அத்தியாயம் – 16
வம்சி தன் தொழில் நடக்கும் இடத்திற்கு சென்றான். வயல் வரப்பு அதில் கொஞ்சம் சாகுபடி, அதன் பின் சூப்பர் மார்க்கெட், உரம் என அவன் தொழில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. பெரிதான அளவில் இல்லை என்றாலும், போதுமான அளவில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அக்கா வீடும், இவனும் முழுதாக சேர்ந்து தொழில் செய்ய வில்லை என்றாலும், இவன் வழிநடத்துதலில் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டு பிரச்சனையிலிருந்து வெளி வந்து முழுதாக தொழிலை கவனிக்க ஆரம்பித்தான்.
வேலை முடிய மணி ஏழாகி இருந்தது. அவனுக்கு என்று இருந்த அறையில் அமர்ந்து, தன் முன் இருந்த பேனாவை சுற்றினான். தன் அலைபேசியில் இருந்த அவர்கள் புகைப்படத்தை பார்த்தான்.
அவனும், மிருதுளாவும் இணைந்திருப்பது போன்ற புகைப்படம். அவன் சற்று ஜூம் செய்து, தன் மனையாளை பார்த்தான். அவள் கண்கள் அவனை ஆசையோடு பார்த்து கொண்டிருந்தது.
“என் பங்காரு கண்களில் இப்ப இந்த காதலை என்னால் பார்க்க முடியலையே” அவன் அவள் முகத்தை ஏக்கமாக தடவினான்.
‘நான் குழந்தை விஷயத்தில் அவசரப்பட்டுட்டேன். பங்காரு கிட்ட கேட்காம பண்ணது முதல் தப்பு. அதுக்கு அப்புறம் தான் சண்டை’ அவன் அலைபேசியை வைத்துவிட்டு நாற்காலியில் பின்னே சாய்ந்து, தன் கண்களை இறுக மூடினான்.
‘ஆனால், பங்காரு குழந்தை மட்டும் பிரச்சனை இல்லைனு சொன்னா. நான் அக்கா பெயரை எடுக்க மாட்டேன்னு சொன்னதும் அவள் கண்களில் மலர்ச்சி. அக்காவுக்கும், பங்காருக்கும் என்ன பிரச்சனை? அவங்க ரெண்டு பெரும் சண்டை போட்டு கூட நான் பார்த்ததில்லை. இன்னைக்கு தான் அக்கா கோபமா பேசினாங்க. பங்காரு ஏன் இப்படி நினைக்குறா?’ அவன் தலை முடியை பின்னே கோதினான்.
‘நான் தான் தப்பு பண்றேனா? யார் கிட்ட கேட்பேன். வழக்கமா எனக்கு ஏதவது பிரச்சனைனா, அக்கா கிட்ட கேட்பேன். இப்ப, இந்த பிரச்சனையில் அக்காவும் இருக்கிற மாதிரி இருக்கு. பங்காரு கிட்ட கேட்டு ஒரு பயனும் இல்லை. அவளும் எனக்கு டிசைன் டிஸைனா பல விதத்தில் ஒரே விஷயத்தை தான் சொல்றா. எனக்கு தான் புரியலை’ அவன் தன் உதட்டை மடித்து யோசித்தான்.
‘படிப்பு, தொழில் வேலைன்னு இருந்துட்டேன். பேசிக்க கூட நெருக்கமான நண்பர்கள் கிடையாது. நான் கல்யாணமான நாளில் இருந்து பங்காரு கிட்ட தான் எல்லாம் சொல்லுவேன். அக்கா வீட்டில் நடந்ததிலிருந்து, கடையில் பிஸினெஸில் நடந்தது வரை. ஆனால், என் பங்காருக்கு இதில் எல்லாம் சந்தோசம் இல்லை போல?’ அவன் தன் அலைபேசியை தீண்டியபடி சிந்தித்து கொண்டிருந்தான்.
‘எனக்கு அப்பா, அண்ணா, தம்பின்னு யாராவது இருந்திருந்தால் ஒரு ஆணின் கோணத்தில் எனக்கு அறிவுரை சொல்லிருப்பாங்களோ?’ அவன் கண்களில் நீர்ப்படலாம்.
‘அப்பா இருந்திருந்தா, எனக்கு பக்க பலாமா இருந்திருக்கும். படிப்பு, வேலை, தொழில் எல்லா விஷயத்திலையும் தனியா ஓடிட்டேன். ஆனால், குடும்பம் ரொம்ப கஷ்டம் போல’ அவன் சிந்தை அவன் மீதே பச்சாதாபம் கொண்டது.
