மயங்கினேன் பொன்மானிலே – 18

பொன்மானிலே _BG-1221965f

அத்தியாயம் – 18

மாலை நேரம் தன் வேலையை முடித்துவிட்டு, தன் தமக்கையின் கடை கணக்கை பார்க்க கிளம்பினான் வம்சி. “பங்காரு… நீ என் கூட வா. நான் அக்கா கடை கணக்கை பார்க்க போறேன்” அவன் கூற, “நான் எதுக்கு? எப்பவும் நீங்க மட்டும் தானே போவீங்க?” கண்களை சுருக்கி, தன் வருகையின் மறுப்பை தெரிவிக்கும் விதமாக கூறினாள் மிருதுளா.

“பங்காரு, நான் மட்டும் தான் எப்பவும் போறேன். அப்படி இப்படி பேச்சு வளருது. நான் வர நேரம் ஆகிறது. நீ தனியா இருக்க. நான் வேணுமினே நேரம் கழித்து வரதிலை.” அவன் கூற, “அப்ப, நீங்க வேணுமினே நேரம் கழித்து வரலை. நான் சும்மா குறை சொல்றேன்னு சுட்டி காட்ட கூட்டிட்டு போறீங்களா?” மிருதுளா பட்டென்று கேட்டாள்.

இப்பொழுதெல்லாம் வம்சி மிகவும் தழைந்து போகிறான். மிருதுளாவும் துடுக்கவே தான் பேசுகிறாள். “பங்காரு…” அவன் குரல் கொஞ்சியது. “அப்படி எல்லாம் இல்லை. நீ என் கூடவே இருந்தா நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாமுன்னு எனக்கு தோணுது. சேர்த்தே போவோம். உனக்கு தெரியாததா? நீயும் என் கூட கணக்கை பாரு.” அவன் கூற, அவளிடம் மௌனம்.

“மாமாவுக்கும் அக்காவுக்கும் கடையை லாபகரமா நடத்த நிச்சயம் என் உதவி தேவை. நான் அதை தவிர்க்க முடியாது.” அவன் பேச, “நான் அப்படி எல்லாம் உங்க கிட்ட செய்ய சொல்லவே இல்லையே?” மிருதுளா எங்கோ பார்த்தப்படி பேசினாள். அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, “உன் கிட்ட சொல்ல வேண்டியது என் கடமை பங்காரு” அவன் கண்களை சுருக்கி பேசினான்.

“சேர்ந்தே போயிட்டு சேர்ந்தே வந்திருவோம்.” அவன் கூற, “உங்க அக்காவுக்கு பணியாரம் பண்ணனுமா?” அவள் கேட்க, அவன் அவள் தலையை ஆட்டி சிரித்துக் கொண்டான். “என்ன சிரிப்பு?” அவள் கேட்க, “என் பங்காருக்கு நக்கல் ரொம்ப அதிகம். அமைதியா தான டீ இருந்த?” அவன் சிரிப்பினோடு கேட்க, “இப்ப மட்டும் நான் என்ன ஆக்ரோஷமா ஆடிகிட்டா இருக்கேன்?” அவள் தன் உதட்டை சுருக்கினாள்.

அவள் உதட்டை கைகளால் பிடித்து, “பணியாரம் எல்லாம் வேண்டாம் தாயே” என்றான் பவ்யமாக. அவள் முகத்தில் யோசனை பரவ, “என்ன பங்காரு?” அவன் புருவத்தை உயர்த்த, “சிந்து மொபைல் விஷயம்…” அவள் இழுக்க, “நான் விசாரிச்சேன் பங்காரு. ஏதோ உடைஞ்சிருச்சு, அப்புறம் சரி பண்ணேன்னு சொல்றா…” அவன் முகத்தில் கவலையின் ரேகைகள்.

