மயங்கினேன் பொன்மானிலே – 21

பொன்மானிலே _BG-61b572db
மயங்கினேன் பொன்மானிலே

அத்தியாயம் – 21

மறுநாள் விடியற்காலை.

           வம்சி விழித்துவிட்டான். தன் கைவளைவிற்குள் தன் மார்பில் பொதிந்து உறங்கி கொண்டிருக்கும் தன்னவளை வாஞ்சையோடு பார்த்தான். அவளை பிரித்தெடுக்க மனமில்லை. இருந்தாலும், நேரமாகிவிட்டதே என்று அவன் அறிவு எச்சரிக்க, “பங்காரு…” அன்போடு அழைத்தான்.”ம்…” அவள் தூக்கத்தின் நடுவே புன்னகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.”பங்காரு, கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும். நாம இன்னைக்கு கிளம்பனும்” அவன் கூற, அவள் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“ஆமா, ஊர்ல எல்லாருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும். நான் செலக்ட் பண்றேன். ஆனால், நீங்க செலக்ட் பண்ணதா சொல்லி கொடுங்க. உண்மையை சொல்றேன் பேர்வழின்னு நான் தான் செலக்ட் பண்ணேன்னு சொல்லாதீங்க” அவள் கூற, “என்ன பங்காரு, காலையிலேயே இப்படி ஃபுல்  ஃபார்மில் இருந்தா நான் என்ன பண்ணுவேன்?” அவன் கெஞ்சுவது போல் கம்பீரமாக சிரிக்க, அவன் சிரிப்பில் மயங்கி அவன் கன்னம் பிடித்து கொஞ்சி, “இப்படி சிரிக்காம சீக்கிரம் கிளம்புங்க” அவள் அவனை மிரட்ட, அவன் அவள் மடியில் படுத்து கொண்டான்.

“பங்காரு! ஏன், நான் சிரிக்க கூடாது? காரணம் சொன்னால் தான் நான் கிளம்புவேன்” அவன் அவள் கண்களில் கண்ட மயக்கத்தை கண்டுகொண்டு வம்பிழுத்தான். “ம்… நீங்க சிரித்தா எனக்கு உங்க கிட்ட சண்டை போடணுமுன்னு தோணுது” அவள் நீட்டி முழக்க, “பொய்…” என்று அவன் எழுந்து அமர்ந்தான். “உண்மை” அவள் அழுத்தமாக கூற, “பொய்னு நான் நிரூபிக்கட்டுமா?” அவன் அவளை நெருங்க, அவள் லாவகமாக தப்பித்து குளியலறை வாசல் வரை சென்று அவனை பார்த்து நாக்கை துருத்தி கண்களை சிமிட்டி பட்டென்று கதவை மூடிக்கொள்ள, அவன் கலகலவென்று சிரித்தான்.

அவன் சிரிப்பு சத்தத்தில் அவள் முகத்தை மூடி கண்களை சுருக்கி புன்னகைத்துக் கொண்டாள். அவன் சிரிப்பு அவளுக்கு நேற்றைய பொழுதுகளை நினைவு படுத்த, ‘நான் எப்படி இவங்களை இந்த சில மாதங்களில் மன்னித்தேன்?’ அவளுள் சந்தேகம் எழுந்தது. ‘இல்லை, நான் எதையும் யோசிக்க கூடாது. வம்சி மாற ஆரம்பிச்சிருக்காங்க. நானே எல்லாத்தையும் குழப்ப கூடாது. பொறுமை… மிருதுளா பொறுமை! நீ தான் எல்லாத்தையும் சரி செய்யணும்.’ தனக்குள் கூறிக்கொண்டு தன் குளியலை தொடர்ந்தாள்.

அறையில் அங்கிருந்த நாற்காலியில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தான் வம்சி. ‘பங்காருவுக்கு எத்தனை நல்ல மனசு. அவளுக்கு என் மேல் இன்னும் வருத்தம் தான். ஆனால், அனைத்தையும் மறந்து… இல்லை பங்காரு எதையும் மறக்கவில்லை. இந்த சில மாதங்களில் அவளால் எப்படி அனைத்தையும் மறக்க முடியும்? தன் ரணங்களை மறைத்துக் கொண்டு அவள் என்னை மன்னிக்க முயல்கிறாள். கடவுளே, இனி நான் ஒரு வருத்தத்தை கூட பங்காருவுக்கு கொடுக்காமல் இருக்க நீ தான் துணை நிற்கணும்’ அவன் இறைவனை மனதார வேண்டிக் கொண்டான்.

