மயங்கினேன் பொன்மானிலே – 24

பொன்மானிலே _BG-31a3c9f4
மயங்கினேன் பொன்மானிலே

அத்தியாயம் – 24

மறுநாள் காலையில்,

            மிருதுளா சற்று புரண்டு படுத்தாள். வம்சியை காணவில்லை. வெளியே ஏதோ சத்தம் கேட்க, “சீக்கிரம் எந்திரிச்சிட்டாங்க போல” தன் வேலைகளை முடித்துக் கொண்டு அவள் வெளியே வர, அவளுக்கு மணக்க மணக்க பாதாம் பால் கொண்டு வந்து நீட்டினான் வம்சி.

   அவள் முகத்தில் புன்னகை. “இதை ஏன் நீங்க செய்யறீங்க?” அவள் கேட்க, “நான் செய்யாம வேற யார் செய்வாங்க?” அவன் கெத்தாக கேட்டான். “நான் செய்துப்பேன்” அவள் அவன் கொடுத்த பாதாம் பாலை ருசித்தபடி கூற, “அதெல்லாம் இனி நடக்காது. என் பங்காருக்கு, நான் தான் செய்வேன்” அவன் நாடக பாணியில் இடைவரை குனிந்து கூற, அவள் “க்ளுக்…” என்று சிரித்தாள்.

“பால் உனக்கு தேவையான மாதிரி சூட்டில், உனக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் கம்மியான இனிப்பில் இருக்கா பங்காரு?” அவன் அக்கறையோடு கேட்க, அவள் தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள். “நீ நிதானமா குடி. எனக்கு நிறைய வேலை இருக்கு” அவன் படபடவென்று கூற, “நான்…” அவள் பேச ஆரம்பிக்க, “ஷ்…” அவள் உதட்டில் தன் ஆள் காட்டி விரலை வைத்து பேச கூடாது என்பதை செய்கை போல் காட்டி மறுப்பாக தலை அசைத்து கண்சிமிட்டி சமையலறை நோக்கி சென்றான்.

‘ஸ்ஸப்பா, இவங்க அலப்பறை பயங்கரமா இருக்கே’ அவள் கொஞ்சம் சந்தோஷமாகவும், கொஞ்சம் பெருமையோடும் நொந்து கொண்டாள். பாலை குடித்து முடித்து, அவள் சமையறைக்கு செல்ல அவன் வெங்காயம், தக்காளி, மிளகாய் இவற்றை அரிந்து கொண்டிருந்தான். “பங்காரு, நீ சொல்லிருந்தா நான் வந்து வாங்கிருப்பேன் இல்லை? நீ ஏன் இங்க வந்த?” அவன் குரலில் அன்பு வழிந்தோட, “என்னை சோம்பேறி மாதிரி சும்மா உட்கார சொல்லறீங்களா? எனக்கு போர் அடிக்காது?” அவள் சிணுங்க, “சரி இங்கையே உட்கார்” என்று அவன் நாற்காலி எடுத்து வர செல்வதற்காக எத்தனித்தான்.

அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள் அவள். அவளின் உரிமையான தீண்டலில், அவன் முகத்தில் மென்மை பரவ கண்களில் கனிவு கூட, ‘என்ன?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினான். “நான் மேடை மீதே உட்காந்துக்குறேன். எனக்கு நாற்காலி எல்லாம் வேண்டாம்” அவள் கூற, “ஏய், என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ?” அவன் குரலில் கண்டிப்பு வந்து அமர்ந்தது.

“உங்களை தான்” அவள் பளிச்சென்று சிரிக்க, “பங்காரு…” அவன் அவள் தோளில் கைபோட்டு, அவள் நெற்றியில் மென்மையாக மோதி சிரித்தான். “நாற்காலி போட்டு இங்க உட்கார்ந்தா நீங்க செய்றத நான் பார்க்கவே முடியாது. நான் மேடை மேல இருந்தா தான் நீங்க செய்யுற வேலைக்கு உங்களுக்கு கருத்து சொல்ல முடியும்” அவள் செல்லமாக கெஞ்சினாள். கொஞ்சினாள்.