அவனை கூர்ந்து பார்த்த மிருதுளா, “உங்க அக்கா கிட்ட சொல்ல வேண்டியது தானே?” அவள் கறாராக கேட்க, “சொல்லக்கூடாதுனு இல்லை. இப்ப தான் நீ அடித்து பிரச்சனை ஆகியிருக்கு. இப்ப சொன்னா, நீ சொல்லி நான் சொல்ற மாதிரி இருக்கும். நேரம் பார்த்து தான் சொல்லணும். பெரிய தப்பு எதுவும் பண்ண மாட்டான்னு நம்புறேன். பார்ப்போம்.” அவன் அந்த பேச்சை முடிக்க, “நான் அவசியம் வரணுமா? நான் வந்தால்…” அவள் மீண்டும் இழுக்க, “நான் போற இடதுக்கு என் மனைவி வரணும்.” அவன் அழுத்தமாக கூறி அவளை தன்னுடன் தன் தமக்கையின் வீட்டுக்கு அழைத்து சென்றான்.

***
பத்மப்ரியாவின் மாமியார் வாசலில் அமர்ந்திருந்தார்.

‘இது என்ன வேலை சம்பந்தமா வரும் பொழுதும் பொண்டாட்டியோட வாரான். ம்… நாம ஏதாவது பேச முடியுமா?’ அவர் தன் வாயை இறுக மூடிக்கொண்டு அவர்களை பார்த்தார்.

“தம்பி வா… வா… மிருதுளா வா…” பத்மப்ரியா தான் பாசமாக இருவரையும் அழைத்தாள்.

அவள் இருவருக்கும் ஜூஸ் கொடுக்க, “எனக்கு இப்ப எதுவும் வேண்டாம்” மிருதுளா மறுத்துவிட்டாள்.

“ஏன் வேண்டாமுன்னு சொல்ற பங்காரு?” அவன் மெதுவாக கேட்க, “இப்ப தான் சாப்பிட்டிருக்கேன். உங்க அக்கா கொடுத்தா எப்ப வேணும்ன்னாலும் என்ன வேணும்ன்னாலும் நீங்க குடிப்பீங்க. என்னால அப்படி எல்லாம் நேரம் காலம் பார்க்காமல் குடிக்க முடியாது. நான் வரலைனா, அன்னைக்கு உங்க அக்கா கொடுத்த பூரியை சேர்த்து சாப்பிட்டிருப்பீங்க, தானே?” அவள் கேட்க, அவள் கணக்கீட்டில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“சிந்து சொன்னா, நாம எல்லாரும் சேர்ந்து டூர் போறோம்ன்னு”, பத்மப்ரியா கேட்க அவன் குடித்து கொண்டிருந்த ஜூஸ் அவனுக்கு பொறை ஏறியது.

“அக்கா… அது…” அவன் தடுமாற, “நீ கெட்டிக்காரன் வம்சி” அங்கு வந்து அமர்ந்தார் பத்மப்ரியாவின் கணவன்.

“டாக்டர் போன செக்கப்ல தான் ட்ரெயின் டிராவல் பண்ணலாமுன்னு சொன்னாங்க. நானும் சிந்துவும் எங்கையாவது போலாமான்னு யோசிக்கிறதுக்குள்ள நீ யோசிச்சிட்டே வம்சி” பத்மப்ரியாவின் கணவன் உதய் பாராட்ட வம்சி வேறுவழியின்றி தலை அசைக்க, மிருதுளா அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

“பின்னே, என் தம்பி மாதிரி முடியுமா? என் தம்பி எனக்காக மட்டும் தான் யோசிப்பான். எனக்காக என்ன வேணும்ன்னாலும் செய்வான்” பத்மப்ரியா பெருமையாக கூற, மிருதுளாவின் கண்கள் கலங்கி அருகே அமர்ந்திருக்கும் வம்சியின் கைகளை அவள் கண்ணீர் துளி தொட, அவன் அவளை பரிதவிப்போடு பார்த்தான்.