இறைவன் சிரிக்கும் நேரமும் உண்டு. அவன் நமக்காக ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்கையில், நாம் அவனிடம் நம் திட்டத்தை கூறி வேண்டுகையில் இறைவன் சிரிப்பதுண்டாம். ‘நான் உனக்காக கொடுக்கையில் காப்பற்ற தெரியாத மூடன் நீ’ என்று இறைவன் வம்சியை பார்த்து சிரித்தார்.

மிருதுளா குளித்து முடித்து வெளியே வர, வம்சி அவளை பார்த்து கண்ணடித்து குளிக்கச் சென்றான். அவனை பார்த்து புரியாமல் அவள் தோள்களை குலுக்கி, அவள் வைத்திருந்த உடையை எடுக்க, அங்கு வேறு உடை இருக்க அவள் ஆச்சரியப்பட்டுப் போனாள். அவளுக்கு பிடித்த நிறத்தில் ஸ்கர்ட், அதற்கு ஏதுவாக டாப்ஸ். முழு நீள ஸ்கர்ட் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில், குட்டையாகவும் இல்லாமல் அவள் உயரத்திற்கு ஏதுவாக இருந்தது அந்த ஸ்கர்ட். அவள் அங்க வடிவை அழகாக எடுத்து காட்டுவது போல் டாப்ஸ்.

‘இதை எப்ப எடுத்தாங்க? அதுவும் எனக்கு சரியா பொருந்துற மாதிரி’ தன் முன்னழகையும், இடையழகையும் பார்த்தபடி அவள் எத்தனை நிமிடங்கள் கண்ணாடி முன் நின்றாள் என்று தெரியவில்லை. “பிடிச்சிருக்கா?” அவன் பின்னோடு வந்து அவளை கட்டியணைத்து, அவள் செவியோரம் கிசுகிசுக்க, “பரவால்லை, என்னை கூட நியாபகம் வச்சி வாங்கிருக்கீங்க” அவள் கூற, அவன் முகம் சட்டென்று வாடியது. அவன் முக வாட்டத்தை கண்ணாடியில் பார்த்தவள், சரேலென்று திரும்பி, எம்பி அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “எப்ப வாங்குனீங்க? ரொம்ப நல்லாருக்கு” அவள் அவனை சமாதானம் செய்ய முற்பட, அவன் சிரித்து கொண்டு, “பங்காரு… பங்காரு …” அவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டி, கிளம்புமாறு செய்கை காட்டினான். அவளும் துள்ளி குதித்து கிளம்பினாள்.

 பத்மபிரியா குடும்பத்தினர் மற்றும் மிருதுளாவின் வீட்டுக்கும் வாங்கி கொண்டு, அவர்களுக்கும் சிலவற்றை வாங்கி கொண்டு கிளம்பினர். 

கடையில் பரிசுப்பொருட்கள் வாங்கும் பொழுதும், சுற்றுலா தளத்திலும், விமானத்திலும் அவள் கண்கள் அருகே இருக்கும் குழந்தைகளை ஆர்வமாக தழுவதை கவனிக்க அவன் தவறவில்லை.

இருவரும் பத்திரமாக சந்தோஷமாக வீடு திரும்பினர். திருமணமான புதிதை விட மிருதுளாவின் குரலில் ஒட்டியிருந்த சந்தோஷத்தில் அவள் பெற்றோர் ஆனந்தமடைந்தனர்.

அவர்கள் வாங்கிய பொருட்களோடு பத்மப்ரியா வீட்டிற்கு சென்று, பத்மப்ரியாவிடம் வம்சி கொடுக்க, மிருதுளா அவர்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நாட்கள் என்றாலும் பல நாட்கள் கழித்து தம்பியை பார்ப்பது போன்ற சந்தோசம் பத்மப்ரியாவின் கண்களில். ஆனாலும் மேம்போக்காக கோபத்தை காட்டினாள். தன் மேல் பாசம் இல்லை என்று புலம்பினாள். சில நொடிகளில் தன் தமக்கையை சமாதானம் செய்துவிட்டான் வம்சி.

‘ஒரு ஆளை சமாதானம் செய்வதில் கெட்டிதான். எத்தனை பெரிய தவறு செய்து தன்னையே சமாதானம் செய்துட்டாங்களே!’ தன் கணவனை திட்டுவது போல் மெச்சிக்கொண்டாள் மிருதுளா.

வம்சி ஊரில் இல்லாத நாளில், உதய் தான் தொழிலையும், கடையையும் கவனித்து கொண்டான். அதனால், வம்சி அவன் கடையின் கணக்கு வழக்குகளையும், தன் தமக்கையின் தொழில் கணக்கு வழக்குகளையும் பார்க்க செல்ல, உதயும் அவனோடு சென்றான்.