“உன் கருத்து எனக்கு வேண்டாமே பங்காரு” அவனும் அவளை போலவே செல்லம் கொஞ்ச, அவள் முகம் வாட அதை தாங்காதவன், அவளை அலேக்காக தூக்கி மேடை மீது அமர  வைத்தான். அவள் முகம் மலர்வதை அவன் விழிகள் ரசித்தாலும், “நீயா இறங்க கூடாது. நான் தான் இறக்கி விடுவேன்” அவன் கண்டிப்போடு கூற, அவள் வேகவேகமாக தலை அசைத்தாள்.

அவன் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூவி ஊத்தப்பம் செய்ய, அவள் ஆங்காங்கே கருத்துக்கள் கூற, சில கருத்துக்களை அவன் ஏற்றுக்கொண்டான். சில கருத்துக்களுக்கு அவளை முறைத்து பார்த்தான். அவள், “ஈ…” என்று சிரித்து சமாளித்து வைத்தாள்.  ஊத்தப்பத்தோடு, வெங்காய சட்னியும் கொடுக்க, அவளுக்கு ஒன்று கூட சாப்பிட முடியவில்லை. பிரட்டிக் கொண்டு வந்தது. அவன் ஒருவாறு அவளுக்கு ஊட்டிவிட்டு, ‘அக்கடா…’ துன்று அமர்ந்தான்.

அவளுக்கு சற்று ஆசுவாசம் கொடுத்து, அவளுக்கு மாத்திரையை நீட்ட, மாத்திரையை பார்த்ததும், ‘வேண்டாம்… வேண்டாம்…’ என்று அவள் நினைத்தாலும், அவளுக்கு பழைய நினைவுகள் முட்டி மோத, அவள் கைகள் நடுங்கியது. அவள் நெற்றியில் வியர்வை துளிகள். அவனுக்கு அந்த நொடி எதுவும் புரியவில்லை. “என்ன ஆச்சு பங்காரு?” அவன் பதறினான். “ம… மா… மாத்…” அவள் வார்த்தைகள் வராமல் தவிக்க, அவள் தவிப்பில் அவனுக்கு எல்லாம் புரிந்தது. அவள் செய்கை, அவன் நெஞ்சில் கத்தியை வைத்து திருகுவது போல் வலிக்க, அவன் மாத்திரையை சட்டென்று தூக்கி எறிந்தான்.

அவன் முகபாவத்தில், “இல்லை, நான் சாப்பிடுறேன். நான் நினைக்க கூடாதுன்னு தான்… ஆனால்…” அவள் உடல் நடுங்க, அவளை அவன் சட்டென்று அணைத்துக் கொண்டான். அவன் உடலின் கதகதப்பில் தான் அவள் நடுக்கம் குறைந்தது. “பங்காரு, ஒண்ணுமில்லை. எனக்கு உன் மேல் கோபமோ, வருத்தமோ இல்லை. எனக்கு என் மேல் தான் கோபம். நீ எதுவும் யோசிக்காத சரியா?” அவன் குரல் அவளை சமாதானம் செய்ய, அவனை சமாதானம் செய்யவோ, தேற்றவோ ஆளில்லாமல் அவன் கண்கள் கண்ணீரை சொரிந்து அவள் தேகத்தை வருடி சென்றது, எதையோ யாசிப்பது போல்.

சில நிமிட ஆசுவாசத்திற்கு பின், அவளை அமர வைத்துவிட்டு மாத்திரையை எடுத்து வந்து அவள் முன் அதை பிரித்து அவன் கொடுக்க, அவள் அவனை சொல்லிலடங்கா வேதனையோடு பார்த்தாள். “எதுவும் யோசிக்காத பங்காரு. எல்லாம் சரியாகும்” அவன் புன்னகை மாறாமல் கூற, “நீங்க கடைக்கு போற ஐடியா இல்லையா?” அவள் பேச்சை மாற்றினாள்.