‘அக்காவுக்காக என்ன வேணும்ன்னாலும் செய்வீங்க?’ அவள் கண்கள் அவனை குற்றம் சாட்ட, அவன் தன் கண்களை இறுக மூடினான்.

“தம்பி, சிந்து குட்டி பாப்பா… குட்டி பாப்பா அப்படின்னு ரொம்ப ஆர்வமா இருக்கா. ஆனால், நாம இவளையும் நல்ல கவனிக்கனுமில்லை? நாம ஓர் டூர்க்கு போயிட்டு வருவோம். ரொம்ப அலைச்சல் இல்லாம, எனக்கு ஏத்த மாதிரி… அப்படியே நம்ம கூட அத்தையும் வர்ற மாதிரி…” பத்மப்ரியா கூற, வம்சி மறுப்பேதும் கூற முடியாமல் தலை அசைத்துக் கொண்டான்.

“எல்லாரும் சேர்ந்து போனால் ஒரு பாதுகாப்பு தானே? அக்கா சொல்றது சரி தானே தம்பி?” பத்மப்ரியா கூற, “சரி தான் அக்கா” வம்சி ஆமோதிப்பாக தலை அசைத்தான். பத்மப்ரியாவும், அவள் கணவனும் கடையை இரண்டு நாட்கள் இவர்கள் இல்லாமல் சமாளிக்கும் விதமாக திட்டமிட்டு இடங்களை கூற வம்சி அனைத்திற்கும் தலை அசைத்தான்.

‘இதெல்லாம் நல்லா திட்டம் போட தெரியுது. கடையை நல்லா லாபகரமா நடத்த மட்டும், வம்சி துணை வேணும்’ எதுவும் பேசாமல் மிருதுளா அவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.

அவர்கள் ஓர் இடத்தை திட்டமிட்டு முடிவு செய்துவிட்டனர். அதன்பின் வம்சி கணக்கு வழக்கு பார்க்கும் அறைக்குள் சென்றான். அவன் பலமணி நேரம் தனியாக கணக்கு பார்ப்பதுண்டு. இன்று மிருதுளா அவனோடு சென்றாள்.

“உங்க அக்கா, உங்களை பத்தி பெருமையா பேசும் பொழுது அப்படியே உங்களுக்கு குளுகுளுனு இருந்திருக்குமே. இன்னிக்கு நான் இருக்கேன்னு அப்படியே தர்மசங்கடமா நெளியறீங்க?” அவள் நிறுத்த, அவனிடம் அமைதி.

“சரி டூர் என்னைக்கு போறீங்க?” அவள் நக்கலாக கேட்க, “பங்காரு…” அவன் தடுமாறினான்.

“என்னை பங்காருனு கூப்பிடாதீங்க. நான் டூர் போணுமுன்னு சொன்னால், உங்க குடும்பம் டூர் போகுது. நான் குழந்தை பெத்துக்கணும்னு நினைச்சா உங்க அக்கா பெத்துக்கறாங்க… இந்த குழந்தை நல்லாவா பிறக்கும்?” அவள் முணுமுணுக்க, “மிருதுளா…” அவன் கைகளை ஓங்கினான்.

“அடிங்க… ஏன் நிறுத்திடீங்க? நெருப்புனா வாய் சுட்டுறாது. நான் மனசார அந்த வார்த்தையை சொல்லலை. நான் கோபத்தில் புலம்புறேன். சொன்னாலே உங்களுக்கு வலிக்குதில்லை. உங்க அக்கா, நீங்க அவங்க வீட்டையே, அவங்களையே சுத்தி சுத்தி வரணும்னு நினைக்குறாங்க. அது தான் என் குழந்தை அழிச்சிருச்சு” அவள் பேச, அவன் கோபம் மொத்தமும் அவன் செய்த தப்பில் வடிந்து போனது.