மிருதுளா, சிந்து பத்மப்ரியா அவள் மாமியாரோடு தனித்து விடப்பட்டாள். அவள் கண்கள் சிந்துவை தான் வட்டமடித்தன. பத்மப்ரியாவின் மாமியாரே சிங்கப்பூர் பற்றிய பேச்சை தொடங்கினார். பத்மப்ரியா அவர்கள் வந்ததிலிருந்து பெரிதாக அசையவில்லை. சிந்துவும் தன் தாய் அருகே அமர்ந்து கொண்டு கதை கேட்க ஆரம்பித்தாள். மிருதுளாவும், தான் சென்று வந்த சிங்கப்பூர் கதையை சுவாரசியமாக விவரித்தாள்.

சில மணித்துளிகள் கழித்து உதய் வெளியே வர, மிருதுளா தன் கணவனை நோக்கி அவன் இருக்கும் அறைக்கு சென்றாள்.

“…” அவள் தடுமாறி நிற்க, “என்ன பங்காரு வேணும்?” அவன் அவள் வந்ததை உணர்ந்து அக்கறையாக கேட்க, “சிந்து மேல எனக்கு இன்னும் சந்தேகம் இருக்குங்க. நீங்க நான் சொல்றதை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க” அவள் சற்று கோபமாக கூற, “கண்டுக்காம இல்லை பங்காரு. அவ கிட்ட நான் விசாரிச்சு பார்த்தேன். எனக்கு ஒன்னும் கண்டுபிடிக்க தெரியலை” அவன் சற்று வெறுமையான குரலில் கூறினான். “என்னையும் அவ கிட்ட கேட்க வேண்டாமுன்னு சொல்லிடீங்க. கூட இரண்டு அவ கன்னத்தில் போட்டா எல்லாம் தெளிவா வந்திரும்” மிருதுளா படபடக்க, “ஐயோ, பங்காரு அப்படி எதுவும் பண்ணிடாதம்மா, பிரச்சனை தான் வரும்.” அவன் பதறினான்.

“அப்ப, உங்க அக்கா கிட்ட நீங்க சொல்லுங்க. இல்லை சிந்துவை பற்றி நான் சொல்றேன்.” அவள் பிடிவாதம் பிடிக்க, “பங்காரு,  நான் அக்கா கிட்ட  சொல்றேன்” அவன் குரல் இறங்க, “நல்ல்ல என் தம்பியை உன் பாட்டுக்கு ஆட வைக்குற மிருதுளா” பத்மப்ரியாவின் குரல் முன்னே வர, அவள் தேர் போல் அசைந்து அசைந்து அழகாக நடந்து வந்தாள். மிருதுளாவின் செவிகள் இப்பொழுது வேலை செய்யவில்லை.

இத்தனை நேரம் பத்மப்ரியா உட்கார்ந்தபடி தான் இருந்தாள். இப்பொழுது அவள் நடந்து வருகையில் தான் அவள் முழு வயிற்றை கவனித்தாள் மிருதுளா. வயிறு நன்றாக மேடிட்டு இருந்தது. மிருதுளாவின் கண்கள் அவள் வயிற்றின் மீதே இருக்க, அதை  வம்சி கவனித்துவிட்டான். அவள் பார்வை பத்மப்ரியாவின் வயிற்றின் மீது ஏக்கத்தை காட்ட, ‘இது என்ன பங்காரு இப்படி ஆசையா பார்க்குறா?’ அவன் இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது. ‘இதை மட்டும், அக்கா மாமியார் பார்த்தாங்க அவ்வளவு தான். பங்காருவை யாரும் எதுவும் சொல்லிருவாங்களோ?’ அவன் சற்று அஞ்சினான்.

“தம்பி…” பத்மப்ரியா உரக்க அழைக்க, “அக்கா…” அவன் இப்பொழுது தன் சகோதரியை பதட்டமாக பார்த்தான். “என்னடா நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ என்ன உன் மனைவியை புதுசா பார்க்குற மாதிரி பார்த்திட்டு இருக்கிற?” பத்மப்ரியா சிடுசிடுக்க, “மிருதுளா, நீ வீட்டுக்கு கிளம்பு. நான் அப்புறம் வரேன்” அவன் மிருதுளாவை கிளம்ப சொல்ல, அவளோ பத்மப்ரியாவின் வயிற்றை ஆசையாக பார்த்துவிட்டு, தன் வயிற்றை தடவிக்கொண்டு மடமடவென்று வீட்டை நோக்கி ஓடினாள். ‘ இப்படி நான் சொன்ன உடனே ஓடுற ஆள் கிடையாது நம்ம பங்காரு. அதுவும் அக்கா வீட்டில் இப்படி இருக்கவே மாட்டா. எதுவோ சரி இல்லை’ வம்சிக்குள் எச்சரிக்கை மணியடித்தது.

