ட பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளி என்று.

“நம்ம பிரச்சனையின் ஆரம்ப புள்ளி அது. அதை முதலில் சரி செய்வோம்” அவன் கூற, “உங்க அக்காவுக்கு யார் சேவகம் பண்றது?” அவள் வெடுக்கென்று கேட்க,

“அதை நான் பார்த்துக்கிறேன். அதை பத்தி நீ ஏன் கவலைப்படுற? எனக்கு உன் சந்தோசஷம் முக்கியம்” அவன் அவள் தோள் மேல் கைபோட்டு கேட்டான்.

” நீங்க இப்ப ஒன்னு நினைப்பீங்க. அப்புறம் மாத்தி நினைப்பீங்க. எனக்கு குழந்தை வேண்டாம்” அவள் தள்ளி அமர்ந்து கொள்ள,

“அதுக்கு தானே இப்படி சண்டை போடுற?” அவன் அவளை அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான்.

 “நான் அதுக்கு ஒன்னும் சண்டை போடலை. நீங்க ஏன்…” அவள் பேச ஆரம்பிக்க, “செஞ்ச தப்பை மாத்த முடியாது. அதை திருத்த தான் முடியும்” அவன் கூற , “நான் மனம் உள்ள பெண். ஜடம் இல்லை” அவள் அழுத்தமாக கூறினாள்.

“நான் உன்னை கட்டாயப்படுதலை பங்காரு. நம்ம பிரச்சனைக்கு இது தான் தீர்வுன்னு சொல்றேன்” அவன் விளக்க முற்பட, “எனக்கு தனிமையும், அவகாசமும் வேணும். அப்புறம் தான் நீங்க வேணுமா, வேண்டாமுன்னு என்னால் முடிவு செய்ய முடியும்” அவள் உறுதியாக கூறினாள்.

“அவகாசம் கிடைக்கும் பங்காரு. ஆனால், தனிமை உனக்கு ஒரு நாளும் கிடைக்காது. அப்படி உனக்கு தனிமை கிடைச்சா… இந்த வம்சி இல்லைனு அர்த்தம்” அவன் குரலில் உறுதி இருக்க, அவள் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

எதுவம் வெளிக்காட்டாமல், அவள் அமைதியாக நிற்க அவன் தொடர்ந்து பேசினான்.

“ஒரு காகிதத்தில் தப்பா எழுதிட்டோம். அதை சரி செய்யணும்னு நான் சொல்றேன். அந்த காகிதத்தை கிழிச்சி போடணும்னு நீ சொல்ற. நம்ம உறவை முடிக்கணும்னு நீ சொல்றது அதை கிழிச்சு போடுறதுக்கு சமம்” அவன் நிதானமாக எடுத்துரைத்தான்.

“திரும்ப அடித்து எழுதினாலும் காயம்… காயம் தான். வலி… வலி தான். அந்த வடு மாறாது” அவள் கூற, “என் அன்பு அந்த வடுவை மாற்றும் பங்காரு” அவன் குரலில் உறுதி இருந்தது.

“அந்த வடு மாறத்தான் நான் தனிமை கேட்குறேன்.” அவள் கூற, “தனிமை எப்படி உன் வடுவை மாற்றும் பங்காரு? என் அன்பு மட்டும் தான் நான் செய்த தப்புக்கு பிராயச்சித்தம்?” அவள் முகம் உயர்த்தி, அவள் விழி பார்த்து அவன் கேட்டான்.

“உன் வடுவுக்கு நான் மட்டும் தான் மருந்தாக முடியும்” அவன் அவள் இதயம் தொட்டு சொன்னான்.

உனக்கு நான் மருந்தாவேன் பங்காரு…” அவள் செவியோரம், அவன் இதழ்கள் அவள் இதயம் வரை சென்று வாக்கு கொடுத்தது.

“நமக்கு தனிமை சரிப்பட்டு வராது பங்காரு. எழுதப்படாத காகிதம் எழுதப்படாத காகிதமாவே ஆகிடும் பங்காரு” அவன் குரலில் அழுத்தம் இருந்தது.

“எனக்கு உங்க அருகாமை பிடிக்கலை. எனக்கு குழந்தை எல்லாம் வேண்டாம்.” அவள் விலகி நின்று கொண்டு கூற, அவன் முகத்தில் புன்னகை.

“சரி… நீ என்ன சொன்னாலும் சரி பங்காரு. ஆனால், நீ இங்க தான் இருக்கனும்.” அவன் கூற, ‘ என் வீட்டிற்கு போய் மட்டும் என்ன நடந்துவிட போகுது?’ அவள் யோசனையோடு அவனை பார்த்தாள்.

“எனக்கு குழந்தை மட்டும் பிரச்சனை இல்லை” அவள் மென்று விழுங்கினாள்.

“வேற என்ன பிரச்சனை?” அவன் கேட்க, “…” அவள் பதில் பேசவில்லை.

அவன் கண்கள் இடுங்கியது. அவள் வாய் வரை வார்த்தை வந்தாலும், அதை கூற முடியாமல் அவள் இதயம் துடித்தது.

“அக்கா, நமக்குள்ள இனி வராமாட்டாங்க” அவன் கூற, அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

“நான் அக்காவை பற்றியோ அக்கா குடும்பத்தை பற்றியோ பேசமாட்டேன். அதே மாதிரி நீ இனி குழந்தை குழந்தைனு வருத்தப்பட கூடாது. வருத்தப்பட்டா, உடனே குழந்தை தான். அது தான் நான் உனக்கு கொடுக்கற தண்டனை” அவன் உல்லாசமாக கூற, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

அவள் கன்னம் தட்டி, தன் தொழில் நடக்கும் இடம் நோக்கி சென்றான்.

‘என்னை பங்காரு தப்பு தப்புனு சொல்றா. அது என்ன தப்புன்னே எனக்கு சரியா தெரியலை. அதை முதலில் கண்டுபிடிக்கணும். இதுல அவ மனக்காயத்தை சரி செய்யறனேன்னு வேற சொல்லி கால அவகாசம் எல்லாம் கேட்டிருக்கேன். நான் பங்காருவின் மனக்காயத்தை எப்படி ஆற்றுவது? நான் எப்படி அவளுக்கு மருந்தாவது?’ என்ற கேள்வி அவனை குடைந்தது.

‘நானும் மிரட்டி, சண்டை போட்டு, பிடிவாதம் செய்து இப்படி விதவிதமா போராடி தான் பார்க்குறேன். இவங்களும் சரி செய்யத்தான் பார்க்குறாங்க. ஆனால், அத்தனை எளிதில் எல்லாம் சரியாகுமா?’ என்ற கேள்வி மிருதுளாவின் மனதில் எழுந்தது.

மயங்கும்…