“பங்காரு, அக்கா சொல்றது சரி தானே?” அவன் கேட்க, “எது சரி? நாம தனியா ஒரு குடும்பம் தானே? உங்க அம்மா, அப்பா கூட வந்தா அதில் ஓர் அர்த்தம் இருக்கு. நாகரிகம் தெரிந்த எந்த மாமியார் மாமனாரும், சின்னஞ்சிறுசுகன்னு ஒதுங்குவாங்க. இது என்னன்னா, விக்கரமாதித்தயன் முதுகில் ஏறின வேதாளம் மாதிரி… அக்கா, அக்கா மாப்பிள்ளை, அக்கா மாமியார், அக்கா பிள்ளைன்னு நம்ம கூட ஏறிக்குதுங்க” அவள் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“பங்காரு, சேர்ந்து போனால் பாதுகாப்பு தானே?” அவன் மெதுவாக கூற, “ஏன், என்னை யாரவது கடத்திட்டு போகும் போதும், நீங்க சண்டை போட்டு காப்பாத்த முடியலைன்னா? உங்க அக்கா சண்டை போட்டு காப்பாத்துவாங்களா? இல்லை உங்க அக்கா மாமியார் சண்டை போட்டு காப்பாத்துவாங்களா?” அவள் நியாயம் பேச, அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. எனக்கு ஏதாவது பிரச்சனைனா, நீங்க என்னை காப்பாதிருவீங்கன்னு. உங்க அக்காவுக்கு அவங்க புருஷன் மேல நம்பிக்கை இல்லைனா, தம்பி உங்களையும் கூட்டிட்டு போக சொல்லுங்க. நான் வரலை.” அங்கிருந்த நாற்காலியில் சட்டமாக அமர்ந்தாள்.

“பங்காரு…” அவன் இழுக்க, “பொண்டாட்டியை ஒரு ஹனிமூன் கூட கூட்டிட்டு போக துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு கல்யாணம்” அவள் வார்த்தைகள் சற்று காட்டமாக வந்து விழுந்தன.

“மிருதுளா…” அவன் கோபமாக அழைக்க, “சும்மா, ஏறாதீங்க. நான் இப்படி தான் பேசுவேன். நான் உங்க கிட்ட குழந்தை கேட்டேனா? நீங்களா கொடுத்தீங்க… நீங்களா அழிசீங்க… நான் கேட்டேனா எங்கையாவது போகணுமுன்னு? நீங்களா கேட்டிங்க… உங்களால் முடியாதுனு எனக்கும் தெரியும். நீங்க கூப்பிட்டுட்டு போகாதது எனக்கு வருத்தமும் இல்லை. ஆனால், கூப்பிட்டுட்டு போகாதது சரி மாதிரி பேசாதீங்கன்னு தான் நான் சொல்றேன்” அவள் பேச, அவன் பதில் பேசவில்லை.

அதன் பின் இருவரிடமும் பேச்சு வார்த்தை இல்லை. அவன் வேலையோடு இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்தான். அவன் வேலையை முடித்துவிட்டு கிளம்புகையில், “அக்கா… எல்லாரும் கடையை பூட்டிட்டு போக முடியாது. இப்பவே நிறைய சரக்கு வர வேண்டியதிருக்கு. நாம யாருமே இல்லைனா சரிப்பட்டு வராது” அவன் கூற, “ஓ…” என்றாள் பத்மப்ரியா.

மிருதுளா யாருக்கு வந்த விதியோ என்று அமர்ந்திருந்தாலும், அவள் கண்கள் சிந்துவை வட்டம் அடித்தது. ‘இவ ஏதோ செய்யறா? என்னவா இருக்கும். அதை என்னால் கண்டுபிடிக்க முடியலையே’

“நானும் மிருதுளாவும் இங்க கடையை பார்த்துகிறோம். நீங்க கூட இரண்டு நாள் போயிட்டு வாங்க அக்கா.” வம்சி கூற, “அப்ப நீங்க?” பத்மப்ரியா அக்கறையோடு கேட்டாள்.