‘அம்மா, அப்பா காலத்துக்கு அப்புறம் எல்லாம் அக்கா தான். ஆனால், இன்னைக்கு எனக்கு யாரும் இல்லாத மாதிரி இருக்கே’ அவன் விரல்கள் அலைபேசியை தீண்ட, அவன் கைகள் மிருதுளாவின் தந்தை எண்ணில் வந்து நின்றது.
‘நீங்க எனக்கு மகன் மாதிரி மாப்பிளை.’ மிருதுளாவின் தந்தை அவ்வப்பொழுது கூறுவது அவன் காதில் ஒலிக்க, அவன் மிருதுளாவின் தந்தைக்கு அழைத்தான்.
“என்ன ரோகினி மாப்பிள்ளை கூப்பிடறாரு? எதுவும் பிரச்சனையா இருக்குமோ?” மிருதுளாவின் தந்தை குரலில் பதட்டம்.
“மிருதுளா எதுவும் சொல்லலியே…” ரோகிணியும் பதட்டமாக அவர் அருகே வந்தார்.
“மாப்பிளை சொல்லுங்க. எல்லாரும் நல்லாருக்கீங்க தானே?” அவர் பதட்டமாக வினவ, “மாமா, எல்லாரும் நல்லாருக்கோம். சும்மா தான் கூப்பிட்டேன். உங்க கிட்ட பேசலாமுன்னு…” வம்சி சற்று தடுமாறினான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை. எதுவும் பிரச்சனையா?” வம்சியின் தடுமாற்றத்தில் அவர் கண்டு கொண்டார்.
“பிரச்சனை எல்லாம் இல்லை மாமா.” அவன் பதட்டமாக பதில் அளித்தான்.
“மிருதுளா எதுவும் சண்டை போட்டாளா? உங்க குரலே சரி இல்லையே?” அவர் பக்குவமாக கேட்டார்.
“ஐயோ, அதெல்லாம் இல்லை மாமா. மிருதுளா என்ன சொல்ல போறா? நான் தான்… நான் தான்…” அவன் சற்று தடுமாறினான்.
“நான் தான் பேசலாமுன்னு…” அவனிடம் தடுமாற்றம்.
“சொல்லுங்க மாப்பிளை…” அவர் கூற, “நான் ஏதோ தப்பு பண்ணறேன்னு தெரியுது மாமா. என்னனு தான் தெரியலை. மிருதுளா என் கிட்ட சொல்றா. ஆனால், எனக்கு என்ன பண்ணி அதை சரி செய்யணும்னு தெரியலை… அது…” அவன் பட்டென்று விஷயத்தை ஆரம்பித்துவிட்டு பின்னே தடுமாற,
“மிருதுளா, உங்க கிட்ட உங்க அக்கா பெயரை சொல்லி சண்டை போடுறாளா?” அவர் நேரடியாக கேட்க, “மிருதுளா சண்டை எல்லாம் போடலை மாமா… சும்மா சின்னதா ஒரு பேச்சு… அவ மேல எந்த தப்பும் இல்லை. நீங்க மிருதுளா கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். நான் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலை. எனக்கு பெரியவங்கன்னு இருந்தா, அப்பா இருந்தா நான் அப்பா கிட்ட கேட்டிருப்பேன். எனக்குன்னு யாரும் இல்லை. அது தான் நான்…” வம்சி கண்கள் கலங்கியது.
மிருதுளாவின் தந்தை நெக்குருகி போனார்.
“உங்களுக்கு யாரும் இல்லைனு யார் சொன்னது மாப்பிள்ளை? நாங்க இருக்கோம்” அவர் கூற, அவன் “ம்…” கொட்டினான்.
“நான் பங்கா… மிருதுளாவை நல்லா பார்த்துக்கணும்னு தான் நினைக்குறேன். ஆனால்…” அவன் குரல் பிசுறு தட்ட,
“நீங்க நினைக்குறதே போதும் மாப்பிள்ளை. நீங்க அவளை நல்லா பார்த்துப்பீங்க” அவர் சமாதானம் பேச, “ம்…” அவன் தலை அசைத்துக் கொண்டான்.