“….” அவன் மறுப்பாக தலை அசைக்க, “இன்னைக்கு முழுக்க உன்னோடு தான். நீ இன்னைக்கு தனியா இருக்க வேண்டாம்.” அவன் கூற, “அப்ப, நாளைக்கு?” அவள் உதட்டை சுளித்து கேட்க, “அதுக்கெல்லாம் ஏற்பாடு செய்தாச்சு” அவன் தன் சட்டை காலரை உயர்த்திக் கொண்டான்.

“பங்காரு, இன்னைக்கு மதியம் சாப்பாடும் நான் தான் பண்ண போறேன். உனக்கு முழு நாளும் ரெஸ்ட்” அவன் கூறிக்கொண்டு விலகி செல்ல எத்தனிக்க, அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள் அவள். “எதுக்காக இதை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க கடைக்கு கிளம்புங்க” அவள் இப்பொழுது சற்று அழுத்தமாக கூறினாள்.

“பங்காரு, நான் ஏன் அப்படி பண்ணேன் தெரியுமா?” அவன் ஆரம்பிக்க, “அந்த பேச்சு வேண்டாமே” அவள் முகத்தை சுளிக்க, “பங்காரு, எல்லாத்துக்கும் கடைசி முறைன்னு ஒன்னு இருக்கும் இல்லையா. இந்த தடவையை அப்படி வச்சுக்கோயேன்” அவன் குரல் அவளிடம் மன்றாட, அவளிடம் மௌனம்.

“பங்காரு, எனக்கு எங்க அம்மா நியாபகம் கூட இல்லை. அவங்களை பார்த்துக்குற பாக்கியம் கூட எனக்கில்லை. அக்கா, எனக்கு அம்மா, அப்பா எல்லாம் அவ தான். ஆனால், என் குழந்தைக்கு அம்மாவாகப் போற நீ தான் எனக்கு தாய்மையை உணர வைக்க முடியும்முனு எனக்கு தோணுச்சு. உன்னை எப்படி எப்படியோ பார்த்துக்கணும்னு எனக்கு ஆசை. உன்னை என் கைக்குள்ளையே வைத்து பார்க்கணுமுன்னு ஆசை. அக்காவும் குழந்தை உண்டாக்கிருந்தாங்களா, அவங்களையும் நான் தானே பார்த்துக்கணும். அக்காவும் இங்க தான் இருப்பாங்கன்னு நினச்சேன். அக்காவும் இங்க இருந்தா, உன்னை இப்படி ஸ்பெஷலா பார்த்துக்க முடியாதுன்னு தோணுச்சு. நம்ம குழந்தைக்கு என்ன அவசரமுன்னு ஏதோ தப்பா நினச்சிட்டேன்” அவன் நிறுத்த, அவள் எதுவும் பேசவில்லை.

“இதுவெல்லாம் ஒரு காரணமான்னு உனக்கு தோணும். ஆனால், இது தான் என் காரணம். இதை நீ ஏத்துக்கலைனாலும், இது தான் நிஜம். நான் பொய் சொல்லலை பங்காரு” அவள் கைகளை அழுந்த பற்றிக்கொண்டு, அவள் துயரத்தை தனதாக்க முயன்று, அதை போக்க முயன்று கொண்டிருந்தான் அவன். “உனக்கு அன்பை கொடுக்கணும், அக்கறையை கொடுக்கணும்னு யோசித்து தான் நான் எல்லாம் செய்தேன் பங்காரு. ஆனால், அந்த குழந்தை விஷயத்துக்கு அப்புறம் தான், நான் உனக்கு முக்கியத்துவமே தரலைனு எனக்கே புரிஞ்சிது பங்காரு. அதையும் நீ தான் புரிய வைத்த. உனக்கு என்னை புரியுதா பங்காரு?” அவன் கண்களில் ஏக்கத்தோடு கேட்டான்.