“நானும், மிருதுளாவும் கொஞ்சம் ட்ராவல் பண்ற மாதிரி போறோம் அக்கா. உங்களால் இப்ப முடியதில்லையா?” என்றான் சற்று உறுதியான குரலில்.

“அதுவும் சரி தான். அப்ப சிந்துவை கூட்டிட்டு போங்க. அவ ரொம்ப சந்தோஷப்படுவா. மிருதுளாவும், நீயும் அவளை நல்லா பார்த்துப்பீங்க போன தடவை மாதிரி” பத்மப்ரியா கூற, ஒரு நொடி வம்சி அதிர்ந்து நின்றான்.

‘சின்ன பெண் தான். கூட்டிகிட்டு போகலாம். ஆனால், பங்காரு ஆடிருவாளே’ அவன் தன் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டான்.

‘நான் அப்படி என்ன தப்பு பண்றேன்? அன்பா இருக்கேன். அதுக்கு ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கஷ்டமா?’ என்று மௌனம் காத்தான்.

“அக்கா, நாங்க வார நாளில் போவோம். வெளிநாட்டுக்கு கூட போகலாம். சிந்துக்கு பாஸ்போர்ட் இல்லை. ஸ்கூல் லீவு வேற எடுக்கணும். அதெல்லாம் வேண்டாம் அக்கா. அடுத்த தடவை சிந்துவுக்காகவே பிளான் பண்ணிடுவோம்” வம்சி கூற, “சிந்துவுக்கு மட்டுமில்லை, வர போற குட்டி பாப்பாவுக்கு சேர்த்து…” சிந்து கூற, அனைவர் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறியாக புன்னகை அரும்ப, மிருதுளா நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். ‘பார்க்கலாம்…’ எல்லாம் எதுவரை செல்கிறது என்ற பாவனை அவள் முகத்தில்.

***
வம்சி, மிருதுளா கிளம்பும் நாளும் வந்தது. அன்று மாலை விமானம்.

     காலையில் தலைக்கு குளித்துவிட்டு சேலையை கட்டிக் கொண்டிருந்தாள் மிருதுளா. “பங்காரு…” உற்சாகமான அழைப்போடு உள்ளே நுழைந்தான் வம்சி. “ஆ…” அவள் படபடவென்று என்று சேலையை சுற்றினாள். குழந்தை விஷயத்திற்கு பின் அவர்களுக்கு இடையில் இடைவெளி மட்டுந்தான். ‘நான் என்ன யாரோவா?’ அவன் சிந்தை கேட்டாலும், அவன் மனம் அவளுக்கு மதிப்பு கொடுத்து தலையை குனிந்து கொண்டு, “சாரி…” என்றது.

“பரவலை வாங்க…” அவள் இரண்டே சுருக்கெடுத்து, முந்தியை போட்டுக்கொண்டு அவனை அழைத்தாள். அவள் மனதில் கொஞ்சம் சந்தோசம். வம்சி அவளை தனியாக அழைத்து செல்வான் என்று அவள் நம்பவில்லை. ஏதோவொரு வகையில் தடங்கல் வரும் என்று தான் எதிர்பார்த்திருந்தாள். ஆனால், அவள் கிளம்பும் நாளும் வந்துவிடவே அவளுள் உற்சாகம். அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது.

‘எல்லாம் தயாரா?’ என்று கேட்கத்தான் அவனும் வந்தான். ஆனால், குளித்து புத்தம் புது மலராய் தன் மனைவி. அவள் முகத்திலும் சந்தோஷம். வாங்க என்ற அவள் அழைப்பு. அவன் சற்று மயங்கி நின்றான். அவன் கால்கள் நிதானமாக அவளை நெருங்கின. அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் அவளுள் சொல்லிவடிக்க முடியாத ஓர் உணர்வு. அவள் இமைகள் படபடத்தன.