யாரிடம் பேசுவது என்று தெரியாமல் அழைத்து விட்டான். ஆனால், மேலே என்ன கேட்பது, என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் மௌனிக்க,
“எல்லாருக்கும் வர பிரச்சனை தான் மாப்பிள்ளை. மிருதுளாவுக்கு நீங்க முக்கியத்துவம் கொடுக்கலைனு நினைக்குறா” அவர் கூற,
“அப்படி நான் இல்லை மாமா, நான் எங்க அக்காவுக்கு கொடுக்குற அதே முக்கியத்துவத்தை தான் மிருதுளாவுக்கும் கொடுக்கறேன்” அவன் கூற, அவர் சிரித்துக் கொண்டார்.
“அங்க தான் மாப்பிள்ளை பிரச்சனை ஆரம்பமாகுது.” அவர் கூற, “அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாதுனு சொல்லறீங்களா?” அவன் பரிதாபமாக கேட்டான்.
“அப்படி சொல்லலை மாப்பிளை. நீங்க மிருதுளாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலைங்கிறது பிரச்சனை இல்லை. ஆனால், நீங்க தினமும் மிருதுளா கிட்ட, நான் அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கறேன்… முக்கியத்துவம் கொடுக்கறேன்… அப்படிங்கற மாதிரி நடந்துக்கறீங்க. இல்லை சொல்லறீங்க” அவர் இப்பொழுது சற்று அழுத்தமாகவே கூறினார்.
“மாமா…” அவன் தடுமாற, “நானே உங்க கிட்ட பேசணும்னு நினைச்சிருக்கேன். மிருதுளா இதை எங்க கிட்ட சொன்னதில்லை. ஆனால், அவ பேச்சில் நான் யூகிச்சிருக்கேன். எல்லார் வீட்டிலும் இருக்கிற பிரச்சனை தானே. நீங்களே, பேசி சரியாகிடுவீங்கன்னு தான் நாங்க உங்களுக்கு இடையில் வரலை. இன்னைக்கு நீங்களா கூப்பிட்டதும் சொல்லிட்டேன் மாப்பிளை.” அவர் கூற, அவன் தலையசைத்துக் கொண்டான்.
“நீங்க மிருதுளாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அவ மனசில் என்னவோ நீங்க உங்க அக்காவுக்கு முக்கியத்தும் கொடுக்குற மாதிரி தான் பதிஞ்சிருக்கு. மிருதுளா உங்களை புரிஞ்சிக்கலையா இல்லை நீங்க மிருதுளாவுக்கு உங்களை புரிய வைக்கலையானு தெரியலை மாப்பிளை” அவர் நாசுக்காக தான் பல நாள் பேச வேண்டும் என்று நினைத்ததை இன்று கிடைத்த சந்தர்ப்பத்தில் கூறிவிட்டார்.
அவர்கள் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசி பேச்சை முடித்து கொண்டனர். வம்சியின் நெற்றில் சிந்தனை ரேகைகள்.
***
மிருதுளா விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். வம்சி மிருதுளாவின் அப்பாவிடம் பேசிய சில நொடிகளில், மிருதுளாவுக்கு அவள் தாயிடமிருந்து அழைப்பு வந்தது.
“அம்மா…” அவள் அழைக்க, “என்ன மிருதுளா, எதுவும் பிரச்சனையா? குரலே சரி இல்லையே” அவர் கேட்க, “அதெல்லாம் இல்லை அம்மா…” சலிப்பாக கூறினாள் மிருதுளா.
“என்ன குரலில் ஒரு சுரத்தே இல்லை? உடம்பு சரி இல்லையா?” ரோகிணி தோண்டி துருவ, “அதெல்லாம் இல்லை. சும்மா சின்னதா ஒரு வாக்குவாதம் அவ்வளவு தான். அவங்க அக்காவை வைத்து தான். எனக்கு வேற என்ன பிரச்சனை?” மிருதுளா பூசி மழுப்பினாள்.
“மிருதுளா… மாப்பிள்ளை ரொம்ப தங்கமான மனிதர். என்ன கொஞ்சம் அக்கா கொண்டு. அவங்க தான் வளர்த்திருக்காங்க இல்லையா. காலம் போக போக சரியாகிடும். நீ பேசி தான் புரிய வைக்கணும்” தன் தாய் கூற, அவள் கண்கள் கலங்கியது.