‘புரிகிறது. என்னால் மன்னிக்க முடியும். ஆனால், மறக்க முடியுமா? இதை எல்லாம் சொல்லி இவங்களை ஏன் கஷ்டப்படுத்தணும்?’ அவள் அவனை கூர்மையாக பார்த்தாள். “எனக்கு ஒண்ணே ஒன்னு மட்டும் நல்லா புரியுது. நீங்களும் சமைக்க போறதில்லை, என்னையும் சமைக்க விடப்போறதில்லை. இப்படியே நாம மறக்க வேண்டிய விஷயத்தை பேசிக்கிட்டே இருக்க போறீங்க. அப்புறம், நாம மதியம் சாப்பாட்டை ஹோட்டலில் தான் வாங்கி சாப்பிடணும்” அவள் கூற, அவன் சிரித்துக்கொண்டு அவள் தலையை வாஞ்சையோடு தடவினான்.

மறுநாள் காலையில், மிருதுளாவின் பெற்றோர் வந்து இறங்கினர். அவள் தன் கண்களை ஆச்சரியத்தோடு விரிக்க,”மாப்பிள்ளை வர சொன்னாங்க” என்று அவர்கள் கூற, ‘இது தான் அந்த ஏற்பாடா?’ என்று கண்களால் மிருதுளா வினவ, தன் மனைவியை பார்த்து கண்ணடித்து சிரித்தான் வம்சி. கணவன் மனைவியின் விழி உரையாடலில் அவர்களுக்கு இடையே இருக்கும் அன்னியோன்யத்தை அவர்கள் பெற்றோர் புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சியோடு பார்த்தனர்.

“அம்மா, அப்பா குளிச்சிட்டு வாங்க. நான் காபி போடுறேன்.” அவள் சமையலறைக்குள் நுழைய, “பங்காரு…” அவன் அவள் பின்னோடு சமையலறைக்கு சென்றான். “காபி தானே நான் போட்டுப்பேன். என் பின்னாடியே வந்து என் மானத்தை வாங்காதீங்க” அவள் பற்களை நறநறக்க, அவன் அவளை பின் பக்கமாக கட்டியணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து கன்னத்தில் இதழ் பதிக்க, “என்ன பண்ணறீங்க? அம்மா வந்துருவாங்க” அவள் சத்தமிட்டாள்.

“ஷ்… ஏன் கத்துற பங்காரு? உனக்கு அத்தை மாமாவை பார்க்கணும்னு ஆசை இருக்குமில்லை? அது தான் வர சொன்னேன். உனக்கு சந்தோஷமானு கேட்க வந்தேன். அது ஒரு தப்பா?” அவன் கேட்க, “இது தான் நீங்க கேட்குற லட்சணமா?” அவள் கரண்டியை வைத்து ஆட்டியபடியே பேச, “என்ன மிருதுளா மாப்பிளையை இப்படி மிரட்டுற?”என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் ரோகினி.

‘எப்படி தான் இப்படி எல்லா அம்மாக்களும் நம்மளை திட்டறதுக்குனே கரெக்ட் டைம்ல என்ட்ரி கொடுக்கறாங்களோ’ என்று அவள் சிரித்து சமாளிக்க, “ஐயோ, அதெல்லாம் இல்லை அத்தை.” அவன் ரொம்ப நல்லவன் என்பது போல் பேசிவிட்டு அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டான்.

நாட்கள் அதன் போக்கி நகர்ந்து, வாரங்கள் ஆனது.

 அன்று, மிருதுளாவின் பரிசோதனை தினம். வம்சி, அவள் பெற்றோர் என அனைவரோடும் மிருதுளா மருத்துவமனைக்கு சென்றிருந்தாள்.

“அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட் எடுக்கணும்” என்று செவிலியர் அவளை அழைத்து செல்ல, அவன் இதயம் சற்று வேகமாக துடித்தது. “கடவுளே, எல்லா சரியா இருக்கணும்” அவன் முணுமுணுத்துக் கொண்டான். அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க, உதய் அழைத்துக் கொண்டிருந்தான்.