“பங்காரு…” மிக அருகாமையில் அவன் அழைப்பு. அந்த அழைப்பு அவளை உயிர் வர தொடுவது போல் இருக்க, அவள் தலையை குனிந்து கொண்டாள்.

அவன் அவள் முகத்தை ஒற்றை விரலால் உயர்த்தினான். அவள் முகம் அழுத்தத்தை கொடுத்து குனிந்து கொள்ள முயல… அவள் முக அழுத்தத்தோடு, அவன் ஒற்றை விரல் அழுத்தம் போராடி அவள் முகத்தை நிமிர்த்தியது.

அவள் முகமும் அவன் விரலும் போராட, “பங்காரு…” அவன் அழைப்பு… காதல் கலந்த அவன் அழைப்பு… ஏக்கம் கலந்த அவன் அழைப்பு அவள் முக அழுத்தத்திற்கு முற்று புள்ளி வைக்க, அவள் அவன் முகம் பார்த்தாள். அவள் முகத்தில் முத்துமுத்தாய் நீர் துளிகள். ஒவ்வொன்றாய் அவன் மென்மையாக ஊத, அது உருண்டோட, அவளிடம் மெல்லிய நடுக்கம். அவள் சட்டென்று விலக எத்தனிக்க, அவன் இடது கை அவள் இடையை சுற்றி வளைத்து அவனோடு சேர்த்துக் கொண்டது. அவன் அருகாமையில் அவள் இதய துடிப்பு ஏறி இறங்க, அதை அவன் இதயம் உள்வாங்கி கொண்டது.

மெலிதாக அவன் சுவாசக்காற்றை ரசித்து கொண்டிருந்த அவள் தேகத்தை ஸ்பரிசித்து கொண்டிருந்த நீர்த்துளிகள், இப்பொழுது அவன் இதழ் தீண்டலை ரசிக்க ஆரம்பிக்க, அவள் மீண்டும் விலகி செல்ல எத்தனிக்க, “பங்காரு… ப்ளீஸ்ஸ்…” அவன் குரல் குழைந்தது. அவன் அருகாமை அவளுக்கு இனிக்க, அதை ரசிக்கும் அவள் மீதே அவள் கோபம் கொள்ள… அவனை நோகடிக்கும் எண்ணமும் மேலெழும்ப… அதே நேரம் அவனை நோகடிக்கவும் முடியாமல் அன்பு கொண்ட மனம் தவிக்க… அவளை ஆட்கொண்ட உணர்வு பெருக்கில் அவன் மார்பிலே சரிந்தாள் கண்ணீர் துளிகளோடு.

 அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, அவள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அவன் உள்வாங்கவே துடித்தான். அவன் வலது கை விசும்பும் அவள் முதுகை நீவியது. “பங்காரு… எல்லாம் வருத்தத்தையும் வாங்கிக்குற சக்தி எனக்கு இருந்தா நான் வாங்கிப்பேன் பங்காரு.” அவன் கூற, அவளுக்கு அவன் அன்பு புரியத்தான் செய்தது. “எல்லாத்தயும் மறந்திடு பங்காரு. நாம எல்லாத்தயும் மறந்து புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க தான் போறோம்.” தன் மேல் சாய்ந்திருந்த மனைவியின் முகத்தை நிமிர்த்தி அவன் கூற, அவள் மௌனமாக தலை அசைத்தாள்.

“டூரில் நமக்கு சண்டையே வர கூடாது. ஒன்லி லவ்… ஒன்லி ரொமன்ஸ்… ஓகே?” அவன் கண்சிமிட்ட, அவள் வெட்கப்பட்டு விலகி செல்ல முயன்றாள். “ரொமான்ஸ் அப்படி சொன்னா, என்னை நோக்கி வரணும்…” அவன் வேகமாக இழுக்க, அவள் அவன் மீது மோதி நின்றாள். “நீ என்ன எதிர்பக்கம் போற?” அவன் செல்லமாக கோபித்து கொள்ள, அவள் முறுவலித்தாள். “எதையும் யோசிக்க கூடாது. சரியா பங்காரு?” அவன் கேட்க, அவன் கேட்ட விதத்தில், அவன் அருகாமையில் தலை அசைக்க, அலைபேசி ஒலிக்க அவன் அதை எடுத்து பேசினான்.