‘என்னை விட யார் அதிகமா பேசுறது. பேசி பேசி என் தொண்டையே போயிடுது. அம்மாவுக்கு எல்லா விஷயமும் தெரியாது. தங்கமான மனிதர்ன்னு சொல்றாங்க. நான் எல்லாத்தையும் சொன்னா…’ அவளிடம் மௌனம்.
“கேட்குதா மிருதுளா?” ரோகிணி கேட்க, “ம்… பேசுறேன் அம்மா.” அவள் கூற, “சில சமயம் மாப்பிள்ளை கிட்ட தப்பு இருந்தாலும், நீயும் ஒரு படி இறங்கி போகலாம்” அவர் கூற, அவள் தலை அசைத்தாள்.
“யார் இறங்கி போகறோம்னு வாழ்க்கையில் பிரச்சனை இல்லை மிருதுளா. கடைசி வரைக்கும் வாழ்க்கை படியில் ஒண்ணா ஏறுறோமா அப்படிங்கிறது தான் முக்கியம்” அவர் கூற, “சரி அம்மா…” மிருதுளா தலை அசைத்துக் கொண்டாள்.
“பாசமே இல்லாத மனுஷனை உன் கிட்ட கொண்டு வர முடியாது. ஆனால், உன் மேல உயிரையே வச்சிருக்குற மனுஷனை உன் பக்கம் கொண்டு வந்திடலாம் மிருதுளா” அவர் கூற, “சரி அம்மா…” அவள் தலை அசைத்துக்கொண்டாள்.
“ஆனால், மாப்பிள்ளையை ஒரு நாளும் அவங்க அக்கா கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைக்க கூடாது மிருதுளா. மாப்பிள்ளைக்கு அவங்க அக்கா வேணும். அக்கா இல்லாம அவர் இருந்தா அவர் நடைப்பிணம் தான்” அவர் கூற, “தெரியும் அம்மா. நானும், அவங்க அக்கா வேண்டாமுன்னு எல்லாம் சொல்லலை” மிருதுளா கூற, “தெரியும் மிருதுளா… எனக்கு என் பெண்ணை பத்தி தெரியாதா?” அவர் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு தன் பேச்சை முடித்து கொண்டார்.
மிருதுளா சில நொடிகள் அமைதியாக யோசித்தாள். விட்டுவிடுவதா வாழ்க்கை? போராடுவோம்! என்று எண்ணிக்கொண்டு,மடமடவென்று வேலையில் இறங்கினாள்.
வம்சி, ‘பங்காரு… பங்காரு… அப்படினு இத்தனை தடவை இறங்கி வரும் பொழுது, நானும் ஒரு படி இறங்கினால் என்ன?’ இரவு உணவை எடுத்து கொண்டு அவன் அலுவல் இருக்கும் இடத்தை நோக்கி வண்டியை செலுத்தினாள்.
“பங்காரு…” அவள் உள்ளே நுழையவும், அவன் கண்களில் அத்தனை மலர்ச்சி.
அவள் எதுவும் பேசவில்லை. “நீங்க நேரம் கழித்து தான் வருவீங்கன்னு, டின்னர் எடுத்துட்டு வந்தேன்” அவள் தான் கொண்டு வந்ததை அவன் முன் வைக்க, அவன் அவளை திடுக்கிட்டு பார்த்தான்.
சற்று முன், ‘தம்பி, இன்னைக்கு பூரி கிழங்கு. உனக்கு பிடிக்கும்னு கொடுத்துவிட்டேன்’ பத்மப்ரியா அனுப்பிய கூடை மேஜைக்கு கீழிருந்து அவனை பார்த்து சிரித்தது.
வழமை போல் என்றால், ‘நீ ஏன் வந்த பங்காரு, அது தான் அக்கா கொடுத்து விட்டுட்டாங்களே?’ என்று கூறி இருப்பான்.
“என்ன அப்படி பார்க்கறீங்க. நான் வர கூடாதா?” அவள் உரிமையோடு கேட்டாள்.
“உன்னை வர கூடாதுனு சொல்ற தைரியமும்,உரிமையும் யாருக்கும் இங்க கிடையாது பங்காரு” அவன் குனிந்து, தன் தமக்கை அனுப்பிய உணவு கூடையை இன்னும் உள்ளே தள்ளிவிட்டான்.
“நீங்க இன்னும் சாப்பிடலை தானே? இல்லை , அக்கா வீட்டிலிருந்து சாப்பாடு வந்து சாப்பிட்டுடீங்களா?” அவள் கேட்க, அவன் அவளை ஆழமாக பார்த்தான்.