மிருதுளா சென்றதும், “தம்பி, அவ நம்ம சிந்துவை பத்தி தப்பா சொன்னால் நீ அவளை என்ன ஏதுன்னு கேட்காம, நம்ம பெண்ணை விட்டுக்கொடுக்குற?” பத்மப்ரியா சீற, “நான் மிருதுளா கிட்ட பக்குவமா பேசுறேன் அக்கா” அவன் சிந்தை மிருதுளாவை சுற்ற, பத்மப்ரியாவிடம் ஏதோ பேசி சமாளித்தான். பதம்ப்ரியா சில நிமிடங்களாக தொடர்ந்து பேச, அவன் தன் மனைவியை பற்றி யோசித்தபடியே தலை அசைத்தான். “தம்பி…” அவள் மீண்டும் ஆரம்பிக்க, “அக்கா, எனக்கொரு அவசர வேலை. நான் போயிட்டு அப்புறம் வரேன்.” அவன் மடமடவென்று கிளம்ப, “ம்… என்ன மந்திரம் போட்டாளோ? இப்படி மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிட்டான். அதுவும் அவ குழந்தை போனதிலிருந்து இவன் ஆளே மாறிட்டான்.” பத்மப்ரியா  புலம்பிக் கொண்டாள்.

வம்சி அவர்கள் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான். வீடு திறந்திருந்தது. ‘பங்காரு எங்கே?’ அவனுள் கேள்வி எழ, அவன் அவளை தேடினான். அவள் அவர்கள் அறையில் தான் இருந்தாள். அவன் கண்ட காட்சியில் அவன் ஒரு நொடி ஆடிவிட்டான். அவன் கண்கள் கலங்கி, கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. ‘பங்காரு… பங்காரு…’ அவன் இதயம், சிந்தை இரண்டும் அவளைத்தான் அழைத்தது. ஆனால், அவன் இதழ்கள் வார்த்தைகளை சொல்ல முடியாமல் தடுமாறியது.

அவன் அவளை அணுஅணுவாக பார்த்தான். அவள் தலை குனிந்திருந்தது. அவள் முகம் அவள் வயிற்றை புன்னகையோடு பார்த்தது. அவள் வயிறும் கொஞ்சம் மேடிட்டிருந்தது. அவள் வைத்தது தலையணை தான் என்று சொல்ல முடியாதபடி அவள் தன் சேலையை கட்டியிருந்தாள். சேலைக்கு வெளியே குழந்தை இருப்பது போல் பாவித்து தன் வயிற்றை ஆசையாக தடவினாள் மிருதுளா. அவன் இதயம் நின்று விடும் என்று அஞ்சி வேகவேகமாக துடித்தது.

அவனால் அவளை அழைக்க முடியவில்லை. அவன் செய்த பாவம், அவன் தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டு அவனை மௌனிக்க செய்தது. ஆனால், அவளை தனியே தவிக்க விட மனமில்லாமல் அவன் கால்கள் அவளை நோக்கி ஓடின. வேகமாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவளை தன் பாதுகாப்பில் கொண்டு வந்ததும் தான் அவன் மூச்சு சீரானது. ‘தப்பு பண்ணிட்டேன் பங்காரு… தப்பு பண்ணிட்டேன் பங்காரு…’ அவன் இதயம் அவள் வருத்தத்திற்காக மட்டுமில்லாமல், அவள் ஆசைக்காகவும் வருத்தியது.

“நான், சும்மா… சும்மா தான் வைத்தேன்” அவள் அவனை நிமிர்ந்து பார்த்து கூறினாள். அவர்கள் இறுக்கமான அணைப்பிற்கு இடைவெளி போல் அந்த தலையணை. “பங்காரு…” அவனுக்கு இப்பொழுது தான் வார்த்தை வெளிவந்தது. “இல்லை, உங்க அக்காவை பார்த்தேனா, என் வயிறும் இப்படி தானே வந்திருக்கும்முனு டக்குனு தோணிடுச்சு. அப்படி எல்லாம் யோசிக்க கூடாதுன்னு தான் நான் நினைக்குறேன். ஆனால், ஆசையா இருந்துச்சா? அது தான் சும்மா வச்சி பார்த்தேன்” அவள் சிறுபிள்ளை போல் அவனுக்கு விளக்கம் கொடுக்க, அவள் ஏக்கத்தை பார்த்து அவனுள் முதல் முறையாக அச்சம் கிளம்பியது.

‘குழந்தை திரும்பவும் வந்துவிடும் தானே? இவ எதுக்கு இப்படி ஏங்குறா? அக்காவுக்கு குழந்தை பிறந்த பிறகு எங்களுக்கு குழந்தை வந்திறதா?’ அவனுள் அடுக்கடுக்காக கேள்விகள்.

மயங்கும்…