அவன் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து அலைபேசியில் பேசினான். “வம்சி, உங்க அக்கா ரொம்ப படபடப்பா இருக்குனு சொல்றா. ஏதோ அசைவில்லைனு என்னன்னவோ சொல்லறா. உன்னை கூப்பிடுறா.” உதய் பேச, “மாமா, நான் ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருக்கேன். நீங்க அக்காவை கூட்டிட்டு வாங்க.” அவன் கூற, உதய் பத்மப்ரியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.

பத்மப்ரியாவின் இரத்த அழுத்தம் தாறுமாறாக இருந்தது. அவளை அவசர பிரிவில் சேர்த்தனர். ‘டெஸ்ட் எடுக்க போன பங்காரு இன்னும் வரலையே’ அவன் கண்கள், தன் மனைவியையும் தேடியது. தன் மாமியார் மாமனாரிடம் விஷயத்தை கூறாமல் சில நிமிடங்களில் வருவதாக மட்டும் கூறிவிட்டு அவன் பத்மப்ரியா இருக்கும் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி ஓடினான்.

சில நிமிடங்களில் மருத்துவர்கள் வந்துவிட்டனர். பரிசோதனைக்கு பின், “சாரி… குழந்தைக்கு ஹார்ட் பீட் இல்லை. நாங்க குழந்தையை ஆப்பரேட் பண்ணி வெளிய எடுக்கறோம்” என்று கூறி, உதயிடம் கையெழுத்து வாங்கிவிட்டு சென்றனர். உதய் ஸ்தம்பித்து நிற்க, “ஒருத்தர் மட்டும் பேஷண்டை பார்க்கலாம். நாங்க பேஷண்ட்டை இப்ப ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போயிடுவோம்” செவிலியர்கள் கூற, உதய் பதட்டமாக தன் மனைவியை பார்க்க சென்றான்.

வேறு யாரையும் அங்கு நிற்க கூடாது என்று செவிலியர் கூற, கொஞ்ச தூரம் வந்து பித்து பிடித்தவன் போல் அமர்ந்தான் வம்சி. ‘இப்ப அக்காவுக்கு குழந்தை பிறக்காது. இதை அக்கா எப்படி தாங்குவாங்க? சிந்து இதை எப்படி ஏத்துப்பா? பாப்பா, பாப்பானு அதை பத்தி தானே பேசிக்கிட்டு இருந்தா’ அவன் உலகம் எங்கோ நின்றது போல் இருந்தது.

அவன் மனநிலை அறியாத மிருதுளா, “என்ன இங்க வந்து உட்காந்திருக்கீங்க? உங்க மொபைலும் எடுக்கலை. நான் உங்களை எங்கெல்லாம் தேடுறேன் தெரியுமா?” அவள் கேட்க, அவன் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான். அவள் இருந்த சந்தோஷ மனநிலையில், அவனை கவனிக்கவில்லை.

“டெஸ்ட் எடுத்தாச்சு. ஹார்ட் பீட் பார்த்தாச்சு” அவள் நீட்டி முழக்கினாள். “நான் சொல்ல போறது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்.” அங்கு கூட்டம் இல்லாமல் இருக்க, அவள் அவன் கைகளை பிடித்து தன் வயிற்றின் மீது வைத்து, “ஹார்ட் பீட் டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா?” அவள் கேட்க, அவன் சற்று உணர்வு பெற்று, “என்ன சொன்னாங்க?” அவன் கைகள் நடுங்கியது.

“ரெட்டை குழந்தைன்னு சொன்னாங்க” அவள் கூற, அவன் அதிர்ந்து எழுந்து நின்றான். ‘இது சந்தோஷமான செய்தி’ என்று அவன் சிந்தை கூறினாலும், அதை கிரகித்து கொள்ள முடியாமல் துக்க பந்து அவன் தொண்டையை அடைத்து கொண்டு நின்றது.

மயங்கும்…