‘பங்காரு கேட்பதில் என்ன தப்பு? இது போல் பல முறை நடந்திருகிறது தானே? நான் இவளை உணவு எடுத்து வர வேண்டாம் என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். நான் பங்காரு அலைய வேண்டாம் என்று எண்ணி தான் சொல்லி இருக்கிறேன். ஆனால், எங்கோ இவள் உரிமையை நானே தட்டி பறித்துருக்கிறேன்’ அவனுக்கு மெல்ல மெல்ல புரிவது போல் இருந்தது.
“இன்னும் சாப்பிடலை பங்காரு. உனக்கும் எடுத்திட்டு வந்திருக்கிறயா? சேர்ந்து சாப்பிடுவோமா?” அவன் கேட்க, அவள் வேகமாக தலை அசைத்தாள்.
அவள் பரிமாற, அவன் அவள் கைகளை பிடித்தான். சற்று உரிமையான தீண்டல். அவள் ஒரு நொடி அவனை பார்க்க, அவள் கைகளை பிடித்து அருகே அமர வைத்தான்.
அதே நேரம்…
‘பூரி சாப்பிட்டுட்டு எப்படி இருந்ததுன்னு தம்பி ஃபோன் பண்ணுவானே? ஏன் தம்பி இன்னும் என்னை கூப்பிடலை? சாப்பிட்டானா? சாப்பிடலையா?’ பத்ம பிரியா வம்சிக்கு அலைபேசியில் அழைத்தாள்.
அழைப்பு வர, வம்சியின் கைகள் தன் அலைபேசியை சைலன்ட் மோட்க்கு மாற்றியது.
“யாரு?” மிருதுளாவின் கண்கள் அவனை கூர்மையாக பார்த்தது.
“வேலை விஷயமா ஒரு ஃபோன்…” அவன் கூற, ‘நான் கூட அக்காவோன்னு கேட்க போனேன். அக்கா கூப்பிட்டிருந்தா ஓடி போய் பேசிருப்பாங்க. இல்லைனா, இந்நேரம் அக்கா வீட்டுக்கே பறந்திருப்பாங்க.’ மிருதுளா சிந்தனையில் ஆழ
“நீயும் சாப்பிடு பங்காரு.” அவள் எதுவும் பேசவில்லை. “பங்காரு…” அவன் அழைக்க, அவள் “ம்…” கொட்டினாள்.
“பங்காரு… என்ன டா ஆச்சு?” அவன் கேட்க, “என் கோபம் எல்லாம் குறையலை” அவள் கூற, “சரி…” அவன் சிரித்துக் கொண்டான்.
“நான் உங்களை திரும்ப திரும்ப காயப்படுத்தலாம்” அவள் எங்கோ பார்த்தபடி கூற, “என் பங்காருக்கு இல்லாத உரிமையா? என்னை காயப்படுத்தலாம். நீ தான் வருத்தப்பட கூடாது. அது தான் என் கண்டிஷன்” அவன் கூற, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது.
அதை மறைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு பிடிக்கும்னு பூரி செய்யலாமுன்னு நினச்சேன். அப்புறம் நைட் பூரி உடலுக்கு நல்லது இல்லைனு சப்பாத்தி தால் செஞ்சேன்.” அவள் கூற, அவன் நாக்கு நுனி வரை வந்த அவன் தமக்கை வீட்டு பேச்சை நிறுத்தி கொண்டான்.
“உங்களுக்கு இதுவும் பிடிக்கும் தானே?” அவள் கண்களை மலர்த்தி கேட்க, “என் பங்காரு எது வச்சாலும் பிடிக்கும்” அவன் கண்சிமிட்ட, “அப்ப, இரண்டு அடி தான் வைக்கணும்” அவள் கூற, அவன் பக்கென்று சிரித்து விட்டான்.
அவன் சிரிப்பு அவளையும் தொற்றி கொள்ள, அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
‘என் பங்காரு, எப்ப பாரு இப்படியே தான் சிரிச்சிட்டு இருக்கணும்’ அவள் சிரிப்பை ரசித்தபடி அவன் எண்ணிக்கொண்டான்.
தன்னவளின் சந்தோஷத்தை தான் அவன் விரும்பினான். அவளும், அனைத்தையும் சரி செய்ய தான் விரும்பினாள். காலமும் சூழலும் அனுமதிக்குமா?
மயங்கும்…