“ம்… எல்லாம் எடுத்து வச்சிட்டோம் அக்கா.” அவன் பேச ஆரம்பிக்கவும் மிருதுளா அவனிடமிருந்து விலகி தேவையானவற்றை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் விமான நிலையம் கிளம்பி வரும் வரையில் வம்சிக்கு பத்மப்ரியாவிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. ‘இது… அது… எது…’ என்று கேள்வி அறிவுரை என. ‘எத்தனை தடவை தான் அக்காவும் தம்பியும் பேசுவாங்களோ?’ மிருதுளா நொந்தே போனாள்.

மாலை விமான நிலையத்தில்.

“ஏதாவது சாப்பிடறியா பங்காரு?” அவன் கேட்க, அவள் தலை அசைத்தாள்.

வம்சி தன் கையிலிருந்த அலைபேசியை மிருதுளாவிடம் கொடுத்துவிட்டு, “இதை வச்சுக்கோ… என்னால் எல்லாமே தூக்கிட்டு வரமுடியாது” அவன் கூற, அவள் அதை வாங்கி வைத்துக் கொண்டாள்.

மீண்டும் பத்மப்ரியாவிடமிருந்து அழைப்பு வர, ‘என்ன தான் பேசுவாங்களோ. தம்பி… தம்பின்னு… காலையிலிருந்து ஒரு நூறு ஃபோன் வந்திருக்கும்.’ அவன் அலைபேசியை ஃபிளைட் மோட்க்கு மாற்றினாள் மிருதுளா.

அதே நேரம் பத்மப்ரியா வீட்டில்,

“தம்பிக்கு கூப்பிடுங்களேன்… எனக்கு ரொம்ப படபடப்பா இருக்கு. அவனும் என் கூட இருந்தா நல்லாருக்கும்” அவள் புலம்ப ஆரம்பித்தாள். “பத்மா, உன் தம்பிக்கு ஃபோன் பணியாச்சு. அவன் ஃபோன் நாட் ரீச்சபள்ன்னு வருது” என்றார் உதய். “இதுக்கு தான் நான் அவன் எங்கையும் போக வேண்டாமுன்னு சொன்னேன். முன்னெல்லாம் நான் சொன்னா கேட்பான். இப்ப, அவன் பொண்டாடி சொல்றதை தான் கேட்குறான்.” அவள் வயிற்றை பிடித்தபடி அமர்ந்தாள்.

வம்சி மிருதுளாவுக்கு சாப்பிடுவதற்கு வாங்கி கொடுத்துவிட்டு, “எதாவது முக்கியமான ஃபோன் வந்ததா?” என்று அவன் கேட்க, ‘ஆமா, இவங்களுக்கு பிரதமரும், ஜனாதிபதியும் கூப்பிட்டிற போறாங்க.’ என்று எண்ணியபடி, “அதெல்லாம் இல்லை. உங்க மொபைலை என் ஹாண்ட் பாகில் போட்டுட்டேன். உங்களுக்கு இப்பவே வேணுமா?” என்று கேட்டாள் மிருதுளா.

“அதெல்லாம் வேண்டாம். சாப்பிட்டு கொடு” அவன் கூற, அவள் தலை அசைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

நேரமாகிவிட, அவர்கள் விமான ஏற வேண்டிய கேட் நம்பர் நோக்கி வேகவேகமா செல்ல ஆரம்பித்தனர்.

வம்சி, மிருதுளா ஏறிய விமானம் விண்ணை நோக்கி பறக்க, உடல்நிலை சரி இல்லை என்று கூறி பத்மப்ரியா மருத்துவமனை நோக்கி சென்றாள்

மயங்கும்…